கவிக்கட்டு 44

This entry is part of 64 in the series 20050113_Issue

சத்தி சக்திதாசன்


விளையாடாதே !

கண்ணீரோடு வாழ்கின்றார்
காலமெலாம் வாடுகிறார்
காத்திருந்து ஏங்குகிறார்
கருணை தேடி ஓடுகிறார் – அவரோடு
விளையாடாதே

நேரத்தையே சாடுகிறார்
நேற்றையெல்லாம் ஏசுகிறார்
நேர்மையாக உழைக்கின்றார்
நேசத்தையே விதைக்கின்றார் – அவரோடு
விளையாடாதே

மனதையே பூஜிக்கிறார்
மனிதத்தைப் போற்றுகிறார்
மன்னித்தே வாழுகிறார்
மயக்கத்தோடு தூங்குகிறார் – அவரோடு
விளையாடாதே

வேதனையோடு உழல்கின்றார்
வேதங்களை மதிக்கின்றார்
வேள்வியாக வாழுகின்றார்
வேண்டுவதை இழக்கின்றார் – அவரோடு
விளையாடாதே

நாளைகை நம்புகிறார்
நாட்டையே காக்கிறார்
நாணயத்தை வாழ்த்துகிறார்
நமக்காக தேய்கின்றார் – அவரோடு
விளையடதே

தோல்விகளை ஏற்கின்றார்
தோழர்களை தாங்குகிறார்
தோன்றியதைச் சொல்கின்றார்
தோள்களை நிமிர்த்துகிறார் – அவரோடு
விளையாடாதே

****

பொங்குது மனது

புதிதாய்ப் புலர்ந்த வருடம் பூக்கும்போதே புயலாக மாறியதே
புண்ணாகிப் போன இதயம் நிச்சயமாய்ப் பொங்குது மனது

தைமகள் வருவதும் தரணியெலாம் செழிப்பதும் பழைய கதையானதுவே
தையல்கள் பலரின் வாழ்வு திசைமாறிப் போனதனினால் பொங்குது மனது

பால்மணம் மாறாச் சிறார்கள் மாறினரே அனாதைகளாய் சுனாமியினால்
பார்த்திருக்கும் விழிகளெல்லாம் கண்ணீர்க்கடலாக பொங்குது மனது

களித்திருந்த காதல் பெண்கள் ஒரு கணத்தில் கைம்பெண்கள் ஆகினரே
கசங்கிப் பிழிந்தது துயர் இதயத்தினை பொங்குது மனது

வியர்வை சிந்தி உழைத்த என் கடலோரத் தொழிலாளி கடலாகிப் போனாரே
விடிவு இனி அவர்க்கு எந்தத் தையில் வரும் , பொங்குது மனது

பொங்கிப் பொங்கி நாம் மகிழ்ந்திருக்கும் வேளையல்ல நண்பர்களே
போன உறவுகளின் ஆத்மாக்கள் சாந்திக்க பொங்கட்டும் உம்மனது

****
sathnel.sakthithasan@bt.com

Series Navigation