தோழி

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்


காலை பதினோரு மணியிருக்கும் ,மயிலாப்பூர் குளத்துக்கு அருகில் நடந்துகொண்டிருந்த போது ஏன் பெயரைச்சொல்லி யாரோ மீண்டும் மீண்டும் அழைப்பதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு யாரென்று தேடினேன். நாங்கள் மதுரையிலிருந்து சென்னை வந்தே சில மாதங்கள் தான் ஆகிறது , எனக்குத் தெரிந்தவர்கள் சென்னையில் அதுவும் மயிலாப்பூர் பகுதியில் யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் , அப்படியிருக்க யார் அழைத்திருப்பார்கள்? என்ற கேள்வியொடு சுற்றும் முற்றும் பார்த்தேன். “ஹேய்! நீ சந்தியா தானே? பாளையங்கொட்டை கதீட்ரல் ஸ்கூல்ல ” வந்தவள் முடிக்குமுன்னே எனக்கு அவளை அடையாளம் தெரிந்து விட்டது. “நீ நீங்க சித்ரா தானே ?” என்று இழுத்தேன் . “ஒரு வழியா கண்டு பிடிச்சியே ?” என்றவள் பொது இடம் என்றும் பார்க்கமல் என்னை ஆரத்தழுவிக் கொண்டாள். அடங்கா வியப்பு எனக்கு !! பள்ளி நாட்களிலும் சரி , கல்லூரி நாட்களிலும் சரி மிகவும் கூச்ச சுபாவம் உள்ள சித்ராவா இது?

நானும் , சித்ராவும் ஆறாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்தவர்கள். அதுமட்டுமல்ல ஒரே தெருவில் எதிர் எதிர் வீடு என்பதால் இணை பிரியாத தோழிகள் ஆனோம்.நான் எப்போதும் சற்று துணிச்சலும் , எதிலும் முன்னிற்கும் ஆளுமையும் உடையவள்.சித்ரா அதற்கு நேர் மாறு , வெட்கமும் ,தயக்கமும் அவளுடன் பிறந்தவையாக விளங்கின. ஆனால் புறம் பேசுவது அவளுக்கு பிடித்த ஒன்று என்று நான் பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். கல்லூரியில் எங்களோடு படித்த கலைச்செல்விக்கு மிக நீண்ட முடி. நீண்டதென்றால் குதி கால் வரை நீளும். பார்க்கவே மிக அழகாக இருக்கும் . அவள் குடும்பத்தில் பணப் பிரச்சினை , சொத்துத் தகராறு , இதுபோன்று பல பிரச்சினைகள் இருந்ததால் அவள் அமைதியின்றி இருந்தாள். பல சமயங்களில் அழுதிருக்கிறாள் என்பதை அவள் கண்களே காட்டும். ஒரு முறை எனக்கும் , கலைச்செல்விக்கும் ஏதோ காரணத்தால் சண்டை , இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தையில்லாமல் இருந்தது.ஆனால் சித்ரா கலையோடு பேசுவாள். அந்த சமயத்தில் கலை ஒரு நாள் மிகவும் கலக்கமாகவும் , இரவு முழுவதும் அழுதவளாகவும் தோன்றினாள். அதுகுறித்து சித்ரா என்னிடம் சொன்னபோது நான் எதார்த்தமாக “தலைமுடி நீளமா இருக்கற பெண்களுக்கே வாழ்க்கையில துக்கம் அதிகம்னு எங்க பாட்டி சொல்லுவாங்க , அதான் அவளுக்கும் ரொம்ப துக்கம் வருது போல ” என்று சொன்னதை கலையிடம் “சந்தியாவிற்கு உன்னைப்போல முடி நீளமா இல்லன்னு பொறாமை , ஒன் முடியாலதான் நீ கஷ்டப் படறேன்னு சொல்றா “என்று திரித்துக் கூறிவிட்டாள். மற்ற எல்லாருக்கும் விஷயம் தெரிந்து என்னை வெறுப்போடு பார்த்தனர். கடைசியில் சித்ராவின் வேலைதான் அது என்று தெரிந்ததும் என்னால் அந்த துரோகத்தை மன்னிக்கவே முடியவில்லை.பிறகு சித்ரா மன்னிப்புக் கேட்ட பிறகும் மனம் விட்டு பழக முடியவில்லை. ஒருவேளை தனியே பேருந்து ஏறி கல்லூரி செல்ல பயந்து என் துணையை நாடுகிறாளோ சித்ரா? என்ற எண்ண ஓட்டத்தையும் மாற்ற முடியவில்லை.கல்லூரி இறுதியாண்டு முடியும்முன்னே நாங்கள் நகரத்தின் வேறு பகுதியில் சொந்த வீடு கட்டி குடி புகு போய்விட்டோம். அதனால் கல்லூரியில் மட்டுமே எங்கள் நட்பு தொடர்ந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்து கல்யாணமாகி வேறு வேறு திசைகளில் பறந்து கிட்டத்தட்ட இருபதாண்டுகள் முடிந்த நிலையில் இந்த சந்திப்பு.

சித்ராவின் நகைகளும் , உடையும் அவள் பொருளாதாரத்தைப் பறை சாற்றின. அவள் நல்ல நிலைமையில் இருப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.சித்ராவின் அம்மா அடிக்கடி சொல்வாள் “எம்பொண்ணுக்கு என்ன அவ நெறத்துக்கும் , அழகுக்கும் ஒரு ராஜகுமாரன் வருவான்” என்று. அது போல இராஜகுமாரனே வந்துவிட்டான் பொலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். ” என்னடி பேசாமே இருக்கே? வா எங்கியாவது ஒக்காந்து பேசலாம் ” என அங்கிருந்த ஒரு ஓட்டலை நோக்கி இழுத்தாள். என் வீடு மிக அருகில் நடை தூரத்தில் இருப்பதாகச் சொல்லி அவளை வீட்டிற்கு அழைத்து வந்தேன். சித்ரா அடையாறில் இருப்பதாகவும் , மகளும், மகனும் பள்ளிக்குச் சென்று விட்டதாகவும் , அவள் கணவன் பிசினஸ் விஷயமாக மும்பை சென்றிருப்பதாகவும் , நிறுத்தாமல் பேசிக்கொண்டே வந்தாள். கபாலி கோயிலுக்கு வந்துவிட்டுத் திரும்பும் போதுதான் என்னைப் பார்த்ததாகவும் அடுக்கினாள்.வீடு வந்து விட்டது.”எங்க வீடு செகண்ட் ஃப்ளோர்ல இருக்கு , லிஃப்ட் கிடையாது ஏறித்தான் போகணும்” என்ற சொன்ன என்னை “ஐயோ! பாவம்” என்பது போல் பார்த்தாள். “வீடு சின்னதா இருந்தாலும், நீட்டா அழகா இருக்குடி ” என்று சொல்லவும் எனக்குச் சிரிப்பு வந்தது. “நீ நெனக்கிற அளவு பெரிய வீடு வேணும்னா வாடகை இருபதாயிரம் , முப்பதாயிரம் குடுக்கணும் மயிலாப்பூர்ல , என்று வீடு பற்றிய பேச்சிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன். என்னைப் பற்றிக் கேட்பாள் என்று எதிர்பார்த்தேன் , கேட்கவில்லை. அதனால் நானே என் கணவர் ஒரு பெரியதனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதையும் , என் மகள் பக்கத்திலே இருக்கிற ஒரு புகழ் பெற்ற பள்ளியில் படிப்பதையும் சொன்னேன். பள்ளியின் பெயரைக் கேட்டவுடன் “அது ஸ்டேட் போர்டு ஸ்கூலாச்சே” என்றாள். அவளிடம் குழந்தைகளின் கல்வி பற்றிய என்னுடைய கொள்கையைச் சொல்லவில்லை , சொன்னாலும் புரிந்து கொள்வாளா? என்ற சந்தேகம் இருந்ததால் வெறுமே “ஆமாம்” என்றேன்.

அன்று முழுவதும் என்னுடனேதான் இருந்தாள். மதியம் நான் வைத்திருந்த புளிக் குழம்பையும் , வாழைத்தண்டு பொரியலையும் இரசித்து சாப்பிட்டாள். சைனஸ் டிரபுள் என்று தயிரை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். இதெல்லாம் செய்யும் போது பேச்சுபாட்டுக்கு நடந்து கொண்டே இருந்தது. இவளுடைய அழுகுகாகவே , வரதட்சிணை எதுவும் வேண்டாம் என்று இந்த மாப்பிள்ளை அவளைக் கட்டிக் கொண்டாராம். என் கணவர் என்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அழுத்தமாக நின்று என்னை மணந்தது அனைவருக்கும் தெரியும். அதை நினைவூட்டியவள் ” ஒன் கல்யாண ரிசப்ஷன்ல நானும் விஜியும் பேசிக்கிட்டோம் என்ன தெரியுமா? என்னத்தைக் கண்டு இவரு உன்னக் கல்யாணம் கட்டிக்கிட்டாருன்னு தான்” என்று சொல்லி ஜோக் அடித்தவள் போல சிரிக்க ஆரம்பித்தாள். என் மனது புண் பட்டாலும் , வீட்டிற்கு வந்த விருந்தினர்களை ஒன்று சொல்ல வேண்டாம் என்று பேசாமல் இருந்து வீட்டேன் . அவள் பேச்சு முழுவதும் மற்றவர்களை குறை கூறுவதாகவோ , இழிவு படுத்துவதாகவோ இருந்தது. என் வியப்பு எரிச்சலாக மாறிகொண்டிருந்தது.ஒரு நிலையில் பொறுக்க முடியாமல் “ஏன் சித்ரா இது வரை நீ பேசினத வெச்சுப் பாத்தா ஒங்க அப்பா , அம்மா தவிர எல்லாரும் ஒம் மேலப் போறாமப் படறாங்க போலயிருக்கே? ஒன் வீட்டுக்காரர் ஒன்ன தங்கத்தட்டுல வெச்சு தாங்கறார்னு சொல்லு” என்றேன் கேலியாக. சற்று நேரம் பேசாமல் இருந்தவள் ” எனக்கு மதியம் சாப்பிட்ட ஒடனே கொஞ்சம் படுக்கணும் ” என்றாள். பெட்ரூம் வேண்டாம் எனத் தோன்றவே கூடத்திலேயே பாயை விரித்தேன் , அவளும் மறுப்பேதும் சொல்லாமல் படுத்துக் கொண்டாள்.

அவள் மௌனம் மேலும் நீடிக்கவே ” என்ன லவுட் ஸ்பீக்கர் நின்னு போச்சு ” என்றேன் வேடிக்கையாக. தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். இம்முறை உண்மையிலேயே அதிர்ந்து போனேன். அவள் கணவன் அதிகமாகக் குடிப்பதாகவும் , மற்ற பெண்களோடு தொடர்பு உள்ளதாகவும் சொன்னாள். இவள் திருத்த முயற்சி செய்தும் முடியவில்லை என்றும் இந்த விஷயத்தில் சித்ராவின் பெற்றோர்களும் அதிகம் தலையிடுவதில்லை எனவும் அவள் பேச்சிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.”எல்லாரும் ஒனக்கு என்ன கொற? கை நிறைய பணம் , பெரிய வீடு , அழகான ரெண்டு கொழந்தைங்க , போதாக் கொறைக்கு மாசாமாசம் நகை வேற , வேற என்ன வேணும்னு கேக்கறாங்க , பணம் மட்டும்தான் வாழ்க்கையா ? மனசுல நிம்மதி வேணாமா? , எனக்கு மட்டும் சுய மரியாதை இல்லியா” என்றெல்லாம் புலம்பினாள். சித்ராவின் படாடோபமான பேச்சு வெறும் வெளி வேஷம் மனதில் உள்ள குறையை மறக்க என்று நினைத்துக் கொண்டேன்.அவள் புலம்பல் மேலும் தொடர்ந்தது , “நான் தீபாவளிக்கு ஒரு தடவை ஊருக்குப்போயிருந்த போது என் மாமியார் என்னைக் கொலை செய்யப் பாத்தாங்க தெரியுமா? ” என் அதிர்ச்சியைப் பார்த்து விட்டு “ஒனக்கு நம்ப முடியாமதான் இருக்கும் , இடிஞ்சி விழறா மாதிரி பாத்ரூம்ல ஒயரெல்லாம் பிஞ்சி தொங்கிட்டிருந்துது , நான் கவனமா இருந்தேனோ , பொழச்சேன் இல்லன்னா அவ்வளவுதான் , அதுகூடப் பரவால்ல நான் வெளில வந்தஒடனே குளிச்சுட்டு வந்துட்டியான்னு கேக்கறாங்க , என்ன கொழுப்பு பாத்தியா ?” என்று அடுக்கிக்கொண்டே போனாள். எனக்கு அவள் மன ஆரோக்கியத்தின் மீதே முதல் முறையாக சந்தேகம் வந்தது. அவளுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். மூன்று மணிக்கு டீ குடித்து விட்டு குழந்தைகள் வந்து விடுவார்கள் என்று சொல்லி விடைபெறும்போது வரும் திங்கட்கிழமை காலை பத்து மணிக்கே அவள் வீட்டிற்கு வந்து விட வேண்டுமென்றும் , சாயந்திரம்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தினாள்.நானும் அவ்வாறே வருவதாக உறுதி கூறினேன்.

இரவு என் கணவரோடும் , என் மகளோடும் இந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டேன். இருவருக்குமே சித்ராவைப் பிடிக்கவில்லை. “என்னதான் பல வருஷப் பழக்கம்னாலும் ஒரே நாள்ல குடும்ப விஷயங்கள் பூராத்தையும் சொல்லியிருக்காங்கன்னா… எனக்கென்னவோ அதல்லாம் உண்மையா இருக்குமான்னு சந்தேகமா இருக்கு?”என்றார். என் கணவர்.”நீங்க நகரத்துல பொறந்து வளந்தவுங்க , ஆனா நாங்க அப்படியில்ல , கிராமத்துல வாழ்ந்தவுங்க எதயும் மறச்சு வெக்க எங்களுக்கு தெரியாது” என்று சொன்னேன். என் மகளுக்கு எங்கள் திருமண விஷயதைப் பற்றி சித்ரா கூறியது சுத்தமாக பிடிக்கவில்லை.”நீ அவங்க வீட்டுக்குப் போகாதேம்மா , ஒன்ன இவ்ளோ கேவலமா பேசியிருக்காங்க , அப்றம் அவங்க மொகத்துலயே முழிக்கக்கூடாது”என்றாள். உடனே என் கணவர் “நீ சும்மாரும்மா! அவங்க சொன்னதுலயே அது ஒண்ணுதான் உண்மை” என்றார் சிரித்துக் கொண்டே. உடனே நான் பத்ர காளியாக மாற அப்பவும் பெண்ணும் சிரித்ததிலிருந்து என்னைக் கேலி செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டு நானும் சிரித்தேன்.

திங்கட் கிழமை ஒன்பதுமணிக்கெல்லாம் கிளம்பிவிட்டேன். அடையாறில் அவள் வீட்டைக் கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை. தனி வீடு. கீழே அவள் கணவரின் அலுவலமாகவும் , மாடியில் வீ டும் இருந்தது. நல்ல விசாலமான படிகள் , சுற்றிலும் குரோட்டன்ஸ் செடிகள். இடம் மிக அமைதியாக இருந்தது. அந்த சூழலை அனுபவித்துக்கொண்டே மேலேறினேன்.ஏறஏறவே சித்ராவின் பேச்சுக் குரல் கேட்டது. “யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாள்? அவள் கணவர் ஒருவேளை டூர் முடிந்து வந்து விட்டாரோ?” என்று தயங்கினேன்.இல்லை ஃபோனில்தான் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சில் என் பெயர் அடிபடவே உள்ளே நுழையப் போனவள் நின்றுவிட்டேன். “ஆமாங்க! அப்படித்தான் சொன்னேன். அவ ரொம்ப சாதாரண நெலயில இருக்கா , பொண்ணக்கூட கவர்மெண்ட் ஸ்கூல்லதான் சேத்திருக்கா , நகையும் ரொம்பப் போடலை , அதான் அப்படிச் சொன்னேன்” அதற்கு மறுமுனை என்ன பதில் சொன்னதோ தெரியாது “நீங்க சும்மாருங்க! நான் அப்படிச் சொல்லலேன்னா அவ என்மேல ரொம்ப திருஷ்டி போட்டுருப்பா! கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக் கூடாதுங்க!”என்று பேசிக்கொண்டே போனாள்.வெளியில் நின்றிருந்த எனக்கு கல்லடி பட்டது போல வலித்தது. சத்தம் போடாமல் கீழிறங்கி தெருவில் நடந்தேன். நடக்கும்போது “சித்ரா வேண்டுமென்றே நான் வரும் இந்த நேரத்தில் அவள் கணவனுக்கு ஃபோன் செய்திருப்பாளோ” என்ற எண்ணத்தைத் தவிர்க்க என்னால் முடியவில்லை.

Series Navigation

ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஸ்ரீஜா வெங்கடேஷ்

தோழி

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

கே.ஜே. அசோக்குமார்



நான் வீட்டிற்கு வந்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. எல்லா நேரங்களிலும் இது மாதிரியான ஆச்சரியங்கள் காத்திருப்பதில்லை. மிக அபூர்வமான ஆச்சர்யமாகவே இது தோன்றியது. சுனிதாவின் அம்மாவும் அத்தையும் வந்திருக்கிறார்கள். சுனிதாவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக. பத்திரிக்கையை பார்க்க பார்க்க ஆச்சரியங்கள் அதிகரித்தபடியே சென்றன.
‘இன்னும் ஞாபகம் வைத்து கூப்பிட்ராங்க பாரேன், உன்ன எங்க எங்கனு கேட்டாங்க, கண்டிப்பாக பொண்ணோட வரணும்னு சொல்லிட்டாங்க’ என்றார் அம்மா. அம்மாவின் முகமெல்லாம் சிரிப்பாக இருந்தது. நான் இல்லாதது அவர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் கல்யாணத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற சமாதானத்துடன் போயிருப்பதாக தோன்றியது. ஆறாண்டுகளுக்கு பின் சுனிதாவை பார்க்கப் போவதை நினைத்து இப்போதே மகிழ்ச்சியாக இருந்தது. என் சந்தோசத்தை விட அம்மாவின் சந்தோசம் அதிகமாக இருந்தது. நான் வரவில்லை என்றாலும் கல்யாணத்திற்கு போய்விடுவார் போலிருந்தார். சுனிதாவின் குடும்பத்துடன் வெறும் நட்பை தாண்டி அம்மாவிற்கு வேறு என்ன இருக்க முடியும்?
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் வீடுதேடி அவள் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அப்போது நாங்கள் திருச்சியில் இருந்தோம். ஜன்ஷனிலிருந்து பஸ் பிடித்து வீட்டிற்கு வந்தார்கள். வந்ததுமே ‘உங்க பொண்ணு பண்ண உதவிய மறக்க முடியாது சார்’. என்று ஆரம்பித்ததும் உதற ஆரம்பித்து விட்டது எனக்கு. அப்பா அம்மாவிருக்கு எதுவும் தெரியாது. எப்படி கூறமுடியும்? இன்னும் சின்னக் குழந்தையாக பாவித்துக் கொண்டிருப்பவர்களிடம் இம்மாதிரியான விஷயங்கள் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுத்துமென்று தெரியவில்லை. அவசர அவசரமாக வேறு பேச்சுக்கு மாற்றி காப்பி குடிக்க வைத்து வெளியே அழைத்து வந்து ‘அங்கிள், இதையெல்லாம் அப்பாஅம்மாவுக்கு தெரியாது’ என்றதும். அப்பா அம்மாவிற்கு கூட தெரியாம வச்சிருக்கியம்மா கண்கலங்கி கைகூப்பியபடியே விடைபெற்று சென்றார்கள்.
பத்தாம் வகுப்பில்தான் அந்த பள்ளியில் வந்து சேர்ந்தேன். ஆரம்பத்தில் சுனிதா என்னுடைய தோழியாக இல்லை. சொளசொளவென்று அவள் தலையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருப்பது எனக்கு அதிகமாக பிடிக்கவில்லைதான், என்றாலும் அகரவரிசைப்படி, என் பக்கத்தில் அமர்ந்து பயிற்சி தேர்வு எழுதும்போது பழக்கம் ஏற்பட்டு தோழியாகிவிட்டாள்.
படிப்பில் மிகப் பெரிய அக்கறை ஏதுமில்லை. ஒவ்வொரு நாளும் சந்தோசமாக கழித்தால் அதுவே போதுமானது அவளுக்கு. அதற்கு என்ன காரணமென்று இப்போது யோசித்தால், அவள் அம்மாவும் அப்பாவும் வேலை, கோவில், பஜனையென்று, அவள் மேல் அக்கறையில்லாமல் அலைந்தது ஒரு காரணமாக கூறமுடிந்தாலும், அப்போது இதை யோசித்துக் கொண்டிருக்க முடியவில்லை.
அவளுடைய வீடு ரயில்வே குவார்ட்டஸ் தண்டவாளங்களுக்கு பக்கத்திலேயே இருந்தது. தாழ்வாக ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக அமைதியான சூழ்நிலையில் அமைந்த வீடுகள், ரயில்கள் போகும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில், காகங்கள், குயில்கள் போடும் சத்தங்கள்தான் கேட்கும். அந்த ரம்மியமான சூழ்நிலையை நினைக்க இப்போதும் இனிமையாக இருக்கிறது. ரயில்கள் எப்படி ஒரு தண்டவாளத்திலிருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு போகின்றன என்று ஆர்வமாக அவளிடம் கேட்டிருக்கிறேன், அவளுக்கு பழசாகிப் போன விசயமானதால், சினிமா, கிசுகிசு போன்ற வேறு சுவாரஸ்யமான விசயங்களே பேசுவாள்.
பள்ளிக்கு வரும்போது அமைதியாக வருவாள் போகும்போது அவள் செய்யும் அளும்பு தாங்கமுடியாது. அப்போது தாவனியை ஒத்தையில் அணிந்து செல்வாள். ரவிக்கையின் கட்டு மிக கிழே இறங்கி இறுக்கமான சதை பிளவை மெல்லிய தாவணி வெளிக்காட்டியபடி இருக்கும். வெளியே வந்ததுமே அவள் வெளிப்படையாக பேசும் வார்த்தைகளும் செய்கைகளும் எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் ரசிக்கவேசெய்தோம். எல்லாத்தையும் வெள்ளேத்தியாக எல்லோரிடமும் கூறிவிடுவது அவள் வழக்கம். யார் பக்கத்தில் இருக்கிறார்கள் இல்லை என்பதை அவள் கவனிப்பதில்லை குவார்ட்டஸில் இருக்கும் ஒரு பையனோடு ஏற்பட்ட பழக்கத்தை ஒருநாள் கூறும்போது அதிகமாகவே அதிர்ச்சியாக இருந்தது. அது சாதரணமாக காதலாகவோ நட்பாகவோ இருந்திருந்தால் பெரியதாக தோன்றியிருக்காது. அதைவிட அதிகமானது எனக் கூறக்கேட்டதும் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்தோம். ஆனால் அவள் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.
ஒருநாள் பஸ்ஸில் வந்து இறங்கும்போது ஒரு பையனை அறிமுகப் படுத்தினாள். என்னவோ ஒரு பெயரை சொன்னாள். அவனை பார்த்ததும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என் மாமா ஒருவர் தன் பையனை திட்டும்போது ‘காடுப்பயலே’ என்று திட்டுவார். அதன் அர்த்தம் அவனைப் பார்த்தபோது தோன்றியது. நல்ல உயரத்தில் கட்டுமஸ்தான பெரிய ஆள் மாதிரியிருந்தன். அவசர அவசரமாக விலகிஓடியது நினைவிருக்கிறது. அப்படி அவனிடம் என்ன கண்டுவிட்டாள் என்பது தெரியவில்லை.
மிட்-டெர்ம் தேர்விற்காக குழுவாக உட்கார்ந்து விவாதித்து கொண்டிருந்தபோது, கைபிடித்து இழுந்து தனியே அழைத்துச் சென்றாள். மிகமுக்கியமாக பாடத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவள் இப்படி செய்தது எரிச்சலாக இருந்தது. ஒரு கழிவறைக்கு பக்கத்தில் நிற்கவைத்து கண்டதையும் பேசிக்கொண்டிருந்தாள். நிலைகொள்ளாமல் இப்ப என்னவேணும் உனக்கு என்றேன். ‘தள்ளிப் போயிருக்குபா’ என்றாள். ‘என்ன?’, ‘ஆமா, மூணுமாசமா இருக்குப்பா’ என்றாள். என்ன கூறுகிறாள் என்பதை புரிந்துகொள்ள சிலநிமிடங்கள் ஆகியது. அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. உண்மை சொல்கிறாளா அல்லது விளையடுகிறாளா என்று கண்டுகொள்ளவும் முடியவில்லை. நடந்து செல்லும் வேறு பெண்கள் காதில் விழுந்துவிடக்கூடும் என்ற பயமில்லாமல் உளறிக்கொண்டிருந்தாள். அந்த இக்கட்டான சூழ்நிலையை அருவருப்பாக உணர்ந்தேன்.
‘இதெல்லாம் என்கிட்டே ஏன் சொல்ற, உங்கமாகிட்ட போய் சொல்லு’
‘அது… சொல்லமுடியாதுப்பா ‘ என்றாள்.
‘என்னமோ செய், எனக்கு தெரியாது’ என்று போய்விட்டேன்.
அம்மாவிடம் சொல்லிவிட்டதை வந்து சொல்வாள் என்று இருநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
அவள் எப்போதும்போல் சுற்றிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்க கூடாது, பேசக் கூடாது என்றேண்ணியிருந்தேன். ஆனால் மனசு கேட்காமல் அவளிடம் சென்று ‘என்ன சொன்னியா’ சென்றேன்.
‘இல்லப்பா’, என்றால், குழந்தைத்தனமான முகத்துடன்.
‘ஏன்’
‘சொல்லி என்னப்பா ஆவப் போவுது’.
‘ஏன்’
‘அவன காணல, எங்க இருக்கண்ணே தெரியல, குவாட்டர்ஸ்லே இல்ல’.
சிறிது மௌனத்திற்குபின் ‘பின்ன என்னபன்றதா நினைப்பு?’
ம்..என்ன பண்றது… நா, புள்ள பெத்துகிறதா இருக்கேன்’, என்றாள்.
லேசாக கண் கலங்கினாள். கையால் கண் ஓரங்களை தாவணியால் துடைத்தாள். அவனை கல்யாணம் கட்டிக்கலாம் என்கிற அவள் நினைப்பு மாறிப்போயிருந்தது. அவளிடம் என்ன சொன்னாலும் புரியாதுபோல் தோன்றியது. நாட்களை கணக்கிட போது மே அல்லது ஜூனில் பிரசவம் இருக்ககூடும் என நினைத்தேன்.
‘அப்பா வயித்த தள்ளிக்கிட்டு வந்து பரிச்சை எழுதப் போறியா’ என்றேன்.
சட்டென தலை தூக்கி ‘ஏன் எழுதுனா என்ன’ என்றாள்.
ஓங்கி அறையலாம் போல் இருந்தது. ‘சீ… போடி’ என்று எழுந்து போய்விட்டேன்.
மாலை ஆவளுடன் பஸ்சில் என் வீட்டையும் தாண்டி அவள் வீடுவரை சென்றேன். ‘எங்க வீட்டுக்கா வர்ற’ என்று கேட்டுக் கொண்டிருந்தாள். ‘எல்லா வேறு ஒருத்தர் வீட்டுக்கு போறேன், அப்படியே உங்க வீட்டையும் பாத்துடலாமே’ என்று அவளுடனேயே சென்றான்.
அவள் வீடு போனபோது அவள் அம்மா கடலை தின்றுக் கொண்டிருந்தார். எப்படி கூறுவதென்று தெரியாமல் மெதுவாக விஷயத்தை ஆரம்பித்து, கூறிவிட்டேன். முதலில் புரியாமல் முழித்துவிட்டு திடிரென மயக்கம் வராத குறையாக கடலை பொட்டலத்தை தூக்கிப் போட்டுவிட்டு தரையில் அமர்ந்துவிட்டார். ‘என்னம்மா சொல்ற’ கண்கள் கலங்கி ஒரு மாதிரி ஆகிவிட்டார். ‘என்னடி இது’ என்று அவளிடம் கேட்க உம்மென்ற முகத்துடன் ‘ஆமாம்’ என்றாள். அவள் தங்கையும் கூடவே அவளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்று அவள் வீட்டில் என்ன நடந்ததோ தெரியவில்லை. மறுநாள், நான் வந்து சொல்லிவிட்டதற்காக கோபப்படுவாள் என நினைத்தேன். ஆனால் எப்போது போல‌வேயிருந்தாள். மாலை அவள் அம்மாவும் அத்தையும் வந்து விட்டார்கள். அந்தப் பையன் ஓடிவிட்டதாகவும், அவர்கள் வீட்டில் சென்று கேட்ட‌தற்கு அடிக்க வருகிறார்கள் என்றும், அவர்கள் பேச்சில் புரிந்து கொள்ள முடிந்தது. கருகலைப்பிற்கு அவள் சம்மதிக்க வில்லை. ‘நீ சொல்லம்மா’ என்பதுதான் அவர்கள் வேண்டுகோள். முடிந்தவரை எடுத்துக்கூறினேன். இந்த தேர்வு மிக முக்கியமானது, மற்றதையெல்லாம் அப்புறம் முடிவு செய்துகொள்,நாளை கடத்தாதே என்றேன். பேசாமல் நின்றாள். ‘நா அவகிட்ட நாளைக்கு பேசுறேன், நீங்க அழைச்சுக்கிட்டு போங்க’ என்றேன்.
‘அடுத்த நாள் அவளிடம் நீ பண்ணப்போற இந்த காரியத்தால உங்க குடும்பத்துக்கு எவ்வளவு அவமானம் யோசிச்சுப்பாரு உங்க அப்பா அம்மாவுக்கு எவ்வளவு தலைகுனிவு, நா சொன்னமாறியே அவன் ஒடிப் போயிட்டான் பாத்தியா, இனிமேலும் அவன் மேல நம்பிக்கை வைச்சிருக்கியா’ நீண்ட இடைவெளிக்குப்பின், கடைசியாக அவள் ஒத்துக்கொண்டு போனாள். கண்கள் கலங்கியிருந்ததுபோல் இருந்தன. எப்போதும் இருக்கும் துள்ளல் குறைந்துபோய் எழுந்து போனாள்.
அவள் எடுத்துக் கொண்ட 15 நாள் விடுமுறையை மலேரியா, பேதி என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறிவந்தோம். 15 நாள் கழித்து வந்தபோது, அவள் முகம் வெளுத்திருந்தது. அவள் விசயம் தெரிந்த இரண்டொரு பெண்கள் அவளை சூழ்ந்து ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் பேசினேன், என் கண்களை சந்திக்க அவளிடம் ஒரு தயக்கம் இருந்தது. பின்னாலில் சிங்காரிப்பதில் அவள் ஆர்வம் குறைந்து, படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
சுனிதா நீங்களாக, மற்ற பெண்கள்கூடிப் பேசும்போது அவளைப்பற்றிய வார்த்தை இல்லாமல் இருப்பதில்லை. அவளைப் பற்றிய பேச்சு இல்லையென்றால் அப்பேச்சு சுவாரஸ்யமாக அமைவதில்லை. அதில் முக்கியமானது அவள் வருங்காலத்தைப் பற்றியது.
‘இனிமே குழந்தை பெத்துக்க முடியாதம்பா, ரொம்ப சின்ன வயசிலேயே கலச்சிட்டதால, இருதய பிரச்சனை இருக்கிறதால இன்னிமே குழந்த பெத்துக்க முடியாதம்பா, அப்படியே உண்டானாலும் அது அவ உயிருக்கு ஆபத்தாம்பா’ என்று விஜயா நீளமாக கூறிக்கொண்டிருந்தாள்.
அவளைப் பற்றிய விசயங்கள் சுவாரஸ்யம் இழப்பதற்கு கொஞ்ச நாள் ஆகியது.
கூட்டு படிப்பிற்காக விஜயாவுடன் சுனிதா விட்டிற்காக வந்தபோது அவளின் அன்றைய பேச்சு மிக அந்தரங்கமாக அவள் மனக்குறையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. ‘இனிமே நா குழந்தையே பெத்துக்க முடியாதாம்பா’ என்பதுதான் அதில் முக்கியமான விசயம். சாதாரணமாக சமாதானப் படுத்திவிட முடியவில்லை. ‘இப்போதைக்கு படிப்பில் கவனமாயிரு, பின்னாடி அதைப்பத்தி யோசிச்சிக்கலாம்’. என்று அவள் மனதை திசைதிருப்ப மட்டுமே முடிந்தது. இந்நிலையிலும் விஜயா ‘நா இவகூட படிக்கிறேன்னு எங்கம்மாகிட்ட சொல்லிறாதப்பா’ என்றாள். அனைத்தையும் அவள் அம்மாவிடம் கூறிவிட்டிருக்கிறாள். ‘இதுதான் என்வேல பாரு, நீ வந்தது எங்கம்மாகூட கதையடிக்க, அதைப்போயி செய்யி’
கானாமல் போன அந்தபையன் அடுத்த வருடமே அவளை பின் தொடர்ந்தான். ‘அவன் பின்னாடியே வாறாம்பா அவன போ சொல்லுப்பா’ ஒருநாள் என்னிடம் வந்து கூறிக்கொண்டிருந்தாள். பஸ் ஸ்டாப்பில் வைத்து அவனைப்பார்த்த போது முன்னிலும் கம்பீரமாகிவிட்டதுபோல் தெரிந்தது. நாங்கள் போன பஸ்ஸிலேயே இரண்டுநாள் எங்களைபின் தொடந்து வந்தான். மூன்றாம் நாள் வந்தபோது முதல் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டோம். அவனும் இறங்கினான்.
நேராக அவனிடம் சென்று ‘ஏன் அவ பின்னாடியே வரீங்க உங்களுக்கு வேற வேல இல்லையா’
‘அது எங்களுக்குள்ள பிரச்சனை நீங்க பேசாதிங்க’ என்றான்.
அப்ப பிரச்சனை வரும்போது எங்க போயிருந்திங்க, அவ இனிமேலாவது நல்லாயிருக்கட்டும், அவள இனிமே தொந்தரவு பண்ணாதிங்க’ என்று கூறி விறுவிறுவென்று அவளை அழைத்து வந்தேன்.
‘என்னப்பா இப்படி பேசிட்ட, அவன் முரடன்பா, ஒன்னைய அடிச்சாலும் அடிப்பான்’.
‘இனிமே அவன் ஒம்பின்னாடி வரமாட்டான் பயப்படாதே’ என்றேன்.
பள்ளிப்படிப்பு முடியும் வரை அவன் வரவேயில்லை. அப்பாவிற்கு மாற்றலாகி வேறு ஊர் வந்துவிட்டோம். அப்புறம் அவளிடம் தொடர்பேயில்லை. அப்பாவின் அலுவலகம் மூலமாக் இந்த ஊர் விலாசத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கல்யாணத்திற்கு எப்போதும்போல் அப்பா வரவில்லை. நானும் அம்மாவும் மட்டும் சென்றோம். எங்களை கண்டதுமே சுனிதாவின் அம்மாவிற்கும் அத்தைக்கும் சந்தோஷம் தாளவில்லை. அவள் அம்மாவிற்கு வெள்ளைமுடி அதிகமாகிவிட்டிருந்தது. அத்தை கண்ணாடி போட்டு வேறுமாதிரி ஆகியிருந்தார். அவர் மகனைத்தான் திருமணம் செய்கிறாள் சுனிதா.
கொஞ்ச நேரம் பேசியபின் ‘சுனிதா அந்த ரூமிலே இருக்கா, போய் பாரும்மா’ என்றார். மணப்பெண் அறைக்கு சென்றபோது, நெத்திசுட்டி பில்லாக்கு வைத்து பாவாடை ரவிக்கையுடன் நின்று கொண்டிருந்தாள் சுனிதா. அவளுக்கு புடவை உடுத்திக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.
என்னைப் பார்த்துமே பெரிய திறந்த வாயுடன், ‘ஏ… எப்ப வந்த’ என்றாள், சேலை கட்டுபவளுக்கு ஈடுகொடுத்தபடியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள். இன்னும் அழகாகிவிட்டிருந்தாள். சற்று பெருத்து முடிநல்ல‌ அடர்த்தியுடன் லச்சணமாக மாறியிருந்தாள். அவள் அலங்காரத்திற்கு கொஞ்சம் உதவி செய்துவிட்டு, ‘சரி நா வெளியில போய் உட்காந்திருக்கேன்’ என்றுகூறி கிளம்பினேன்.

Kuppa.ashok@gmail.com
Kjashokkumar.blogspot.com

Series Navigation

கே.ஜே. அசோக்குமார்

கே.ஜே. அசோக்குமார்

தோழி

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

கு முனியசாமி


அந்தி நேரத்து மஞ்சள் வானம்
ஐப்பசி மாசத்து சாரல் மேகம்
ஆடியில் பெருகும் காவிரி வெள்ளம்
மாசறு பெண்ணே நீயென் செல்லம்….

எங்கே இருந்தாய் இத்தனை நாளாய்
எப்படி நுழைந்தாய் இதயத்தில் தானாய்
இத்தனை வேகம் ஈதென்னெ மாயம்
ஈரேழு ஜென்மத்து உறவின் காயம்….

மண்ணில் விழுந்த விதையும் முளைத்து
மரமாய் வளர சிலநாள் ஆகும்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிருள் உருக ஏனிந்த வேகம்….

கல்லாய் இருந்த மனசும் இன்று
பஞ்சாய் போச்சு பாரமாய் ஆச்சு
முள்ளில் விழுந்த மலராய் இன்று
முழுதும் நெஞ்சம் கலங்கிப் போச்சு…

மாயம் செய்தாய் மாசறு கள்ளி
மந்திரம் சொன்னாய் மனதைக் கிள்ளி£
ஐம்பது வயதில் இதுவென்ன கூத்து
அறிந்தும் உருகுது உயிரின் ஊற்று….

தப்பைக் கூட சரியாய்ச் செய்தால்
தப்பும் தப்பும் சரியென் றாகும்
உப்பும் உவர்ப்பும் உணர்வது போல
நட்பும் காதலும் இருந்தால் நன்று ….

கூடா நட்பு கூறுது மனசு
கூட்டிக் கழித்தால் மிஞ்சுதுன் நினைவு
ஊரும் உறவும் உணர மறுக்கும்
உண்மை நட்பையும் உலகம் எதிர்க்கும்….

வேசம் இல்லா உறவு வேண்டும்
விரசம் இல்லா நட்பு வேண்டும்
நாளை நடப்பது தெரிய வேண்டும்
நானுன் னுள்ளே துயில வேண்டும் ….

காமம் இல்லா காதல் வேண்டும்
கண்ணை மூடின் தூக்கம் வேண்டும்
காதல் இல்லா நட்பு வேண்டும்
கண்ணே உன்னுள் சாக வேண்டும் ….
——————

Series Navigation

கு முனியசாமி

கு முனியசாமி

தோழி

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

பவளமணி பிரகாசம்


என் பிரியமான தோழியே
விபரம் தெரிந்த வயதிலே
அறிமுகம் னவளே
இன்று வரை என் முகம்
பார்த்து நேசிப்பவளே

மையிட்டு பொட்டு வைத்து
அணிமணிகள் பூட்டிக் கொண்டு
தலை நிறைய பூவை சூட்டிய
அலங்காரம் ரசிப்பவளே
என் வளர்ச்சியை மலர்ச்சியை
பார்த்து பூரித்துப் போனவளே

என் கடைக்கண்ணில்
ஒளிந்திருக்கும் கள்ளச்சிரிப்பை
கண்டு மகிழ்ந்திடுவாயே
கண்ணுக்கடியில் கருவளையம்
கரிசனமாய் கவனிப்பாயே

சட்டென்று முகவாட்டத்தை
எண்ணங்களின் ஓட்டத்தை
கண்களில் எழும் கனவுகளை
இதழோரம் பூக்கும் முறுவலை
கோபத்தில் கன்றிப் போனதை
கண நேரத்தில் கணித்திடுவாயே

கனிவாய் துணையாய் நிற்பாயே
அந்தரங்கமாய் நான் கொட்டும்
குதூகலங்களை குமுறல்களை
குலுங்காமல் தாங்குவாயே

காதோரம் முதல் நரை கண்டு
நான் கலவரம் மிகக் கொண்டு
துக்கித்து நின்றபோது
துடுக்காக கேலி பேசி
தடுத்தாட்கொண்டவளே
தனை உணர வைத்தவளே
உனைப் போல் உண்மையான
நம்பகமான நட்பு நிறைந்த
உறுதுணை வேறறியேனே

சம்சார சலசலப்பை உன்னோடு
பகிர்ந்து கொண்டபோதும்
பாதித்த அத்தனை அனுபவமும்
பாடம் போல் ஒப்பித்தபோதும்
உலகம் அழகாய் தோன்றியபோதும்
ஊரும் உறவும் வெறுப்பேற்றியபோதும்
பருவத்தோடு பக்குவமாய் வளர்ந்து
நுரை அடங்கி நிதானம் வந்தபோதும்
நெஞ்சத்து எல்லைகள் “நானை” தாண்டி
வானத்துப் பறவையாய் எழும்பிய போதும்
வாய் திறவாது வாழ்த்தியவளே
தோள் கொடுக்கும் தோழியே
தாயே குருவே மனசாட்சியே
கண்கண்ட மெளன சாட்சியே
என் உள்ளக்கிடக்கையை உருவத்தை
உள்ளபடி பிரதிபலிக்கின்றாய்
பாதரசம் பூசிய பளிங்கே
போற்றுவேன் உனை எப்போதுமே

Pavalamani Pragasam
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்