காஞ்சனா தாமோதரன்
அவள் தூண் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். நல்ல தேக்கில் கடைந்தெடுத்து மேற்பூச்சுப் பளபளப்பு இன்னும் போகாமல் நின்றது தூண். உச்சியிலும் அடியிலும் கல்லில் செதுக்கிய தாமரை இதழ்கள். சிறு வயதில் இவற்றை இரு கைகளாலும் கட்டப் பார்த்துத் தோற்றது ஞாபகம் வந்தது. ஒரு தூணிலிருந்து அடுத்த தூணுக்கு ஒரே தாவில் தாவ வேண்டும். அவள் எப்போதும் ஜெயிப்பாள். நான்கு பக்கமும் தூண்களுள்ள திண்ணைகள். ஒவ்வொரு மூலையிலிருந்தும் அரை வட்டங்களாய் ஆறு படிகள். கீழே இறங்கினால் இரண்டு அடுக்கு உயரக் கூரையுள்ள முற்றம். குறுக்கும் நெடுக்குமாய் கட்டம் போட்டு, நடுவில் வட்டத்துக்குள் செந்தாமரை செதுக்கிய குளிர்சிவப்பு சிமெண்டுத் தரை. படங்களில் வரும் ராஜாவின் கொலு மண்டபம் போல்.
தாத்தா அந்த ஊருக்கு ராஜா மாதிரிதான் இருந்தார். பஞ்சாயத்து இருந்தாலும் வழக்கு தீர்க்க ஊர் சனங்கள் தாத்தாவிடம்தான் வருவது. வயல் வரப்புத் தகராறில் அண்ணன் தம்பி ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட இதே முற்றத்தில் நின்றது ஞாபகம் இருக்கிறது. ஊரே கூடி விட்டதே அன்றைக்கு. மாட்டுப் பொங்கல் அன்றைக்குப் பசுவும் கன்றும் இந்த முற்றத்தில்தான் வந்து நிற்கும். லச்சுமிப் பசு ஒரு கொம்பு பச்சை, ஒரு கொம்பு சிவப்பு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் பூமாலை, பனங்கிழங்கு மாலை, பக்கத்தில் கன்றுக்குட்டி என்று அம்சமாய் இருக்கும். பாட்டி அதற்கு தீபாராதனை காட்டுவாள். அது அந்த முற்றத்தில் சாணம் போட்டு ஆசீர்வதிக்கக் காத்திருப்பாள். லச்சுமிப்பசுவும் ஏமாற்றாது. ராசியான முற்றம். ஊர் அம்மன் கொடையில் கும்பக்காரியின் முதல் ஆட்டம் முற்றத்தில்தான். நாதஸ்வரக்காரரின் குழலில் காசுச் சரம் கண் சிமிட்டும். மேளக்காரர் முன்னும் பின்னுமாய் ஆடி ஆடி அடிக்கும் வேகத்தில் அவர் கொண்டை அவிழ்ந்து கூந்தலும் ஆடும். நையாண்டி மேளம். பம்பை. பெண் வேசம் கட்டும் கனியான். ஸாட்டின் காலுறை தெரிய பாவாடை சுழலப் பம்பரமாய்ச் சுற்றும் கும்பக்காரி. திண்ணைத் தூணைப் பிடித்துக் கொண்டு இதையெல்லாம் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கும். வளர்ந்ததும் கும்பக்காரி ஆகலாம் என்ற ஆசை வரும். சின்னையா ஆசாரி நகை சுற்றித் தரும் ரோஜா நிறத் தாளை ஈரப்படுத்தி உதட்டுக்குச் சாயமேற்றி, சொம்பைத் தலை மேல் வைத்து, பாவாடை சுழல, கண்ணாடிக்கு முன் கரகாட்டக்காரியாய் நடிக்க வைக்கும்.
பூசை அறையில் அபிஷேகப் பன்னீர் விபூதியின் மணமும் கலையாமல் கிடந்த வருடங்களின் வாசமும் சேர்ந்து அடித்தது. இருண்ட மூலையில் பச்சையும் ரோஜாவும் பூசிய இரும்புப் பெட்டி. அதன் மேல் லக்ஷ்மிதேவி பொற்காசுகளைத் தாராளமாய் நீரில் இறைப்பதைப் பார்த்து இரண்டு யானைகள் வாய் பிளந்து நின்றன. இன்னொரு மூலையில் கிராமஃபோன் பெட்டியும் இசைத்தட்டுகளும். பூசை அறையில் இவை எப்படி வந்தன. அவள் இசைப்பெட்டி பக்கம் உட்கார்ந்து கொண்டாள். கிராஃபைட் கனத்தது. பாகவதர். பட்டம்மாள். சின்னப்பா. எம். எஸ். இன்னும் நிறையவே. ஊசியை ஒழுங்காய்ப் பொருத்தி கிராமஃபோனை இயக்கினாள். ‘என் ஜீவப்ரியே ஷ்யாமளா… ‘ வயிற்றில் ஏதோ பிசைந்தது. ஒரு பாட்டின் பின் எவ்வளவு ஞாபகங்கள். அப்பாவும் பெரியப்பாவும் வண்ணக் காகிதங்களால் பெரிய பட்டங்கள் செய்வார்கள். நீண்ட தென்னை ஈர்க்குகளை வளைத்து அதற்கு மேல் காகிதத்தை ஒட்டி. பெரியம்மா மைதா மாவுப் பசை காய்ச்சித் தருவாள். அவளும் மற்ற பிள்ளைகளும் மொண்ணைக் கத்தரிக்கோலால் மிச்சத் தாள்களை வெட்டி எறிந்து விளையாடுவார்கள். பச்சையும் சிவப்பும் மஞ்சளும் சிரிப்பும் முற்றமெங்கும் சிதறும். முன்கட்டில் ஆம்பிள்ளைகள் கிணற்றுப் பக்கத்தில் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் பட்டம் விடுவதில் போட்டி. அவள் பெரியவளாகும் வரைதான் முன்கட்டுக்குப் போனதெல்லாம். உயரத்தில் பறக்கும் தன் பட்டத்தை அப்பா அவளிடம் ஐந்து நிமிடம் தருவார். அப்பாவின் பட்டத்தை விட்டு விடக் கூடாது. பயத்தில் இறுகப் பிடிப்பாள். நூல் விரலை வெட்டும். அப்பாவின் கைவட்ட அணைப்பில் நின்று காற்றின் படபடப்பை உள்ளங்கைக்குள் உணர்வது சுகமாய் இருக்கும். அப்பா. அவரை ஒரு மனிதராகத் தெரிந்து கொள்ளவே இல்லை. அப்படி வளரவில்லை. ‘ஷ்ஷ்ஷ்யாஆஆஆம……. ‘ கிராமஃபோன் சுற்றும் வேகம் குறைந்து அபஸ்வரமாய் இழுத்தது. அதை நிறுத்தி விட்டு எழுந்தாள்.
பின் கட்டின் திறந்த முற்றத்தில் வானவெளி வெறுமையாய்த் தெரிந்தது இப்போது. கீச்சிடும் சிட்டுக் குருவிகள் உள்ளும் வெளியுமாய்ப் பறந்து கொண்டிருந்தன. மேலே இரும்பு வலைச் சட்டத்தில் முல்லைக்கொடி வெயிலுக்கு நிழலாய் இருக்கும் அந்த நாளில். வெங்கலப் பல்லாங்குழித் தட்டில் புளியமுத்தும் அத்தையின் சிரிப்பும் சேர்ந்து கலகலக்கும். அடுப்பங்கரை அம்மியும் கிணற்றடித் துணி துவைக்கும் கல்லும் சேர்ந்து தாளம் போடும். பெரியம்மாவின் கைமணமும் உடைமர விறகும் வாசப்புகையாய். அம்மாவும் அத்தையும் எல்லா பிள்ளைகளுக்கும் சீதாப்பழம் பிய்த்துக் கொடுத்தவாறே சொல்லும் ஊர்க்கதைகள். அடுப்பங்கரையிலிருந்தே பெரியம்மா நடு நடுவே கதைகளுக்கும் உப்பு உறைப்பு சேர்ப்பாள். பால் உறியில் ஏறப் பார்க்கும் கள்ளப்பூனையைப் பழமொழி போட்டு விரட்டுவாள். நடுவே வேலையாள் கொண்டு வரும் சாமான்களையும் வாங்கி வைப்பாள். சாமான் அறை அதற்கே உள்ள வாசத்தோடு இருக்கும். விட்டத்தில் தொங்க விட்டிருக்கும் வாழைத்தாரும் வெங்கல அரிசிப்பானைக்குள் பழுக்க வைத்திருக்கும் மாங்காயும் வழவழத்த இடுப்புயர சாடியில் ஈரம் கசகசக்கும் கல் உப்புமாய்ச் சேர்ந்து ஒரு கதம்ப வாசம். ‘மதினி, தொண்ட காயுது, ‘ என்று அப்பா வந்து நிற்கும்போது இரண்டு உப்புக்கல் போட்டு கடுகும் கறிவேப்பிலையுமாய்த் தாளித்துக் கொட்டி செம்பு நிரம்ப மோர் கொடுப்பாள். சுறுசுறுவென்று பெரியம்மா. அவள் தாளிக்கும் வாசக் கடுகு மாதிரியே.
முற்றத்தின் இன்னொரு பக்கத்தில் பேச்சி புளி குத்திக் கொண்டிருப்பாள். பாட்டியும் அவள் பக்கத்தில். புளிய ஓடு, புளியமுத்து, புளி என்று மூன்று குவியல்கள். வீட்டுக்குப் பின்புறம் கொஞ்சம் தள்ளி உள்ள புளியந்தோப்புப் புளி. ‘நட்டப் பகல்ல அங்கன போய் நிக்காத தாயீ. பிசாசி உலாவுற நேரம் பாரு. ‘ வடித்த காதில் பாம்படங்கள் ஆட, பரம்பரை பரம்பரையாய் உழைத்துப் போட்ட உரிமையில் பேச்சி அவளை அதிகாரம் செய்வாள். அதற்குப் பிறகு அவளுக்கு எந்த நேரமுமே அங்கே போக பயம்தான். நடுப்பகலில் அங்கே உலவும் பிசாசு மற்ற நேரம் மட்டும் எங்கே போகுமாம். பெரியம்மா பையன் புளியமரக் கிளையில் தடியான வடம் போட்டு ஊஞ்சலாடுவான். உயர உயர. அவள் புளியங்காயை உப்பு தொட்டுத் தின்றபடி, பிசாசின் கொலுசுச் சத்தத்துக்காக காதைத் தீட்டிக் காத்திருப்பாள். புளிப்பும் பயமும் சேர்ந்து முதுகுத் தண்டை நடுக்கும். புளியமரத்தில் மோகினி. ஒற்றைப் பனைமரத்தில் முனி. பேச்சி மட்டும்தான் முனியைப் பார்த்தவள். அதே கதையை விதவிதமாய்ச் சொல்வாள். ஒவ்வொரு தடவையும் முனியின் உயரமும், அதைப் பார்த்த மறு நாள் ரத்தம் கக்கிச் செத்தவர்கள் கணக்கும், கதையின் நீளமும் கூடிக் கொண்டே போனது. மூன்று பனை உயரத்தில் தொடங்கிய முனி கடைசியில் ஆறு பனை உயரத்திற்கு வளர்ந்து விட்டிருந்தது. ஊர்க்கதைகள் அவ்வளவும் பேச்சிக்கு அத்துப்படி. அந்த வடக்கு வீட்டுக்காரன் பெண்டாட்டியைப் போட்டு அடிப்பது. பாவம், ஐந்தாவதும் பெட்டைப் பிள்ளை. சின்ராசு வீட்டுக்காரி ஏன் தினம் மாந்தோப்புக்குப் போகிறாள். அந்தச் சிங்கப்பூர்க்காரன் சின்ராசுவின் மாந்தோப்பை மட்டும் குத்தகைக்கு எடுக்கவில்லை போல. பட்டணத்துக்குப் படிக்க அனுப்பின செல்லம்மா அங்கே தானாகவே மாப்பிள்ளை தேடிக் கல்யாணம் பண்ணினது. அவன் சாதி சனம் யார். தெரியாது. உலகம் எங்கே போய் எப்படி முடியுமோ. பேச்சி வக்கணையாய்ச் சொல்வதில் உலக நடப்பு கொஞ்சம் புரியும்.
பாட்டி வேறு மாதிரி கதைகள் சொல்வாள். ஆழமான வெங்கல வட்டிலில் சோற்றை உருண்டை பிடித்துக் கொடுத்தபடி எத்தனை கதைகள். அப்போது மின்சார இணைப்பு கிடையாது. அரிக்கேன் விளக்கின் ஒளியில் பாட்டி சொல்லும் ஒவ்வொரு கதையும் பெரிய நிழலாய் விரியும். கேள்விகளும். சீதை பாவம். அவளுக்கு அவ்வளவு பொறுமையா. எத்தனையோ பொறுத்த அப்புறம்தானே தாங்க முடியாமல் அவள் பூமிக்குள்ளே போனாள். அவள் உண்மைதானா. சீதையை விட ஊர்மிளா பாவம். அவளைத் தனியாக மாளிகையில் விட்டுட்டு லக்ஷ்மணர் அவர்பாட்டுக்குக் காட்டுக்குப் போகிறாரே. அப்புறம், இந்தக் கிருஷ்ணர் நல்லவரா. நல்லவராக இருந்தால் கர்ணனை அப்படிப் பண்ணியிருப்பாரா. ஆனால், கடவுள் கெட்டவராக இருப்பாராக்கும். அவருக்கு எல்லாம் தெரியாதா என்ன. பலராமன் வாசுகியிடம் உண்டாகி அப்புறம் எப்படி ரோகிணிக்குப் பிறந்தார். முல்லைக் கொடிக்கு அந்த ராஜா தேரைக் கொடுத்தது வீணில்லையா. கொடிக்கு ஒரு வெறும் கொம்பைக் கொடுத்து தேரை விற்று நிறைய ஏழைகளுக்குச் சாப்பாட்டு போட்டிருக்கலாம், படிக்க வைத்திருக்கலாம். மனுசன் நிலாவில் போய் இறங்கினானாம். நிலா முழுக்க வெறும் கல்லும் மண்ணும்தானாம். சரி, நிலா வேண்டாம். கதையில் வருகிற மாதிரி ஏழு கடலும் ஏழு மலையும் தாண்டினால் உண்மையில் என்ன வரும். எல்லா பதிலும் தெரியாது. சோற்றுருண்டையில் பாட்டி கை மணத்து ருசிக்கும். கண்ணுக்குத் தெரியாத முல்லை வாசம் மாமரக் காற்றில் மிதந்து வரும். உலகம் ரகசியமும் ருசியும் மணமும் நிறைந்ததாய்த் தெரியும். அவளுக்காகக் காத்திருக்கும் கேள்விகளும் பதில்களும் நிறைந்த உலகம்.
பின்கட்டுக் கிணறு அமைதியாய்க் கிடந்தது. தண்ணீர்ப்பூச்சிகள் குமிழி போட்டன. துணிதுவைக்கும் கல் மேல் உட்கார்ந்து கொண்டாள். பக்கத்தில் மஞ்சள் அரைக்கும் சின்னக் கல். எத்தனையோ பேர் மஞ்சள் உரசியதன், மஞ்சள் பூசினதை நிறுத்தியதன் ஞாபகச் சின்னம். இந்தக் கிணறும் வயலின் நடுவே உள்ள பெரிய கிணறும் பூமிக்கடியில் ரகசியத் தொடர்பு வைத்திருப்பதாய் சில நாட்கள் அவள் பயந்திருக்கிறாள். பெரிய கிணற்றில் ஆவி இருந்தால் அது பூமிக்கடியே பறந்து இந்தக் கிணற்றுக்கு வந்து பயமுறுத்தலாம். பெரிய கிணறு அகலமும் ஆழமும் உள்ள பாசிப்பச்சை நீள்சதுரம். பக்கத்திலேயே நீர் இறைக்க எஞ்சின் அறை, தொட்டி. அந்தக் கிணற்றில்தான் பெரியம்மா மகன் குதித்துச் செத்துப் போனான். கருப்புக்கட்டி காய்ச்சும் நாள் அது. குழி அடுப்பு மேல் பெரிய அண்டாவில் கொதித்துக் கெட்டியான பதநீர்ப் பாகைத் தேங்காய்ச் சிரட்டைகளில் ஊற்றிக் கொண்டிருந்தாள் பேச்சி. பாட்டி கொஞ்சம் பாகைத் தனியாய் எடுத்து அதில் தேங்காய்ப்பூ தூவிக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கும் அத்தைக்கும் தேங்காய்க் கருப்புக்கட்டி பிடிக்கும். பெரியம்மாவும் அம்மாவும் தேங்காய் துருவிக் கொண்டு நார்க்கட்டில் மேல். தங்கையா வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான். ‘நம்ம சின்னப்பூ இருக்காவள்ளா… ‘ மேலே சொல்ல முடியவில்லை. நீந்தத் தெரிந்தவன். நீந்தவில்லை. விளையாட்டுக்காகக் குதித்தவன் தண்ணீர் அடி பட்டு மயக்கம் போட்டு முங்கி விட்டான் என்றார்கள். அவன் உடம்பை அலங்கரித்து மூலை நாற்காலியில் சார்த்திப் படம் பிடிப்பதிலிருந்து இழவு கேட்க வந்து, இராத்தங்கல் போட்டவர்களின் சாப்பாடு வரை எல்லாவற்றையும் பெரியம்மாவே கவனித்துக் கொண்டாள். பெரியப்பாவைத் தேற்றிக் கரையேற்றினாள். அழவேயில்லை. என்றைக்குமே.
பெரியம்மா வித்தியாசமானவள். ‘சிவகனி சிவகனிதான், ‘ என்று பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறாள். ஏன் என்பது புரிய கொஞ்சம் வயது வேண்டியிருந்தது. தாத்தா ஊருக்கு ராஜா மாதிரி என்றால், பெரியம்மாதான் ஊருக்கு ஆலோசனை சொல்லும் மந்திரி மாதிரி. பின் தோட்டத்தில் வழக்கமாக ஒரு பெண்கள் கூட்டம் நிற்கும். தங்கள் குடும்பக் கவலை பற்றிப் பேசிப் போக. பக்கத்தில் உட்கார்ந்து கவனிக்கையில், அவளால் எப்படி மற்றவர் கவலைகளைப் பொறுமையுடன் கேட்டு வழி சொல்ல முடிகிறது என்று ஆச்சரியமாய் இருக்கும். எவ்வளவு நல்லவள் என்று நினைக்க வைக்கும். எல்லாருக்கும் ஏன் நல்லவளாக இருக்க விரும்புகிறாள் என்றும், பிறர் கவலைகளில் தன் கவலையை மூழ்கடித்திருப்பாளோ என்றும் அப்புறம்தான் தோன்றியது. அப்படி பெரியம்மாவைப் பற்றி நினைப்பது தப்பு என்றும் தோன்றியது. கல்யாணமாகி இரண்டு வருஷத்தில் தாலியறுத்து வீட்டுக்குத் திரும்பிய அத்தை முதலில் போனது பெரியம்மாவிடம்தான். பாட்டிக்குக் கஷ்டமாக இல்லையா. பாட்டிக்கு அது இயல்பாய்த் தெரிந்த மாதிரி இருந்தது. அத்தையை விட்டு அவளையே எடுத்துப் பார்க்கலாம். அம்மா அவளை வளர்க்கும் பொறுப்பையுமே பெரியம்மாவிடம் விட்டு விட்டாள் என்று தெரியும். பெரியம்மா பிள்ளையாக இருப்பதில் தனக்கும் சந்தோஷம் என்று அப்புறம் புரிந்தது. அம்மா நிழலாய்த்தான் தெரிந்தாள். குறுகுறுவென்ற ஒரு சின்ன குற்ற உணர்வு. இன்னமும் கூட.
பெரியம்மாவால் பின்கட்டுக்கும் முன்கட்டுக்கும் இடையே பாலமாக இருக்க முடிந்தது. அடுத்த கிராமத்துக்கு வண்டி கட்டிப் போய் சினிமா பார்க்க. தாத்தா நூறாயிரம் கேள்வி கேட்பார். என்ன கதை. யார் நடித்தது. பிள்ளைகளை உருப்பட வைக்கும் படமா. சினிமாக் கொட்டகையில் கண்டவன் பார்வையும் குடும்பப் பெண்கள் மேல் படணுமா. பெரியம்மா நின்று பதில் சொல்வாள். புடவை, நகை வாங்க. தாத்தா இங்கேயும் மூக்கை நுழைப்பார். தாவணித் துணி அழுத்தமாக இருக்கட்டும். இப்போது வருகிற நைலக்ஸ் எல்லாம் குடும்பத்துக்கு ஒத்து வராது. முன்பக்கம் நிறைய சுருக்கு வைத்துக் கட்டும்படி மூன்று கெஜ நீளம் இருக்கட்டும். அப்புறம், தங்க நகை உருண்டு திரண்டு இருந்தால்தான் அழகு. ஸ்டைல் என்ற பேரில் அதிக வேலைப்பாடு செய்த நகை வாங்க வேண்டாம். அதில் செம்புக் கலப்பு அதிகம். அவள் முகமும் வாடாமல், அதே சமயம் அதிகச் செம்புக் கலப்பு இல்லாத நகையாய்ப் பார்த்துச் செய்யச் சொல்லுவாள் பெரியம்மா சின்னையா ஆசாரியிடம். சைக்கிள் ஓட்டப் பழக வேண்டாம். அதெல்லாம் பெண் பிள்ளைக்கு எதற்கு. பெரியம்மா மகன் மட்டும் சைக்கிள் விட்டால் போதும். ‘நீ வளர்ந்தப்புறம் பெரீய கலெக்டரம்மா ஆகி ராணி மாதிரி ப்ளெசர் கார் விடுவியாம். ஒண்றையணா சைக்கிள் எதுக்கப் ‘பூ. தாத்தா வேண்டான்னுட்டாகள்ளா. அழாத ‘ப்பூ. என் தங்கக்கட்டில்லா. ‘ அவளைத் தேற்றியதும் பெரியம்மாதான். பள்ளி இறுதியாண்டில் மாநிலத்தில் இரண்டாவதாகத் தேறி பத்திரிகைகளில் படம் வந்தது. ‘இவா மேல படிச்சா இவளக் கட்ட எவனும் கெடைக்க மாட்டான். ‘ ‘இஞ்சினீர் சுக்குநீர்னு என்ன படிப்பு. அது ஆம்பளப் படிப்பு, ஆம்பள காலேஜு. இவா அங்க போய் படிக்கது இவளுக்கு நல்லதில்ல. பேரு கெட்டுப் போச்சுன்னா இவள அப்புறம் எவன் கட்டுவான். ‘ அவளுள் ஏதோ சுருண்டு பொசுங்கும். கட்ட எவனாவது வேணும். அது ஒன்று மட்டும்தானா தானா வாழ்க்கை. பெரியம்மா இதை எப்படிச் சமாளித்தாளோ. அவள் இறுதியில் பொறியியல் கல்லூரியில். மாப்பிள்ளை கிடைக்குமுன் வேலை கிடைத்தது. முன்கட்டு முணுமுணுப்புகள். திரும்பவும் பெரியம்மா. மாப்பிள்ளையும் கிடைத்தார் சில வருசங்கள் கழித்து. முன்கட்டு பின்கட்டு என்பது பழங்காலம் என்றார். சம்பளத்துக்காக வேலை பார்க்க அவசியம் இல்லை, அவள் விருப்பப்படி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். மனைவி, தாய், பன்னாட்டு நிறுவனத்தின் டைரக்டர் என்ற பாரத்தைச் சேர்த்துத் தாங்க முடியுமா என்ற கேள்வியைக் காலப்போக்கில் கேட்டது அவள்தான். ‘கட்டினவர் ‘ கேட்கவில்லை. ‘நீ எல்லாமா இருக்கணுங்கது அவசியமோ முக்கியமோ இல்ல. உனக்கு எது அவசியம், எது சரின்னு படுதோ அத உன்னால செய்ய முடியணும். அதான் முக்கியம், ‘ என்றாள் பெரியம்மா. சுதந்திரம் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்ற பெரியம்மா. அதையே அன்புடன் அங்கீகரிக்கும் அவர்.
பெரியம்மா. பாட்டி. அம்மா. அத்தை. பேச்சி. பின்கட்டு உறவுகள். எவ்வளவு இதமாய். அன்பாய். ஆதரவாய். உறுதியாய். அவள் இன்றைய அவளாய் இருப்பதற்கான வேர்களாய்.
புளியந்தோப்பில் ஒரு பறவை ‘நீ-யோ-நா-னோ ‘ என்று பாடியது. அவள் வேலிப்படலைத் தள்ளி வீட்டைச் சுற்றிய வெளித்தோட்டத்தில் நடந்தாள். முன்கட்டும் பின்கட்டும் நடுமுற்றமும் இணைந்து வீடு முழுமையாய்த் தெரிந்தது அங்கிருந்து.
காஞ்சனா தாமோதரன்.
|
Thinnai 2000 February 6 |