அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

தமிழாக்கம் : புதுவை ஞானம்.


சூரியனையும் சந்திரனையும்
சிறையிலடைத்தனர்…
மறக்கமுடியாத அந்த
கொலை நடந்த நாளில்.
அவளது குரலைப் பறித்தனர்
தேசியக் கொடியால்
தொண்டையை அடைத்து-
ஒரு…
பழத்தைக் கவ்வுவது போல்
அவளைக் கவ்வினர், காடையர்.
அவர்கள் முகத்தில்
காறித்துப்ப விழைந்தாள்-
ஆனால்…
முகமே இல்லை அவர்களுக்கென்று,
ஒரு முகமே இல்லை.

சங்கிலிகள் தாங்கிய
எத்தர்களின்
பலியாகிப் போனாள்-
எழுகடல்களும்
உள்ளே இழுத்தது போல்.
வலையில் சிக்கிய
மீனாய்த் துடித்தும்
அவர்களின்
தீவட்டி வெளிச்சத்தில்
மறைந்து போனாள்.

அவளது கண்ணீர்
ஆறாய்ப் பெருகியும்-
யாருடைய தாகத்தையும்
தீர்க்க முடியவில்லை
கரைகள் நெடுகிலும்
அவளது சதையும் உதிரமும்
கந்தல் துண்டுகளாய் சிதறின.

இரும்புக் கரங்களில்
விழுந்து நொறுங்கியது-
உதிரம் சிந்தி
துவண்டு விழுந்தது-
கொடி போன்ற
அவளது மென்னுடல்.
அவளது விழிகளைப்
பகடைக் காயாக்கி
சூதாட்டம் நடத்தினர்
இரவின் அரக்கர்கள்.

குடித்து மயங்கினர்
அவளது அணிகலன்களை விற்றுக்
கிடைத்த பணத்தில்-
கசக்கி எறிந்தனர்
மலரொத்த அவளது உடலின்
ஒவ்வொரு இதழையும்
தூக்கிச் சென்றனர் எங்கோ
எங்கென்று…
கடவுளுக்குத்தான் தெரியும் ‘

ஒரு நாள்
அவளைக் கண்ணாடியில் பார்த்தேன்–
என்னையே தான் நான் கண்டேன்.
பாம்புகள் படம் விரித்தன
அவளது முகத்தில்-
பளபளக்கும்
வாட்கள் முளைத்தன-
குழிந்த கண்களிலிருந்து.
அவை நீண்டிருந்தன
வான் முட்டும் அளவுக்கு ‘

****
(ஆங்கிலம் வழியாகத் தமிழில்)

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்