மரம் பேசிய மவுன மொழி !

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

கோவி. கண்ணன்


புத்தர் முதல் புள்ளினம் அனைவருக்கும்
சத்திரமான சரணாலயங்கள் நாங்கள்!

நன்னீர் (மழை) சேமிப்பில்
நடமாடா(த) வங்கிகள் நாங்கள் !

மாசு காற்றான உங்கள் முச்சி காற்றை நாங்கள்
சுவாச காற்காக சுத்திகறித்து தரும்
கழிவில்லா தொழிற் கூடம் நாங்கள் !

சந்தியா காலம் முதல், சாயங்காலம் வரை
இறையிசையாய் இன்னிசைக்கும்
பறவைகள் சங்கீதம் நித்தமும் ஒலித்திடும்
இலவச இசை சபாக்கள் நாங்கள் !

கல்லடிக்கும் கரங்களுக்கும்
கனிவுடன் கனிதந்து,
கேட்காமலும் கொடுத்து வாழவைத்து வாழும்
நிச கற்பக விருட்சம் நாங்களே !

பழம் (பலன்) தரும் சிலர் எங்களில் இல்லையென்றாலும்,
நிழல் தராதவர் நிச்சயம் இல்லை !

தென்றலும் எங்களை தீண்டி
தான் வந்த திசை எதுவெனத்
தெரிந்து செல்கிறது !

துண்டாடினாலும்
துடிக்காமல்
துயில் கொள்ள தொட்டிலாய்
தூங்க கட்டிலாய் உங்களை
தூக்கி மகிழ்கிறாம் நாங்கள் !

கழுத்தறுபட்டு கவிழ்ந்து விழுந்து,
மரக்கூழ் காகிதமாய் மறுபிறவி எடுத்தவுடன்
எழுதுகோல் முத்தமிட்டு எம்மேல் பேசி மகிழ்கிறது !

பட்டம், பட்டயம், பத்திரம், பதவி பிரமாணம் இன்னும்
பல உருவில் நாங்கள், பற்பல மொழிகளுக்கு உயிர்,
எழுத்துக்கு உரு கொடுத்து, உங்கள் விழிகள் முன்,
மெவுன மொழி பேசுகிறோம் !

விழியிழந்தோரும், தம் விரல் எம்மேல் படர்த்தி தன்
மொழி அறிகின்றனர் !

உங்கள்,
செவிகள் சேவையை மறுக்கும் போதுதான்
நாங்கள் பேசுவது உங்களுக்கு கேட்குமா ?

இனி
எவரையும்
ஏச நேர்ந்தால்,
பேசத மரம்போல் நிற்கிறான் என்று
பழிக்கும் மொழிக்குள்
பழிச் சொல் மொழியாய் எங்களை
பழிக்க வேண்டாம் !

கோவி. கண்ணன்
சிங்கப்பூர்
geekay@singnet.com.sg

Series Navigation

கோவி.கண்ணன்

கோவி.கண்ணன்