பயணம்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

கலா



“கண்டக்டர் சார். இந்த பஸ் எந்த ஊருக்குப் போகுது?”

“அது பதினெட்டுப் பட்டிக்குப் (தமிழ் சினிமா உபயம்?) போவுது. அதையெல்லாம் உன்கிட்டச் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நீ போக வேண்டிய ஊரைச் சொல்லிக் கேட்க கத்துக்க. படிச்சவனும் இப்படித் தான் இருக்கான். படிக்காதவனும் இப்படித்தான் இருக்கான்” கண்டக்டர் அலுத்துக் கொண்டார்.

“நான் புதுச்சேரிக்குக் போகணும். இந்த பஸ் போவுமா?”

“போவும், போவும் ஏறு”.

கண்டக்டருக்கும் பயணி ஒருவருக்கும் நடந்த இந்த உரையாடலை காதில் வாங்கிக் கொண்டே, கூட்டத்தினுள் புகுந்து அடித்துப் பிடித்துக் கொண்டு பேருந்தில் ஏறிவிட்டேன்.

அன்று முகூர்த்த நாள் என்பதால் ஏகப்பட்ட கூட்டம். நடுவே அகப்பட்டுக் கொண்டு ஒவ்வொரு நிறுத்தத்தின் போதும் பயணிகள் இறங்கி ஏறுவதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகளால் நான் பட்ட வேதனையைச் சொல்லி மாளாது.

என் பக்கத்தில் நின்ற அம்மாள், நன்கு வளர்ந்த தம் பையனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்தார். ‘இப்படிப்பட்ட நெரிசலில் நிற்பதே கஷ்டம். அதிலும் பையனைத் தூக்கி வைத்துக் கொண்டு நிற்பதென்றால்?’ என்று பரிதாபப் பட்ட நான் அவரை நோக்கி, “இவ்ளோ பெரிய பையனை எதுக்குத் தூக்கி வைச்சிக்கிட்டுக் கஷ்டப்படுறீங்க? இறக்கி விடுங்க, அவன் நிற்பான்” என்றேன்.

நான் கூறியது எதுவும் காதில் விழுந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளாததால், அவருக்குக் கேட்கும் திறன் குறைவு என்றெண்ணிய நான், மீண்டும் சத்தமாகச் சொன்னேன்.

நான் கூறியது எனக்குப் பின்னால் நின்றிருந்த கண்டக்டருக்குக் கேட்டு விட்டது போலும். எங்கள் பகுதியில் டிக்கெட் கொடுத்து முடித்துவிட்டுத் திரும்பிப்போக எத்தனித்தவர், எட்டிப்பார்த்தார்.

“ஏம்மா! யாரும்மா அது? பையனை எறக்கி விடு. எவ்ளோ உயரம் இருக்கான்னு பார்க்கணும்”

பக்கத்திலிருந்த கம்பத்தில் அவன் உயரத்தை அளந்தவர், அவனுக்கு அரை டிக்கெட் எடுத்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
“கிடு கிடுன்னு வளர்ந்துட்டான், ஆனா இன்னும் மூணு வயசு கூட ஆகல சார்,” என்று அவர் கெஞ்சியும், கண்டக்டர் கறாராக டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்துவிட்டார்..

டிக்கெட் எடுப்பதை தவிர்ப்பதற்காகத் தான் அவர் தூக்கி வைத்திருந்திருக்கிறார் என்ற விஷயம் அப்போது தான் எனககுப் புரிந்தது.
‘இது கூடத் தெரியாத மடச் சாம்பிராணியா இருக்கிறாயே’ என்பது போல், பையன் கேவலமாக ஒரு பார்வை பார்த்தான். டிக்கெட்டை வாங்கிவிட்டு நிமிர்ந்த அவன் அம்மாவின் விழிகளிலோ, கொலைவெறி!

அந்தப் பார்வையின் உக்கிரம் தாங்காமல், அவர் பார்வையிலிருந்து மறையும் பொருட்டு, மெல்ல நகர்ந்து பேருந்தின் பின்புறம் வந்தேன்.

ஒரு நிறுத்தத்தில் இருக்கையொன்று காலியாகவே, உட்கார இடம் கிடைத்தது. என் பக்கத்தில் சிறுமியொருத்தி அவள் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். நான் அவளை அழைத்து என் மடியில் தூக்கி உட்கார வைத்துக் கொண்டேன். ஆனால் அக்குழந்தை மீது (குழந்தையா அது?) இரக்கப்பட்டது எவ்வளவு பெரிய தவறு என்பது சீக்கிரத்திலேயே எனக்குப் புரிந்தது.

அடிக்கடி என் மடியிலிருந்து இறங்குவதும், திரும்ப ஏறுவதுமாக அவள் செய்த இம்சைகளால், என் தொடைகள் ரணகளமாகிப் போயின. கால் வலி தாங்க முடியாமல், ஒரு சமயத்தில் அவளை இறக்கி விட்டாலும், ரொம்பவும் உரிமையாக மீண்டும் என் மடி மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

நல்லவேளையாக என் மனைவி பக்கத்தில் இல்லை. இருந்திருந்தால்,
“வேலியில போன ஓணானைப் புடிச்சி மடியில விட்டுட்டு, அதுக்கப்புறம் அது குத்துதே, குடையுதேன்னு புலம்பின மாதிரி, அதுபாட்டுக்கு சிவனேன்னு நின்னுக்கிட்டுருந்த புள்ளையைத் தூக்கி மடியிலே வைச்சுக்கிட்டு, இப்படி அவஸ்தை படறது தேவை தானா?” என்று ஊர் போய்ச் சேருகிற வரைக்கும் என்னைத் திட்டித் தீர்த்திருப்பாள்.

ஒரு கட்டத்தில், அமர்ந்திருப்பதை விட நிற்பது எவ்வளவோ மேல் என்று தோன்ற, “இந்தாம்மா நீயே உட்கார்ந்துக்க” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு, எழுந்து நின்று கொண்டேன். மறுநிமிடம் அவள் தன் அம்மாவைக் கூப்பிட்டு அங்கு அமரச் சொல்லிவிட்டு, அவள் மடியில் அமர்ந்துகொண்டாள். ஆனால் என்ன ஆச்சரியம்! என் மடியில் செய்த சேட்டைகள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தாள்.

ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையாக என்னை அங்கிருந்து கிளப்பிவிட்டு, அவள் அம்மாவை உட்கார வைக்க குட்டிச்சாத்தான் சதி செய்ததோடு மட்டுமின்றி, இடத்தைப் பறிகொடுத்துப் பரிதாபமாக நின்றிருந்த என்னைப் பார்த்து வெற்றிப் புன்னகை வேறு!.

இடத்தைப் பறிகொடுத்ததால் ஏற்பட்ட கடுப்பில், எனக்குத் தர வேண்டிய ஐந்து ரூபாயைத் தராமல் டபாய்த்த கண்டக்டரிடம் என்னைத் தாண்டி அவர் போகும் போதும், வரும் போதும் என் சீட்டை அவர் முகத்துக்கு நேரே நீட்டி ‘பாக்கி கொடுக்கணும்’ என்று நச்சரித்துக் கொண்டிருந்தேன். ‘மீதியை வாங்காமல் விடாது இந்தக் கிராக்கி’ என்பது உறுதியானவுடன், என் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டுச் சில்லறையைக் கொடுத்தார்.

“சார், நான் ஊருக்குப் புதுசு. ஹவுஸிங் போர்டு காலனி ஸ்டாப்பிங் வந்தா, என்னைக் கொஞ்சம் இறக்கிவிடணும்” என்றேன் சில்லறையை வாங்கிக் கொண்டே.
“ஸ்டாப்பிங் வந்தாச் சொல்றேன். என்னால இறக்கியெல்லாம் விடமுடியாது. நீங்களாத் தான் இறங்கிக்கணும்” என்றார் கண்டக்டர் நக்கலாக.

kalayarassy@gmail.com

Series Navigation

கலா

கலா

பயணம்

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

எம்.ரிஷான் ஷெரீப்



அப்துல்லாஹ் பஸ்ஸினுள் அமர்ந்திருந்தான். பஸ்ஸை எடுக்க இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும். இலேசாகப் பசித்தது. இன்றுதான் அவன் வேலையில் சேர்ந்த முதல்நாள். அவனது நீண்டகால இலட்சியம் நிறைவேறிய நாள். விரல்கள் அனிச்சையாக நெற்றியைத் தடவிக் கொண்டன. காலையில் வேலைக்கு வரும் அவசரத்தில் வீட்டுக் கதவில் இடித்துக் கொண்டிருந்தான். அது இலேசாகப் புடைத்திருந்தது. அம்மா சகுனம் சரியில்லையோ என வருத்தப்பட்டுத் தன் புடவையின் நுனியை ஒரு பந்து போலாக்கி அதனை வாயில் பொத்திக் காற்றூதிச் சூடாக்கி உடனே அவன் நெற்றிக்கு ஒத்தடமிட்டாள். இருந்தும் அந்தப் புடைப்பு இன்னும் முற்றாக நீங்கவில்லை.

அவனுக்கு அந்த ஆசிரியர் வேலை மிகவும் பிடித்திருந்தது. காலையில் அதிபர், காலைக்கூட்டத்தில் அவனை சக ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோர் முன்னிலையிலும் வரவழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார். மெலிந்த, உயர்ந்த, சிவந்த தோற்றம் அவனுடையது. குரல் மட்டும் கம்பீரமாக இருந்தது. இந்த வேலைக்காகத்தான் அவன் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தான். அவனை விடவும் சிரமப்பட்டவள் அவனது விதவைத் தாய். வறுமைக்குள் உழலும் குடும்பம் அவனுடையது. அரச உதவிப்பணம் தவறாமல் கிடைத்ததால் அவனால் தொடர்ந்து படிக்க முடிந்தது. இனி தாயை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தாமல் அவளை ஒரு மஹாராணி போல மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டுமென எண்ணிக் கொண்டான்.

பஸ்ஸினுள் சனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபடியே இருந்தது. பஸ்ஸின் படிக்கட்டில் நின்றபடி நடத்துனர் ஒவ்வொரு ஊர் பெயராகக் கூவியபடி சனங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்.வெள்ளைச் சீருடையில் பாடசாலை மாணவ,மாணவிகள் பஸ்ஸுக்குள் ஏறிக் கொண்டனர். பஸ்ஸினுள் இருக்கைகள் எல்லாம் நிறைந்து அவர்கள் நின்றுகொண்டனர். அவர்களுடன் தான் மனிஷாவும் இருந்தாள். மனிஷாவை இந்த வருடம் தான் பாடசாலையில் சேர்த்திருந்தார்கள். ஆறு வயது நடந்துகொண்டிருந்தது.அழகிய சிவப்பு நிறம். கருமையான முடி.சிறகுகள் முளைக்காத சின்ன தேவதை போல இருந்தாள். தனியாக பஸ்ஸில் போய் வரத் தெரியாது. அதுவும் பாடசாலையிலிருந்து வீட்டுக்குப் போகக் கிட்டத்தட்ட இருபது கிலோமீற்றர்கள் பிரயாணம் செய்ய வேண்டும். ஊர் விகாரை தாண்டியதும் இறங்கிக் கொள்ளவேண்டும். இது எதுவும் அவளுக்குத் தெரியாது.பாடசாலைக்கு வரும்போது அதே பாடசாலையில் மேல்வகுப்பில் படிக்கும் சபீதா அக்கா கூடவே வருவாள். போகும் போது அக்காவின் வகுப்புக்கள் முடியும்வரை காத்திருந்து அவளுடனேயே வீடுதிரும்புவது இவளின் வழமையாக இருந்தது.

மனிஷாவுக்கும் இன்று இடம் கிடைக்கவில்லை. அக்கா பஸ் இருக்கையின் கைப்பிடியைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி அவளும் அருகிலேயே நின்றுகொண்டாள். ஓரளவு சனம் நெருக்கியடித்தது. அவ்வளவு நெருக்கத்திலும் மனிஷா தன் மழலை கலந்த குரலில் வகுப்பில் நடந்தவற்றை அக்காவிடம் ஒப்பிப்பதை நிறுத்தவில்லை. அவளது வகுப்பில் படிக்கும் சஞ்சீவ் தனது பென்சிலைப் பறித்ததை ஏதோ ஒரு பெரிய குற்றத்தைப் பற்றி பொலிஸாரிடம் முறையிடுவதைப் போன்று சொல்லிக் கொண்டிருந்தாள். சூழ இருந்த ஒன்றிரண்டு சனம் அந்தப் பேச்சினைக் கேட்டு ரசித்துப் புன்னகைத்தது. அக்காவுக்கு அது சங்கடமாகப் போயிற்று. எல்லாவற்றையும் வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாமெனத் தங்கையிடம் அன்பாகவும் மெதுவாகவும் சொன்னாள்.

அவ்வளவு கூட்டத்துக்குள்ளும் கிறிஸ்தோபர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை சபீதா உணர்ந்தே இருந்தாள். இலேசாகத் திரும்பிப் பார்த்தபொழுது அவன் சட்டென்று தலைகுனிந்து கொண்டான். அவன் தலை உயர்த்தி இவளைப் பார்க்க நோக்கும் கணம் இவள் இலேசாகப் புன்னகைத்தாள். கிறிஸ்தோபரும் அதே பாடசாலைதான். வேறு பிரிவில் படிக்கிறான். பஸ்ஸில் போகும்போதும் வரும்போதும், பாடசாலைக்குள் முகம் பார்க்க நேரிடும் போதும் இப்படித்தான் பார்த்துப் புன்னகைத்துக் கொள்வார்கள்.

பஸ்ஸினை இன்னும் எடுத்தபாடில்லை. நடத்துனர் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். அது நீண்ட, பெரிய அரசுக்குச் சொந்தமான பஸ்.அந்த ஊருக்குப் போகும் இந்த பஸ்ஸைத் தவற விட்டால் அடுத்த பஸ் வர இன்னும் ஒரு மணித்தியாலம் ஆகும். அதுவரைக்கும் காக்கப் பொறுமையற்ற மக்களும், அவசரத்திலிருந்த மக்களும் கூட்டத்துக்கு மத்தியிலும் ஏறிக் கொண்டார்கள். சனம் நெருக்கத் துவங்க மனிஷா சிணுங்கத் தொடங்கினாள். அவள் பிடித்திருந்த கைப்பிடிக்குரிய இருக்கையில் அமர்ந்திருந்த விஜயலட்சுமி மனிஷாவை அழைத்துத் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

விஜயட்சுமியின் மனது இன்று மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. எத்தனை கோயில்கள் ? எத்தனை வேண்டுதல்கள் ? எத்தனை நேர்ச்சைகள் ? எல்லாமே பலித்துவிட்டன. இரவுகளில் தலையணை நனைய அழுத காலங்களுக்கு இனி விடுதலை. மாமியாரின் ஏச்சுக்களும் ஊர்ப்பெண்கள் சிலரின் தகாத வார்த்தைகளும் இனி அவளை நோக்கி ஏவப்படாது. திருமணமாகி எட்டு வருடங்கள். இதுவரையில் குழந்தையில்லை. அனைவரினதும் வாய்களுக்கு அவலாகிப் போயிருந்தாள். இனி அவர்கள் முன்னால் தலைநிமிர்ந்து நடக்கலாம். வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்ளலாம். தாயாகப் போகிறாள்.அவளுக்கென்றொரு அந்தஸ்து வந்துவிட்டது. ஒரு பெரும் நிம்மதி வந்து மனதில் அப்பிக் கொண்டது.

அருகிலிருந்த கணவனின் தோள்களில் ஆறுதலாகத் தலைசாய்த்துக் கொண்டாள். அவர் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது.மருத்துவமனையில் அவளது சிறுநீரைப் பரிசோதித்து கர்ப்பிணி என உறுதிப்படுத்தியிருந்தார்கள். அவளுக்குச் சீக்கிரமாக வீடுதிரும்பி மாமியாரிடம் தான் மலடியில்லை எனச் சொல்லவேண்டும் போல இருந்தது. இதோ அடுத்தவருடம் அவளது கைகளில் ஒரு சிறுகுழந்தை துயிலும். அதற்கடுத்த வருடம் , முன்னிருக்கையில் தாயின் கைகளிலிருந்து மனிஷாவை நோக்கிக் கை நீட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தை போலச் சிரிக்கும். இன்னும் ஏழு வருடங்களில் தன் மடியிலமர்ந்திருக்கும் மனிஷாவைப் போலத் தன் குழந்தையும் பள்ளிக்கூடம் போகும்.

முன் இருக்கையிலிருந்த தன் அம்மாவின் கைகளிலிருந்து கொண்டு அக்குழந்தை மனிஷாவைப் பார்த்துச் சிரித்தது. ஒரு வயதிருக்கும். ஐம்பது காசு அளவில் பெருத்த பொட்டொன்று அதன் நெற்றியில் இடப்பட்டிருந்தது திருஷ்டிக்காக இருக்கவேண்டும். மனிஷாவும் அக்குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள். அதுவரையில் வாய்க்குள் போட்டுச் சப்பிக்கொண்டிருந்த கையினை எடுத்து அவளை நோக்கி நீட்டியது. அவளும் அதன் எச்சில் பட்ட விரல்களைப் பிடித்துக்கொண்டாள். அது கைகளை விடுத்து கறுப்பு ரிப்பன் கட்டிய அவள் தலைமயிரைப் பிடித்திழுத்தது.

கூட்டத்துக்குள் காவியுடையணிந்த பௌத்தபிக்கு ஒருவர் ஏறிக் கொண்டார். கைகளில் கறுப்புக் குடை. அப்துல்லாஹ் உடனே எழுந்து அவருக்கு இருக்கையை அளித்துக் கூட்டத்துக்குள் நின்றுகொண்டான். அவர் ஒரு மெல்லிய புன்னகையைத் தன் முகத்தில் படரவிட்டு அவ்விருக்கையில் உட்காந்து கொண்டார். அவனது கையிலிருந்த புத்தகங்களை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டார்.

காலையில் தன் பாடசாலைக்கு புதிதாக வந்த ஆசிரியர் தன்னருகில் நிற்பதைக் கவனித்த கிறிஸ்தோபர் அப்துல்லாஹ்வுக்கு நின்றுகொள்ளச் சௌகரியமாக இடம் கொடுத்தான். அப்துல்லாஹ் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். பஸ் இப்பொழுது மெதுவாக நகர ஆரம்பித்தது. சபீதாவைப் பல தலைகள் மறைத்துக் கொண்டதில் கிறிஸ்தோபர் பெரிதும் எரிச்சலுற்றான். சக வகுப்பில் படிக்கும் அவள் மேல் புரியாத ஓர் ஈர்ப்பு வந்திருந்தது. அவளது அடக்கமான அமைதி அவள்பக்கம் அவனை ஈர்த்திருக்க வேண்டும்.

நடத்துனர் இப்பொழுது பஸ்ஸின் உள்ளே வந்து முன்னிருக்கையிலிருந்து சில்லறைகளை வசூலிக்க ஆரம்பித்திருந்தார். சாரதி தண்ணீர்ப் போத்தலை எடுத்து வாய்க்குள் ஊற்றிக் கொண்டே பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்தார். பஸ் அதன் வழமையான பாதையின் இரண்டாவது சந்தியைத் தாண்டிய கணத்தில்தான் பஸ்ஸிற்குள் அதி சக்திவாய்ந்த அந்தக் குண்டு வெடித்து அனைவரும் பலியானதாக மாலைச் செய்தியறிக்கையில் சொன்னார்கள்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

பயணம்

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

பவளமணி பிரகாசம்


முடியும் முடியாது என்று தெரியாது
முடியும் என்று ஒரு துணிவோடு
துவங்கிய பயணமிது நடக்கிறது
முன் வைத்த காலை பின் வைக்காது
புதைமணலில் அமிழ்ந்து போகாது
சுவடு பதித்து வைக்க மறக்காது
கிடைத்த சின்ன வெளிச்சத்தில்
அடுத்த அடியை வைக்கிறேன்

—-

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

பயணம்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

பாஷா


துவங்கிய இடத்தில் துவங்கி
தொடரும் இடத்தில் தொடர்ந்து
துரத்தி கொண்டிருக்கிறது
விட்டு வந்த வாழ்க்கை!

அம்மா ஆரம்பித்துவைக்க
அப்பா அடுத்தடிகாட்ட
சுற்றமும் நட்பும்
வழியெங்கும் வழிப்போக்கர்களாய்.
சில கையசைப்புடன்
சில கண்ணீருடன்
சில சம்பிரதாய சிரிப்புகளுடன்
யாவும் வழியனுப்புதலின்
வகைகளன்றி வேறொன்றுமில்லை!

நகரும் நொடிகளில்
சக பயணியாய்
நகரும் முகங்கள்
நேசித்த முகங்கள்
நிழலென இருப்பதில்லை
பயண விதிகளோ ?

எனவே
இதயத்தின் நந்தவனத்தில் என்
கல்லறை வேண்டாம்
இட நெருக்கடி இருக்ககூடும்
நரகத்தின் நெருப்பில்
நான் சுமந்த பயண நினைவுகளுடன்
என்னை எரித்துவிடுங்கள்!

sikkandarbasha@hotmail.com

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

பாஷா

பாஷா

பயணம்

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


நடை பழகிய பின்னும்
நடை பழக்கம்.

கைப்பிடித்து நடக்க
கைக்கொடுத்து நடக்க

தொட்டில் குழந்தையை
தொட்டுத்தூக்க
தோல்மீது அணைக்க

தலைத்தூக்கும் குழந்தையை
தவழும் குழந்தையை

நிற்க
எழும் குழந்தையை
நின்று
விழும் குழந்தையை
விழுந்து பிடிக்க

குழந்தியோடு குழந்தையாய்
எந்திரமே….

என்னோடு நீயும்
உன்னோடு நானும்.

எந்திரமே….
பழகிவிட்டோம் நாம்.

பாசத்தில் பின்னிப்பிணைந்து
பள்ளிநாள் பிள்ளைகளாய்
பறந்தோட தொடங்கிவிட்டோம்.

நெடுந்தூரம் போக
நீயும் நானும் நினைத்துவிட்டோம்.

உனது எனது கரங்களால்
ஒரு கணம் ஒரு கனம்
நகர்த்தினோம்.
இந்த உலகம் புரட்டும் நெம்புகோலை
ஒன்றாக அசைத்தோம்.
ஒடி ஒடி
ஒன்றாக ஓய்வெடுத்தோம்.

என்னை நீ
உழைக்கவைத்தாய்.
உலகம் மறந்து உறங்க வைத்தாய்.
நிம்மதியான தூக்கம்
நிச்சயம் உழைப்பவனுக்கு மட்டுமென
நினைக்கவைத்தாய்.

முடியாததை
என்னோடிருந்தென்னை
முடிக்கவைத்தாய்.
என் வெற்றி நீ.

நீயிருக்க நானிருக்க
என்
நம்பிக்கை நீ.

இடறும்
வழிவழியான வழிதனை மாற்ற
என்
புரட்சி நீ.

தூங்கி ஒவ்வொரு நாளும்
உன் நினைவில் எழுகிறேன்.
என் இதயம் நீ.

என்
இதய எந்திரமே….
பழகிவிட்டோம் நாம்.
நெடுந்தூரம் போக
நீயும் நானும் நினைத்துவிட்டோம்.

tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பயணம்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

புஸ்பா கிறிஸ்ாி


சிந்திதித்து செயலாற்று தோழனே
உனக்கென்று ஒரு பாதையை
நீயே உருவகித்துக் கொள்
பந்த பாசங்கட்கு கட்டுப்பட்டு
உன் பங்கினைச் செய்து விடு

உனக்கென்று ஒரு பாதை உண்டு
உனது பயணத்தைத் தொடங்கு
விசித்திரமான இந்த உலகத்தில்
சிந்தித்து நின்று நிதானிக்க நேரமில்லை
சந்திக்க வேண்டியன பல்லாயிரம்
சாித்திரம் படைக்க வேண்டும்

புறப்படு தோழனே புதியபாதை நோக்கி
நீ ஏற்கனவே நடந்தது குறிகிய துரம்
இன்னும் பல மைல்கள் நடக்க வேண்டும்
வேகமாக நட, இன்னும் விவேகத்துடன் நட
உனது பயணத்தின் முதற்கட்டம் இதுவே
தொடர்ந்து நட உன் இலக்கை நோக்கி

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி