நாலேகால் டாலர்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

ஜெயந்தி சங்கர்


காலையில் எழுந்து வழக்கம்போல அவரவர்க்குப்பிடித்ததைச் செய்து அவரவர் டிபன்பாக்ஸில் அடைத்து ஆறரைக்கே ஸ்கூல் ஆபீஸென்று மூவரையும் கிளப்பியனுப்பியாகிவிட்டது. தீபாவளிப் புடைவையின் ஜாக்கெட்டை மிகவும் டைட்டாகத் தைத்திருந்தான் டெய்லர். கொடுத்துக் காத்திருந்து வாங்கிவரவேண்டும், தீபாவளி மின்னட்டைகள் அனுப்பவேண்டும் என்று மனதிற்குள் அன்றைய வேலைகளின் பட்டியல் ஓடியது. குளித்து, சாப்பிட்டுவிட்டு, வாஷிங் மெஷின் துவைத்துக்கொடுத்த துணிகளை உலர்த்தி, காய்ந்திருந்த சில உடைகளை இஸ்திரி செய்து மடித்து வைத்துவிட்டு, டெய்லர் கடைக்குக் கிளம்பினேன்.

வீடுதிரும்பும் போதே அருணா, அர்ச்சனாவுக்குப் ‘பாலக் பன்னீர் ‘ செய்து தருவதாகச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. ராஜ்க்கு சப்பாத்திக்கு உருளைக்கிழங்குக் கறிசெய்துவிடலாம். மெயின்ரோட்டைக் கடந்து பத்தடி தொலைவில் இருக்கும் இந்தியக்கடையில் எப்போதுமே தளதளவென்று கீரை கிடைக்கும். குழந்தைகள் வீடு திரும்ப ஐந்தரையாகும். டா ஒன்றைப் போட்டுக் குடித்துவிட்டு, சுமார் நான்குமணிக்குப் பர்ஸையும் குடையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். தூறிக்கொண்டிருந்த மழை கொஞ்சம் வலுத்திருந்தது. குடையைப்பிரித்துக் கொண்டு நடந்தேன்.

‘புக்கித் பாத்தோக் ‘ வட்டாரத்தில் அதிக இந்தியர்கள் வசிப்பதால் கடையில் நல்ல வியாபாரம். சிலசமயம் இந்தியாவிலிருந்து வந்திறங்கும் காய்கறிகள் கூடக் கிடைக்கும். அப்போதுதான் வந்திறங்கியிருந்த பசலைக்கீரையையும் அமூல் பன்னீரையும் வாங்கிக்கொண்டு, ஒவ்வொரு கடையாகப் பார்த்தபடியே நடந்தேன். கூவிக்கொண்டே பின்னாடி ஓடிவந்தார் இந்தியக்கடைக்கார ஊழியர். ‘அம்பது வெள்ளி கொடுத்துட்டு மீதிக் காச வாங்க மறந்துட்டாங்களேம்மா, இந்தாங்க,.. ‘, என்றவரிடம் காசைப்பெற்றுக்கொண்டு நன்றிசொல்லிப் பர்ஸில் போட்டுக்கொண்டேன்.

ஸ்டாப் அண்ட் ஷாப்பில் தீபாவளி முடிந்தபின் வரவிருக்கும் கிருஸ்துமஸுக்கான மரமும், அலங்காரங்களும் மற்றும் அக்கக்காய்க் கழற்றியடுக்கி வைக்கப் பட்டிருந்த கிருஸ்துமஸ் தாத்தாவும் மூலையில் தயாராய் இருந்தன. ஆங்காங்கு தீபாவளிவாழ்த்துகள் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் பளபளத்தன. தீபாவளிக்கு இன்னும் ஒரே வாரம். அதன் பிறகு, குட்டி இந்தியா வட்டாரம் தவிர மீதி சிங்கப்பூர் உடனே கிருஸ்துமஸ் கோலாகலத்திற்குத் தயாராகும்.

அட, தீபாவளி வாழ்த்து அட்டைகள் கூட விற்க ஆரம்பித்துவிட்டார்களே! வியந்தபடி ஒன்றை எடுத்துப்பார்த்தேன். ஒரு கையில் காய்கறிப் ப்ளாஸ்டிக்பையும் மறுகையில் குடையுமாக இடைஞ்சலாய் இருக்கவே குடையை இடது மணிக்கட்டில் தொங்கவிட்டுக் கொண்டு பையை இடது கையில் வைத்துக்கொண்டேன். வலதுகையால் வாழ்த்து அட்டைகளைப் பிரித்துப்பார்த்தேன்.சில மிகவும் அழகாகயிருந்தன. நான்கு அட்டைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு மற்ற புதிய விழாக்காலச்சாமான்களை ஆராய்ந்து கொண்டே வரும்போது இடதுகையில் வைத்திருந்த அட்டைகள் தரையில் விழந்து சிதற, குனிந்து பொறுக்கிக்கொண்டு நகர்ந்தேன். மறுபடியும் வலதுகையால் ஷெல்பின் மேலேயிருந்த சாக்லேட் டப்பாவைப் பார்க்கலாமென்று எடுக்கும்போது மறுபடியும் அட்டைகள் கீழே விழவே, எடுத்து அவற்றைத் தற்காலிகமாக காய்கறிப் பையினுள் வைத்துக்கொண்டேன். வீட்டிற்கு வேண்டிய பொருள்கள் எதுவுமே இருக்கவில்லை ப்ரெட்டைத்தவிர.

கால்மணிநேரத்திற்கும் அதிகமாக என்னையே மறந்து பேரங்காடியில் உலாவியதில் நேரத்தை முற்றிலும் மறந்திருந்தேன். கைக்கடிகாரம் காட்டிய மணியைப் பார்த்ததும் தான்,குழந்தைகள் பள்ளிமுடிந்து வரும் நேரம் நினைவுவர பதற்றத்துடன் வாங்க நினைத்திருந்த ப்ரெட்டையும் மறந்து வேகவேகமாகக் கடையைவிட்டு வெளியேறினேன்.

ஏழெட்டு அடிகள் நடப்பதற்குள், பின்னாலேயே முரட்டு உருவம்கொண்ட ஒரு சீனன் வந்து என்னிடம் ஏதோ சொன்னான். முண்டா பனியனில் இரண்டு தோள்கள் மற்றும் கைகளில் நெளிநெளியாகப் பச்சை குத்திக்கொண்டு சினிமா வில்லன்போல இருந்த அவனது தோற்றம் அச்சமூட்டுவதாய் இருந்தது. புரியாததால், பயந்தபடியே என்னவென்று கேட்டேன். ‘யூ ‘வ் நாட் பேய்ட் ஃபார் த கார்ட்ஸ் ‘, என்று அதையே திரும்பச்சொன்னான்.

ஐய்யயோ! எப்படி மறந்தோம், வாழ்த்து அட்டைகளுக்குக் காசு கொடுக்கவில்லையே! ஆமாம், இவன் யார் சம்பந்தமேயில்லாத உருவத்தோடு. ‘ஓ! ஐ ‘ம் சாரி, ஐ ஃபர்காட்,.. வில் பே, ‘ என்றபடி காஷியரை நோக்கி நடந்த என்னைத் தடுத்து நிறுத்தினான். ‘நோ கென்னாட், யூ கம் டு த ஆஃபிஸ் வித் மி நெள ‘, என்று தள்ளிக்கொண்டு நடக்காத குறையாய் என்னைப் பேரங்காடியின் அலுவலக அறைக்குக் கூட்டிச்சென்றான். குழந்தைகள் வந்துவிடுவார்களே என்று நினைத்துகொண்டே போனேன். அங்கிருந்த பயனீட்டாளர்களின் கண்கள் என்னையே மொய்த்தன.

செக்யூரிட்டி என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறான், நடந்ததை விவரித்துப் புரியவைத்துவிடலாம் என்று பேச ஆரம்பிக்கும்போதே தடுத்தான். ‘யூ ஃபர்ஸ்ட் கிவ் மீ யுர் ஐ ஸீ. ஐ வில் கால் த போலிஸ் ‘, என்றவனிடம் என்னால் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. சின்ன எரிச்சலும் பெருத்த அவமானமும் சூழ காவலருக்காகக் காத்திருந்தேன். அவர்களாவது புரிந்துகொள்வார்கள் என்ற என் எண்ணத்தில் மண்!

குழந்தைகள் வந்துவிடுவார்கள் போன்ற என் அக்கறையெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவேயில்லை. ‘ ம்,.. தே வில் ஆஸ்க் யூ இன் தன் ஸ்டேஷன். தென் யூ கேன் எக்ஸ்ப்ளைன் , ஒகே ‘, என்று என்னைப் போலீஸ் காரில் ஏற்றிக் கொண்டு அருகேயிருந்த ஜூரோங் போலிஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச்சென்றனர். அங்கிருந்த அதிகாரிகள், ‘ சாரி, யு ர் அண்டர் அரெஸ்ட் ஃபார் ஷாப் லிஃப்டிங் ‘, என்றதுமே வெலவெலத்துப்போய் விட்டேன்.

திருட்டா ? நானா ? திடார் அதிர்ச்சியில் எனக்குப் பேச்சுக்கூடக் கோர்வையாய் வரவில்லை. என்னால் முடிந்தவரை எவ்வளவோ எடுத்துச்சொல்லிப் பார்த்தேன். நடந்தது எதுவும் என்னால் நம்பும்விதமாய் இல்லை.

‘கேன் ஐ அட்லீஸ்ட் கால் மை ஹஸ்பண்ட் ? ‘, என்றதைக் காதிலேயே வாங்கவில்லை. மறுபடியும் கேட்டபோது, அவர்கள் அனுமதி கொடுக்கும்போது தான் தொலைபேசலாமென்று எரிச்சலான பதில் வந்தது. அங்கிருந்த பெண் அதிகாரி, ‘இந்த நாலு அட்டைக்கு மொத்தமே நாலேகால் வெள்ளி(டாலர்), இதக்கொடுத்திருக்கலாமே, எதுக்கு இந்தவேலயெல்லாம்,..ம் ? ‘ என்று ஆங்கிலத்தில் கேட்டதும் உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் கூனிக்குறுகிப் போனேன்.

எல்லா அதிகாரிகளுமே மேலதிகாரிக்குக் காத்திருந்தனர். அறையைக் கடந்து சென்ற ஓர் இந்திய போலீஸ்காரர், என்னைப்பார்த்து, ‘ என்னாச்சு ? ‘, என்று கேட்டதுமே உதவிகிடைக்கும் என்ற சிறுநம்பிக்கையில், நடந்ததைச் சொன்னேன். ‘இதையெல்லாம் காதுல போட்டுக்கமாட்டாங்க. தீபாவளி சமயம் இல்லையா, நிஜமாவே திருடிட்டாங்கன்னு தான் நெனப்பாங்க. சம்பளம் தவிர, பிடிக்கற ஒவ்வொரு ஆளுக்கும் அவனுக்குக் காசுண்டும்மா. சந்தர்ப்பத்தை விடுவாங்களா சொல்லுங்க. உங்களப்பார்த்தாலே எனக்குத் தெரியுது ஷாப் லிஃப் கேஸ் இல்ல, மறதிக்கேஸ்னு. ம், போன் பேச வேணா நான் ஏற்பாடு செய்றேன் ‘, என்றார்.

பேசமுடியாமல் தொண்டையை அடைத்தது. திக்கித்திணறி, ‘ராஜ், ரெண்டே நிமிஷம்தான் பேசமுடியுமாம். நான் ஜூரோங் போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கேன் .ம்,. சொன்னேனே. நாஞ்சொல்றது எதையும் நம்பவே மாட்டேங்கறா. ம்,.ம்,…சொன்னேனே,.. ஏதோ யோஜனபண்ணிண்டே ‘பே ‘ பண்ண மறந்துட்டு வெளில வந்துட்டேன்னு. இவா என்ன சொன்னாலும் நம்பமாட்டேங்கறா. இல்லயே, நா அழல்லயே,.. எனக்கு இப்பக்கொஞ்ச முன்னாடிதான்,.. ‘அண்டர் அரெஸ்ட் ‘னு சொன்னதும் தான் சீரியஸ்னஸே புரியறது. என்ன பண்றதுன்னே தெரியல்ல, எந்த வேளைல ஆத்தவிட்டுக் கிளம்பினேனோ தெரியல்ல.,ம்,…. வேண்டாம், இங்க வராதீங்கோ. கொழந்தேள்ட்ட சாவிவேற இல்ல,.. அதனால நீங்க சீக்கிரமா ஆத்துக்குப்போய் அர்ச்சனா, அருணாவுக்கு ஏதானும் சாப்ட குடுத்துட்டு, பாவம், ரெண்டும் வெளில நின்னுண்டிருக்கும், அப்பறமா, இங்க வாங்கோ. எனக்கு திடார்னு வயத்துவலி,..நா ஹாஸ்பில்ல இருக்கேன்னு அதுகள்ட்ட சொல்லிடுங்கோ ராஜ்.வேற ஒண்ணும் சொல்லவேண்டாம். பாவம் ரெண்டும் பயந்துடும். சின்னவ ரொம்பவே அரண்டுடுவோ. நா தைரியமாத்தான் இருக்கேன்… ‘ மேற்கொண்டு பேசவிடாமல் சட்டென்று போனைப் பிடுங்கிவிட்டார்கள். பீரிட்டு வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

அங்கிருந்தவர்களின் நேர்மேல் அதிகாரி அதே நீல உடுப்பில் வந்தார். என்னைப் பின்தொடரச் சொல்லிவிட்டு நடந்தார். பின்னால் நடந்தேன். நீளநடந்து ஓர் அறையை அடைந்தோம். ஆடையைத் தவிர மற்ற அணிகலன்கள், வாட்ச் எல்லாவற்றையும் கழற்றச்சொன்னார்கள். காதுத்தோடு மற்றும் கைவளையைக்கழற்றியதைத் தொடர்ந்து திருமாங்கல்யத்தோடு தாலிக்கொடியையும் கழற்றினேன். இரண்டு சிசேரியன் ஆபரேஷன்களுக்கும் சில எக்ஸ்ரேக்களுக்கும் கழற்றிவைத்த முன் அனுபவம் இருந்ததாலேயே மனதைப்பெரிதாக உறுத்தவில்லை. ஒரே மணிநேரத்தில் ‘எனக்கு என்னதான் நடக்கிறது ? ஏதும் பயங்கரக்கனவோ ‘ என்று பதினோராவது முறையாக ஒரு பதற்றத்தோடு உள்மனம் மட்டும் அலறியது. ஒரு டம்ப்ளர் தண்ணீர் கேட்டு அரைமணிநேரமானது. கொடுக்கும் வழியையே காணோம். பயத்தில் ஆரம்பித்த தாகமும் பசியும் பயத்திலேயே மறைந்தன.

‘திஸ் இஸ் த ஃபார்மாலிடாஸ். யூ மஸ்ட் ரிமூவ் யூர் நோஸ் ரிங் ஆல்ஸோ ‘, என்று இரண்டாவது முறையாக அந்தச் சீனப்போலீஸ் அதிகாரி கடுப்புடன் சொன்னான் கீழ்ஸ்தாயியில்.

தோட்டைக் கழற்றியதுமே மூக்குத்தியையும் கழற்றிவிட நினைத்து மூன்று முறை முயன்றதில் மூக்குக் குடைமிளகாயாகச் சிவந்ததே தவிர மூக்குத்தியின் மறை அசைந்தே கொடுக்கவில்லை. ப்ளஸ் டூவில் குத்தியபோது டாக்டரே திருகியதுதான், பிறகு பதினாறு வருடத்தில் விதவிதமாக மூக்குத்தியணியும் சிநேகிதிகளைப் பொறாமையோடு பார்த்து என்னுடையதைக் கழற்ற முயன்று ஒவ்வொருமுறையும் தோற்றே வந்திருந்தேன். இந்தக் கதையையெல்லாம் சொன்னால் அந்தச்சீனனுக்குப் புரியுமா ? நானும் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி முழுமையாக முயன்றேன். ஹூஹும்,.. முடியவேயில்லை.

கால் செருப்பையும் கண்ணாடியையும் கூடக் கழற்றச்சொன்னான். செருப்பில் இருக்கக்கூடிய பக்கிளை ஆயுதமாகப்பயன் படுத்திவிடக்கூடிய அபாயத்தைத் தடுக்கிறார்களாம். சொன்னார்கள். செருப்புபோனால் பரவாயில்லை. ஆனால், கண்ணாடியில்லாமல் என் பாதம் கூடக் கலைந்த மேகக்கூட்டமாகத் தெரியும் எனக்கு. துரதிருஷ்டவசமாக அன்று காண்டாக்ட் லென்ஸைக் கழற்றிவிட்டுக் கண்ணாடியோடு கடைக்குக் கிளம்பியிருந்தேன்.

திடாரென்று வேறு ஓர் இந்திய அதிகாரி வந்தார். வந்தவர் என்னையே ஒருநிமிடம் பார்த்தார். ‘ஏம்மா, நீங்க,.. நீங்க ட்ராமா ஸ்கிரிப்ட் ரைட்டர் பவித்ரா ராஜ் தானே ? உங்க நடிப்பு எனக்குப் பிடிக்கும். இந்த வருட ‘பெஸ்ட் ஸ்கிரிப்ட் ‘ ரைட்டர் விருது வாங்கினீங்கல்ல. போன வாரம் டாவியில ‘விழா ‘ வைப் பார்த்தேன். வாழ்த்துக்கள்.,.. ஆமா,.. நீங்க எங்க இங்க ? உங்களையெல்லாம் எப்படி இங்க விட்டாங்க ? ஏதும் ஸ்கிரிப்ட் எழுதறதுக்கு குறிப்பு சேகரிக்கறீங்களா என்ன ? ‘ அவர் சொன்ன வாழ்த்தையும் பாராட்டையும் ஏற்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை.

நடந்ததை விவரிக்கவிடாமல் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள் என்று சொன்னேன். மிகவும் வருத்தப்பட்டார். நகைகளைக் கணக்கெழுதிமுடித்துவிட்ட சீனன் என் பணப்பையில் இருந்த எழுபத்துசொச்ச வெள்ளியையும் மற்ற சில்லறைச் சாமான்களையும் கணக்கெழுதினான். இரண்டிலும் கையெழுத்து வாங்குவதற்கு முன் என் கையோடு கொண்டு வந்திருந்த குடை மற்றும் காய்கறிகள் நிறைந்திருந்த ப்ளாஸ்டிக் பை ஆகியவற்றை வாங்கி லாக்கரில் வைத்தான். வாழ்த்து அட்டைகள் தனியாக ‘திருடப்பட்ட பொருள்கள் ‘ என்றெழுதப்பட்டு தனியே பாக்கெட்டில் வைக்கப் பட்டுவிட்டிருந்தன. மீண்டும் மூக்குத்தியைக் கழற்றச் சொன்னான். நானும் முயன்றேன். முடியவில்லை. அருகில் இருந்த இந்திய அதிகாரி, ‘ ஷி இஸ் எ ட்ராமா ஸ்கிரிப்ட் ரைட்டர், யு நோ. ஷி ‘ஸ் ஃபர்காட்டன் டு பே. ஷி ‘ஸ் ஹார்ம்லெஸ். மூக்குத்தியக்கழற்ற முடியல்லன்னா விட்டுடேன் ‘, என்று கேட்டு, என் கையோடு கழன்றுவரவிருந்த என்மூக்கைக் காப்பாற்றினார்.

பிறகு, மறுபடியும் நீளமாக நடத்திக்கூட்டிக் கொண்டுபோய் கருப்புக் கதவைத்திறந்து உள்ளே போகச்சொல்லிக் கதவைச் சாத்தினான் அந்தச்சீனன். அதுதான் லாக்கப்பாம். பன்னிரண்டிற்கு எட்டு இருக்கும் அந்த அறை. நீள வாக்கில் பாதி அகலத்திற்கு, அரையடி உயரத்திற்கு மேடை போல அமைத்திருந்தார்கள். அறையின் மறுகோடியில் ஒரு முழங்கால் அளவு தடுப்புச் சுவரோடு ஒரு சிறு கழிப்பறை துர்நாற்றத்தோடு. அந்தச் சுவரின் விட்டத்திற்கருகே ஒரு சிறிய வெண்டிலேட்டர் மட்டும் கொஞ்சமேக்கொஞ்சம் வெளிக்காற்றை அடித்திருந்த வலைவழியே அறையினுள் கொண்டுவந்தது. உள்ளேயிருந்த நாற்றக்காற்று வெளியேறாது உள்ளேயே சுழன்றுகொண்டிருந்தது. மங்கலான மின்வெளிச்சம்.

அங்கு நான்கு பெண்கள் ஏற்கனவே இருந்தார்கள். மூவர் மிகவும் பழக்கப்பட்ட இடம்போல உட்கார்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும் சிறுநீர்கழித்தபடியும் இருந்தனர். அறையில் நிலவிய துர்நாற்றம் என் மூத்திரப்பை நிரம்பியிருந்ததை என் மூளைக்குச்சொன்னது. ஆனாலும், நாலு அந்நியப்பெண்கள் இருக்கும் அறையில் எப்படி கனத்தை இறக்கி வைப்பது. அடக்கிக்கொண்டு நின்றேன்.

மூவர் சீனநாட்டுப்பெண்கள். சட்டவிரோதக் குடியேறிகள். நான் உள்ளே நுழைந்து கதவுசாத்தப் பட்டதுமே சீனத்தில் கத்திக்கத்தி அடுத்திருந்த ஆண்கள் லாக்கப் கூட்டாளிகளோடு பேசினார்கள். காட்டுக்கத்தல் நாராசமாக இருந்தது. பதிலுக்கு அவர்களும் கத்தினர். இடையிடையே கெக்கப்பிக்கெவென்று சிரிப்புவேறு. அதிகாரிகள் அவ்வப்போது வந்து கதவில் தட்டி எச்சரிக்கும்போது கத்துவது நிற்கும். பிறகு மீண்டும் அதே கத்தல். பேசவேண்டியதைப்பேசித் தொண்டை வற்றியதும், ஜீன்ஸைக்கழற்றி, துளிக்கூட வெட்கமேயில்லாமல் உள்ளாடையையும் கழற்றி ஜீன்ஸை மட்டும் அணிந்துகொண்டு அங்கிருந்த குழாய் நீரில் உள்ளாடையை நனைத்துக் கசக்கிப் பிழிந்து உலர்த்திப் பொழுதைக் கழித்தனர். மீதிநேரத்தில் படுத்து உறங்கவும் முயன்றனர்.

ஒருத்தி மட்டும் அடிக்கடி சீனத்தில் அலறிக்கூப்பிட்டுக் கொண்டேயிருந்தாள் .கையில் நான்கு மாதக்கைக்குழந்தையோடு ‘சுற்றுப்பயணி ‘ யாக சிங்கை வந்தவள் காணாமல்போனவர் பட்டியலில் சேர்ந்துவிட்டாள். தூங்கிக்கொண்டிருந்த தன் எட்டுமாதக் குழந்தையை பக்கத்துவீட்டுப் பெண்ணைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கடைக்கு வந்தவளைப் பிடித்துவிட்டார்கள். நிற்கமுடியாமல் நானும் மேடையின் மூலையில் உட்கார்ந்துகொண்டேன். அந்த இடம் எனக்கு நகரமாகப்பட்டது.

சிறுவயதாய் இருந்த மலாய்ப்பெண், உடைந்த ஆங்கிலத்தில், ‘உன்னப்பார்த்தலே தெரியுது, நீ முதல் தடவ தப்பு செஞ்சிருக்கன்னு ‘, என்றாள். அடிப்பாவி என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே, ‘ நான் நிஜமாவே காசுகொடுக்க மறந்துட்டேன் ‘, என்றேன். ‘ம்,.. சரிசரி, அப்படின்னா, சும்மா ராத்திரிமட்டும் வச்சிருந்துட்டு விட்டுடுவாங்க. நீ நாளைக்கே வீட்டுக்குப்போயிடலாம் ‘, என்றாள் பொறாமையோடு. ‘ நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா,.. நா ஒரு நம்பர் சொல்றேன். எங்கப்பாகிட்ட போன் பண்ணு. நீலச்சட்டப்பாவிங்க பிடிசிட்டாங்கன்னு சொல்றியா. போன் நம்பர் சொன்னா ஞாபகம் இருக்குமா ? ‘ என்று படபடவென்று பேசினாள். மறுபடியும் மறுபடியும் பலமுறை போன் நம்பரைச் சொன்னாள்.

துளியும் எதிர்பாராத நேரத்தில் பட்பட்டென்று தன் மேல்சட்டைப் பட்டன்களைக் கழற்றிவிட்டுத் தன் மார்பை என் முகத்திற்கு நேராகக்காட்டினாள். அவளின் செயலுக்கும், அங்கு நான் கண்டதற்கும் அதிர்ந்தேன். இடது மார்பகத்திற்குக் குறுக்கே கிட்டத்தட்ட வயிறுவரை கிழித்துத் தைத்த வடு!

இருதய அறுவைசிகிச்சை நடந்ததாம் இரண்டு வருடங்களுக்கு முன்னர். பாவமாக இருந்தது. மெள்ள என் இரக்கத்தைச் சம்பாதித்துக்கொண்ட தீர்மானத்துடன் விஷயத்துக்கு வந்தாள். ஒரு வருடத்திற்குமுன்னர் அவள் ஒரு போதைப்புழங்கி. பிடிபட்டபின் மூன்று மாதம் சிறையில் இருந்தாளாம். வெளியானதும் வாரவாரம் சிறுநீர் பரிசோதனைக்குப் போகவேண்டும். போனாளாம். இரண்டு நாட்களுக்குமுன்பு பரிசோதனையில் ‘எப்படி போதைப்பொருள் உட்கொண்டதாக வந்தது ‘ என்றே தெரியவில்லையாம். அவளின் நிலை ஒருவகையில் பரிதாபகரமாய் இருந்தது. நான்கு வருடங்களுமுன் யாருடனோ ஓடிவிட்ட தன் அம்மாவைத் தகாத சொல்லால் திட்டினாள்.

திடாரென்று கனவிலிருந்து விழித்துக்கொள்ளப்போகிறேனோ என்றுதான் நான் அப்போது நினைத்தேன். ஏதோ படம் பார்ப்பதுபோலவும் கூட இருந்தது. திடாரென்று கதவு திறக்கப்பட்டு அதிகாரி என்னைக்கூப்பிட்டபோது இரவு மணி பன்னிரெண்டு நாற்பது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன். தலைவர்கள் நாட்டு விடுதலைக்காக சிறையில் இருந்தனர். நான் என் மறதிக்காக சுமார் ஏழு மணிநேரம் லாக்கப்பில் இருந்திருக்கிறேன். அன்றைய அனுபவம் வாழ்நாளில் மறக்கக்கூடிய அனுபவமாய் இருக்கவில்லை.

‘ நாளைக்குக் காலைல வாங்கன்னு சொன்னா கேக்காம உங்க ஹஸ்பண்ட் பிடிவாதமா ஒக்காந்துகிட்டு, ‘என் வைஃப் அதுமாதிரியெல்லாம் செய்யமாட்டா. காசுகொடுக்க மறந்திருக்கா ‘ னு பொலம்பிட்டேயிருந்தாரு. இப்ப ஸ்டேட்மெண்ட் எழுதுவாங்க. நீங்க சொல்றதச்சொல்லிட்டு அவரோட கிளம்பலாம். ‘ பொறியாளரும் மேனேஜருமான அவரைப்பற்றி அவர்களுக்கு என்ன தெரியும். என்னிடம் காட்டிய அதே முரட்டுத்தனம்.

அதிகாரப்பூர்வமாக கேள்விகள் கேட்கப்பட்டு நடந்ததை நான் சொல்லச்சொல்ல எழுதினார் ஒரு உயரதிகாரி. இடக்குமடக்காகக் கேள்விகள் கேட்டுப் பாத்தார். நடந்ததை நடந்தபடி சொல்வதில் எனக்குக் குழப்பமேயிருக்கவில்லை. கணவருக்கு என்ன வேலை,வசித்தவீடு ஐந்தறையா, மூன்றறையா, குடும்ப சம்பாத்தியம் எத்தனை, என்று ஏதேதோ கேள்விகள். எழுதிமுடித்ததும் கையெழுத்திடச் சொன்னபோது படித்துப்பார்க்கக் கண்ணாடிவேண்டுமென்று கேட்டதற்கு பிறகுதான் கொடுப்போம் என்றார். நானும் கண்ணிற்கு இரண்டு இன்ச் கிட்டத்தில் வைத்து கஷ்டப்பட்டுப் படித்துப் பார்த்துவிட்டுக் கையெழுத்திட்டேன்.

கழற்றப்பட்ட ஆபரணங்கள், காய்கறிப்பை மற்றும் குடை ஆகியவை என்கையெழுத்து வாங்கப்பட்டுக் கொடுக்கப்பட்டன. கீரை என் மனதைப்போலவே வாடித்துவண்டிருந்தது. பன்னீர் கெட்டுப்போக ஆரம்பித்திருந்தது பையிலிருந்து அடித்த கெட்டவாடையில் தெரிந்தது. கணவரின் ஜாமீனில் என்னை விடுவிப்பதாகச் சொன்னார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஸ்டேஷனுக்குப் போய் கையெழுத்திடவேண்டும் என்றார்கள். ஏழு மணிநேரத்தில் ஏழுவயது கூடிய ஆயாசத்துடன் வெளியேறினால், லேசாகக்கலங்கிய கண்களும் முகத்தில் சோகமுமாய் வரவேற்றார் ராஜ். தோளைத்தொட்டு ‘விடும்மா, ஏதோ பெரிசா கெட்டது நடக்க இருந்துது, இத்தோட போச்சேன்னு நெனச்சிப்போம், சீயர் அப், வா போலாம் ‘, என்றபடி விடுவிடுவென்று இறங்கி நடந்தோம். ‘பசங்க தூங்கறாளா ? ‘, என்று நான் கேட்டதற்கு ஆமென்று தலையாட்டிக்கொண்டே நடந்தார். டாக்ஸி பிடித்து வீடுவந்து சேர்ந்தோம்.

அடுத்துவந்த நாட்களில் மனம் எதிலும் லயிக்கமறுத்தது. அன்றாட வேலைகள் செய்யவே மிகவும் சிரமமாய் இருந்தது. நாடக ஒத்திகை மற்றும் கலந்துரையாடல் எல்லாவற்றையும் தற்காலிகமாய் ஒத்திவைத்தேன். ஒருவரிடமும் நடந்ததைச் சொல்லிக்கொள்ளும் துணிச்சலும் இருக்கவில்லை.

அர்ச்சனாவும் அருணாவும் எனக்கு உடம்பு சீரியஸ் என்றே நினைக்கும் அளவிற்கு மனதில் ஏற்பட்ட ஆயாசம் உடலிலும் தெரிந்தது. அன்றைய தினம் உடுத்தியிருந்த சல்வார்கமீஸ் கண்ணில்படும் போதெல்லாம் பழையநினைவு வந்து வாட்டியது. அதைக் கண்காணாமல் ஒளித்து வைத்தேன்.

ஏற்கனவே புதுத்துணிகள் வாங்கியிருந்ததால், நாளை ஒழிக்காமல் எண்ணைதேய்த்துக்குளித்துப் புத்தாடை உடுத்தினோம். மத்தாப்பு மட்டும் ராஜ் வாங்கி வந்திருந்தார். உக்காரை, வெள்ளையப்பம், லட்டு, தேங்குழல், தீபாவளி மருந்து என்று அமர்க்களப்படும் வழக்கமான கொண்டாட்டங்களில்லாமல், ‘கோமளவிலாஸ் ‘ ஜாங்கிரி மற்றும் ஓமப்பொடியுடன் அந்தத் தீபாவளி மிகச் சாதாரணமாக முடிந்தது. ‘அடுத்த தீபாவளிய கிராண்டா கொண்டாடிவிடுவோம் ‘, என்று ராஜ் என்மனதைப் படித்ததைப்போலச் சொல்லிக்கொண்டிருந்தார்.

குற்றவாளியைப்போல் ஒருவாரம் விட்டு ஒருவாரம் மூன்று மாதத்திற்குப் போய் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தேன். சற்றே மறந்திருந்த லாக்கப் நினைவுகள் அப்போதெல்லாம் மீண்டும் வந்தன. ‘பவித்ரா, இதுக்கெல்லாம் அப்செட் ஆனா ஒன்னோட குடும்பம் திண்டாடறது ஒருபுறமிருக்க நாடகத் துறைல நீ சாதிக்க நினைக்கிறதெல்லாம் என்னாகும் ? ‘ என்று அடிக்கடி எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு நடந்ததை ‘மறக்க ‘ முயன்றேன். பலவீனமாயிருந்த என் மறதியே என் பலமானது.

நான்கு மாதம் ஆனதும் ஒருநாள் போன் செய்து, ‘ உங்களுக்கு ஒரு வார்னிங் கொடுத்து ஃபைலை மூடப்போறோம். இப்பவே வரீங்களா ? ‘ என்றனர். சரியென்று ஓடினேன். ‘எச்சரிக்கை ‘ எழுதிக்கொடுத்து கையெழுத்தும் வாங்கிகொண்டு அனுப்பினர். எச்சரிக்கை! எதற்கு ? ஓ என் மறதிக்கோ!

—- ஜெயந்தி சங்கர்

(கல்கி தீபாவளி மலர்- நவம்பர் 2004)

sankari01sg@hotmail.com

oooo OOOO oooo

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்