சுனாமி பற்றிய அனாச்சாரமான சிந்தனைகள்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

சின்னக்கருப்பன்


தொட்டிக்குள் ஒன்றின் மீது மற்றொன்றாக இருந்த செங்கல்கள் நழுவி விழுந்ததில் தோன்றிய அலை நடுவிலிருந்து பரவி தொட்டி ஓரத்தில் சென்று கொண்டிருந்த எறும்புகள் தண்ணீரில் மூழ்கி இறந்தது போல, சுனாமி மனிதர்களை எறும்புகள் போல அலையடித்து அலைக்கழித்து அழித்திருக்கிறது. எறும்புகள் தங்களுக்குள் உதவிக்கொள்வது போல, மக்கள் இறந்தவர்களுக்கும், இறக்க இருக்கிறவர்களுக்கும் உதவுகிறார்கள். ஒரு சில நண்டுகள் போகும் அவசரத்தில் மற்றொரு நண்டை கடித்துவிட்டுச் செல்வது போல மனிதர்களும் தாங்களும் அடுத்த வேளை சாப்பாட்டுக்காகவும், தனது சந்ததிக்காக பணம் சேர்த்துவைக்கவும், வேலைக்காகவும், பெருமைக்காகவும் மற்ற மனிதர்களைக் கடித்துக்குதறுகிறார்கள். நானும் அப்படியே. அதில் எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.

**

சமீபத்தில் படித்த சுனாமி பற்றிய கட்டுரைகளில் எனக்குப் பிடித்தவை மூன்று. முதலாவது ரஜினி ராம்கி இணைய நண்பர்கள் உதவி மூலம் செய்யும் காரியங்களையும், பயண அனுபவங்களையும் பற்றிய வலைப்பதிவுகள். இரண்டாவது ஜெயமோகன் எழுதிய சுனாமி பற்றிய திண்ணை பதிவுகள். மூன்றாவது சுனாமிக்கு நன்றி என்று நேசமுடன் வெங்கடேஷ் எழுதிய கட்டுரை.

முதலாவது என் மனித குணத்திலிருந்து மேலெழத் தூண்டுகிறது. இரண்டாவது என்னை நிதர்சனத்தைப் பார்க்க வைக்கிறது. மூன்றாவது என் அடிப்படை மனித குணத்தை பற்றி எனக்கு நினைவூட்டுகிறது. மூன்றுமே உண்மையானவை.

ஜெயமோகனும் இன்ன பிறரும் வெங்கடேஷின் எழுத்தை ‘மத்தியதர வர்க்க பிராம்மண ‘ சிந்தனை என்று சொன்னார்கள். சிரிக்கத்தான் தோன்றுகிறது. உயிராசை இல்லாத மனிதன் ஏது ? உயிராசை இல்லையெனில் மனிதன் ஏது ? தான் தப்பித்தோம் என்று சந்தோஷப்படாத உயிர்தான் ஏது ? பணக்காரனுக்கும் ஏழைக்கும் தான் தப்பித்தோம் என்று சிந்தனை வராதா ? அதனை ஒளிவு மறைவு பாசாங்கு இல்லாமல் எழுத வெட்கப்பட்டிருப்பார்கள். வெங்கடேஷ் வெட்கப்படவில்லை. அதில் பாசாங்கு ‘சுனாமிக்கு நன்றி ‘ என்ற வார்த்தைதான். அது தமிழ் அறிவுஜீவி எழுத்தினால் பாதிக்கப்பட்டு, தலைகீழாகச் சொல்லமுயன்ற பாசாங்கு. ஜனநாயகம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் அராஜக தமிழ்நாட்டு அரசுக்கு நன்றி என்று சொல்வது போல.

**

அதையெல்லாம் கடந்து எனக்கு ஆச்சரியம் கொடுப்பது மனிதர்களின் அசாதாரண அகங்காரம்.

திடாரென்று நோய் வந்து லட்சக்கணக்கான கோழிகள் செத்துப்போகின்றன. திடாரென்று ஆயிரக்கணக்கான திமிங்கிலங்கள் தற்கொலை செய்துகொண்டதுபோல கரையில் ஒதுங்குகின்றன.

அமெரிக்காவில் மட்டுமே தினந்தோறும் மனிதர்கள் தின்பதற்காக 2.5 கோடி கோழிகள் கொல்லப்படுகின்றன. இந்தியாவில் அதே அளவு கோழிகள் தினந்தோறும் கொல்லப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் உணவுக்காக சுமார் 10 லட்சம் ஆடுகள் தினந்தோறும் கொல்லப்படுகின்றன. ஒரு கவளம் சாதத்தில் எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டிருக்கின்றன என்று நாம் நினைத்திருக்கின்றோமா ?

ஆடுகள் இறப்புக்காக ஆபத்பாந்தவனாக வராத, வரக்கூடாத இறைவன், மனிதர்கள் 1 லட்சம் பேர் ஒருநாளில் இறந்தால் இறங்கி வந்து காத்திட வேண்டும் என்று அகங்காரமாக நாத்திகர்களும் ஆத்திகர்களும் கோருகிறார்கள். அப்படி வராத இறைவன் இருக்கிறான் என்று நம்புவது கடினம் என்று நாத்திகர்கள் பேசலாம். அல்ல, இறைவன் தண்டிக்கிறான் என்று ஆத்திகர்கள் பேசலாம். இது நகைப்புக்கிடமானது இல்லாமல் வேறென்ன ? இறைவனின் நோக்கில் கோழிகளும் ஆடுகளும், மனிதன் அழிக்கும் ஆயிரம் ஆயிரம் உயிரினங்களும் முக்கியமற்றவை, ஆனால் மனிதர்கள் மட்டும் முக்கியமாக இருக்கவேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறான். என்ன அகங்காரம் இது! சற்றே திரும்பிப்பார்த்தால், இதே போல பூமி அதிர நடந்த இனங்கள் இன்று செத்தகாலேஜில் பாடம் பண்ணப்பட்டு இருப்பதை பார்க்கலாம். கடவுள் ஆசைகள், விருப்புகள் வெறுப்புகள் கோபங்கள் கொண்ட மனிதனின் மற்றொரு பிம்பமாக உருவாக்கப்படுவதைப் பார்த்து நகைக்கவே முடியும். ஒரு மனிதன் விபூதி அல்லது நாமம் அணிந்திருக்கின்றானா, அல்லது சிலுவை அணிந்திருக்கின்றானா, அல்லது தொப்பி அணிந்திருக்கின்றானா என்று கவலைப்படும் கடவுள் நமது மனமாச்சரியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பமன்றி வேறென்ன ?

**

எப்போதோ கேட்ட ஒரு கதை.

ஒரு முனிவரிடம் ஒருவர் வந்து ‘சாமி. மனித வாழ்க்கை என்றால் என்ன ? ‘ என்று கேட்டார்.

அவர் ஒரு கதை சொன்னார், ‘ஒரு மனிதன் காட்டில் இருந்தான். திடாரென்று ஒரு உறுமும் ஒலி கேட்டது. திரும்பிப்பார்த்தான். புலி. இவன் பயந்து ஓடினான். புலி துரத்தி வந்தது. இவன் ஓடும் பக்கம் மலை முகடு இருக்கிறது. அதைத்தாண்டி பெரும் பள்ளம். நுனிக்கு வந்துவிட்டான். புலியிடமிருந்து தப்பிக்க பள்ளத்தில் தொங்கிக்கொண்டிருந்த வேரை பிடித்துக்கொண்டு மலை முகட்டிலிருந்து தொங்கினான். அப்போதுதான் பார்க்கிறான். தான் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது வேரல்ல கொடியுமல்ல. அது ஒரு பாம்பு என்பதை. அப்போது அவன் அண்ணாந்து புலியைப்பார்க்கிறான். புலிக்கு மேலே ஒரு கிளையில் தேனீக்கள் கூடு கட்டியிருக்கின்றன. அதிலிருந்து ஒரு சொட்டு தேன் அவன் வாயில் விழுகிறது. அது இனிக்கிறது. அதை சப்புக்கொட்டி சாப்பிடுகிறான். மேலே புலி, கீழே பள்ளம், பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது பாம்பு. இவற்றுக்கு நடுவில் ஒரு சொட்டு தேனை அவன் நாக்கு சுவைக்கிறதே. அதுதான் மனித வாழ்க்கை ‘ என்றார் முனிவர்.

புலியாலோ, பாம்பினாலோ, பள்ளத்தாலோ அவன் இறந்தபின் அந்த துளி தேன் சுவையின் பொருள் என்ன ? வாழ்க்கை நிலையில்லாததுதான். ஆனால் அந்த தேன் துளியின் சுவை நிஜம் அப்போதைக்கு. அதனால்தான், நமது அழிவைப் பற்றிய ஞாபகம் வந்த பின்னாலும், அன்றாட சிறு சிறு இன்பங்களில், சந்தோஷங்களில் நம் மனத்தைச் செலுத்துகிறோம். இது மயான வைராக்கியம் போன்றதுதான். அது இரண்டே நாட்களில் சரியாகிவிடும். சரியாக வேண்டும். மீண்டும் சன் டிவி, மீண்டும் அரசியல் அடிதடிகள், அடுத்த சந்ததிக்காக லஞ்சம் வாங்கி சேர்த்து வைப்பது எல்லாமே. அவ்வப்போது ஞாபகம் வரும்போது, இறைவனிடம் சென்று பாலாபிசேகம் செய்து இறைஞ்சுவதும் எல்லாமே.

இந்த உலகமும் இந்த உலகம் சுற்றும் சூரியனும், அந்த சூரியன் சுற்றும் இந்த பால்வீதி நட்சத்திரத் தொகுப்பும், இந்த பால்வீதி நட்சத்திர தொகுப்பு இருக்கும் பேரண்டமும் அனைத்தும் அழியத்தான் போகின்றன. அதற்கு வெகுகாலம் இருந்தாலும் அவை நிச்சயம் அழியத்தான்போகின்றன. நமக்கு முன்னர் இந்த பேரண்டத்தில் இருந்தவர்களைப்பற்றிய நினைவும் நமக்கு இல்லை. நமக்கு பின்னால் வரப்போகிறவர்களைப் பற்றிய எதிர்பார்ப்பும் நம்மிடம் இல்லை. இந்த பேரண்டத்துக்கு முன்னால் வேறொரு பேரண்டம் இருந்திருக்கலாம். இந்த பேரண்டம் இன்னொரு பேரண்டத்திலிருந்து எழுந்ததாய், பாற்கடலில் முகிழ்ந்த ஒரு குமிழியாய் இருந்திருக்கலாம். அதற்கான அறியும் திறனோ, அந்த மற்றொரு பேரண்டத்தின் இயற்பியல் விதிகளோ நாம் அறிய முடியாதவை. கீதையில் சொல்லும் விசுவரூபதரிசனத்தின் உள்ளார்ந்த பொருள் நாம் படிக்கும் போது, சொற்கள் புரிந்தாலும், பொருள் உள்ளே இறங்குவதில்லை. சுகப்பிரம்மரிஷி பாற்கடலின் ஒரு துளியை கண்டு பின் வாழ்நாளெங்கும் பிதற்றித் திரிந்ததாய்ச் சொல்வார்கள். நாம் எங்கே ?

**

அடுத்து இந்த புராணக்கதை. இது ஏறத்தாழ ஒரு அறிவியற் புனைகதை.

நாரதரும் நாராயணரும் பாலைவனப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். நாரதர் ஏதோ கேட்டார். இந்த இடத்தில் நீங்கள் பல்வேறுவிதமான கேள்விகளை போட்டுக்கொள்ளலாம்.

உதாரணமாக

‘நான் உங்களை மறந்துவிடுவேனா ? ‘

‘மனித வாழ்க்கை என்றால் என்ன ? ‘

‘உயிர்வாழ எது முக்கியம் ‘

‘எதற்கு உயிர்வாழ வேண்டும் ? ‘

‘மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன ? ‘

நாராயணர் அதற்கு பதிலாக ‘பதில் சொல்கிறேன். எனக்கு தாகமாக இருக்கிறது. நான் இங்கே உட்கார்ந்து கொள்கிறேன். நீ சென்று தண்ணீர் மொண்டுவா ‘ என்று அனுப்பினார்.

நாரதர் சென்று பார்த்தார். அங்கு ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதில் தனது கமண்டலத்தை முக்கி தண்ணீரை எடுத்தார். அப்போதுதான் பார்த்தார். அக்கரையில் ஒரு அழகிய பெண் குளித்துக்கொண்டிருந்தார். அவளது அழகில் மயங்கிய நாரதர் அவளிடம் சென்று ‘என்னை திருமணம் செய்து கொள்கிறாயா ? ‘ என்று கேட்டார். அப்பெண், என் தந்தையே முடிவு செய்வார் என்று அவரை அழைத்துக்கொண்டு தந்தையிடம் சென்றார். அப்பெண்ணின் தந்தை, இவளை திருமணம் செய்துகொண்டால் இங்கேயே தங்கியிருந்து என் குலத்தொழிலை தொடர்ந்து செய்வாயா என்று கேட்டார். அதற்கு சம்மதித்த நாரதர் அங்கேயே தங்கி அப்பெண்ணுடன் குடித்தனம் நடத்தி மூன்று ஆண் குழந்தைகளையும் மூன்று பெண் குழந்தைகளையும் பெற்றார். அந்த காலத்தில் ஒரு முறை திடாரென்று பஞ்சம் வந்தது. எல்லோரும் ஊர் விட்டு ஊர் செல்ல ஆரம்பித்தனர். நாரதர் தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு பாலைவனமாகிப்போன பழைய ஆற்றின் வழியே நடந்து வந்துகொண்டிருந்தபோது திடாரென்று வெள்ளம் வந்தது. நாரதர் மிகவும் முயற்சி செய்து தன் குழந்தைகளையும் மனைவியையும் காப்பாற்ற முனைந்தார் முடியவில்லை. இவர் மட்டும் கரையேறி கரையில் உட்கார்ந்து அழுதார்.

பின்னால் நாராயணர் வந்து நின்று

‘என்ன நாரதா, ஐந்து நிமிடமாக ஆகிவிட்டது. தண்ணீர் கொண்டு வரச்சொன்னேன். அதோ பார் உன் கமண்டலம் ஆற்றோடு போகிறது. அதனை விட்டுவிட்டு ஏன் அழுது கொண்டிருக்கிறாய் ? ‘ என்று கேட்டார்.

ஒரு நிமிடத்துக்குள் ஒரு வாழ்நாளின் ஞாபகத்தை நம் மனத்தில் ஏற்றி வைத்திருந்தால், எது உண்மை ? நடக்கவில்லை என்று தெரியும். ஆனால் ஞாபகங்கள் ஒரு வாழ்நாளைச் சொல்கின்றன. இல்லாது போய்விட்ட மகன்களின் மகள்களின் இழப்பைச் சொல்கின்றன. பொழிந்த பாசத்தைச் சொல்கின்றன. அவர்களை நல் வழிப்படுத்துவதற்காக நாம் மனம் உடைந்து திட்டியதைச் சொல்கின்றன. ஆனால் ஆற்றில் செல்லும் கமண்டலம், அது வெறும் ஆதாரமற்ற பொய் ஞாபகம் என்று சொல்கிறது. எது உண்மை ? உண்மை என்ற ஒன்று உண்டா ?

**

‘இப்படி நடந்தது, இப்படி ஒருவன் இருந்தான் ‘ என்ற ஞாபகமே நாம் விட்டுச் செல்லக்கூடிய ஒன்று. ஆனால் அதுவும் பெரும்பாலும் மிஞ்சுவதில்லை. ஞாபகங்கள் அனைத்தையும் மாயக்கதைப்படுத்திவிடும் சமூகம் நமது. ஐந்து தலைமுறைக்கு வம்சாவளி எழுதக்கூடாது என்று நம் குடும்பத்தில் சொல்கிறார்கள்.

மனிதர்கள் இறப்பு போன்று சமூகங்களின் இறப்பும் இருக்கிறது. எத்தனையோ சமூகங்கள் இனங்கள் அழிந்து போயிருக்கின்றன. நியாண்டர்தால் மனிதர்களின் எலும்புகளே அவர்கள் இந்த பூமியில் விட்டுச் சென்ற அடையாளங்கள். அவர்களின் கனவுகள், கற்பனைகள் காற்றில் எழுதிய கவிதைகளாகக் கரைந்துவிட்டன. அவர்களின் காதல்கள் வீரங்கள் விளையாடல்கள் இன்று யாருடைய ஞாபகத்திலும் இல்லை. இந்த உலகத்தின் ஆளும் வர்க்கமாக தரை நடுங்க நடந்த டைனசோர்கள் இன்று வெற்று எலும்புகளாக இடையே பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட செயற்கை எலும்புகளின் துணையோடு அரும் பொருள் காட்சியகங்களில் நின்று கொண்டிருக்கின்றன. ஞாபகங்களே வாழ்க்கை. ஞாபகங்கள் அற்ற அல்ஜைமர் மனிதரது வாழ்க்கையை அவரே ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அல்ஜைமர் மனிதரை மட்டுமா பீடிக்கிறது. சமூகங்களையும் அப்படியே. நம் சமூகத்திற்கு வந்திருக்கும் அல்ஜைமரை எதிர்த்து, நம்மை ஆண்ட நம்மை அறியாதவர் சொன்ன ஞாபகக்குவியலைக் கொண்டு நம் கடந்தகால வாழ்க்கையை கட்டுவிக்கிறோம். காலனிய வரலாற்று எழுத்துக்களிலிருந்து நம்மை மீட்டெடுக்க இந்த அல்ஜைமரை எதிர்த்து என் போன்றோர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியும் வந்தே தீரக்கூடிய தோல்வியுறும் ஒரு போராட்டமே என்று தெரிந்தே சிலரும் போராடுகிறோம்.

இறைவன் நர்த்தனம் ஆடுகிறான். ஸ்டிரிங் தேற்றத்தில், எலக்ட்ரான் போன்ற ஒவ்வொரு அடிப்படைத் துகள்களுக்கும் உள்ளே இருப்பது சக்தியின் நடனமே என்றும், எந்த அலையில் அந்த சக்தி ஆடுகிறது என்பதை வைத்தே எந்த பொருள் என்பது நிர்ணயமாகிறது என்று சொல்கிறது. அணுவுக்குள்ளும் ஆடும் இறைவனை கற்பனை செய்த இந்து ஆன்மீகத்தினர், இந்த அண்ட பேரண்டமே அவன் திருவிளையாடல் என்றும் கூறினர். உனக்கும் எனக்கும் உயிருக்கும் உயிரற்றதற்கும் உள்ளே உறைந்து ஆடும் இறைவனைச் சொன்ன அதே இந்திய ஆன்மீகத்தின் வழி வந்தவர்களே, மனிதனுக்கும் மனிதனுக்கும் சமத்துவத்தைப் போதிக்கவும் முனைந்தனர். குவாண்டம் இயற்பியலில் எல்லா பொருட்களும் அடிப்படையில் ஒன்றுதான் என்பது அந்த குவாண்டம் இயற்பியல் வாதியை காருக்கு பதிலாக மூன்று சக்கர வண்டியில் செல்ல வைத்துவிடாது. எல்லாம் ஒன்று என்பது ஒரு பேருண்மை. கார் வேறு மூன்று சக்கர வண்டி வேறு என்பது சிறு உண்மை. வாழ்க்கையை நடத்த சிறு உண்மையும் வேண்டும் பேருண்மையும் வேண்டும். சிறு உண்மைகள் நம்மை தினசரி வாழ்க்கை நடத்த உதவுகின்றன. அந்த சிறு உண்மைகளுக்குள் அமிழ்ந்து விடாமல், அவற்றை தாண்டியும் நம்மை பரந்து சிந்திக்க பேருண்மைகள் உந்துகின்றன. பேருண்மைகளைச் சொல்லி சிறு உண்மைகளில் பொருளில்லை, அவை மாயங்கள் என்று சொல்லியிருக்கலாம். அதன் மூலம் சிறு உண்மைகளை, நிதர்சனங்களை மாற்றத் தேவையில்லை என்று இருப்பை நியாயப்படுத்தியிருக்கலாம். ஆனால், கறந்த பால் மடி புகுவதில்லை.

எல்லாவற்றுக்குள்ளும் இருப்பது இறைவனே என்ற பேருண்மை, நமி நந்தி நாயனாரை தீண்டாமையை நிராகரிக்க வைக்கிறது. எல்லா ஜாதிகளுக்குள்ளும் புல் பூண்டுகளுக்குள்ளும் ஆறு கடல் அலை மேகப்பொதி, நட்சத்திரம் என இறைவனே பொதிந்திருக்கிறான் என்ற உள்ளுணர்வான ஆன்மீகம் உணரும் விஷயத்தை சொல்லவே இந்து ஞானிகள் காலம் காலமாக காலத்திற்கேற்ப சொல்லி வந்திருக்கிறார்கள். இதனையே விஷ்ணு மயம் ஜகத் என்றும் ஈஷாவாய்ஸம் மிதம் சர்வம் என்றும் நமது முன்னோர் கண்டுசொல்லினர். இதனையே மக்கள் சேவையே மகேசன் சேவையென காந்தியைப் பார்க்க வைக்கிறது.

அதனையே இப்பூவுலகத்தில் வாழும் அனைத்து உயிரற்ற உயிருள்ள பொருட்கள் மீதும் அன்பும் பாசமும் கொண்டதாகத் தோன்றும் இந்து சுற்றுச்சூழல் இயக்கம் நம்மை அரவணைக்கும் எனவும் தோன்றுகிறது.

**

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்