கல்லா இரும்பா ?

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

ஞானம்


சுழலும் சுக்கான்
குமுறும் கடலில்
பெரும்புனல் வெளியில்.
சுழலும் சுக்கான்
அலையின் போக்கில்
சுழலின் போக்கில்
மேற் செல்லும் படகு
இலக்கை நோக்கி.

சுக்கான் இன்றேல்..
சுக்கு நூறாகும்
அக்கு வேறு ஆணிவேறாகும்
இலக்கெங்கோ தொடுவானமாக.

சுழல்தல் நெகிழ்தல்
பச்சை மண்ணாய்
மக்கள் வாழ்க்கையை
முற்றய்ப் புரிதல்
தத்துவத் தணலில்
உறுதியாய் வேகுதல்
மக்களுக்காகவே
வாழ்வின் மேனிலைக்காகவே.

உறுதியானது
கருங்கல்லும் இரும்புமே
கட்டிடப் பொருட்களில்.

கோட்டை கொத்தளங்கள்
கொள்ளை கொள்ளும்
அற்புதச் சிலைகள்
கல்லில் தான் – இரும்பில் தான்

ஆனாலும் தோழனே ‘
இதமாய் வாழ மக்கள்
மண்ணாலும் மரத்தாலுமே
இல்லம் அமைத்தார்கள்
கோட்டைக்கும்
உள்ளும் – வெளியும்.

இளகும் சுதையுடன்
கல்லும் இரும்பும்
கலந்தால் இல்லம்.
இன்றேல்
ஓர் நினைவுச் சின்னம்.

மக்களைப் -புரிய
வாழ்வினைப் புரிய
மேனிலை சேர்க்கவோர்
கட்சியா ?
ஏதோவொரு
இறுகிய
தத்துவப்புரிதலின்
அல்லது
புரியாமையின்
நினைவுச் சின்னமா ?

என்
உறுதியான தோழனே
பகுதியைத் தேடி முழுமையையும்
முழுமையைத் தேடி பகுதியையும்
பக்குவமாய்க் கோட்டைவிட்டு
பதறிப் போய்க் கேட்கிறேன்
நீ….
கல்லா
இரும்பா ?

****

Series Navigation

ஞானம்

ஞானம்