கால நதிக்கரையில் – அத்தியாயம் – 30 (நாவல் – நிறைவுப் பகுதி)

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

வே.சபாநாயகம்இந்த மேலமந்தை கீழமந்தையிலிருந்து மாறுபட்டது. கீழமந்தை ஒதுக்கமானது. மேலமந்தை அந்தவழியே போகும் வெளியூர்ப் பாட்டையில் இருந்தது. கீழமந்தையில் அய்யனார் கோயில் திரௌபதைஅம்மன் கோயில்களின் திருவிழாக்களில் ஆடு கோழி பலியிடுவதும் சாராயம் வைத்துப் படைப்பதும் நடக்கும். ஆனால் மேலமந்தை நிகழ்வுகள் சுத்த சைவமானவை. சிறுத்தொண்டர் அன்னப் படையல், மாரியம்மன் கூழ் ஊற்றுதல், காமதகனம் போல – பலி, சாராயம் இல்லாதவை. எல்லாமே ஊர் மக்களுக்கு எழுச்சியும் ஆர்வமும் ஊட்டுபவை. காமுட்டி என்கிற காமதகனப் பாடல்கள் வெகு சுவாரஸ்யமானவை. சிதம்பரம் படிப்பு முடிந்து தொலை தூரத்தில் வேலைக்குப் போனது வரை ஒரு ஆண்டுகூட இக்கொண்டாட்டங்களைத் தவற விட்டதில்லை. தொடர்ந்து நடக்கிறதா என அறிய மருதுவிடம் கேட்டார்.

“எங்கேங்க? அதெல்லாம் போன தலமொறையோடப் போயிட்டுது. நடத்தி வச்ச பெரிய தலையெல்லாம் ஒருத்தர் கூட இப்ப இல்ல. இப்ப இருக்கிற தலமொறைக்கு அரசியலும், நாட்டாமைக்குப் போட்டியும் தான் இருக்கே தவிர ஊரு வளர்ச்சியிலும், திருவிழா நடத்துறதிலும் எவுனுக்கு அக்கறை? யாராவது ஒருத்தரு தப்பித்தவறி முனைஞ்சாலும் அதத் தடுக்கிறபேருதான் இப்ப அதிகம்” என்று புலம்பாத குறையாய் மருது சொன்னான்.

“அப்பிடியுமா இருக்காங்க? யாரு அப்பிடித் தடுக்கிறது?”

“எல்லாம் பெரிய எடத்துப் பிள்ளைங்கதான். பெருங்காயம் வச்ச டப்பாங்களே அதும் மாதிரி எடுத்து நடத்த முடியலேண்ணாலும் தன்னக் கேக்காம எப்பிடிச் செய்யலாம்னு வறட்டு அதிகாரம் மட்டும்தான் செய்யுதுங்க. நீங்கள்ளாம் வேலைக்குப் போனப்புறம் ரொம்ப நாளைக்கு முன்னே ஒண்ணு நடந்துது. மாரியம்மன் கோயிலுக் குப் பக்கத்துலே இருக்கிற புள்ளையார் கோயிலுக்கு மானியமோ நித்திய பூசைக்கு ஒரு ஏற்பாடோ கெடையாது. வடக்குத்தெரு ராமகோடிதான் யாராவது வேண்டுதலச் செய்யக் கூப்புட்டா வந்து அபிஷேகம் பண்ணி மணியடிச்சு படைச்சுக் குடுப்பான். நம்ம பெரிய புரோகிதரு ஏதோ நெனச்சி, தான் மத்தியானம் சாப்புடுறதுக்கு முன்னால ஒரு உண்டையப் புள்ளையாருக்குக் காட்டிட்டு சாப்புடுவோமேன்னுட்டு உச்சி
வேளையிலே ஒரு சொம்பு தண்ணிய புள்ளையாரு தலையில ஊத்தி அபிஷேகம் பண்ணி நைவேத்தியம் காட்ட ஆரம்பிச்சாரு. அதுக்காக அவுரு ஆருகிட்டியும் எந்த ஒதவியும் கேக்குல. பாவம் புள்ளையாருக்குத்தான் குடுத்து வக்கில! ரெண்டு நாளுதான்
அவரு முன்னால வெளக்கெரிஞ்சுது. அதுக்குள்ள அதத் தடுத்துட்டாங்க!”

“அப்பிடியா? யாரு அது?”

“எல்லாம் உங்கப் பெரியப்பாரு மகந்தான். அய்யரக் கூப்புட்டு ‘ஆரக் கேட்டுக் கிட்டு புள்ளயாருக்கு பூச பண்றீங்கண்ணு?’ கேட்டிருக்காரு. அதுக்கு அய்யரு ‘நா ஆருகிட்டியும் பொருளோ பணமோக் கேக்குலியே! கேப்பாரில்லாம இருண்டு கெடக்குதேண்ணு நா சாப்புடறதுக்கு முந்தி ஒரு உருண்டய நைவேத்தியம் பண்ணிட்டுச் சாப்புடுறேன். இதுலே ஆருக்கு என்ன இடைஞ்சல்?’ னு சொல்லி இருக்காரு. ‘இன்னிக்கு இப்பிடித்தான் சொல்லுவிங்க, அப்பறமா நாந்தான் ரொம்ப நாளா பூசை பண்ணிக்கிட்டு வந்தேன்னு உரிமக் கொண்டாடுவீங்க!’ ன்னு உங்க அண்ணன் சொன்னாரு. ‘இதுல உரிமக் கொண்டாட என்ன இருக்கு? புள்ளயாருக்கு மானியமோ, தெனப்படிக்கு சாசனமோ எதுவும் இல்லியே! ஏதோ புண்ணியத்துக்குச் செய்யறத தடுக்கலாமா?’ ன்னு தயவாத்தான் கேட்டிருக்காரு அய்யரு. ஆனா அவுரு மொறட்டுத் தனமா ‘அதெல்லாம் முடியாது. இனிமே நீங்க பூசையெல்லாம் செய்ய வேணாம்’ னுட்டாரு. அய்யரு பாவம், நமக்கு எதுக்கு இவங்க கிட்டல்லாம் வம்புன்னு விட்டுட்டாரு. இப்பிடித்தான் நல்லது செய்யாமத் தடுக்கறதுக்கு இங்க நெறயப் பேரு இருக்காங்க. அதனால ஊர்ல திருவிழாவாவது கொண்டாட்டமாவது?” என்று மருது அலுத்துக் கொண்டான்.

சிதம்பரம் அந்தப் புரோகிதரை நினத்துக் கொண்டார்.

மற்றப் புரோகிதர்களிடருந்து அவர் மாறுபட்டவர். உச்சிக்குடுமி, பஞ்சகச்சம், நெற்றியில் சந்தனக் கீற்று என்று தோற்றம் பழமையைக் காட்டினாலும் எண்ணத்தில், செயல் பாட்டில் புதுமை விரும்பி அவர். கொஞ்சம் ஆங்கில அறிவும் உண்டு.
அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் அப்பாவுடன் பேசுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். மற்ற எல்லோரையும் அவரவர் ஜாதியை ஒட்டி ‘பிள்ளை’, ‘முதலியார்’ என்று அழைத்தாலும் அப்பாவை மட்டும் அவர் ‘சார்” என்றே விளித்துப் பேசுவார். அப்பாவும் மற்றவர்கள் மாதிரி அவரை ‘சாமி’ என்று விளிக்காமல் அவரைப் போலவே ‘சார்’ என்றே அழைப்பார்கள். அதில் இருவருக்கும் ஒரு அந்நியோன்யம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியும். அவர் ஜோதிடம் பார்ப்பதில் வல்லவர். அப்பாவுக்கும் ஜோதிடம் தெரியும் என்பதால் அவர்கள் சந்தித்தால் ஜோதிடம் பற்றியோ, அன்றைய செய்தித்தாளில் வந்துள்ள நாட்டு நடப்புகள் பற்றியோ பேசுவார்கள். அப்பாவுக்கு இதையெல்லாம் பகிர்ந்துகொள்ள அவரை விட்டால் ஊரில் வேறு யாரும் இல்லை.

முதன் முதலில் ஊருக்குள் கிராமபோன் பெட்டியை வாங்கி வந்தவர் அவர் தான். அத்தோடு அவர் ஒரு சின்ன ரேக்ளா வண்டியையும் வைத்திருந்தார். பக்கத்துக் கிராமங்களுக்குப் புரோகிதத்துக்குச் செல்கையில் அந்த ரேக்ளா வண்டியில்தான் செல்வார். இந்தக் காலத்தில் நகரங்களில் புரோகிதர்கள் மோட்டார் சைக்கிளில் புரோகிதத்துக்குப் போவதை ஆரம்பத்தில் ஆச்சரியமாகப் பார்த்தது போல் அந்தக் காலத்தில் அவர் ரேக்ளா வண்டியை ஓட்டிச் செல்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள். குதிரையைப் பராமரிப்பதும் அவரே தான். குதிரையைத் தேய்த்துக் குளிப்பாட்டுவது, வயற்காட்டுக்குப் போய் புல் அறுத்து வந்து போடுவது, கொள்ளை வேகவைத்துக் கொடுப்பது எல்லாம் அவர்தான். ஆள் வைத்துக் கொள்வதில்லை.

அது மட்டுமல்ல, புரோகிதருக்கு ஊராரால் ஒதுக்கப்பட்டிருந்த கால்காணி மானிய நிலத்தையும் அவரே நேரடியாகப் பயிர் செய்தார். அதற்கும் ஆள் கிடையாது. கூலி ஏர் மட்டும்தான் வைத்துக் கொள்வார். மற்றபடி அண்டை வெட்டுவது, நாற்று
நடுவது, அறுப்பது, தாளடிப்பது எல்லாம் அவரும் அவர் பிள்ளைகளும்தான். பூணுலை எடுத்து வலது காதில் சுற்றிக் கொண்டு மண்வெட்டி¨யால் அவர் அண்டை வெட்டும் போது பார்ப்பவர்களுக்கு வலிக்கும். ‘காலம் கலிகாலம் என்பது சரியாகி விட்டதே! தர்ப்பையைப் பிடிக்கும் கையால் மன்வெட்டியைப் பிராமணர் பிடிக்கவும் ஆச்சே!’ என்று பார்க்கிற மூத்தகுடிகள் ஆதங்கப் படுவார்கள். அவரிடமும் சொல்வார்கள். ‘இதில என்ன கௌரவம் வேண்டி இருக்கு? அவங்கவங்க வேலைய அவங்கவங்களே செய்துக்கிறதுலே ‘கலிகாலம்’ எங்க வந்துது?’ என்பார் அய்யர்.

எதிலும் எப்போதும் ஊர்மக்களுக்கு அவர் புருவம் உயர்த்தச் செய்பவராகவே இருந்தார். புரோகிதத்தில் அப்படி ஒன்றும் பெரிதாக வருமானம் வந்துவிடாது. என்றாலும் பெரிய அளவில் தன் மைத்துனியின் கல்யாணத்தை பேண்டு வாத்தியம், சாரட்டில் ஊர்வலம், சங்கீதக் கச்சேரி என்று ஐந்துநாள் கல்யாணமாக அமர்க்களமாக நடத்தி வைத்தார். அந்தத் திருமணம் வெகுநாட்கள் ஊரில் பேசப்பட்டது சிதம்பரத்துக்கு இன்னும் நினைவிருக்கிறது.

அவரது பேச்சு எப்போதும் அறிவார்ந்ததும் சுவாரஸ்யம் மிக்கதாகவும் இருக்கும். சிதம்பரம் அவரது பேச்சை மிகவும் ரசிப்பார். சிதம்பரத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும். சிதம்பரம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தற்செயலாய்க் கடைவீதியில் அவரைப் பார்க்க நேர்ந்தது. உச்சி வெயிலில் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தார். சிதம்பரத்தை அவர் பார்க்கவில்லை. சிதம்பரம்தான் பார்த்து அருகில் போய்ப் பேசினார்.

சிதம்பரத்தை அங்கே அப்போது சந்தித்ததில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் மிகவும் களைப்போடு இருந்தார். ஓட்டலுக்கு அழைத்துப் போய் காப்பி வாங்கித் தரலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் படு ஆசாரம். வெளியில் எங்கும் சாப்பிட மாட்டார். என்றாலும் தயக்கத்துடனே, ‘ரொம்பக் களைப்பா இருக்கீங்க போல்ருக்கு. ஒட்டலுக்குப் போயி ஒரு காப்பி சாப்புடலாமா? நீங்க வெளியில எங்கும் சாப்ட மாட்டீங்கண்ணு தெரியும்…….” என்று இழுத்தார்.

அவரது சோர்ந்த முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது. “ஆமப்பா! ஏதாவது சாப்டாத் தேவலை தான். வெளியிலே சாப்டறதில்ல தான். ஆனா காலம் மாறச்சே நாமும் மாத்திக்க வேண்டியதுதான். பிராமணாள் ஓட்டல்லியும் அனாச்சாரம்தான்.
என்ன செய்ய? அதப் பாத்தா முடியாதுதான்” என்று சொல்லிவிட்டு உடன் வந்தார்.

சிதம்பரம் அருகில் இருந்த ஓட்டலில் காப்பி வாங்கித் தந்தார். ஆர அமர அதை ரசித்துப் பருகிய பிறகு அவர் முகத்தில் ஒரு தென்பு ஏற்பட்டது. “ரொம்பத் திருப்தியா இருக்கு சிதம்பரம். அதுல பாரு – நம்மக் காசப் போட்டு வாங்கிச்
சாப்டா பணம் செலவழிக்க வேண்டி இருக்கேன்னு சாப்ட திருப்தியே இருக்காது. ஆனா இப்படி யாராவது வாங்கிக் கொடுத்து சாப்டா ஏற்படுற திருப்தி இருக்கே அது வேறமாதிரி தான்” என்றார். அதைச் சொல்ல அவர் கூச்சமோ கௌரவமோ பார்க்க வில்லை. மிகவும் யதார்த்தமான வெளிப்பாடு அது.

அவரைப் பற்றிய சிந்தனையினூடே மந்தையின் தெற்குமுனையில் இருந்த அவரது வீட்டைப் பார்க்க விரும்பினார். தெற்குத் தெருவின் தொடக்கத்தில் அது இருந்தது.

“அய்யரு வாழ்ந்த இடத்தப் பாக்கலாம்” என்று மருதுவை அழைத்தபடி நடந்தார்.

“அதுல மட்டும் என்னா பாக்கப் போறீங்க? அதுவும் இப்ப பாழ்மனைதான். அவரோட வாரிசெல்லாம் பொழப்புத் தேடி நாலா பக்கமும் போய்ட்டாங்க. ஆனா அவரு வாழ்ந்ததவிட இப்ப ரொம்ப சௌரியமா இருக்காங்க. அவரோட பேரப் புள்ளைங்க இப்ப புரோகிதத்துக்கு மோட்டார் சைகிள்ல தான் போறாங்க. இந்த ஊர விட்டுப் போனவங்க எல்லாம் புண்ணியவான்கள்தான். நாங்கதான் முன் தலமொறயிலெ பாவம் பண்ணுனவங்க சிலபேரு இன்னும் இங்கியே தடுமாறிக்கிட்டிருக்கிறோம்” என்று மருது மிகவும் நொந்து பேசினான். அந்த அளவு அவனுக்கு அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் கசப்பை உண்டாக்கி இருந்தன.

அய்யர் குடியிருந்தது கூரை வீடுதான். சிமிட்டித்தளம் போட்ட தரை. பத்துப் பேர் படுக்க வசதியாய் மழமழ வென்று நீண்ட தெருத்திண்ணை. தோட்டத்தில் கிணறு. சிதம்பரம் வீட்டைத் தவிர அவர் வீட்டில்தான் கிணறு இருந்தது. கிணற்றின் அவசியத்தை உணர்ந்து அவரே இளமையில் வெட்டிக் கொண்டது அது. வீட்டின் பின்னாலேயே மான்ய நிலம். அவர் இருந்தவரை நிறைவாகவே வாழ்ந்தார். இப்போது அவரது நினைவாக எதுவுமில்லை. அவரைப் பற்றிய நினைவு மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த ஏமாற்றம் நெஞ்சில் கனக்க அவர் வீட்டுக்கு இடப்புறம் இருந்த பெரிய ஏரியின் தெற்குத் தெரு படித்துறையை நாடி நடந்தார் சிதம்பரம்.

சின்ன வயதில் மூச்சுப் பிடித்து ஏறிய ஏரியின் உயரமான கரை இப்போது கரைந்து தெரு மட்டத்துக்கு சற்றே உயர்ந்து தெரிந்தது. படிகள் கற்களை இழந்து சரிவான மேடாக ஆகி இருந்தது. கரைமீது ஏறிப் பார்த்தார். அடடா! சின்ன சமுத்திரம் போல அலை அடித்துப் பரந்து இருந்த பெரிய ஏரி இப்போது சின்னக் குட்டை போலச் சிறுத்திருந்தது. கண்ணுக்கெட்டியவரை வேலிக்காத்தான் முட்செடிகள். அதைத் தாண்டி ஏரியைப் பலர் ஆக்கிரமித்து பயிர்செய்திருப்பது தெரிந்தது. ஏரியின் மறுகரையில் ஊருக்கு பெருத்த வருவாய் ஈட்டித் தந்த விழல் கூட்டம் அந்தப் பகுதியிலும் மொண்ணையாய் இருந்தது.

என்ன இப்படி எதைப் பார்த்தாலும் தேய்பிறையாய்த் தெரிகிறதே தவிர வளர்பிறையாய் எதுவும் காணப்படவில்லையே என்று சிதம்பரத்துக்கு மனதை வருத்தியது. இனி பார்க்க எதுவும் இல்லாத நிலையில் ஊர் திரும்பிவிட முடிவு செய்தார். மருதுவுக்குத் அவரது பிரிவு வருத்துவதாக இருந்தது.

அப்புவின் வீட்டுக்குப்போய் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பு முன் அவர் படித்த ‘ஐயா’வின் பள்ளி இருந்த இடத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டார். பள்ளி இப்போது பழையபடி பொதுச் சாவடியாகி பஞ்சாயத்துக் கட்டடமாக மாறி இருந்தது. பள்ளியின் மேலாக உயர்ந்து பரந்து கவிழ்ந்திருந்த – ஐயா காலத்து ஆலமரம் இருந்த சுவடே இல்லாதிருந்தது. சிதம்பரத்தின் பால்ய நினைவுகளை
அதிகமும் ஆக்ரமித்து அய்யாவின் ஆளுமையை நினைவூட்டிக் கொண்டிருந்த அந்தத் தொன்மையான ஆலமரம் இன்றி, விதவைக் கோலத்தில் காட்சி அளித்த அந்த இடத்தைப் பார்க்கச் சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூட ‘ஐயா’ இறந்தபோது, மயானத்தில் ஆற்றங்கரையில் நின்று நினத்துப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது. மூன்று தலை முறைக்கு இவ்வூரில் கல்விக் கண் திறந்து வைத்தவரை நன்றி மறந்து நடுத்தெருவில் நாதியற்று சாகவிட்ட ஊராரின் போக்கை ஆற்றின் போக்கோடு ஒப்பிட்டுப் பார்த்ததை நினைத்துக்கொண்டார். ‘மனிதர்கள் வருவார்கள் மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் என்றும் இப்படியே போய்க் கொண்டிருப்பேன்’ என்று ஓடை ஒன்று சொல்வதாக உள்ள ஆங்கிலக் கவிதையை ஒட்டி, ‘சமுதாயம் என்கிற நதியும் அதன் கரையில் வரும் எந்த மனிதரையும் பற்றிக் கவலைப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது’ என்று சிந்தித்ததை இப்போது எண்ணிப் பார்த்தார்.

‘காலநதியும் அப்படித்தான்; அது மாறாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. அதன் கரையில் வரும் மனிதர்களும் இடங்களும் மாற்றத்துக்கு உள்ளானாலும் அக்காலக் கட்டத்தின் நினைவுகள் மாற்றம் பெறாது என்றும் நிலைத்திருக்கும்’ என்று சிதம்பரத்தின் சிந்தனை ஓடியது.

(நிறைவுற்றது)


Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 25

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

வே.சபாநாயகம்


நாராயணசாமி பிள்ளையின் வீடு சிதம்பரம் வீட்டுக்கு எதிர்ச் சாரியில் இரண்டு வீடு தள்ளி இருந்தது. அவரது சகோதரர்கள் இருவருடன் பாகப்பிரிவினை நடந்த போது பூர்வீக கல்வீடு அவரது அண்ணனுக்கும் தம்பிக்கும் சமபாதியாக ஒதுக்கப்பட்டு, இவருக்கு தெரு முனையில் மணியப் பிள்ளை வீட்டுக்கு எதிரில் இருந்த காலிமனை ஒதுக்கப்பட்டது. அதில் அவர் வீடு கட்டிக் கொண்டார்.

இப்போது அவர் வாழ்ந்த வீடு கூரை இல்லாமல் சுவர்கள் மட்டும் அரை குறையாய் இடிந்து நின்றன.

“என்னப்பா ஆச்சு இந்த வீட்டுக்கு?” என்று கேட்டார் சிதம்பரம்.

“அவுரு இருக்கும்போதே வித்துட்டாரே! வாங்குனவன் ரொம்ப வருஷமா இப்பிடிப் போட்டு வச்சிருக்கான். அவரு பசங்க மூணு பேரும் தெக்குத் தெருவுலே அவரோட அத்தை எழுதிக் குடுத்த மனையிலே கூர வீடு கட்டிக்கிட்டு அம்மாவோட இருக்காங்க” என்றான் மருது.

நாராயணசாமி பிள்ளை சிறு பிள்ளையிலிருந்தே துடுக்கான பேச்சும் குறும்புத் தனங்களும் மிகுந்தவர். எதிலும் தலையிட்டு கேள்வி கேட்கும் எதிர் சிந்தனைப் போக்கு மிக்கவர். எந்த ஊர்வம்பு தும்புகளிலும் முன்னிருப்பவர். வயது, சாதி, அந்தஸ்து, ஆண் – பெண் என்று எந்த பேதமும் இல்லாமல் யாரையும், எங்கும் கேலி பேசுவதும், வம்புக்கு இழுப்பதும் அவருக்குத் தீராத விளையாட்டு. கள்ளக் காதலர் களுக்கு அவர் சிம்மசொப்பனம். இளம் காதலர்கள் மட்டுமின்றி, குடியும் குடித்தனமுமாய் இருப்பவர்களின் அந்தரங்கங்களும் அவருக்கு அத்துபடி.

ஊரில் முதலில் தென்படுகிற அப்பு வீட்டு அகன்ற திரை போன்ற பெருஞ்சுவரில் எழுதப்படும் அக்கப்போர்களில் அதிகமும் அவரது கோஷ்டியின் கைங்கரியம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். கோவில் நிர்வாகி, பெருமாள் கோவில் பட்டர் மற்றும் தர்மகர்த்தாக்களின் ஊழலும் அவரது கண்டனத்துக்குத் தப்ப வில்லை. அவரை யாரும் கண்டிக்கவோ புத்தி சொல்லவோ முடியாமல் ‘கைம்பெண் வளர்த்த பிள்ளை அப்படித்தான் இருக்கும்’ என்று அவர் அம்மாவுக்கு வசவு வாங்கித் தந்து கொண்டிருந்தார். திருமணம் ஆகி, பிள்ளை குட்டி பிறந்த பிறகும் அவரது விளையாட்டுத்தனமும் மணியப்பிள்ளை போன்ற அப்பாவிகளை வம்புக்கு இழுப்பதும் தொடரவே செய்தன.

‘கண்ணாடிப் பிள்ளை’ என்பது போல காரணப் பெயராக இல்லாமல் என்ன காரணத்தாலோ ‘காத்துப் பிள்ளை’ என்று அவருக்கு ஒரு மாற்றுப் பெயரும் ஊரில் வழங்கி வந்தது. சுப்பிரமணிய பிள்ளைக்கு மணியப் பிள்ளை என்று பெயர் வழங்கியது மாதிரி கூட புரிந்து கொள்ள முடியாத பெயர்.

உள்ளூர்வாசிகள் மட்டுமல்ல ஊருக்குத் தற்காலிகமாய்க் குடி வந்தவர்களையும், விருந்தாளியாக வந்திருப்பவர்களையும் கூட அவர் விட்டு வைப்பதில்லை. அப்படி அவரிடம் சிக்கி நிம்மதி இழந்தவர்களில் ஒருவன் கொத்தன் ராஜவேலு.

அவன் பத்து மைலுக்கு அப்பால் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு உள்ளூரில் நேர்ந்த ஒரு சிக்கலால் அப்பா அம்மாவுடன் தற்காலிகமாக இந்த ஊரைப் புகலிடமாக்கிக் கொள்ளக் குடி வந்தவன்.

ஊரில் யாருக்கும் அவன் வந்திருப்பது பற்றியோ அதற்கான காரணம் பற்றியோ அக்கரையோ ஆர்வமோ எழவில்லை. ஆனால் காத்துப் பிள்ளையால் அப்படி இருந்து விட முடியவில்லை. ஊர்த் தலைவரோ, மணியமோ கேட்க வேண்டிய விசாரிப்புகளை
அவர் மேற்கொண்டார். சொந்த ஊரில் இருக்கப் பயந்து தலைமறைவாய் இருக்க வந்தவன் உண்மையான காரணத்தைச் சொல்லுவானோ? பிழைப்புத் தேடி வந்திருப்ப தாக அவன் சொன்னதை அவர் நம்பவில்லை. சொல்லும்போது ஏற்பட்ட அவனது முகமாற்றமும் முன்னுக்குப் பின் முரணான பேச்சும் அவரைச் சந்தேகிக்க வைத்தன. அவனது உண்மையான ஊரைக் கூட அவரால் அவனிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. அவரது வம்புப்பேச்சுக்குப் பயந்து அவன் அவர் கண்களில் படாமல்
நடமாடினான். அது அவருக்கு ஒரு கௌரவப் பிரச்சினை போல ஆனது.

சிதம்பரம் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் கோடை விடுமுறையில் வந்திருந்தபோது தான் ராஜவேலு என்கிற அவனைப் பற்றிக் கேள்விப் பட்டார். காத்துப் பிள்ளைதான் அவரிடம் அவனைப் பற்றிய சந்தேகத்தைச் சொல்லி,
“நீயே கேளு சிதம்பரம். என்ன மெரட்டினாலும் அவங்கிட்ட இருந்து உண்மைய வரவழைக்க முடியல” என்றார்.

சிதம்பரத்துக்கு அது நியாயமற்ற தலையீடாகப் பட்டது. ஆனாலும், காத்துப் பிள்ளையின் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் காலை ஆற்றுக்குக் குளிக்கப் போகையில் ராஜவேலுவை அழைத்துப்போய் தனிமையில் பரிவுடன் விசாரித்தார். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு அவன், சிதம்பரத்திடம் ஒரு பாதுகாப்பை உணர்ந்தவனாகத் தன் கதையைச் சொன்னான்.

அவனது கிராமத்தில் நடந்து விட்ட ஒரு பெண்ணின் கொலை சம்பந்தமாக அவன் சிக்கலில் இருந்தான். அவனும் இன்னும் மூன்று விடலைப் பையன்களுமாய் கூட்டாக திருமணமாகாத ஒரு இளம் பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்
திருக்கிறார்கள். அந்தப் பெண்ணுடைய தகப்பன் மிகவும் மானஸ்தன். முன்கோபமும் முரட்டுத்தனமும் இயல்பாகவே அமைந்த இனத்தின் முக்கியப் புள்ளி. தன் பெண்ணின் தகாத உறவு அவனுக்கு வெகு நாட்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் அதனால் கர்ப்பமுற்றது தெரிந்தபோது அவனுக்கு ஆவேசமாகி விட்டது. தன் மானத் தையும் குடும்ப கௌரவத்தையும் குலைத்த மகளை, கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் பாட்டி வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லி பக்கத்து நகரத்தை ஒட்டி இருந்த ஒரு அடர்ந்த காட்டில் வீச்சரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு நேராகப் போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்து விட்டான்.

போலீஸ் அந்த ஊருக்குப் போய் விசாரித்ததில் ராஜவேலுவும் அவனது கூட்டாளிகளும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது அறிந்து அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் போட்டு விசாரித்தார்கள். அடி, உதை என்று எல்லாவித போலீஸ் மரியாதைகளுக்குப் பிறகு பையன்கள் அந்தப் பெண்ணோடு தங்களுக்கு இருந்த கள்ள உறவை ஒப்புக் கொண்டார்கள். கொலை செய்தது அவர்கள் இல்லை என்பதாலும் கொலை செய்த தகப்பனே குற்றத்தை ஒத்துக் கொண்டதாலும் அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் உள்ளூரில் அதற்கு மேலும் இருக்கப் பயந்து கொண்டு நாலு பையன்களும் திசைக் கொருவராகப் பக்கத்து ஊர்களில் புகலிடம் தேடிப்போனபோது ராஜவேலு இந்த ஊருக்கு வந்து விட்டிருந்தான்.

ராஜவேலு தன் சோகமான கதையைச் சொல்லிவிட்டு சிதம்பரத்திடம் மேற்கொண்டு என்ன ஆகுமோ என்ற பயத்தையும், காத்துப் பிள்ளையிடம் சொல்லி மேற்கொண்டு அவனது கதையைத் துருவித் தொந்தரவு தராதிருக்கச் சொல்லும் படியும் கெஞ்சினான். பயத்தில் அவன் கிலிபிடித்தவன் போல் மிரண்டிருப்பது தெரிந்தது. அவனை நிம்மதியாய் வந்த இடத்திலும் வாழவிடாமல் காத்துப் பிள்ளை செய்வது அவனுக்குப் ‘புலியிடமிருந்து தப்பி முதலை வாய்க்குள் விழுந்தமாதிரி’ ஆகி
விட்டது. சிதம்பரத்துக்குப் பாவமாக இருந்தது.

மறுநாள் காத்துப் பிள்ளையிடம் பக்குவமாய் ராஜவேலு விஷயத்தைச் சொல்ல இருந்தபோது அவரே சிதம்பரத்தைத் தேடி வந்தார். அவரது கையில் கைக்கு அடக்கமான ஒரு சின்னப் புத்தகம் இருந்தது. பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்திய பூரிப்பு அவரது முகத்தில் தெரிந்தது.

“இதப் பாத்தியா சிதம்பரம்! இந்தப் பய சொல்லாட்டி நா கண்டுபிடிக்க மாட்டனா? டவுன் சந்தையிலே இவங் கதைய டேப் அடிச்சுப் பாடுறான். இதுதான் அந்தக் கொலைச் சிந்து!” என்று அந்தப் பிரசுரத்தை சிதம்பரத்திடம் நீட்டினார். அதில் ராஜவேல் சொன்ன கதை முழுதும் பாட்டாக எழுதப் பட்டிருந்தது.

அப்போதெல்லாம் பரபரப்பான கொலை கொள்ளைச் செய்திகள் சூடு தணியு முன்பாக, இதுபோல சிந்து பாடி சிறு பிரசுரமாக அச்சிட்டு ஒர் அணா, ரெண்டணா விலையில் சந்தை போன்ற மக்கள் கூடும் இடங்களில் டேப் அடித்துப் பாடி விற்கப்படும்.

“ராஜவேலு எங்கிட்ட எல்லாத்தியும் சொல்லிட்டான். பாவம்! அவன விட்டு ருங்க. நீங்க முரட்டுத்தனமா கேட்டதுலே பயந்துட்டான்” என்றார் சிதம்பரம்.

“அதெப்படி விட்டுடுறது? எங்கிட்டியே மறைச்சா உட்றுவனா? இப்ப அவங்கிட்ட இதக் காட்டி ஒரு உலுக்கு உலுக்கிட்டுதான் வரேன்” என்றார் வெற்றிப் பெருமிதத்துடன். அதோடு “ஜெயில்ல இருக்குற அப்பன்காரன் ஜாமீன்ல வெளீல வந்து உங்க நாலு பேரையு தீர்த்துக் கட்டப் போகிறானாம்” னும் செல்லி வச்சேன்” என்று கெக்கலி கொட்டினார். பாவம், ராஜவேல் அதைக் கேட்டு குற்றுயிரும் கொலை உயிருமாய் ஆகி இருப்பான் என்று மனம் கசிந்தார் சிதம்பரம்.

“போவுது இத்தோட விட்டுடுங்க! ஓடுறவன விரட்டுறது வீரமில்லே!” என்று காத்துப் பிள்ளையைத் தடுத்து ராஜவேலுவை ஆற்றுப் படுத்தியது நினவுக்கு வந்தது. அதை நினைவூட்டி இப்போது மருதுவிடம் சொன்ன போது அவன் சொன்னான்: “ஆயிரம் அடாவடித்தனம் இருந்தாலும் அவுரு தன்னோடத் தம்பியை உங்கள மாதிரியே காலேஜுல படிக்க வைக்கணும்னு ஆசப்பட்டு நீங்க படிச்ச காலேஜுலியே படிக்க வச்சாரே அதுக்காகப் பாராட்டணும்”

“உண்மைதான். ஹைஸ்கூல் வரைக்கும் கடன் வாங்கியோ எப்பிடியோ படிக்க வச்சார். அப்புறமா தன்னாலே முடியாமெ சொத்து வருதுண்ணு காலேஜுக்குப் போறதுக்கு முன்னாலே ஒறவுலே கல்யாணமும் பண்ணி வச்சுட்டாரு. நாங்கள்லாம் ஹாஸ்டல்லே தங்கிப் படிச்சப்போ அவரோட தம்பி டவுன்ல ஒரு சின்னப் போர்ஷன்ல வாடகைக்கி புது மனைவியோட தங்கிக்கிட்டு படிச்சார். அதுவும் இண்டருக்கு மேலே முடியல. அப்றம் என்ன ஆச்சுன்னு தெரியல!” என்றார் சிதம்பரம்.

“அதுக்கு மேல காத்துப் பிள்ளைக்கு சக்தி இல்லே. அவுரு தம்பி டவுன்ல டைப் அடிக்கக் கத்துத் தர ஒரு எடத்தை வாடகைக்குப் பிடிச்சி, நாலஞ்சு மிஷின வாங்கிப் போட்டு ஆரம்பிச்சாரு. அதுல தான் வந்துது வினையே!” என்று சற்றே நிறுத்தினான் மருது.

அப்பொழுது சிதம்பரம் வேலைக்காக வெகு தொலைவுக்குப் போய்விட்டதால் அதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க வில்லை.

“ஏன், என்ன ஆச்சு?” என்றார் ஆர்வமாக.

“டைப் சொல்லித் தர ஒரு பெண்ணை உதவிக்கு வச்சார். அவ அவரை மயக்கி ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அதோட விடுல. அவர் பங்குக்கு இருந்த வீடு நெலம் எல்லாத்தையும் வித்துக் காசாக்கி அவரையும் வற்புறுத்தி
அழச்சிக்கிட்டு தன்னோட சொந்த ஊரான கோயம்புத்துருக்குக் கொண்டு போய்ட்டா. ஊரை எல்லாம் நையாண்டி பண்ணிய காத்துப் பிள்ளைக்கு இப்ப ஊரே தன்னைப் பாத்து நையாண்டி பண்ற மாதிரி ஆயிடுச்சேன்னு மனசு ஒடஞ்சு போய்ட்டுது. தம்பிய வளத்து ஆளாக்கப் பாடு பட்டவருக்குத் தன் பிள்ளைகள அப்படிச் செய்ய முடியாம போயிடுச்சி. அவுரு தம்பியும் சீக்கிரமே ரெண்டாவது
பொண்டாட்டியோட கொடுமத் தாங்காம பூச்சி மருந்து குடிச்சி செத்துப் போய்ட்டார்னு சேதி வந்துது. காத்துப்பிள்ளை அப்ப படுத்தவர்தான். அப்றம் எழுந்திருக்கவே இல்லே. மொதல் சம்சாரமும் கொழந்தையும் பொறந்த ஊட்டோடப் போய்ட்டாங்க. நல்லா வாழ்ந்த குடும்பம் இப்படிச் செதறிப் போச்சு” என்று இரக்கத்தோடு சொன்னான் மருது.

சிதம்பரத்துக்குக் கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தது. “வா, போகலாம்” என்றபடி நடந்தார்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 24

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

வே.சபாநாயகம்


கீழ மந்தையிலிருந்து கிளம்பி நடுத்தெருவை நோக்கி நடந்தார்கள். சிதம்பரம் வாழ்ந்த வீடு அந்தத் தெருவில்தான் நடுப் பகுதியில் இருந்தது. தெருமுனையில் இருந்த முதல் வீட்டைப் பார்த்ததும் சிதம்பரத்துக்கு அந்த வீட்டின் மணியப் பிள்ளை
ஞாபகத்துக்கு வந்தது.

“மணியப் பிள்ளை இருக்காரா மருது?” என்று கேட்டார்.

“இந்தத் தெருவின் அரவமே அவர் போனதுக்கப்றம் போச்சு!” என்றான் மருது.

“என்னப்பா சொல்றே? மணியப் பிள்ளை இல்லியா?” என்று சற்றே பதற்றத்து டன் கேட்டார். “வயதுகூட அதிகம் இருக்காதே! என்னைவிட ரெண்டு மூணு வருஷம்தானே பெரியவர்?”

“சாகிறதுக்கு வயசு ஒரு காரணமா? இது அவுரு தானே தேடிக்கிட்ட முடிவு. மணியப் பிள்ளை தற்கொல பண்ணிக்கிட்டாரு!” என்றான் மருது சாவதானமாக.

“அய்யய்ய! எப்பிடிப்பா – ஏன்?” என்று சிதம்பரம் பதறினார்.

“எதோ வீட்லே தகராறு! வருமானமுமில்லே. வறுமைதான் முக்கியமான காரண மாயிருக்கணும். அவருதான் ரோஷக்கார மனுஷர்னு உங்குளுக்குத் தெரியுமே! ‘குடும்பத்த வச்சிக் காப்பாத்த வக்கில்லாத ஆளு’ ன்னு அவரோட புள்ளைகளும்
பொண்டாட்டியும் நினைச்சது அவருக்குத் தாங்க முடியாமப் போச்சுன்னு பேசிக்கிட்
டாங்க. ”

“அப்டியெல்லாம் மனசு தளர்ரவரில்லியே! மாட்டுத் தரகெல்லாம் பண்ணிக்கிட்டிருந்தாரே!”

“அதுலே ஒண்ணும் பெருசா வரல்லே. குடும்பமும் பெரிசாயிடுச்சு. ஒருத்தர் கிட்ட வேலைக்குப் போறதுக்கும் வரட்டுக் கௌரவம்…. விதி முடிஞ்சுட்டா எதாவது ஒரு எமப்பழி” என்றான் மருது வேதாந்தமாக.

சிதம்பரத்துக்கு மனது கனத்தது. எவ்வளவு வெகுளியான நல்ல மனிதர்! தான் அதிகம் படிக்காததால் சிதம்பரம் படித்திருப்பது பற்றி அவரிடம் ஒரு மரியாதை. விடு முறையில் அவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தால் போதும், தேடி ஓடி வந்துவிடுவார்.

ஆள் வாட்டசாட்டமாக, சிவந்த மேனியுடன் நல்ல உடல் கட்டுடன் இருப்பார். தலை முழுதுமாக வழுக்கை விழுந்து பக்க வாட்டில் இருபுறமும் கொஞ்சமாக முடி இருக்கும். நீளமான கிருதா; இடுப்பில் ஜிப் வைத்த பச்சை சிங்கப்பூர் பெல்ட்; நீல வண்ணத்தில் கட்டம் போட்ட கைலியும் கலர் முண்டா பனியனுமாய், பார்த்தால் சாயபு என்றே நினைக்கத் தோன்றும். வலது முண்டாவில் சிவப்புக் கயிற்றில் கோர்த்த வெள்ளித் தாயத்து; எப்போதும் ஐந்தாறு நாள் தாடி – அரிசியும் உளுந்து கலந்த
மாதிரி. வெற்றிலைக் காவியேறிய பற்களும், சதா மெல்லப்படும் வெற்றிலைப் பாக்கால் சிவந்த வாயுமாக எப்போதும் எங்கேயாவது போய்க் கொண்டும் வந்து கொண்டும்தான் இருப்பார்.

ஊரில் எதற்கும் நியாயம் கேட்கிற முதல் ஆள் அவர்தான். பாரபட்சமாகப் பெரிய மனிதர்கள் யார் நடந்து கொண்டாலும் துணிச்சலாகப் பொது இடத்தில் வைத்தே கேட்டு அவர்களது அதிருப்தியைச் சம்பாதித்திருப்பவர். அவரிடம் எல்லோருக்கும் எப்பொழுதும் ஒருவித தார்மீகப் பயம் இருக்கும். உரிமையை விட்டுக் கொடுத்து யாருடைய தாட்சண்யத்தையும் யாசித்து நிற்பவரில்லை. நமக்கு ஏன் என்று எதையும் விட்டு விடாதவர். எதற்கும் மறுப்பும் சமயத்தில் விதண்டாவாதமும் பண்ணுகிற சுபாவம். அநேகமாக எதனோடும் யாரோடும் ஒத்துப் போகாத மனப் போக்கு.

சிதம்பரத்தின் அண்ணன் உருவாக்கிய கைப்பந்து கழகத்தில் உறுப்பினர் ஆக லேசில் அவரைச் சம்மதிக்க வைக்க முடியவில்லை. கடைசியில் அண்ணனின் மென்மையான அணுகுமுறையால் தான் சேர்க்க முடிந்தது. அண்ணன் வேலைக்குப் போன பிறகு கைப்பந்துக் கழகம் செயலற்றுப் போனதும், மற்றவர்கள்மீது நம்பிக்கை இழந்தவராய், பந்தாடிய வலையிலும் பந்திலும் தன் பங்குக்கு உரியதைத் தந்தாக வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்தது நினைவுக்கு வருகிறது. பிறகு சிதம்பரம் தலையிட்டு, அதெல்லாம் சாத்யமில்லை விட்டு விடுங்கள் என்று சமாதானப் படுத்திய
பிறகுதான் ஓய்ந்தார்.

இப்படி சில முரட்டுத்தனத்தினால் அவரது வெள்ளை உள்ளமும் நேர்மையான போக்கும் எடுபடாமல், பலருக்கு எரிச்சலையும் அவரைச் சீண்டி வேடிக்கை பார்க்கிற எண்ணத்தையும் உருவாக்கி இருந்தது. அதில் முக்கியமானவர் அவரது எதிர் வீட்டு நாராயணசாமி பிள்ளை.

நாராயணசாமி பிள்ளையும் விதண்டாவாதப் பேர்வழிதான். மணியப் பிள்ளையின் வயதை ஒத்தவர். பிள்ளைப் பிராயத்திலிருந்தே மணியப் பிள்ளையைச் சீண்டி ரசிப்பதில் ஒரு திருப்தி. எதிர்வீடு வேறே. தினமும் பார்த்துக் கொண்டாக வேண்டிய சூழ்நிலை. மணியப் பிள்ளை எது செய்தாலும், தேவையே இல்லாமல் நக்கலான விமர்சனம் அவரிடமிருந்து கிளம்பி மணியப் பிள்ளையை எரிச்சலூட்டும். நேரிடை விமர்சனமாக இல்லாமல் ஜாடைப் பேச்சாக இருப்பதால் நேரிட்டு அவரிடம் சண்டைக்குப் போக முடியாத நிலையில் மணியப் பிள்ளை உரத்துத் திட்டியபடி தெருவில் நடப்பார். சிதம்பரம் ஊரில் இருந்தால் அவரிடம் போய்ப் புகார் செய்வார். ஊரில் தன்னிடம் அனுதாபம் காட்டக் கூடியவர் என்பதால் சிதம்பரத்திடம்தான் தனது குறைகளையும் புகார்களையும் சொல்லுவார்.

மணியப்பிள்ளை தன் தரகுத் தொழில் காரணமாய் பகல் முழுதும் வெயிலில் நிற்க வேண்டி இருந்ததால், வெகுநாட்களாய்ச் சேமித்து ஒரு கருப்பு குளிர் கண்ணாடியை வாங்கி அணிந்து கொண்டார். அன்று மாலை இருட்டும் நேரத்தில் வீடு திரும்பியபோது கண்ணாடியைக் கழற்றாமலே தெருவில் வந்திருக்கிறார். தன் வீட்டில் இருந்தபடி அதைப் பார்த்த நாராயணசாமி பிள்ளை யாரிடமோ பேசுகிற மாதிரி எதிர்ப்பக்கம் திரும்பிக் கொண்டு “என்னுமோ சொல்லுவாங்களே ‘எதுக்கோ வாழ்வு வந்தா அர்த்தராத்திரியிலே கொட பிடிக்கும்னு’ அதும் மாதிரி இருக்கு” என்று நக்கல் செய்ததுடன், “எங்கியாவது சந்தையிலே அஞ்சு பத்துக்குக் கெடைச்சிருக்கும்” என்று வேறு சொல்லவே மணியப்பிள்ளைக்கு பயங்கரமான கோபம் வந்து விட்டது. உடனே திரும்பி மூன்று வீடுகள் தள்ளி இருந்த சிதம்பரத்திடம் வந்தார்.

கருப்புக் கண்ணாடியைக் கழற்றி சிதம்பரத்திடம் நீட்டி. ” இதப் பாரு சிதம்பரம், இது என்னா வெலை பொறும்?” என்று கேட்டார். சிதம்பரம் வாங்கிப் பார்த்து “நல்ல ஒசத்திக் கண்ணாடி மாதிரி இருக்கே! என்னா அம்பது ரூபா இருக்குமா?” என்றார். மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்து விட்டது. உண்மையில அவர் கொடுத்த விலை ஐம்பதுதான். “என்ன இருந்தாலும் பெரிய மனுஷங்க, படிச்சவங்கண்ணா அது தனிதான். உங்குளுக்கு இதோட மதிப்பும் வெலையும் தெரியுது. ஆனா செல நட்டா முட்டிக்கு, படிக்காத முண்டங்களுக்கு – குண்டு சட்டிக் குள்ள குதிர ஓட்டற ஜன்மத்துக்குத் தெரியலியே! என்னுமோ சொல்லுவாங்களே ‘எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனை’ன்னு அதும் மாதிரி பேசுதுங்க. இது அஞ்சோ பத்தோதான் இருக்குமாம். உச்சந்தல எரிய வெயில்ல நிண்ணு சம்பாரிச்சி, ஆசப்பட்ட பொருள வாங்கிகிட்டு வந்தா சில வக்கத்ததுங்களுக்கு வயிறு எரியுது” என்று தெருவே கேட்குமாறு உரத்துச் சத்தமிட்டார். சிதம்பரம் அவரை சமாதானப் படுத்தி ‘யார் அப்படிச் சொன்னது என்ன விவரம்’ என்று கேட்டதும் “ஆரு சொல்லு வாங்க? எல்லாம் அந்த ஆம்பளக் காந்தாரிதான். நான் நல்லதா ஒண்ண அனுபவிச்சா அவனுக்குப் பொறுக்காதே!” என்று அழாத குறையாய் சிதம்பரத்த்¢டம் நடந்ததைச் சொன்னார். சிதம்பரம் அவரை ஆசுவாசப் படுத்தி ஆறுதல் கூறி அனுப்பினார்.

மணியப் பிள்ளையை இன்னொரு விதத்திலும் நாராயணசாமி பிள்ளை சீண்டுவார். ஊரில் காமுட்டித் திருவிழா நடக்கும் போது முதல் நாள் காப்புக் கட்டும்போது யாராவது ஒருவரைப் பரமசிவனாகத் தேர்வு செய்வார்கள். அவர்தான் ஆற்றிலிருந்து கலசத்தில் நீர் கொண்டு வர வேண்டும். அப்படி ஒரு வருஷம் மணியப் பிள்ளை பரம சிவனாகத் தேர்வாகி காமதகனம் முடியும் வரை சுத்த பத்தத்துடன் இருக்க வேண்டி வந்தது. தினமும் இரவில் காமதகன கதை படிக்கப்படும். முறையாகப் பாடத் தெரிந்த வர்கள் ஊரில் இரண்டு மூன்று பேர் தான். நீட்டி முழக்கி ரசித்து ஒருவித லயத்தோடு பாடுவார்கள். அதற்கேற்றபடி சேரியாட்களின் பறைக் கொட்டு முழங்கும். அது தினமும் ஊரார் தவற விடாத பரவசமான நிகழ்ச்சி.

பாடலில் பரமசிவனுக்குத் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, அங்கு மூலவராக அமர்ந்திருக்கும் மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்துவிடும். திடீரென்று வலிப்பு வந்தவர் மாதிரி உடம்பை முறுக்கி குலுக்கி சாமியாட ஆரம்பித்து விடுவார்.
யாராவது பக்கத்தில் இருப்பவர்கள் வந்து தாங்கிப் பிடித்து அவர் கீழே விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளுவார்கள். இது காமதகனம் முடியும் வரை தொடரும். நாராயணசாமி பிள்ளைக்கு இது அதீத அலட்டலாகப் பட்டது.. ‘எல்லோரும் தன்னைப் பார்க்க வேண்டும், தாங்க வேண்டும் என்று அப்படிச் செய்கிறார், சாமியாவது பூதமாவது’ என்று கரித்துக் கொட்டுவார். வெளிப் படையாகச் சொல்ல முடியாமலும் அதை நிறுத்த முடியாமலும் முணுமுணுத்தபடி இருப்பார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வேறு யார் பரமசிவனாகத் தேர்வு செய்யப்பட்டாலும் காமதகனப் பாட்டு பாடும்போது தினமும் மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்துவிடும். அதிலும் இரவு ரதி மன்மதன் படம் ஊர்வலம் வரும்போது தெருவுக்குத் தெரு சாமியாட ஆரம்பித்து விடுவார் மணியப் பிள்ளை. இதற்கு ஒரு முடிவு கட்ட நாராயணசாமி பிள்ளை எண்ணினார். ஒருநாள் காமதகனப் பாடலில் உச்ச கட்டம். மன்மதன் ரதியிடம் அவளது தந்தையான பரமசிவனை இகழ்ந்து பேசும் கட்டம். ஊர்வலம் நடுத் தெருவில் வந்து கொண்டிருந்தது. மன்மதன் பக்கம் பாடுகிறவர், “அடீ! உங்கப்பன் பேயாண்டி……..” என்று நீட்டி முழக்கிப் பாடியபோது ஊர்வலக் கும்பலுக்கு நடுவே “ஆய்..”என்று ஆவேசக் குரல் எழும்ப எல்லோரும் அங்கே திரும்பிப் பார்த்தனர். மணியப் பிள்ளைதான் ஆவேசம் வந்தவராய் கண்ணை மூடி உடலை முறுக்கி, கைகளை உயர்த்தியபடி குதிக்க ஆரம்பித்திருந்தார். அவர் விழுந்து விடப் போகிறாரே என்று இரண்டு பேர் அருகே ஓடி அவரை இறுக்கிப் பிடித்தார்கள்.

அதைப் பார்த்துவிட்டு நாராயணசாமி பிள்ளை அங்கு சென்று, மணியப் பிள்ளையைப் பிடித்திருந்தவர்களை ஜாடை காட்டி விலகிப் போகும்படி செய்தார். இறுக்கிப் பிடிக்கப் பிடிக்க மணியப் பிள்ளைக்கு ஆவேசம் அதிகமாகி ஆட்டமும்
அதிகமாக ஆகும். இப்போதும் அப்படி ஆவேசமாய் அவர் குதித்த போது பிடித்தி ருந்தவர்கள் விலகிவிடவே தடாலென்று வெட்டிய மரம் போல கீழே விழ வேண்டியதாகி விட்டது. தலையிலும் உடம்பிலும் நன்றாக அடி பட்டு விட்டது. யாரும் போய்த் தூக்காதபடி நாராயணசாமி பிள்ளை பார்த்துக் கொண்டார். ஊர்வலம் நகர்ந்து விட்டது. அவரை அப்படியே விட்டுவிட்டு எல்லோரும் நகர்ந்து விட்டார்கள்.

“இனிமே ஜன்மத்துக்கும் அவன் சாமியாட மாட்டான் பாரு!” என்று நக்கலாகச் சிரித்தார் நாராயணசாமி பிள்ளை. அது உண்மையாயிற்று. அதற்குப் பிறகு மணியப் பிள்ளைக்கு ஒருபோதும் ஆவேசம் வரவில்லை.

அதை நினைத்தபோது சிதம்பரத்துக்கு மணியப் பிள்ளை மீது அனுதாபமும் நாராயணசாமி பிள்ளையின் குறும்பை எண்ணிச் சிரிப்பும் வந்தது.

“ஆனாலும் மணியப் பிள்ளை பாவம்’பா! எதிர்வீட்டு நாராயணசாமி பிள்ளை அவரை ரொம்பவும்தான் படுத்தி விட்டார்” என்றார் மருதுவிடம்.

‘அவுரு மட்டும் என்னா வாழ்ந்துட்டார்? அவுரு மணியப் பிள்ளையை மட்டுமா படுத்தி எடுத்தார்? ஊரையே படுத்தியவர் தானே?” என்றான் மருது.

பேசிக் கொண்டே மேலே நடந்தார்கள்.

( தொடரும் )


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

வே.சபாநாயகம்


இந்தக் கீழமந்தை சற்று விஸ்தாரமானது. திரௌபதை அம்மன் கோயில் அருகில் உள்ள கீழமந்தை, கரிநாளில் ஊர் இளைஞர்கள் சரணாக் கட்டுவதற்கும் ‘சடுகுடு’ விளையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டது. திரௌபதை அம்மன் கோயில் அரவான் களபலி, அக்னி எல்லாம் இந்த மந்தையில் தான் நடக்கும். அவையும் கூட பஞ்சாயத்து ஏற்பட்டு பொதுத் தண்ணீர்த் தொட்டியும், சிறுவர் பூங்காவும் அமைத்தபின் நடத்த இடமின்றி நின்றே போயின. அப்புறம் பூங்காவுக்கு எதிரில் உள்ள சின்னத்
திடலில் மட்டும் தெருக்கூத்தும் நாடகமும் நடைபெற்று வந்தன.

பூங்காவை நெருங்கியதும் அதன் அலங்கோலத்தைப் பார்த்து, “என்னப்பா இப்டி ஆயிட்டுது? சுத்துச் சுவரெல்லாம் இடிஞ்சு கெடக்கு, விளயாட்டுப் பொருள்கள் இருந்த சுவடே தெரியல!” என்றார் சிதம்பரம் மருதுவிடம்.

“இப்ப பஞ்சாயத்துத் தலைவர்னு யார் இருக்காங்க? பஞ்சாயத்து எலக்ஷன் நடந்து பத்து வருஷமாச்சே! நிர்வாக அதிகாரின்னு இருக்காங்க. அவங்க டவுன் லேர்ந்து எப்பவாச்சும் நெனச்சுக்கிட்டா வருவாங்க, வரி வசூல்பண்ண! மத்தபடி ஊர் வளர்ச்சிக்கு அக்கற காட்டுனாத்தானே?” என்றான் மருது.

“இங்க நாடகம் நடக்குமே, அதுவாவது நடக்குதா?”

“நடேச ஆசாரி இருந்த வரிக்கும் அன்னப் படையல ஒட்டி சிறுத்தொண்டர் நாடகம் நடந்துக்கிட்டிருந்துது. அவருக்கப்றம் எடுத்து நடத்த ஆளு இல்லே”

அந்த இடத்தில் முதன் முதல் அவர் பார்த்த தெருக்கூத்து ஞாபகத்துக்கு வந்தது. அப்போது சிதம்பரம் மிகவும் சிறு பிள்ளை. எதிர் வீட்டுத் தொந்தி மாமாதான் அந்த நாடகத்தை பார்க்க அவரைத் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வந்தார். மேடைக்கு எதிரே சாக்குகளும், பாய்களும் விரித்து ஆணும் பெண்ணும் பிள்ளைகளும் உட்கார்ந்திருக்க மாமா அவரை மேடைமீதே ஒரு ஒரத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார். நாடகம் ஆரம்பித்து கொஞ்சம் பார்த்தவர் – நடுநிசியைத் தாண்டிவிட்ட நேரம் – மாமா மடியிலேயே தூங்கி விட்டார்.

திடீலென மேடை அதிர, இடிபோல முழக்கமும் காட்டுக் கத்தலும் கேட்டுப் பதறி எழுந்த போது பார்த்த காட்சி பயத்தை எழுப்ப, ‘வீல்’ என அலறினார்.

மேடையில் ஒரே கூட்டமும் இரைச்சலுமாய் இருந்தது. கூட்டத்திலிருந்த எல்லோரும் கன்னங்கரேலென்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு, அடர்த்தியான மீசையும் கனத்த புருவமும் பெரிய குங்குமப் பொட்டும் கருப்பு உடையும், கையில் உலக்கையுமாய் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் பிரதானமாக, பெரிய கிரீடம் தரித்து கரிய முகத்தில் பெருத்த பயங்கர மீசையும் அடர்ந்த புருவமும் நெற்றியில் விபூதிப் பட்டையும் அதன் நடுவில் பெரிய குங்குமப் பொட்டும், கனத்த சரீரத்தில் கருப்புப் பட்டு உடையும் வலது கையில் பெரிய கதாயுதமும், இடது கையில் மாட்டின் தலைக்கயிறு போல கயிற்றுச் சுருளுமாய், பயங்கரமாய் விழித்தபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார். “எம தருமன் நானே! ஏழேழு லோகத்துக்கும் எம தருமன் நானே!’ என்று உரத்த குரலில் பாடினார். அவரைச் சுற்றி நின்றவர்கள் கைகளில் இருந்த உலக்கைகளை ‘டமால் டமால்’ என மேடைமீது இடித்துப் பயத்தை அதிகரித்தார்கள்.

பயந்து வீரிட்ட சிதம்பரத்தை மாமா அணைத்துப் பிடித்தபடி, “ஒண்ணும் பயப்படாதே! எம தர்பார் நடக்குது. அதோ, அவுருதான் எமன்” என்று மத்தியில் கிரீடத்துடன் நின்றிருந்த கனத்த ஆளைக் காட்டினார். “மத்தவங்க எல்லாம் எமகிங்கரன்க” என்றார்.

மேல மந்தையில் ஒருதடவை மாரியம்மன் கோயில் விழாவுக்காக ஒரு நாடகம் நடந்தது. அது இதுபோல மேடையில் நடக்கவில்லை. அது வடக்கத்தி நாடகமாம். அவர்கள் தரையில் பார்வையாளர்களின் கண்மட்டத்தில்தான் ஆடுவார்களாம். தொந்தி மாமா சொல்லி இருக்கிறார். அதுவானால் இது போல உலக்கைகளை டமால் டமால் என்று பலகையில் இடிக்க முடியாது.

அப்போது பக்கத்துக் கிராமங்களில் அடிக்கடி நாடகமும் தெருக்கூத்தும் நடக்கும். தொந்தி மாமா சிதம்பரத்தை தோளில் தூக்கிக் கொண்டு அங்கெல்லாம் அழைத்துப் போய்க் காட்டி இருக்கிறார். அப்போது பார்த்த நாடகங்களும் கூத்துக்களும், சிதம்பரத்துக்கு சிறுவயதில் படித்த கதைப் புத்தகங்களைப் போலவே இன்னும் ஞாபகத்தில் இதுக்கிறது. அப்போதைய புகழ்பெற்ற ராஜபார்ட் நடிகர் சோழமாதேவி நடேசன் என்பவர் எட்டுக் கட்டைச் சுதியில் உரத்துப் பாடுவது கூப்பிடு தொலைவுவரை கேட்கும். அப்போதெல்லாம் ஒலிபெருக்கி நாடக மேடைக்குப் புழக்கத்துக்கு வரவில்லை. அதே போல பபூன் வேஷத்துக்கு மதனத்தூர் குண்டு என்பவர் பிரபலம். இவர்களை அழைத்து நாடகம் போடுவதும் அதைப் பார்க்க வாய்ப்புக் கிடைப்பதும் அப்போது சாதனைகளாகப் பேசப்பட்டன. தான் சோழமாதேவி நடேசனையும், மதனத்தூர் குண்டுவையும் பார்த்தது பற்றியும் அவர்களது நடிப்பையும், பாட்டையும் சின்ன வயதிலேயே தொந்தி மாமா தயவால் ரசிக்கும் வாய்ப்பு பெற்றது பற்றியும் சிதம்பரம் இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பார்.

பக்கத்து நகர டெண்ட் கொட்டகைகளில் தாம் பார்த்து வந்த சினிமாக்களைப் பற்றி வாய் ஓயாமல் பேசிப் பரவசப்படுவது போலவே, இந்த நாடகங்களைப் பார்த்து விட்டு வரும் ஒரு வாலிபக்குழுவினர் வாய் உருக நாள் முழுதும் பேசி மகிழ்வார்கள் அவர்களில் முக்கியமானவர் எதிர்வீட்டு தங்கராசுப் பிள்ளை. அவர் நல்ல ரசிகர். நன்கு பாடவும் கூடியவர். அவருக்குத் திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டது. அதுவரை வெளி நாடகக் குழுதான் இங்கு வந்து நாடகம் போட்டிருக்கிறது. ஏன் நம்மூர்ப் பையன் களை வைத்து நாடகம் போடக் கூடாது என்று தன் சகாக்களைக் கலந்து ஆலோசித்து அதைச் செயல்படுத்தவும் முனைந்தார். ஆர்வமுள்ள இளைஞர்களும் ஊர்ப்பெரியவர்களில் பலரும் ஆதரவு தரவே நாடக மன்றம் ஒன்று உருவாயிற்று.

தங்கராசுப் பிள்ளைக்குத் தெரிந்த நாடக வாத்தியார் ஒருத்தர் சிதம்பரத்தில் இருந்தார். அவர் நவாப் ராஜமாணிக்கம் போன்ற புகழ்பெற்ற நாடகக் குழுவில் இருந்தவர். அவருக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் எல்லா நாடகங்களும் பாடம். சிவாஜி கணேசனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்ததாக அவர் சொல்லிக் கொண்டார்.அவரைப் போய் அழைத்து வந்து நாடகம் சொல்லித்தர ஏற்பாடு செய்யப் பட்டது. அவருக்கு குடி இருக்க ஜாகையும் தினமும் ஒருவர் வீட்டில் சாப்பாடும் ஏற்பாடாயிற்று.

முதல் நாடகம் ‘சம்பூர்ண ராமாயணம்’ என்று முடிவாயிற்று. ஊரிலுள்ள பாடத் தெரிந்த, தெரியாத இளவட்டங்களை எல்லாம் கட்டாயமாக நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளச் செய்தார்கள். போருக்கு வீட்டுக்கு ஒரு ஆள் வரவேண்டும் என்கிற மாதிரி எல்லா வீடுகளிலிருந்தும் இளைஞர்கள் சேர்க்கப்பட்டார்கள். நிறையப்பேர் இருந்தால்தானே செலவைப் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைக்கும்? சின்னப் பையன்கள் கூட – ஒரு வீட்டுக்கு ஒருவர் என்று தேடும் போது வாலிபர்கள் தேறாவிட்டால் – வற்புறுத்தி சேர்க்கப்பட்டார்கள். எல்லோருக்கும் வேஷம் இருந்தது. மூன்று நாள் நாடக மில்லையா? மூன்று நாட்களுக்கும் மூன்று ராமர், மூன்று சீதை, பால ராம லட்சுமணர்கள், நிறைய வானரங்கள்……என்று எல்லோருக்கும் பங்களிப்பு இருந்தது.

முன்னிரவில் எட்டு மணிக்கு எல்லோரும் நாடகப் பயிற்சிக்கென்று தெரிவு செய்யப்பட்ட ஊர்ப் பொதுச் சாவடியில் கூடிவிட வேண்டும். நள்ளிரவு வரை தினமும் பயிற்சி நடக்கும். பயிற்சியைப் பார்க்க ஒரு கும்பல் தினமும் சாவடி முன் கூடிவிடும்.
தூக்கம் வராதவர்களுக்கும், பொழுது போகாத பெருசுகளுக்கும் அப்போது அதுதான் பொழுது போக்க உதவிற்று. இரவுநேரத்தில் சுகமாகத் தூங்க நிணைப்பவர்களுக்கு சாவடியிலிருந்து எழும் – தாளத்துக்கோ எந்த ஒழுங்குக்கோ ஒத்து வராத கர்ணகடூர
பாட்டுக்களும் வசனங்களும் இடைஞ்சல் செய்ய, எப்போதடா இந்த ஒத்திகை முடிவுக்கு வரும் என்ற ஏக்கத்தை உண்டாக்கியது.

நாடக வாத்தியாரின் பாடுதான் பாவம்! எந்த விதத்திலும் – நடிப்பு, சாரீரம் எதுவும் ஒத்து வராத மலட்டுக் கலைஞர்(!)களுடன் – அவர் மொழியில் சொன்னால் – மாரடிக்க வேண்டி இருந்தது. ‘சிவாஜி’க்கெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு இந்த மரமண்டைகளுக்கெல்லாம் சொல்லித் தரவேண்டியிருக்கிற தன் விதியை நொந்து கொண்டு அவர் அடிக்கடி தலையில் அடித்துக் கொள்வார். என்ன செய்வது? பிழைப் புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே! அவரது நலிந்த தோற்றமும் தள்ளாமையும்
அதட்டிக் கற்பிக்கிற திறமின்மையும் காரணமாய், பிள்ளைகளுக்கு அவ்வளவாக அவரிடம் மதிப்பு இல்லை. “இவராவது சிவாஜிக்குப் பாடம் சொல்லித் தரவாவது? எல்லாம் டுப்!” என்றே அவர்கள் ஏளனம் செய்து வந்தார்கள். ஆனால் ஒரு நாள் அவர் அடிக்கடி
“சிவாஜிக்கு எங்கிட்ட ரொம்ப மரியாதை. அவரு வீட்டுலே எந்த விசேஷம்னாலும் இண்ணைக்கும் மறக்காமெ எனக்கு அழைப்பு வரும்” என்று சொல்லி வந்ததை மெய்ப்பிக்கிற மாதிரி சிவாஜியின் மகள் திருமணத்துக்கு அவருக்கு அழைப்பிதழ் வந்தே விட்டது. அலங்காரமான, பெரிய விலை உயர்ந்த அந்த அழைப்பிழைப் பார்த்த பிறகு தான் அவர்களின் அலட்சியமும் அவமதிப்பும் நீங்கியது. ஆனாலும் வாத்தியார் மிகவும் பொறுமைசாலி. இவர்களது அறியாமைக்காக ஒரு நாளும் முகம் சுளித்ததில்லை. தன் அருமை தெரிந்தவராய் தங்கராசுப் பிள்ளை ஒருவர் இருப்பதே அவருக்குப் போதுமான தாக இருந்தது.

நடேச ஆசாரிதான் ராஜபார்ட். பால ராமர் தவிர்த்து இரண்டாவது மூன்றாவது நாளின் ராமர் அவர்தான். அவரை விட்டால் சுமாராகக் கூட நடிக்கவோ பாடவோ ஆள் இல்லை. நாடகப் பாத்திரங்களைப் பகிர்ந்து கொடுப்பதிலும் வாத்தியாருக்குப்
பிரச்சினைதான். வசதியற்ற அல்லது மேல் ஜாதியல்லாத ஒருவனை ராஜா வேஷத்துக் குப் போட்டு விட்டு, வசதியான மேல் ஜாதிப் பையனை அவனுக்குக் கீழே மந்திரியாகவோ சேவகனாகவோ போட்டுவிட முடியாது. கீழ்ஜாதி ராஜா வேஷக்காரன் “அடேய்! சேவகா” என்று அழைத்தால் மேல்ஜாதி சேவக வேஷக்காரன் கௌரவத்தை விட்டுக் கொடுத்து, எப்படி “ப்ரபோ!” என்று தண்டனிட்டு வணங்க முடியும்? ஆகக்கூடி பாத்திரத்துக்குப் பொருத்தமான ஆளாகத் தேர்வு செய்யாமல் அந்தஸ்துக்கு ஏற்ற வேஷமாகத் தர வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரையும் திருப்தி செய்ய வேண்டிய நிலையில் வாத்தியார் இருந்தார். தங்கராசுப் பிள்ளை உதவியோடு எப்படியோ சமாளித்து நாடகப் பயிற்சியைத் தொடங்கினார்.

மூன்றுமாதம் கடுமையாய்ப் பயிற்சி தரப்பட்டதும், கோடையில் ஒருநாள் முதல் கன்னி நாடகத்தை வெகு விமர்சையாய் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. அக்னி மற்றும் ஊர்த் திருவிழாக்களுக்கு சொந்த பந்தங்களை அழைப்பது மாதிரி இந்த நாடக அரங்கேற்றத்துக்கும் அழைப்புகள் போய் ஊரே திமிலோகப்பட்டது. இந்த உறவினர்களில் அதிகமும் நாடக நடிகர்களின் விருந்தாளிகளே. அவர்கள் வந்திருப்பது முக்கியமாக நாடகம் பார்க்க அல்ல; நாடகத்தில் மேடை ஏறும் தம் உறவுப் பையனுக்கு, கல்யாணத்தில் மொய் எழுதுகிறமாதிரி மாலை, புத்தாடைகள், மைனர்செயின், மோதிரம் முதலியவற்றை, மேடையில் ஏறி அணிவித்துக் கவுரவிக்கத்தான். நடிப்பு பாட்டு எல்லாம் அவர்களுக்கு முக்கியமே அல்ல.

அப்பொழுது சிதம்பரம், கல்லூரியில் கடைசி வருஷம் படித்துக் கொண்டிருந்தார். நாடக ஏற்பாட்டைக் கவனித்த தங்கராசுப் பிள்ளைக்கு சிதம்பரத்தின் கலை ரசனையும் திறமையும் தெரியும். அதனால் உள்ளூர்ப்பள்ளி மாணவர்களைக்
கொண்டு குட்டி நாடகம் ஒன்றை நடுவில் ஒருநாள் நடத்தக் கேட்டுக் கொண்டார். அதன்படி சிதம்பரம் ஐந்தாம் வகுப்புப் புத்தகத்தில் இருந்த “சாணக்கியன் சபதம்” என்ற ஒரே ஒரு காட்சி மட்டுமே கொண்ட குட்டி நாடகம் ஒன்றை சின்னப் பையன்களுக்குப் பயிற்சி கொடுத்து மேடை ஏற்றினார். பெரியவர்களது நடிப்பைவிட குழந்தைகளது நடிப்பு வெகுவாக மக்களைக் கவர்ந்தது.அதிலிருந்து மக்கள் ஒவ்வொரு வருஷ நாடகத்தின் நடுவிலும் சிதம்பரம் ஒரு குழந்தை நாடகத்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியதும், அதன்படி சிதம்பரம் சிவாஜிகணேசன் சினிமாக்களில் இடையே நடித்த ‘சாம்ராட் அசோகன்’, ‘சாக்ரட்டீஸ்’ போன்ற நாடகங்களை குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து மேடை ஏற்றி மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றதும் இப்போது ஞாபகத் துக்கு வருகிறது. நகைச்சுவைக் காட்சிகளுக்கு அன்றைய புகழ்பெற்ற சினிமாப் பாடல் களின் மெட்டுக்களில் சில பாடல்களும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்ததும் நினை வுக்கு வருகிறது.

பாராட்டுக் கிடைத்த உற்சாகத்தில், சிதம்பரம் ஒரு முழு நாடமே எழுதி ஊர்நாடகம் நடக்கும்போது நடத்தவும், தானும் அதில் நடிக்கவும் ஆசைப் பட்டதும், அதை அறிந்த அப்பா ‘நம் கௌவுரத்துக்கு மேடையேறி கூத்தாடி மாதிரி நடிப்பது குறைச்சல்’ என்று நினைப்பதாக அம்மா சொன்னதும் அந்த ஆசையை விட வேண்டி வந்ததும் நினைவில் ஓடியது.

அடுத்தடுத்த நாடகங்களுக்கு நடேச ஆசாரியே நாடக வாத்தியார் ஆனார். அதற்குப் பிறகு தொடர்ந்து கோடையில் அன்னப் படையலுக்கு சிறுத்தொண்டர் நாடகத்தை நடத்துவது அவரது பொறுப்பாயிற்று.

“இப்போது நடேச ஆசாரியும் இல்ல, நாடகம் நடத்துன தங்கராசுப் பிள்ளையும் இல்ல! அதானால மந்தையில் நாடகம் பாக்குற வாய்ப்பும் இல்லாமப் போய்ட்டுது” என்று மருது சோகத்தோடு சொன்னான்.

(தொடரும்)

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 22

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

வே.சபாநாயகம்அய்யனார் கோவில் இருக்கும் இலுப்ப மரத்தடியில் வந்து நின்றார்கள். கோவிலும், அதற்கு வெளியே இருக்கும் அய்யனார் சிலையும், எதிரில் நிற்கும் இரட்டைக் குதிரைகளும், அவற்றின் இரு புறமும் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் வீரர்களும் அப்படியேதான் அன்று பார்த்த மாதிரியே இருந்தன. முப்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்தபடியே வண்ணமற்று, பாசி ஏறி, பீடங்களில் சின்னச் சின்ன அரசங்கன்றுகள் முளைத்திருந்ததில் மாற்றம் எதுவும் காணோம். புதுப்பிக்கவோ வண்ணம் பூசவோ அக்கறை காட்டவில்லை என்றாலும் பின்னப் படுத்தப்படுத்தாமலும் சேதம் எதுவும் விளைவிக்காமலும் இருந்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஒருவேளை அய்யனாரிடம் இருக்கும் பயம் காரணமாக யாரும் அதைத் தொட்டிருக்கமாட்டார்கள் என்றும் தோன்றியது.

சின்ன வயதில் சிதம்பரம் அவ்வளவு பெரிய அய்யனார் சுதைச் சிற்பத்தை வேறு எங்கும் பார்த்தில்லை. சிலை அமர்ந்திருக்கும் பீடமே ஒர் ஆள் உயரத்துக்கு இருக்கும். சிலை அதற்கு மேல் பிரம்மாண்டமாக இரண்டு ஆள் உயரத்துக்கு இருக்கும். பெரியவர்களும் அண்ணாந்து தான் அய்யனாரின் முகத்தைப் பார்க்க முடியும். பல ஊர்களில் இருப்பது போல உறுப்புகள் சரியான விகிதத்தில் அமையாது ஏதோ குறை இருக்கிற மாதிரி இல்லாமல், கச்சிதமான சிற்ப சாஸ்திர அளவுக் கேற்றபடி அமைக்கப் பட்டதாக அழகாக கம்பீரமாக இருக்கும். அழகு மட்டுமிருந்தால் உக்கிரம் இருக்காது என்பதாலோ என்னவோ, கோழி முட்டை அளவுக்குப் பெரிய விழித்த கண்கள் கருநீலக் கண்ணாடிக் கோலிகள் போல ஜொலிக்கும்படியும், முறுக்கிய பெரிய கனத்த மீசைகளுடனும் சிற்பி செய்திருக்கக் கூடும். சின்னப் பிள்ளை கள் தனியே நின்று பார்த்தால் பயந்து விடுவார்கள். ஆனால் கலையழகு மிக்க அப்படிப் பட்ட அய்யனார் சிலையை அவர் இதுவரை பார்த்ததில்லை.

குதிரைகள் இரண்டும்கூட அம்சமாய், சிற்ப சாஸ்திரப்படி அமைக்கப் பட்டவை போல அழகாய் இருக்கும். சேணம், கடிவாளம் எல்லாம் வேலைப் பாடுகளுடன் இருக்கும். வலுவான கால்கள் திடமான குளம்புகளுடன் ஊன்றியபடி வேட்டைக்குக்
கிளம்பும் துடிப்புடன் சற்றே தலைதாழ்த்து நிற்கிற மாதிரி தெரியும். வலது பக்கக்குதிரையின் அருகில் கடிவாளத்தைப் பிடித்திருக்கும் வீரனின் காலடியில் ஒரு துடியான வேட்டை நாயும் ஓடத் தயாராக நிற்பதுபோலக் காணப்படும். மொத்தத்தில் அது ஒரு அழகிய சிற்பக் கூடம் போலவே சிதம்பரத்துக்குத் தோன்றியது. சின்ன வயதில் பயமுறுத்தல் காரணமாக அருகில் சென்று பார்த்திராததால் அதன் சிற்ப அருமை தெரியாது போயிற்று. ஒரு பயம் கலந்த கவர்ச்சி மட்டுமே அந்த வயதில் அவருக்கு அவற்றைக் கடக்கும் போது இருந்தது. இப்போது இது நம்மூர்க் கலைக்கூடம் என்று பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளலாம் என்கிறமாதிரி ஒரு விதப் புத்துணர்வுடன் சிலைகளை வலம் வந்தார். நெடுஞ்சாலைகளிலும், சில ஊர்களிலும், திரைப்படங்களிலும் – பளீரென்கிற வண்ணப் பூச்சுடனும், என்றும் புது மெருகுடனும் காணப் படுகிற அய்யனார் சிலைகளைப் போல இது இல்லை என்றாலூம் வண்ணம் பூசாமலே கருமையும் பசுமையும் கலந்த அந்தப் பழைமை அவருக்குப் பிடித்திருந்தது.

எல்லா ஊரையும் போல அய்யனார் பற்றிய கதைகள் இங்கும் உண்டு. தொந்திமாமா சின்ன வயதில் நிறையச் சொல்லி இருக்கிறார். நள்ளிரவில் அய்யனார் தீவட்டி வெளிச்சத்தில் தன் படைகளோடு கணகணவென சேங்கண்டியும் மணியும்
ஒலிக்க, தாரை தப்பட்டைகள் முழங்க வேட்டைக்குப் போவார் என்றும் அப்போது எதிர்ப்படும் யாரும் ரத்தம் கக்கிச் செத்துப் போவார்கள் என்றும், அவர் வேட்டைக்குப் போவதை யாரும் வீட்டுக்கு வெளியில் நின்று பார்க்கவும் கூடாது என்றும் மாமா
சொன்னவை ஞாபகத்துக்கு வருகின்றன. அப்போதெல்லாம், வீட்டுத் தெருநடையில் அவரும் மற்ற பிள்ளைகளும் படுத்திருக்கையில், எழுப்பி உள்ளே போய்ப் படுக்க வைக்க இதுமாதிரி அம்மா பயமுறுத்தியதுண்டு. ஆனால் தொந்தி மாமாவிடம், தான்
ஒருபோதும் இரவில் அப்படி அய்யனார் வேட்டைக்குச் செல்லும் ஆரவாரத்தைக் கேட்டதில்லையே என்று கேட்டபோது, அய்யனார் வேட்டைக்குப் போகும்போது மக்கள் எல்லாம் அப்போதைக்குப் பிரக்ஞை இல்லாத மாயத் தூக்கத்தில் இருப்பார் கள் என்று சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கையில் சிரிப்பு வந்தது.

அய்யனார் கோவில் பற்றி இன்னொரு பயமுறுத்தலும் உண்டு. உச்சி வேளை யில் பெண்கள் – குறிப்பாக இளம்பெண்கள் அய்யனார் கோவில் பக்கம் போகக் கூடாது என்றும் போனால் அங்கே இலுப்பை மரத்தில் வாசம் செய்கிற முனி பிடித்துக் கொள்ளும் என்றும் சொல்வார்கள். யாராவது இளம்பெண்கள், கர்ப்பிணிகள் மயக்கம் போட்டு விழுந்தாலோ, பயத்தால் அரண்டவள் போல் விழித்தாலோ – அய்யனார் கோவில் வழியே உச்சி நேரத்தில் போனதால்தான் என்று தீர்மானமாய்ச் சொல்லி
விடுவார்கள். பூசாரியைக் கூப்பிட்டுக் காட்டினால் அவன் நிச்சயம் அது இலுப்ப மரத்து முனியின் சேட்டைதான் என்றும் பூஜை போட்டு ஓட்டியாக வேண்டும் என்றும் சொல்வான். இலுப்பை முனியின் தயவில் பூசாரிக்கு அடிக்கடி பிழைப்பு நடக்கும்.

அப்படி ஒருதடவை ஒரு பெண்ணுக்குப் பூசாரி பேயோட்டிய நிகழ்ச்சியை அருகிருந்து பார்த்தது சிதம்பரத்துக்கு இப்போது நினைவுக்கு வந்தது.

எதிர் வீட்டுக்கு புதிதாக ஒரு சின்னப்பெண் திருமணமாகி வந்திருந்தாள். வீட்டு நினைவோ என்னவோ அவள் எப்போதும் சுரத்தின்றியே இருந்தாள். அதனால் அவள் கணவனும் மாமியாரும் அவளை எதாவது குற்றம் குறை சொல்லி முகம் சுருங்க வைப்பார்கள். ஒருதடவை மதிய நேரத்தில் அவள் மடேலென்று நின்ற நிலைக்கு வெட்டிய மரம்போல விழுந்துவிட்டாள். சாப்பாடு நேரம் என்பதால் கனவன் வீட்டில் தான் இருந்தான். அவள் விழுந்ததைப் பார்த்துவிட்டு அவள் மாமியார் வீரிட்டாள். கணவன் ஓடித் தூக்கினான். அக்கம்பக்கம் இருந்தவர்கள் கணத்தில் கூடி விட்டார்கள். பெண் நினைவிழந்து மரக்கட்டைபோலக் கிடந்தாள். முகத்தில் தண்ணீர் தெளித்தும் காற்றுப் பட விசிறியும் அவள் அசையவில்லை. ஆளுக்கு ஆள் ஒன்று சொல்ல ஆரம்பித் தார்கள். தெருவின் கடைசி வீட்டுப் பாட்டி சொன்னாள்: “இப்பதான் அவ அய்யனார் கோயில் பக்கத்திலேர்ந்து வந்ததப் பாத்தேன். அதான்!”

எல்லோருக்கும் அதுதான் காரணமாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே பூசாரிக்கு ஆள் போயிற்று. அவன் வந்து விபூதி பூசி வேப்பிலை அடித்து மந்திரித்ததும் அவள் லேசாக அசைந்தாள். “இது அந்த இலுப்ப முனியோட வேல
தான்! ஒண்ணும் பயப்படவேணாம். கழுதெய நான் வெரட்டி அடிக்கிறேன்” என்று கணவனுக்கும் மாமியாருக்கும் தைரியம் சொன்னான். “பாவம், புதுப் பொண்ணு! பூசாரி சொன்னபடி செய்யப்பா” என்று சொல்லி விட்டுக் கூடி இருந்தவர்கள் கலைந்தார்கள்.

அதன்படியே இரண்டு நாளில் முனிஓட்டுதல் ஆரம்பமாயிற்று. பூசாரி, சிந்தை சரியாக உள்ளவர்களே பார்த்ததும் பயப்படும்படியான பயங்கர ஒப்பனையுடன் – அகன்ற நெற்றியை முழுதும் அடைத்து விபூதி பூசி, புருவத்துக்கும் முன் நெற்றிக்கும் இடையில் பெரிய ரூபாய் நாணயத்தை விடப் பெரிதான ரத்தச் சிவப்பில் குங்குமம் வைத்து, திருகிவிட்ட அடர்ந்த மீசையுடன் கையில் உடுக்கையும் வேப்பிலைக் கொத்துமாக வந்தான். முனி பிடித்திருப்பதாக அவன் சொன்ன பெண்ணைக் கூடத்தில் உட்கார வைத்து, புகை மூட்டத்தை எழுப்பி, உடுக்கையை ஓங்கியடித்து, கர்ணகடூரமான குரலில் ஏதொ ஒரு பாட்டைப் பாடியதே அந்தப் பெண்ணை மிரட்டி இருக்கும். சடேலென்று ஒரு குத்து திருநீரை அள்ளிப் பெண்ணின் முகத்தில் அடித்தான் பூசாரி. அதில் சற்றே மருண்டு தலையை அசைத்து தூசிப்படலத்தை விலக்க முயன்றவளை நோக்கி வேகமாக வேப்பங் கொத்தை விசிறிச் சுழற்றினான். “ம்ம்ம்…..ஆடு…..!” என்று தலையில் வேப்பங் கொத்தால் அடித்தான். பாவம், பெண் அரண்டு போய்க் கண்கள் சொருக ஒரு பக்கமாய்ச் சரிந்தாள்.

“ஏய்! எங்கிட்டியே ஒன் வேலயக் காட்டுறியா? இந்த ஜாலக்குக்கெல்லாம் நான் ஏமாந்துட மாட்டேன். ம்ம்ம்…ஆடு!” என்று மறுபடியும் வேப்பங் கொத்தால் அடித்தான். “ஐயோ! அடிக்காதே அடிக்காதே!” என்று என்று அவள் அரற்றினாள். “அப்ப ஆடு!” என்று வேப்பங் கொத்தைச் சுழற்றி விசிறினான். அடிக்குப் பயந்தோ அல்லது ‘தந்னைப் பேய் பிடிக்கவில்லை, மாமியார், கணவன் இருவரும் அனுசரணையாக இல்லாமல் வதைப்பதுதான் காரணம்’ என்றால் யாரும் தனக்கு ஆதரவாகப் பேசப் போவதில்லை என்று உணர்ந்தோ, அவள் தலை லேசாக ஆட ஆரம்பித்தது.

“பாத்தியா! அடின்னதும் அதுக்குப் பயம் வந்துடுச்சி” என்று அதற்குள் கூடி விட்ட அண்டை அயல் கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது. சிதம்பரமும் அந்தக் கூட்டத்தில் ஒரு பார்வையாளராக இருந்தார். பெண்ணின் தலையாட்டம் பூசாரியின்
வேப்பங் கொத்தின் வேகச் சுழற்சிக்கு ஏற்ப வேகமெடுத்து சக்கர வட்டமாகச் சுழன்றது. பெண்ணுக்கு நீண்ட கூந்தல். அது பரந்து விரிந்து சுழன்றது பயமூட்டுவதாக இருந்தது. சிதம்பரத்துக்குப் பாவமாக இருந்தது. சுழற்சிக்கு ஏற்ப உடல் இடுப்பு வரை ஆட்டுக்கல் சுழற்றப் படுவது போல வளைந்து திருகி சுழன்றது. பிறகு எத்தனை
நாளைக்கு உடம்பு வலிக்குமோ என்று மனம் கசிந்தார்.

”ஏய்! சொல்லு யாரு நீ? இலுப்ப மரத்து முனிதானே?” என்று வேப்பங்கொத்தால் பெண்ணின் தலையில் சுளீரென்று அடித்தான் பூசாரி. பார்த்துக் கொண்டி ருந்த சிதம்பரத்துக்கு வலித்தது. ‘கிறீச்’சென்று கத்தியபடி அந்தப் பெண் பின்னால்
சாய்ந்து பிரக்ஞை அற்றவளானாள்.

“சரி! இண்ணைக்குப் போதும். நாளைக்கு மீதியக் கேட்டுக்கிறேன்” என்று பூசாரி தன் கடையைக் கட்டினான். ‘ஆருன்னு சொல்லி, போறேன்னு சொல்ற வரைக்கும் பூசாரி உடமாட்டான்’ என்று ஒரு கிழவர் தனக்குச் சொல்கிறமாதிரி மற்றவர்களுக்கும் சொன்னார். இப்படி எத்தனையோ முறை பார்த்திருக்கிற அனுபவம் அதில் தொனித்தது.

இப்படி எத்தனையோ முறை அந்தச் சித்திரவதை தொடர்ந்தது. அந்தப் பெண்ணுக்கு புதிதாக வாழ வந்த இடத்தில், இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லை. அறிவியலும், மருத்துவ ஆராய்ச்சிகளும் வளர்ந்துள்ள இன்றைய நிலை யிலேயே கூட ‘இது மூட நம்பிக்கை, பேயும் இல்லை முனியும் இல்லை – இது மனோவியாதி; மருத்துவரிடம் காட்டுங்கள்’ என்று உணர்ந்து வழிகாட்டுபவர்கள் இல்லாத போது, அறியாமையும் மூடநம்பிக்கையும் மிகுந்த அந்தக் காலத்தில் யாருக்கு அவளைக் காப்பாற்றத் தெரிந்திருக்கும்? கடைசியாக பூசாரியே அலுத்துப்போய், “இது இங்கக் கட்டுப்படலீங்க; பேசாம குணசீலத்துக்கு அழச்சிக்கிட்டுப்போயி அங்க ஒரு மண்டலம் கோயிலச் சுத்த வையுங்க” என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகினான்.

பிறகு ஓராண்டுக்கு மேலாகப் பிரமை தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் அவள் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததும்தான் சரியாயிற்று. அவளுக்குச் சரியாயிற்று என்பதை விட அவளுடைய மாமியாருக்கும் கணவனுக்கும் புத்தி சரியா
யிற்று என்று சொல்லவேண்டும்.

“சரி, போலாமா?” என்ற மருதுவின் குரல் சிதம்பரத்தைப் பழைய நினைவுகளிலிருந்து மீட்டது.

“ஒவ்வொரு எடமும் பழைய நினைவுகளக் கிளறிவிட்டுடுது” என்றபடி நடந்தார்.

இருவரும் அய்யனார் கோவில் திடலிலிருந்து கீழமந்தையை நோக்கி நடந்தார்கள்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 20

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

வே.சபாநாயகம்


இருவரும் கோயிலுக்கு முன் உள்ள அப்பாவு ஆசாரி வீட்டருகே வந்ததும் நின்றார்கள். சிதம்பரம் வீட்டைப் பார்த்தார். அதுவும் கூரை வீடுதான். ஆனால் சேதமில்லாமல் அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருவது தெரிந்தது. திண்ணையின் பக்கச் சுவர் ஒன்றில் எம்.ஜி.ஆரின் வண்ணப் படம் பெரிதாக வரையப்பட்டிருந்தது. படம் தத்ரூபமாக இருந்தது.

“அட! யாருப்பா வரைஞ்சது இந்தப் படத்த? அப்பாவு ஆசாரி மகன் நடேச ஆசாரி இருக்காரா?” என்று கேட்டார் சிதம்பரம்.

“அவரும் காலமாயி ரெண்டு வருஷம் ஆச்சுங்க. இது அவரோட மகன் சண்முகம் வரைஞ்சது. அவனும் அப்பா மாதிரியே பெரிய ஓவியக்காரன்” என்றான் மருது.

“பாத்தியா ‘குலக்கல்வி கல்லாமல் பாகம் படும்’ கிறது சரியாத்தான் இருக்குது. வீட்டுலே இருக்கானா அவன்?”

“அவன் இப்ப துபாயிலே இருக்கான். அப்பா காலமாறதுக்கு முந்தியே அங்க போய்ட்டான். சாவு சேதி கேட்டு வந்து காரியமெல்லாம் முடிஞ்சதும் திரும்பப் போய்ட்டான்”

சிதம்பரத்துக்கு அதே திண்ணையில் நடேச ஆசாரி அமர்ந்து சுவரில் சித்திரம் தீட்டியதும், தான் அருகிருந்து பார்த்ததும் கண் முன் விரிகிறது. திரும்பி வீட்டேதிரே பார்த்தார். அங்கே அப்பாவு ஆசாரி கோவிலுக்காகச் செதுக்கிக் கொண்டிருந்த
ரிஷப வாகனத்தை அருகே உட்கார்ந்து தான் பார்த்ததும், சற்றுத் தள்ளி அவர் மகன் நடேச ஆசாரி கடைசல் பட்டறையில் ஏதோ ஒரு சித்திரவேலைப்பாட்டை உளி கொண்டு உருவாக்கிக் கொண்டிருந்ததும், தன் வேலைக்கிடையே அப்பாவு ஆசாரி அதைப் பார்த்து ‘உளிய அழுத்திப் பிடிக்காதே’ என்று திருத்தியதும் காட்சி காட்சியாகக் மனத்திரையில் ஓடுகிறது.

நடேச ஆசாரி மரம் மற்றும் சுதை வேலைகளிலும் வல்லவர். அப்பாவுக்குப் பிறகு அவர்தான் திரௌபதை அம்மன் கோவிலில் பாரதம் பாடிவந்தார். நல்ல இசை ஞானமும் உண்டு. பாரதக் கதை பாடும்போது நடத்தப்படும் ‘கீசக வதம்’ நாடகத்தில்
திரௌபதையாக அவர் வேஷம் போடுவார். ஊரில் சிறுத்தொண்டர் அன்னப்படையல் நடக்கும் போது அவர் தான் சிறுத்தொண்டர் வேஷம் அணிந்து, பிள்ளை இல்லாதவர்கள் வேண்டுதலின்படி மாவில் செய்த சீராளன் பிரதிமையை மேளதாளத்துடன்
ஊர்வலமாக எடுத்துச் செல்வார். மாரியம்மன் கோவிலின் முன் நடக்கும் படையலில் பிள்ளைக் கறிக்காக சீராளனை அரியும் போது அவருக்குச் சாமி வந்துவிடும். ஆவேசமாய் உடலை முறுக்கி, பிடிக்கு அடங்காமல் உருண்டு புரண்டு மூர்ச்சையாகி விடுவார். அவருக்கு வரும் ஆவேசத்தைப் பார்க்கவே ஊரில் பலரும் அடுத்த வருஷத் துக்காகக் காத்திருந்ததுண்டு. அடுத்து நடைபெறும் சிறுத்தொண்டர் நாடகத்திலும் அவர்தான் சிறுத்தொண்டர். வண்ணம் தீட்டுவதிலும் வல்லவர் என்பதால் எல்லோருக் கும் ஒப்பனை போடுவதும் அவர்தான். விஜயதசமியில் பெருமாள் கோவில் அம்பு போடும் விழாவுக்குப் புராணகால வில் அம்பு தயாரித்துத் தருவதும் அவர்தான். சிவன் கோவிலில் முருகனுக்கு விசேஷ நாட்களில் செய்யும் அலங்காரங்களுக்கு குருக்களுக்குப் பெரிதும் உதவுவது அவர்தான். காமுட்டித் திருவிழாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ரதி மன்மதன் படங்களை வரைந்து தருவது அவர்தான்.

அவரது வலது காதில் எப்போதும் கூராகச் சீவிய நீளப் பென்சில் இருக்கும். ஊர் முழுக்கக் காலியாய் இருக்கும் தெருப்பக்கச் சுவர்களிலும், சிலரது வீட்டுத் திண்ணைச் சுவர்களிலும் சுவாமி படங்களை – நடராஜா, லட்சுமி, சரஸ்வதி,
விநாயகர் – என்று வரைந்தபடியே தென்படுவார். ஆனால் எல்லா உருவங்களுக்கும் முகம் மட்டும் முழுமை அடைந்திருக்காது. கண்கள் மட்டும் திறக்கப்படாமல் வெறும் வெள்ளை விழிகளாய் இருக்கும். அதனால் சித்திரங்கள் அழகாக இருந்தாலும் வெள்ளை விழியால் குருடன் நம்மைப் பார்க்கிற மாதிரி, ஒரு மாதிரி இருக்கும்.

அடுத்த வீடான அருணாசலப் பண்டாரத்தின் வீடு இருந்த இடம் குட்டிச் சுவர்களுடன் காலியாகக் காட்சியளித்தது.

“பண்டாரம் வீடு என்னாச்சு மருது? அவரோட வாரிசு யாருமில்லியா?” என்று கேட்டார் சிதம்பரம்.

“பண்டாரத்தின் பெரியமகன் சிவலிங்கம்தான் இதுலே ரொம்ப நாள் குடி இருந்தாரு. அவரும் ரெண்டு வருஷத்துக்கு முன்னால காலமாயிட்டாரு. அடுத்தவன் சுப்பராயலு – நம்மளோட சின்ன வயசுலே படிச்சவன் சிவங்கோயிலு மெய்காவலா இருந்தான். அவனும் அண்ணனுக்கு முந்தியே போய்ட்டான். வீட்டப் பராமரிக்க ஆருமில்ல. இடிஞ்சு குட்டிச் சுவராக் கெடக்கு” என்றான் மருது.

அந்தச் சிவலிங்கம் அப்பாவிடம் மிகுந்த விசுவாசமும் மரியாதையும் மிக்கவன். எப்போதும் அப்பாவுடன் வயற்காட்டில், நெல் களத்தில் இருப்பான். அப்பாவைப் பற்றி யாரும் எதுவும் அவன் முன்னிலையில் சொல்லிவிட முடியாது.

சிதம்பரத்துக்குப் பத்து வயசு இருக்கும்போது ஒருதடவை அவனுடன் நெல் களத்தில் காவல் இருக்க நேர்ந்தது. அப்பாவின் சாதுவான குணத்தை ஏமாளி எனக் கருதிப் பலரும் அப்பாவை ஏமாற்றி வருவதாகச் சொன்ன சிதம்பரம், “இந்த அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியலை! எல்லாரியும் நல்லவங்கண்ணு நெனைக்கிறாங்க” என்று எல்லா விடலைப் பையன்களும் பேசுகிறமாதிரி சொல்லிவிட்டார். சிவலிங்கம், கண்களை உருட்டி ஆவேசமாக “என்னா சொன்னீங்க தம்பி? நம்ம அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாதா? அவங்களை விட உங்குளுக்கு அதிகம் தெரியுமோ? சின்ன வயசு, புரியாமப் பேசுறீங்க. அப்பாரைவிட இங்க அதிகம் தெரிஞ்சவங்க ஆரு?” என்று சண்டைக்கு வந்துவிட்டான். அவன் போன்ற விசுவாசிகளை இப்போது பார்க்க
முடிகிறதா என்று சிந்தனை ஓடியது.

கோவில் வாசலை நெருங்கியதும் ஏதோ ஒரு மாற்றம் தெரிவதை சிதம்பரம் உணர்ந்தார். முன்பு, வாயிலுக்கு முன்மண்டபம் கிடையாது. இப்போது பெருமாள் கோவிலில் இருப்பது போலவே – கற்றளியாக இல்லாமல் – செங்கல்லால் ஆன முன்மண்டபம் அமைக்கப் பட்டிருந்தது.

”இது எப்பப்பா கட்டுனது? அப்பா ரொம்ப நாளாக் கட்டணும்னு சொல்லிக்
கிட்டிருந்தாங்களே!”

“அது அப்பா காலமானதுக்கப்றம் வடக்குத் தெரு ராசமாணிக்கம் முயற்சி எடுத்துக் கட்டுனாரு. மேலே போட்டிருக்கிற நீளமான பலகைக் கல்லு முழுக்க நம்ம அம்மா உபயம் – அப்பா ஞாபமாக் குடுத்தாங்க. ஊர் ஊர் ஊராப்போயி நன்கொட வசூல் பண்ணிக் கும்பாபிஷேகமும் அவருதான் பண்ணுனாரு. அது நடந்து பத்து வருஷம் ஆச்சி” என்றான் மருது.

கோயில் விமானத்தை நிமிர்ந்து பார்த்தார். வண்ணம் மங்கிபோயிருந்தது. பிரகாரத்தைச் சுற்றிப் பார்க்க விழைந்தார். இந்தப் பிரகாரத்தைச் சின்ன வயதில் தினமும் அப்பாவுடன் சுற்றியதுண்டு. பள்ளியில் ஏதாவது தண்டனையிருந்து தப்பவோ, ஆசைப்பட்டது கிடைக்கவோ அவர் பிரகாரத்தைச் சுற்றுவதாக வேண்டிக் கொள்வார். பிரச்சினையின் கடுமைக்கேற்ப சுற்றுக்களின் எண்ணிக்கை வித்தியாசப்படும். ‘அப்பனே! கைலாசநாதரே! இன்னிக்கு வாத்யார்க்கிட்ட அடிவாங்காம இருக்கணும்’பா. உன்ன பத்து சுத்து சுத்துறேன்’ என்று வேண்டிக் கொள்வார். எப்போதுமே வேண்டுதல் பலிக்கும் என்பதில்லை. ஆனால் பலிக்காவிட்டாலும் தெய்வக் குத்தம் வந்துவிடும் என்று சொன்னபடி பிரகாரத்தைச் சுற்றிவிடுவார். ஒரு தடவை நல்ல மழையில்கூட சொன்ன சொல்லைக் காப்பாற்ற குடையைப் பிடித்தபடி சுற்றி வந்திருக்கிறார். இப்போது நினைக்கும்போது சிரிப்பு வருகிறது.

பிரகாரத்தைச் சுற்றி இருந்த நந்தவனத்தைக் காணோம். அதற்கும் கோவில் உபயோகத்துக்குமான கிணறு மூடப் பட்டிருந்தது.

“எங்கப்பா நந்தவனம்?” என்றார் சிதம்பரம்.

“சரியான பராமரிப்பு இல்லாம காஞ்சு போச்சுங்க. கெணறும் வத்திப் போச்சு.வேதவிநேசக் குருக்கள் றக்கோயிலுக்கு மாறிப் போனதுக்கப்றம் நெலயா இங்கியே தங்கிப் பூசை பண்ணுற குருக்கள் யாரும் அமையிலெ. ராஜேந்திரப்பட்ட ணம் கோயில் குருக்கள்தான் காலையிலும் அந்தியிலும் வந்து பூஜை பண்ணிட்டுப் போவாரு. உச்சிக் காலப் பூஜை நிண்ணுபோயி ரொம்ப வருஷம் ஆகுது. ராசமாணிக்கம் இருந்தவரிக்கும் கோயிலுக்கு வந்து குத்தம் கொறயக் கேப்பாரு. அவரும் போனதுக்கப்றம் இந்தக் கோயிலப்பத்தி யாருக்கு அக்கறை? கோயில் நிர்வாக அதிகாரியும் ராஜேந்திரப் பட்டணத்திலியே ஆபீஸை வச்சிக்கிட்டு இங்கே வர்ரதே இல்ல. எளவட்டத்துக் கெல்லாம் அரசியல்லதான் நாட்டம். அதுலே ஏதாவது சுருட்டிப் பொழைக்கலாம். இங்க என்னா கெடைக்கும்? கோயில் நெலத்தக் குத்தகைக்கு எடுத்தவன்லாம் சரியாக் குடுக்கறதில்லே. நித்ய பூஜைக்கே தள்ளாட்டம்” என்று பெருமூச்சு விட்டான் மருது.

பேசிக்கொண்டே சன்னதிக்கு எதிரே இருந்த கண்டாமணிக்கருகில் வந்து நின்றார்கள். அந்தக் கோவிலின் கண்டாமனி பெரியது. பெருமாள் கோவில் நகரா ‘டப டப’ என்று பேரிரைச்சலோடு முழங்குகிறமாதிரி இந்த மணி ‘டாங் டாங்’ என்று
ஊர் அதிர முழங்குவதும் சிதம்பரத்துக்குப் பிடிக்கும். இரண்டுமே ஊர் முழுதுமே கேட்கும். கண்டாமணியை மெய்காவல் இழுத்து அடிக்கையில் அதன் மேலுள்ள காவடி போன்ற அமைப்பு முன்னால் வளைந்து வளைந்து – குனிந்து சிரம் தாழ்த்தி வணங்குகிறமாதிரி இருக்கும். அதைப் பார்க்க வேடிக்கையாய் இருக்கும்.

திரும்பி இடப்பக்கம் இருந்த குளத்தின் படித்துறையைப் பார்த்தார். அதுவும் உடைந்து சிதிலமாகி இருந்தது. குளமும் வற்றியும் தூர்ந்தும் பார்க்க வறட்சியாய்த் தெரிந்தது. படித்துறையின் இரண்டு புறமும் கரையில் சரக் கொன்றை மஞ்சள் வண்ணத்தில் சரம் சரமாய்ப் பூத்துத் தொங்கும். காலைச் சூரியனின் கதிர்கள் அந்த மஞ்சள் பூக்களின் வழியே ஊடுருவி ஒருவிதப் பரவசத்தைக் கொடுக்கும். இப்போது மரத்தையே காணவில்லை. காட்டுக்கருவைதான் மண்டிக் கிடந்தது.

இந்தப் படியில் சிதம்பரம் பையனாக இருந்தபோது அப்பாவைப்போல் சிவலிங்கத்தை வைத்துப் பூஜை செய்தது நினைவுக்கு வருகிறது. அப்பா தருமை ஆதீனத்திடம் தீட்சை பெற்று பெரிய பூஜை செய்தவர்கள். தினமும் அதிகாலையில் எழுந்து வயற்காட்டுக்குப் போய் நிலங்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவரக் காலை பத்து மணியாகும். பிறகு கிணற்றடியில் குளித்து அவர்களே ஆசாரமாய்க் கிணற்று நீரைச் சின்னக் குடத்தில் எடுத்து வந்து பூஜைக்கு அமர்வார்கள். இடுப்புத் துண்டுடன் நெற்றி, மார்பு, கை என்று பதினாறு பட்டைகளுமாய் விபூதி பூசி, கழுத்தில் தங்கக் கொப்பு வைத்த பெரிய ருத்திராட்ச மாலை அணிந்து பூஜைக்கென்று கட்டப்பட்டிருக்கும் சின்ன மேடையில் பூஜைக் கிண்ணங்க¨ளைப் பரப்பி, புற்று மண்ணால் தினமும் புதிதாக சிவலிங்கம் செய்து பூஜை செய்வார்கள். வெகு நேரம் தேவாரமும் திருவாசகமும் பாடி கண்மூடி பூஜிப்பார்கள். பூஜை முடிய ஒரு மணிக்கு மேலாகும். பனிரெண்டு மணிக்குதான் ஒரே வேளையாய் சாப்பாடு.

அப்பா பூஜை செய்யும் போது பலமுறை அருகிருந்து பார்த்துப் பார்த்து சிதம்பரத்துக்கும் அது போல் பூஜை செய்ய ஆவல் பிறந்தது. அப்பா பாடும் பாடல்கள் எல்லாம் மனப்பாடம். அப்பாவின் சின்ன பழைய ருத்திராட்சமாலையை அணிந்து
கொண்டு, அப்பாவைப் போல¦வே விபூதிப் பட்டை போட்டுக் கொண்டு, ஒரு சின்ன மாவுக்கல் சிவலிங்கத்தையும் சின்ன குட்டி நந்தியையும் வைத்து இந்தப் படித்துறையில் அமர்ந்து அப்பா பாடும் பாடல்களைப் பாடி அவரும் பலதடவை பூஜை செய்திருக்கிறார். அப்பாவுக்குப் பிறகு அவர்தான் பூஜைக்கு வாரிசு என்றும் அப்பாவின் பூஜைப்பெட்டியை அவர்தான் வாங்கிக் கொள்ளப் போகிறார் என்றும் அருகிருந்து பார்த்த குருக்களும் மெய்காவலும் பேசிக் கொள்வார்கள். இப்போது அதை நினைத்துப் பார்த்தார். சின்னவயதின் மயக்கம் பின்னர் மேல் படிப்புக்குப் போனபோது மறைந்து போய், நாத்திகம் பேசுகிறவராய் அவர் ஆவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

“கோவிலுக்குத் தர்மாத்தாக்கள் இல்லியா? அவங்க தினமும் கோயிலுக்கு வரமாட்டாங்களா? இதயெல்லாம் கவனிக்க மாட்டாங்களா?” என்று கேட்டார் சிதம்பரம்.

‘அதான் சொன்னனுங்களே. பெரிய கோயில்னா பரிவட்டம், முதல் மரியாத எல்லாம் கெடைக்கும். அதோட வருமானம் உள்ள கோயிலா இருந்தா அதிகாரிக்கு ஒத்துப்போனா நாய்க்குக் கறித்துண்டு வீசுறக் கணக்கா எதாவது பொறுகித் திங்க
லாம். இங்கதான் ஒடையவரே ஒருவேள நிவேத்தியத்துக்கு அல்லாடுறாரே! அதனாலே போட்டி இல்லே. ஆளும்கட்சிக்காரனுவ தான் மூணுபேரு பேருக்குத் தர்மகர்த்தான்னு இருக்கானுவ. அதிலே ஒருத்தன் சேரி ஆளு. யாரு தெரியுங்களா? உங்கப் பண்ணக் காரன் குண்டுமணி மவன் மூக்கறதான் ஒரு தர்மகர்த்தா. அப்பா ஒக்காந்த எடத்துல இவன்லாமா?” என்று அங்கலாய்த்தான் மருது.

“அப்படியெல்லாம் நெனைக்கக் கூடாதுப்பா. அதுதான் ஜனநாயகம். எல்லாருக்கும் வாய்ப்புத் தரணுமில்லியா? அத்தோட அப்பாவோ மத்தப் பெரியவங்களோ என்னா சாசுவதம்? அவங்கதான் எத்தினி நாளைக்கு இருப்பாங்க? காலம் மாற மாற எண்ணங்களும் மாறித்தானே ஆகணும்?” என்று அவனை சமாதானப் படுத்தினார்.

“அப்படி இல்லீங்க. அந்தக் காலத்துலே தெரியாமியா ஊர்ப் பெரிய மனுஷாள மணியம், தர்மகர்த்தான்னு வச்சாஙக். பணத்தேவை இல்லாதவங்கண்ணா பொதுப் பணத்துக்கு ஆசப்பட மாட்டாங்க, இதுமாதிரி கோயில்ல பூஜைக்கு தள்ளாட்டம்னா
தெய்வத்துப் பயந்து கைப்பணத்தப் போட்டுக் கோயில்ல விளக்கு அணையாமப் பாத்துக்குவாங்க. இப்ப மாதிரி அண்ணாடங்காச்சிகளப் போட்டா அவனுக்கே திண்டாட்டங்கறச்சே ஆண்டவனுக்கு எப்புடிச் செலவழிப்பான்?” என்று மருது வாதம் செய்தான்.

“நமக்கு ஜனநாயகம் இன்னும் பிடிபடல்லே. எல்லாம் போகப்போகச் சரியாப் போகும். சரி போலாமா?” என்று நடந்தார்.

“எங்க தங்கப் போறீங்க?” என்று விசாரித்தான் மருது.

“அப்பு வீட்லதான் ரெண்டு நாளைக்கும். அவங்களுக்குக் கஷ்டம் வேணாம்னு கொஞ்சம் செலவுக்குப் பணம் கொடுத்திருக்கேன்.”

“அது சவுரியப்படுங்களா? சொந்த வீட்டியும்தான் வித்துட்டீங்க. இப்ப விருந்தாளி மாதிரி சொந்த ஊர்லியே ஒருத்தர் வீட்டுலே தங்குறமாதிரி ஆயிப்போச்சு! சரி, போங்க. காலைலே நான் அங்க வந்து பாக்குறேன்” என்று விடை பெற்றுக்
கொண்டான் மருது.

சிதம்பரம் அப்பு வீட்டை நோக்கி நடந்தார்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

வே.சபாநாயகம்


சாப்பாடானதும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே கிளம்பினார் சிதம்பரம். கிழக்கே நடந்து அவர் சிறு வயதில் விளையாடிய கீழ மந்தைக்கு வந்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த இடத்தில் எந்த
மாற்றமும் இன்றி முன்புபோலவே இருந்தது. தென்கிழக்கு மூலையில் புதுப்பிக் கப்பட்டிருந்த திரௌபதை அம்மன் கோயில் மட்டும் புது வண்ணத்தில் ஜொலித் தது. தெருமுனையில் இருந்த அக்காலத்திய பிரபல பெட்டிக் கடையைக் காணோம். அதற்கு நேர் எதிரே இருந்த சிமிட்டிக்குழாய்த் தயாரித்த வீடு மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. கூரை வீடாக இருந்த அது சின்ன மச்சுவீடாகி இருந்தது.

அந்த ஊரின் ஒரே சிறுதொழிலான சிமிட்டிக் குழாய் தயாரிப்பு மூன்று தலைமுறையாய் பக்கத்தில் இருந்த சிவன் கோயில் குளத்தை நம்பி அந்த வீட்டில் நடந்து வந்தது. இப்போது பின் தலைமுறையின் ஆர்வமின்மையாலோ செய்பொருளுக்கு ஓட்டமின்மையாலோ தொடரப்படவில்லை என்று தெரிந்தது. முன்பெல்லாம் வீட்டுக்கு முன்னால் செய்து முடிந்த குழாய்களும், அச்சில் உருவாகிக் கொண்டிருக்கும் குழாய்களுமாய் நிறைந்திருக்கும். சிமிட்டிக் கலவை எப்படிக் குழாயாக ஆகிறது என்றறியும் ஆர்வத்தில் சிதம்பரம் சிறுவயதில் அங்கு அடிக்கடி வந்து பார்ப்பது சுவாரஸ்யமான பொழுது போக்கு.

அதற்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன ‘செட்டியார் மளிகை’க் கடை இருந்தது. அப்பாவைப் போலவே கிழடாய்க் காட்சியளித்த மகன் ஒருவர் எப்போதும் திறந்த உடம்புடனும் தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுடனும், அழுக்குப் பூணூல் மார்பின் குறுக்கே புரள கல்லாவில் கூனியபடியே உட்கார்ந்திருப்பார். அவர் எதிரே அவரைப் போலவே திறந்த மார்பில் பூணூலோடு அவரது அப்பா -தொந்தியும் தொப்பையுமாய், பெரியப்பா வீட்டில் வைக்கும் கொலுவில் பார்க்கிற செட்டியார் பொம்மையை ஞாபகமூட்டுபவராய், சாய்மானப் பலகையில் சாய்ந்த படி உட்கார்ந்திருப்பார். பக்கத்துச் சுவரில் நம்பர் போட்ட கடைச் சொருகு பலகைகள் சார்த்தப் பட்டிருக்கும்.

வியாபாரம் ஒன்றும் பெரிதாய் இருக்காது. மொத்தமாய் மளிகைப் பொருட்களை வாங்கிவைத்துக் கொள்ள முடியாத அன்றாடம் காய்ச்சிகளுக்கு, அடுப்பில் உலையேற்றி வைத்துவிட்டு அப்போதைக்குத் தேவையான உப்பு புளி
மிளகாய் வாங்கிக் கொள்ள அந்த செட்டியார்க் கடைதான் ரட்சகராக இருந்தது. காசு கொடுப்பது அதிகமில்லை. கூலிக்குப்போய்க் கிடைக்கும் தானியங்களைக் கொடுத்து வாங்கிக் கொள்வதுதான் அதிகம். செட்டியாருக்கு அதில்தான் லாபம். ஜீவனமும் அதை நம்பித்தான் இருந்தது. காசு கொடுத்து வாங்குவது எல்லாம்-முன்தலையில் மாட்டிய கயிற்றில் முதுகுப் பக்கம் தொங்கும் கூடையுடன் தேயிலை பறிக்கும் பெண்கள் படம் போட்ட – அப்போது பிரபலமாய் இருந்த ‘லிப்டன் டீ’ பொட்டலங்கள் தாம். ஒரு தடவைக்கான ஒல்லிப் பொட்டலம் முதல் கொஞ்சம் அதிக வேளைகளுக்குக் காணும் கனத்த கட்டையான பொட்டலம்வரை விற்பனை ஆகும். சின்னப் பிள்ளைகள் ஆரஞ்சுமிட்டாய், ஜம்பிஸ்கட் என்று அஞ்சு காசுக்கும் பத்து காசுக்கும் வாங்குவதாலும் அக்கடை பிரபலம். காப்பி வில்லைகளும் அங்கு கிடைக்கும். மாத்திரை இங்க் வில்லைகள் ஒரு தம்பிடிக்குக் கிடைக்கும். பள்ளிக் கூடப் பிள்ளைகள் அதை வாங்கிப் பொடித்து இங்க் பாட்டிலில் போட்டு நீர் விட்டுக் கலக்கி இங்க் தயாரித்துக் கொள்வார்கள். சிதம்பரம் அப்படி இங்க் வில்லை வாங்கத்தான் அங்குபோவது. மற்ற பிள்ளைகள் வாங்கும் ஆரஞ்சுமிட்டாய், ஜம்பிஸ்கட் நாவில் நீ ஊறச் செய்யும். ஆனால் அப்பா அது போன்ற தின்பண்டங் களைக் கடையில் வாங்க அனுமதிப்பதில்லை.

செட்டியார் கடை போட்டியில்லாமல் வெகு நாட்கள் நடந்து வந்தது நினைவில் இருக்கிறது. பிறகுதான் ஒரு நாள் எதிர்ச்சாரியிலேயே புதியகடை ஒன்று முளைத்தது. போட்டி என்று சொல்ல முடியாது. மளிகைப் பொருட்கள் அங்கு இல்லை. வெற்றிலை பாக்கு, பீடி சிகரட், மிட்டாய், டீ காப்பி பாக்கட்டு கள், அப்போது பிரபலமாகி இருந்த சின்ன குனேகா செண்ட் பாட்டில் விற்பனை தான் அதிகம். இப்போதைய உரசல் லாட்டரி போல் அப்போது ‘அதிர்ஷ்ட லாட்டரி’ அட்டையில் ஒட்டியிருக்கும் மிட்டாய்ச் சீட்டை வாங்கிப் பிரித்தால் அதில் இருக்கும் எண்ணுக்கு, அதே அட்டையின் மேல்புறம் ஒட்டியிருக்கும் பல விதப் பரிசுப் பொருட்களில் ஒன்று கிடைக்கும். அட்டையின் எல்லா மிட்டாய்ச் சீட்டுகளையும் வாங்கினாலும் ஒட்டப்பட்ட பரிசுப்பொருட்களில் அதிகமும் யாருக்கும் விழாமலே தேங்கிப் போகும். அதில்தான் கடைக்காரருக்கு நல்ல லாபம் நிற்கும். அது தெரிந்தும் குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால் பரிசு கிடைக்காதா என்கிற நைப்பாசையில் சிறுவர்கள் அந்தக் கடையை மொய்ப்பார்கள்.

அந்தப் புதுக்கடை பிரபலமானதற்கு ஊர்க்காரர்களுக்கு சுவாரஸ்யமான வேறொரு விஷயம் இருந்தது. அக்கடையின் கல்லாவில் உட்கார வைக்கப் பட்டவன் பிள்ளைமார்த் தெருவில் தலை நிமிர்ந்து கைவீசி அலட்சியமாய் அதுவரை நடந்தறியாதவன். பிள்ளைமார் வீடுகளில் பணியாற்றும் கீழ்மட்டத்து வசதியற்ற குடும்பங்களில் ஒன்றின் பிரதிநிதி. குப்புசாமி என்கிற அவன், கட்டிக் கொள்ள முழுதாக ஒருவேட்டி இல்லாதவன். எப்போதும் இடுப்புத் துண்டோடு அலைபவன். ஏரி குளங்களில் வலைவீசி மீன்பிடித்து விற்பதுதான் அவனது தினசரி ஜீவனத்துக்கான தொழில்.யாராவது கூப்பிட்டால் எடுபிடி வேலைகளும் செய்வான்.
நல்ல கட்டுமஸ்தான உடலும், தீர்க்கமான முகவெட்டும் மட்டுமே அவனுக்கு சாதகமான அம்சம்.

அவனை அந்தக் கடையின் கல்லாவில் உட்கார வைத்தவள் பிள்ளை மார்த் தெருவின் மேல் மட்டத்து இளம் விதவை ராசாங்கம். சிப்பந்தியாக அல்ல- முதலாளியாகத்தான். அதுதான் ஊர்க்காரர்களின் சுவாரஸ் யத்துக்குக் காரணம்.

ராசாங்கம் நல்ல வசதியான குடும்பத்தின் ஒரே பெண். அவளது அம்மா இளம் வயதிலே கணவனை இழந்தவள். மகளைச் சிறுவயதில் தினமும் சீவிச் சிங்காரித்து, தங்க ராக்கொடி உச்சந் தலையில் வைத்துத் தலைபின்னி, தலை
நிறையப் பூ வைத்து, பட்டுப்பாவாடை சட்டையில்தான் பள்ளிக்கு அனுப்புவாள். மகள் அருமை குலையச் பொறுக்கமாட்டாள். மிக செல்லமாய் வளர்த்து ஆளாக்கி, வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளையாய்த் தேடிப் பிடித்து ஊரே அசரும்படி விமர்சையாய்க் கல்யாணம் செய்து வைத்து பிறகு நிம்மதியாய் செத்துப் போனாள்.

அம்மா, ராசாங்கத்தின் இளமை வளர்ப்பு பற்றியும் அவளது கல்யாணக் கோலாகலம் பற்றியும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லி மாய்ந்து போவார்கள். அவள் வயதுக்கு வந்தபோது மஞ்சள் நீராட்டி, முத்துப்பல்லக்கில் ஊர்வலம் நடத்தி ஒரு கல்யாணம் மாதிரியே செய்தாளென்று அம்மா வாய் உருகிப் போவார்கள்.

ராசாங்கம் தன் அம்மாவை இழந்த ஓராண்டிலேயே கணவனையும் இழந்து போனாள். பத்துநாள் காய்ச்சலில் படுத்தவன் மீளவில்லை. வசதியாய் வாழச் சொத்து இருந்தும் பாதுகாப்புக்கு ஆள் இல்லை. கோரிக்கையற்றுக் கிடக்கும் ‘வேரில் பழுத்த பலா’வை வசப்படுத்திக் கொள்ள இளவட்டங்கள் பலர் முயன்றும் வைராக்கியமாய்த் தனியாக தைரியமாக அவள் சமாளித்ததை அம்மா போன்று அவள் மீது அக்கறை கொண்ட சிலர் பாராட்டவே செய்தனர். ஆனால் அது அதிக நாள் நீடிக்கவில்லை.

எப்படிப் பழக்கம் ஏற்பட்டதோ தெரியவில்லை, எதாவது எடுபிடி வேலைக்காகப் போய் வந்ததில் ஏற்பட்ட பழக்கமோ ஏதோ – ஊரில் அரசல் புரசலாக ராசாங்கத்தையும் குப்புசாமியையும் இணைத்துப் பேச்சுக்கள் உலவின. அம்மா அது அக்கப்போராகத்தான் இருக்கும், ராசாங்கம் அப்படிப் பட்டவள் அல்ல என்று நம்பவில்லை. ஆனால் அது அப்புவின் வீட்டுச் சுவரில் பகிங்கரமாக – அவளை முயன்று தோற்ற யாராலோ பிரகடனப்படுத்தப்பட்ட போது அம்மா வாய் அடைத்துப் போனார்கள்.

ஊர்வாய்க்குப் பயந்து இலைமறைவு, காய்மறைவாய் இருந்த அவர்களது உறவு எல்லோருக்கும் தெரிந்து போய்விட்டது என்றதும் பகிங்கரமாகவே- சேர்ந்து வாழுகிற அளவுக்குத் துணிந்து விட்டது. குப்புசாமி பயமின்றி பட்டப் பகலிலேயே கைவீசித் தெருவில் நடந்தான். இப்போது இடுப்பில் வெள்ளை நாலு முழ வேட்டியும் உடம்பில் சட்டையும், வாசனை எண்ணெய் தடவிச் சீவப்பட்டக் கிராப்புத் தலையும், வலது முண்டாவில் சிகப்புக் கயிற்றில் கோர்த்துக் கட்டிய தாயத்துமாய் பவனி வந்தான். இந்நிலையில்தான் அவன் இனி ஒருவரிடம் கைகட்டிச் சேவகம் செய்ய வேண்டாம் என்று ராசாங்கம் அவனுக்குப் பெட்டிக் கடை வைத்துக் கொடுத்தாள்.

தினமும் காலையில் இருவரும் கைகோர்த்துக் கொள்ளாத குறையாய் ஜோடி போட்டுக் கொண்டு கடைக்குப் போவதும், பிறகு மதியச் சாப்பாட்டுக்குப் போய்வருவதும், இரவு கடையை மூடிவிட்டு அகாலத்தில் வீடு திரும்புவதும் பெரிய வர்களின் சாபத்துக்கு இலக்காயிற்று. ‘கலி முத்திப் போச்சு! இப்பிடியா அறுத்துப் போனவ ஊரறிய கொழுத்துப் போய்த் திரிவா?’ என்று பெண்கள் பொறுமினர். ‘வக்கத்த பயலுக்கு அடிச்ச யோகத்தைப் பாரேன்! எல்லாத்துக்கும் அதிஷ்டம் வேணும்!’ என்று இளவட்டங்கள் மனம் எரிந்தனர். யார் தூற்றுதலும் அவர்களைப் பாதித்து விடவில்லை. கவலையற்று காதலர்கள் தங்கள் பாட்டையில் உல்லாசமாய் நடந்தார்கள்.

இரண்டு வருஷம் போனதும், தான்தான் பட்டமரமாய் நிற்கிறோமே -அவனாவது குழந்தையும் குட்டியுமாய் வம்சம் தழைக்கட்டுமே என்ற எண்ணத்தில் ராசாங்கமே பெண் பார்த்து குப்புசாமிக்கு ஒரு கல்யாணத்தைத் தன் செலவிலேயே செய்து வைத்தாள். நாதியேதும் இல்லாதவன் என்பதால் பெண் கொடுக்க மறுத்தவரின் நிர்ப்பந்தத்தின்பேரில் தன் வீட்டையும் தன் நிலபுலன்களையும் அவன் பேருக்கு எழுதி வைத்தாள். அதுதான் அவள் செய்த தவறு.

‘ஏன் இப்புடிப் புத்திகெட்டுச் சீரழியுதோ?’ என்று அம்மா ஆதங்கப் பட்டார்கள்; ‘புள்ளக்குட்டி பொறந்துதுண்ணா அடிச்சுத் தொரத்தத்தான் போறான்’ என்றும் அங்கலாய்த்தார்கள். அப்படித்தான் ஒரு நாள் ஆயிற்று. ஆனால் அப்போது அவளுக்காக இரக்கப்பட யாருமில்லை! யாரையும் – ஜாதி ஜனங்களை, ஊர்ப் பெரியவர்களை மதித்து அவர்களுக்குப் பயந்து நடந்திருந்தால்தானே அவளுக்காக நியாயம் கேட்க வருவார்கள்? அவளும் அதையறிந்துதான் யாரிடமும் நியாயம் கேட்டு முறையிடவில்லை. ஒருவேளைச் சோற்றுக்கும் நாதியில்லாமல் எங்கோ ஒருநாள் ஊரைவிட்டே போய்விட்டாள்.

அந்தக் காலகட்டத்தில்தான் சிதம்பரம் கல்லூரிக்குப் படிக்கப் போனது. அதற்குப் பிறகு ராசாங்கம் என்ன ஆனாள் என்று அறிய அவருக்கு ஆர்வமோ வாய்ப்போ இல்லாது போயிற்று. படிப்பெல்லாம் முடிந்து அவர் வேலைக்கும் சென்ற பிறகு ஒருதடவை அவர் ஊருக்கு வந்தபோது அம்மா அவர்களாகவே ராசாங்கத்தின் பரிதாபக் கதையைச் சொன்னார்கள்.

“இந்த ராசாங்கத்தோடக் கதயக் கேட்டியா?” என்றார்கள்.

“என்னாம்மா ஆச்சு?”

“அத ஏன் கேக்குறே போ! நம்ம ரோட்டோரத்துலே குடிசை போட்டுக் கிட்டு பண்ணி மேச்சுக்கிட்டிருந்தானே பெலாந்துற தொம்பன்…….”

“ஆமா, அவனுக்கென்ன..?”

“இந்தப் பாவிமுண்ட அவங்கூட ஒடிப்போயிருக்கா….”

“அடப் பாவமே! இப்ப எங்க இருக்காளாம்?”

“அவன் ஊருக்குக்குத்தான் போயி, பண்ணிக் குடிசையிலே அவங்கூட வாழுது சாதி கெட்டக் கழுத!”

“அப்’றம் எப்பிடித் தெரிஞ்சுது? யாரு பாத்தாங்களாம்?”

” நானே எங்கண்ணாலப் பாத்தேன்! போனமாசம் பெண்ணாடத்துக்கு பெரியம்மா ஊட்டுக்கு வண்டியிலே போறப்ப பெலாந்தொறகிட்ட வாய்க்காங் கரையிலே பண்ணி மேச்சுக்ககிட்டிருந்தா! வண்டிக்காரன் அழவாரத்தான் ‘ஆச்சி, ஆச்சி! அங்கப் பாருங்க’ ண்ணான். ‘என்ன அதிசயம் அங்கே’ ன்னேன். ‘அதிசயந்தான்! அது யாருன்னு பாருங்க. உங்க ராசாங்கம் தான்’னு சொன்ன தும் நான் நம்பாம முன்னாலே எட்டிப்பாத்தேன். கன்னங்கரேல்னு கருவாடுமாதிரி காய்ஞ்சி போயி ஒரு கிழிச வட்டுத் துணியக் கட்டிக்கிட்டு ரவிக்கக்கூட இல்லாமெ மொட்டத் தலயோட, ஒரு நீட்டு மூங்கிக்குச்சியிலே கரண்டிமாதிரி தகரம் அடிச்சதாலே பண்ணிவிட்டய அள்ளி இடுப்புல இருந்த கூடயில போட்டுக் கிட்டு பாவி நிக்கிறா! முன்னாலே நெறயப் பண்ணிங்க மேஞ்சுக்கிட்டிருக்கு! அடக் கண்றாவியேன்னு வண்டிய நிறுத்தச் சொல்லி எறங்குனேன்.

”சத்தம் கேட்டுத் திரும்புன அவ என்னப் பாத்துட்டு அவசரமா ஓடி அங்க இருந்த புளியமரத்துக்குப் பின்னாலே மறைஞ்சு கிட்டா. நானும் விடலே. அவ நிக்கறதுக்கு எதுப்புறமாப் போயி நின்னேன். அவ அந்தப் பக்கமாத் திரும்பி தலயக் குனிஞ்சுக்கிட்டா. ‘அடப் பாவி மவளே! இது என்னாடி கோலம்? உன்னப் பெத்தவ இந்த நெலையில உன்னப் பாத்தாத் தாங்குவாளா? அடி, நீ வாழ்ந்த வாழ்வென்ன, இருந்த இருப்பென்ன – இப்படிச் சீரழியணும்னு உனக்கு என்னடி தலயெழுத்து? இப்பிடிச் சாதிகெட்டு, குலங்கெட்டு சாக்கடையிலே ஏண்டி விழுந்தே? சொத்து சொகம், மானம் மரியாத எல்லாத்தியும் தொலைச்சுட்டு நிக்கிறியே, எனக்கே வயிறு எரியுதே ஒன்னப்பாக்க!’ ன்னு ஆத்திரமும் அழுகையுமாச் சாடுனேன். ஆனா அவ அம்மக்குள்ளியாட்டம் அழுத்தமா பதிலும் சொல்லாம, திரும்பியும் பாக்காம நின்னா. எனக்கு எரிச்சலும் எரக்கமும் தாளாமே ‘எக்கேடாவது கெட்டு நாசமாப் போ! அன்னிக்கு எழுதுனவன் அழிச்சா எழுதப் போறான்? ஒந்தலயெழுத்துப்படிதான் நடக்கும்’னு சொல்லிட்டு நா வந்து வண்டியில ஏறிக்கிட்டேன். பின்னால அவ தேம்புறது கேட்டது. ‘அழுவுது ஆச்சி!’ ண்ணான் அழவாரத்தான். ‘அழுட்டும் போ! யார் விதிய யார் மாத்த முடியும்? நீ ஓட்டு வண்டிய’ ன்னு வந்துட்டேன்” என்று முடித்தார்கள் அம்மா.

சிதம்பரத்துக்கு வியப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. ‘இதென்ன, விதி மனிதவாழ்வை இப்படிப் பந்தாடுகிறது? ‘குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்’ என்பது அரசனுக்கு மட்டுமா? ஆண்டிக்கும் அதுதான் போலும்!’ என்று பட்டது.

– இப்போது அந்தப் பெட்டிக் கடை இருந்த காலி இடத்தைப் பார்த்ததும் இத்தனையும் நினைவில் ஓடின.

அப்புறம் ஒரு நாள் குப்புசாமியும் தொடங்கிய இடத்துக்கே வந்து விட்டதும், பிள்ளை குட்டிகள் பிறந்து செலவுகள் கைமீறி ராசாங்கத்தின் நிலத்தை யும் வீட்டையும் விற்றுத் தொலைத்து மீண்டும் தன் பழைய குடிசைக்கே திரும்பி விட்டதும் கேள்விப்பட்டார். ராசங்கம் போனதுமே சீதேவியும் தன் அக்கா மூதேவிக்குக் கையைக் காட்டி விட்டு அவனை விட்டுப் போய்விட்டதாகப் பேசிக்கொண்டார்கள்.

வெகுநேரம் தெரு முனையிலேயே நின்றுவிட்டதை உணர்ந்தவராய் சிதம்பரம் திரௌபதை அம்மன் கோயிலை நோக்கி நடந்தார்.

( தொடரும் )


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 16

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

வே.சபாநாயகம்கண்ணம்மாவின் பெரியம்மாவுக்குக் குழந்தை இல்லாததால், அவளைக் கைக்குழந்தையாய் இருக்கும்போதே அவள் அம்மாவிடமிருந்து தூக்கி வந்து வளர்த்து வந்தார். ஆரம்பப் பள்ளியில் சிதம்பரம் அரிச்சுவடி வகுப்பில் சேர்ந்த அன்றைக்குத்தான் கண்ணம்மாவும் அவரது வகுப்பில் சேர்ந்தாள். சின்னப் பள்ளிக் கூடம் என்பதால் எந்த வகுப்பிலும் ஐந்து ஆறு பிள்ளைகளுக்கு மேல் இல்லை. சிதம்பரம் வகுப்பில் ஐந்து பேர் தான். அவரும் அவரது பக்கத்து வீட்டுப் பையனும் தவிர, கண்ணம்மாவுடன் மேலும் இரண்டு பெண்கள். சேர்ந்த அன்றே கண்ணம்மா சிதம்பரம் பக்கத்தில்தான் வந்து உட்கார்ந்தாள். அப்போது ஏற்பட்ட நட்பு அந்தப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு படிப்பு முடிகிறவரை தொடர்ந்தது.

கண்ணம்மாதான் வகுப்பிலும் வெளியிலும் அவருக்கு உற்ற தோழியாக இருந்தாள். பள்ளி விட்டதும் வீட்டுக்குப் போய் புத்தகப் பையை வைத்துவிட்டு கண்ணம்மா வீட்டுக்கு விளையாடப் போய்விடுவார். மணியக்காரத்தாத்தா வீட்டுத்
திண்ணயில்தான் அவர்களை அதிக நேரமும் காண முடியும். சாப்பாட்டு நேரமும் தூங்கும் வேளையும் தவிர அவர்கள் இணை பிரிவதே இல்லை.

கண்ணம்மாவின் பெரியப்பா பெரிய வசதியுள்ளவர் அல்ல. சொந்தமாக ஒரு கூரை வீடும் கொஞ்சம் நிலமுமிருந்தது. பிரச்சினையற்ற எளிய வாழ்க்கை.

பெரியப்பாவைவிட பெரியம்மா தான் ஊரில் எல்லோருக்கும் அதிகம் பரிச்சயம். பெரியம்மா கைவேலைகளில் திறமை மிக்கவர். அந்தக் காலத்தில் பெண்களின் பொழுதுபோக்கான – வாசற்படிக்கு மணிச்சரம் கோர்த்தல், அட்டையில் பூக்கள் பறவைகள் ஓவியங்களை மணிகள் கொண்டு தைத்தல், கண்ணாடி பாட்டிலுக்குள் மணிகள், சிறு பொம்மைகளை இறக்கி மரம் உருவாக்குதல் போன்ற நுட்பமான கலையில் வல்லவர். ஊர்ப் பெண்கள் பலருக்கும் அக்கலையைச் சொல்லித் தந்தார். யார் வீட்டிலாவது திருமணம் மஞ்சள்நீராட்டு, சீமந்தம் என்றால் பெண்களுக்கு அலங்காரம் செய்ய அவரைத்தான் அழைப்பார்கள். நலுங்கு, கோவிலில் நவராத்திரி கொலு ஆகியவற்றில் பாட அவரை விட்டால் ஊரில் வேறு ஆள் இல்லை. நல்ல குரல்வளம். அவர் முதலில் பாட, நாதஸ்வரக் கருப்பமுதலி அதை நாதஸ்வரத்தில் வாங்கி வாசிப்பது ஊரில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம்.

ஆரம்பப்பள்ளி படிப்பு முடிந்து சிதம்பரம் அடுத்த நகரத்துப் பள்ளியில் மேல் படிப்புக்காக பெரியம்மா வீட்டுக்குப் போய்விட்டார். அப்போது கண்ணம்மாவும் தன் அம்மா ஊருக்குப் படிக்கப் போய்விட்டாள். அப்போது ஏற்பட்ட பிரிவு அப்படி ஒன்றும் மறக்க முடியாததாக இருந்து விடவில்லை. அதற்குப் பிறகு பள்ளி இறுதி வகுப்புக்கு முடிகிறவரை கண்ணம்மாவை அவர் பார்க்கும் வாய்ப்பே கிட்டவில்லை. வளரும் வயதில் புதிய சூழ்நிலையும் புதுப்புது நட்பும் கண்ணம்மாவை அவரது நினவிலிருந்து நழுவச் செய்து விட்டது.

ஆனால் ஆறு ஆண்டுகளுக்குப் பின் கண்ணம்மாவைத் தற்செயலாய் அவளது ஊரான தன் மாமாவின் ஊருக்குப் போனபோது சந்திக்க நேர்ந்தபோது அவரின் பழைய நட்பு மீண்டும் கிளைத்து அவரை உருகவைத்தது.

பள்ளி இறுதிவகுப்புத் தேர்வு எழுதி முடித்தவுடன் ஊரிலிருந்து வந்த மாமாமகன் அழைப்பின் பேரில் அவனுடன் அந்த ஊருக்குப் போனார். அதுதான் கண்ணம்மாவின் ஊரும் என்று தெரியும்தான். அவளையே மறந்து போனதால் அப்போது அவருக்கு அந்தப் பிரக்ஞை இல்லை.

போன மறுநாள் மாலை மாமா மகனுடன் அந்த ஊர்த் தெப்பக்குளத்தைப் பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள். குளத்தை நெருங்குகையில் எதிரே சில இளம்பெண்கள் இடுப்பில் குடத்துடன் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இவர்களை நெருங்கியதும் ஒருபெண் மட்டும் வரிசையை விட்டு விலகி சிதம்பரத்தின் முன்னால் வந்து நின்று உற்றுப் பார்த்தாள். சிதம்பரம் ‘யார் அவள், ஏன் தன்னை அப்படிப் பார்க்கிறாள்’ என்று புரியாமல் விழித்தார். “அய்! நீ சிதம்பரம்தானே?” என்று வியப்புடன் கூவினாள் அவள்.

சிதம்பரம் மேலும் குழம்பிவராய் வெறித்துப் பார்க்க, “என்னெத் தெரியலே? நான் கண்ணம்மா!” என்றாள் உற்சாகத்துடன். சிதம்பரத்துக்கு மின்சாரம் பாய்ந்த மாதிரி ஒரு அதிர்ச்சி உண்டாயிற்று. ‘கண்ணம்மாவா?’ என்று பொறிதட்டியது. பழைய நினைவுகள் பளிச்சிட, கண்கள் வியப்பால் விரிய, ‘ஆங்! நீ….நீ எங்கே இங்கே….?” என்று திணறினார்.

” நான் கேக்க வேண்டிய கேள்விய நீ கேக்குறியே? இதானே என் ஊரு?” மறந்து போச்சா?” என்று அவள் நகைத்தாள்.

அவளையே மறந்துவிட்ட நிலையில் அவªது ஊர் மட்டும் எப்படி நினைவில் இருக்கும்? சங்கடத்துடன் நெள்¢ந்தபடி, “இது எங்க மாமா மகன். இவங்க ஊட்டுக் குத்தான் வந்துருக்கேன்” என்றார்.

“உங்க மாமா ஊடு எனக்குத் தெரியுமே! உங்கம்மா பொறந்த ஊரும் இதானே? எங்க ஊட்டுக்கு வாயேன்” என்று அவள் அழைத்தாள். அதற்குள் உடன் வந்த பெண்கள் போக அவசரம் காட்டவே, “சாய்ங்காலம் எந்தம்பிய அனுப்பறேன். அவசியம் வரணும்” என்று சொல்லி விட்டு அவர்களுடன் புறப்பட்டாள்.

மாமா மகன் கண்ணைச் சிமிட்டியபடி, “யாருடா இது எனக்குத் தெரியாமே இங்கே உனக்குச் சினேகிதம்?” என்றான். “அழகா இருக்காளே!”

சிதம்பரத்துக்கு அப்போதுதான் – ‘கற்பனையில்கூட தான் எண்ணிப் பார்த்திராத சௌந்தர்யத்துடன் எதிரே நிற்பவள் – தன்னோடு பாலபருவத்தில் இணைந்து இழைந்து விளையாடிய கண்ணம்மாவா?’ என்ற பிரமிப்பு தோன்ற மயங்கி நின்றார்.

”என்னடா? திகைச்சுப்போயி நின்னுட்டே! உனக்கே தெரியலையா? அவ ரொம்ப நாள் பழகுனமாதிரி பேசுறா, நீ எதுவுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறே?” என்று மாமா மகன் சீண்டினான்.

“அவ எங்கூட சின்னவயசுலே எங்க ஊர்லே ஒண்ணா படிச்சவ. பால்ய சினேகம். இப்ப வளந்துட்டதாலே தெரியலே!” என்று பதில் சொன்னார்.

“அப்ப உனக்குப் பால்ய சினேகிதி கெடச்சுட்டா! இனிமே என் தயவு தேவைப்படாது” என்று அவன் இடித்தான். ” அப்படியெல்லாம் இல்லே!” என்றபடி மெதுவாக நடந்தார்.

வீடு திரும்பியபின் சிதம்பரத்துக்குக் குற்ற உணர்ச்சி மேலிட்டது. அட! எப்படி அத்தனை நெருக்கமான சினேகிதத்தை மறந்தோம்? அவள் எப்படிக் கொஞ்சமும் மறவாமல் நினவில் இருத்தியிருக்கிறாள்! எவ்வளவு பாசமாகப் பேசுகிறாள்! தன்மீதே கோபம் வந்தது அவருக்கு. சாயங்காலம் எப்போது வரும், எப்போது அவளது தம்பி வந்து அழைத்துப் போவான் என்ற துடிப்பு ஏற்பட ஆவலுடன் அந்த நேரத்துக்காகக் காத்திருந்தார்.

மாலை 5 மணிக்கு கண்ணம்மாவின் தம்பி வந்தான். அவனைக் குழந்தையாகப் பார்த்தது. இப்போது பெரிய பையனாகி இருக்கிறான். முகஜாடையைக் கொண்டே அவன்தான் கண்ணம்மாவின் தம்பி என்று சிதம்பரத்துக்குத் தெரிந்து
விட்டது.

“சிதம்பரம் யார்?'” என்று அவன் கேட்டான்.

“நாந்தான். வா போகலாம்” என்று அவனுடன் புறப்பட்டார்.

“ஏய்! சீக்கிரம் வந்துடு” என்று சொல்லி அனுப்பினான் மாமா மகன்.

வாயிலிலேயே காத்திருந்தாள் கண்ணம்மா.

“வா வா!” என்று முகம் மலர கண் அகல வரவேற்று உள்ளே அழைத்துப் போனாள். அங்கே அவளது அம்மா, பெரியம்மா எல்லோரும் அன்போடு அவரை வரவேற்றுப் பேசினார்கள். பெரியம்மா ” அட, நம்ம சிதம்பரமா! என்னமா வளந்துட்டே!” என்று ஊரில் அம்மா அப்பா எல்லோரையும் விசாரித்தார். பெரியப்பா இறந்துபோனதையும் தான் கண்ணம்மா வீட்டோடு வந்து விட்டதையும் சொன்னார்.

” நீ என்ன படிக்கிறே?” என்று விசாரித்தாள் கண்ணம்மா.

பள்ளி இறுதித் தேர்வு எழுதி இருப்பதையும் மேற்கொண்டு கல்லூரியில் சேர இருப்பதையும் சொன்னார். அவள் எட்டாம் வகுப்புவரைதான் படித்தாதாகவும் வயதுக்கு வந்து விட்டதால் வீட்டில் நிறுத்தி விட்டார்கள் என்றும் சொன்னாள். “என்னை ஞாபகம் வச்சிருந்தியா? நான் ஒன்ன மறக்கவே இல்ல” என்றாள். தான் அவளை மறந்து போனதை எப்படிச் சொல்வது?

இருட்டியதும் சிதம்பரம் விடை பெற்றுக் கொண்டார். “அடுத்த லீவிலும் அவசியம் வரணும்” என்றாள் கண்ணம்மா.

‘அப்பா அம்மா எல்லாரியும் கேட்டதாச் சொல்லுப்பா” என்று பெரியம்மாவும் கூறி வழியனுப்பினார்கள்.

அடுத்த கோடை விடுமுறையில் போகவில்லை. ஆனாலும் கண்ணம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

இண்டர் முடித்ததும் அந்த கோடை விடுமுறையில் மாமாவின் ஊருக்குப் போனபோது கண்ணம்மாவின் வீட்டுக்குப் போனார்.

“வாப்பா சிதம்பரம். நல்ல நேரத்துக்கு வந்தே. கண்ணம்மாவுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு1” என்று வரவேற்றார் பெரியம்மா. “இதோ இவந்தான் – எங்க தம்பிதான் – கண்ணம்மாவுக்குத் தாய் மாமாதான் மாப்பிள்ள”.

அந்தத் தாய் மாமாவைச் சிதம்பரத்துக்குத் தெரியும். சின்ன வயதில் அக்கா வீட்டுக்கு அவன் வந்திருக்கையில் பார்த்தது. அப்போதே அவன் வாலிப வயதில் இருந்தான். இப்போது முன் வழுக்கை விழுந்து வயதானவனாகக் காணப்பட்டான்.
கருத்து மெலிந்து நோயாளி போல இருந்தான். இவனா கண்ணம்மாவை மணக்கப் போகிறான் என்று மனம் சுருங்கியது.

அவனுக்கு இவனை முதலில் அடையாளம் தெரியவில்லை என்றாலும் பெயர் சொல்லி பெரியம்மா பேசியதும் புரிந்து கொண்டான்.

“அட, சிதம்பரமா? பெரியஆளா வளந்துட்டே!” என்று புருவம் உயர்த்தினான். அருகிலிருந்த ஒரு வயதான பெரியவரைக் காட்டி, “இது எங்க அப்பா, நீ பாத்திருக்க மாட்டே ” என்று காட்டி அவரிடம் சிதம்பரம் யார் என்று கூறினான். பெரியவர் அவனைத் தெரிந்து கொள்வதில் உற்சாகம் காட்டவில்லை. கண்ணம்மாவின் அம்மாவும் வந்து பேசினார். “இரு கண்ணம்மாவைக் கூப்பிடறேன்” என்று உள்ளே போனார்.

சிதம்பரம் வந்திருப்பதை அறிந்து கண்ணம்மா உள்ளே இருந்து ஓடிவந்தாள்.

“வா சிதம்பரம். இப்பதான் ஞாபகம் வந்துதா? ஏன் போன லீவுக்கு வரலே?” என்றாள் மனக்குறையுடன்.

“த்ச” என்று சலித்துக் கொள்கிற சத்தம் வந்தது. பெரியவர்தான்!

“கல்யாணமாமே? மாமாதான் மாப்பிள்ளயாமே?” என்று கேட்டார்.

அதைக் கேட்டதும் அவளது முகம் சட்டென்று ஒளி இழந்ததை சிதம்பரம் கவனித்தார். அவளுக்கு விருப்பமில்லையோ? அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. எல்லோரும் இருந்ததால் அவளிடம் மனம் விட்டுப்பேச முடியவில்லை. நிறைவற்ற சந்திப்பாக அது முடிந்தது. “பத்திரிகை வரும்! அவசியம் கல்யாணத்துக்கு வா” என்று பெரியம்மா சொன்னார். கண்ணம்மாவைப் பார்த்தார். அவளிடமிருந்து ஏதும் அழைப்பு இல்லை. சற்று ஏமாற்றத்துடனேயே ஊர் திரும்பினார்.

பிறகு இரண்டாண்டுகள் கழித்து பட்டப்படிப்பு முடித்த கோடையில்தான் அவளைப் பார்த்து வரலாம் என்று அவளது ஊருக்குப் போனார். கல்லூரித் தேர்வு நேரமானதால் திருமணத்துக்குப் போகவில்லை. நேரே அவளது கணவன் வீட்டுக்குப் போனார். தெருக்கதவு சார்த்தி இருந்தது. படியேறி வாசலை நெருங்கினார்.

“ஆருப்பா அது? கேக்கம கொள்ளாம ஏறி வர்ரே?” என்று ஒரு கிழக்குரல் அதட்டியது. அப்புறம்தான் தெரிந்தது – நடையின் ஒரு ஓரத்தில் கண்ணம்மாவின் மாமனார்க் கிழவர் ஒரு நார்க்காட்டிலில் படுத்திருந்தது. கிழவர் எழுந்து கடுகடுப்புடன் அவனைப் பார்த்தார்.

“நாந்தான் சிதம்பரம் – புத்தூரு” என்றார் தயக்கத்துடன்.

“எங்க வந்தே?” என்றார் கிழவர் நிஷ்டூரமாக.

சிதம்பரத்து அதிர்ச்சியாக இருந்தது. என்ன இது ? வரவேற்பே சரியில்லை!
“எல்லாரையும் பார்க்கலாம்னு வந்தேன்” என்றார் ஏதோ குற்றம் புரிந்துவிட்ட
தொனியில்.

“ஒண்ணும் பாக்கவேணாம் போ! ஆருக்கும் இங்க கொம்பு மொளைக்கல!” என்று விரட்டினார் கிழவர். சிதம்பரத்துக்கு மனம் சுருங்கியது. அவமானத்தை விழுங்கிக் கொண்டு, திரும்பி விடலாமா என்று எண்ணியபோது கதவு திறந்தது.

கண்ணம்மாவின் கணவன் வாயிற்படி அருகில் நின்று அவரை வேண்டாத விருந்தாளி போலப் பார்த்தான். வா என்று அழைக்கவில்லை. ‘சரி, ஏதோ சிக்கல்’ என்று தோன்றவே அவனை எதுவும் கேட்காமல் தலைகுனிந்தபடி படி இறங்கினார். “கதவச்சாத்திட்டு உள்ளபோடா! கண்டபயலும் தடதடன்னு உள்ள நொழையுறான்” என்று கிழவர் மகனிடம் கத்துவது கேட்டது.

பின்னங்கால் பிடரிபடவில்லை எனும்படி ஓடாத குறையாய் மாமா வீட்டுக் கும் போகாமல் பஸ் நிலையத்துக்கு ஓடினார். சுயபிரக்ஞையின்றி வீடு வந்து சேர்ந்தார். மாமா ஊருக்குப் போவதாய்ச் சொல்லிவிட்டுச் சென்றவர் போன
சுருக்கில் திரும்பியதையும் முகம் சுரத்தில்லாது இருப்பதையும் கண்ட அவரது அம்மா என்ன நடந்தது என்று கவலையோடு விசாரித்தார். யாரிடமாவது சொல்லாவிட்டால் தாளாது போலிருக்கவே அம்மாவிடம் தனக்கு நேர்ந்த அவமானத்தை
அழாக் குறையாய்ச் சொல்லி முடித்தார்.

“அடப்பாவி! அங்க ஏண்டா போனே? எனக்குத் தெரிஞ்சிருந்தா தடுத்திருப்பேனே!” என்றார் அம்மா கண்டிக்கும் குரலில். சிதம்பரத்துக்கு ஏதோ செய்யத் தகாதைச் செய்துவிட்ட மாதிரி ஒரு கலவரம் மனதில் ஏற்பட “ஏம்மா! என்ன ஆச்சு?” என்றார் பதற்றமாக. “கண்ணம்மாவுக்கு ஒண்ணுமில்லியே?”

“அந்தத் தொத்தல் மாமங்கூட வாழப் புடிக்காம எவங்கூடியோ ஒடிப் போயிடுச்சு. தேடிப்புடிச்சாந்து ஊட்டுலே அடச்சி வச்சிருக்கானுவோ. ஆரு போனாலும் அவளப் பாக்க, அவகிட்டப்பேச உடுறதில்ல! அது தெரியாம அங்க ஏன் போனே?” என்று அம்மா அங்கலாய்த்தார்.

சிதம்பரத்துக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக இருந்தது. கண்ணம்மாவைப் பார்க்க முடியாதுபோனதைவிட அவளைப் பற்றிய அந்தக் குற்றச்சாட்டு பொறுக்க முடியாததாக இருந்தது. அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார். கண்ணம்மாமீது அவருக்கு வெறுப்பு ஏற்படவில்லை. அவளுக்கு விருப்பமில்லாமல், வயதில் மிகவும் மூத்தவனுக்குக் கட்டி வைத்ததுதான் அவளது முடிவுக்குக் காரணமாய் இருக்கக்கூடும் என்று அவரது நட்பு மனம் அவளுக்காகக் கசிந்தது.

பிறகு அவளை அவர் பார்க்கவுமில்லை; பார்க்க முயலவும் இல்லை. இன்னும் அவள் தன் நட்பை நினைத்துக் கொண்டிருப்பாளோ என்று சிந்தனை ஓடியது.

“சாப்புட வாரீங்களா?” என்று தெருவில் குரல்கேட்டாது. அப்புவின் மனைவி தான். சிந்தனை கலைந்து “இதோ” என்று எழுந்து அவள் பின்னே நடந்தார்.

( தொடரும் )

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 15

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

வே.சபாநாயகம்வீடு சிறியதுதான். கணவன் மனைவி இருவருக்குப் போதும். வாசற்படிக்கு முன்னால் தெருவை ஒட்டி நீண்ட சிமிட்டுப் பூசிய குறடு இருந்தது. வாசற்படியைத் தாண்டியதும் நீளமான ஹால். வெளிச்சம் கம்மி. தோட்டத்துக் கதவைத் திறந்ததும் வெளிச்சம் பாய்ந்து உள்ளே வந்தது. சுவரை ஒட்டி ஒரு விசிப்பலகை. அதில் பாய் விரித்து அழுக்குத் தலையணையில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது.

“ஏங்க! தூங்குறீங்களா? யாரோ ஒங்களத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க, எந்திரிங்க! நீங்க உள்ள வாங்க” என்று சொல்லிய அந்தப் பெண்மணி ஒரு முக்காலியை எடுத்து விசிப்பலகைக்கு அருகில் போட்டாள்.

“ஆரு?’ என்று அனத்தலாய்ச் சொல்லியபடி படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். அப்பு தானா என்று சிதம்பரத்துக்குப் புரியவில்லை. வயதுக்கு மீறிய முதுமையும் தள்ளாமையும் தெரிந்தது. பல நாட்களாகச் சவரம் செய்யப்படாத முகம்.
இடுங்கிய கண்களில் பரிச்சயமான மெத்தனமும் பேதைமையும் புலனாயிற்று. அப்பு தான்!

“அப்பு என்னத் தெரியுதா? நா சிதம்பரம் வந்திருக்கேன்!” என்றார் அனுசரணையுடன்.

“ஆரு செதம்பரம்……?” என்று நினைவைத் தூண்டியபடி சிந்தனை வயப்பட்ட மாதிரி தெரிந்தது.

“நடுத்தெருப் பிள்ளை வீட்டுச் சிதம்பரம். ஒனக்கு வேலை வாங்கிக் குடுத்தனே………..”

வேலை என்று சொன்னதும் அந்த முகத்தில் சிறிது வெளிச்சம் ஏற்பட்டது. அதுவே அவனது வாழ்வின் லட்சியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்ததால் இருக்கலாம். ” ஆங்! வாங்க வாங்க…….” என்று நினைவில் அவரை அடையாளம் கண்டு எழ முயன்றான்.

“வேண்டாம் உக்காரு. எப்பிடி இருக்கே?” என்று விசாரித்தார். அவ்வளவு தான்! அதுவரை கேட்டிராத அந்த அனுசரணையான விசாரணை அவனை உலுக்கி இருக்கவேண்டும். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டான். “அப்றம் வேலக் கெடைக்கவே இல்லீங்க!” என்றான் கேவலுக்கிடையில். சிதம்பரம் நெகிழ்ந்து போனார். ஆண்டு பல கடந்தும் தன் வேலை பறிபோனதை அவனால் மறக்க முடியவில்லை என்று தெரிந்தது.

“அடடே! ஏன் இப்ப அழறே? ஊர விட்டுப் போயி ரொம்ப நாள் கழிச்சி இப்பதான் பாக்கலாம்னு வந்தேன். உன் வீடுதான் முதல்ல பட்டுது. அதான் உன்னப் பாக்கலாம்னு நுழஞ்சேன்” என்றார்.

அவன் மனைவி சட்டெனச் சுதாரித்தவளாய், “ஐய! அது நீங்க தானுங்களா? உங்களத்தான் அப்பப்ப சொல்லிப் பொலம்பிக் கிட்டுருப்பாரு!” என்றாள்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அப்புவிடமிருந்து கடந்த
காலம் பற்றி எதுவும் கோர்வையாய்ப் பெற முடியவில்லை. அவன் மனைவியிடமிருந்து ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.

அப்புவுக்கு நாற்பது வயது வரை திருமணம் செய்து வைக்க அவனுடைய பெற்றோர்களுக்கு முடியவில்லை. தனக்காகவும் தெரியாத சொன்னாலும் புரியாத இரண்டும் கெட்டானாக, பெற்றவர்களுக்குப் பாரமாய், எந்த வாழ்வாதாரமும்
இல்லாத அவனுக்குத் தம் பெண்ணின் வாழ்வைப் பலிகொடுக்க யார்தாம் முன் வருவார்? கடைசியில் இந்தப் பெண்தான் – தூரத்து உறவில், நாதியற்று முப்பது வயதாகியும் தாலிபாக்யம் கிட்டாதிருந்தவள் – தெரிந்தே வேறு வழியற்றவளாய் அவனை வாழ்நாள் முழுக்கச் சுமக்க ஒப்பிக் கழுத்தை நீட்டினாள். அந்த நிம்மதியில் பெற்றவர்கள் சீக்கிரமே காலமாகிவிட, இவள்தான் ஏதேதோ அகப்பட்ட வேலைகளை மானமாகச் செய்து காலத்தை ஓட்டி வந்திருக்கிறாள். பிறகு ஒரு பிள்ளை பிறந்து அவனை வளர்த்து ஆளாக்கிப் படிக்கவைத்து, அவனும் சூட்டிகையாய்ப் படித்து வடக்கே ஏதோ ஒரு வேலையைத் தேடிக் கொண்டபின் தான் அவளால் ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடிந்தது. அவன் மாதந்தோறும் அனுப்பும் பணத்தில் இப்போது தான் மூன்றுவேளையும் வயிறாரப் பசியாற முடிகிறது. அவன்தான் இடிந்து கொண்டி ருந்த வீட்டிலிருந்து பெற்றவர்களை வெளியேற்றி, பக்கத்திலேயே சின்னதாக ஒரு
வீட்டையும் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தி விட்டிருக்கிறான். அவனுக்கு இனிதான் திருமணம் செய்யவேண்டும்.

இவ்வளவையும் அவள் ஆற்றாமையுடனும் அழுகையினுடனும் சொல்லி முடித்ததும், ‘கல்லினுள் தேரைக்கும் படியளக்’கிற கடவுள் அப்புவை முற்றிலுமாகக் கைவிட்டுவிடவில்லை என்று சிதம்பரத்துக்கு ஆறுதல் ஏற்பட்டது.

சற்று இளைப்பாறிய பின் அவர் வெளியே போய்வரக் கிளம்பினார். ” இந்தப் பையும் பெட்டியும் இங்கியே இருக்கட்டும். நா இப்பிடியே கொஞ்சம் சுத்திப் பாத்துட்டு வரேன்” என்று எழுந்தார்.

“சாப்புட வந்துடுங்க, தோ நா சமைச்சுடுறேன்'” என்றாள் அந்தப் பெண்மனி.

“வேணாம்மா! சிரமப்படாதீங்க” என்று சிதம்பரம் மறுத்தும் அவள் மேலும் வற்புறுத்தவே, “சரி! தப்பா எடுத்துக்காதீங்க – நா திடீர்னு வந்துட்டதாலே வீட்டுலே பதார்த்தமெல்லாம் இருக்குதோ என்னுமோ – இத வச்சுக்கிங்க” என்று அவள் கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்தார். “வந்துடுங்க” என்று அப்புவும் சொல்வது கேட்டது.

வெளியே வந்து கிழக்கு நோக்கி கொஞ்ச தூரம் நடந்தார். அவரது பால்ய சினேகிதி கண்ணம்மா இருந்த வீட்டைத் தேடினார். ஒரு சிதைந்த, பாதி இடிந்த கூரைவீடு தான் இருந்தது. பக்கத்தில் மணியக்காரத் தாத்தா வீடு இருந்ததே! உயரமான அகன்ற கல்வீடு அது. அதுவும் பாதி இடிந்த நிலையில், ஓடெல்லாம் சரிந்து அலங்கோலமாய் இருந்தது. கண்ணம்மாவுடன் சிறுபிள்ளையாய் அவர் விளை யாடிய அகன்ற திண்ணை மட்டும் அப்படியே இருந்தது. திண்ணையின் ஓரம் முழுதும் கருங்கல் பதித்தது. அதில் தூசில்லாத இடமாகப் பார்த்து அமர்ந்தார்.

வீட்டுக்காரத் தாத்தா மணியக்காரரில்லை. அவரது மகன் தான் – சிதம்பரத்துக்கு சிற்றப்பா முறை வேண்டும் – மணியக்காரராக இருந்தார். அவர் வீட்டுத் தாத்தா என்பதால் அவர் ‘மணியக்காரத் தாத்தா’ என்று அழைக்கப் பட்டார். பக்கத்து வீடு கண்ணம்மாவின் வீடு என்பதால் சிதம்பரம் அந்தத் திண்ணையில்தான் அவளுடன் சிறு வயதில் விளையாடுவார். இந்தத் திண்ணையில், மணியக்காரத் தாத்தா அவருக்கும் கண்ணாம்மாவுக்கும் எவ்வளவு ரசமான கதைகளைச் சொல்லியிருக்கிறார்! பின்னாளில் சிதம்பரமும் ஒரு கதைசொல்லி ஆனதற்கு அவரும் ஒரு காரணி எனலாம்.

இப்போது நினைத்துப் பார்க்கையில் அந்தத் தாத்தா எவ்வளவு சுவாரஸ்யமான மனிதர் என்று தோன்றவும், மனத்திரையில் அவரது சித்திரம் ஓடுகிறது.

தாத்தா நல்ல உயரம். ஆறடி இருக்கலாம். டார்சான் படத்தில் பார்க்கிற மாதிரி அகன்ற பாறை போலத் தோன்றும் மார்புகளும் கரளை கரளையான தோள் மற்றும் முண்டாக்களும் நீண்டு திரண்ட கைகளும் வலுவாய் ஊன்றி நிற்கும் கால் களுமாய் ஆஜானுபாகுவாய் இருப்பார். இடுப்பில் ஒரு நாலு முழ வேட்டியைத் தார்ப்பாச்சிக் கட்டி இருப்பார். தோளின் ஒரு புறமாய் நீல ஈரிழைத் துண்டு தொங்கும். மார்பிலும் முழங்கைகளிலும் ‘சவசவ’ என்று கருத்தமுடி கரடி போன்ற தோற்றத்தைத் தரும். முன் தலை முழுக்க வழுக்கையாகி பின்னால் அர்த்தச் சந்திரன் போலக் கொஞ்சமாய் முடியுடன் இருப்பார்.

சிதம்பரம் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே தாத்தாவுக்கு எண்பதுபோல வயதாகி இருந்தது. ஊரிலேயே மூத்தவர் அவராகத்தான் இருக்கவேண்டும். எல்லோருடைய வீடுகளிலும் நடக்கிற நல்லது கெட்டதுகளில் அவர் நிச்சயம் இருப்பார். அது போல ஊர்ப் பொது விஷயங்களிலும் அவர் முன் நிற்பார். அவர் இருந்தவரை ஊரில் திருட்டுப் பயம் கிடையாது. தாத்தாவுக்கு சிலம்பம், குஸ்தி எல்லாம் தெரியும். காலையில் பழையதும் கெட்டித் தயிரும் சுண்டக்குழம்பும் சாப்பிட்டு, வஞ்சனை இல்லாது வளர்ந்த உடம்பு. அவர் உடம்பே அதற்கு சாட்சி சொல்லும். இளவட்டம் ஒன்று அவரால் பயிற்சி தரப்பட்டு இரவில் ரோந்து வருவதும் எங்காவது திருடன் அரவம் ஏற்பட்டால் தாத்தா தலைமையில் உடனே ஊரைச் சுற்றி கையில் கனத்த தடி, சுளுக்கு சகிதம் வளைத்து, திருடன் எந்த வழியாலும் வெளியேறிவிடாதபடி காபந்து செய்தும் வந்தார்கள்.

அவர் இருந்தவரை திருடர்களுக்கு அந்த ஊர் என்றாலே பயம்தான். தாத்தா திருடர்களை மடக்கிய கதைகள் நிறைய.

மொட்டப்பிள்ளை என்றொரு பயங்கரத் திருடன். பக்கத்து ஊர்க்காரன்தான். அவன் பெயரைச் சொல்லியே – “தோ மொட்டப்பிள்ளயக் கூப்பிடவா?” என்று மிரட்டியே பிள்ளைகளைப் பணியவைத்து விடுவார்கள். ஆள் மொட்டைத் தலையுடன், கட்டுமஸ்தான உடம்புடன் சினிமாவில் வரும் தடிமுரடன் மாதிரி இருப்பான். பெரிய முட்டைக்கண்கள் எப்போதும் தூரத்திலேயே லயித்திருக்கும். அவன் தெருவில் நடந்தால் எதிரே வருபவர்கள் அவன் கண்ணுக்குப் பூச்சிகள் பறப்பது போலத்
தெரியுமாம். தாத்தாவிடம் ஒருதடவை அவன் பிடிபட்ட பிறகு உள்ளூர், பக்கத்து ஊர்களில் தன் வேலையைக் காட்டுவது இல்லை. போலீசால் அவனைப் பிடிக்க முடியவே இல்லை. பெரிய, தலைக்குமேல் உயரமான முள்வேலியைக் கூட அனாயசமாய்த் தாண்டித் தப்பித்து விடுவான். அவனது சாகசங்கள் பற்றியும் அவனது குணாதிசங்கள் பற்றியும் தாத்தா சிதம்பரத்துக்கும் கண்ணம்மாவுக்கும் கதைகதையாய்ச் சொல்லி இருக்கிறார்.

தாத்தாவிடம் மொட்டப்பிள்ளை பிடிபட்ட கதையை பலமுறை கேட்டும் அலுத்ததில்லை. மொட்டப்பிள்ளை கன்னம் வைத்துத் திருடுவதில் பலே கில்லாடி! தாத்தாவுக்கு வீட்டின் எப்பகுதியில் எப்படிக் கன்னம் வைப்பார்கள், எப்படி உள்ளே நுழைவார்கள் என்பதெல்லாம் அத்துபடி. அதனால் ஒருமுறை அவர் வீட்டிலேயே மொட்டப்பிள்ளை கன்னம் வைத்தபோது அவர் ஒருவராகவே அவனை மடக்கிக் கட்டிப் போட்டார்.

நடு ஜாமம் கழிந்து எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் வேளையில், தூக்கம் வராது படுக்கையில் புரண்டுகொண்டிருந்த தாத்தாவுக்கு, ஏதோ சுவரில் கல் பெயர்கிற மாதிரி சத்தம் கேட்கவே உஷாராகி, சத்தம் காட்டாமல் எழுந்து வீட்டுக் குள் ஒருமுறை சுற்றிவந்தார். கல் பெயரும் சத்தம் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டுக் கேட்டது. காமிரா உள்ளில் இருந்துதான் சத்தம் வந்தது. தாத்தா அடிமேல் அடிவைத்து சத்தம் வந்த சுவர் அருகே போய் நின்று காதைச் சுவரில் வைத்துக்
கேட்டார். நிச்சயம் யாரோ கன்னம் வைக்கிறான் என்று தெரிந்துவிட்டது. தாத்தா பதற்றப்படவில்லை. யாரையும் துணைக்கு அழைக்கவில்லை. சுவர் அந்தக்கால -ஒன்றரை அடி அகலமான, மண்ணைக் குழைத்துக் கட்டிய செங்கல் சுவர். அதனால் வெளிப்புறக் கற்கள்தாம் பெயந்து விழுந்து கொண்டிருந்தன. இன்னும் உள் பக்கம் பெயரவில்லை.

தாத்தா வீட்டிலிருந்த தடிமனான தாம்புக் கயிற்றை எடுத்து வந்தார். கூடத்தில் இருந்த கல் உரலை சத்தம் காட்டாது அலாக்காகத் தூக்கி வந்து கல் பெயரும் சத்தம் வந்த இடத்துக்கு அருகில் சற்றுத் தள்ளிப் போட்டார். தாம்புக்
கயிற்றின் ஒரு முனையைக் கல்லுரலின் உடுக்கை போன்ற நடுப்பகுதியில், உருவிக் கொள்ளாதபடி இறுக்கிக் கட்டினார். கயிற்றில் சுருக்குப் போட்டு, குறவன் காடை கவுதாரி பிடிக்கக் கண்ணி வைக்கிற மாதிரி – ஆள் உள்ளே கால் வைக்கும் இடத்தில் வட்டமாக அகட்டிவைத்து மறுமுனையைக் கையில் பிடித்தபடி கல்லுரலுக்கு எதிர்ப் புறம் சுவரோரமாக குந்தி உட்கார்ந்து கொண்டார். கன்னம் இடுகிறவன் முதலில் தலையை உள்ளே விடமாட்டான். காலைத்தான் முதலில் உள்ளே விட்டு நோட்டம் பார்ப்பான். யாராவது விழித்திருந்து பிடித்தாலும் தலை போய்விட்டால் என்ன செய்வது? தாத்தாவுக்கு அந்த சூட்சுமம் தெரியும். அதனால் கால்கள் இரண்டும் இறங்கியதும் சுருக்கை இழுத்து கால்களைக் கட்டிவிடக் காத்திருந்தார்.

செங்கற்கள் நிதானமாய் அவசரமில்லாமல் பெயர்ந்து, உள்பக்க கல்லும் இழுக்கப்பட்டது. முதலில் ஒரு கை உள்ளே நுழைந்து சுழற்றி ஏதும் தட்டுப்படுகிறதா என்று நோட்டம் பார்த்தது. எதுவும் தட்டுப் படாததால் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் கற்கள் பெயர்க்கப்பட்டன. துவாரம் பெரிதாகி ஒரு ஆள் தாராளமாய் இடிக்காமல் நுழைகிறபடி ஆனதும் தாத்தா உஷாரானார். மூச்சு விடும் சத்தம் கூடக் காட்டாமல், கால்கள் உள்ளே இறங்கக் காத்திருந்தார். பின்பக்கமாக ஒவ்வொரு காலாக உள்ளே இறக்கி கால்களை ஊன்றி, இடுப்பு உள்ளே நுழைகையில் தாத்தா ‘விசுக்’கென்று சுருக்கை இழுத்தார். கால்கள் பதறித் துள்ளி வெளியேற முயன்றன.ஆனால் சுருக்கு வலுவாய்க் கால்களைப் பற்றி இழுத்தன. மறுபக்கம் கயிறு கல்லுரலில் கட்டப்பட்டு இருந்தததால், கள்ளனின் காலை உதறி இழுக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. தாத்தா கயிற்றை விடாது பிடித்தபடி துளையருகில் வந்து அவனது இடுப்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். என்ன திமிறியும் அவனால் தாத்தாவின் உடும்புப் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. முரட்டுத்தனமாக அவனை உள்ளே இழுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவனைக் கீழேதள்ளி, கல்லுரலுடன் கட்டிப் போட்டார்.

பிறகு விளக்கை ஏற்றி எடுத்து வந்து ஆளைப் பார்த்தால் அவன் மொட்டப் பிள்ளை என்று தெரிந்தது. “எலே! எங்கிட்டியே ஒன் வேலையக் காமிக்க வந்துட்டியா?” என்று நக்கலாய்க் கேட்டார். அவன் எங்கேயும் இப்படி அகப்பட்டுக் கொண்டதில்லை. கிழவர் லேசுப்பட்ட ஆளில்லை என்று தெரிந்ததும் சரணாகதி அடைந்து விட்டான். பொழுது விடியட்டும் என்று பக்கத்தில் சற்று தள்ளி துண்டை விரித்துப் படுத்துவிட்டார்.

விடிந்ததும் கதவை திறந்து ஆட்களை அரவங்காட்டி, கும்பல் கூடியதும் கட்டை அவிழ்த்து பின்கட்டாய்க் கட்டி அவனைத் தெருவுக்குக் கொண்டு வந்து திண்ணைத் தூணில் கட்டி நிறுத்தினார். ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்த்தது.
ஆளாளுக்கு ஒன்று சொன்னர்கள். அப்போதெல்லாம் போலீசுக்குப் போவதில்லை. மக்களே தண்டம் கொடுத்து விடுவார்கள். தாத்தாதான் இப்போது தண்டம் விதிக்க வேண்டியவர், மொட்டப்பிள்ளையையே என்ன செய்வது என்று கேட்டார். அவன்
மிகவும் பணிவாக “சாமி! நீங்க இப்பிடி ஒருத்தர் இருக்கறது தெரியாம வந்துட்டேன். இனிமே இந்த ஊருக்குள்ளே சத்தியமா நொழைய மாட்டேன். மன்னிச்சு உட்டுடுங்க” என்று சொல்லவும், தாத்தாவுக்கு அவனது நாணயம் தெரியுமாதலால் எல்லோரும் வேண்டாம் என்று தடுத்தும் பெருந்தன்மையோடு அவனைக் கட்டவிழ்த்து விடுவித்தார். அவன் தாத்தாவின் முன்னால் விழுந்து கும்பிட்டு எழுந்து ‘விறுவிறு’வென்று போய் விட்டான். அதற்குப் பிறகு தாத்தா இருந்தவரை அவன் தன் வாக்கைக்
காப்பாற்றினான். அந்த ஊர் வழியே கூடப் போகாமல் விலகியே நடந்தான்.

இதுபோன்ற தன் கள்ளர்களைப் பிடித்த சாகசத்தையும் பேய் பிசாசுகளைச் சமாளித்த சாகசங்கள் பற்றியும் மயிர்க் கூச்செறியும்படி ரசமாகச் சொல்லி இருக்கிறார். இப்போதும் அவரே சொல்வது போலவே இருக்கிறது. கண்ணம்மாவும்
சிதம்பரமும் திறந்த வாய் மூடாமல் கேட்டிருப்பார்கள். அவர்களுக்கு தாத்தாதான் அந்த இளம்வயதில் பிரமிப்பைத் தந்த ஹீரோ. இப்போது அவரது சாகசங்களைப் பற்றி பேசிப் பகிர்ந்துகொள்ள கண்ணம்மா இல்லையே என்று தோன்றியது. தாத்தா சிதம்பரம் கல்லூரிக்குப் போன காலத்திலேயே காலமாகிவிட்டதாகச் சொன்னார்கள். கண்ணம்மாவும் அப்போதே அவளது பாட்டி வீட்டுக்குப் போய்விட்டாள். இந்த வயதில் அவளைப் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தார்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 4

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

வே.சபாநாயகம்


சாலையின் இருபுறமும், அண்ணாந்து பார்த்தால் உச்சி தெரியாமல் உயர்ந்து பரந்து நின்றிருந்த இலுப்பை மரங்க¨ளைக் காணோமே! மனிதனின் பேராசைக்கு அவையும் பலியாகி விட்டனவா? அல்லது ஆற்றின் வெள்ளப் பிரவகிப்பில் அவை தலைகுப்புறச் சாய்ந்து மறைந்தனவா?

அதிகாலையில் அம் மரங்கள் உதிர்த்திருக்கும் – சின்னக் குடுமியுடன் கூடிய குட்டிக்குட்டித் தேங்காய்கள் போல, பளீரன்ற வெண்முத்துக்கள் பரவிக்கிடக்கிற மாதிரி – அபூர்வ மணத்துடனான இலுப்பைப் பூக்கள் எவ்வளவு இதமான காட்சி!
அதிவேக மனித வளர்ச்சியில் அழகுணர்ச்சியும் ஆன்ம நேயமும் அற்றுப் போகிற வக்கரிப்பு கிராமத்தையும் பீடித்திருப்பது தெரிகிறது.

அவசரமின்றி நடந்து, ஊருக்குத் திரும்பும் வலப்பக்கச் சாலையை அடைகிறார். இங்கே வலப்புறத்தில் – ஒரு சுமைதாங்கி இருக்குமே! தன் சுமையைச் சற்று நேரம் இறக்கி வைக்க எண்ணி சுற்று முற்றும் பார்க்கிறார். பலகையான முதுகுடன் நான்கு கால்களையும் வெளிப் பக்கமாய் அகலப்பரப்பி நிற்கிற ஒட்டகம் போல- கற்பலகையின் பக்க வாட்டில் ‘றா.சின்னய்யாப் பிள்ளையின் பாரியாள் லோகாம்பாள் ஆச்சி தருமம்’ என்று கோணல்மாணலான எழுத்தில் செதுக்கி வைத்து – எந்த நேரத்தில் சரிந்து
விழுமோ எனும்படி அச்சம் தருவதாய் ஆண்டாண்டு காலமாய் நின்று கொண்டிருந்த அந்தச் சுமைதாங்கி எங்கே?

அந்தக் கல் எத்தனை உபயோகமாய் இருந்தது! பயண வசதிகள் இல்லாத காலகட்டத்தில், வழிப்போக்கர்களுக்கு ஆசுவாசம் தந்த அந்தச் சுமைதாங்கியும் கால ஓட்டத்தில் ஆற்றங்கரைக் கால விருட்சங்களைப் போல வீழ்ந்து பட்டிருக்கலாம்!
அது இருந்த இடத்தை ஒரு சின்னக் குடிசை ஆக்கிரமித்திருந்தது. இடப் பக்கம் ஒரு பேருந்து நிழற்குடை – ‘ஜவஹர் வேலைவாய்புத் திட்டப் பணி’ என்று எழுதப்பட்டு நிறம் மங்கி நின்றிருந்தது. உட்கார அமைக்கப் பட்டிருந்த சிமிண்ட் பெஞ்சு உடைந்து கம்பிகள் வெளியே எலும்புக்கூடாய்க் காட்சி தருகிறது. உட்காரவோ, வெயிலுக்கு ஒதுங்கவோ லாயக்கில்லா நிழற்குடை!

சாலை முக்கில் ‘0’ என்று பொறிக்கப்பட்ட மைல்கல் இருந்தது. ‘சைபர் கல்’ என்று அடையாளம் சொல்ல அழைக்கப் பட்ட – நினைவு தெரிந்த நாளாய் இருந்த அந்தக் கல் இப்போது காணப்படவில்லை. அந்த இடத்தில், சாய்ந்து திசை திரும்பி இருக்கிற கைகாட்டி ‘தெ.வ.புத்தூர்- 1கிமீ’ என்று தூரம் காட்டிக் கொண்டிருக்கிறது. உடைந்த பெஞ்சின் மீது உடையாதிருக்கும் பகுதியில் தன் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு சற்று இளைப்பாறுகிறார்.

இந்த ‘0’ கல்லுக்குப் பக்கத்தில், ஊர் நடேச ஆசாரி செய்த காந்திஜியின் சுதைச் சிற்பம் ஒன்று நின்றிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கினால் இப்படி ஊருக்கு ஊர் காந்தி சிலைகளும் கைராட்டைக் காங்கிரஸ் கொடிகளும் இடம் பெற்றிருந்தன. இப்போது அந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சிலையும் பலகட்சிக் கொடிகளும் காலமாற்றத்திற்கு ஏற்ப இடம் பெற்றிருக்கின்றன.

ஊரை நோக்கிச் செல்லும் சாலையைப் பார்க்கிறார். கப்பிசாலை இப்போது தார்ச்சாலை ஆகி இருந்தாலும் அங்கே போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து காலைப் பதம் பார்ப்பதாக- நடக்க முடியாத நிலையிலிருக்கிறது.

எதிர்ச்சாரியில் புளியமரத்தை ஒட்டி ஒரு கூரைவீடு. முன்னால் தட்டி உயர்த்தி ஒரு டீக்கடை. தள்ளித்தள்ளி சில குடிசைகள் நெடுஞ்சாலை ஓரத்தை ஆக்கிரமித்துக் கொண்டு சேரி வரை தொடர்கின்றன. சாலை ஓரமாக சற்று நடந்தார். அதோ ஒரு ஓட்டுவீட்டின் தாழ்வான திண்ணையின் ஓரத்தில் சிவப்புநிறம் மங்கிப்போன தபால் பெட்டி ஒன்று தூணில் கட்டித் தொங்குகிறது. ‘அஞ்சல் நிலையம்’ என்று ஒரு சின்ன அறிவிப்புப் பலகை காட்டுகிறது.

ஓ! அஞ்சல் நிலையமும் வந்து விட்டதா? அந்தக் காலத்தில் இப்படி ஊருக்கு ஊர் அஞ்சல் நிலையம் ஏது? பஞ்சாயத்து வந்தும்கூட இங்கு அஞ்சல் நிலையம் வந்திருக்க வில்லை. ஐந்து மைலுக்கு அப்பாலுள்ள இதைவிடச் சற்றுப்பெரிய ஊரில் இருந்துதான் தினமும் மாலையில் வெயில்தாழ்ந்து, தபால் வரும். ஒரு கிழட்டு சைக்கிளில், முண்டாசு கட்டிய கிழட்டு ஆள் ஒருவன் சாலையின் செம்மண் முழுதையும் தன்
மீதும் சைக்கிள் மீதும் ஏற்றிக் கொண்டு மெதுவாக ஊர்ந்து வருவான். பகுதி நேர அஞ்சல் அதிகாரியான ஒரு மிராசுதாரரின் பண்ணை ஆள் அவன். பகுதிநேர அஞ்சலகம் என்பதால் தபால்காரன் என்று தனியாக இல்லை. அஞ்சல் அதிகாரியே சகலமும். அவர் வரமுடியாதென்பதால் கொஞ்சம் விலாசம் படிக்கத் தெரிந்த இந்த ஆளை அனுப்புவார்.

சின்ன வயசில் பத்து மைலுக்கு அப்பால் உள்ள நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத ஒரு ஊரிலிருந்து வாரத்திற்கு இரண்டு நாள் தபால் வந்தது நினைவுக்கு வருகிறது. மிகவும் நலிந்த, தாடிக்கார சாயபு ஒருவர் தோளில் காக்கிப் பை தொங்க கையில் குடையுடன் நடந்தே அவ்வளவு தொலைவும் தள்ளாடியபடி வந்தது நினைவிருக்கிறது. அனேகமாக, ஊரில் அப்பாவுக்கு மட்டுமே தபால் வரும். அதுவும் அப்பா சந்தா கட்டிய ‘தினமணி’ பத்திரிகை இரண்டு மூன்றாய்ச் சேர்ந்து வரும். மாதம் ஒருமுறை தருமமைஆதீன வெளியீடான ‘ஞானசம்பந்தம்’ என்கிற ஆன்மிகப் பத்திரிகையும், அபூர்வமாக தபால் ஏதாவதும் வரும். ‘செந்தமிழ்ச்செல்வி” என்றொரு பொடி எழுத்துப் பத்திரிகையும் வரும். அப்பா அந்தக் காலக் கட்டத்து ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவாளர். அந்தக் கட்சிப் பத்திரிகை ஒன்றும் வரும். ஒரு முறை அந்தப் பத்திரிகை இதழொன்றின் அட்டையில் கோட்டுடன் பெரிய முறுக்கு மீசைத் தலைவர் ஒருவரது படத்தைப் போட்டு ‘தலைவர் பன்னீர்ச் செல்வம் மறைவு’ என்று போட்டிருந்ததைக்
காட்டி அவரது மறைவுவு பற்றி அப்பா வருத்தம் தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அதில் வரும் சிறுவர்க்கான பக்கங்களில் கதைகள் படித்ததுதான் தனது வாசிப்பு ரசனை யின் தொடக்கம் என்பதும் நினைவில் புரள்கிறது.

அப்பா அந்தக் காலத்து மெட்றிகுலேஷன் படித்தவர். அந்த வட்டாரத்தில் ஆங்கிலம் தெரிந்தவர் அவர் மட்டுமே என்பதால் – தந்தி, நீதிமன்றத் தீர்ப்பு, பதிவு அலுவகப் பத்திரங்கள் போன்றவற்றைத் தமிழ்ப் படுத்திச் சொல்ல அப்பாவிடம்தான் வருவார்கள். தினமும் மாலை நேரத்தில் அப்பா தெருவோடு போகிறவர்களை அழைத்து தினமணி செய்திகளைப் படித்துச் சொல்லுவார். அவர், தான் படித்ததனால் தன் பிள்ளைகளும் விவசாயத்தை நம்பி இருக்காமல் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டுமென்று எல்லோரையும் அப்போதே படிக்கவைத்தார். யாராவது ‘என்னங்க எல்லாப் பிள்ளைகளையும் படிக்கவச்சு வேலைக்கு அனுப்பிச்சுட்டா இருக்கிற நெலபுலத்த உங்களுக்கு அப்புறம் ஆரு பாக்கறது?” என்று கேட்பார்கள்.

“ரஷ்யாவிலேயும், சைனாவிலும் கம்யூனிஸ்டுகள் புரட்சி பண்ணிக்கிட்டுருக்காங்க. உழுறவனுக்கே நெலம் சொந்தம்னு கேக்கறாங்க. இன்னும் முப்பது வருஷத்திலே நம்ப நாட்டிலும் அப்பிடி வந்துடப் போவுது. அப்போ என் பிள்ளைகள் நெலத்தையே நம்பிக் கிட்டு மிராசுதாரா இருந்துட முடியாது. அதனாலே தான் உங்க பிள்ளைகளையும் படிக்கவைங்கன்னு சொல்லிகிட்டு வர்ரேன்” என்று அப்பா அப்போதெல்லாம் சொன்னது இப்போது உண்மையாகி விட்டதுதானே!

டீக்கடையை ஒட்டி நடக்கையில் அங்குள்ள பெஞ்சு மீது கொட்டை எழுத்துக்களில் அச்சாகியுள்ள ஒரு பத்திரிகை – ‘தினத்தந்தி’யாக இருக்கலாம் – கலைந்து கிடக்கிறது. அதில் ஒரு தாளை நிதானமாக வாய்விட்டுப் படித்துக் கொண்டி ருந்தவர் இவரை நிமிர்ந்து பார்க்கிறார். வெளியூர்க்காரரோ என்னவோ? இவரை அடையாளம் தெரியவில்லை. இவருக்கும் அவரைத் தெரியவில்லை. உள்ளூர்க்காரராக இருந்தாலும், முப்பது வருஷத்துக்குப் பிறகு பார்க்கும் அடுத்த தலைமுறையைத் தெரியாது தானே?

”என்னாங்க! டீ வேணுமா?” என்கிறார் அவர். அவர்தான் கடைக்காரராக இருக்க வேண்டும். மௌனமாகத் தலையசைத்துவிட்டு நிழற்குடைக்குத் திரும்புகிறார்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 3

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

வே.சபாநாயகம்


மெதுவாகக் கரையை நெருங்கினார். வலதுபுறம் சற்றுத்தொலைவில் தெரிந்த இடுகாட்டில் ஒரு பிணம் புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘அட! இது நம் அப்பாவை எரித்த இடமல்லவா?’ எந்த குறிப்பிட்ட இடத்தில் எரித்தது என்று காண முடியவில்லை. நினைவுச் சின்னமோ தகரக் கொட்டகையோ வைக்கமுடியாத, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிற பகுதியல்லாவா! இங்கேதான் ஆற்றையொட்டிய பகுதியில் தகனம் செய்த ஞாபகம். சற்றே அப்பாவின் நினைவில் தோய்ந்து நிற்கிறார். மனதில் சோகம் மூட்டமிடுகிறது. அப்பாவின் அந்தத் தகனக் காட்சி கண் முன்னே விரிகிறது.

– சிதைமீது உடலை ஏற்றி, விரட்டி கொண்டு மூடி, வைக்கோல் பரப்பி, சேறிட்டு மெழுகி, முகம் மட்டும் கடைசி தரிசனத்துக்காக மூடாமல் விடப்பட்டிருக்கிறது. கடைசித் தடவையாக சகோதரர்கள் ஒவ்வொருவராக, அப்பாவின் அந்த சாந்த மான முகத்தைத் தரிசித்து அழுகை வெடித்துப் பீரிட்டது கண்முன்னே தோன்றுகிறது.

தொடர்ந்து – மரணாவஸ்தையில் அப்பாவின் இறுதிக் கணங்களில் ஏற்பட்ட தவிப்பும், சோகமும் காட்சியாகிறது.

அப்பாவின் உடல் நிலை மோசம் என்று தந்தி வந்து – மற்றச் சகோதரர்கள் வெகு தொலைவில் இருந்ததால் தான் மட்டும் – அடித்துப் புடைத்துக் கொண்டு புறப்பட்டு ஊர் வந்த போது –

– வீட்டில் மரணக்களை நிலவியிருந்தது.

“உனக்காகத்தாம்பா உசிரு துடிச்சிட்டுக்கிருக்கு. இல்லேண்ணா எப்பவோ அடங்கி இருக்கும்” என்று வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த எதிர்வீட்டு மாமா எழுந்து வந்து அணைத்தபடி உள்ளே அழைத்துப் போகிறார்.

நெஞ்சு பதைக்க வாசற்படி தாண்டி கூடத்தை அடைந்ததும், “தம்பீ! அப்பாவைப் பாருடா! உனக்காகத்தான் காத்திருக்காங்க….” என்று உடைந்த குரலில் அம்மா விம்ம, அருகில் போய்ப் பார்க்கிறேன்.

”அப்பா…..”

அப்பாவா அது? எதிலும் சுத்தமும், ஆரோக்கியமும், நறுவிசும், ஒழுங்குமாக இருந்த அப்பா – இதோ கால்மாடு தலைமாடு மாறி, பஞ்சுமெத்தையின் குறுக்காக அசைவற்றுக் கிடக்கிறார்கள். கண் பஞ்சடைந்து, சுருங்கி மெலிந்த முகமும், எலும்புக்கூடாய்த் தெரியும் உடலுமாய்- வாய் அங்காந்து வெட்டி வெட்டி உள்ளிருந்து காற்றை விசிற, உயிரின் இறுதிப் போராட்டத்தில் ஆட்பட்டு…….

பார்க்கவே பதறுகிறது.

“அப்பா…….” என்று குரல் நடுங்க, குனிந்து முகத்தருகே அழைக்கிறேன்.

“ஆரு வந்திருக்கா பாருங்க! செதம்பரம் வந்திருக்கான்” என்று அம்மா அழுகையினூடே சொல்கிறார்.

“அப்பா………அப்பா………சிதம்பரம் வந்திருக்கேன்பா”

கொஞ்சம் நினைவு மீள்கிறது. மறுபடியும் அழைக்கிறேன். பஞ்சடைந்த கண்கள் மெதுவாய் விரித்து எங்கோ நோக்குகின்றன. பின்னர் குரல் வந்த திசைக்குத் திரும்புகின்றன. நடுங்கும் மெலிந்த குரலில் “ஆரு……செதம்பரமா ……”

அதற்குமேல் கேட்க முடியாமல் குரல் அடங்குகிறது. ஆழ்கிணற்றின் அடியிலிருந்து நலிந்த குரலில் ரகசியம் பேசுகிறமாதிரி இருக்கிறது.

“வ..ந்..து..ட்..டி..யா…” என்பதுதான் இறுதிச் சொல்லாகக் கேட்கிறது. கண்கள் பழையபடி தொய்கின்றன. வாய் வெட்டி இழுக்கிறது. தலை துவள்கிறது.

“தம்பீ, தம்பீ! மடியிலே தலையை எடுத்து வச்சுக்கோப்பா. உனக்காகத்தான் இத்தினி நேரம் இருந்த மாதிரி இருக்கு……..” என்றபடி அம்மா அப்பாவின் தலையைத் தூக்கி என் தளர்ந்த மடிமீது வைக்கிறார். அதற்குள் அண்டை அயலில் இருப்பவர்கள் கூடிவிடுகிறார்கள்.

“ஆமாண்டாப்பா! மவனோட மடியிலேதான் போவணும்னு புடிவாதமா உசிரு தொத்திக்கிட்டிருந்திருக்கு.” என்கிறார் பக்கத்து வீட்டு மூதாட்டி.

எனக்கு அழுகை உள்ளுக்குள் முட்டி மோதுகிறது.

“இந்தா இந்தப் பவுனை வாயிலே போட்டு காசித் தீர்த்தத்துலே கொஞ்சமா விடு” என்று அம்மா மூக்குப்பொட்டளவு உள்ள ஒரு சின்னப் பொன் துணுக்கையும், பற்றவைப்பு மூடி நீக்கிய ஒரு சின்னக் காசிச்சொப்பையும் நீட்டுகிறார், முன்பே தீர்மானித்து ஆயத்தப்படுத்தி இருந்தபடி.

மூச்சு விசிறிவிசிறி….. மரண அவஸ்தையை நேரில் தரிசிக்கிறேன். மனம் வலிக்கிறது.

“வேண்டாம்மா. தொண்டையிலே சிக்கிக்கும். மூச்சை அடக்கிடும்…..” என்று அம்மாவிடம் கெஞ்சுகிறேன்.

“இல்லைப்பா! அவ்வளவுதான். இனிமே தாங்காது! போட்டு தீர்த்தத்தை விடு” என்று எதிர்வீட்டு மாமா ஆதரவுடன் தோளில் தட்டுகிறார்.

கை நடுங்க, குமுறும் அழுகையினூடே அந்தப் பொட்டுத் தங்கத்தை அப்பாவின் வாயில் இட்டு காசித் தீர்த்தத்தைக் கொஞ்சமாக விடுகிறேன். லேசான ‘களக்’ ஒலியுடன் நீர் அடித்தொண்டையில் இறங்குகிறது. அமைதியாக தலை என் மடியில் சரிகிறது. உயிரின் அவஸ்தை முடிகிறது. ‘அப்பா……….” என்று அதுவரை நெஞ்சுக் குள் முட்டிமோதிய சோகம் வெடித்துப் பீரிடுகிறது.

“அழப்படாது….அழப்படாது….இன்னும் வழிவுடலே…” என்று பக்கத்து வீட்டுப் பாட்டி என்னைப் பரிவோடு தட்டிக் கொடுக்கிறார்.

மெல்லப் பூப்போல அப்பாவின் தலையை இறக்கி வைத்துவிட்டு, உடலை நேராக்கிவிட்டு கைக்குட்டையை வாயில் அடைத்துக் கொண்டபடி தெரு நடைக்கு வருகிறேன்.

தெருவாசலில், போகிற உயிருக்கு வழியனுப்பி வைக்கும் ஏற்பாடு நடக்கிறது. அம்மா எல்லாம் முன்னதாகத் தயார் செய்து வைத்திருக்கிறார். முக்கிளையாக ஒரு சின்னக் கிளையைத் தேடி ஒடித்து முனைகளில் சின்னப்பந்தம் போல துணிசுற்றி எண்ணையில் நனைத்து வைத்திருக்கிறது. அதை வாசலுக்கு எதிரே தெருநடுவில் சின்ன மண்முட்டில் செருகிப் பற்றவைத்து முக்கிளையாய்ப் பந்தம் எரிகிறது. தேங்காய் உடைத்து, கற்பூரத் தீபம் காட்டி, பங்காளிகள் புடைசூழ சுற்றிவந்து பூமியில் நெஞ்சு பட விழுந்து எழுகையில், அழுகைப் பிரவகித்து ‘ஓ’ வென்று அழுகிறேன். அம்மாவின் ஓலம் குபீலென்று எழுகிறது. அதற்காகக் காத்திருந்தது போலப் பெண்களின் ஒப்பாரி ஆரம்பமாகிறது.

– ”இன்னா சார்! பொடி சுடலே? அப்பிடியே வெறிச்சு என்னாத்தப் பாக்குறீங்க?” என்ற குரல் கேட்டு நினைவுத் தடத்திலிருந்து மீள்கிறார். மாட்டுக்காரச் சிறுவன் மீட்கிறான்.

அதற்கப்புறம் எத்தனை பேரை அந்த இடத்தில் எரித்திருப்பார்கள்! எத்தனை முறை வெள்ளம் வந்து அத்தனைபேர் சாம்பலையும் அடித்துக் கொண்டுபோய்க் கடலில் சேர்த்திருக்கும்! உத்தேசமான, அப்பாவின் தகன பூமியை மனதுள் வணங்கிவிட்டு மெல்ல மணலை விட்டு நீங்கி, திடமான தார்ச்சாலையை அடைந்து நடக்கிறார். பையன்கள் அவரை விசித்திரமாய்ப் பார்த்தபடி தமக்குள் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

கால நதிக்கரையில்….. – அத்தியாயம் – 2

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

வே.சபாநாயகம்


ஆற்றோரமாக விழற்கட்டைகள் திட்டுத்திட்டாக பச்சையும் மஞ்சளுமாய் முளைத்திருக்கின்றன. அவற்றிற்கிடையே ஆங்காங்கே பசுக்களும் எருமைகளும் ‘மடுக் மடுக்’கென புற்களைக் கடித்தபடி மேய்ந்து கொண்டிருக்கின்றன. சில எருமை
களின்மீது மாடுமேய்க்கும் சிறுவர்கள் உல்லாசமாய்ச் சவாரிசெய்தபடி பேசிச் சிரித்த படி இருக்கிறார்கள். மந்தமாய் அரைத் தூக்கத்தில் நடக்கும் ஒரு எருமைமீது ஒரு கரிய வாலாட்டிக்குருவி அமர்ந்து சவாரி செய்து கொண்டிருக்கிறது.

சிதம்பரம் பெட்டியையும் பையையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடக் கையில், எதிரே மண்திட்டுகளில் சில சிறுவர்கள் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பச்சைப்பசேலென்ற, நெடுக்கே பூமி உருண்டயின் அட்சரேகைகள் போல வெள்ளைக் கோடுகளுடனான ‘ஆத்துக் கொமட்டிக்காய்’ களைத்தான் அவர்கள் கோலால் தட்டி விளயாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சுடுகிற மணலில் ஆங்காங்கே இருக்கும் ஈரநைப்பில் முளைத்துப் பரந்து கிடக்கிற பச்சைக் கொடிகளினூடே சின்னதும் பெரியதுமாய் பந்துகள்போல் கொமட்டிக் காய்கள் காய்த்துக் கிடக்கின்றன. மாடு மேய்க்கிற பையன்களுக்கு அதுதான் விளையாட்டுப் பொருள்.

ஒரு பந்து எதிரே விழுந்து அவரது காலடியில் உருண்டு தேங்குகிறது. அதைக் குனிந்து எடுக்கிறார். அதைத் தொடர்ந்து ஓடிவருகிற பையனிடம் மெதுவாகத் தூக்கி எறிகிறார். அவன் கைக்கோலால் அதை லாகவமாக கிரிக்கட்வீரன் மாதிரி, அடித்து வீசுகிறான். பந்து பறந்து தெறிக்கிறது. ‘பளீரெ’ன்ற வெள்ளைப்பற்கள் தெரிய அவன் சிரிக்கிறான்.

சிதம்பரத்துக்கு, சின்னவயதில் அம்மா சொன்ன ‘அண்ணன் பெரியநாயகி’ கதை நினைவுக்கு வருகிறது. ‘இந்தப் பந்தாட்டமும் இதனிடையே நிகழும் இந்தக் குறுக்கீடும் வழக்கமான நடைமுறையா? அந்தப் பெரியநாயகி ஆடிய பந்தும் இப்படி
இடறப்பட்டதால்தானே…………..’ என்று சிந்தனை ஓடுகிறது.

அந்தப் பத்தினிப் பெண்ணின் கோயில், இங்கே எதிரே ஆற்றங்கரையில்தானே இருந்தது? இப்போது எங்கே அது? இடது கையைக் கண்களுக்கு மேலாகக் கவித்து எதிர்க்கரையைப் பார்க்கிறார். எதிரே ஆற்றங்கரையில் ஒரு சின்னத்தோப்பு தெரிகிறது.

“ஏம்ப்பா! பெரியநாயகி கோயில் எங்கே இருக்கு?” என்று காயைத் தட்டி விட்ட பையனைக் கேட்கிறார்.

“என்னா கோயிலு?” என்று புருவத்தை உயர்த்துகிறான் அவன்.

“அண்ணம் பெரியாயி கோயிலா?” – “எலே அந்த இலுப்பத் தோப்புக்குள்ளே இருக்கே அண்ணம்பெரியாயி சாமி – அதக் கேக்குறாரு!” என்று, அதற்குள் அவரைச் சுற்றிக் கூடிவிட்ட பையன்களிலிருந்து ஒருவன், கேட்கப்பட்டவனுக்கு விளக்கம்
தருகிறான்.

“அதா? அதோ தெரியுதில்லே இலுப்பத் தோப்பு அதுக்கு முன்னாலே ஒரு ஆர்ச்சி தெரியும் – அதுக்குள்ளாற இருக்கு” என்கிறான் அவன் விவரம் புரிந்து
கொண்டதும்.

‘ஆர்ச்சா? அப்படி ஏதும் இருக்காதே!’ என்று அவர் தனக்குள் கேட்டுக் கொண்ட மாதிரி முணுமுணுக்கிறார்.

“ஆமாங்க! சிங்கப்பூரு சாயபு கட்டுனது. இப்பதான் ரெண்டு வருஷமாவுது” என்கிறான் அவர்களில் பெரியவனான ஒரு பையன்.

‘சிங்கப்பூர் சாயபுவா? யாரு ‘ஆறுமாத்தியார்’ சாயபுவா இருக்குமா? சாயபுக்கும் பெரியநாயகி கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று இவர் சிந்தனையில் ஆழ, அவன் தொடர்ந்தான். “அதாங்க! ஊர்க்கோடீலே கட வச்சிருக்காரே கரீம்பாயி – அவுருதான் எதோ வேண்டுதல்னு கட்டிக் குடுத்திருக்காரு”

“ஆரு அது? புதுசாக் குடிவந்திருக்கிறாரா?” என்று சிதம்பரம் கேட்டார்.

” இல்லீங்க! அவங்க தாத்தா காலத்திலேர்ந்து கட வச்சிருக்குற சாயபு” என்கிறான் அந்தப் பையன்.

சின்ன வயதாக இருக்கும்போது ஊர்க் கோடியில் கடை வைத்திருந்த ஒரு முஸ்லிம் கிழவரை நினைவு படுத்திப் பார்க்கிறார். நாடாறு மாதம் காடாறு மாதம் என்பது போல அவர் சிங்கப்பூரில் ஆறு மாதம் இங்கே ஆறு மாதம் இருந்ததால்
‘ஆறு மாதத்திய சாயபு’ என்று பெயர் வந்து விட்டது. அது மருவி ‘ஆறுமாத்தியார்’ ஆகிவிட்டது. அவரது பேரனாக இருக்குமோ இந்தக் கரீம்பாய்?

அவரை நினைத்ததும் அவரால் சின்ன வயசில் அப்பாவிடம் அடிபட்டது நினைவுக்கு வருகிறது. ஒருதடவை அவரது கடைக்குப் போன போது, “வாங்க குட்டிப் புள்ளே! மீனு தரட்டுமா – ஊட்டுக்கு எடுத்திட்டுப் போயி கொளம்பு வச்சிச் சாப்பிடலாம்?” என்று பரிகாசமாய்ச் சொல்ல, அதை அப்பா சாப்பிடும்போது சொல்லி அப்பாவிடம் அடி வாங்கியது இன்னும் மறக்கவில்லை.

பையன்கள் காட்டிய இலுப்பைத் தோப்பை நோக்கி மெல்ல, சுமையுடன் நடக்கிறார். அந்தப் பெரியநாயகி – இவர் வீட்டுக்குத் தெய்வமும் அல்லவா? பெரிய நாயகி தெய்வமான கதையை அம்மா சின்ன வயதில் சொன்னது, காட்சிப் படம்போல மனதுக்குள் ஓடுகிறது.

ஒருதடவை இவரும் இவரது அண்ணன், தங்கைகளும் அம்மாவுடன் மாட்டு வண்டியில் இந்த ஆற்றைக் கடக்கும்போது, மணலில் மாடு இழுக்கச் சிரமமில்லா திருக்க எல்லாப் பிள்ளைகளும் அம்மாவுடன் இறங்கி மணலில் வண்டிக்குப் பின்னா லேயே நடந்தார்கள். அப்போது வழியில் கிடந்த கொமட்டிக்காயை இவர் காலால் உதைத்துத் தள்ள தங்கைகளில் ஒருத்தி அதை எடுக்க ஓடினாள். “அதத் தொடாதே! நம்மக் கோத்திரத்துப் பொண்ணு அதத் தொடப்படாது!” என்று அம்மா அவளைத் தடுத்ததும், “ஏன் தொடப்படாது?” என்று எல்லோரும் கேட்க அம்மா அந்தக் கதையைச் சொன்னார்.

“நம்ப கோத்திரத்துலே – அதான் விழுப்பதரிய கோத்திரத்திலே பொறந்த பொண்ணு ஒருத்திய – பெரியநாயகின்னு பேரு, நம்மூர்லேர்ந்து ஆத்துக்கு அக்கரை யில சத்தியவாடிங்கிற ஊர்லே கட்டிக் குடுத்திருந்துது. ஒருதடவ, ஏதோ வீட்டுலே
புருஷங்கிட்டியோ, மாமியார்கிட்டியோ சண்டை – கோச்சிக்கிட்டு அம்மா ஊட்டுக்கு பொறப்பட்டுத் தனியா வந்திருக்கா. குறுக்கே ஆத்தத் தாண்டி இந்த மணலு வழியா வந்தப்போ இப்பிடித்தான் கொமட்டிக்காய் வழியிலே நெறையக் கெடந்திருக்கு. அதுல ரெண்டு மூணை எடுத்து, மாத்தி மாத்தி மேலே எறிஞ்சிப் பிடிச்சி அம்மான ஆட்டம் ஆடிக்கிட்டே வந்திருக்கா. அப்போ அங்க மாடு மேச்சிக்கிட்டிருந்த பையன் ஒருத்தன், காய்களுக்குக் குறுக்கெ மாடுமேய்க்கிற கோல வெளையாட்டா நீட்டி இருக்கான். ஆட்டம் தடப்பட்டு காயெல்லாம் கீழேவுழுந்துடிச்சி. மாட்டுக்காரப் பையன் அதப் பாத்துக் கெக்கலி கொட்டிச் சிரிச்சிருக்கான். இவுளுக்கு ரோஷம்
தாங்கல. ‘நாம வெளையாடுறத ஒரு மாட்டுக்காரப் பையன் தடுக்கறதா! இத ஆரும் அக்கரையிலிருந்து பாத்துக்கிட்டிருந்து புருஷன் வீட்டுல சொன்னா அங்க மாமியாரும் புருஷனும் என்ன நெனைப்பாங்க! முன்னியே புடிக்கல, தகறாரு. இப்போ கேக்க
வாணாம்! யாரோ முன்னபின்ன பழக்கமில்லாமியா கோலக் குறுக்க நீட்டியிருப்பான்னு கதே கட்டிப்பிடுவாங்களே’ ன்னு கவலையாப்போச்சு அவுளுக்கு. அப்பிடி அவதூறு கெளம்பிட்டா இந்த உசிர வச்சிக்கிட்டு எப்பிடி நடமாடுறதுன்னு ஆவேசம் உண்டாயிடுச்சு.
“ஒடனே நெருப்ப மூட்டி அதுலெ எறங்கப் போறேன்னிருக்கா. அந்த மாட்டுக்காரப் பையன் பயந்து போய்ட்டான். ‘என்னடாது! நாம வெளையாட்டா செஞ்சது வெனையாப் போயிடுச்சேன்’னு பதறிப்போயி, ‘தாயி! ஏதோ வெளையாட்டுப் புத்தியிலே இப்பிடிப் பண்ணிப்பிட்டேன். நீ மனசுலே வச்சுக்க வேணாம். இதுக்காகப் போயி உசுர விடுறதா? பத்திரமா ஆயா ஊடுக்குக்குப் போய்ச்சேரு”ன்னு கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிட்டான்.

‘அதெல்லாம் முடியாது! இனிமெ நான் இதத் தாண்டி ஊடு போயிப் படியேற யோக்கித இல்லே! நெருப்புலே எறங்கியே தீருவேங்’ கறா.

“அதுக்குள்ள, மத்தப் பசங்க எல்லாம் ஓடி அண்ட அயல்ல சொல்லி ஊரே தெரண்டு வந்துடுச்சி. அக்கம் பக்கத்து ஊர்க்காரங்களும் ஞாயம் பேசவும், வேடிக்கை பாக்கவும் கூடிட்டாங்க.

“வந்தவுங்க கிட்டெல்லாம் ஞாயம் கேக்குறான் மாட்டுக்காரப் பையன். ‘அவன் சொல்றதும் ஞாயந்தான். ஏதோ வெளையாட்டுத்தனம்! இப்ப என்ன ஆயிடுச்சு? அதுக்காக நெருப்புலே எறங்கறதாவுது?’ ன்னு ரெண்டு மூணு பேர்
சொன்னாங்க. அவங்கெல்லாம் அவ பொறந்த புத்தூருக்காரங்களும் எதிர்க்கரையிலே இருக்கிற நேமத்துக்காரங்களும்தான்.

“ஆனா அவளுக்கு ஒத்துப் பாடறவங்களும் இருந்தாங்க. அவ வாக்கப்பட்ட சத்தியவாடிக்காரங்களும், இக்கரையிலே புத்தூருக்குப் பக்கத்துலே இருக்குற கிளிமங்கலத்துக்காரங்களும், நேமத்துக்குப் பக்கத்துலே இருக்குற கார்மாங்குடிக்
காரங்களும் அவ பக்கம் பேசுனாங்க. ‘பொண்ணு சொல்றது சரிதான். ஒரு மாட்டுக் காரப் பையன் எப்பிடி ஒரு குடுத்தனக்காரப் பொண்ணு வெளையாட்டுலே குறுக்கே வரலாம்? அதனால குல ஆசாரம் கெட்டுப் போச்சு! கட்டுன புருஷனத் தவிர வேத்து ஆம்பிள அவகூட வெளையாடுனதாலே அவளோட புனிதம் கெட்டுப் பொச்சு! நெருப் புலே எறங்கி அதுக்குப் பரிகாரம் காண வேண்டியதுதான்’ னு சொன்னாங்க.

“புத்தூரும் நேமமும் விடலே. ‘இதுலே புனிதம் கெட்டுப் போறதுக்கு என்ன இருக்கு? அநியாயமா, ஆண்டவன் கொடுத்த உசுர இப்பிடி அர்த்தமில்லாம உணர்ச்சிக்கு பலியாக்கக் கூடாது!’ ன்னு மறுத்துப் பேசுனாங்க.

“ஆனா அவ அத ஏத்துக்க மாட்டேன்னுட்டா. தன்ன நெருப்புலே எறங்கக் கூடாதுங்கிறவங்க, தான் பொறந்த ஊட்டுக்குக்கும் குலத்துக்கும் தலமொற தலமொறைக்கும் பழி சேக்கறத்துக்காக சொல்றாங்கன்னு கோவப்படுறா. கோவத்துல அந்த
ரெண்டு ஊர்க்காரங்க மேலியும் சாபங் கொடுக்குறா.

‘நேமம் நெருஞ்சி மொளைக்கட்டும்; புத்தூரு பொகைஞ்சு போகட்டும்’ ன்னு சாபங் குடுக்குறா. தன்ன நெருப்புலே எறங்கிப் பத்தினியின்னு நிருபிக்க ஆதரவு காட்டுன மத்தவங்கள வாழ்த்திச் சொல்லுறா. ‘கிளிமங்கலம் எளமங்கலம் ஆகட்டும்; கார்மாங்குடி கனகதண்டி ஏறட்டும்; சத்தியவாடி சரக்கெடுத்துப் பெருகட்டும்’.

“புத்தூருக்காரங்களும் நேமத்துக்காரங்களும் வாயடைச்சுப்போயி நிக்குறாங்க. அவ நெருப்ப மூட்டி எறங்கிட்டா. ‘அய்யோ, நம்மளாலதான ஒரு பத்தினிப் பொண்ணு நெருப்புல ஏறங்கிடுச்சு! நானும் கூடப்பொறந்த அண்ணனா இதே நெருப்பிலே எறங்கிடுறேன்’ ன்னு அந்த மாட்டுக்காரப் பையனும் அவ பின்னாலியே நெருப்புலே எறங்கிட்டான். எரிஞ்சுப்போன அவங்க ரெண்டுபேருக்கும் இங்கே பக்கத்து இலுப்பத் தோப்புலே செல எழுப்பி வச்சாங்க. அந்த எடம் கோயிலாயிடுச்சு. அண்ணங்காரன் மாதிரி உருகி உசுரவிட்டதால ‘அண்ணன் – பெரியநாயகி’ ன்னு அவம் பேரையும் சேர்த்துப் பேரு வந்துடுச்சு. அண்ணையிலேர்ந்து அந்தப் பொண்ணு கோத்திரத்துலப் பொறந்த பொண்ணுங்க யாரும் இந்தக் கொமட்டிக்காயை தொடறதில்ல. எங்கெங் கெல்லாம் ‘விழுப்பதரிய’ கோத்தரத்துக்காரங்க இருக்காங்களோ அவங்கெல்லாம் அப்பப்ப வந்து குலதெய்வமா இதக் கும்புடுறாங்க!”ன்னு அம்மா கதைய முடிச்சாங்க.

‘அப்புறம் அந்த் சாபம் என்னம்மா ஆச்சு?” என்று தங்கை கேட்டாள்.

“பத்தினிப் பொண்ணு விட்ட சாபமாச்சே – பலிக்காமப் போவுமா? இண்ணிக் கும் நேமத்துக்குப் போனா ஒரே நெருஞ்சி முள்ளாத்தான் இருக்கு. புத்தூரு அடிக்கடி நெருப்புப் புடிச்சிக்கிட்டு புகைஞ்சபடிதானே இருக்கு. கிளிமங்கலம் எப்பிடி வறண்டு காடாக் கெடந்த ஊரு? முன்னல்லாம் நெல்லுக்கு நம்ம ஊருக்குத் தானே வருவாங்க வாங்கிப் போறதுக்கு? இப்போ நெலம ரொம்ப மாறிப்போச்சு.கேணி வெட்டி, ஆயில் இஞ்சின் போட்டு முப்போகமும் நெல் வெளைச்சி ஊருக்கே இளமை வந்துட்டாப்பல – இளமங்கலம் ஆயிப்போச்சு! கார்மாங்குடியும் இண்ணைக்கு வச்தி பெருகி, கல்லுக் கட்டமெல்லாம் மெத்தை வீடாமாறி, பொன்னும் பொருளுமாக் கொழிக்குது. சத்தியவாடியும் கரும்பு போட்டு, வெல்லம் காய்ச்சி, சரக்கெடுதுக்குக்கிட்டு நாடுகண்ட மட்டும்போயி, வித்துக் கொழிக்குது. பொறந்த ஊருதான் போக்கத்துப் போச்சி!”

இப்பொழுது நினைத்துப் பார்த்தால், ஊருக்கு ஊர் இப்படி ஒரு பத்தினிக் தெய்வம் இருப்பது தெரிகிறது. எதற்கோ, எந்தக் கொடுமை காரணமாகவோ தீக்குளித்த பெண்களுக்கு இப்படி ஒரு அங்கீகாரம்! சேத்தியாத்தோப்புக்கு அருகே சென்னை- கும்பகோணம் சாலையில் இப்படி ஒரு பத்தினிக் கோயில் – ‘தீப்பாய்ந்த நாச்சியார் கோயில்’ இருப்பது நினைவுக்கு வருகிறது. இந்தக் காலத்தில் இப்படி தீகுளிக்கிற அல்லது தீக்குளிக்க வைக்கப்படுகிற பெண்களுக்கெல்லாம் கோயில் எழுப்புவதானால் இடம் காணாமல் போய்விடுமோ என்று சிந்தனை ஓடுகிறது.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்