இந்த வாரம் இப்படி : செப்டம்பர் 11, 2003 (ஆங்கிலம் என்ற விலங்கு, ஏரியல் ஷரோனும் இடதுசாரிகளும்)

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

மஞ்சுளா நவநீதன்


ஆங்கிலம் கட்டாயம் , அறிவு கட்டாயமல்ல.

எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர்கள், கணிதப்புலிகள், அறிவியல் வித்தகர்கள், ஆங்கிலத்தில் தேவையான அளவு மதிப்பெண்கள் எடுக்க முடியாததால் மேல்படிப்பு தொடர முடியாமல் போயிருக்கிறது. அறிவைப் பெற ஆங்கிலம் ஒரு அத்தியாவசியமான விஷயம் என்பதாய் தமிழ் நாட்டில் இருப்பது பெரும் வருத்தம் அளிக்கும் ஒன்று. ஆங்கிலம் மூலமாக அறிவு பெறுவது என்பது, ஆங்கிலம் பற்றிய அறிவு பெறுவது என்ற முதல் படியிலேயே தரை தட்டி நின்று விடுகிறது.

இதன் காரணம் அவர்கள் அறிவிலிகள் என்பதல்ல, அவர்களுக்கு சரியாகச் சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லாததால்தான்.

இதனை இரண்டு விதங்களில் அணுகலாம். முதலாவது சரியான ஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிப்பது.

இரண்டாவது ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி என்பது கட்டாயமில்லை என்று ஆக்குவது. உயர்கல்வியில் சேர ஆங்கிலப்பாட மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று ஆக்குவது.

அதில்லாமல் விஞ்ஞானப் பாடங்களுக்கு பதில் எழுதும்போது தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதலாம் என்று விதியை அமல் படுத்துவது, இது போன்ற ஒரு விதி சீனாவிலும், ஜப்பானிலும் இருக்கிறது என்று அறிகிறேன்.

நானும் ஆங்கிலப்பாடத்தில் தட்டுத்தடுமாறித்தான் தேறினேன். ஆனால், கல்லூரியில் சேர்ந்த பின்னரே நான் ஆங்கிலத்தில் கொஞ்சம் போலத் தேர்ச்சி அடைந்தேன். ஆனால், என்னைவிட புத்திசாலியான பலர் ஆங்கிலத்தில் அந்த தட்டுத்தடுமாறிய தேர்ச்சிகூட அடையாதததால் வாழ்வே நசிந்து போயிருக்கிறார்கள். ஒரு முறை பள்ளைப் படிப்பு தவற விட்டால் மீண்டும் இழையைப் பிடிக்குமாறு எந்த முயற்சியும் நடக்கவிடாமல் இந்த ஆங்கில பயமுறுத்தல் கல்வி கற்க விரும்புவோரின் தலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆங்கில ஆசிரியர்களை உருவாக்குவது நீண்டகாலத்திட்டமாக இருந்தாலும், உடனடி நிவாரணமாக ஆங்கிலப்பாடத்தை கட்டாயப்பாடம் என்ற அளவிலிருந்து எடுக்க வேண்டும் என்பது என் கோரிக்கை. பள்ளி இறுதி வகுப்பின் தேர்ச்சிக்கும் ஆங்கில மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப் படலாகாது.

தமிழ் நாட்டில் வர்த்தகம் செய்துகொண்டு, ஆங்கிலச் சுற்றறிக்கைகளை வழங்கும் வங்கிகளையும், கம்பெனிகளையும் கண்டிக்க நாம் முன்வரவேண்டும். ஆங்கிலத்திற்கு பொது வாழ்வில் இருக்கும் முக்கியத்துவத்தைக் குறைப்பது ஒன்று தான்நாம் சுயமரியாதை உள்ளவர்கள் என்பதன் நிரூபணம். விளம்பரப் பலகைகளில் ஆங்கிலம் குறைய வேண்டும்.

ஆங்கில நுனிநாக்கு நகரங்கள் மட்டுமே தமிழகம் அல்ல என்று எப்போது உணரப்போகிறோம் ? அவர்களுடைய பிரச்னைகள் மட்டுமே தமிழகத்தின் பிரச்னைகள் என்று கருதுவதை எப்போது நிறுத்தப்போகிறோம் ?

***

ஏரியல் ஷரோன் ஒழிக – முஷரஃப் வாழ்க : இடது சாரிகளின் கோஷம்

ஏரியல் ஷரோன் வருகையை ஒட்டி மணிப்பூரிலிருந்து தமிழ்நாடு வரை இவர்களால் போராட்டம் நடத்தப்படுகிறது. இஸ்ரேல் எங்கே இருக்கிறது என்று உலக வரைபடத்தில் காட்ட இயலாத படிப்பறிவற்ற முஸ்லீம்கள் கூட இன்று இடதுசாரிப் பிரச்சாரத்தினாலும், இவர்களால் உந்தப்பட்ட முஸ்லீம் மத போதகர்களின் பிரச்சாரத்தினாலும் இன்று இந்தியாவின் பெருநகரங்களில் பேரணி நடத்தி ஏரியல் ஷரோனையும் அவரை அழைத்த வாஜ்பாயி அரசாங்கத்தையும் கண்டித்திருக்கிறார்கள். இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினை என்ன ? அதன் உலகு தழுவிய முக்கியத்துவம் என்ன என்று சிந்தனை இல்லாதவர்கள் கூட இஸ்லாமிய எதிர்ப்பாளர் , யூதர் என்று ஷரோனுக்கு கறுப்புக் கொடி தூக்கியிருக்கிறார்கள்.

ஏரியல் ஷரோன் மிக மோசமாக பாலஸ்தீன் மீது ஆக்கிரமிப்புச் செலுத்துகிறார் என்பதையும், பாலஸ்தீனப் பிரசினையை மிகவும் தீவிரப் படுத்தியதில் ஏரியல் ஷரோனின் பங்கு முக்கியமான ஒன்று என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் ஏரியல் ஷரோனால் இந்தியாவிற்கு என்ன பிரசினை ? முஷரஃப் காஷ்மீரிலும் மற்ற இந்திய நகரங்களிலும் பயங்கர வாதத்திற்குக் காரணமானவர் என்பதால் , இஸ்லாமிய நாடுகளின் சம்மேளனத்தில் கலந்து கொள்ளக் கூடாது எந்த பாலஸ்தீனியத் தலைவராவது குரல் கொடுத்திருக்கிறாரகளா ? காஷ்மீரின் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தைக் கண்டித்து பாலஸ்தீனத் தலைவர்கள் யாராவது குரல் கொடுத்திருக்கிறார்களா ? அதிக முஸ்லிம்கள் வசிக்கும் இநாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய முஸ்லீம்களின் குரலுக்கு இஸ்லாமிய நாடுகளின் சம்மேளனம் வரவேற்பு அளித்து, உரிய அந்தஸ்தினை அளித்துள்ளதா ? இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்பும் முஷரஃபுடன் பேச்சு வார்த்தை நடத்து, அருணாசலப் பிரதேசம் தம்முடைய பகுதி என்று கோரும் சீனாவுடன் நட்புறவு கொள், ஆனால் இந்தியாவுடன் எந்தப் பிரசினையும் அற்ற ஷாரனுடன் சண்டை போடு என்ற கோஷத்தின் தர்க்க நியாயம் எனக்குப் புரியவில்லை.

மாஸ்கோவில் மழை பெய்தால் மயிலாப்பூரில் குடை பிடிப்பார்கள் என்று இந்திய இடதுசாரிகளைப் பற்றி ஒரு விமர்சனம் உண்டு. மாஸ்கோவில் கம்யூனிசம் வீழ்ச்சி பெற்றபின்பு, இப்போது பாலஸ்தீனில் குண்டு விழுந்தால் பம்பாயில் எதிர்ப்பு ஊர்வலம் போவார்கள் என்று கொள்ளலாம்.

தி இந்து இந்தியாவின் ‘தேசியப் பத்திரிக்கை ‘ ஏரியல் ஷரோனை அழைத்ததைக் கண்டித்து ஒரு வழக்கமான தலையங்கம் எழுதியிருக்கிறது. நான் ஒருவருடத்துக்கு முன் எழுதியதில் ஒரு வரிகூட மாற்றதேவையில்லாததை மீண்டும் படிக்கும்போது பார்க்கிறேன். வருத்தமாய் இருக்கிறது.

இஸ்ரேலும் இந்தியாவின் இடதுசாரிகளும் : கோஷங்கள் யாருக்காக ?

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 13 2002 (காவிரி,செப்11, அமெரிக்காவில் முஷாரஃப், கல்லூரிகள்)

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜெயலலிதா உடல் நலக் குறைவு: பலி லட்சக் கணக்கில் விவசாயிகள்

நம் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு மிகச்சரியான நேரத்தில் உடல் நலக்குறைவு வரும். ஊழல் வழக்கு விசாரணைக்கு வரும்போது வயிற்று வலி வரும், ஆங்கிலம் படிக்க முடியாமல் ஆகிவிடும். உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி தான் தப்பிப்பது கூடப் பரவாயில்லை. நீதித்துறையில் உள்ள ஓட்டைகளை – ஓட்டைகள் என்று கூடச் சொல்ல முடியாது- தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிற ஒரு சந்தர்ப்ப வாதம் . ஆனால் லட்சக் கணக்கில் விவசாயிகளும் தமிழ் நாட்டின் உணவுப் பிரசினையும் சம்பந்தப் பட்ட இடத்தில் உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி தமிழ் நாட்டின் முதல்வர் காவிரிக் கூட்டத்திற்கு போகவில்லை என்று செய்தி படிக்கும் போது இது என்ன அரக்கத் தனம் என்று கேட்கத் தோன்றுகிறது.

கோடிக்கணக்கான விவசாயிகள் வயிற்றை இறுக்கப்பிடித்து கொண்டு தண்ணீர் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே 1.25 டி.எம்.சி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இதனைகூடக் காப்பாற்றிக்கொள்ள வக்கில்லாத அரசியல்வாதிகள் இன்று தமிழ்நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு விளிம்பில் இருக்கும் பாண்டிச்சேரி, கேரள முதலமைச்சர்கள்கூட காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பாரதப்பிரதமர் வெளிநாட்டுக்குச் செல்லவேண்டிய அவசரத்தில் கூட இந்த ஆணையத்தை நடத்தியிருக்கிறார். முக்கியமாக இதில் பங்கு பெறவேண்டியது யார் ? தமிழ்நாடு. தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு அன்று பார்த்து உடல்நலக் குறைவு. இவருக்குப் பதிலாகப் பொன்னையன் கலந்து கொண்டிருக்கிறார். பொன்னையனிடம் என்ன சொன்னார் முதலமைச்சர் ஜெயலலிதா. சும்மா தலையாட்டி விட்டு வந்துவிடுங்கள் என்று சொன்னாரா ? ஏன் அவர் அதனை ஒப்புக்கொண்டார் ? அவர் ஒப்புக்கொள்ள முடியாது என்று ஜெயலலிதா போல வெளிநடப்புச் செய்ய வேண்டியதுதானே ? வெளியே வந்துவிட்டு நான் நீதிமன்றம் செல்லபோகிறேன் என்றால் எப்படி ? நான் போய் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைவாக தண்ணீரை வாங்கிக்கொண்டுவந்துவிட்டால் எனக்குக் கேவலம் என்பதால் ஜெயலலிதா போகாமல் இருந்து விட்டாரா ? ஜெயலலிதாவின் சொந்த ஈகோ, தமிழ்நாட்டின் தண்ணீர்த் தேவையை விட முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததுதானே ?

காவிரிப் பிரசினை முன்னுக்கு நிற்கும் போது சொந்த ஈகோவிற்காக சோனியாவை எதிர்த்து அர்த்தமில்லாத போர்க் கொடி உயர்த்தியதே ஒரு அசிங்கம். காவிரி ஆணையத்தில் உள்ள மானிலங்கள் தமிழ் நாடு தவிர காங்கிரசின் கீழ் உள்ளவை. அகில இந்திய அரசியல் நோக்கங்கள் ஜெயலலிதாவிற்கு இருக்கலாம். அதற்காக ஏன் தமிழ் நாட்டின் விவசாயிகளைப் பாதிக்கிற முறையில் இப்படி தான் தோன்றித் தனமாகச் செயல் பட வேண்டும். ஜெயலலிதாவின் ஈகோ தமிழ் நாட்டின் விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க வழி செய்யுமா ?

இது பற்றி மணிசங்கர் அய்யர் எழுதிய கட்டுரை ‘ஹிந்து ‘ பத்திரிகையில் வெளிவந்துள்ளது. தன் எஜமானியைத் திருப்திப் படுத்தும் வகையில் காங்கிரசினால் பிரசினை அல்ல மத்திய அரசு தான் பிரசினை என்று திசை திருப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் சொல்லியிருக்கும் வேறு சில விஷயங்கள் அ தி மு க அரசின் அலட்சியத்தைப் பதிவு செய்கின்றன. பி எச் பாண்டியனை அணுகி காவிரிப் பிரசினையில் எல்லா தமிழக எம் பிக்களும் இணைந்து செயல்படலாமென்று மணி சங்கர் அய்யர் சொன்னாராம். ஆனால் அம்மா கடைசி வரை இது பற்றி எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் முழு நலனைக் கருதி மற்ற கட்சிகளுடைனும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் தான் ஜெயலலிதாவிற்குக் கொஞ்சமும் கிடையாதே.

நாடாளுமன்றத்தில் காவிரிப் பிரசினையை எழுப்ப அ தி மு க எம் பிக்கள் முயல்வதே இல்லை என்று சொல்கிறார் மணி சங்கர் அய்யர்.

ஜெயலலிதாவின் தவறான கொள்கைகளால் ஏற்கனவே நெசவாளிகள் தெருவுக்கு வந்து விட்டார்கள். கல்வித் துறை கிளர்ச்சி செய்கிற நிலைக்கு வந்து விட்டது. ஜெயலலிதாவின் ஈகோவினால் இப்போது விவசாயிகள் பாதிக்கப் படுகிறார்கள்.அடுத்த பலி கடாக்கள் யார் ?

****

செப்டம்பர் 11- நினைவு நாள்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடந்த நிகழ்ச்சியை மக்கள் மனதில் ஆழப் பதியச் செய்யும், ‘நாம் மறக்க மாட்டோம் ‘ என்ற கோஷத்துடன் நினைவு நாள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இது தொலைக்காட்சியில் உலகம் முழுதும் சென்றடைந்தது.இதன் உடனடிப் பயன் ஒரு விதத்தில் புஷ் தலைமையின் கீழ் அமெரிக்க மக்களைத் திரட்டுவதற்காகத் தான். ஒவ்வொரு மரணமும் துயர் மிக்கதே. அதுவும் யுத்தத்தில், வெறுப்பிற்குப் பலியாகி, அர்த்தமற்ற லட்சியங்களுக்காகப் போராடி ஒட்டுமொத்தமாக மனிதக் குழுக்கள் இறக்கும் போது அதன் துயர் இந்தக் காரணங்கள் மீண்டும் எழக்கூடாது என்பதற்காக இருப்பது தான் சிறப்பு. ஆனால் ஈராக் யுத்தத்திற்கு தயாரிப்பில் முனைந்த நிலையில் புஷ்ஷின் இந்த நினைவு நாள் நிகழ்ச்சிகள் ஓர் இருண்ட நிழலை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன. அமெரிக்க நகரில் இறந்த மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் ஆஃப்கானிஸ்தானில் மக்களைக் கொன்றாகிவிட்டது. இதற்கு அது சரி என்ற ஒரு தர்க்கம் . ஆனால் இது முழுக்க நிற்காவிடிலும், பெருமளவில் நிற்கக் கூடும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இந்த அஞ்சலியின் போது போரில் மாண்ட கோடிக்கணக்கான மக்களை நினைவுகூரவேண்டும். இருண்டகாலம் தொடங்கி, செங்கிஸ்கான் வழியாகி, வியத்நாம் வரையில் போர்க்கொலைகள் நீள்கின்றன. பங்களா தேஷ், குஜராத் என்று தம்முடைய அரசினாலேயே மக்கள் கொல்லப் படுகிறார்கள். தேசத்தின் எல்லைக் கோடுகளுக்காக சுதந்திரம் பெற்ற இரு நாடுகளுக்கிடையில் பிண ரெயில்கள் ஓடியிருக்கின்றன.இன மதக் கலவரங்களில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். எத்தனை காந்திகள் இருந்தாலும் கடைசியில் வெற்றி பெறுவதென்னவோ வெறுப்புத் தத்துவங்களும் , இரும்பு மனிதர்களாய் அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மனிதர்களும் தான். ஜனநாயகம் உண்மையான அர்த்தத்தில் மலரவும் அடிமட்ட மனிதன் அறிவு பெற்று விழிப்புப் பெற்று தன்னைச் சுற்றியுள்ள சூழலின் நடப்பிற்குப் பொறுப்பேற்கவும் முன்வருஇம்படி சமூக நிலை மாறினால் தான் இது குறைய வழி உள்ளது. ஆனால் அப்போதும் கூட ஒரு சிறு குழு , அல்லது தனிமனிதன் பெரும் அழிவு நடத்தக் கூடிய அலவு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. இது தான் இன்னமும் கவலை அளிக்கும் விஷயம்.

*********

அமெரிக்காவில் முஷரஃப் , வாஜ்பாய்

அமெரிக்காவில் இந்த இரு தலைவர்களும் சென்றது பற்றி அமெரிக்க பத்திரிகைகளும் சரி, தொலைக் காட்சி வரிசைகளும் சரி கண்டுகொள்ளவே இல்லை. இதற்குக் காரணம் எளிமையானது. இஸ்ரேலில் நடக்கும் நிகழ்ச்சியும், பயங்கரவாதம் பஆற்றிய நிகழ்ச்சிகளும், ஈராக் மீது யுத்தமா இல்லையா, சதாம் உசேனைப் பதவியிறக்கம் செய்வதா இல்லையா என்று தான் இவற்றிற்குக் கவலை. இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் அணுகுண்டு வெடிக்கும் வரையில் இந்த நாடுகள் பற்றி இவற்றிற்குக் கவலை இல்லை. இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முஇடியாது.

வழக்கம் போல காஷ்மீர் காஷ்மீர் என்று முஷரஃப் குரல். வழக்கம் போல எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று வாஜ்பாய் குரல். புதிதாய் எதுவும் இல்லை.

************

அரசு கல்லூரிகள் – பல்கலைக் கழகங்களுடன்

கல்வியின்மீது அ தி மு க அரசின் தாக்குதல் பல விதங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கல்வி என்பது ஒரு சமூகத்தின் செலவினம் அல்ல. அது ஒரு முதலீடு. கல்வியில் லாப நோக்கு மட்டுமே பார்க்கிற ஒரு சமூகம் அழிவை நோக்கித் தான் போகிறது என்று பொருள்.

இகிராமத்தில் உள்ள பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூடுவதும், ஆசிரியர் நியமனத்தில் சுணக்கம் காண்பிப்பதும் நல்லதல்ல. ஏற்கனவே ஆர் ஈ சி போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தைக் கெடுக்கும் வழியில் சில நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அரசுக் கல்லூரிகளைப் பல்கலைக் கழகங்களுடன் இணைப்பதால் மாணவர்கள் செலுத்தும் கட்டணம் அதிகரிக்கும் என்ற நியாயமான பயத்தை மாணவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதில்லாமல் ஊழியர்களின் ஊதியம் எப்படி பாதிக்கப் படும் என்பதும் கேள்விக்குறியாய் உள்ளது.

***********

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

மஞ்சுளா நவநீதன்


***

காவிரி நீர் : நீதிமன்றத்துக்கு நன்றி : காங்கிரசுக்கு இகழ்ச்சி

சுப்ரீம் நீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என்றால் கர்நாடக அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என்று வாஜ்பாய் சொன்னதால்தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சோனியா காந்தி சொல்லி அல்ல. சோனியா காந்தி இதனைப் பற்றிக் கவலைப்பட்டதாகவோ, இந்த பிரச்னையில் ஒரு நிலைப்பாடு எடுத்ததாகவோ தெரியவில்லை.

அனைத்திந்திய கட்சி என்றால் ஓரளவுக்கு அனைத்து இந்திய மக்களுக்கும் சாதகமான ஒரு முடிவு எடுக்கவும், விட்டுக்கொடுக்கத் தூண்டவும்தான் என்பது பலர் சொல்லி வரும் காரணம். இந்த காவிரிப் பிரச்னையில் ஒரு அனைத்திந்தியக் கட்சி, பாரம்பரியம் மிக்க கட்சி, சுதந்திரம் வாங்கிக்கொடுத்தக் கட்சி என்று பேசப்படும் காங்கிரஸ் செய்து இருப்பது மிகவும் கேவலமானது.. கர்நாடகாவில் காங்கிரஸ் ஏற்கனவே ஆட்சியில் இருக்கிறது. என்னதான் பிரம்மப் பிரயத்தனம் பண்ணினாலும் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை. இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டிற்குச் சாதகமாக காங்கிரஸ் முடிவு மேற்கொள்ளுமா என்ன ? கர்நாடகத்தில் காங்கிரசுக்கு இருக்கிற செல்வாக்கை விட்டுக் கொடுத்துவிடுமா என்ன ?

இதற்கு நடுவில், வீரப்பன் ஒரு கன்னடத் தலைவரைக் கடத்த, பிரச்னை தீவிரமாகி கன்னட-தமிழர் பிரசினையாகும் ஒரு சூழ்நிலை இருக்கிறது. இது யாருக்கும் நல்லதல்ல.

***

மனீஷா கொய்ராலா : டூப்ளிகேட் நடிகையும், கவர்ச்சி மீறலும்

மனீஷா கொய்ராலாவின் வேண்டுகோளின் படி , மனீஷா கொய்ராலாவின் அனுமதியில்லாமல் அவர் பெயரைப் பயன்படுத்தியதற்காக, படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இருந்தும் அந்த தடை உத்தரவை மதிக்காமல் அந்தப் படம் திரையிடப்பட்டிருக்கிறது. இதனை சிவசேனை கட்சியினரும் பெண்கள் சங்கத்தினரும் ஆட்சேபித்து, திரைப்படம் முன்னர் கலவரம் செய்திருக்கிறார்கள். அஷோக் மித்ரா என்ற பொருளாதார நிபுணர் சிவசேனையைக் கண்டித்து டெலிகிராஃபில் கட்டுரை எழுதியிருக்கிறார். அசோக் மித்ரா மார்க்ஸிஸ்ட் கட்சியின் சார்பானவர் என்ற ஒரே காரணத்திற்காக சிவசேனையைக் கண்டித்திருக்க வேண்டும்.

சிவசேனையின் செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு இதில் சிவசேனையின் ஈடுபாடு ஏன் என்பது நிச்சயம் புரிந்திருக்கும். எவர் காலிலோ மனீஷா விழுந்திருக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்கு ஏன் அசோக் மித்ரா வக்காலத்து வாங்க வேண்டும். எப்படியோ சிவசேனையைத் தாக்க வேண்டும் என்ற ஒரே காரணம் தான்.

***

பாகிஸ்தானின் சர்வாதிகாரி : காஷ்மீர் தேர்தல் பற்றி

வெற்றி பெறும் வாய்ப்புள்ள பேநஸீர் புட்டோ, நவாஸ் ஷரீஃப் பாகிஸ்தானுக்குள் வரவிடாமல் செய்து விட்டு , தேர்தல் பம்மாத்தை நிறைவேற்றும் சர்வாதிகாரி முஷரஃப் காஷ்மீர் தேர்தல் பற்றிக் கருத்துச் சொல்வது அபத்தம். தேர்தல் நடப்பதற்கு முன்பே பிரதமரை பதவி நீக்கம் செய்யும் உரிமையைத் தனதாக்கிக் கொண்டு விட்டார் முஷரஃப்.

காஷ்மீர் தேர்தல் அமைதியாக நடந்தேற வேண்டும் என்று அமெரிக்காவின் ஆர்மிடா போன்றவர்கள் முஷரஃபிடம் கண்டித்துச் சொல்லியிருக்கிறார்கள். பாகிஸ்தான ஆதரவு அணிகளைத் தவிர மற்ற காஷ்மீர் தலைவர்கள் பாகிஸ்தானின் உளவுத்துறையால் நீக்கப் படுவதும் அவ்வப்போது நிகழ்கிறது. ராணுவ ஆட்சி நடக்கும் பாகிஸ்தானை காஷ்மீர் மக்கள் விரும்புவதாக உலகமும் நம்பத் தயாரில்லை.

***

ஸ்டாலின் பதவிப் பறிப்பும் ஜெயலலிதாவின் அவசரக் கோலமான சட்டம்

பின் தேதியிட்டு அமல் படுத்த முயன்றதால் மேயர் பதவிப் பறிப்புக்காக இயற்றப் பட்ட சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வந்துள்ளது. அதில்லாமல், மேயரின் தகுதிகள் பற்றி சட்டங்களில் தெளிவில்லை என்பதும் மாநகராட்சி கலைக்கப் படவில்லை அதனால் ஸ்டாலின் பதவிப் பறிப்புச் செல்லாது என்றும் தீர்ப்பு வந்துள்ளது.

இனிமேலாவது கருணாநிதி குடும்பத்தைப் பழிவாங்கும் செயலை விட்டுவிட்டு ஜெயலலிதா ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும். வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு அமைப்புகளில் நிர்வாகம் செய்வதும், வெவ்வேறு கட்சிகள் இணைந்து மக்கள் பிரசினைகளைத் தீர்க்க முன்வந்து செயல் படுவதுமே ஜனநாயகத்தின் அடையாளங்கள். தானே எல்லாம் என்று தன்னை முன்னிலைப் படுத்திய ஜெயலலிதாவின் போக்கு நாட்டுக்கும், நிர்வாகத்துக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும்.

******

ஈராக் மீது தாக்குதல் : அமெரிக்காவின் அடுத்த வியத் நாம் ?

ஜார்ஜ் புஷ் ஈராக் மீது நடத்தவிருக்கும் – நடத்தியிருக்கும் — தாக்குதல்கள் அர்த்தமற்றவை. ஆபத்தானவை. அமெரிக்க மக்களும் இதற்கு ஆதரவளிக்கவில்லை. ஏற்கனவே இஸ்லாமிய மக்கள் அமெரிக்காவை எதிரியாய்ப் பார்க்கிறார்கள். அவர்களை இந்தத் தாக்குதல் இன்னமும் அன்னியப் படுத்திவிடும்.

சதாம் உசேனைப் பதவி நீக்கம் செய்வதும் முடிகிற காரியமில்லை. நாடு தாக்கப் படும் என்ற அபாயம் இருக்கும் போது அப்போதிருக்கிற தலைமை பின்னால் தான் நாடு திரண்டு நிற்கும். சதாம் உசேனுக்கு இன்னமும் மக்கள் ஆதரவு இருக்கிறது. ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் என்று பார்த்தால், பாகிஸ்தான், சீனா, வட கொரியா, இந்தியா என்று பல நாடுகள் உள்ளன. ஈராக் மீது புஷ்ஷின் பாய்ச்சல் அமெரிக்க நலனையும் முன்னிறுத்தவில்லை. உலகக் கருத்தையும் பிரதிபலிக்கவில்லை. புஷ்ஷின் தனிப்பட்ட யுத்தமாகியிருக்கிறது இது.

இந்தியா ஈராக் போருக்கு ஆதரவு கிடையாது என்று தெரிவித்துள்ளது.

****

மேற்கு வங்கம் : அரசு தொழிற்சாலைகள் விற்பனை

மத்திய அரசு தொழிற்சாலைகளை தனியார் வசம் ஒப்புவித்து வருவது குறித்து கடுமையான விமர்சனம் செய்து வரும் மார்க்ஸிஸ்ட் கட்சி , மேற்கு வங்க அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளை தனியாருக்கு விற்க ஏற்பாடு செய்திருக்கிறது. மத்திய அரசு தொழிற்சாலைகளிலும் ,அரசு அலுவலகங்களிலும் கட்டாய ஓய்வுத் திட்டத்தைக் கொண்டு வந்த போது அதையும் மிகக் கடுமையாய் விமர்சித்தது மார்க்ஸிஸ்ட கட்சி. ஆனால் மேற்கு வங்கத்தில் இப்போது மார்க்ஸிஸ்ட் கட்சியே கட்டாய ஓய்வைக் கொண்டு வந்திருக்கிறது

இதையெல்லாம் விமர்சிக்கக் கூடாது. பெரும் நிதிநிலைச் சிக்கல் மேற்கு வங்க அரசிற்கு வளர்ச்சியின்மைக்குக் காரணம் மத்திய அரசு தான் என்று நிருபம் சென் எழுதியிருக்கிறார். நஷ்டத்தில் இருக்கிற நிறுவனங்களைத் தான் விற்கிறோம் என்று இவர் சொல்கிறார். கிட்டத்தட்ட எல்லா அரசு நிறுவனங்களுமே மேற்கு வங்கத்தில் நஷ்டத்தில் தான் உள்ளன. இவர் மேற்கு வங்கத்தின் தொழில் துறை அமைச்சர். மார்க்ஸிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வமான ஏடான ‘இந்து ‘வில் இவர் கட்டுரை வந்திருக்கிறது..

இதே மத்திய அரசுக் கொள்கைகளின் கீழே தான் ஆந்திராவும் இருக்கிறது. அது வளர்ச்சி அடைந்துதான் இருக்கிறது. ஏன் மேற்கு வங்கத்தில் வளர்ச்சி இல்லை. தம்முடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவது ஏன் ?

*******

சீனாவில் இணையத்திற்குத் தடை

‘மக்கள் ‘ சீனத்தில் இணையத்திற்குத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. இணையத்தின் வழியாக தேடுபவர்கள் உபயோகிக்கும் ‘கூகுள் ‘ என்ற தேடும் இணையதளத்தை சீனாவில் வேலை செய்ய முடியாமல் செய்திருக்கிறார்கள். சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாடு சமீபத்தில் நடைபெறவிருக்கிறது. அதிகாரச் சண்டை நடக்கக் கூடும் அதில்லாமல், சீனாவில் ஜனநாயகம் வேண்டும் குழுக்களும், ஃபாலுன் காங்க் போன்ற இயக்கங்களும் சீனா பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ளக் கூடாது என்பது சீன அதிகாரவர்க்கத்தின் நோக்கம்.

வழக்கமாகவே சீனாவின் தலைமை பற்றி விமர்சனம் செய்கிற இணையதளங்களைப் பறிமுதல் செய்வதும், செய்திகளை இருட்டடிப்புச் செய்வதும் சீனாவின் போக்குத் தான்.

இந்தச் செய்தி உலகமெங்கும் பத்திரிகைகளில் முதன்மையாய் வெளிவந்திருக்கிறது. இந்தியாவின் ஏடுகளிம் , இந்துவும் சரி மற்ற ஏடுகளும் சரி மிக விசுவாசத்துடன் இது பற்றி மூச்சே விடவில்லை. வாழ்க பத்திரிகை சுதந்திரம். – செய்திக் கட்டுப்பாடு.

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 2 2002

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

மஞ்சுளா நவநீதன்


சொத்துக் கணக்கும் காங்கிரஸ் அரசியலும்

முதலில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் வலதுசாரிகள், இனவாதக் கட்சிகள், மதவாதக்கட்சிகள், சாதிவெறிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு சட்டத்தை கொண்டுவர ஒத்து ஊதினார்கள். சோனியா வாயைத் திறக்கவில்லை. பிறகு சட்டத்தை எழுதி மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினார்கள். வழக்கம்போல அங்கும் எல்லோரும் அந்தச் சட்டத்தை கொண்டுவரும் அவசரத்தில் இருந்தார்கள். எல்லாப்பத்திரிக்கைகளும் கண்டித்து எழுதின. மணி சங்கர் ஐய்யர், டெலிகிராஃப் பத்திரிக்கையில், எல்லாப் பத்திரிக்கைகளும் கூடி இந்தச் சட்டத்தை எதிர்ப்பதை கண்டித்து எழுதினார். இந்தியாவின் சிறந்த குடிமக்கள், பல வகைகளிலும் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் கூடி, குடியரசுத்தலைவருக்கு அந்த சட்டத்தை திருப்பி அனுப்பி விடும்படி கேட்டுக்கொண்டார்கள். அதற்கும் சோனியா வாயைத் திறக்கவில்லை. பிறகு குடியரசுத் தலைவருக்கு முன்னால் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. குடியரசுத்தலைவர் அந்தச் சட்டத்தை மேலும் விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பினார். சோனியா வாயைத் திறக்கவில்லை. மமதா பானர்ஜி மட்டுமே அந்தச் சட்டத்துக்கு மக்களிடம் எதிர்ப்பு இருக்கிறது; அதனைச் சட்டமாக ஆக்கக்கூடாது என்று சொன்னார். சட்டம் மீண்டும் குடியரசுத் தலைவரிடம் திருப்பி அனுப்பப்பட்டது. இதன் பின்னர் இதில் வேறு வழியின்றி குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டே ஆகவேண்டும். குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதும், சோனியா ‘இந்த சட்டத்துக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை. இதனை நாங்களும் சேர்த்து ஆதரித்தோம் என்று பத்திரிக்கைகள் எழுதுவது தவறு ‘ என்று வீராவேசமாக முழங்கியிருக்கிறார். சோனியா இது சட்டமாக ஆவதற்கு முன்னால் இது போல வீராவேசமாக முழங்கியதை வேறு பத்திரிக்கைகள் என்றால் விட்டிருக்கும். இந்துவும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் எப்படி விட்டிருக்கும் ? சொன்னாரா சொல்லவில்லையா ?

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக இருக்க முயற்சிக்கும் காங்கிரசுக்கு இது முதல் அல்ல. சட்டத்தின் மூலம் கிடைக்கும் விஷயங்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், அதே நேரம் மக்கள் விருப்பத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டுவர தான் உதவவில்லை என்ற நல்ல பெயரும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறது காங்கிரஸ். இன்னும் குடி முழுகிப் போய்விடவில்லை. காங்கிரஸ் ஆட்கள் எல்லோரும் இனி உச்ச நீதி மன்றம் கேட்டுக்கொண்டபடி தங்கள் சொத்து விபரங்கள், படிப்பு விபரங்கள், குற்ற விபரங்கள் அனைத்தையும் பத்திரிக்கையில் வெளியிட்டு விட்டால் தீர்ந்தது.

விரைவில் எதிர்பாருங்கள். மூப்பனார் குடும்பச்சொத்து எவ்வளவு, வாழப்பாடி ராமசாமி எவ்வளவு படித்தவர், இளங்கோவன் சொத்துக் கணக்கு என்ன – இன்னும் இதர காங்கிரஸ் வேட்பாளர்கள் மீதுள்ள குற்றப்பத்திரிக்கைகள் இருந்தால் அவை என்ன என்ன என்பவற்றை அவர்களே பத்திரிக்கையில் வெளியிடுவார்கள்.

***

வெளிநாட்டுக் காரர் பிரதமர் ஆவதற்கு ஜெயலலிதா ஆதரவு – உண்டா இல்லையா ?

திடாரென்று ஜெயலலிதாவிற்கு சோனியா வெளிநாட்டு ஆள் என்பது ஞாபகம் வந்துவிட்டது. செலக்டிவ் அம்னீசியா ஜெயலலிதாவிற்கு என்று யாரும் சொல்லலாம். 90 கோடிப் பேரில் வேறு யாரும் இல்லையா என்று கேட்டிருக்கிறார். ஆறு கோடி மக்களில் ஜெயலலிதா – கருணாநிதி தவிர வேறு யாரும் முதல்வார் ஆவதற்குத் தகுதி உள்ளவர்கள் யாரும் இல்லையா என்றும் நாம் கேட்கலாம்.

சோனியா பிரதராக முன்பு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று சொல்கிறார் ஜெயலலிதா. சொன்னதன் ஆதாரம் இதோ என்று காங்கிரஸ் பழைய கடிதங்களை நீட்டுகிறது. காங்கிரஸ் இதே அவசரத்துடன் கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசிடம் சிபாரிசு செய்து காவிரித் தண்ணீரை வாங்கிக் கொடுத்திருந்தால் நன்றாயிருக்கும். ஒரு மகாராணிக்காக இன்னொரு மகாராணிக்கு வக்காலத்து வாங்கும் அவசரம் தமிழ் நாட்டின் விவசாயிகள் வாடும் போது காங்கிரசுக்கு தெரியவராது.

த மா க-காங்கிரஸ் இணைப்பிற்குப் பிறகு கொஞ்சம் காங்கிரசுக்கு ஆதரவு கூடியிருக்கிறது. இன்னும் நான்கு வருடங்களுக்கு காங்கிரஸ் தயவு ஜெயலலிதாவிற்குத் தேவைஇல்லை. இப்போது வழக்குகளுக்காக பா ஜ க ஆதரவு தேவைப் படுகிறது. இந்த அரசியலின் இடையில் விவசயிகளும், நெசவாளிகளும் துயர் படுவது இந்த அரசியல் வியாதிகளுக்கு எங்கே தெரிகிறது ?

***

இந்துவில் : சீனா வாழ்க , வட கொரியா வாழ்க

ராஜமோகன் இந்துவில் ‘திபெத்தை சீனா திறந்து விடுகிறது ‘ என்பதாகக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் The last few years have also seen a reasonable amount of social stability in Tibet, and China is sure that its side of the story can now be told with some credibility. அதாவது இது என்னவென்றால், சீனா திபெத் பற்றிச் சொன்னதை நம்பமுடியாதபடி இதுவ்ரை இருந்தது. இப்போது கொஞ்சம் நம்பகத் தன்மை வந்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். என்ன அர்த்தம் ? இதுவரை கிரடிபிளிடி இல்லை என்றா ? இதுவரை அப்படி கிரடிபிளிடி இல்லை என்று இந்துவிலும் ஃப்ரண்ட்லைனிலும் எத்தனை கட்டுரைகள் வந்திருக்கின்றன ?

இத்தோடு கூட, ஃப்ரண்ட் லைன் பத்திரிக்கையில் வட கொரியாவில் தேனும் பாலும் ஓடுவதாக எழுதியிருக்கிறார்கள். அது கூட பரவாயில்லை. வடகொரியாவுக்கு சோஷலிஸத்தை கொண்டுவந்த கிம் இல் சுங் என்ற சர்வாதிகாரியை மக்கள் கிரேட் லீடர் என அழைப்பது நம் ஊரில் மகாத்மா என்று காந்தியை அழைப்பதுபோன்று என்று எழுதியிருக்கிறார். புரட்சித்தலைவர் என்று எம்ஜியாரை சொன்னதுபோல என்று எழுதிருந்தாலாவது ஓரளவு பொருத்தமாக இருந்திருக்கும். எனக்குக் கூட ஃப்ரண்ட்லைனில் இடம் கொடுத்தால், போல்பாட்டை மகாத்மா என்று எழுதிப் பார்க்கலாம். கம்யூனிஸ்ட கட்சியின் அறிக்கையை வெளியிட ஃப்ரண்ட்லைன் பத்திரிகை எதற்கு ? மகாத்மாவுடன் நெல்சன் மண்டேலாவை, மார்ட்டின் லூதர் கிங்கை ஒப்பிடுவதில் அர்த்தம் உண்டு. ஓர் அரசில் சர்வாதிகாரியாக உள்ள ஒருவரை, ஜனநாயகம் என்றால் என்ன பொருள் என்று கேட்கும் ஒருவரை மகாத்மா காந்த்தியுடன் ஒப்பிட்டு இந்தியப் பத்திரிகையில் எழுதவெண்டுமென்றால் அபத்தத்தின் எல்லையைத் தொடும் ஆசை இருக்கும் ஒருவரால் தான் இது முடியும். இத்தகைய அபத்தம் என் ராம் அல்லாமல் வேறு யாரால் செயல் படுத்த முடியும் ?

On the 90th anniversary of the birth of Kim II Sung, the heroic young revolutionary who fought in and led the resistance to both Japanese and U.S. imperialism, built up the Workers ‘ Party of Korea and steered the country on the path to socialism, and who is universally and lovingly addressed as ‘the Great leader ‘ (not unlike the word ‘Mahatma ‘ that comes before the name ‘Gandhi ‘ in India), you see a bastion of socialism that is not likely to fall with a huff and puff from Washington.

****

தமிழ்க் கலாசாரம் பரவுகிறதா ?

பாபா படத் தோல்வியினால் ஒருவர் தமிழ் நாட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

நாகப்பா கடத்தப்பட்டதால் ஒரு இளைஞர் மனம் உடைந்து கர்நாடகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு கலாச்சாரம் வெளியே பரவுகிறது போலும். தயவு செய்து இந்த நபருக்கு பண முடிப்பு வழங்கி பலரையும் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டாமல் நாகப்பா கட்சியும், கர்னாடக அரசும் இருக்க வேண்டும்.

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 30,2001 (சிமி, ஆஃபன், பன்னீர்செல்வத்தின் போட்டோ, உள்ளாட்சித் தேர்தல் அணிகள், தடா)

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் – தடையும் துணையும்

இஸ்லாமிய மாணவர் இயக்கம் தடை செய்யப் பட்டுள்ளது. பின் லேடனின் கொள்கையைப் பின்பற்றி தூய இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்ப முயலும் இவர்களை பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்ற காரணத்திற்காக த்டை செய்து தலைவர்கள் சிறையில் அடைக்கப் பட்டிருக்கின்ற்றனர். கான்புரில் நடந்த வன்முறையின் மூல காரணம் இவர்கள் என்றும் சொல்லப் படுகிறது.

எல்லா வன்முறைத் தத்துவங்களும் உயர்ந்த லட்சியத்தைக் காட்டிக் கொண்டு தான் வருகின்றன. கடவுளின் சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காகக் கொன்றாலும் தப்பில்லை, சமத்துவம் ஸ்தாபிப்பதற்காக வன்முறை, போரை முடிவு பண்ணப் போர் என்று தான் இப்படிப்பட்ட கோட்பாடுகள் பேசுகின்றன. மதச் சார்பின்மையில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மதச் சார்பின்மையில் நம்பிக்கை இல்லை என்பதன் பொருள் மற்ற மதங்களுக்கு வாழும் உரிமையில்லை என்பதும் கூட. ஆஃப்கானிஸ்தானின் மதவெறி அரசை இந்தியாவில் ஸ்தாபிப்பது என்ற ‘உன்னதமான ‘ லட்சியத்திற்காக பயங்கரவாதிகளை ஆதரிப்பது என்பது இவர்களின் போக்கு.

துரதிர்ஷ்டவசமாக இஸ்லாம் என்ற பெயரை இவர்கள் தம் நிறுவனப் பெயரில் தாங்கியிருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மற்ற இஸ்லாமிய அமைப்புகள் இவர்களுக்கு ஆதரவாய்ப் பேசுகின்றன. ஜனநாயக எதிர்ப்புக் குரல் எந்த மதப் போர்வை போர்த்தி வந்தாலும் பாசிசக் குரல் என்பதை இவர்கள் அழுத்தமாய்ச் சொல்ல வேண்டும்.

ஆனால் தடை விதிப்பது மட்டுமே இவர்களைச் செயலிழக்கச் செய்து விடும் என்று தோன்றவில்லை. இஸ்லாமிய இயக்கங்களில் மிதவாதக் குரல் உரக்க எழுந்து ஒரு நல்ல தலைமை தோன்றி வலுப் பெற்றால் ஒழிய இப்படிப் பட்ட அமைப்புகள் மக்களின் மனதை மூளைச் சலவை செய்துகொண்டு தான் இருக்கும்.

***********

ஆஃப்கானிஸ்தான் , பாகிஸ்தான் : என்ன உறவு ?

ஆஃப்கானிஸ்தான் கிட்டத்தட்ட பாகிஸ்தான் படைத்து உலவ விட்ட ஃப்ராங்கென்ஸ்டான் என்று சொல்லலாம். ஆஃப்கானிஸ்தானில் அரசாட்சி மாற்றத்திற்கு தான் ஆதரவு அளிக்க முடியாது என்ற பாகிஸ்தானின் அறிவிப்பு இத்தன்மையானது தான். அமெரிக்காவிற்கு உதவி செய்ய இந்தியாவைக் காட்டிலும் தனக்கே உரிமை அதிகம் என்று தன் பேச்சில் அடிக்கடி குறிப்பிட்டார் முஷரஃப். ஆஃப்கானிஸ்தானில் அமைந்துள்ளது பாகிஸ்தானின் ஆதரவில் இயங்கும் பொம்மை அரசு என்பது இந்தியாவின் விமானம் கடத்தப் பட்ட போது நடந்த நிகழ்ச்சிகளில் தெளிவாகவே தெரிந்தது. இப்போதும் கூட பாகிஸ்தானின் நிலைபாடு தாலிபான் அரசு கவிழ்க்கப் படக்கூடாது வேறெந்த அரசும் பதவி ஏற்கக் கூடாது என்பதே.

*******

முதல்வர் பன்னீர் செல்வத்தின் போட்டோ இல்லை

பழைய முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோக்களை அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற முடியாததற்கு அரசு அதிகாரிகள் சொல்லும் காரணம் இது: முதல்வர் பன்னீர் செல்வத்தின் போட்டோ கிடைக்கவில்லை. ம்ம். ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் முதல் வேலையாய் தன்னைப் படம் எடுத்து அனுப்பி வைத்தார். முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு இன்னும் நேரமில்லை போலிருக்கிறது.

இந்த முதல்வர் போட்டோ பாலிசியைக் கொஞ்சம் திருத்தினால் தேவலாம். இந்தப் பன்னீர் செல்வம் போய் அடுத்த கண்ணீர் செல்வம் எப்போது வருவார் என்று தெரியாதை நிலையில் , இது ஒரு மகா தலைவலி. இறந்து போன தலைவர்களின் போட்டோவை வைத்து திருப்தி அடையலாம். ஆனால் நம் தலைவர்களின் ஈகோ அதற்கு இடம் கொடுக்குமா ?

*******

கற்காலம் நோக்கி ஆஃப்கானிஸ்தான்

ஆஃப்கானிஸ்தானிலிருந்து லட்சக் கணக்கான மக்கள் துரத்தப் பட்டு அகதியாகிவிட்டனர். எப்படி வங்கதேசப் பிரசினையின் போது லட்சக் கணக்கில் மக்கள் இந்தியாவில் சரண் அடைந்தார்களோ அது போல இப்போது ஆஃப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானிலும் ஈராக்கிலும் சரண் அடைந்திருக்கிறார்கள். செப்டம்பர் 11க்குப் பின்பு இன்னமும் பீதியடைந்து பாகிஸ்தானின் எல்லையில் காத்துக் கிடக்கிறார்கள். பெரும் பஞ்சம் ஆஃப்கானிஸ்தானில் வரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். அவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத தாலிபான் அரசு தூய இஸ்லாம் பேசிக் கொண்டிருக்கிறது என்பது தான் சோகம். அதில்லாமல் மக்களுக்கு உதவி செய்ய வந்த ஊழியர்களையும் கிறுஸ்துவத்தைப் பரப்ப முயன்றார்கள் என்று சிறையில் தள்ளியிருப்பதால், எல்லா நிவாரணப் பணியாளர்களும் வெளியேறி விட்டனர்.

***********

உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை அணிகள்.

உள்ளாட்சித் தேர்தலில் பழைய வியூகங்கள் செயல் படவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் தனியாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட அணி தனியாகவும், ம தி மு க தனித்தும் நிற்கின்றன. உள்ளாட்சித் தேர்தல்கள் பெருமளவில் இல்லாமல், ஊருக்குள் சில ஆயிரம் வாக்குகளுள்ள தொகுதியில் நடப்பதால் அந்தந்த இடங்களில் செல்வாக்குள்ள சிறு கட்சிகள் கூட வெற்றிவாய்ப்புப் பெறும் என்பது ஒரு நல்ல விஷயம். அதிகாரம் பரவலாக்கப் படும் . இதற்கிடையில் ஊராட்சித் தலைவர் பதவிகள் ஏலம் விடப்படுவதாய்ச் செய்திகள் வந்துள்ளன. இது ஜன நாயக விரோதம் என்பது மட்டுமல்ல, கிட்டத்தட்ட லஞ்சம் கொடுத்து வாக்குகள் வாங்குவதற்குச் சமானமானதாகும். இது தடுப்பதற்கு அரசில் என்ன முயற்சி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

************

107 தடா கைதிகள் விடுதலை

பொய்வழக்கில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தக் கைதிகள் விடுதலையாகியிருக்கின்றனர். இந்தப் பொய்வழக்கின் மூல காரணம் யார் எனக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை பெற்ற இவர்களுக்கு அரசாங்கம் உரிய நஷ்ட ஈடு வழங்கவும் வேண்டும். பகிரங்கமாக இவர்களிடம் அரசு மன்னிப்பும் கேட்க வேண்டும்.

*********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி — செப்டம்பர் 16, 2001

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

மஞ்சுளா நவநீதன்


இரண்டு கட்டடங்கள் – இரண்டு விமானங்கள்

உலக வர்த்தக மையம் நியூ யார்க் நகரில் நெடிதுநின்ற உலகச் சின்னம் 110 மாடிக் கட்டடம்; பொருளாதார மையம்; ஏறத்தாழ 50000 பேர்கள் வேலை செய்கிறார்கள். சுமார் 50000 மக்கள் இதை வேடிக்கை பார்க்க தினம் வருகிறார்கள். இதைக் கடந்து ஏறத்தாழ 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதில் இருக்கும் மின்சார ரயிலில் இறங்கி நகரத்துக்குள் வேலைக்கு வருகிறார்கள். தற்கொலைப் படையின் விமானிகள் விமானங்களைக் கைப்பற்றி கட்டடத்தில் கொண்டு சென்று மோதி கட்டடத்தைத் தரைமட்டமாக்கித் தீக்கு இரையாக்கினார்கள் . கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர் இந்தக் கட்டடத்தில் மரணமுற்றார்கள். இதில்லாமல் பெண்டகன் கட்டடத்தில் இதே நேரத்தில் கடத்தப்பட்ட விமானம் மோதி ராணுவப் பணியாளர்கள் கிட்டத்தட்ட 200 பேர் மரணமுற்றிருக்கிறார்கள். பரபரப்பும், எதிர்பாரா அதிர்ச்சியும் நாட்டை ஸ்தம்பிக்க வைத்தது. 19 அராபியர்கள் இதற்குக் காரணம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. எல்லா இடங்களிலும் அமெரிக்கக் கொடி உயர்த்தப் பட்டது. இதற்குக் காரணமானவர்களைக் கொன்று போட வேண்டும் என்றும், இது அமெரிக்காவின் மீது தொடுக்கப் பட்ட போர் என்றும் குரல்கள் எழுந்தன. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், பேர்ல் ஹார்பர் என்ற துறைமுகத்தின் மீது ஜப்பான் நடத்திய எதிர்பாராத தாக்குதலுடன் இதனை ஒப்பிட்டுப் பலர் பேசத் தொடங்கியுள்ளர். (இதைத் தொடர்ந்து தான் ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப் பட்டது. இந்த அணுகுண்டு வீச்சு தான் போரின் முடிவைத் துரிதப் படுத்தியது என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள் . வேறு சிலர் இது அவசியமற்ற குண்டு வீச்சு, ஏற்கனவே போர் கிட்டத் தட்ட முடிவு பெற்று விட்டது. புதிய தொழில் நுட்பத்தைப் பரிசீலிக்கத் தான் இந்த குண்டு வீச்சு என்று இவர்கள் கூறுகிறார்கள்.)

போர் தொடுப்பது என்று அமெரிக்கா முடிவு எடுத்து விட்டது. ஆஃகானிஸ்தான் துயரக் கதையில் இன்னொரு ரத்த அத்தியாயமாகத் தான் இது இருக்கும். சாதாரண மக்களின் மீது தாக்குதல் நடத்தாமலிருக்க முடியாது.

வளைகுடாப் போரின் போது நடந்த மாதிரி இஸ்லாமிய நாடுகளையும் உள்ளடக்கித் தான் வியூகம் அமைக்கப் படும் என்று தெரிகிறது. ஈரான் ஏற்கனவே தன் ஆதரவைத் தெரிவித்து விட்டது. பாகிஸ்தான் அமெரிக்கப் படைகளுக்கு இடம் அளிக்க ஒப்புக் கொண்டு விட்டது. மிகத் துயரமான நாட்களை எல்லா நாடுகளும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

*****

காரணங்கள் காரணங்கள் காரணங்கள்

இப்படிப் பட்ட பயங்கரவாத நடவடிக்கைளை நியாயப் படுத்தவே முடியாது. ஆனால் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் தான். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து பாலஸ்தீன மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது என்பது உண்மை தான். ஆனால் கடந்த சில வருடங்களாக அமைதி தேடி யாசர் அராஃபத்தும் , இஸ்ரேலிய பிரதி நிதிகளும் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள். ஈராக்கின் மீது இடப்பட்ட பொருளாதாரத் தடையினால் ஏராளமான சாவுகள் நடந்துள்ளன. ( ஈராக் குவைத் மீது தொடுக்கப் பட்ட போரின் பின் விளைவு தான் இது என்பது மறக்கப் பட்டு விடுகிறது. )

எல்லாவிதமான குழுக்களுக்கும் இது போன்ற குற்றங்கள் இழைக்கப் பட்டிருக்கின்றன. தலித்கள் இந்திய வரலாறில் அனுபவித்து வந்த அநீதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஹிட்லர் காலத்தில் யூதர்கள் மீது இழைக்கப் பட்ட அநீதி மட்டுமல்லாமல் ஜெஹோவாவின் சாட்சிகள் என்ற தனித்த கிறுஸ்தவக் குழு , ஜிப்சிகள் என்று அழைக்கப் பட்ட நாடோடிகள், ஒருபால் உறவுக்காரர்கள், வயதானோர், உடல் ஊனமுற்றோர் என்று எல்லா குழுவினரும் சமூகத்திற்குப் பயனற்றவர்கள் என்று கொல்லப் பட்டனர். இப்படிப் பட்ட குழுக்கள் எல்லாமே தம்முடைய எதிரிகளின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தினால் உலகம் முழுவதும் ரத்தக் காடாய்த் தான் காட்சியளிக்கும். வன்முறைக்கான காரணங்கள் அல்ல, சேர்ந்து வாழ்வதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது தான் சிறப்பு.

**********

கனவுகள் கனவுகள்

5000க்கும் மேலானவரின் கனவுகள், வாழ்வின் எதிர்காலம் பற்றி, தம்மைச் சேர்ந்தவர்களின் மகிழ்ச்சி பற்றி எல்லாம் கொண்டிருந்த ஆசைகள் தரைமட்டமாக்கப் பட்டன. தேசம் முழுதும் துயரத்தின் நிழல் மட்டுமல்ல. பழி வாங்க வேண்டும் என்ற வெறியும், ஏன் இந்த மண்ணில் என்ற கேள்வியும் எழுந்த வாறு இருக்கின்றன. தீர சிந்தித்து முடிவு செய்ய முடியாதபடி 5000 உயிர்க்கொலை அவர்கள் முன்பு நிற்கிறது. எங்கே எப்படி போர் மூளும் என்று தெரியவில்லை. யுத்தம் எனில் மீண்டும் மக்கள் முன் துயரக் கடல்.

***********

அமெரிக்கா முஸ்லீம்களின் எதிரியா ?

ஈராக் மீது பொருளாதாரத்தடையைக் காரணம் வைத்து அமெரிக்காவை முஸ்லீம்களின் எதிரியாய்ச் சித்தரிக்கிற ஒரு போக்கு இருக்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மை ? அமெரிக்காவின் உண்மையான மதம் டாலர் தான். இந்த மதத்திற்குத் தான் அதன் எல்லா வழிபாடும். ஈராக் மீது உள்ள பொருளாதாரத்தடையைக் காரணம் காட்டினால், குவைத் மீது ஈராக் தொடுத்து போர் நியாயமா என்று கேட்க வேண்டியிருக்கும். கோசோவோவின் முஸ்லிம்களுக்குச் சார்பாக அமெரிக்கா மற்ற ஐரோபிய நாடுகளுடன் சேர்ந்து போரிட்டதையும் சுலபமாய் மறந்து விட முடியாது. சவூதி அரேபியா அமெரிக்காவுடன் சுமுக உறவு கொண்டுள்ளது. அதில்லாமல் ஜோர்டான், எகிப்து போன்ற அரசாங்கங்களும் அமெரிக்காவுடன் உறவை முறித்துக் கொள்ளவில்லையே.

அமெரிக்காவில் வேகமாக வளரும் மதம் இஸ்லாம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அதில்லாமல், பல்வேறு பட்ட மக்கள் அமெரிக்காவில் குடியேற்றம் பெற வேண்டுமென்ற ஒரு சட்டம் இயற்றி பங்களா தேஷ் போன்ற முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேற்றம் பெறவும் அமெரிக்கச் சட்டம் வழி செய்கிறது. அமெரிக்க வானொலியில் தீவிர வலதுசாரிகளிலிருந்து தீவிர இடதுசாரிகள் வரை எல்லோருமே, இந்த அழிவுக்கும் அமெரிக்க முஸ்லீம்களுக்கும் அமெரிக்க அராபியர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், அப்படி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய மக்களை கண்டிக்கவும் செய்தார்கள்.

***********

Series Navigationபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. >>

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

மஞ்சுளா நவநீதன்


***

மூப்பனார் மறைவு

மூப்பனாரின் மறைவால் ஒரு வெற்றிடம் தமிழ் நாட்டின் அரசியலில் உருவனாதை எல்லாருமே உணர்கிறார்கள். மூன்றாவது சக்தியாக ஒரு அரசியல் இயக்கத்தை அவர் கட்டியெழுப்ப முயன்ற போதெல்லாம், பாராளுமன்ற இடங்களுக்காக அதனை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. நேரு குடும்பத்தினர் மீது அளவு கடந்த பக்தி இருப்பினும், அரசியலில் கொஞ்ச நஞ்சம் மிச்சம் இருந்த நாகரிகத்தைக் கடைப் பிடித்தவர் அவர். த மா க-வின் எதிர்காலப் பாதை எப்படி இருக்கும் என்று சொல்வதிற்கில்லை. காங்கிரசுடன் சேர்ந்துவிடுமாறு த மா க மீது அழுத்தம் அதிகமாகும் என்பதும் உண்மை. சிதம்பரம் போன்றோர் கீழ் த மா க அமைய முடியுமென்றால் அது தமிழ் நாட்டின் ஜன நாயகத்திற்கு நல்லது.

******

டர்பனில் இனவாதத்திற்கு எதிரான மாநாடு : அமெரிக்கா போவதில்லை

டர்பனில் இனவாதத்திற்கு எதிரான மாநாட்டிற்கு அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் காலில் போவல் போவதாய் இருந்தது . காரணம் : இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீது தொடுக்கும் போர் இனவாதப் போர் என்பதாக ஒரு தீர்மானம் ஒரு தனி அமைப்புக் கொண்டு வந்திருப்பதால், நண்பரான ‘இஸ்ரேல் ‘ மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அமெரிக்காவின் பங்கேற்பு மிகச் சாதாரண அளவில் தான் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

இது ஒன்றும் ஆச்சரியப் பட வேண்டிய விஷயமல்ல. கருப்பர்களும் வெள்ளையர்களும் 35 வருடங்கள் முன்பு வரை கூட தனி கிளாஸ் மாதிரி ஒரு பிரிவினைக்குட்பட்டுத் தான் அமெரிக்காவின் சில மானிலங்களில் இருந்தார்கள். ஒரே வகுப்பில் இரு சாராரும் சேர்ந்து படிப்பதற்கான உரிமைக்காகக் கூடப் போராடத்தான் வேண்டியிருந்தது. தென் ஆப்பிரிக்க இனவெறி அரசின் மீது உலகிலிருந்த அனைத்து நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்த போதும் கூட ரேகனின் அரசு இதை ஏற்ற்க் கொள்ளவில்லை. இதற்கு ஒரு நொண்டிச் சாக்கினை ரேகன் தெரிவித்தார். ‘தென் ஆப்பிரிக்க அரசின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது என்பது கருப்பர்களையும் பாதிக்கும். வரிக்குதிரையின் உடம்பில் உள்ள வெள்ளைப் பகுதியைத் தாக்கினால் அது கருப்புப் பகுதிக்கும் வலி தரும் ‘ என்பது அவருடைய வாதம்,.

இன்று இனவாதம் அரசாங்க ரீதியாய் ஒழிந்து விட்டாலும் வேறு பல நுணுக்கமான முறைகளில் கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. அமெரிக்காவில் வெள்ளையர் நாடுகளிலிருந்து குடியேற்ற உரிமை பெறுவது சுலபமாய் இருக்கிறது. அமெரிக்கச் சிறைகளில் கருப்பர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமான விகிதாசாரத்தில் உள்ளது. ஒரே குற்றத்திற்கு கருப்பர்கள் பெறும் தண்டனை வெள்ளையர்கள் பெறும் தண்டனையை விட அதிக காலம் இருக்கிறது. மரண தண்டனை பெறுபவர்களிலும் பெரிதும் கருப்பர்கள் எண்ணிக்கை அதிகம்

***********

உலகமெல்லாம் அகதிகள்

460 பேர் அகதிகளாய் நடுக் கடலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். நாடும் வீடும் இழந்து பஞ்சம் பிழைக்கப் புறப்பட்ட இவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்று ஆஸ்திரேலியா தீர்மானமாய்த் தெரிவித்து விட்டது. அதிக எண்ணிக்கையில் ஆஃபகானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாம் இந்தக் கப்பலில் இருக்கிறார்கள். நடுக் கடலில் உடைந்து போன படகிலிருந்து நார்வேயின் வியாபாரக் கப்பல் ஒன்றினால் மீட்கப் பட்ட இவர்கள் ஆஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அகதிகள் பிரசினை ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்தின் போதும், ஒவ்வொரு போரின் போதும் மிகப் பெரும் பிரசினையாக உருவாகியிருக்கிறது. ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் சற்று தாராளமாக இப்படி வருவர்களைத் தம் நாட்டில் இணைத்துக் கொண்டுள்ளன. இதில்லாமல், அண்டை நாடுகளிலிருந்து பற்பல காரணங்களுக்காக அகதியாய் வருபவர்களை ஆசிய நாடுகளில் பலவும் ஏற்றுக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் அகதிகள் பிரசினையால் உள் நாட்டுப் பிரசினையைக் கூடச் சந்தித்துள்ளது. இந்தியாவும் வங்க தேசத்திலிருந்தும், ஸ்ரீலங்காவிலிருந்தும் வந்த அகதிகளை ஏற்ற்க்கொண்டுள்ளது. பாலஸ்தீன அகதிகள் ஜோர்டானின் குடியேறியுள்ளனர். ஆனால் போர் இருக்குமட்டும் இந்தப் பிரசினை முடிவடையாது.

கடைசிச் செய்தியாக இந்த 460 அகதிகளில் 150 பேரை நியூ ஜிலாந்து ஏற்றுக் கொண்டுள்ளது. பிறர் இன்னொரு தீவிற்கு அனுப்பப்பட்டு பிறகு அங்கிருந்து வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லப் படலாம் என்று தெரிகிறது.

************

தெஹல்கா : ஊழலை நிரூபிக்கப் பெண்களைப் பயன் படுத்தலாமா ?

பெண்களைத் தூண்டில் போலப் பயன் படுத்தி , ராணுவத்தில் உள்ள ஊழலை நிரூபிக்க தெஹல்கா முயன்றுள்ளது. இது பெண்களை இழிவுபடுத்துவதாகும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இந்தக் குரல் பெரும்பாலும் அரசாட்சியில் உள்ள பா ஜ க-விலிருந்து எழுந்துள்ளதால் பெரிதும் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் அரசில் இல்லாதவர்கள் கூட பாரபட்சமில்லாத சிந்தனை உடையவர்கள் கூட , லட்சியம் சிறந்ததாய் இருப்பினும், வழிமுறைகள் தவறு என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் . இது சற்றே சிக்கலான பிரசினை.

பழைய இந்திய இலக்கியங்களில் நச்சுப் பெண்கள் என்ற பெயரில் , பெண்களை எதிரி அரசாங்கத்தில் ஊடுருவி , உளவு வேலை பார்க்கப் பயன் படுத்தியிருக்கிறார்கள் என்று வரலாறு உண்டு. பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கிற ஆணாதிக்க சமூகமும், போகப் பொருளாகவே தம்மை ஆக்கிக் கொண்ட சில பெண்களும் இருப்பது மறுப்பதிற்கில்லை. தெஹல்கா-வினால் பயன் படுத்தப் படாமல், இது போல் முன்பு நிஜமான நடந்த நிகழ்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கலாம். இப்படிப் பெண்களைப் பயன் படுத்துவது தவறு என்று தான் தோன்றுகிறது.

***********

இரண்டு திருத்தங்கள்

அ மார்க்ஸ் எழுதிய ‘பெரியார் ? ‘ நூல் பற்றி எழுதிய பகுதியில் வழக்குரைஞர் பெயர் அருண்மொழி என்று எழுதியிருந்தேன். சரியான பெயர் அருள் மொழி என்று தெரிவித்தவர்களுக்கு என் நன்றி. அருண்மொழி என்ற பெயர் தமிழின் புணர்ச்சி விதிகளின் படி சரியானதாயினும், அருள் மொழி என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

கொளத்தூர் மணி , ராமகிருஷ்ணன் ஆகியோரின் திராவிடர் கழகம் கருணாநிதி ஆதரவல்ல என்றும் நண்பர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு வீரமணி ஆதரவு, வீரமணிக்கு எதிராக இந்தக் குழு, எனவே கருணாநிதிக்கு இது ஆதரவு என்ற தமிழ் மனப் பதிவின் வெளிப்பாடாய் என் குறிப்பு அமைந்து விட்டது. இதுவும் தவறு.

தவறைச் சுட்டிக் காட்டிய வாசக அன்பர்களுக்கு என் நன்றி.

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்