சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

மு இராமனாதன்


இந்துமாக் கடலாழத்திலிருந்து சீறிப் புறப்பட்ட அலைகள் திக்குகளெட்டுஞ் சிதறியது. மனித உயிர்களின் எண்ணிக்கை ஆயிரங்களிற் தொடங்கி, பதினாயிரங்களாய்ப் பெருகி, இலட்சத்தைத் தாண்டிப் புள்ளி விவரங்களிற் புதைந்து போனது. மனித எத்தனங்களின் அபத்தமும், வாழ்வின் அற்பமும் புலனாயின. உலக நாடுகளின் உதவிக் கரங்கள் நீண்டன. ஹாங்காங் அரசும் இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டது. ஆனால் ஹாங்காங் இன்று தனித்து நிற்பது அதன் மக்களின் பங்களிப்பால். பேரழிவு நிகழ்ந்த இரண்டு வாரங்களுக்குள் ஹாங்காங் மக்கள் குவித்திருக்கும் நிதி, ஹாங்காங் அரசு வழங்கவிருக்கும் நிதியைக் காட்டிலும் பன்மடங்கு பெரிது. மக்களின் நன்கொடை, ஹாங்காங்கின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட ஒவ்வொரு குடிமகனும் ஹாங்காங் டாலர் 100(ரூபாய் 560) வழங்கியதற்குச் சமம். இது தனி நபர் உதவியில் ஹாங்காங்கை உலகின் முதலிடத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

சுனாமி ஹாங்காங் மண்ணைத் தீண்டவில்லை. ஆயினும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக ஹாங்காங்கிலிருந்து தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் 1000 பேருக்கு மேலிருக்கும். ஸ்படிகம் போன்ற நீர் தளும்பும் தாய்லாந்தின் புக்கெட் தீவுகளின் கடற்கரைகள், சுற்றுலாப் பயணிகளிடயே நீச்சலுக்கும், நீருக்குள் தலைகீழாய்ப் பாய்வதற்கும் புகழ் பெற்றவை. ஹாங்காங்கிலிருந்து இந்தத் தீவுகளுக்குப் போனவர்களே அதிகம். இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தப்பிப் பிழைத்தனர். இதுவரை ஹாங்காங்கில் 14பேரின் மரணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஹாங்காங்கின் குடிவரவு மற்றும் காவற் துறை அதிகாரிகள் புக்கெட்டிலேயே முகாமிட்டுத் தேடியும் இன்னும் சுமார் 60பேர் கண்டறியப்படவில்லை.

கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு ஹாங்காங் பள்ளிகள் திறக்கப்பட்டபோது புனித ஜோசப் பள்ளியின் Form 2 (எட்டாம் வகுப்பு) மாணவன் மார்க் லாம் வரவில்லை. இனி அவன் வரப்போவதில்லை. பள்ளி முதல்வர் பீட்டர் இப் சொன்னார்: ‘தங்களது தோழனை இழந்ததில் சக மாணவர்களுக்கு ஆழ்ந்த துயரம் உண்டு. ஆனால் இந்த ஹாங்காங் மாணவர்கள் உறுதியானவர்கள். இந்தச் சோகத்திலிருந்து மீண்டு வந்து முன் செல்வார்கள். ‘ ஹாங்காங் மக்களும் சொந்த இழப்பபிற்கு அஞ்சலி செலுத்திய அதே வேளையில், இதுவரைக் கேட்டறியாத அழிவைச் சந்தித்திருக்கும் தெற்காசிய நாடுகளின் புனரமைப்பிற்குத் தங்கள் பங்கைச் செலுத்தினார்கள்.

வளர்ந்த நாடுகளின் அரசுகள் பல, நிவாரணப் பணிகளின் நிதியுதவிக்கு வாக்களித்தன. யுத்தத்திற்கு 87 பில்லியன் டாலர்(ரூபாய் 38,000கோடி) செலவிடும் அமெரிக்கா, நிவாரண நிதிக்கு முதலில் வாக்களித்த தொகை- 35 மில்லியன் டாலர் (ரூபாய் 154 கோடி). இதானல் ஆத்திரமடைந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமானத் துறைச் செயலர் ஜன் ஈகெலண்ட், பணக்கார நாடுகளின் கஞ்சத்தனத்தைச் சாடினார். பிற்பாடு அமெரிக்கா வாக்குறுதியை பத்து மடங்கு உயர்த்தி 350 மில்லியன் டாலராக்கியது. தொடர்ந்து செல்வந்த நாடுகளுக்குள் நிதிஅளிப்பதில் போட்டி ஏற்பட்டது. அவற்றுள் சில வாக்களித்திருக்கும் நிவாரணம்: ஆஸ்திரேலியா-ரூ.3,360 கோடி, ஜெர்மனி- ரூ.2,800கோடி, நார்வே-ரூ.820கோடி, பிரிட்டன்-ரூ.420கோடி, கனடா-ரூ.350கோடி, சிங்கப்பூர்-ரூ.100கோடி.

ஹாங்காங் அரசும் தன் பங்கிற்கு ரூ.17 கோடி வழங்கியதன் மூலம் இந்தப் பட்டியலின் கடைசி வரிசையில் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் ஹாங்காங் மக்கள் பிடித்திருப்பதோ முதலிடம். ஹாங்காங் பொதுமக்கள் பங்களிப்பில் திரண்டிருக்கும் நிதி, சுமார் 700 மில்லியன் ஹாங்காங் டாலர் (ரூபாய் 392 கோடி). இதை ஹாங்காங்கின் 70 இலட்சம் மக்கள், தலைக்கு ஹாங்காங் டாலர் 100(ரூ. 560) வழங்கியிருப்பதாகக் கொள்ளலாம். ஒப்பீட்டளவில் மேற்சொன்ன வளர்ந்த நாடுகளின் இந்தத் தனி நபர் சராசரி நன்கொடை வருமாறு: ஆஸ்திரேலியா- ரூ.145, ஜெர்மனி-ரூ.70, நார்வே-ரூ.290, பிரிட்டன்-ரூ.105, கனடா-ரூ.40, சிங்கப்பூர்-விவரமில்லை, அமெரிக்கா-விவரமில்லை.

ஹாங்காங் மக்களின் சமூக அக்கறையைப் புகழும் செஞ்சிலுவைச் சங்கச் செயலர் சான் கை மிங், இது போல் மக்கள் நன்கொடை நல்கி, தான் கண்டதில்லை என்கிறார். பேரழிவு நிகழ்ந்த மறுதினமே தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி கோரின. இவற்றில் செஞ்சிலுவைச் சங்கம், யுனிசெஃப், ஆக்ஸ்ஃபாம், மீட்புப் படை(Salvation Army), Medicins Sans Frontiers Hong Kong ஆகிய ஐந்தும் முக்கியமானவை. திரை நட்சத்திரம் ஜாக்கி சான், முன்னாள் தலைமைச் செயலர் ஆன்சன் சான் மற்றும் பிரபலங்கள் மக்களை உதவுமாறு ஊக்குவித்தனர். தொழில் நிறுவனங்களும், பள்ளிகளும், அங்காடிகளும், சங்கங்களும், உணவகங்களும், வங்கிகளும் நிதி திரட்டின. நன்கொடை நல்கியவர்களில் ஆசியாவின் பெரிய செல்வந்தரென அறியப்படும் லீ கா ஷிங்கிலிருந்து, தன் ஒரு நாள் வருமானத்தை வழங்கிய காய்கறி வியாபாரி சான் யுன் ஃபாய் வரை இருந்தனர். ‘ஹாங்காங் வங்கி ‘க் கிளைகளில் நன்கொடை செலுத்த வந்தவர்களின் வரிசை வாயில்களுக்கு வெளியே சாலைகளில் நீண்டதால், வங்கி நிவாரண நிதி வசூலுக்கென 120 சிறப்புக் கவுண்டர்களைத் திறக்க வேண்டி வந்தது. நன்கொடையாளர்களின் நெரிசலைத் தவிர்க்க, அஞ்சல் நிலையங்களும் நிதி உதவியைத் தொண்டு நிறுவனங்களின் பேரில் பணமாகவோ காசோலையாகவோ பெற்றன.

ஹாங்காங்கின் பாப்பிசை நட்சத்திரங்கள் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சியில் ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவர் துங் சீ வாவுடன் 30,000 ரசிகர்கள் கலந்து கொண்டு நிதி வழங்கினர். ஒலிம்பிக் வீரர்கள் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்ற போட்டிகளிலும் நிதி குவிந்தது.

அரசு ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்குச் சாதகமாக இயங்குகிறது என்று குற்றஞ் சாட்டி, ஜனவரி முதற் தேதி அரசுக்கு எதிராக நடத்த உத்தேசித்திருந்த பேரணியை எதிர்க்கட்சிகள் ரத்து செய்தன. மாறாக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நீத்தாருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டின. டிசம்பர் 31 இரவில் ஹாங்காங்கின் விக்டோரியாத் துறைமுகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மாண்டமான வாண வேடிக்கையை அரசு ரத்து செய்தது. மக்கள் ஆயிரக் கணக்கிற் கூடி நடுநிசியில் பெருங் குரலிற் புத்தாண்டை வரவேற்கும் Count Down நிகழ்ச்ச்ிகள் மட்டும் நடந்தன. ஆனால் அவை யாவும் பெருமளவில் நிதி திரட்டும் நிகழ்வுகளாயின.

ஹாங்காங்கின் செல்வந்தர்களும், வறியவர்களும், பழமைவாதிகளும், புதுமை விரும்பிகளும், ஜனநாயகவாதிகளும், பெய்ஜிங் ஆதரவாளர்களும் ஒரே புள்ளியில் இணைந்தனர். கருத்து வேறுபாடுகள் தற்போது காணாமற் போயிருந்தன. ‘மொத்த சமூகமும் ஒரே மாதிரி உணர்கிறது ‘ என்கிறார் பத்திரிக்கையாளர் ஃபிராங் சிங்.

நிதி திரட்டிக் கொண்டிருந்த போதே தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பணிகளையும் தொடங்கின. குடிநீர், உணவு, உடை, மருந்து முதலியன இலங்கைக்கும், தாய்லாந்திற்கும், இந்தோனேசியாவிற்கும் பறந்தன. Cathay Pacific நிறுவனம் இலவசச் சேவை வழங்கியது. கொள் கலன் நிறுவனங்கள் இலவசமாகவோ குறைந்த கட்டணத்திலோ நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்கின்றன.

ஊடகங்களில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி குறித்து அறிவியற் பூர்வமான அலசல்கள் நடந்தன. ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் வில்லியம் மெயாகெம், சுமத்ராவில் ஆழ்கடல் நிலநடுக்கம் ஏற்பட்டதைச் சில நிமிடங்களிலேயே தில்லி அறிந்து கொண்டிருக்கும், ஆயின் நிக்கோபார் தீவுகள் பாதிக்கப்பட்ட பிற்பாடுங்கூட அவர்கள் விழித்துக் கொள்ளாததைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறார். தொடர்ந்து, புயல் எச்சரிக்கைக்கென கடலோரப் பகுதிகளில் சுமார் 500 ஒலிபரப்பு மையங்களை வைத்திருக்கும் இந்தியாவில் ஒரு அறிவிப்புமின்றி இத்துணை உயிரழப்பு நேர்ந்தது துரதிருஷ்டவசமானது என்கிறார்.

பொதுவாகவே சீன நாளிதழ்களில் இந்தியா குறித்த செய்திகள் அதிகம் வருவதில்லை என்பது ஹாங்காங் வாழ் இந்தியர்களின் ஒரு குறை. ஆனால் சுனாமியைத் தொடர்ந்து கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சென்னை என்ற பெயர்கள் அச்சின் மசி புரண்டு நாளிதழ்களின் பக்கங்களை ஆக்கிரமித்த போது தமிழ் நெஞ்சங்கள் கலக்கம், துக்கம், குற்ற உணர்வு என்று கலவையான மனநிலைக்கு உள்ளாயின. இதற்கு வடிகாலாய் அமைந்தது ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் திரட்டிய சுனாமி நிவாரண நிதி. அறிவிப்பு வந்த ஒரு வாரத்திற்குள் 45,000 ஹாங்காங் டாலர்(ரூ. 2.5 இலட்சம்) திரண்டது. சுமார் 150 குடும்பங்களை உறுப்பினர்களாய்க் கொண்ட கழகம் இதற்கு முன்பும் பலமுறை நிதி திரட்டியிருக்கிறது. ஆயின் குறுகிய காலத்திற் திரண்ட அதிகபட்ச நிதி இதுதான். தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இது வழங்கப்படும், என்கிறார் கழகத் தலைவர் ஜே.வி.ரமணி.

துணைக்கண்டத்தில் இந்தியா ஒரு சக்தியாக உருவாகிறது என்பதையும் ஊடகங்கள் குறிக்கத் தவறவில்லை. வெளிநாட்டு உதவிகளை இந்தியா மறுத்தது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. இந்தியக் கடற்படைக் கலங்கள் இலங்கைக்கும், சுமத்ராவுக்கும், மாளத்தீவிற்கும் அனுப்பட்டது குறிப்பிடத்தக்க செய்திகளாய் வெளியாயின. இதைப்போலவே இலங்கைக்கு இந்தியா ரூ.100 கோடி வழங்கப் போவதான அறிவிப்பும் ஊடகங்களில் ஒரு முக்கியமான செய்தியாயிருந்தது.

ஹாங்காங் மக்களைச் சுனாமி அதிகமாக இளக்கியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இது முதலும் கடைசியும் அல்ல. ஈத்துவக்கும் இன்பம் இந்தக் காற்றில் கலந்திருக்க வேண்டும். ஹாங்காங்கின் பதிவு பெற்ற எண்ணற்ற தொண்டு நிறுவனங்களில் ஒன்று, ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும், ரயில் நிலையங்களில், பேருந்து நிறுத்தங்களில், நெரிசல்மிகு நடைபாதைகளில் நிதி திரட்டுவது வழக்கம். தொண்டு நிறுவனங்களின் சார்பில் மாரத்தான் ஓட்டப் பந்தயங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த நிறுவனங்களில் 4,64,000 தொண்டர்கள் பணியாற்றுகிறார்கள். ‘ஹாங்காங் மக்கள் கடுமையான உழைப்பளிகள். 12 மணி நேரப் பணியென்பது அசாதரணமானதல்ல. ஆயினும், இவர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் மன்பதை அன்பிற்காகச் செலவிடுகின்றனர் ‘, என்கிறார் பத்திரிக்கையாளர் அலிசன் ஜோன்ஸ்.

‘நாம் எதைப் பெறுகிறோமோ அதனாற் பிழைத்திருக்கிறோம், நாம் எதை வழங்குகிறோமோ அதன் மூலம் வாழ்கிறோம் ‘, என்று சொன்னது யாராக இருந்தாலும், அதனை முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள் ஹாங்காங் மக்கள். சுனாமி நிதியுதவியைக் குறித்து, ‘ஹாங்காங் மக்கள் தங்கள் இதயத்தையும் பர்சையும் ஒரு சேரத் திறந்தனர் ‘ என்று வர்ணித்தது CCTV தொலைக்காட்சி நிறுவனம். காரிடாஸ் சமூக மையம் நிதி திரட்டியபோது, நன்கொடையாளர்களுக்கு வழங்கிய சிவப்பு நிற இதய வடிவிலான ஸ்டிக்கரில் கண்ட வாசகம்: ‘ஹாங்காங் அக்கறை கொள்கிறது. ‘

****

ramnath@netvigator.com

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்