நட்பு

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

புவனா கோவிந்த்


“கண்டிப்பா வந்துடறேன்…எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே… வெச்சுடறேன்”

“என்ன திவ்யா… யார் போன்ல?” என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த்

“என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா… அவ பொண்ணுக்கு முதல் பர்த்டே அடுத்த வாரம் வருதாம்… அதுக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காளாம்… என்னையெல்லாம் இன்வைட் பண்ண வேண்டியதே இல்ல வந்துடறேன்னு சொல்லிட்டு இருந்தேன்” என உற்சாகமாய் பேசிய திவ்யாவை யோசனையாய் பார்த்தான் ஆனந்த்

அவன் பார்வையை புரிந்து கொண்டவள் போல் “என்ன யோசனை இப்போ அய்யாவுக்கு?” என்றாள் கேலியாய்

ஒரு கணம் தயக்கமாய் யோசித்தவன் “நான் கொஞ்ச நாளாவே இதை பத்தி உன்கிட்ட பேசணும்னு இருந்தேன்… நீ ரெம்ப சென்சிடிவ்… உன்னை ஹர்ட் பண்ணிட கூடாதுன்னு தான் சொல்லல… திவ்விம்மா, அந்த மஞ்சுகிட்ட கொஞ்சம் அளவா வெச்சுக்கோ” என்றான்

அவன் எதிர்பார்த்தது போலவே திவ்யாவின் முகம் வாடியது. இதற்காகத்தான் இதை சொல்வதை தவிர்த்து வந்தான் ஆனந்த்

“ஏன் இப்படி சொல்றீங்க? அவ எனக்கு ஸ்கூல் டேஸ்ல இருந்தே பிரெண்ட் தெரியுமா? உங்களுக்கு அவளை நம்ம கல்யாணம் ஆன இந்த ஆறு மாசமாத்தான் தெரியும்… கொஞ்ச நாள் பழக்கத்துல நீங்க இப்படி சொல்றது சரியில்லைங்க? நான் இல்லாம ஒரு விஷயம் செய்ய மாட்டா அவ. இப்ப கூட பார்ட்டிக்கு எல்லாரும் சாயங்காலம் தான் வருவாங்க… ஆனா நீ காலைலேயே வந்துடனும்னு சொன்னா தெரியுமா” என்றாள் ஆதங்கத்துடன்

“நீ சொல்றது சரி தான் திவ்யா… உனக்கு ரெம்ப வருசமா அவளை தெரியும் ஒத்துக்கறேன்… ஆனா சில சமயம் அவ உன்னை யூஸ் பண்ணிக்கராளோனு தோணுதுடா… உன்கிட்ட தனியா பேசறப்ப நெருக்கமா பேசரவ மத்தவங்க முன்னாடி அந்த நெருக்கத்த காட்டிக்க விரும்பாத மாதிரி எனக்கு படுது…”

அதை கேட்டதும் கோபமுற்ற திவ்யா “இங்க பாருங்க… அவ ஒண்ணும் அப்படிபட்டவ இல்ல… நீங்களா எதையோ கற்பனை பண்ணிட்டு பேசாதீங்க…” என்றவள் அதற்கு மேல் பேச விருப்பமில்லாதவள் போல் அறைக்குள் சென்று விட்டாள்

இயல்பில் மென்மையான மனமும் அன்பாய் பேசும் குணமும் கொண்ட தன் மனைவி அப்படி கோபமாய் பேசியதை கேட்டதும், ஒருவேளை தன் பார்வையில் தான் தவறோ என்று கூட ஆனந்திற்கு ஒரு கணம் தோன்றியது
_______________________________________

அந்த பார்ட்டி நடக்கும் நாளும் வந்தது. அன்று சனிக்கிழமை. ஆனந்த் அலுவலகம் கிளம்பி சென்றதும் திவ்யா மஞ்சுவின் வீட்டிற்கு கிளம்பினாள். ஆனந்த் அலுவலகம் முடிந்து மாலை பார்ட்டி நேரத்திற்கு வருகிறேன் என கூறி இருந்தான்

உண்மையில் அவனுக்கு அங்கு செல்ல பெரிதாய் விருப்பம் இருக்கவில்லை. ஆனால் திவ்யாவுக்காக தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தாமல் இருந்தான்

திவ்யாவை கண்டதும் ஓடி வந்து அன்பாய் கட்டிகொண்டாள் மஞ்சு. அப்படியே உருகிப் போனாள் திவ்யா. “இவளையா அப்படி சொன்னார் ஆனந்த்” என கணவன் மீது கோபம் வந்தது ஒரு கணம்

இருவரும் சேர்ந்து வீட்டை ஒழுங்கு செய்வதிலும் பிள்ளையை தயார் செய்வதிலும் நேரம் போனது. உணவு வகைகள் எல்லாம் தெரிந்தவர் கடை ஒன்றில் ஆர்டர் செய்து இருந்தனர். எளிய சில பதார்த்தங்கள் மட்டும் வீட்டில் செய்தனர்

மாலை நெருங்க, விருந்தினர் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர். எல்லாருக்கும் காபி, டீ, ஜூஸ் எது வேண்டுமென கேட்டு, கொண்டு வந்து கொடுப்பதில் திவ்யா நிற்க நேரமில்லாமல் சுற்றி கொண்டிருந்தாள்

மஞ்சு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்பதில் மும்மரமாய் இருந்தாள். அதில் ஒருத்தி, “என்ன மஞ்சு? உன் பிரெண்ட் திவ்யா நேரத்துலையே வந்துட்டா போல இருக்கே” என கேட்க

“இல்ல, இப்பதான்… நீ வர்றதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்தா” என்றாள் மஞ்சு. அந்த பக்கம் எதோசையாய் வந்த திவ்யாவின் காதில் அந்த சம்பாஷனை கேட்டு விட, ஏன் இப்படி மஞ்சு அவசியமின்றி பொய் சொல்கிறாள் என புரியாமல் குழப்பமாய் பார்த்தாள். வேறு ஒரு விருந்தினரிடம் பேசிகொண்டிருந்த மஞ்சு அதை கவனிக்கவில்லை

காலை முதல் அருகே இருந்த பழக்கத்தில் மஞ்சுவின் பிள்ளை வேறு ஒருவரிடமிருந்து திவ்யாவிடம் தாவ, எங்கிருந்தோ வந்த மஞ்சு அவசரமாய் பிள்ளையை அவளிடமிருந்து பறிப்பது போல் வாங்கினாள்

அவளது செய்கையை வித்தியாசமாய் பார்த்த ஒரு விருந்தினரிடம் “அது… அதிகம் பழக்கம் இல்லாதவங்ககிட்ட இருந்தா அழ ஆரம்பிச்சுடுவா… கேக் கட் பண்ற நேரத்துல கஷ்டம் ஆய்டும் பாருங்க” என அதற்கு விளக்கம் வேறு கூறினாள் மஞ்சு

அதன் பின் ஒரு ஒரு செய்கையிலும், மற்றவர் முன் தன்னை ஏதோ வேண்டாத விருந்தாளியை போல் மஞ்சு நடத்தியதை திவ்யாவால் உணர முடிந்தது

இதற்கு முன்னும் கூட பல சமயங்களில் மஞ்சு இப்படி தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் நட்பு என்ற திரையின் பின் நின்று கொண்டு அதை கவனிக்க தவறி விட்டேன் என நினைத்தாள் திவ்யா

இப்போது தன் கணவன் அதை சுட்டி காட்டியதால் அந்த கோணத்தில் பார்த்த பின் தான் மஞ்சுவின் உண்மை சொரூபம் புரிகிறது என்பதை உணர்ந்தாள் திவ்யா

உற்ற தோழி என நினைத்தவளின் இந்த செய்கை தந்த வேதனையில், வந்திருந்த கூட்டத்தில் கணவனை தேடியது அவள் கண்கள். அவனை காணாமல் மனம் வாடியது

இப்போது கிளம்பினால், “இன்னும் கேக் கூட வெட்டல ஏன் கிளம்பற?”என கேட்கும் மற்றவர்களின் கேள்விக்கு பதில் கூற வேண்டி இருக்கும் என நினைத்தவளாய், நேரத்தை கொல்ல வழி தேடி கொண்டிருந்தாள்

மெழுகுவர்த்தி அணைத்து, கேக் வெட்டி, ஹாப்பி பர்த்டே பாடி, பரிசுகள் எல்லாம் கொடுத்து முடிந்ததும் விருந்து தொடங்கியது. பப்பே முறையில் உணவு மேஜைகளை ஹோட்டல் சிப்பந்திகள் ஒழுங்குற அமைத்து இருந்தனர்

வயதான பெண்மணி ஒருவர் “கொஞ்சம் தண்ணி குடேம்மா” என திவ்யாவிடம் கேட்க, அது தான் சாக்கென அந்த இடத்தை விட்டு அகன்றாள் திவ்யா

நாலடி வைத்தவள், “வயதானவர் ஒரு வேளை மருந்து ஏதும் சாப்பிட வெந்நீர் கேட்டு இருப்பாரோ… எதுக்கும் கேட்டுடலாம்” என அந்த நேரத்திலும் தனக்கே உரிய மென்மை மனதுடன் நினைத்தவள் மீண்டும் அந்த இடத்திற்கு செல்ல

“உங்க பெரியம்மா தண்ணி கேட்டாங்களே… யாரு அந்த பொண்ணு… நல்லா ஓடி ஆடி வேலை செய்யுதேன்னு கேட்டேன்” என ஒருவர் மஞ்சுவிடம் கேட்க

அவர்கள் பேசும் போது இடையில் செல்வது நாகரீகம் அல்ல என நினைத்தவளாய் சற்று ஒதுங்கி நின்ற திவ்யா, மஞ்சு சொன்ன பதிலில் நிலை குலைந்து போனாள்

“அது… சும்மா தெரிஞ்ச பொண்ணு… பாவம் பெரிய வசதி இல்ல… இப்படி விசேஷ சமயத்துல வந்து ஏதோ கூட மாட செய்யும்…ஏதோ என்னால ஆனத குடுப்பேன் சித்தி” என மஞ்சு ஏதோ பெரிய பரோபகாரி போல் கூற, திவ்யாவிற்கு இனி ஒரு கணமும் அங்கு இருக்க கூடாதென தோன்றியது

உள்ளறையில் சென்று தன்னை சற்று நிதானப்படுத்தி கொண்டவள், வெளியேற முன் வாசலுக்கு செல்லவும், அங்கு வந்த மஞ்சு தன் பிள்ளையை திவ்யாவின் கையில் திணித்தவள், ஒரு புன்னகையுடன் “அப்பப்பா என்ன ரகளை பாரேன் இவ… கொஞ்ச நேரம் உன்கிட்ட இருக்கட்டும் திவ்யா…” என்றாள்

ஒரு கணம் எதுவும் பேசாமல் மஞ்சுவை வெறித்தவள் “இப்ப உன் பொண்ணுக்கு தான் பழக்கமானவளா ஆய்ட்டேனா?” என்றாள் திவ்யா பட்டென்று

இதை எதிர்பார்க்காத மஞ்சு “இல்ல திவ்யா… நான்”

“ஸ்டாப் இட்… இப்பவும் கத்தி பேசி உன் சொந்தங்க முன்னாடி என்னால உன் மானத்த வாங்க முடியும்… அப்புறம் உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லாம போய்டும்னு பாக்கறேன்… ச்சே… நீயெல்லாம் ஒரு…” என கேவலமான ஒரு பார்வையை அவள் மேல் வீசியவள் “இனி எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல… குட் பை…” என வெளியேறினாள் திவ்யா
_______________________________________

வீட்டிற்கு வந்து வெகுநேரமாகியும் திவ்யாவின் மனம் சமாதானமாகவில்லை. அவளை எப்படி எல்லாம் நினைத்திருந்தேன், அவளுக்காக தன் மேல் உயிரையே வைத்திருக்கும் தன் கணவனிடம் கோபமாய் பேசினேனே என்றெல்லாம் வேதனையில் உழன்றாள்

சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க, போய் திறந்தவள், தன் கணவனை கண்டதும் தன் வேதனையை மறைக்க முகம் திருப்பினாள்

அதை அவளின் கோபம் என நினைத்து கொண்ட ஆனந்த் “சாரி திவ்விம்மா… கிளம்பற நேரத்துல ஒரு முக்கியமான வேலை… அதான் மஞ்சு வீட்டுக்கு வர முடியல…” என மன்னிப்பு கோரும் குரலில் அவன் கேட்க, அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியாமல் அழத்தொடங்கினாள்

அதை கண்டதும் பதறிய ஆனந்த் “ஏய் திவ்யா ப்ளீஸ் சாரிடா… நான்…” என்றவனை பார்த்தவள் “நான் தான் சாரி சொல்லணும்ப்பா… சாரி சாரி சாரி” என அழுகையினூடே கூறியவளை புரியாமல் பார்த்தவன், எதுவும் கேட்க தோன்றாமல் அவளை சேர்த்து அணைத்து சமாதானம் செய்ய முயன்றான்

சற்று நேரம் கழித்து, அழுததில் மனம் சற்று அமைதியுற, நடந்ததை தன் கணவனிடம் கூறினாள் திவ்யா. எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டவன் “விடுடா… இப்பவாச்சும் அவளோட இன்னொரு முகத்தை தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கிடைச்சதேனு சந்தோசப்படு” என்றான்

“நான் அப்பவே சொன்னனே” என குத்தி கட்டாமல் அவன் சமாதானமாய் பேசியது அவளின்குற்ற உணர்வை மேலும் தூண்டியது

“சாரிங்க… நீங்க எனக்காக சொல்றீங்கன்னு கூட புரிஞ்சுக்காம, உங்ககிட்ட கூட அன்னைக்கி கோபமா பேசிட்டேன்…” என்றவளின் குரலில் இருந்த வருத்தத்தை காண சகியாதவன் போல்

“என்கிட்ட கோபமா பேசினதுக்கு பனிஷ்மன்ட் குடுத்துடறேன்…அப்ப சரியா போய்டும் தானே” என கேலியான குரலில் வேண்டுமென்றே பேச்சை மாற்றினான்

அவன் எதிர்பார்த்தது போலவே, அவன் கேலி அவள் முகத்தில் புன்னகை பரவச்செய்ய “என்ன பனிஷ்மன்ட் குடுத்தாலும் ஒகே” என அவன் மார்பில் முகம் சாய்த்தாள்

“இதான் பனிஷ்மென்ட்… காலைல வரைக்கும் இப்படியே இருக்கணும்” என ஆனந்த் சிரிக்க, “காலைல வரைக்கும் மட்டும் தானா?” என திவ்யா பாவமாய் கேட்க, சத்தமாய் சிரித்தான் ஆனந்த்

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

புவனா கோவிந்த் (அப்பாவி தங்கமணி)
www.appavithangamani.blogspot.com

(முற்றும்)

Series Navigation

புவனா கோவிந்த்

புவனா கோவிந்த்

நட்பு

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

நாவிஷ் செந்தில்குமார்



“சாப்பிட்டேன்” என
அம்மாவிடமும்
“கவலைப்பட வில்லை” என
அப்பாவிடமும்
“அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்” என
அண்ணனிடமும்
“முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி” என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது…
“காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு”
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது…

navishsenthilkumar@gmail.com

Series Navigation

நாவிஷ் செந்தில்குமார்

நாவிஷ் செந்தில்குமார்

நட்பு

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

ஏலங்குழலி


ஃபோன் அடித்தது. எடுத்தேன். அவள்தான்.

“சுஜிதா ? எப்புடி இருக்கே ?” அவளது உற்சாகக் குரல் துல்லியமாக ஒலித்தது. “எவ்வளவு நாளாச்சுடா உன் குரல் கேட்டு ? ஏண்டி இப்பல்லாம் ஃபோன் பண்ணுறதேயில்ல ?”

“அதில்லை ஜெயா-“ நான் முடிப்பதற்குள் அவள் தொடர்ந்தாள்.

“எப்பப் பாத்தாலும் வெட்டிச் சாக்கு. காலேஜ்லே நாம எப்புடி இருந்தோம் ? நீயும் நானும் எவ்வளவு க்ளோஸ் ? கல்யாணம் ஆகிட்டா, எல்லாத்தையும் மறந்துறலாமா ? என்ன ஃப்ரெண்டு நீ ?”

“தப்புதான், ஒப்புக்கறேன்.” நான் சமாளித்தேன். “அப்புறம் ? எப்புடி இருக்கே ?”

“ம்…எனக்கென்ன ? ஜாலியா ஓடிட்டிருக்கு. ஆமா, கல்யாணத்தன்னிக்கு முகூர்த்தம் முடிஞ்ச பிறகு உன்னை வெயிட் பண்ண சொன்னேனில்லை ? நீ ஏன் மத்தவங்களோட போயிட்ட ? நா எவ்வளவு தேடினேன் தெரியுமா ?”

“ஸாரி ஜெயா. ஆபீஸுலே பர்மிஷன்-“

“என்னத்த ஆஃபீஸோ…என்ன பர்மிஷனோ. என் பெஸ்ட் ஃப்ரெண்டே என் கல்யாணத்தன்னிக்கு என்கூட இல்ல…ப்ச். அவர்கிட்ட கூட சொல்லி வருத்தப்பட்டேன்…”

“ஸாரி, ஸாரி, ஸாரி. வீட்டுக்காரர் உன்னை எப்புடி கவனிச்சுக்கிறாரு ?”

“அவருக்கென்ன ?” அவளது குரலில் வெட்கம் எட்டிப் பார்த்தது. “நல்லாத்தான் கவனிச்சுக்கறாரு. நேத்து கூட ‘க்ராண்ட் டேஸ் ‘லே டின்னர் சாப்பிட்டு தான் வந்தோம். பர்த்டேக்கு வாட்ச் வாங்கிக் குடுத்தாரு…”

“உன் காட்டுலே மழைதான்!”

“சேச்சே. ‘வாலென்டைன்ஸ் டே ‘ வருதில்ல ? அதுக்குக் கூட என்னமோ ப்ளான் வச்சிருக்காரு. என்னன்னு கேட்டா, சஸ்பென்ஸாம். என்ன சஸ்பென்ஸோ…”

“எஞ்சாய் பண்ணு.”

“நான் எஞ்சாய் பண்ணுறது இருக்கட்டும். உன் லைஃப் எப்புடிப் போயிட்டிருக்கு ? அதைச் சொல்லவேயில்லியே ?”

“ம், போயிட்டிருக்கு.”

“என்ன அப்புடிச் சொல்லிட்டே ? லைஃபை நல்லா அனுபவிக்கணும், சுஜி. இப்ப விட்டா, மறுபடியும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையாது. நல்லா கரியரை இம்ப்ரூவ் பண்ணு. வாழ்க்கைல எதையாவது சாதிக்கணும், சுஜி. நாம காலேஜ்ல பேசிக்கிட்டதெல்லாம் நெனைவு இருக்கா ?”

“ம், இருக்கு.”

“எவ்வளவு கனவு கண்டோம் ? ஏதாவது ஒரு துறைலே உழைச்சு முன்னேறி சாதிக்கணும்னு நெனச்சமே ? வெறும் கல்யாணம், குழந்தைன்னு முடங்கிடாமே, நாம் தேர்ந்தெடுத்த துறையிலே ஜெயிக்கணும்னு நெனைச்சமே ?”

“நல்லா நெனைவிருக்கு.”

“சுஜி, நான் முடிவு பண்ணிட்டேன். கல்யாணத்துக்கு முந்தியே எல்லா ப்ளானையும் போட்டு வச்சிட்டேன். நான் கவிதை எழுதுவேன்னு ஒனக்குத் தெரியும்ல ? நெறைய கவிதைல்லாம் எழுதி வச்சிருக்கேன். இவருகூட படிச்சிட்டு ‘நல்லாருக்கு ‘ன்னாரு. பத்திரிகைக்கு அனுப்பப்போறேன். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறப் போறேன். எப்படி ?”

“ப்ளான் நல்ல இருக்கு, வாழ்த்துகள்.”

“என் ப்ளான் இருக்கட்டும். உன்னைப் பத்தி நீ சொல்லவேயில்லியே ? உன் சாதனையெல்லாம் எவ்வளவு தூரம் ? கதையெல்லாம் எழுத ட்ரை பண்ணுவியே ? அப்பல்லாம் உன்னை அடிக்கடி எழுத வைக்க நான் இருந்தேன்…இப்பவும் எழுதறியா ?”

தயக்கம். “ம்.“

“பத்திரிகைக்கு அனுப்ப முயற்சி பண்ணியா ? உனக்குத்தான் நல்லா எழுத வருமே ?”

“அனுப்பினேன். பிரசுரம் ஆயிருச்சு.”

மெளனம்.

“சொல்லவேயில்லை ? சரியான அமுக்குப் பிள்ளையாருடி நீ.“

“அதெல்லாம் இல்லை. ஜெயா. அப்ப நீ உன் கல்யாண வேலைலே பிஸியா இருந்தியா…”

“ம். சரி, ஒரு கதையோட நிறுத்திறாமே, தொடந்து எழுது, என்ன ? அப்புறம், எதுலே பிரசுரம் ஆச்சு ?”

“ம்ம்…” நான் ஒரு பிரபல தமிழ் வார இதழைக் குறிப்பிட்டேன்.

“உன் பேரை நான் பாக்கவேயில்லியே ?” சந்தேகம்.

“புனைப்பெயர்ல எழுதறேன்.” புனைப்பெயரைக் குறிப்பிட்டேன்.

“ஸ்ஸ்ஸ்…அது நீதானா ? அந்தப் பெயர்லே நாலஞ்சு கதை பாத்திருக்கேனே ? “*******” பத்திரிகைலே ஒரு தொடர்கதை கூட வருதே… ?”

“அதுவும் நான் தான்.”

மீண்டும் மெளனம்.

“அது சரி…வெறும் பிரசுரம் மட்டும்தானா, இல்ல… ?”

“சன்மானமும் உண்டு.“

“இதுக்கு பணமெல்லாம் கூட தருவாங்களா ? பரவாயில்லியே. வெரல் அசைக்காமே உக்காந்த இடத்துலே பணம் வருது… ? நைஸ்.”

“இலக்கியக் கூட்டத்துக்கெல்லாம் கூட போயிட்டிருக்கேன். ஜாலியா இருக்கு. பல எழுத்தாளர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து-“

“எப்ப கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கே, சுஜி ?”

“அதுகேல்லாம் காலம் இருக்கு, ஜெயா. எழுத்துலே நான் இன்னும் நெறைய சாதிச்சு-“

“சாதனை இருக்கட்டும். கல்யாணம் ரொம்ப முக்கியம், சுஜி. ஆயிரம்தான்னாலும், நமக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா ? கரியர் எல்லாம் சரிதான்…ஆனா அதுக்காக ?”

“பாத்துக்கலாம், ஜெயா. நீ ஏன் இவ்வளவு டென்ஷனாகிற ?”

“எல்லாம் அக்கறையினாலதான். நாம எவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், சுஜி. உன் விஷயத்துலே நான் அக்கறை எடுத்துக்காம வேற யார் எடுத்துப்பாங்க ? ஏன் இப்புடி ஒட்டாமே பேசறே ?”

“இல்லப்பா, அதெல்லாம் இல்லை-“

“ ‘சட்டுபுட்டு ‘ன்னு கல்யாணம் பண்ணிக்க. அதுலே கெடைக்கிற திருப்தியே தனி…அப்ப வெச்சிறவா ? அடிக்கடி ஃபோன் பண்ணு. எங்கே…அம்மணி இப்ப பெரிய எழுத்தாளராகிட்டாங்க. எங்களுக்கெல்லாம் பண்ணுவீங்களோ, என்னமோ ?”

அதெல்லாம் இல்லை ஜெயா- என்று சொல்லப்போனவள், தயங்கினேன்.

“எனக்கும் டைமே இல்லை, ஜெயா. எல்லாப்பக்கமும் டெட்லைன் இருக்கு. இன்னிக்கு சாயங்காலம் ஒரு புத்தக வெளியீட்டு விழா வேற…முடிஞ்சப்ப ட்ரை பண்றேன்.”

“ம்”.

‘லொட் ‘டென்று அந்தப்பக்கம் ரிசீவர் வைக்கும் சப்தம் கெட்க, புன்னகையுடன் என் வேலையில் கவனத்தைச் செலுத்தினேன்.

—————————————

elankhuzhali@yahoo.com

Series Navigation

ஏலங்குழலி

ஏலங்குழலி

நட்பு

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

பிரியா ஆர். சி.


இன்பம் நிறைத்து துன்பம் குறைத்து
பலன்கள் பகிர்வது நட்பு
மரணம் தொடங்கி ஜனனம் இறுதியாய்
அலசி ஆராய்வது நட்பு
இரகசியங்கள் இருவருக்குத் தெரிந்தும்
இரகசியங்களாகவே காப்பது நட்பு
காலங்கள் காலமான பின்னும்
நிலைத்து நிற்பது நட்பு
ஒவ்வொறு தியாகத்திலும்
உறவுக்கு உரமேற்றுவது நட்பு

இடங்கள் பிரித்தும் இதயம் வளர்ப்பது நட்பு!

rcpriya@yahoo.com

Series Navigation

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...

நட்பு

This entry is part [part not set] of 22 in the series 20020714_Issue

எஸ். வைதேஹி.


நட்டு வைத்த மரங்களெல்லாம்
நாலா பக்கமும் சிதறி கிடக்க
கண்ணில் பட்டதையெல்லாம்
விதைகளாக்கி
அதிக சிரத்தையுடன்
ஆசீர்வதித்து
வளர்த்து வந்தேன்.

நட்ட விதைகள்
முட்கள் கொண்ட முகச்சாயலோடு
என் மனம் கீறி
உலர்ந்து போக,

காத்துக் கொண்டிருக்கிறேன்
என்றாவது
எங்கோ
பூத்த பூவின்
மணம்
என் அறை வாசலில்
வீசும் என்று.

***

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.