ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

மோனிகா


“Art is founded on three levels, in the mind of the artist , in the tool and in the material that receives its form from art ”.

– Dante

முதல் முதலில் நவீன ஓவியம் தொடங்கியது “புல்வெளியில் மதிய உணவு(Luncheon on the Grass)” என்னும் மானேயின் (Manet) ஓவியத்தில்தான் என்பது ஓவிய வரலாற்றாசிரியர்களின் கருத்து. சீக்ஃப்ரிட் கிரகார்( Siegfried Kracaur ) என்னும் சிந்தனையாளர் (ref. Film theory) மார்ஷல் டுஷாம்பின் “படியிறங்கும் நிர்வாண உருவம் (Nude decending the stair case)” என்னும் ஓவியத்தை பற்றி கூறும்போது புகைப்பட கலையிலிருந்து நவீனத்துவம் உருவானதென்பதெற்கு இது ஒரு உதாரணம் என்று கூறுகிறார்.

Nude Descending the Staircase

கியூபிஸத்தின் ஆதரவாளர்கள் முதலாம் உலகப்போரின் இயந்திர மயமான காட்டுமிராண்டித்தனத்திற்குப் பிறகு தங்களை பரிசீலித்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே அறிந்தவராக மார்ஷல் டுஸ்சாம்ப் 1912ம் ண்டு தனது கடைசி ஓவியமான “படியிறங்கும் நிர்வாண உருவம் என்ற ஓவியத்தை வரைந்தார். அந்த ஓவியத்தின் சிறப்புத்தன்மை “நிலையான அசைவு (Static Movement)” என்பது அவரது கருத்து. அதே 1912ம் ண்டு கலைப் பொருள் அல்லாத செய்தித்தாள், துணி, நாற்காலியின் கடைந்த பாகங்கள் தகடுகள் போன்றவை கியூபிஸ பிரதிகளாக பிகாஸோ மற்றும் பிரேக்(Braque)கினால் உபயோகப்படுத்தப்பட்டன. னால், டுஸ்சாம்ப் முதன் முதலில் ஒரு பொருள் தொழிற்சாலையின் மிகு உற்பத்தியில் தயாரிக்கப்பட்ட ஒரு வர்த்தகப் பொருளானாலும் அதனை கலைச் சூழலில் பொருத்தினால் அது தனக்குரிய உபயோகம், அடையாளம் மற்றும் பொருளிலிருந்து மாறுபட்டுவிடுகிறது என்று நிறுவினார். அதற்கு உதாரணங்கள் அவரது “குடுவை கொள்வான் (bottle rack)” மற்றும் கையெழுத்திடப்பட்ட பீங்கான் “சிறுநீர் கழிக்கும் தொட்டி(Urinal), 1917” ஆகும்.

Fountain

மேற்கண்ட தொட்டியை ஒரு ஓவியக்கூடத்தில் வைத்து அதன்மேல் கையெழுத்திடப்பட்டதால் அது கலைப் பொருளாகிவிடுகிறது. அதனை சிறுநீர் கழிப்பதற்கு பயன்படுத்தமுடியாது. இது கலையின் மீதுள்ள மதிப்பீடுகள், சலுகைகள் போன்றவற்றை பரிசீலனைக்குட்படுத்துவதாகும். இதன் மூலம் டுஸ்சாம்ப் ஒரு அழகு பெற்ற கோப்பையைத் திறந்து அதனுள் உள்ள புழுக்களை வெளிக் கொணர்ந்து அவற்றை ஆய்வுக்குட்படுத்துகிறார்.

அமெரிக்காவின் இரு நவீன தாதாயிஸ(Neo- Dadaism) ஓவியர்களாக ராபர்ட் ரோஷம்பர்க்(Robert Rauschenberg)கையும் ஜாஸ்பர் ஜோன்ஸை(Jasper Johns)யும் குறிப்பிடலாம். டுஸ்சாம்பைவிட சிறிது மாறுபாட்டதாகவும் ஆனால் பல தருணங்களில் டுஸ்சாம்பின் பரீட்சார்த்தத்தின் தொடராகவும் அமைந்தவை ரோஷன்பர்க்கின் ஓவியங்கள். உதாரணமாக டுஸ்சாம்பின் “காதலர்களால் துகிலுரிக்கப்படும் மணப்பெண்”ணும் ரோஷன்பர்கின் “துகிலுரித்தலு”ம். அவர் “பொருள் ஒருங்கிணைபினையும் (Assemblage)” தீற்றோவியத்தையும் ஒன்றிணைத்து ஒரு ஓவியப்பாணியை உருவாக்கினார்.

Bed, 1955

அவரது “படுக்கை(Bed),1955” என்ற ஓவியம் அதற்கு உதாரணமாகும். இந்த ஓவியப் பரப்பின் மீது பல வேறுபட்ட பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளன. சில நேரங்களில் இவரது ஓவியங்கள் ஒரு முப்பரிமாணப் பொருட்களாக சிற்பங்கள் போல் தனித்து நிற்கவும் செய்கின்றன.

ரோஷம்பர்க் வடக்கு கரோலினாவில் ஜான் கேஜ் என்ற ஒரு இசையமைப்பாளரை சந்தித்தார். கேஜ் தனது புத்தகத்தில் “ நவீன இசை என்பது கேட்பவர்களின் புதிய முயற்சியும் கூட. அது கூறப்படும் பொருளைப் பற்றியது அல்ல.. எதாவது கூறுகின்ற முயற்சிக்குள் அது செல்லுமேயானால் அது வார்த்தை வடிவங்களை எளிதில் மேற்கொண்டுவிடலாமே. எனவே நவீன இசை என்பது ஒலி நிகழ்வின் மேல் செலுத்தப்படும் ஒரு கவனத்துளி” என்று கூறுகிறார். கேஜின் அழகியல் தத்துவம் அவரை பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளை நோக்கித்தள்ளியதென்றும் சொல்லலாம். கேஜின் தத்துவத்தைப் போலவே ஓவியனும் பார்வையாளனின் கவனம் முழுவதையும் ஓவியத்தின் பொருளின் மீது செலுத்துமாறு அமையாமல் பார்வையாளனது கற்பனைக்கு ஒரு பரவலான அனுபவத் தளத்தை கொடுக்க வேண்டும் என்று ரோஷம்பர்க் நம்பினார்.

தன்னுடைய ஓவியங்களில் நகல்கள், புகைப்படங்கள் வெட்டி ஒட்டுதல் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பார்வையாளனின் நினைவுக் களத்த்ில் வேறுபட்ட உணர்வுத் தாக்கங்களை ஏற்படுத்த முயன்றார் ரோஷம்பர்க்.

Yellow Body

அவருடைய “Untitled (1952)” மற்றும் “ Yellow Body” என்ற ஓவியங்கள் வெகுஜன ஊடகங்களின் மீது அவருக்கு இருந்த ர்வத்தை காட்டுகின்றன. இந்த தீற்றோவியத்தில் உள்ள குறியீடுகள் அவரது பழைய Silk Screen Printing தொழில் நுட்பத்தை நினைவுபடுத்துவதுடன் பயண ஊர்திகள், விண்வெளி பயணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கேலிச்சித்திரங்களின் சிறு துண்டுகளையும் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அவரது சுய சரிதத் தொகுப்பே இப்படி காணப்பட வாய்ப்பிருக்கிறது.

Untitled(1952)

1959-60 களில் பதினெட்டு மாதங்களில் தாந்தேயின் “நரகம்(Inferno)” பற்றிய கவிதைக்கு முப்பத்து நான்கு சித்திரங்களை வரைந்தார் ரோஷம்பர்க். ஒவ்வொரு ஓவியத்தையும் இடப் பக்கத்தின் மேலிருந்து வலப்பக்கத்தின் கீழ் வரை படித்தால் அதன் கதை விளங்குமாறு வரைந்திருந்தார் அவர். இந்த ஓவியத்தில் தாந்தே இடப்பக்கத்தின் மேல் பகுதியில் ஒரு துணியால் சுருட்டப்பட்டு இருக்கிறார்.

Illustration for Dante’s Inferno, 1959

நரகத்தின் காவலர்களாக ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் படம் சங்கிலியால் பிணைக்கப்பட்டு காணப்படுகிறது. இப்பிசாசுகளின் அளவுகோல் அதிகமாய் இருப்பதன் மூலம் இவற்றின் சக்தியும் பன்மடங்கு அதிகமாய் உணரப்படுகிறது. அதன் கீழ் இரு கவிஞர்களின் தலைகள் பள்ளங்களில் புதைந்து கிடக்கின்றன. கற்பனை பத்திரங்களை நிஜ உருவங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் ரோஷம்பர்க் இந்த முயற்சிகளில் மேன்மை, தாழ்மை, நிஜம், புனைவு, கடந்தகாலம், நிகழ்காலம் போன்றவற்றை தொகுத்து பரிசீலனைக்குட்படுத்துகிறார்.

1962ல் ரோஷம்பர்க் வியாபார ரீதியில் தயாரிக்கப்பட்ட ஸில்க் ஸ்க்ரீன்களை தனது புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரித்து ஓவியப் பிரதிகளை ஏற்படுத்தினார். இவை செய்தித்தாள் (direct transfer) மாற்றுவதற்கு பிறகு இவர் கண்ட உத்தியாகும். செய்தித்தாள் பிரதி மாற்றத்தினால் ஒரு காகிதத்திலிருந்து மற்றொரு காகிதத்திற்கு மாற்றும் சாத்தியமே இருந்தது. அதையே ஸ்கிரீன் பிரிண்டிங்கில் கடை பிடிக்கும்போது கித்தான்களிலும் அதை மாற்ற முடிந்தது.

Booster

1925ம் ண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸில் பிறந்த ரோஷம்பர்க் தற்போது ஃப்ளோரிடாவில் வாழ்ந்து வருகிறார். அரூப வெளிப்பாட்டுத்துவத்தில் (Abstract Expressionism) இவரது பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும்.

நவீன ஓவியக்களமானது புகைப்படம், வீடியோ நிர்மாண அமைவு என கித்தானைத்தாண்டி பல மைல் காதம் சென்றுவிட்டன. இருந்தாலும் தீற்றோவியத்திற்கும், கோட்டோவியத்திற்கும் உள்ள கவர்ச்சியும் மரியாதையும் என்றென்றும் நிலைத்து நிற்பவை. ஓவியம் என்ற மொழியில் கலைஞனின் சாயல் ஊடாடிப் போவதால் அது நிதர்சனத்தை ஒரு கவிதையைப் போன்று அழகு பெற எடுத்துக் கூறுகிறது.

Series Navigation

மோனிகா

மோனிகா