This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue
பூரணி
இது ஒன்றும் கவலைப் படும்படியான விஷயம் இல்லை என்றே அவளுக்குப் பட்டது. ஆனால் அவனுக்கு அது பெருங்குறையாகப் பட்டது. கலியாணம் ஆகி நான்கு வருடம் ஆகப்போகிறது, ஒரு முறைகூடத் தப்பாமல் கொல்லையில் போய் உட்கார்ந்து விடுகிறாள். அவனுடைய ந்ண்பர்கள் தங்கள் குழந்தையைத் தோளில் சுமந்துகொண்டு அவனோடு பேசும்போது அவன் மனம் ஏக்கமடைகிறது. கேட்கவும் செய்கிறார்கள். இது பற்றி அவளிடம் சொன்னால், “ அதற்கு நாம் என்ன செய்ய முடியும் ? எப்பொழுது கிடைக்குமோ அது வரை காத்திருக்க வேண்டியதுதான்.” என்று அலக்ஷியமாகச் சொல்லி விடுகிறாள். “ எனக்கு இப்போதுதான் பதினேழு வயது ஆகிறது. தன்னாலே கிடைக்கும்” என்று பேச்சைத் துண்டித்து விடுகிறாள். அதன் பிறகு மேல்கொண்டு அவளிடம் பேச முடிவதில்லை.
“திருச்செந்தூரில் ஒரு ஜோஸியர் இருக்கிறாராம்; அவர் நன்றாக ஜோஸியம் பார்ப்பாராம். என் ந்ண்பர்கள் என்னைக் கூப்பிடுகிறார்கள்.அவரும் குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட்டால் மேற்கொண்டு யோசிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்
எனவே, நாளை அவர்களோடு திருச்செந்தூர் போய்வரப் போகிறேன்” என்று அவன் சொன்னதும் அவள் “சரி” என்று சொன்னாள்.
திருச்செந்தூர் சென்றுவிட்டு அவள் கணவன் மிகமிக சந்தோஷமாக வந்தான். “ நமக்குக் குழந்தை பாக்கியம் இருக்கிறதாம். உன் பதினெட்டு வயது முடிந்தபின் நீ கருவுறுவாயாம்; அந்த ஜோஸியர் சொன்னர்” என்றவன் அத்துடன் நிறுத்தாமல் அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் தனக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்து வைக்கவும் தன் நண்பன் ஏற்பாடு செய்திருந்ததாகவும் சொன்னதும் அவளுக்கு வயிற்றில் அம்பு பாய்ந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது. அவள் தீனமாக, ”உங்களுக்கும் அது சரி என்று பட்டதா ?” என்று கேட்டாள்.
அது முதற்கொண்டு மாதவிலக்கு நாள் வந்தால் மனம் நடுங்கவாரம்பித்தது. அஸ்தியில் ஜுரம் கண்டுவிட்டது.
நல்லவேளையாக சோதனை தொடரவில்லை. இரண்டொரு மாதங்களிலேயே அவள் கருவுற்றுவிட்டாள்.வளைகாப்பு, சீமந்தம் முடிந்து பிரசவத்துக்குப் பிறந்தவீடு போய்ச் செர்ந்தாள்; ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தாள். அதே ஊரிலிருந்த பார்வதி என்னும் ஒரு பெண்னுக்கும் ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் பார்வதி சில நாட்களிலேயே மரணமடைந்துவிட்டாள். தாயை இழந்த குழந்தை பாலுக்குத் தவித்தது. குடியானவத் தெருவில் குழந்தை பெற்றிருந்த ஒரு பெண்ணை இந்தக் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுப்பதற்காக சம்பளத்துக்கு அமர்த்தியிருந்தார்கள். அவள் ஒரு கணக்காக வந்து பால் கொடுத்துவிட்டுப் போவாள். பற்றாகுறைக்குப் பசும்பால் கொடுப்பார்கள். ஒருவேளை அவள் தன் குழந்தைக்குக் கொடுத்தபிறகே இங்கு வந்து கொடுப்பாளோ என்னமோ, குழந்தை பால் பற்றாமல் அழ ஆரம்பித்துவிடும். பார்வதியின் வீட்டில் அந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு தவியாய்த் தவித்தனர்.
பார்க்க ஒடிசலான தேகவாக்கு உடையவளானாலும் அவள் மிகுந்த பால் பாக்கியம் கொண்டவளாக இருந்தாள். அந்தக் குழந்தையின் நிலை கேட்டுப் பரிதவித்தாள். அந்தக் குழந்தையைத் தன்னிடம் இரண்டொரு முறை எடுத்துவர முடியுமானால் அதற்கும் தன்னால் பால் புகட்ட முடியும் என்பதைத் தன் தாய் மூலம் அவர்களுக்குச் சொல்லிஅனுப்பினாள்.
மட்டற்ற மகிழ்ச்சியோடு குழந்தையின் பாட்டி குழந்தையைப் போர்த்தி எடுத்து வருவாள். குழந்தை தங்கச்சிலை போல் மிக அழகாக மடிநிறைந்து இருக்கும். பறந்து பறந்து பால் குடிக்கும். இவளுக்கு அதன் மேல் அனுதாபம் கலந்த தாய்பாசம் சுரக்கும். பால் கொடுப்பதில் ஒரு தெய்வீக ஆனந்தம் ஏற்படும். இது நாளொன்றுக்கு இரண்டு முறை நிகழும்.
எப்பொழுதாவது சிலசமயங்களில் அந்தக் குழந்தை குடித்துவிட்டு சென்ற சிறிது நேரதிலேயே சொந்தக் குழந்தை பால் பற்றாமல் அழ ஆரம்பித்துவிடும். அப்போது அவளது தாய் அவளைக் கண்டிப்பாள், “ எதற்கும் ஒரு அளவு வேண்டும். அந்தக் குழந்தை சலித்துப்போகும் வரை பால் புகட்டுகிறாய். இப்போது பார், உன் குழந்தை பசித்து அழுகிறது. “ ஆனால் அவள், “ சரி சரி, போ! சற்று பொறுத்துக் கொடுத்தால் போச்சு” என்று பதில் சொல்லிவிடுவாள்.
அந்த அழகிய ஆண் குழந்தை ஐந்து வயது வளர்ந்த பிறகு மரணமடைந்தது. தான் பெற்ற குழந்தையே இறந்ததுபோல் அவள் துக்கித்தாள்.
‘பயப்பட வேண்டாம், ஒன்னுமில்ல என்று சொல்லுறாங்க. ஆனா இவுங்களுக்கு வலி கொஞ்சம் கூட நிக்கல, அக்கா. ‘
சாரதா கண்களை இடுக்கிக் கொண்டு அவளைப் பார்த்தாள்.
‘எங்க ஊரிலே ஒரு வைத்தியர் இருக்கார். கை ராசிக்காரர். அவுங்க கைபட்டா எந்த நோயும் பறந்து போயிடும். அவுங்க பாத்தா இவுங்களுக்கும் சரியா போயிடுமுன்னு படுதுக்கா. ‘
‘அப்படியா ? ‘
‘எனக்குக்கூடச் சின்ன வயசிலே ஒரு வாட்டி வயத்து வலி வந்துச்சாம். அவுங்க கிட்ட போனாங்களாம். ரெண்டு வாட்டி மருந்து கொடுத்தாராம். சரியா ஆயிடுச்சாம். ‘
‘நாட்டு வைத்தியத்துக்கு அடங்காத சீக்கு உண்டா ? எங்க அம்மாவுக்கு ஒருக்கட்ட தலைவலி. எங்கெங்கேயோ பாத்தாங்க. ஒண்ணுத்திலியும் நிக்கல. கடைசியா ஒரு நாட்டு வைத்தியர் கிட்டப் போனாங்க. ஒரு மாசத்திலே ஒருக்கட்ட தலைவலி பறந்து போயிடுச்சு. ‘
‘அதுக்குத் தாங்க்கா உங்ககிட்ட வந்தேன். அவுங்க வேலைக்குப் போய் ரெண்டு மாசத்துக்கு மேலே ஆகுது. கையில் இருந்ததெல்லாம் ஆஸ்பத்திரிக்கும் மருந்துக்கும் பஸ்ஸ்உக்குமென்னு ஆயிடுச்சு. இப்ப கையில் ஒரு காசு கூட இல்ல– ‘
‘ஆகாதா என்ன ? ஒரு காசு வருமானம் இல்லாம நோயாளியை வீட்டிலே வச்சுக்கிட்டு–நோவு பாத்துகிட்டு–குடும்பத்தை ஓட்டறது சாதாரண காரியமா ? அடே அப்பா, ஒரு தடவ எங்க வீட்டிலே ரெண்டு வாரம் படுத்துட்டாங்க. நான் தவியா தவிச்சுப் போயிட்டேன். ‘
‘ஒன்னு ஒன்னா எல்லாம் போயிடுச்சு. தோடு, மூக்குத்தி ரெண்டு பட்டம், ஒரு செயினு–எல்லாத்தியும் வித்துட்டேன். அதெல்லாம் போயிடுச்சேன்னு வருத்தமில்ல. இவுங்க நல்லா ஆனா போதுங்க, அக்கா. ‘
‘அவுங்களுக்கு மிஞ்சி நமக்கு என்ன இருக்கு, சொல்லு. உன்னை மாதிரிதான் நானும். ஒரு தடவ எல்லாத்தையும் வித்து சீக்குப் பாத்தேன். ‘
‘இப்ப ஒரு அண்டாதான் இருக்கு. அப்பா வரிசை வச்சது. நீங்க பாத்திருப்பீங்களே, அதாங்க்கா, அந்தப் பெரிய அண்டா. அதை வச்சுகிட்டு நாப்பது ரூபா கொடுங்க, அக்கா. ‘
சாரதா தலையசைத்தாள்.
‘ஏங்கிட்ட ஏது பணம் ? ‘
கல்யாணி அவளைக் குத்திட்டுப் பார்த்தாள்.
‘யாருகிட்டவாது கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொடுங்க அக்கா. உங்கள விட்டா இங்க எனக்கு யாரு இருக்கா ? ‘
‘போன மாசம் கையிலே பணம் இருந்துச்சு. ‘
‘எங்க பாட்டி சீர் கொண்டாந்த அண்டா. இப்ப நூறு ரூபா தாராளமா போகும். பொழச்சு வந்தா மூட்டுக்கிறேன். இல்லாட்டா– ‘
‘சீச்சீ ‘ கண்டபடி பேசாதே. உனக்கு ஒரு குறையும் வராது. நல்லபடியா திரும்பி வருவே. ‘
கல்யாணி மெளனமாக இருந்தாள்.
‘டிரைவர் முனுசாமி வீட்டிலே பணம் தராங்க. ஆனா, வட்டி கொஞ்சம்கூட. பத்துப் பைசா. அதுவும் எடுத்துக் கிட்டுத்தான் கொடுப்பாங்க. ‘
‘தத்துப் பித்துன்னு இப்படியெல்லாம் பேசாதே. உனக்கு ஒரு குறையும் வராது, மகராசியா திரும்பி வருவே. ‘
கதவுக்கு மேலே இருந்து ஒரு பல்லி கத்தியது.
‘பல்லி சொல்லுது. அது சொல்லிப் பலிக்காமப் போனதே இல்ல. ராஜாத்தியா திரும்பி வருவே. உன் புருஷன் நோவு, நொடியில பறந்துடும். வந்ததும் அண்டாவை மூட்டுடு. அவ கிட்ட விட்டுடாதே. ‘
‘மலையாட்டம் அதைத்தான் அக்கா நம்பி இருக்கேன். ‘
‘நீ சுமங்கலியா இருப்ப. ‘
சாரதா அவள் நெற்றியில் குங்குமம் இட்டாள்.
கல்யாணி எழுந்து நின்றாள்.
‘வரேன் அக்கா. ‘
‘உன் உடம்பையும் பத்தரமா பாத்துக்கோ. ‘
அவள் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவள் பார்வையிலிருந்து மறைந்ததும், சாரதா அண்டாவை எடுத்துக் கொண்டு போய் உள்ளே வைத்தாள். புளியும் செங்கல் பொடியும் போட்டுக் கை சிவக்கக் சிவக்கக் கரகரவென்று தேய்த்தாள். கசியும் பழைய டிரம் இருந்த இடத்தில் அண்டாவைத் தூக்கி வைத்தாள்.
கிணற்றிலிருந்து குடம் குடமாய்த் தண்ணீர் மொண்டு வந்து அண்டாவை நிரப்பிக் கொண்டிருந்த போது, அவள் கணவன் ராமானுஜம் வந்தான்.
‘அப்படி என்ன பாக்கிறீங்க. ‘
‘அண்டா. ‘
‘நம்ப அண்டாதான். ‘
‘நம்ப அண்டாவா ‘
‘உங்க ஆபீசிலே பியூனா இருந்தானே குத்தாலம் அண்ணாமல–அதாங்க வயித்துக்காரன். அவன் பொண்டாட்டி வந்து ஊருக்குப் போகணும். இதெ வச்சிக்கிட்டு ஐம்பது ரூபா கொடுங்க அக்கான்னு கெஞ்சு கெஞ்சுன்னு கெஞ்சினா. ரொம்பப் பாவமா இருந்துச்சு. மனசு கேட்கலே. அப்படியே உருகிப் போச்சு. ‘
‘உனக்குப் பணமேது ? ‘
சாரதா அவன் பக்கம் திரும்பினாள். கண்களும் இதழும் துடித்தன.
‘பணத்துக்கு ஒரு வழி பண்ணினேன். பாத்தீங்களா எவ்வளவு பெரிய அண்டா. இப்ப வாங்கறதா இருந்தா இருநூறு ரூபாய்க்குக் கூடக் கிடைக்காது. என்ன கனம் கல்லுக் கணக்கா. நமக்கு நாப்பது ரூபாய்க்கே வந்துடுச்சி. ‘
This entry is part [part not set] of 8 in the series 20001217_Issue
வ.ஐ.ச.ஜெயபாலன்
மண்ணும் விண்ணும் மட்டுமல்ல
மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல்.
அதை எப்படி ஆரம்பிப்பது ?
யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து ?
இல்லை எடுத்துச் செல்லுங்கள்
உங்கள் அதீத கற்பனைகளை.
மதுவும் விந்தும் ஊறிய சொற்க்களை.
கனவு வரை மண் தோய அவள்
இட்ட அடிகளில் உள்ளதே கவிதை.
அவள் பி.ஏ முடிக்கவில்லை என்றார்கள்.
அவள் காட்டில் என்றார்கள்
மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள்.
நானோ அவளை
கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன்.
நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா
அல்லது அவள் மீதான மதிப்பினிலா.
கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன்
நடுங்கும் என் கால்களை.
அவள் அதே அமைதி ததும்பும் முகமும்
குருத்துச் சிரிப்புமாய்
முகவரி கேட்காதீர்கள் என்றாள்.
வாழ்வு புதிர்கள் போன்று
புத்தியால் அவிழ்க்கக் கூடியதல்லவே.
ஒரு பெண்
கண்ணகியும் பாஞ்சாலியும்போல
ஆண் கவிஞர் வடிவமைத்த படைப் பல்லவே.
காமம் தீராது எரியும் உடலுள்
எரியாத மனதின் தீயல்லவா காதல்.
ஒடுக்கப் படுகிறபோது மனசில் எரிகிறது
மற்றும் ஒரு தீ.
பல்கலைக் கழகச் சுவர்க் காட்டுள்
அவளும் அவனும் ஒரு சோடி ஆந்தைகளாய்
கண்படா திருந்த
காலங்களை நான் அறிவேன்.
அப்போதும் கூட
இன்னும் மூக்கைப் பொத்தினால்
வாய் திறக்கத் தெரியாத
அப்பாவிப் பாவமும் அபிநயமும் பூண்டு
ஒரு யாழ்ப்பாணப் பெட்டையாய்த் திரிந்தாள்.
பின்னர் நரகம் தலைமேல் இடிந்தது.
2
வெண் புறாக்களும்
வெண் புறாக்களை வரவேற்றவரும் மோதிய
88ன் குருதி மழை நாட்கள்.
முதல் குண்டு வெடித்ததுமே
நெஞ்செல்லாம் வன்புணற்ச்சி வெறியும்
உடலெல்லாம்
பெண்கள் இரத்தம் தோய்ந்த லிங்கமும்
கையில் துரு கனக்கும் றைபிளுமாய்
புறாக்கள் காக்கிக் கழுகான தெப்படி.
வரவேற்ற கரங்கள் ஏந்திய பூச்செண்டு
துப்பாக்கியானது எப்படி
மேன்மை தங்கிய பாதுசாவோ
டெல்கியில்.
அவரது கிரீடத்தை அணிந்தபடிக்கு
அவரது விதூசகன் ஒருவன் கொழும்பில்.
நமது கோபங்களை எடுத்து
விதி வனைந்து தந்த பீமனோ
கண் சிவக்க ஈச்சங் காட்டுக்குள்.
இவர்களிடை சிதறியது காலம்.
இவர்களிடை சிக்கி அழிந்தது
ஆயிரம் வருட நட்பின் வரலாறு.
3
சேறான பாதையில் சிதறியது ஒரு டாங்கி.
கீழே இரண்டு சீக்கியரின் பிணங்கள்.
தெருவில் போனவர் அடைக்கலம் புகுந்த
கோவிலுள் பாய்ந்தது துப்பாக்கி வேட்டு.
அவன் தரையில் சாய்ந்ததும்
அவள் சீக்கியன்மேலே அலறிப் பாய்ந்தும்
றைபிழைப் பற்றி முகத்தில் உமிழ்ந்ததும்
சுடடா என்னையும் என அதட்டியதும்
கண்டிலர் கண் இமைத்தவர்கள்.
என் தாய் மண்ணில் தலை குனிந்ததே
எனது கலாச்சாரத் தாயகம்.
யாருமே நம்பவில்லை.
அந்த அப்பாவிப் பெண்ணா ?
கேட்டு வாய் பிழந்தவர் எல்லாம்
கண்கள் பிழக்கக் கதறி அழுதனர்
4
விடை பெறு முன்னம்
அது அண்ணன் தம்பி சண்டை என்றாள்.
இருவரும் இளைத்தனர் தவறு என்றாள்
இருவரும் இன்னும் தவற்றை எண்ணி
மனம் வருந்தலையே என்கிறபோது
கண்ணும் மனமும் குரலும் கலங்கினாள்.
இருவரும் மீழ இணைவர் என்றாள்
தவிர்க் கொணாதது வரலாறென்றாள்.
தழைகள் அறுவதும் வரலா றென்றாள்.
பின்னர் விடைதரும்போது
கூந்தலை ஒதுக்கி நாணிச் சிரித்தாள்.
அவளைக் கண்டது மகிழ்ச்சி.
அவளுடன் பேச்சோ மேலும் மகிழ்ச்சி
பாதுகாப்பாய் விடை பெற்றதும் மகிழ்ச்சி.
அந்த இரவின் கனவும் மகிழ்ச்சி.