அதிரை தங்க செல்வராஜன்
“நான் செத்தாலும், என் முகத்திலே முழிக்காதே போ”
எல்லா தர்க்கங்களின் முடிவிலும் அப்பாவின்
பிரம்மாஸ்த்திரமிது.
இந்த கோபம் 12 மணி நேரத்துக்கு மேல் நீடிக்காது.
காலையில் சென்னையில் இறங்கியவுடன் முதலில்
தொலைபேசுவது அப்பாவாகத்தானிருக்கும்.
அப்பா … ம்ம்
நான் வெளிலே போகலாம்னு யோசிக்கிறேன்.
எங்கே
ஈரானுக்கு
ஏன்டா வேற நாடே கிடைக்கலயா?
நல்ல சம்பளம், 3 மாதத்திற்கு 2 வாரம் ஊருக்கு வந்து
போகலாம்.
யோசிச்சு செய்.
தொலைபேசியை வைத்துவிட்டார்.
அப்பா இது போல் சொன்னதேயில்லை.
“ஏம்மா இவன் வெளிலே போறத்துக்கு இப்படி
அழறான், ஆம்பளைனா வெளிலே போனும்
சம்பாதிக்கனும்”.
அப்பாவின் நினைவோடு ஊருக்கு புறப்பட்டேன்.
எப்போது ஊருக்கு புறப்பட்டாலும் சந்தோசம்தான்.
அர்த்த ஜாமத்தில் கதவை தட்டினாலும் முதல் குரல்
அப்பாவிடமிருந்துதான் வரும்.
நடுராத்திரிலே வராதேன்னு சொன்னா கேக்க மாட்டேங்கிற.
வா, எப்படியிருக்கே?
இருக்கென்பா, நீங்க நல்லாயிருக்கீங்களா?
என்னெத்தெயிருக்கேன், ஏதோ ஓடுது.
கால் கை கழுவிட்டு வா, காலுலே கொஞ்சம் எண்ணெ
தேச்சு விடுடா.
பெரியவனே,
என்னப்பா,
என்ன வாங்கிட்டு வந்தே?
நரசுஸ் காபிபொடியும், ஆப்பிளும்ப்பா.
ஏன்டா அதிரசம் கிடைக்கலியா?
சீண்டல் அடிச்ச மாதிரியிருந்துச்சு, அதான் வாங்கல.
எப்படி இவுங்களை விட்டுட்டு போறதுன்னு புரியலை.
காலையில் சொல்லலாம்னு நெனைக்குபோதே,
எல்லாம் சரியாயிடுச்சா தம்பி, என்ற குரலுக்கு
ஒரு நிமிடம் மொளனமானேன். ம் ஆச்சுப்பா.
என்னைக்கு போகனும்,
ரெண்டு நாள்ல கிளம்பனும்பா.
சரி, படு, காலையிலே பெத்த பெருமளை கும்பிட்டு
மத்த காரியத்தை பாப்போம்.
நாப்பத்தஞ்சு வருஷம் அம்மா செஞ்சதை நம்மாள
நாலு மாசம் செய்ய முடியலே.
நாக்கையும், வாயையும் கட்டுனா நல்ல கதிக்கு போலம்னு
ஆத்தா சொல்லுவாங்க.
அப்பாவால முடியாதது இதுதான்.
அம்மா ஒரு வித பசை, அப்பாவின் அடாவடி பேச்சுக்களால் உடையும் உறவுகளை உதிராமல் ஒட்ட வைத்து விடுவார்.
“சூரியனாரே எம்புள்ளைகளெ நல்லபடியா வையி,
என்ன நல்ல கதிக்கு எடுத்துட்டு போ”.
சீக்கிரம் எழுந்திருச்சு குளிச்சுட்டு வாடா.
அப்பாவிற்கு எல்லாமே அதிகாரம்தான்.
எல்லாம் முடித்து காலில் விழுந்த போது,
எந்திரிப்பா, எந்திரி பத்திரமா போய்ட்டு வா,
துண்ணுருவிட்டு,பத்து ரூபா கொடுத்த போது
அழுகைதான்,
ஏன்டா அழுவுறே, நான் உசுரோடயிருப்பேன்,
ஓன் புள்ள குட்டிய பாத்துக்கிறேன் அழாம போய்ட்டு வாப்பா.
சீக்கிரமா வந்து பத்து குடும்பத்துக்கு சாப்பாடு போடற மாதிரி
ஏதாவதொரு தொழிலை தொடங்குப்பா.
ஊரைவிட்டுப் போவது எப்பவும் இறுக்கம்தான்.
இமிக்ரேசனில், ஏம்பா இரண்டு பேர் ஈரானுக்கு
நிக்கிறாங்க அனுப்பலாமா என்று சக அலுவலரிடம்
விசாரித்த போது வயிறு கலங்கியது.
கையைக் கொண்டு மொழி பேச முடியும் என்பது
ஈரானில் கால் வைத்தவுடன் புரிந்தது.
தமிங்கிலத்தில் வளர்ந்த நமக்கு, பா·ர்சி மட்டுமே
என்றவுடன் பயம் பிடித்துக் கொண்டது.
பத்து நாட்களில் எல்லாம் பழகியது, மனசு மாத்திரம்
ஊரைச் சுற்றியே.
ஈரானில் அர்டபில் நகரம் வரமும் சாபமும் நிறைந்தது.
சபலான் மலையின் மடியில் ஐந்து மாதங்கள் கடும் குளிரில்
பனி போர்த்தி கிடக்கும், மீதி ஏழு மாதங்கள் தென்றல்
வருடும்.
ஊரில் பனிமூட்டம் பார்த்திருக்கிறேன், பனித்துகள் சிதற
ஆரம்பித்து அரைமணி நேரத்தில் பஞ்சு பொதி போர்த்தியது
போலானது அழகாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
சூரியனை காணவில்லை, பசிதான் நேரம் நகர்வதை
ஞாபகபடுத்தியது.
ஊருக்கு தொலைபேசியதில் கவலைதான் மிச்சம்.
மாலை சுராபில் ஏரியில் உறைந்து ஐசாகியிருந்த தண்ணீரின்
மேல் குழந்தைகள் சைக்கிளில் வலம் வருவது புதிதாயிருந்தது.
பா·ர்சி மக்கள் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சந்தித்தாலும்
ஸலாம் சொல்வதும், எழுந்து மரியாதை தருவதும் வித்யாசமாக
இருந்தது.
விடியாத காலை எட்டு மணிக்கு கைபேசி அழைத்தது.
கடவுளே எந்த கஷ்டமும் கொடுத்திடாதே,
ஆனால் அழைத்த குரல், மாமா கீழே விழுந்துட்டாங்க,
தஞ்சாவூர் வினோதகனுக்கு கூட்டிட்டு போறோம், நீங்க
வரமுடியுமா?
மனைவிக்கு எதைச்சொல்லி புரியவைப்பது?
டாக்டர்ட காமிச்சுட்டு கூப்பிடு.
பாஸ்போர்ட் ரெஸிடென்ஸ் பர்மிட் பெற சென்றுள்ளது.
சனிக்கிழமை பார்போமென பர்ஸனல் டிபார்ட்மென்டில்
கூறிவிட்டார்கள்.
சனிக்கிழமை நகர்ந்துவிட்டது, பாஸ்போர்ட் வரவில்லை.
நான்கு நாட்களில் அப்பாவின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. அப்பாவின் சப்தமும் திட்டும் குறையவில்லை.
குழந்தைகள் உளறினால் மழலை என மகிழ்வதும், வயதாகி பேசினால் எரிச்சலாய் எடுப்பதும் இயல்பாகி விட்டது.
வணிக மயமான மருத்துவமணையில் எல்லா வயதினரும்
அவரவர் வியாதிக்கு அழுது கொன்டிருந்தனர்.
நாள் நகர்கிறது. வியாதி நகரவில்லை.
சென்னைக்கு மாற்றலாமென்றால்,
டாக்டர் வந்தாத்தான் டிஷ்சார்ஜ், வெயிட் பன்னுங்க.
எப்ப வருவார்?
வந்துருவாங்க வந்துருவாங்க வெயிட் பன்னுங்க.
மாலையாகியும் வராததால் கோபப்பட,
டாக்டர் ஊரிலேயே இல்லையென தெரிய வந்தது. எல்லாம் பணப்பறிப்புக்குத்தான்.
தம்பி அப்பாவிடம்,
அண்ணனெ வரச்சொல்லட்டுமா?
வேணான்டா, வீண் செலவு, எல்லாம் சரியயிடும்
கவலைபடாதே. மெட்ராசுக்கு போய்ட்டா சரியாயிடும்.
அப்பா அப்போலோவில் அடைக்கலமானார்.
எழுபது வயசாச்சு, எந்த வியாதிக்குன்னு பார்க்கிறது?
ஐசியுவில் தூக்க மருந்தின் உதவியில் அரைதூக்கத்திலிருந்தார்.
கால் அமுக்குவதற்க்கு கூட மெஷின் வந்து விட்டது.
நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பாவின் வாய் அசையாது
இருப்பது இப்போதுதான்.
ஒரு வாரமாக வீடு குழப்பத்தில், ஏதும் நடப்பதற்குள் நான்
அங்கு சென்று விட வேண்டும்.
இத்தனையும் இங்கு உள்ளவர்களிடம் எந்த மொழியில் புரிய வைப்பது. எனது கண்ணீரின் வலிமை தெரியாது நேற்று
மதியமே வார விடுமுறையில் கரைந்து விட்டார்கள்.
பத்து சதவீதம் முன்னேற்றம் உள்ளதாகவும், உடனே என்னைவருமாறும் மருத்துவர்கள் சொல்வதாக செய்தி வந்தது.
இறைவா இன்னும் இரண்டு நாள்கள் நீட்டி கொடு, நான் வந்து
பார்த்து விடுகிறேன்.
வெளியில் பூஜ்ஜியத்திற்கு குறைவான குளிர், வயிறு மட்டும்
பசி என்று விடாமல் நினைவு படுத்தியது.
தேனீர் வடி கட்டும் போது கை பேசி அழைத்தது.
கடவுளே இன்றைக்கு வேண்டாமே.
நான் நேரில் ஒரு தடவை பார்த்த பிறகு எப்படியானாலும்
பரவாயில்லை.
வினோதமான மனம், அப்பா பிழைக்க வேண்டும் என்பதை
விட நான் சென்று பார்க்கும் வரை எதுவும் ஆகக்கூடாது
என வேண்டியது.
அப்பா இனியில்லை.
என் அழுகையினூடே இன்று நான் வர இயலாத நிலையைச்
சொல்ல, தம்பி, நான் பார்த்து கொள்கிறேன் என்றான்.
நீ வரும் வரை அப்பாவை வைக்க இயலாது, நீ வரும் போது
வா என கூறி வைத்தான்.
கூடத்தில் கிடத்திய அப்பாவின் உடலுக்கு, தொலைபேசியில்
கதறிய என் நிலை தெரியுமா?
வெளி நாடு கிளம்பும் போதெல்லாம், எதுக்கு அழுவுறே, ஆம்பள
புள்ளே அழக்கூடாது, பணம் இருந்தாத்தான் மதிப்பும் மரியாதையும்
நெத்தி நெறைய விபூதி பூசி விட்டு பத்து ரூபா பணம் தர இனி அப்பா இல்லை.
கண்ணீருக்கு மொழி இல்லை, எல்லா நாட்டவரும்அணைத்து, தட்டி
கொடுத்து, ஆறுதல் சொன்ன போது கதறத்தான் முடிந்தது.
“நான் செத்தாலும், என் முகத்திலே முழிக்காதே போ”
அப்பாவின் வார்த்தைகள் நெஞ்சுக்குள் எதிரொலித்தது.
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)
- வாழ்க ஜனநாயகம் !
- நவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கம்
- நர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி
- விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- கடிதம்
- விமர்சனக் கடிதம் – 2
- மெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை
- சங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ?(கட்டுரை: 59)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2
- ஆதமி
- பனித்துளி புகட்டிடும் பாடம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- செத்தும் கிழித்த கமலா சுரையா
- நினைவுகளின் தடத்தில் – (32)
- விளம்பர இடைவேளைகள்
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- சத்தமின்றிப் பூக்கும் பூ
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்
- மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்
- தகவல்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5
- அப்பா
- முட்டர்பாஸ் Mutterpass