வேண்டுதல்

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

யெஸ்.பாலபாரதி


‘என்னங்க நம்ப புள்ள கெடச்சுடுவான்ல?’ என்று கேட்கும் போதே மரகதத்தின் குரல் தழுதழுத்தது. எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் அவசரமாக சேலைத்தலைப்பால் முகத்தை துடைப்பது போல கண்களை துடைத்துக்கொண்டாள்.
கையில் இருந்த வாரயிதழில் இருந்து தலையை எடுக்காமலேயே . ”கிடைக்காம எங்கே போய்டுவான். அதுதான் ஜோசியர் சொல்லி இருக்கார்ல. அந்த அனுமாரை வேண்டிகிட்டு வந்தா.. எல்லாம் நல்ல படியா நடக்கும்னு. நீ தேவையில்லாம கவலைப்படுறதை நிப்பாட்டு. எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துப்பான்”என்றார் குமரேசன்.
குமரேசனுக்கும், மரகதத்திற்கும் மணமாகி இருபத்தியிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பேருமே பள்ளியில் ஆசிரியர்களாக சென்னையில் வேலை பார்த்து வருபவர்கள். கும்பகோணத்துப் பக்கம் சொந்த ஊர் என்றாலும், இவர்கள் சென்னைக்கு குடிபெயர்ந்து ஒரு மாமாங்கம் ஆயிற்று. இவர்களது ஒரே ஒரு மகன் அஷ்வின். இந்த ஆண்டு பன்னிரெண்டாவது பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவன். அதனால் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.
எங்கே போய்விடப்போகிறான், இருட்டினதும் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற இவர்களது நினைப்பு தவறாகிப் போனது. இரவு வீடு திரும்பவில்லை மகன். அங்கம்பக்கம், உறவுக்கரர்கள் என்று எங்கு தேடியும் பையனைக் காணவில்லை. போலீஸிலும் புகார் அளித்தாகிவிட்டது. ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை. ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் மரகதத்தின் அண்ணி சொல்லி, சென்னை கீழ்கட்டளையில் வசிக்கும் ஒரு சோதிடரைப் போய்ப் பார்த்தார்கள். அவர் தான் ராமேஸ்வரம் போய், சீதையை கண்டுபிடிக்க உதவிய அனுமார் கோவில் இருக்கு, அங்கே போய் வேண்டிக்கொள்ளும் படி பரிககரம் சொல்லி இருந்தார். இவர்களும் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
*
பிளாட்பாரத்தின் விளிம்புக்கு வந்து, மெதுவாய் குனிந்து இடது பக்கத் தண்டவாளங்களின் கடைசி பக்கம் பார்த்தான் சதாசிவம். ரயிலின் தலைவிளக்கு தூரத்தில் சின்னதாய் தெரிந்தது. அப்படியே வலதுபக்கம் பார்த்தான். சிக்னல் சிவப்பில் இருந்தது, அதுவந்து சேர்வதற்குள் இது பச்சையாகிவிடும். அப்போது தான் பற்றவைத்திருந்த பீடியை ஒரு முறை வாயில் வைத்து புகையை உள்ளிழுத்தான். கண்கள் சொருகிக்கொண்டு வந்தன. வெளியே விட மனமில்லாமல் புகையை மெல்ல கசியவிட்டான். அது மூக்கின் துவாரங்களின் வழி மெதுவாய் கசிந்தது. அதன் நாற்றத்திற்கு முகஞ் சுளிக்கும் மனிதர்கள் எவரும் அருகில் இல்லாத்து நிம்மதியைத் தந்தது. பீடியில் தலையில் இருந்த நெருப்பை கவனமாக சுண்டி விட்டான். புகைந்தபடி இருந்த பீடியை நடைமேடையில் நசுக்கி அணைத்தான். பாக்கெட்டிலிருந்து சின்ன காகிதம் எடுத்து, மீதி பீடித்துண்டை அதில் வைத்து சுற்றி, இடுப்பில் சொறுகிக்கொண்டான். எழுந்து நின்றபோது பூமி நழுவியது போல தோன்றியது. தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.
‘க்ரபையா த்யான் திஹியே.. சென்னை சே ராமேஸ்வரம் ஜானேவாலி காடிநம்பர் 6713 சேது எக்ஸ்பிரஸ் க்குச்சி சமை ஃபர் பிளாட்பார்ம் தோ மே ஆயகி..’
’யாத்திரிகர்கள் கவனிக்கவும்.. சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வண்டி எண் 6713 சேது எக்ஸ்பிரஸ்.. இன்னும் சில வினாடிகளில் ப்ளாட்பார்ம் இரண்டில் வந்து சேரும்..’
ரயில் வந்துகொண்டிருப்பதை விதவிதமான மொழிகளில் பயணிகளுக்கு அறிவித்துக் கொண்டிருந்தது ஒலிபெருக்கி. ஆனால்.. ஸ்டேசனில் சில உள்ளூர்வாசிகளைத் தவிர வேறு யாரையும் காணவில்லை.
பேய் கதைகளில் வரக்கூடிய கொள்ளிவாய் பிசாசு மாதிரி, கரும்புகையை வெளியேற்றியபடி மெதுவாய் வந்துகொண்டிருந்தது ரயில். எழுந்து நின்று தயாராக நின்று கொண்டான். தூரத்தில் காளியப்பனும், முனியாண்டியும் கூட தயாராக நிற்பது தெரிந்தது. கொஞ்ச நாட்களாக இப்படித்தான் ஊருக்குள் ரயில் வந்து சேரும் முன், தங்களுக்கான யாத்திரைவாசிகளை பாம்பன் ரயில் நிலையத்திலேயே பேசி மடக்கி சரி செய்து விடுகின்றனர். அதனால் இவனும் இவனது நண்பர்களும் மண்டபத்தில் வண்டியேறி தங்களுக்கான யாத்திரைவாசிகளை பிடித்து விடுவது என்று முடிவு செய்திருந்தார்கள்.
அதிகாலை ஐந்து மணிக்கு ராமேஸ்வரம் செல்லக்கூடிய ரயில் வரும் என்பதால் முதல்நாளே வந்து படுத்துவிட்டார்கள். வண்டிக்குள் ஏறியதும், நல்ல பசையுள்ள யாத்திரைவாசியாக பார்த்து, பேசி, ஒழுங்கு பண்ணி விட்டால் எப்படியும் ஐநூறு ரூபாய் சம்பாதித்துவிடலாம். மெதுவாய் வந்துகொண்டிருந்த ரயில், ஸ்டேஷனின் பிளாட்பாரத்தை தொட்டதும் ஊர்ந்து வரத்தொடங்கியது. கார்டூன் படங்களில் மூக்கு, காது வழியாக புகை விடும் காளை போல, ரயில் இஞ்சினின் பல இடங்களில் இருந்து புகை வந்துகொண்டிருந்தது.
ரயில் நிற்கும் முன்பே தாவியேறினான். இவன் ஏறிய பெட்டியில் அவ்வளவாக வட இந்திய கூட்டம் இல்லை. ஒத்தை ரெட்டையாக சில குடும்பங்கள் மட்டுமே வட இந்தியர்கள் இருந்தார்கள். சின்ன குடும்பங்களுக்கு வழிகாடியாகப் போனால் பெரியதாக ஒன்றும் கிடைக்காது. பெரிய குடும்பமாக இருந்தால் வருமானமும் அதிகமாக இருக்கும்.
பக்கத்துபெட்டிகளில் ஏறிய காளிக்கும், முனியாண்டிக்கும் ஏதாவது கிடைத்ததா தெரியவில்லை. வண்டி அடுத்து, பாம்பனில் நிற்கும் போது தான் இறங்கி பார்க்கவேண்டும். யோசனையுடன் பெட்டியுள்ளே நடை போட்டான்.
வண்டி இப்போது பாம்பன் பாலத்தின் மேல் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு இருக்கையாக பார்த்தபடி நடந்தான். எதுவும் தேறினமாதிரி தெரியவில்லை. சில தமிழ்க்குடும்பங்கள் இருந்ததன. ஆனால் தமிழர்களிடத்து ராமகதைக்கு அவ்வளவாக மரியாதை கிடையாது. வட இந்தியர்கள் போல இவர்கள் ராமனின் பெயரில் மயங்குவதில்லை. சரி இன்றைய பொழுது அவ்வளவு தான் என்று எண்ணியபடியே திறந்திருந்த ரயிலின் கதவின் அருகில் நின்றுகொண்டு கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
’ஏய்..இது தான் பாம்பன் பாலம்னு நினைக்கிறேன்’
’இருட்டுல சரியா தெரியலையேங்க..’
‘சரிவிடு, திரும்பும் போது பார்த்துக்கலாம்.’
’இங்க பாருங்க.. தண்ணியில பாறை மாதிரி தெரியுது.. இது தான் ராமர் கட்டுனதோ..’
குரல்கள் கவனத்தை ஈர்த்தது. திரும்பிப் பார்த்தான். குமரேசனும், மரகதமும் இருந்தார்கள். இந்த தமிழ்க்குடும்பத்தை ஏன் முயற்சித்துப் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியதும், நிமிர்ந்துகொண்டான். தொண்டையை கணைத்துக்கொண்டு, அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு அருகே சென்று பார்த்தான்.
’எங்க.. காட்டு ராமர் கட்டுன பாலத்தை..’என்றபடியே அவர் எழுந்து இந்தபக்கம் ஜன்னல் அருகில் வந்தார்.
‘இது இல்லசார் ராமர் கட்டுன பாலம். இது வெறும் பாற தான்.’
அவர் திரும்பிப்பார்த்தார் இவனை. அதுவரை பாலம் என்று எண்ணிக்கொண்டிருந்த அவரின் மனைவியும் இவனைப் பார்த்தாள்.
‘சார்.. என் பெயர் சதாசிவம். ராமேஸ்வரத்து கோயில் கைடு. உள்ளுரை சுற்றிக்காட்டுவது தான் தொழில். நீங்க விரும்பினா உங்களுக்கும் கூட ஊர்கதை சொல்லி, தர்சனத்துக்கு ஏற்பாடு பண்ணலாம் சார்.’
அவர் இவனை நம்பாமல் பார்த்தார். ’இதோ டோக்கன். இது இருந்தா நீங்க நம்பலாம். இல்லாதவங்கல நம்ப வேண்டாம்.’
சதாசிவம் நீட்டிய பித்தளை டோக்கனை அவர் வாங்கிப் பார்த்தார். அகில இந்திய யாத்திரைப் பணியாளர் சங்கம், இராமேஸ்வரம் என்று பெரிக்கப்பட்டிருந்தது. அதில் இவன் பெயர் இல்லை. வெறும் எண் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் இவனை நிமிர்ந்து பார்த்தார்.
உடனே பாக்கெட்டுக்குள் கையைவிட்டு ஓர் அடையாள அட்டையை எடுத்துக் காட்டினான். அதில் இவனது புகைப்படமும், பெயரும், டோக்கன் எண் போன்றவையும் அச்சிடப்பட்டிருந்தன. அவர் முகத்தில் ஒருவித சந்தோசம் தெரிந்தது.
’எவ்வளவு கேட்பீங்க’
’என்னசார் பெரிசா கேட்டுறப்போறோம். ஒங்கள மாதிரியானவங்களுக்கு சேவை செய்யத்தான் இருக்கோம். நீங்க கொடுக்குறதை வாங்கிக்கிறேன் சார். ஒங்களுக்கு அங்க என்ன தேவைன்னு சொல்லுங்க.. எதுவும் விட்டுப்போகாம, கவனிச்சுக்கிறேன். அப்புறம் நீங்க கொடுக்குறத கொடுங்கசார்..’
’ம்..சரி.. இங்க என்னென்ன முக்கியமானதுன்னு சொல்லுங்க..’
சதாசிவம் நடைபாதையை அடைத்துக்கொண்டு அவர்களைப் பார்த்து நின்று கொண்டான். ராமநாத சுவாமி கோவில், அங்கு இருக்கும் இருபத்தி இரண்டு தீர்த்தங்கள், கெந்தமாதன பர்வதம் அங்கு பார்க்க வேண்டிய ராமர் பாதம், வழியில் சாட்சி அனுமான் கோவில், ராமர்தீர்த்த்தம், லக்ஷ்மண தீர்த்தம், சீதா தீர்த்தம், பஞ்சமுகி அனுமான்கோவில் ஆகியவை முக்கியம் என்று பட்டியலிட்டு, ஒவ்வொன்றின் சிறப்பையும் சுருக்கமாக கூறத்தொடங்கினான். அவர்களுக்கு இவனை மிகவும் பிடித்துப் போயிற்று.
’வேண்டிகிட்டா.. தொலஞ்சு போனதெல்லாம் கிடைக்கும்னு சொல்லுவாங்களே அது எந்த கோவில்’
’அது தான் சார் சாட்சி அனுமான் கோவில், ராமர்பாதம் பக்கத்துல இருக்கு’
’அங்கேயும் போகனும்.’
’கண்டிப்பா போகலாம் சார். சரி.. நீங்க உட்கார்ந்துக்குங்க.., வேற யார் வந்து கேட்டாலும் உங்க கைடு சாதசிவம்னு சொல்லீடுங்க சார். நான் ராமேஸ்வரத்தில் ரயில் நின்னதும் உங்களை வந்து அழைச்சுட்டுப் போறேன்’
அவரும் சரியென தலையாட்டினார். ரயில் இப்போது பாம்பன் ரயில் நிலையத்தை அடைந்திருந்தது. வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போதே லாவகமாக இறங்கினான். பின்னால் ஏறிய நண்பர்களும் இறங்கினார்கள். இவனைப் போன்ற பல கைடுகள் வண்டிக்குள் தாவி ஏறினார்கள்.
‘என்னடா.. ஏதாவது பார்ட்டி மாட்டிச்சா..?’ என்றபடியே வந்தான் முனியாண்டி. கூடவே காளியும் இருந்தான்.
’ம்..ஒரு தமிழ் பேமிலி தாண்டா மாட்டிச்சு. சேட்டுக்காரய்ங்க இந்த டப்பாவுல கம்மி. ஒங்களுக்கு..’
’எனக்கு குஜராத்தி பேமிலி ஒன்னும், இவனுக்கு உபி பார்ட்டியும் கிடைச்சிருக்கு.’
’நல்ல வேளடா.. மண்டபம் போனோம். இங்கன நின்னிருந்த இதுவும் கிடைச்சிருக்காது’
ரயில் மெல்லாமாய் நகரத்தொடங்கியது மூவரும் ஓடிச்சென்று ஏறிக்கொண்டனர். மரங்களையும் மனிதர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் முன்னோக்கி வேகமெடுத்தது அது.

‘இந்த ஊர்ல இருக்குறதுலயே இது தான் சார் பெஸ்ட் லாட்ஜு, இப்ப சீசன் டைம் பாருங்க, அதனலா டபுள் பெட்ரூம் கிடைக்கல. ட்ரிபிள் பெட்ரூம் தான் இருக்காம். நல்லா எடம் சார். இங்கேயே ஓட்டலும் இருக்குறதால, சாப்பாட்டுக்கு அலையவேண்டிய அவசியமிருக்காதுன்னு தான் இங்க கூட்டியாந்தேன். வசதியாவும் இருக்கும்’ கைடு சதாசிவம் பேசிக்கொண்டே போனான்.
குமரேசனும் சரியென தலையாட்டி விட்டு, ரிஜிஸ்டரில் பெயர் விலாசம் எழுதிக்கொடுத்துவிட்டு, அறைச்சாவியை வாங்கினர். ’குளிச்சுட்டு வாங்க சார்.. நாம கோவிலுக்கு போகலாம்.. நானும் ஒரு டீக்குடிச்சுட்டு வந்துடுறேன்’ அவர்கள் அறையை நோக்கி நர்ந்ததும், ரிசப்சன் கவுண்டரில் ட்ரிபிள் பெட்ரூமுக்கான கமிஷனை வாங்கிக்கொண்டு, வெளியேறினான் சதாசிவம்.
போத்தார் சத்திரம் வாசலில் இருந்த தேனீர்க்கடையை நோக்கிப் போனான். தனக்கு ஒரு தேனீர் சொல்லி விட்டு, தட்டில் இருந்த சமோசா ஒன்றை எடுத்து கடித்தவராரே, போத்தார் சத்திரத்தின் திண்ணையில் போய் அமர்ந்துகொண்டான். கடைப்பையன் இவனிடம் வந்து தேனீரைக்கொடுத்தான். ஒருவாய் சமோசாவைக் கடித்து, தேனீரை உறிஞ்சினான். தேனீர் கூடுதல் இனிப்புடன் சுவையாக இருந்தது. இவனைப் பார்த்துமே மாஸ்டர் கூடுதல் சக்கரை போட்டுவிடுவார். காலியான கண்ணாடி க்ளாஸை அருகில் வைத்துவிட்டு, இடுப்பில் சுருட்டி வைத்திருந்த பாதி பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டான்.
முதலில் புகையை கொஞ்சம் சிரமப்பட்டு இரண்டொருமுறை இழுத்தான். இப்போது நெருப்பு நன்றாக பற்றிக்கொண்டது. புகையின் சுவை கூடி இருந்தது. இது தான் சிவன் சொத்து என்பது எத்தனை பேருக்கு தெரியும். இங்கே இருப்பவர்களுக்கு சிவனையும் தெரியவில்லை. அவனுடைய சொத்தையும் தெரியவில்லை. அதனால் தானோ என்னவோ வடக்கே இருந்து வரும் சாமியார்கள் சாலிக்ராம் வைத்திருக்கிறார்களோ இல்லையோ எல்லோரின் பையிலும் சிவன்சொத்தும், சிலுப்பியும் கட்டாயம் இருக்கிறது. ‘அண்ணே வேற எதுனா வேணுமா?’ தேனீர்க் கடைப்பையனின் குரல் இவனது சிந்தனை ஓட்டத்தை கலைத்து. ‘ஒன்னும் வேணாம்டா..’ என்று சொல்லிவிட்டு, தேனீர்க்கும்,சமோசாவுக்குமான காசைக்கொடுத்துவிட்டு, லாட்ஜை நோக்கி நடையைக் கட்டினான். அங்கே அவர்கள் குளித்துமுடித்து, தயாராக கீழே வரவும், இவன் போய்ச்சேரவும் சரியாக இருந்தது.

அக்னிதீர்த்தக் கரையில் அவர்களை மூழ்கவைத்து, சன்னதித்தெருவழியாக பெரிய கோவிலின் கிழக்கு வாசல் வழியாக அழைத்துவந்து, முதல் தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தத்திலிருந்து தலைக்கு ஒருவாளி தண்ணீர் அள்ளி, ஊற்றி, அப்படியே ஈரம் சொட்டச்சொன்ன.. மற்ற இருத்தியோரு தீர்த்தங்களிலும் குளிக்கவைத்து, அவ்வப்போது இடையிடையே தல புராணவரலாறுகளையும் கதையாகச்சொல்லி, ஸ்ரீராமநாதசாமி, பர்வதவர்தினி அம்பாள், அனுமான் என கோவிலில் உள்ள முக்கிய சன்னதிகளுக்கும் அழைத்துச்சென்று தரிசனம் செய்துவைத்து, மதிய உணவுக்கு பின் ராமர்பாதம், சாட்சி அனுமான் கோவில், லக்ஷ்மணதீர்த்தம், பஞ்சமுக அனுமார் போன்ற இடங்களுக்குப் போகலாம் என்று சொல்லி திரும்பவும் தங்கி இருந்த இடத்தில் கொண்டுவந்து விட்டான் சதாசிவம்.

கெந்தமாதனப் பர்வதம் என்று அழைக்கப்படுகின்ற ராமர் பாதம் கோவிலுக்கு போகும் வழியில் தான் இருக்கிறது சாட்சி அனுமான் கோவில். ஆனால் முதலில் ராமன் பாதத்தை வணங்கிவிட்டு, பின் தான் சாட்சி அனுமானைக் காணவேண்டும் என்று சதாசிவம் சொன்னதால், ராமர் பாதம் கோவிலுக்கு போக மதியம் ஆட்டோவில் ஏறிப்புறப்பட்டார்கள். அவர்களை பின்னிருக்கைக்கு அனுப்பி விட்டு, ஆட்டோ ஓட்டுனரோடு, அவரது இருக்கையிலேயே கொஞ்சம் இடத்தை பிடித்துக்கொண்டு, அமர்ந்தான் சதாசிவம்.
என்னதான் தீர்த்தமாடினாலும், ராமநாதனை தரிசித்தாலும், சோதிடர் சொன்ன சாட்சி அனுமான் கோவிலுக்கு சென்று வழிபடுவதையே முக்கியமானதாக கருதினார்கள் என்று குமரேசனின் பேச்சில் தெரிந்தது.
‘சார் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?’
’இல்லப்பா.. சும்மா கேளு..’
‘காலையில ஸ்டேசன்ல பார்த்ததுல இருந்தே.. நீங்களும் அம்மாவும் சாட்சி அனுமான் கோவில் போறத பத்தியே தான் கேட்டுகிட்டு இருக்கீங்க. ஏன் யார் யாராச்சும் காணாம போய்ட்டாங்களா?’என்று சதாசிவம் கேட்டு முடிக்கும் முன்பாக பின்சீட்டில் இருந்து மரகதத்தின் விசும்பல் சத்தம் கேட்டது.
’கொஞ்சம் சும்மா இருக்கியா..’ என்று மனைவியை கடிந்துகொண்டு, சதாசிவத்தைப் பார்த்தார் குமரேசன். ‘ஆமாம்பா.. என்னோட பையன் ஓடிப்போய்ட்டான். ஒரு மாசமாச்சு. தேடாத எடமில்ல. இங்க அந்த அனுமார் கோவிலில் வேண்டிக்கிட்டா நடக்கும்னு சொன்னாங்க. அதனால தான் இங்கே வந்திருக்கோம்.’
‘அப்படியா.. சரியான எடத்துக்குத்தான் வந்திருக்கீங்க. நிச்சயம் உங்க புள்ள உங்களுக்கு திரும்ப கிடைச்சுருவார் சார். அம்மா நீங்க கவலப்படாம இருங்க. இந்த அனுமார் ரொம்ப சக்தி வாஞ்சவர். சீதாதேவியை ராவணன் தூக்கிட்டு போனப்புறம், எங்க போய் தேடுறதுன்னு ஸ்ரீராமர் குழம்பிப் போய் நின்னபோது, இங்கே இருந்து தான் அனுமார், ராவணன் இருக்குமிடத்தை அடையாளம் காட்டினதா சொல்லுவாங்க. இவர் காட்டின பக்கமாகத்தான் இலங்கைக்கு போய் சீதாதேவியை ஸ்ரீராமர் மீட்டுட்டு வந்ததா புரணம் சொல்லுது. அதனால தான் இந்த சாமிக்கு சாட்சி அனுமான்னு பேரு. அதனால கவலைப்படாம இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்..’என்று சதாசிவம் சொன்ன தலபுராணத்தை கேட்டதும் மரகதத்திற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
ராமர் பாதம் இருக்குமிடத்தை அடைந்தார்கள். கொஞ்சம் மலைமாதிரியான பகுதியில் இருந்தது கோவில். நீண்ட படிக்கட்டுகள் வழியாக ஏறிச்சென்று, கோவிலின் உள்ளே போனார்கள்.
அங்கு கருங்கல்லில் செதுக்கப்பட்ட இரண்டு பாதங்கள் காட்சியளித்தன. அப்பாதங்களின் பத்து விரல்களிலும் பொட்டு வைத்திருந்தார்கள். பாதங்களைச்சுற்றி மாலை போட்டிருந்தார்கள். இங்கிருந்து தான் ராமர் இலங்கையைப் பார்த்ததாக புராண கதையைச்சொல்லிக்கொண்டிருந்தார் கோவிலின் குருக்கள். அவர் கொடுத்த துளசி தீர்த்தத்தை பவ்வியமாக வாங்கிக்கொண்டு, கோவிலின் மேற்புறத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் வழி, போய்ச்சேர்ந்தார்கள்.
அங்கிருந்து பார்த்தால் ராமேஸ்வத்தீவின் மொத்தப்பரப்பளவும் தெரிந்தது. காற்று அப்படியே ஆளை அள்ளிக்கொண்டு போய்விடும் போல இருந்தது. மரகதம், குமரேசனின் கையை ஒரு கையால் கெட்டியாக பிடித்துக்கொண்டாள். இன்னொரு கையால் காற்றில் அலைகழிக்கப்படும் சேலையை ஒழுங்குபடுத்திக்கொண்டே இருந்தாள்.
நாலாபக்கமும் நீலவண்ணத்தில் கடலும் தெரிந்தது. காலையில் தரிசனம் செய்துவந்த பெரியகோவில் தூரத்தே மரங்களினூடாக காட்சியளித்தது. தூரத்தில் குட்டிகுட்டியார் கட்டிடங்கள் தென்பட்டன. இங்கிருந்து எப்படி இலங்கையைப் பார்த்திருக்க முடியும் என்பதை யூகிக்க முடியவில்லை. ஒரு வேலை அந்த காலத்தில் இவ்வளவு கட்டிடங்கள் இருந்திருக்காது. அதனால் இலங்கை தென்பட்டிருக்கலாம் என்று தனக்குள்ளேயே யோசித்துக்கொண்டார் குணசேகரன்.
கொஞ்ச நேரம் அங்கே நின்றுகொண்டிருந்துவிட்டு, கீழ இறங்கினார்கள். வழியில் பார்த்த சாட்சி அனுமார் கோவிலுக்குப் போனார்கள். சின்னக்கோவில் தான். நல்ல கூட்டமிருந்தது. எல்லோரும் ஏதாவது ஒன்று காணாமல் போய் இருக்கலாம்.
மரகதமும், குமரேசனும் மனமுருகி வேண்டிக்கொண்டார்கள். பின் பிரகாரத்தில் வலம் வரத்தொடங்கியபோது தான் கவனித்தார்கள். பிரகாரச்சுற்றுச் சுவர் முழுவதிலும் விதவிதமான கையெழுத்துக்களில் மனிதப் பெயர்களும், பொருட்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தது. முன்னால் வந்து, குருக்களிடம் இது பற்றி கேட்டபோது, ‘இங்க தொலைஞ்சு போனதை பத்தி வேண்டிக்கிறவா.. தங்களோட வேண்டுதலை இப்படி எழுதிட்டு போறா.. எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்க்ரம் வேண்டுதல் நிறைவேறிடும்னு ஒரு நம்பிக்கை.’ என்றார்.
குமரேசனும் தன் பங்குக்கு, அஷ்வின் என்று தன் மகன் பெயரை எழுதிவிட்டு, அனுமாரை மீண்டும் வணங்கி, பிரசாதமாக கொடுக்கப்பட்ட சுண்டலையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தனர். ஆட்டோ தங்கி இருந்த இடம் நோக்கி விரைந்தது.
திருப்திகரமாக தரிசனம் செய்து வைத்த கைடு சதாசிவனுக்கு ஐநூறு நூபாய் கொடுத்தார் குமரேசன். மிகுந்த மகிழ்ச்சியோடு, நன்றி சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தான்.

போத்தார் சத்திரத்தில் நிறுத்திவைக்கப்படிருந்த தன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு, சாப்பிடக் கிளம்பினான். வழியில் போலீஸ் நிலையத்தில் சின்ன ஒரு வேலை இருந்தது அவனுக்கு. வீட்டில் கடந்த மாதம் திருடு போன சம்பவம் பற்றி பிராது கொடுத்திருந்தான். அடுத்த ரயில் வருமுன் விசாரித்துவிட்டு வரலாம் என்று சைக்கிளை வேகமாக மிதித்தான்.
(நன்றி – இருவாட்சி இலக்கியத் துறைமுகம். பொங்கல் சிறப்பு வெளியீடு)

Series Navigation

யெஸ்.பாலபாரதி

யெஸ்.பாலபாரதி

வேண்டுதல்!!

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

ஈழநாதன்


காலை வெய்யில்
கண்கூசும் ஒளிபட,
ஆல மரத்தடியில்
அமர்ந்திருக்கும் பிள்ளையார்!

வாசலுக்கு வடக்கே
வளர்ந்திருக்கும் பூவரசு
நிழல் தந்த மறைவில்
நிற்கும் ஓர் சிறுவன்.

அடிமரத்துடன் ஒட்டிய
அரைவயிறு ஒட்டியபடி
பசிமயக்க நிலையில்
பஞ்சத்துச் சிறுவன்!

அவ்வழியில் போகின்ற
அடியவர், வழிப்போக்கர்,
ஆனைமுகத்தானின்
அருளாசி வேண்டியோர்!

ஆலமரத்தானுக்கு
அரோகரா சொல்வார்.
ஆலகண்டன் மைந்தனுக்கு
சரணம் சொல்வார்!

பால் கொஞ்சம் எடுத்து
பவிசாய் ஊற்றுவர்.
பழம் கொஞ்சம் வைத்து
பயத்துடன் வேண்டுவர்!

மோதகம், கொழுக்கட்டை,
முத்திய மா, பலா
படைத்ததில் கொஞ்சம்
பார்வையாளருக்கும்..!

பசியில் கண் மூடி
பாதி மயங்கிய
பரதேசிப்
பயலுக்கொன்று!

கிளையொன்றில் அமர்ந்து
கண்களைச் சரித்து
கால்களால் கொத்த
காகத்துக்கொன்று!

போட்ட வடைவாங்கி
உண்டும் தீராமல்
கையேந்தும் பயலை
காணாமற் போயினர்!

பாதிக்கண் மூட
மீதிக்கண் ஒழுக
பாலகன் வேண்டினான்!
‘பரமபிதாவே!

அடுத்த பிறவியாவது
ஆலமரத்தடியில்..
வயிராறத் தின்கின்ற
காகமாய்ப் பிறக்கவை ‘!!

—-
eelanathan@hotmail.com

Series Navigation

ஈழநாதன்

ஈழநாதன்

வேண்டுதல்

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

கு. முனியசாமி


மான்போல் துள்ளும்
இளமை வேண்டும்
மயில்போல் ஆடும்
திறமை வேண்டும்
வான்போல் பரந்த
மனம் வேண்டும் – நாடு
வறுமையை வென்ற
நிலை வேண்டும்…

ஆனென்ற அகந்தை
அகன்றிட வேண்டும்
அறியாமை இருள்நம்மை
விலகிட வேண்டும்
ஏனென்ற கேள்வி
எழுந்திட வேண்டும் – எங்கும்
இல்லாமை இல்லை
என்பது வேண்டும்…

காதலைப் போற்றும்
பெற்றவர் வேண்டும்
கவிதையை ரசிக்கும்
நண்பர்கள் வேண்டும்
இசையை ரசிக்க
தெரிந்திட வேண்டும் – ஈதல்
இலையெனி லன்றே
சாதல் வேண்டும்…

ஊருக்கு உழைக்கின்ற
உள்ளங்கள் வேண்டும்
ஒற்றுமைதான் உயர்வு
உணர்ந்திட வேண்டும்
வைகையில் கங்கை
கலந்திட வேண்டும் – நம்முள்
வங்கமும் சிந்துவும்
இணைந்திட வேண்டும்…

இலங்கையில் அமைதி
திரும்பிட வேண்டும்
ஈழம் செழிக்க
உதவிட வேண்டும்
புஸ்ஸும் சதாமும்
கைகொள வேண்டும் – என்றும்
புவியில் அமைதி,
ஒற்றுமை வேண்டும்…

gms@globaltrustbank.com

Series Navigation

கு முனியசாமி

கு முனியசாமி