யானை பிழைத்த வேல்

This entry is part of 55 in the series 20031211_Issue

அ.முத்துலிங்கம்


சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் பயணிக்கின்றன. அவற்றுள் கடைசியாக சுழல்வதும், ஆகக் கூடிய தூரம் கொண்டதுமான கிரகம் புளூட்டோ. இந்த புளூட்டோ கிரகத்தை கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே பிறந்த ஒருவர் என் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கிறார். அவருடைய வயது எண்பது. இரண்டாவது உலகமகா யுத்தத்திற்கு பிறகு போலந்தில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர். இந்த வயதிலும் எப்பொழுது பார்த்தாலும் தன்னுடைய இரண்டு கார் கராஜில் அதிகாலையில் இருந்து ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார். இவர் ஒரு தச்சுக் கலைஞர். அருமையான மர வேலைப்பாடுகள் கொண்ட உருளைகளை செய்துகொண்டே இருப்பார். இதை எதற்காகச் செய்கிறீர்கள் என்று கேட்டால் இதிலே நான் மிகவும் திறமை உள்ளவனாக இருக்கிறேன். இந்த கலைப் பொருள்களை செய்யும்போது என் மனம் சமாதானம் அடைகிறது. இதிலே கிடைக்கும் ஆத்மதிருப்தி எனக்கு வேறு எதிலுமே கிடைப்பதில்லை என்கிறார்.

சமீபத்தில் ஒரு மேலான இலக்கியக்காரர் சொன்னார், தீராத நோய் கண்டவன் இறக்கும் மட்டும் மாத்திரை எடுத்துக்கொண்டே இருக்கிறான். எடுக்காவிட்டால் அவன் இறந்துவிடுவான் என்று. அது போலத்தான் படைப்பாளியும். அவர் படைத்துக்கொண்டே இருக்கவேண்டும். தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தியபடியே இருப்பது அவர் கடமை. அந்தப் படைப்பு எப்படியும் ரசிகரைக் தேடிப்பிடித்து போய் சேர்ந்துவிடும். ஒரு கவிதையை நூறுபேர் படித்தால் அதில் இரண்டுபேரை அது தொடுகிறது. ஒரு நாடகத்தை 1000 பேர் பார்த்தால் அதில் இருபது பேருக்கு அந்தக் கலை போய்ச்சேருகிறது. கலைஞன் என்பவன் தன் கடமையை செய்துகொண்டே இருக்கவேண்டும். அதுவே தர்மம்.

பதினைந்து வருடங்களாக தொடர்ந்து வானவில் நிகழ்ச்சிகள் ரொறொன்ரோவில் நடந்து வருகின்றன என்று அறிகிறேன். அவற்றை நான் பார்க்கவில்லை. இந்த வருடம் முதன்முதலாக அந்த நிகழ்ச்சியை பார்த்தபோது அதைப் பற்றி எழுதும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு நடந்த ஒரு சம்பவமே என்னை இதை எழுதும்படி தூண்டியது.

இதே மண்டபத்திலே சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விழாவுக்கு போயிருந்தேன். அப்போது அந்த நிகழ்ச்சி சரியாக ஒரு மணிநேரம் பிந்தியே தொடங்கியது. இதுவும் அப்படித்தான் இருக்கும் என்று ஆறஅமரப் போனால் நிகழ்ச்சி சரியாக ஆறுமணிக்கே ஆரம்பித்துவிட்டது. இதை நம்பமுடியாமல் இருந்தது. கனடாவின் காலநிலைபோல எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது என்ற தெளிவு எனக்கு இன்னும் ஏற்படவில்லை. என்றாலும் ஒரு கலை நிகழ்ச்சி சரியான நேரத்துக்கு தொடங்குவது எவ்வளவு மகிழ்ச்சியான விடயம்.

ஒரு வானவில்லில் சூரியனுடைய வெளிச்சத்தில் உள்ள ஏழு வர்ணங்களும் தெரியும். அதுதான் காரணமோ என்னவோ இந்த விழாவில் ஏழு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. எல்லாமே போதிய பயிற்சி பெற்ற கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சிகள் என்று தெரிந்தது. தொகுப்பாளினி நல்ல தமிழ் உச்சரிப்புடன், நகைச்சுவை மிளிர தொகுத்து வழங்கினார். அந்த அந்தக் காட்சிகள் வருமுன்னர், அதைப்பற்றிய ஒரு சாராம்சத்தை சுவைபடக் கூறி, சபையோரின் எதிர்பார்ப்பை அதிகரித்ததுடன் கலைஞர்களையும் ஊக்குவித்தார். ( ஆனால் ஏனோ ‘தொலைபேசியை அணைத்துக்கொள்ளுங்கள் ‘, ‘தொலைபேசியை அணைத்துக்கொள்ளுங்கள் ‘ என்று அடிக்கடி கூறினார். சபையினரும் அவர் வாக்கை மதித்து தொலைபேசியை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.)

‘உதயத்திலிருந்து உறங்கும்வரை ‘ என்று ஒரு நிகழ்ச்சி. இதை தயாரித்த தனதேவி மித்ரதேவா ஒரு புதுமை செய்திருந்தார். எங்கள் இசையில் இருக்கும் ராகங்கள் ஒவ்வொரு காலத்துக்கு உரியவை. வைகறையில் எழும்போது பூபாளமும், துயிலும் போது நீலாம்பரியும் என்று ஓர் ஒழுங்குமுறை உண்டு. இந்த நிகழ்ச்சியில் அதிகாலையிலிருந்து தூங்கும் வரையிலான காலப்பகுதிகளை அந்தந்த ராகங்களாக பிரித்து ஒரு ராக மாலையாகவே வழங்கினார்கள். இதிலே விசேஷம் என்னவென்றால் அந்த ராகங்களுக்கு கவனமாக தேர்வு செய்யப்பட்ட பாடல்களோ மகாகவி பாரதியாருடையவை. ஆகவே கவிதையும், இசையும் ஒரே மேடையில் கிடைத்தது. வாய்ப்பாட்டுக்கு பக்கவாத்தியம் என்று இல்லாமல் சிற்சில இடங்களில் இசை வாத்தியங்களே அருமையாக இசையை முன்னெடுத்துச் சென்றது செவிக்கு விருந்தாக அமைந்தது.

‘ஊஞ்சலாடும் இளமை ‘ என்று ஓர் இசை நாடகம். இசை நாடகம் என்று அழைத்தது ஒரு வசதி கருதியே. ஆனால் இதிலே வசனம் சுத்தமாக இல்லை. இசைகூட பின்னணிதான். இங்கே நடிப்பும் நடனமும்தான் முக்கியம். முதல் காட்சி ஒரு மணவீட்டில் ஆரம்பமாகி இறுதிக் காட்சி கோயிலில் முடிகிறது. மணமக்கள் பார்க்கும் விருந்தாக ஒரு தில்லானா நடனம். அதைத் தொடர்ந்து வந்த துள்ளிசை நடனத்தில் காதலர்கள் சேர்ந்து ஆடுகிறார்கள் பெற்றோருக்கு அந்தக் காதல் பிடிக்கவில்லை. அடுத்ததாக கோயில் விழாவிலே ஒரு கரகாட்டம். அதைப் பார்க்கும் சாட்டில் காதலர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். முடிவாக பெற்றோரின் சம்மதத்துடன் அவர்கள் காதல் நிறைவேறுகிறது. இதை நெறிப்படுத்தியவர்கள் ரஜினி பாலேந்திராவும் சுதனும். புதுமையான உத்தியாலும், தொகுப்பு முறையாலும் இது சபையோரிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

விருந்திலே பாயாசத்தை கடைசியாக வைப்பதுபோல சிறப்பு அம்சமாக ‘இது எழுதாத விதி ‘ நாடகம் முடிவிலே அரங்கேறியது. நாடகத்தின் கரு எளிமையானது. பலதரம், பலராலும் கையாளப்பெற்ற ஒரு பொருளை எடுத்து மிகத் திறம்படவும், நுட்பமாகவும் செய்திருக்கிறார்கள். பிரதியாக்கம் செய்தவர் கலைவாணி ராஜகுமாரன்; நெறிப்படுத்தியவர் வைரமுத்து சொர்ணலிங்கம்.

கணவனுக்கு தொழிற்சாலையில் வேலை. அவன் படிப்பித்து வேலைக்கு சேர்த்துவிட்ட மனைவி நல்ல உத்தியோகத்தில், ஓர் அலுவலகத்தில் பணியாற்றுகிறாள். அவளுடைய சம்பளம் அவனைவிட அதிகம். மனைவி அலுவலகத்தில் இருந்து களைத்து, விழுந்து வீட்டுக்கு வந்தால் வீட்டில் கணவனிடம் இருந்து ஒருவிதமான ஒத்துழைப்பும் இல்லை. மாறாக அதிகாரத் தோரணையோடு ஓர் அடிமைபோல மனைவி வீட்டு வேலை, சமையல் வேலை, துப்புரவு வேலை என்று எல்லாம் செய்யவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அடிக்கடி தன் தாய் எப்படி தகப்பனுக்கு பணிவிடை செய்தாள் என்று வேறு ஞாபகப் படுத்துகிறான். ஆனால் அந்தத் தாய் வேலைக்குபோய் புருசனைவிட அதிக வருவாய் சம்பாதிக்கவில்லை என்பதை சொல்ல மறந்துவிடுகிறான்.

மனைவி ‘நான் வேலையை விடத் தயார். அப்ப யார் வீட்டுக் கடன் கட்டுவது, மாதா மாதம் வரும் பில்கள் கட்டுவது ? வாழ்க்கையில் வசதிகள் தேவையென்றால் சில தியாகங்களை செய்யத் தான் வேண்டும் ‘ என்று கேட்கிறாள். அமைதியான குடும்பத்தில் இப்படி ஒரு சிக்கல் பிறக்கிறது. மனைவி எவ்வளவு உயர்ந்த வேலையில் இருந்தாலும், எவ்வளவு பணம் உழைத்துப் போட்டாலும், குடும்பம் என்று வரும்போது அவள் புருசனுக்கு கட்டுப்பட்ட சாதாரண பிறவி. இது எழுதப்படாத விதி என்பது துல்லியமாக உணர்த்தப்படுகிறது.

நாடகத்தில் வசனம் எழுதுபவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. பேப்பர் அல்லது மை முடியும்வரைக்கும் எழுதிக்கொண்டே போவார்கள். அதை நடிகர்கள், அடிக்கடி prompter ஐ திரும்பி திரும்பி பார்த்தபடி ஒப்புவிப்பார்கள். இங்கே அப்படியில்லை. வசனங்கள் வாள் வீச்சுபோல எவ்வளவு அர்த்தம் பொதிந்தவையாக இருந்தனவோ அதே அளவுக்கு அபூர்வமான சொற்சிக்கனத்தோடு அமைந்திருந்தன. நடிகர்கள் இடுப்பிலே கைவைத்து நின்று ஒருவித செயற்கைத் தன்மையுடன் பேசவில்லை. இயல்பான நடிப்பு. நாடகத்தின் கட்டுமானத்தில் இறுக்கமும், காட்சியமைப்புகளில் ஒரு திட்டமும் இருந்தது.

நாடகம் தொடங்கும்போதே இது எப்படி முடியப் போகிறது, எப்படி முடியப் போகிறது என்று மனதுக்குள் பலவித முடிவுகளை உண்டாக்கியபடியே பார்வையாளர்கள் காத்திருப்பது வழக்கம். இங்கே அப்படியான எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைக்கும் விதமாக ஒரு தீர்மானமான positive முடிவு கிடைக்கிறது.

இந்த சிறு நாடகத்தில் ஒரு கனவுக்காட்சிகூட வந்தது. கனவுக்காட்சி என்றால் சுவிட்ஸர்லாந்தில் ஒரு நடனம் என்றில்லை. மனைவி, கணவனுக்கு உணவு பரிமாறுகிறாள். ‘இந்த றால் பொரியலைப் போட்டு சாப்பிடுங்கோ ‘ என்று உபசரிக்கிறாள் மனைவி. உங்கள் வீட்டில், எங்கள் வீட்டில் அன்றாடம் நடக்கும் சம்பவம். இரண்டு நிமிடம் மட்டுமே வரும் இந்தக் காட்சியில் மனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் அந்த அந்நியோன்யம் இலகுவாக, மிகை இல்லாத சித்திரமாக வெளிப்படுகிறது.

ஒரு தரமான நாடகத்தில் ஒரு தொடக்கம், ஒரு சிக்கல், ஒரு முடிவு என்று இருக்கும். ஒரு சிக்கலை உண்டாக்கி அதை விடுவிப்பதில்தான் நாடகத்தினுடைய சிறப்பு அமைகிறது. சிலப்பதிகார நாடகத்தைப் பார்த்தால் அதன் சிக்கல் பொற்கொல்லன் மேடையில் தோன்றும் போதுதான் ஆரம்பமாகிறது. கோவலன் கொலைக்கு பிறகு கண்ணகி சபைக்கு வரும் இடத்தில் சிக்கல் உச்சக் கட்டத்தை அடைந்து ஒரு தீர்வு வரும். அதுபோலவே ஒரு மோதல் உண்டாகி அதை நோகாமல் விடுவித்துக்கொண்டு நாடகம் முடிவை நோக்கி நகர்கிறது.

குறிதவறாமல் முயலை வீழ்த்திய அம்பிலும் பார்க்க யானையை இலக்கு வைத்து தவறிய வேல் பெரியது என்பார்கள். வானவில் பெரிய முயற்சி, பயனும் பெரியது. இப்படியான பெரிய முயற்சிகளில் சிறு சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக சோர்ந்துவிடுவது கலைஞர்களின் லட்சணம் அல்ல. தொடர்ந்து பதினைந்து வருடங்கள் எத்தனை கலைஞர்களை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இனிமேல் நின்றுபோகும் என்று அறிவிக்கிறார்கள். இது நின்றுபோனால் அதுவும் ஒருவிதமான கலைப் பின்னடைவே.

இது நான் முதன்முதலில் பார்த்த வானவில் நிகழ்ச்சி. இதுவே கடைசி நிகழ்ச்சியாகவும் அமைந்துவிடக்கூடாது என்பதே என் விருப்பம்.

***

amuttu@rogers.com

திண்ணை பக்கங்களில் அ முத்துலிங்கம்

  • எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை

  • நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு

  • வீணாகப் போகாத மாலை

  • அ முத்துலிங்கம் நேர்காணல்

    Series Navigation