This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue
கவிநயா
சுந்தர் வீட்டுக்கு இரண்டாவது வீட்டில் தான் அந்த மரம் இருந்தது. அந்த மரத்தை அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். அமெரிக்காவில் உள்ள மரங்கள் எல்லாம் பொதுவாக நீண்டு, நெடிதுயர்ந்துதான் இருக்கும்; அகன்று, பரந்து, விரிந்து நிழல் தரும் மரங்களாக இருக்காது. ஆனால், இந்த மரம் ஒரு விதி விலக்கு. அகன்று, படர்ந்து, பரந்து, தன் செழிப்பான கிளைக் கரங்களை நீட்டி, ‘வாயேன், என் நிழலில் வந்து சற்று இளைப்பாறிக் கொள்ளேன் ‘ என்று அழைப்பது போல் இருக்கும்.
அந்த வீட்டிலும் ஒரு தமிழ்க் குடும்பம் தான் இருந்தது. அவர் பெயர் வேணு. முழுப் பெயர் என்னவோ சுந்தருக்குத் தெரியாது. வேணு என்றுதான் அறிமுகம். அவருக்கு வயது 65 இருக்கலாம். மனைவியுடன் வசிக்கிறார். கணவன், மனைவி இருவருக்கும் தோட்ட வேலையில் பிரியம் அதிகம். அவர்கள் வீட்டிற்கு முன்னாலும், பின்னாலும், சோலை போல் செடிகளும், பூக்களும், மரங்களுமாகக் குளுகுளுவென்று இருக்கும். வீட்டுக்குப் பின் புறம் இருக்கும் மரங்களில் இந்த மரமும் ஒன்று. அத்தனை மரங்களுக்கு நடுவில், இந்த மரம்தான் பெரிய கூட்டத்தின் தலைவியைப் போலக் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கும்.
வேணு தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் வெவ்வேறு ஊர்களில் குழந்தை குட்டிகளோடு செட்டிலாகி விட்டார்கள். ஒவ்வொரு வாரமும் முறை போட்டுக் கொண்டது போல் யாராவது வருவார்கள். வீடே சந்தோஷத்தில் ஒரு சுற்றுப் பருத்தது போல் தெரியும். மற்றும் சில லீவு நாட்களில் எல்லோருமே வந்து விடுவார்கள். வீடு முழுதும் ஒரே அமளி துமளிதான். குளிர் இல்லாத நாட்களில் எல்லாம் முக்கால் வாசி நேரம் இந்த மரத்தடியில்தான் வாசம். அங்கேயே டெண்ட் அடித்து சில நாள் தூங்குவதும் உண்டு. குழந்தைகளுக்கென்று ஒரு ஊஞ்சல் கூட அந்த மரத்தில் கட்டி விட்டிருந்தார், வேணு. தன்னுடைய வாரிசுகளின் சமர்த்தைப் பார்த்து நிறைவாகச் சிரித்துக் கொள்ளும் தாயைப் போல இந்த மரமும், எல்லாக் கோலாகலங்களையும் பார்த்து அமைதியாக ரசித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றும்.
சுந்தர், அவனுடைய புத்தம் புது மனைவி கவிதாவுடன் இந்த வீட்டுக்குக் குடியேறி ஆறு மாதங்கள் ஆகின்றன. அந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம், தன் வீட்டிலும் இந்த மாதிரி மரம் நட வேண்டும், தோட்டமிட வேண்டும், என்று ஆசை பொங்கும். என்ன ஆசை இருந்து என்ன ? தினமும் வேலைக்குப் போய் வரவும், புது மனைவியுடன் கை கோர்த்துக் கொண்டு ஊர் சுற்றவும் சரியாகப் போய் விடுகிறது. அவன் வீட்டுக்குப் பின்னால் ஒரு பொட்டைக் காடுதான் இருக்கிறது. மாதிரிக்குக் கூட ஒரு செடியோ, புதரோ கிடையாது. சில நாட்களில் வேணுவின் குடும்பம் ஆனந்தமாக மர நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டும், பிக்னிக்குக்கென உணவு வித விதமாய் தயார் செய்து சாப்பிட்டுக் கொண்டும் இருப்பதைப் பார்த்தால் இவனுக்கு ஏக்கமாகவும், ஒரு விதப் பொறாமையாகவும் கூட இருக்கும். இப்படி ஒரு மரம் இருந்தால், நாமும் அட் லீஸ்ட் ஒரு நாற்காலியை அதன் அடியில் போட்டு புத்தகமாவது படிக்கலாமே என்று நினைப்பு ஓடும்.
அன்றைக்கு வேலையிலிருந்து வந்து, காஃபி சாப்பிட்டு விட்டு, சற்று உலாத்தலாம் என்று பின் பக்கம் போனான். பார்வை தன்னால் அந்த மரத்துக்குப் போயிற்று. வேணு ஏதோ மருந்து அடிக்கும் கருவி போல் கையில் வைத்திருக்க, அவர் மனைவி இதோ இங்கு, இங்கு என்று சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். ‘கவி, நான் வேணு அங்கிள் வீடு வரை போய்ட்டு வந்திடறேன் ‘, குரல் கொடுத்து விட்டு, செருப்பை மாட்டிக் கொண்டு தெருவில் இறங்கினான்.
ஒரு மணி நேரம் ஆகி விட்டது; சமையலும் முடிந்து விட்டது. சென்றவனைக் காணோமே என்று டவலில் கையைத் துடைத்த வண்ணம் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள், கவிதா. சுந்தர் வேணு அங்கிளுடன் ஏதோ சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தான். தற்செயலாக இவளைப் பார்த்தவன் இதோ வருகிறேன் என்று சைகையில் தெரிவித்தான்.
அவன் வீட்டுக்குள் நுழைந்ததும், நுழையாததுமாக, ‘என்ன ஆச்சு, இன்னிக்கு அவங்களோட இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தீங்க ? ‘ ஆவலுடன் கேட்டாள்.
‘வேற ஒண்ணும் இல்ல; வேணு அங்கிள் வீட்டுல பின்னால ஒரு பெரிய மரம் இருக்கில்ல, நாம கூட அங்க உட்கார்ந்து ரெண்டு தரம் அவங்களோட டா சாப்பிட்டிருக்கோம். அந்த மரம் ஏதோ பூச்சி வந்து அரிச்சு மோசமான நிலைமையில இருக்கு. செத்துப் போயிடுமோன்னு அங்கிளும் ஆண்ட்டியும் ரொம்பக் கவலைப் படறாங்க ‘
‘மரமெல்லாம் அவ்வளவு சுலபமா சாகாதே; நீங்க பார்த்தீங்களா ? அவ்வளவு மோசமாவா இருக்கு ? ‘
மரம் கண் முன் வந்து நின்றது. அவனுக்கும் அப்படித்தான் தெரிந்தது. எப்போதும் சந்தோஷமாகக் கரம் நீட்டும் மரம், அன்று அவன் பார்த்த போது, தன் துவண்டு போன கரங்களை நீட்டி, ‘எனக்கு உதவி செய்வார் யாருமில்லையா ? ‘ என்று கதறுவது போல இருந்தது.
‘ஆமா, என்ன பூச்சின்னு தெரியல. கிளைகிளையா வேகமா அரிச்சுக்கிட்டு வருது. அதுக்குள்ள பாதி மரம் காஞ்சுடுச்சு. பாவம்ல ? ‘ கேட்கும் போதே தன் குரலில் உண்மையான வருத்தத்துடன், கூடவே ஒரு நூலிழை போல சந்தோஷமோ, திருப்தியோ, ஏதோ ஒன்று ஒலிப்பது போல் உணர்ந்தான். நினைப்பே தூக்கி வாரிப் போட்டது; அதிர்ச்சியாக இருந்தது.
சில வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. அன்றைக்கு அம்மா வேகமாக ஓடி வந்தாள். ‘என்னங்க ? நம்ம சுந்தருக்குத்தான் போன வருஷம் மெடிக்கல் கிடைக்காம போயிடுச்சேன்னு பாத்தா, இப்ப நம்ம பக்கத்து வீட்டு பாலாஜிக்கும் கிடைக்கலயாம் ‘, என்றாள் அப்பாவிடம். அப்போது அவள் குரலில் வருத்தத்துடன் கூடவே ஒரு திருப்தி விரவிக் கிடந்தது போல் இவனுக்குத் தோன்றியது. ஆனால், ‘அம்மா எவ்வளவு நல்லவள்! பாலாஜியின் அம்மா அவளுடைய நெருங்கிய தோழி வேறு. சிறு வயதில் மஞ்சள் காமாலை வந்து பாலாஜி சாகப் பிழைக்கக் கிடந்த போது, அழுதே விட்டாள், அம்மா; இரவும் பகலும் விழித்திருந்து தான் பெற்ற பிள்ளையைப் போல் பார்த்துக் கொண்டாளே ? நம் எண்ணம் தான் வழி தவறிப் போகிறது ‘ என்று உடனே அந்த நினைப்பை அழித்து விட்டான்.
இப்போது அதை நினைக்கையில் ஏதோ ஒன்று புரிகிறாற் போல் இருந்தது. இந்த மாதிரி எண்ணங்களயெல்லாம் விரட்டி விட விரும்புகிறவன் போல் முகத்தை ஒரு முறை அழுந்தத் துடைத்துக் கொண்டான். ‘இதோ வந்திர்றேன், கவி ‘ என்றபடி மாடிக்குச் சென்றான். பூஜை அறைக்குள் சென்று இரண்டு முறை மூச்சை இழுத்து விட்டான்; கண்களை மூடி சில நிமிடங்கள் நின்றான். பிறகு தன் அறைக்குச் சென்று ஆர்கனைஸரை எடுத்து ஒரு நம்பரைக் குறித்துக் கொண்டு, வேணுவிற்கு ஃபோன் பண்ணினான். ‘அங்கிள், எனக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் நர்ஸரி வைத்திருக்கிறார். அவருக்கு இந்த விஷயமெல்லாம் அத்துப்படி. அவர் நம்பரைத் தர்றேன்; அவர்ட்ட பேசுங்க ‘, என்று நம்பரைக் கொடுத்தான். ‘நானும் அவர்ட்ட பேசி, நீங்க கூப்பிடுவீங்கன்னு சொல்லி வக்கிறேன். ஒண்ணும் கவலப்படாதீங்க ‘, என்று ஃபோனை வைத்த போது சற்றே நிம்மதியானாற் போலிருந்தது, மனசு.
This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue
வை.ஈ.மணி
தனித்து தினமும் புரியும் தவத்தில் ….. துதிக்க அனேக கரங்கள் குவித்து அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன் ….. அறிந்து அளித்த வாழ்வின் நிலையை நினைத்து மகிழ்ந்து மேலும் நன்மை ….. நல்க வீண்டும் கருணை கோரி எனக்கு விடுத்த பணியை என்றும் ….. இன்பம் பொங்கச் செய்யக் காணீர். (1)
சுற்றிலும் வாழும் மற்ற உயிர்கள் ….. சுற்றித் திரிந்து வாழ்வ தறிந்து சற்றே கால்கள் இலாத சோகம் ….. திரண்டு பொருமி எழுந்த தெனினும் மற்ற பிராணி கட்கு முற்றும் ….. மகிழ்ந்து சேவை செய்யும் வாய்ப்பு பெற்ற பேற்றை எண்ணிப் பெரிதும் ….. பெருமை கொண்டு நிமிர்ந்து நின்றேன் (2)
தன்னலம் கருதி வளர்க்கும் தருவும் ….. தவிர, தோப்பும் செடிகள் யாவும் தன்னுடல் போற்ற உணவுப் பொருட்கள் ….. சுகித்து வாழும் மனைக்கு மரமும் தன்னுயிர் காக்க அசுத்த சுவாசம் ….. சுத்தப் படுத்தும் பணியும், என்றும் இன்புற நீரும் நிழலும் பெறவே ….. என்ற உண்மை அறியார் யாவர் ? (3)
மலையிலும் காட்டிலும் காணும் மரங்கள் ….. மனிதன் வைத்து வளர்க்க வில்லை அலைபோல் அசையும் புல்லின் அழகை ….. அனுபவித் தின்புறும் மனிதன் மேலும் நிலவின் அழகை இலைகளின் ஊடே ….. நிரம்பப் பருகி மகிழ்வான் எனினும் அலுக்கா துழைக்கும் மரத்தின் ஆவல் ….. அறிய என்றும் முயன்ற தில்லை (4)
பறவை பூச்சி காற்றும் புழுவும் ….. பரவ உதவும் மரத்தின் விதைகள் அறிவு பெற்றும் மனிதன் அழிக்கும் ….. அரிய சேவை புரியும் மரங்கள் இறைவன் அருளால் உணர்வு பெற்றும் ….. இரக்க மின்றி மனிதன் செய்யும் சிறிதும் நன்றி யற்ற செய்கை ….. சொல்ல வாயும் பெற்ற தில்லை (5) வை.ஈ.மணி