இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 6

This entry is part of 36 in the series 20090618_Issue

நேசகுமார்அடிமை முறை பற்றிய வஹ்ஹாபியின் கட்டுரை/விளக்கம் எனக்கு அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ ஏற்படுத்தவில்லை. ஜெயமோகன் சொல்லியிருப்பதுபோல, மதவெறியர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் என்று ஒற்றை வரியில் உதாசீனப்படுத்திவிட்டு போய்விடவும் முடியவில்லை. வஹ்ஹாபிக்கு தனியே பதில் எழுதுகிறேன். ஆனால், பதிலையும், விவாதத்தையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது. அதை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

வஹ்ஹாபி மட்டுமல்ல, இஸ்லாமிய சமூகத்தில் பெரும்பாலோனர் இப்படித்தான் இருக்கிறார்கள். நாகூர் ரூமி அவர்கள் கல்லால் அடிப்பதைப் பற்றி சொல்லும்போது, இசை பற்றிய தனது கருத்தை சொல்லும்போது, “மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்வதற்குப் பின்னால் ஒரு பெரிய மத உளவியல் இருக்கிறது. அதாவது, இப்படி ‘முஹமது சொல்லியிருக்கிறார் என்று ஆதாரபூர்வமாக சொன்னால், நான் உடனடியாக இந்த நிலையிலிருந்து இறங்கிவந்து கல்லால் அடிப்பது சரிதான், இசை ஹராம் தான் என்று ஒப்புக்கொள்வேன்’ என்பது அதன் அர்த்தம்.

இஸ்லாமிய சமூகத்தில் திடீரென்று வன்முறை கிளம்பியிருப்பது இதனால்தான். அமைதியாய் இருந்து, அரபியே தெரியாமல், நாட்டார் இஸ்லாத்தை, பண்பட்ட – மாறிவிட்ட கலாச்சார முறையை பின்பற்றி அன்பாக, இனியவர்களாக இருந்த நமது இஸ்லாமியர்கள் திடீரென்று மாறியது இதனால்தான். திடீரென்று தமது மூலத்தை படித்த இளைய தலைமுறை, அடிப்படைகள் வேறுமாதிரி இருப்பதையும், அதுதான் ஆதாரபூர்வமானது என்பதையும் அறிந்த பிறகு, இத்தனை நாட்கள் அடைந்த முன்னேற்றத்தை, சமாதானத்தை, மத நல்லிணக்கத்தை மூட்டை கட்டிவிட்டு ஜிகாதிய பாதைக்கு திரும்பிவிட்டது.

***

லோஷன் என்ற ஈழத்தமிழ் பதிவரின் பதிவில் ஒரு Triump என்ற பெயரில் எழுதும் ஈழப்பெண் ஒருவர் தனக்குத் தெரிந்த இஸ்லாமியரைப் பற்றி எழுதியிருக்கிறார். இங்கே இருப்பவர்களில் பலருக்கு அங்கே போய் படிக்க முடியாவிட்டால், அந்த அற்புதமான எழுத்தை தவற விட்டுவிடலாம் என்பதால், அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

//எனக்கு இஸ்லாம் பற்றி முதலில் தெரிய வந்தது வாப்பா தாத்தாவால் தான். அவரின் பெயர் மிகவும் நீளமானது.. எனது பெற்றோரும் அவரை வாப்பா என்டு அவரின் பிள்ளைகள் போல் கூப்பிட நாங்களும் வாப்பா தாத்தா என்டு தான் கூப்பிடுவம். அவர் எனக்கு காட்டிய‌ இஸ்லாம் வேறு.. நான் இங்கு யுனியில் பார்க்கும் இஸ்லாம் வேறு.

வாப்பா தாத்தா, தன் வீட்டுப் பெண்களிடம், உங்களுக்கு பிடித்தால் ஹிஜ்சாப் அணியுங்கள் என்று சொல்லி இருந்தார். அவரின் மனைவி அணிவார். மகள்கள் அணிவதில்லை. அவர்களுக்கு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்ய அனுமதி இருந்தது. ஆனால் அவர்கள் விரும்பியது இஸ்லாம் மதத்தை சேர்ந்த மாமா (அவர்களை அப்படி தான் அழைப்பேன். வேறு அர்த்தமில்லை) ஆட்களைத்தான். ஒன்றே ஒன்று தான் வாப்பா தாத்தா அந்த மாமாக்களிடம் கேட்டார். பெண்களை சக மனிதர்களாக மதிக்கும் படி.. அவரின் நல்ல மனதிற்கு வீட்டிற்கு வந்த மாமாக்களும் நல்லவர்கள்..
……………………..

எனக்கு கடவுள் இருக்கா இல்லையா என்ட ஆராச்சியில் விருப்பமில்லை.. கடவுள் இருந்தால், அவர் பாத்துக்கொள்ளுவார் என்டு சோம்பி இருக்கவும் இஷ்டமில்லை.. இல்லாவிடடால், நானே கடவுள் என்டு மதம் பிடித்து அலையவும் இஷ்டமில்லை..

மனிதனாக வாழவே விருப்புகிறேன்.. மோட்சமோ நரகமோ எதுவாயினும் எனக்கு சரி… எங்கும் வாழ முடியும் என்ட நம்பிக்கை இருந்தால் போதும்…. அது தலைக்கனமில்லை.. தன்னம்பிக்கை :)//

(பதிவில் எதிர்வினை ஆற்றியவருக்கு திண்ணையில் பிரசுரம் செய்வது உடன்பாடா என்று தெரியாத நிலையில், முழுப் பதிவை இங்கே வெளியிட இயலவில்லை. இதன் பதிவு முகவரி கீழே தரப் பட்டுள்ளது – திண்ணை குழு)

லோஷனின் பதிவு: http://loshan-loshan.blogspot.com/2009/05/blog-post_12.html

ட்ரியம்பின் பதிவு: http://the-nutty-s.blogspot.com

***

ட்ரியம்ப் சொல்லியிருப்பது போன்றவொரு இஸ்லாமிய வாப்பாவை, காக்காவை, அண்ணனை, மாமனை நம்மில் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம். எனக்கு ஒரு நண்பர் இருந்தார். எனக்கு அப்போது இளம் வயது, அவருக்கு எழுபது வயதிருக்கும் என்னைவிட பல பத்தாண்டுகள் மூத்தவர். ஆயினும் வயது வித்தியாசத்தை மீறி, நண்பராக – இனிய நண்பராக இருந்தார். வீட்டு முற்றத்தில் வந்து உட்கார்ந்து கொள்வார். நல்ல உயரம், அரேபிய சாயல் தெரியும் தோற்றம். முழங்காலுக்கு மேலே லுங்கியும், மேலே வெள்ளை நிறத்தில் நீள அங்கியும் அணிந்திருப்பார். மாலைப் பொழுதுகளில் சித்தர் பாடல்களை வெள்ளி பொடி டப்பாவிலிருந்து அவர் போட்டுக்கொண்டே பாட நான் கேட்டிருந்த காலங்கள் உண்டு. ஆண்டுகள் பல கழிந்துவிட்ட நிலையில் இப்போது அதே ஊரில், அதே பகுதியில் இப்படிப்பட்ட பெரியவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இருந்தாலும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். இதற்குக் காரணம் வஹ்ஹாபியின் இந்த மனோபாவம்தான். இதுதான் முஹம்மது சொன்னது, இப்படித்தான் அவர் நடந்து கொண்டார் என்று ஹதீதுகளை, குரான் வசனங்களை, அவற்றிற்கான இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களை காட்டிவிட்டால் போதும், உடனடியாக அதை நியாயம் என்று வாதிடத் துவங்கிவிடுகிறார்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள். எனது ஒரு தோழி, வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண், வஹ்ஹாபி பாணியில் சரிதான் என்று சில வருடங்களுக்கு முன்பு ஆவேசமாக வாதிட்டார்.முதலில் பர்தா அணியாததை சுட்டிக்காட்டி பர்தா அணிந்து கொண்டு மூலையில் இருப்பதுதானே என்றேன். ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து இன்றைய தேதியில் இப்படி நான் இருந்தால் தான் ஒரு நல்ல வாழ்க்கை துணையை ஈர்க்க முடியும், தேர்வு செய்ய முடியும் என்றார். அடுத்த படியாக, “நீங்கள் வேறு நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள் என்பதற்காக உங்களை ஒரு இந்து மத சாமியார் வன்புணர்ந்து அடிமையாக பிடித்துச் சென்றால் என்ன சொல்வீர்கள், அது போர் தர்மம் என்று சொல்வீர்களா? 1400 வருடங்களுக்கு முன்பாக இதைவிட ஐரோப்பாவின் பார்பாரியன்கள் மோசமாக நடந்துகொண்டார்கள், இது பரவாயில்லை அல்லது மங்கோலியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படியே தமது கடவுள் தமக்கு ஆணையிட்டதாகக் கருதி செய்தார்கள் என்று சமாதானம் சொல்வீர்களா” என்றேன். அப்பெண் அதற்கப்புறம் என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். மனதிற்குள் திட்டியிருக்கவும் கூடும். பல மாதங்கள் கழித்து ஒரு நாள் என்னிடம் வந்து நீங்கள் சொல்வதில் சில சரிதான், ஆனால் இஸ்லாம் ஏன் இப்படி சொல்லியிருக்கிறது என்பதற்கான காரணம் எனக்கு புரியவில்லை அல்லது இஸ்லாத்தைப் பற்றி சொல்லியவர்கள் தவறாக சொல்லியிருக்கலாம் என்று சொல்லி, இந்து மதத்தை திட்ட ஆரம்பித்து விட்டார். திட்டுங்கள் என்று அமைதியாக இருந்துவிட்டு பின்பு ஹமீது ஜாஃபரிடமும், வஹ்ஹாபியிடமும் இப்போது சொல்வதையே அப்போதும் சொன்னேன், “மற்ற மதம் தவறு என்பதால் உங்களது நம்பிக்கைகள் சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று. ஆனாலும், அவர் இன்றுவரை மாறவில்லை. நல்லவெளையாக நட்பு உடைந்து போகவில்லை. மனதிற்குள் என்னைப் பற்றி என்ன உண்மையிலேயே எண்ணுகிறார் என்பது இன்றும் புரியவில்லை. எப்படியோ, எனது மனதிற்கு பட்டதை பகிர்ந்து கொண்ட திருப்தி எனக்கு. இப்போது திண்ணையில் எழுதுவதும் அதனால் தான். இதனால், பணமில்லை, புகழில்லை, அதிகாரமில்லை, சுவர்க்கம் கிட்டும் என்ற தூண்டுதல் இல்லை. ஆனால், வாழ்க்கை வாழ்வதில் எதோ பயனுள்ள ஒன்றை செய்கிறோம். வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இருக்கும் நிலையில், சமூகத்திற்கு பகரமாக இந்த சிறு விவாத்தை கூட தூண்டவில்லை என்றால் எப்படி என்ற எண்ணம்தான் காரணம்.

***

இந்த இறையியலை, மத உளவியலை இஸ்லாத்தில் மட்டுமல்ல, இந்து மதத்திலும் பார்க்கலாம். மற்றபடி சிறந்த ஆன்மீகவாதியான, தீர்க்கமான ஞானமுள்ளவராக இருந்த மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள், பாரம்பரியம் – இதுதான் ஆதி சங்கரர் சொன்னது என்பதற்காக பிறப்பின் அடிப்படையிலான வர்ண முறையை நியாயப்படுத்தி பேசியிருப்பதை பார்க்கலாம். பால் பிரண்டனுக்கு ரமணரை காட்டியவர், அவரிடம் சென்று அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள் என்று சொன்னவர், அவரை மறுப்பதற்கு மடத்தின் பொறுப்பு தடையாயிருக்கிறது என்றவர் எப்படி குலத்தொழில் முறையை நியாயப்படுத்த முடியும், எப்படி ஜாதிப்பாகுபாடு சமுதாய அமைதிக்கு வழிகோலும், அதுவே இந்து மதத்தை காக்கும் என்று கருத முடியும் என்ற உறுத்தல் எனக்கு உண்டு. அவரது தெய்வத்தின் குரலில் ஆங்காங்கே தென்படும் பல வரிகள் மனதில் பெரும் சஞ்சலத்தை உருவாக்குகிறது. அதே போன்று, அவர் அப்படி சொன்னார் என்பதற்காக இன்று பல நல்ல நண்பர்களும் நியாயப்படுத்தி பேசுகின்றார்கள். இதற்கும் இஸ்லாமிய மனோபாவத்திற்கும் டிகிரி/படிநிலையில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், அடிப்படை மனோபாவம் ஒன்றுதான். முன்னோர் வெட்டிய கிணறு என்பதால் உப்புத்தண்ணீரும் அமிர்தமாகிவிடுகிறது. பகுத்தறிவு, சுய சிந்தனை, மனிதாபிமானம், மனச்சாட்சி எல்லாம் விடை பெற்றுக் கொள்கிறது.

இஸ்லாமிய மனோபாவத்தை நான் விமர்சிக்கும்போது என்னை ஆதரிக்கும், பாராட்டும் பல நண்பர்களுக்கு நான் இப்படி திரும்பி நமது முதுகைப் பார்ப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது அரசியலோ என்ற சந்தேகத்தோடு பார்க்கிறார்கள் அல்லது எனக்கு ஜாதிக்காழ்ப்பிருக்கிறது என்ற நெருடலோடு என்னோடு தர்க்கிக்காமல் நகர்ந்து விடுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை நெருங்கிப் பார்க்கும்போது நமது பழைய காலம் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

***

இந்த மாத Periyar Era வை படித்துக் கொண்டிருந்தேன். திரு.வே.ஆனைமுத்து அவர்கள் பதிப்பிக்கும் இதழ் இது. இதில் மனுநீதியிலிருந்து பெரியார் ஈவேரா மேற்கோளிட்டுக் காட்டியதாக சில வசனங்களை கண்டேன். திம்மியாக இருக்காத சூத்திரர்களின் சொத்துகளை கொள்ளையிடலாம் என்ற வசனங்கள் அவை. இதற்கும் முஹமது/அல்லாஹ் அனுமதித்த கனீமா என்ற கருத்தியலுக்கும் வித்தியாசம் இல்லை. ‘ஜிஸ்யா கொடுத்து, அடிபணிந்து இழிவான வாழ்வு வாழ்ந்தால் உனது உயிருக்கு, கற்புக்கு, உடமைகளுக்கு உத்திரவாதம் ,இல்லையேல் உனக்கு அழிவுதான்’ என்று சொல்லும் இஸ்லாமிய ஆன்மீக கருத்தாக்கமே இங்கும் எதோ ஒரு வகையில் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. நபித்துவம் உலகெங்கும் இருந்த ஒன்று என்று இஸ்லாமியர்கள் நம்புவது, வெறும் நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும் கூட என்று தோன்றுகிறது. ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு காலகட்டத்தில் மதம் வன்முறையால் உருவாகி, ஆசைகளை தூண்டிவிட்டு அதன் மூலம் பெரும் நிலப்பரப்பில் பரவி இருக்கின்றது. இன்று அது இங்கே ஏற்கப்படவில்லை, பழம் சரித்திரமாக ஒதுக்கப்பட்டு விட்டது. இஸ்லாத்தில் நிதர்சனமாக இருக்கிறது. தாலிபான், தூய்மையான இஸ்லாம் ஓங்கியுள்ள பாகிஸ்தானில் அதனால் தான் ஜிஸ்யா கொடுக்காத சீக்கியர்களை தாக்குகிறார்கள், இந்துக்களை துன்புறுத்துகின்றார்கள்.

சோழ மன்னன் வைணவக்கோவில்களை இடித்ததற்கும், வஹ்ஹாபி நியாயப்படுத்தும் அடிமை முறை பற்றிய கருத்தியலுக்கும் இருக்கும் தொடர்பு அல்லது தொடர்பற்ற தன்மை இதுதான். இன்று, இந்து சமுதாயத்தில் அல்லது கிறிஸ்துவ சமுதாயத்தில் மதத்தில் இப்படி சொல்லியிருக்கிறது என்பதற்காக அதை நியாயப்படுத்த முனைவதில்லை. அல்லது அப்படி முனைபவர்கள் சிறுபான்மையினராக பார்க்கப்படுகின்றனர். ஜாதி முறை, குலதர்மம், குலத்தொழில் பற்றிய சந்திரசேகர சரஸ்வதியின் கருத்துக்களை அவர் வாழ்ந்த காலத்திலேயே பிராம்மண சமூகம் கூட ஏற்கவில்லை. மேலுக்கு அவரை புகழ்ந்தார்கள், பொன்னபிஷேகம் செய்தார்கள், ஆனால் மறுநாள் காலை எழுந்து தத்தமது சூத்திர, வைசிய, க்ஷத்திரிய தர்மங்களை சிரமேற்கொண்டு செய்தார்கள். ச.சே.சரஸ்வதிக்கு மாலைபோட்டு மரியாதை செய்து ஆனால், வாழ்க்கையின் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்தார்கள் பிராம்மணர்கள். மற்ற சமூகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். தூர இருந்து பெரும் கும்பிடு போட்டு தத்தமது கருத்துக்களையும், நாகரிக முன்னேற்றங்களையும் பின்பற்றி சென்று கொண்டே இருந்தார்கள்.

***

ஆனால், இங்கோ ஒரு பெரும் சமூகமே பின்னால் சென்று கொண்டிருக்கிறது. பன்மைத்தன்மையின் அழிவு வெளிப்படையாக தென்படும் தாலிபான் புர்காக்களில் தென்படுகிறது. ஊருக்கு ஒரு அரபி மதராஸா தென்படுகிறது. எங்கு முஸ்லீம் வீடுகள் தென்பட்டாலும் அங்கே தமுமுகவின் சுவர் வாசகக்கள் தென்படுகின்றன, தினமலரை திட்டி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை காணமுடிகிறது. மேலப்பாளையத்தில் கற்பு தவறியதாகக் கருதிய இஸ்லாமியப் பெண்ணை, ஆப்கானிஸ்தான் பாணியில் கல்லால் அடிக்கின்றனர் மதத்தை கற்ற இளைய இஸ்லாமியர். சின்னப்பா, செல்லப்பா, தம்பி, செல்லவாப்பா எல்லாம் அரபி பாணியில் அபூ, இப்னு என்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். அரபி மோகம் என்பது ஆன்மீகத்திலிருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது இன்றைய இந்திய இஸ்லாமிய சமூகத்தில். அரபு நாடுகளோ வன்முறையை நம்மைப் போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டு அங்கே ஒரு சிறு பொறி தென்பட்டால் கூட உடனடியாக அடக்கி, முளையிலேயே கிள்ளிவிடுகின்றன. அவர்களின் வீச்சை அதிகரிக்க வரும் அபரிமிதமான வருமானத்தில் ஒரு சிறு பகுதியை இந்தியா போன்ற நாடுகளின் இஸ்லாமிய சமூகங்களை நோக்கி வீசி, பெரும் ஏவல் படையை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.

ஒரு பெரும் சுழலில் இஸ்லாமிய சமூகம் செல்கிறது. விண்ணிலிருக்கும் கறுப்பு ஓட்டைகள் (Black Holes) சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் இழுக்க முற்படுவதுபோல, இந்த இஸ்லாமிய சுழல் அந்த சமூகத்தை மட்டுமல்ல நம்மையும் இழுத்துச் செல்ல முற்படுகிறது. இது எங்கு போய் முடியும் என்பதும், இதற்கு நமது சமுதாயம் என்ன தீர்வு வைத்திருக்கிறது என்பதும் புரியவில்லை. இதோ பக்கத்தில் இருக்கும் ஈழத்தில் நடைபெற்றுள்ளதுபோல ஒரு பெரிய ஹோலோகாஸ்டை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோமா, உலகின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய சமூகம் நம்மிடையே இருக்கும் நிலையில் சிறு சிறு அளவிலேயே இருக்கும் பிரித்தன், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்றவை சமாளிக்க முடியாமல் திணறும்போது, பக்கத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளே இதனுடன் பெரும் சமர் செய்து திணறும்போது, நாம் என்ன செய்யப்போகிறோம், இந்த அளவுக்கு அடிப்படைவாதத்தால் கவரப்படும் இளைஞர் கூட்டத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் நாமும் ஒரு இலங்கையைப் போல, ஆப்கானிஸ்தானைப் போல, பாகிஸ்தானின் பெரும்பகுதியைப் போல அமைதியான வாழ்க்கையை தொலைத்துவிட்டு அடிப்படைவாதிகளுடன் தினம்தோறும் சமரையும், அழிவையும் சந்திக்கப் போகிறோமா என்று தெரியவில்லை.


http://nesamudan.blogspot.com

Series Navigation