நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!
வ.ந.கிரிதரன்
மதுரை மாநகர்!
தமிழர்களின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களில் பிரதானமானது மதுரை. கி.மு.விலிருந்து, முதற் சங்கம், இடைச் சங்கம் , கடைச் சங்கம் எனப் பல காலகட்டங்களைக் கடந்து பின்னர் நாயக்கர் காலத்திலும் புகழ்பெற்று விளங்கி இன்றும் தமிழர்களின் புண்ணிய பூமியாக விளங்கும் நகரமிது. இன்றைய ஆலயநகரமான மதுரை திருமலை நாயக்கரின் மதுரை. பாண்டியர்களின் காலகட்டங்களிலெல்லாம் தலைநகராக விளங்கிச் சிறந்த மதுரை பின்னர் நாயக்கர் காலகட்டத்தில் சிறிதுகாலம் திருசிரபுரத்தைத் தலைநகராகக் கொண்டு விளங்கியது. அதனை மாற்றி மீண்டும் மதுரையையே தலைநகராக்கி, புது மண்டபம், தெப்பக்குளம், அரண்மணைகளெனக் கலைச் செல்வங்களால் நிறைத்தவர் திருமலை நாயக்கர். பண்டைய மதுரையின் அரன்மணை இன்றைய மதுரையில் காணப்படும் ‘அந்திக்கடைப் பொட்டலருகே’யுள்ள கடைவீதீயிலிருக்கும் பழைய கோட்டைப் பகுதியாயிருக்கக் கூடுமெனக் கருதுவார் ‘பழந்தமிழர் கட்டடக்க்லையும் நகரமைப்பும்’ நூலில் நா.பார்த்தசாரதி. மேற்படி நூலில் மதுரை நகரம் பற்றிய நல்லதொரு ஆய்வுக் கட்டுரையினை சங்கால நூல்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் எழுதியிருக்கின்றாரவர். பாண்டியரின் மதுரை எவ்வளவு தொன்மை வாய்ந்ததென்பதர்குப் பல சான்றுகளுள. கி.மு.4 அல்லது 5ஆம் ஆண்டளவில் வெளிவந்ததாகக் கருதப்படும் இராமாயணம், மகாபாரதம் போன்ற வடமொழி இதிகாசங்கள் பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றன. இலங்கையின் மகாவம்சமும் கி.மு.478இல் விசயன் பாண்டியகுமாரியொருத்தியை மணந்ததைக் கூறும். கி.மு.3இல் வாழ்ந்த அசோகமன்னனின் கற்றூண் கட்டளைகளில் மூவேந்தர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். பல்வேறு காவியங்களும் இலக்கிய நூல்களும் மதுரையைச் சிறப்பித்துக் கூறுகின்றன. ‘மாட மதுரை’, ‘மதுரை மூதூர்’, ‘மணி மதுரை’, ‘வானவர் உறையும் மதுரை’, ‘மாண்புடை மரபின் மதுரை’, ‘ஓங்கு சீர் மதுரை’, ‘மண மதுரை’ எனப் பல்வேறு சொற்றொடர்களால் சிறப்பித்துக் கூறும் சிலப்பதிகாரம். ‘மதுரைப் பெருநன் மாநகர்’ என மணிவாசகர் பாடுவார் திருவாசகத்தில். ‘மிக்குபுகழ் எய்திய பெரும்பெயர் மதுரை’ என மதுரைக் காஞ்சி பெருமிதமுறும். ‘தமிழ் கெழு கூடல்’ எனப் புறநானூறும், ‘பாடு தமிழ் வளர்த்த கூடல்’ என இன்னுமொரு தமிழ்ப் பாடலொன்றும் மதுரையின்மாண்பினை எடுத்துரைக்கும். திருளையாடற்புராணம் ‘.. மதி தபழு சுதை யிலகு புதுமைதரு நிதிதிகழு மதில்தழுவு மதுரை நகர்’ என்றும், ‘அலகில் வண்புகழுடைய மதுரை’ எனவும், ‘நகர்கட் கெல்லாம் பயனா நகர் பஞ்சவந்தன் மதுரை நகர்’ என்றும் புகழும். இவ்விதமாகச் சிறப்புற்று விளங்கியது பாண்டியர்களின் தலைநகராக அன்று விளங்கிய மதுரை மாநகர்.
சங்கத்தொகை நூல்களிலொன்றான பரிபாடல் மதுரை நாகர் பற்றிப் பின்வருமாறு கூறும்:
‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்- பூவின்
இதழ்கத் தனைய தெருவம் இதழகத்
தரும் பொகுட் டணைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம் இந்துயில் எழுதல் அல்லதை
வாழியும் வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது எம்பேருள் துயிலே’
மாயோனாகிய திருமாலின் உந்தியிலமைந்த தாமரை மலரையொத்து அமைந்திருந்ததாம் மதுரை. அத்துடன் அதன் தெருக்களெல்லாம் அம்மலரின் இதழ்களைப் போலவௌம், மன்னனின் அரன்மணை அம்மலரின் நடுவிலுள்ள பொகுட்டையும், நகரத் தமிழ் மாந்தர் அம்மலரின் தாதுக்களையும், அதனை பரிசில் பொருட்டு நாடிவரும் புலவர் பெருமக்கள் தாதுண்ண வரும் வண்டுகளையும் ஒத்து விளங்கியதாக மேற்படி பாடல் கூறும்.
மதுரையின் தோற்றம் பற்றித் திருவிளையாடற்புராணத்தில் பல புராணக் கதைகளுள. அதன்படி பண்டைய மதுரை மாநகர் இருந்த பகுதியில் முன்னர் கடம்ப வனத்துடன் கூடிய மணலூரென்னுமோரூர் இருந்ததாகவும், அதனைத் தலைநகராகக் கொண்டு குலசேகரப் பாண்டியனென்னும் மன்னன் ஆட்சிபுரிந்து வந்ததாகவும், அவன் கனவில் தோன்றிய சிவபெருமான் கடம்பவனத்தை அழித்து நகரமாக்கப் பணித்ததாகவும், அதன் பொருட்டு அம்மன்னன் அவ்வனத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடிப் பின்னர் காட்டை அழித்து நகரை உருவாக்கியதாகவும் அறிய முடிகிறது. நகரை உருவாக்கும் சமயம் சித்தர் வடிவில் வந்த சிவபெருமான் நகரமும், ஆலயமும், கோபுரமும் சிற்பநூல்களின் விதிப்படி, சிவாகமங்களின் வழிப்படி அமைய வலியுறுத்தி மறைந்ததாகவும், அதன்படி மதில்கள், மண்டபங்கள், கோபுரங்கள், அகழிகள், ஆகியவற்றுடன் மீனாட்சி அம்மன ஆலயம் போன்றவை அமைக்கப்பட்டதாகவும் திருவிளையாடற் புராணம் கூறும். இவ்விதமாக அமைக்கப்பட்ட நகரானது அரசவீதிகள், அந்தணர் வீதிகள், வணிகர் தெருக்கள்,வேளாளர் தெருக்கள், கடைவீதிகள், பலர் கூடிபேச அம்பலங்கள், மாடமாளிகளைகளை உள்ளடக்க்கிய பெருந்தெருக்கள், ஆனை மற்றும் குதிரைக் கூடங்கள், தேர்ச்சாலைகள், கல்விக் கூடங்கள், பொய்கைகள், பூங்காக்களெல்லாம் கொண்டு விளங்கியதையும், நகரின் வடகிழக்குத் திசையில் மன்னனின் அரன்மணையையும் கொண்டு விளங்கியதையும் மேற்படி திருவிளையாடற்புராணத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நான்மாடக் கூடல், ஆலவாய் மற்றும் மதுரா நகரெனப் பல்வேறு பெயர்களில் மதுரை அழைக்கப்பட்டத்தற்குக் காரணங்களைத் திருவிளையாடற்புராணம் கூறும். சிவனின் சடைமுடியிலுள்ள சந்திரக்கலையின் மதுரமயான அமுதம் நகரைத் தூய்மையாக்கியதால் அந்நகருக்கு மதுரா நகரென்னும் பெயர் ஏற்பட்டதாம். இதுபோல் ஒருசமயம் வருணன மதுரா நகரை அழிக்கும் பொருட்டு ஏழு மேகங்களையும் நகரை நோக்கி ஏவி விட்டபோது பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கேற்ப சிவபெருமானால் அத்தாக்குதலையெதிர்த்து ஏவி விடப்பட்ட நான்கு மேகங்களும் நகரின் நான்கு எல்லைகளிலும் நான்கு மாடங்களாகி வருணனின் தாக்குதல்களை முறியடித்ததாகவும் அதனாலேயே நகர் நான்மாடக் கூடலென அழைக்கப்பட்டதாம். இவையே பின்னர் திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என அழைக்கப்பட்டதாக கலித்தொகையில் நச்சினார்க்கின்யர் கூறுவார்.
இதுபோல் மதுரை ஆலவாய் என அழைக்கப்படுவதற்குமொரு கதையினைத் திருவிளையாடற்புராணம் கூறும். அதன்படி வங்கியசேகரனென்னுமொரு பாண்டியன் மக்கள் தொகை பெருகிய மதுரையை விரிவுபடுத்த முனைந்தான். அதற்காக அவன் சிவனிடம் தன் முன்னோர்களால் வரையறுத்த பழைய நகர எல்லைகளைத் தெரியப்படுத்துமாறு வேண்டினானாம். அதற்காகச் சித்தராக அவன் முன்னால் தோன்றிய சிவபெருமான தன் கையிலிருந்த பாம்பினைப் பார்த்துப் பாண்டிய நாட்டின் எல்லையினையும் மதுரை நகரத்தையும் மன்னனுக்குக் காட்டுமாறும் பணித்தானாம். அப்பொழுது அந்த அரவம் தான் எல்லையினைக் காட்டியதும். அதுமுதல் நகரம் தன்பெயரால் அழைக்கப்பட வேண்டுமென வேண்டிக் கொண்டதாம். சித்தரான சிவனும் அதற்கிசைய அந்தப் பாம்பானது கீழ்த்திசையிலிருந்து தன் வாலை நீட்டி நகரைச் சுற்றிச் சென்று வாலைத் தன் வாயில் வைத்து எல்லைகளை உணர்த்தியதாம். அதன்படி மன்னனும் நகர மதில்களை எழுப்பினானாம். தெற்கில் திருப்பரங்குன்றமும், வடக்கே இடபக் குன்றமும், மேற்கில் திருவேடகமும், கிழக்கில் திருப்பூவண நகரும் எல்லைகளாக அமையும் வண்ணம் மதிலின் வாயில்களை அமைத்தானாம். இந்த மதிலே ஆலவாய் என அழைக்கப்பட்டதாம். அரவத்திற்குச் சித்தர் கொடுத்த வாக்கின்படி அதுமுதல் நகரும் ஆலவாய் நகரென அழைக்கப்பட்டதாம். இவையெல்லாம் மதுரை நகருக்கு மேற்படி பெயர்கள் வந்ததற்கான காரணங்களைப் பற்றித் திருவிளையாடற் புராணம் கூறும் தகவல்கள்.
இவை தவிர மதுரை மாநகர் பற்றிப் பல்வேறு தகவல்கள் சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி போன்ற இலக்கிய நூல்களில் மலிந்து காணப்படுகின்றன. அகழிகள் காவற்காட்டுடன் விளங்கின (‘அருமிளை உடுத்த அகழிசூழ்’ சிலம்பு- புறஞ்சேரி இறுத்த காதை; 183). நகர் அகநகர், புறநகரெனப் பிரிந்து கிடந்தது.
‘புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி,
வெள்ளநீர்ப் பண்ணையும், விரிநீர் ஏரியும்,
காய்குலைத் தெங்கும், வாழையும், கமுகும்,
வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை;
அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து -என்’ (புறஞ்சேரி இறுத்த காதை 190-195) எனக் கவுந்தியடிகளுடன் கோவலனும் கண்ணகியும் மதுரையின் புறநகரைச் சென்றடைந்ததைச் சிலம்பு வருணிக்கும். புறநகருக்கும், அகநகருக்குமிடையில் கட்டுவேலியுடன் கூடிய காவற்காட்டுடன் வளைந்து கிடந்தது மதுரையின் அகழி. யானைகள் செல்வதற்காக புறநகருக்கும் அகநகருக்குமிடையில் நிலத்தின் கீழ் அமைந்திருந்த சுருங்கைப் பாதையினூடு கோவலன் நகரினுள் சென்றதைச் சிலம்பு பின்வருமாறு வருணிக்கும்:
‘இளைசூழ் மிளையொடு வளவுடன் கிடந்த
இலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழியில்
பெருங்கரை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகிக் – ( ஊர் காண் காதை; 60-65). மேற்படி ‘கடிமதில் வாயிலை’க் ‘காவலிற் சிறந்த அடல்வாள் யவனர் காத்து நின்றனர் (ஊர் காண் காதை; 66-67). மேற்படி சிலம்பின் ஊர்காண் காதை மதுரை மாநகரின் அகநகரில் காணப்பட்ட பல்வேறு வகையான வீதிகளைப் பற்றியும் (செல்வர்கள் மற்றும் அரசர்களுக்குரிய வீதிகள், கணிகையர்கள் வாழும் வீதிகள், வேற்றரசுகளும் விரும்பும் செல்வச் சிறப்புடைய அங்காடி வீதிகள், இரத்தினக் கடைத்தெரு, பொற்கடைத் தெரு, துணிக்கடைத்தெரு:அறுவை வீதி, மிளகு மலிந்து கிடக்கும் கூல வீதி) எனப் பல்வேறுபட்ட வீதிகளைப் பற்றியும் கூறும். அத்துடன் அங்கு ‘நூலோர் சிறப்பின் முகில்தோய் மாட’ மாடங்களுடன் கூடிய மாட மாளிகைள் இருந்ததையும், சுடுமண்ணினால் வேயாது பொற்றகடுகளால் வேயப்பட்ட, ‘சுடுமண் ஏறா வடுநீடுங்கு சிறப்பு’ மிக்க மனைகளில் கணிகையர் வாழ்ந்ததையும் மேற்படி ஊர் காண் காதையிலிருந்து அறிய முடிகிறது. இவ்விதமாக ‘பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும், அந்தியும் (முச்சந்தி), சதுக்கமும் (நாற்சந்தி), ஆவண வீதியும் (கடைத்தெரு), மன்றமும், கவலையும் (பல தெருக்கள் ஓரிடத்தில் பிரியுமிடம்), மறுகும் (தெரு)’ எனப் பல்வேறு வகையான தெருக்களில் கோவலன் அலைந்து திரிந்ததாகக் கூறும் ‘ஊர் காண் காதை’யிலிருந்து அகநகரில் காணப்பட்ட பல்வேறு வகையான தெருக்களைப் பற்றிய தகவல்களைப் பெற முடிகிறது.
இவ்விதமாக விளங்கிய மதுரை நகரின் அகநகரில் காணப்பட்ட அகலத் தெருக்கள் பற்றியும், தேரணி வீதிகள் பற்றியும், தோரண வாயில்கள் பற்றியுயும் திருவிளையாடற் புராணத்தின் திருநகரச் சிறப்புப் பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளது.
மதுரைக் காஞ்சியிலும் மதுரை பற்றித் தகவல்கள் பல மலிந்து கிடக்கின்றன. மதில்மேல் பெரிய மலைமுகடுகள் போல் பொறிகளுடன் விளங்கிய மாடங்களிருந்ததையும், கோட்டை வாயில் வையை ஆற்றையொத்து உயிரோட்டமுடன் விளங்கியதையும் அது பின்வருமாறு விபரிக்கும்:
‘மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்’ (மதுரைக் காஞ்சி 351-156).
மேலும் மதுரை நகரின் தெருக்களில் காணப்பட்ட வீடுகள் தென்றல புகுந்து செல்லும் சாளரங்களையுள்ளடக்கி இருந்ததையும் அது ‘ வகைபெற எழுந்து வான மூழ்கிச் , செல்காற் றிசைக்கும் பல்புழை நல்லில், யாறு கிடந்தன்ன அகல்நெடுந் தெரு’ என்கிறது.
[இவ்வத்தியாயம் இன்னும் தொடரும் ]
ngiri2704@rogers.com
- கடித இலக்கியம் – 20
- கையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’
- இந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து…
- பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை
- ஜோகிர்லதா கிரிஜா அவர்களது தொடர்கதை
- துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய மாபெரும் கவிதைப் போட்டி முடிவு
- விடுதலைக்கு முன் புதுக்கோட்டை
- குறைபட்ட என் பதில்கள்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 13. மொழி
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!
- வேட்டையாடு விளையாடு
- மேமன்கவியின் நான்கு கவிதைகள்
- மார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி
- புதுச்சேரிப் பழமொழிகள் – அடையாளப்படுத்துதல்
- பூட்டானிலிருந்து யாத்திரிகர்களும், மந்திரவாதிகளும், கோப்பையும்
- யாரைத்தான் நம்புவதோ தோழா !
- பிறைசூடிய ஹவ்வா
- கீதாஞ்சலி (88) பாழடைந்த ஆலயம்!
- ஜிகாத் மார்க்ஸீயத்திலிருந்து வந்ததா?
- Painting Exhibition of V.P.Vasuhan
- இங்க்புளூ சாரியும், மிட்டாய் ரோஸ் பனியனும்
- தந்தையாய் உணர்தல்
- புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
- மடியில் நெருப்பு – 1
- வணக்கம் துயரமே – 1
- அய்யனார்
- மொகித்தே – நாஞ்சில் நாடன் – தொகுப்பு – மும்பாய் சிறுகதைகள்
- கலை இலக்கியம் எதற்காக?
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (21-43)
- வலி
- புதுப்பட்டிச் செப்பேடு
- திரும்பவும் வெண்மணிச் சோகம் எனும் பழங்கதை
- பாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத்
- கடிதம்
- மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்களுக்குப் பதில்
- தீவிரவாதத்திற்கான தீர்வு!
- பெரியபுராணம் – 102 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- இஸ்ரேல்: எஸ். வி. ராஜதுரை கட்டுரை : பொய்களும் பாதி உண்மைகளும்
- வந்தே மாதரம்- தவறான நிலையில் பாரதிய ஜனதா கட்சி
- அறிவிப்பு