மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (10, 11 இறுதிப்பகுதிகள்)

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

சேவியர், கோபால்


10

இணையின் நிலை அறியாது
காத்திருக்கும்
காலம் கொடியதா ?
காத்திருக்கும் காலத்தில்
நெருஞ்சி முள்ளாய்
நெஞ்சினில் தைக்கும்
காதல் கொடியதா ?

ப்ரியா காத்திருந்தாள்.
கண்களைத்
தொலைக்காட்சியிலும்
காதுகளைத்
தொலைபேசியிலும்
நினைவுகளை
பாலாவிலும்
தொலைத்துக்
காதலால்
காதலனுக்காய்
காதலுடன்
காத்திருந்தாள்.
வீட்டினுள் இருந்தும்
அன்னியமாய் உணர்ந்தாள்.

தீச்சுவடுகள் சுமந்த
திரையரங்கு வாசல்
தொலைக்காட்சி வழியே
அச்சுறுத்தியது.

காதலர் தினமென்று
மொத்தமாய்ச் செலவு
செய்ய
சிறுகச் சேமித்து,
பேரலையில் அழிந்த
மணல் கிறுக்கல்களாய்ப் போன
கனவுகள் எத்தனையோ ?

சிணுங்கிய தொலைபேசி
எண்ணங்கள் கலைத்தது!
ப்ரியா நலமா ? என
பாலாவின் குரல் ஒலிக்க
ப்ரியாவின் இதயம்
விட்டம் பாய்ந்து மீண்டது!
வார்த்தைகள் மரித்துப் போன
மெளன வினாடிகளில்
அவன் இதயம் துடிப்பதும்
செவிகளில் ஒலித்தது.

தன் பெயர் இதுவரை
இத்தனை இனிமையாய்
ஒலித்தாய் நினைவில்லை.

பாலா நலமா ?
கண்ணீர் வார்த்தைகள்
பாலாவை நனைத்தது.
மகிழ்ச்சியின் மிகுதியால்
நெஞ்சம் நிறைய
வார்த்தைகள் இருந்தும்
ஊமையானாள்.

கலவரத்தில் மீண்ட கதை,
மீண்டவள் மீண்டும்
அவன் குரல் கேட்கும்வரை
இருட்டு உலகில்
இருந்த கதை என
கவலைகள் அனைத்தும்
பரிமாறிக் கொண்டாள்.

ப்ரியமானவளே
நானும் உனை இழந்தேனோ
என ஒரு கணம்
இறந்தேன்!
நீ நலமாய்
இருப்பது அறிந்ததும்தான்,
மீண்டும் பிறந்தேன்.
கண்மணி உன்னை
மீண்டும்
கண்கள் வழியே
இதயத்தில் நிரப்ப வேண்டும்
நாளை நம் இடத்தில்
காத்திருப்பேன் வா என
பாலா உரை முடித்தான்.

தொலைபேசி
வைத்த பின்னும்
செவிகளில் நாதம்.
பூவுலகம் முழுவதும்
புதியதாய்த் தெரிந்தது.
மழைச்சாரல் தெறித்த
மனக்காதல் செடியில்
புதிதாய் ஒரு மலர்
பூத்திருந்தது.
ப்ரியா,
காதல் உண்டு,
காதல் உடுத்தி,
காதலில் விழுந்து,
கண்கள் மூடினாள்.

கோபால்.

****

11

புதிதாய் முளைத்த
கதிரவன் போல
பிரகாசமாய் காத்திருந்தான்
காலையிலேயே பாலா.

மரணக் கட்டிலில்
மூச்சுக்காற்றோடு முரண்டுபிடித்து
முனகிக் கிடந்த மனசுக்குள்
ஓர்
ஆக்சிஜன் அருவி
சட்டென்று உற்பத்தியானால்
எப்படி இருக்கும் ?

அப்படித் தான் இருந்தது
நேற்றைய
அனுபவங்கள்.

நகம் வெட்டிக் கொள்ளும்
அவசரத்தில்
இதுவரை
விரல் வெட்டிக் கொண்டிருந்தது
இப்போது தான்
பாலாவிற்கு விளங்குகிறது.

நேற்றைய ஒரு நாளில்
நகரம்
நரகத்தை அல்லவா
நடித்துக் காட்டியது ?

பருந்துகளாய்
பேருந்துகள்
பறந்து கொண்டிருந்த சாலைகள்,
வல்லுெறுகள் வட்டமிடும்
வனமாய் அல்லவா
இறந்து கிடந்தது ?

எத்தனை சுவாசங்கள்
நேற்றோடு
நுரையீரல் பயணத்தை
நிறுத்திக் கொண்டனவோ ?

எத்தனை
இரத்தக் குழாய்கள்
நேற்று
இறுதி ஊர்வலம் நடத்தினவோ ?

எத்தனை பூக்கள்
மலர் வளையங்களுக்குள்
மடிந்து கிடந்தனவோ ?

விஷம வேடனின் அம்புகள்
எத்தனை இணைகளின்
இணைப்புகளை உடைத்தனவோ ?
அங்கே
எத்தனை சாபங்கள்
ஆழ்மனதிலிருந்து அவிழ்ந்தனவோ ?

யோசிக்க யோசிக்க
பாலாவுக்குள் ஓர்
பரபரப்பு அரவம் பாய்ந்தோடியது.

பின்னாலிருந்து
பாலாவின் கண்ணைப் பொத்தி
சிந்தனைகளைக்
கலைத்தாள் பிரியா.

பாலாவுக்குள் சட்டென்று
பாலாபிஷேகம்.

பிரியா…

பாலாவின் கண்களும்
வார்த்தைகளும்
ஈரமாய் வழிந்தன.

ஆயிரம் முறை சொல்லியிருப்பான்
இப்போது
புதிதாய் இருந்தது
அவள் பெயர்.

பாலா…

பிரியாவுக்குள்ளும்
அதே நெகிழ்வு.

பாலையில் பாதை தவறி
பயணித்து நடந்தவன்
அருவியைக் கண்டதும்
அடையும்
ஆனந்தம் இருவரிடமும்.

யோசிக்கவே முடியவில்லை பாலா,
நீயோ நானோ…
அதற்குமேல் பிரியாவிடமிருந்து
வார்த்தைகள் வரவில்லை.
கண்ணீர் தான்
கரையுடைத்து கன்னம்தொட்டது.

அந்தக் கண்ணீருக்குள்
ஓர்
உப்பளத்தின் அடர்த்தி
தப்பாமல் இருந்திருக்கும்.

யோசிக்க வேண்டாம் பிரியா,
உன் இழப்போ
என் இழப்போ
தாங்க இயலா பாரம் என்பதை
நேற்றைய காற்று
சொல்லித் தந்தது இல்லையா ?

நமக்கிருப்பதெல்லாம்
பட்டாம்பூச்சிச் சிறகுகள் தானே
அதில்
அக்கினியை எப்படி
அடைகாக்க முடியும் ?

வெயிலின் முந்தானை
மூடாதவர்க்கெல்லாம்
இந்த
நிழலின் துண்டு
வியர்வை துடைக்காது இல்லையா ?

விரல்களை பரிசளித்த
சுதந்திர வீரரின் பரம்பரை நாம்.
இன்னும்
நகத்தின் அழுக்கெடுக்கவும்
பழகிக்கொள்ளவில்லை பார்த்தாயா ?

கிளிகளை
தானியங்களில்லா தேசத்திலல்லவே
திறந்து விட்டது !
ஆறுகள் கூட
புனிதமாய் ஊறும் பூமியிலா
வன்முறைமையும்
கூடவே உற்பத்தியாவது ?

திஸ்ரீயுச்ஸ் ேலுறுரஷ ப்சூஸ்ரீ
ண்ஸ்ரீயுச்ல்ஷ ேலுறுரடிமிஸ்ரீமடுபூ
ண்புமுசூரூ டாமசூம்டாபூ
ண்முபஸ்நுயிச்ஸ்ரீ ரூம்றுநுஷ.

திஸ்ரீடுயு ண்ஸ்ரீயுச்ஸ்
ம்ச்டுபூன்பூ டாமசூடாபூ
திஸ்ரீ ணநுஷ
ணயச்ன்பூச்லுறுநு டாம்னுரீஷ
டாமசூநுனீரீஷ ேயுச்டாமீவூஷ
திஸ்ரீடுயுலீஷ ண்ஸ்ரீடுயுலீஷ
ேடுபுன்ரூறு
நுசூபூஸ் மினுபுச்ஸ்
ணநுஷ லடுபூறுநுமூசூஷ ம்சூ!

ஆரம்பிச்சுட்டியா ?
புலம்பலை நிறுத்து பாலா ?
ஒப்பாரிகளை எல்லாம்
ஒப்பனை வாதிகளுக்கு இருக்கட்டும்.
இந்த நாளை நாம்
மறக்கவே கூடாது.
அதுக்காக ஏதேனும் செய்யலாம்
சொல்லேன்.

ம்..ம்…
பூமித் தாயின் முகத்துல
குருதி மழை கொட்டிய நாளை
நாம
இரத்த தானம் செய்தே
நினைவு கூரலாமா ?
பாலா கேட்டான்.

சரிடா…
பிரியா காதலுடன் சொன்னாள்.

ஐ லவ் யூ ெ டா
பாலாவும்
காதலை நிறைத்து
ஊற்றிய வார்த்தையை நீட்டினான்.

இப்போ தான்
புதுசா காதலிக்கிறது போல
இருக்கு,
பாலா பிரியாவின்
விரல் பற்றிச் சொன்னான்.

அப்போ
இதுவரை நீ காதலிக்கவே
இல்லை இல்லையா ?
பொய்க் கோபத்தோடு
விரல் விலக்கினாள் பிரியா ?

அப்படியில்லே…
கொஞ்சம் அதிகமா
காதலிக்கிறேன்…
பாலா விளக்கினான்.

அப்போ
நேற்றுவரை கொஞ்சமா தான்
காதலிச்சியா ?
பொய்க்கோபத்தை அதிகப் படுத்தி
விலகி அமர்ந்தாள் பிரியா ?

காலங்காலமாய்
கூடவே இருந்தாலும்
அலுக்காத
ஊடல் காட்சி ஒன்று
உற்சாகமாய் அங்கே
உச்சத்தில் நடந்தது.

அவர்களுக்கிடையே இருந்த
பசூம்பல் சிந்தனைகளை எல்லாம்
நேற்றைய
சுழல்காற்று
சுருட்டி எடுத்துச் சென்று விட்டது.

அதுவரை,
சின்னச் சின்னச் சிலுவைகளை
அடுத்தவர் தோள்களில்
திணித்துக் கொண்டிருந்த
பறவைகள் இரண்டு,
இப்போது அடுத்தவர்
சிலுவையை ஏந்திக் கொள்ள
சிறகுகளை தயார் செய்கின்றன.

வாழ்க்கை என்பது
விட்டுக் கொடுத்தலில்தான்
வளரத் துவங்கும்,
அது கால்களை இழுக்கும்
கபடி விளையாட்டல்ல
தீபம் மாற்றித் தொடரும்
தொடர் ஓட்டம்
என்பதை
காதல் பறவைகள் கண்டு கொண்டன.

சேவியர்

***
நிறைவுற்றது

gopal@asdc.co.in
Xavier_Dasaian@efunds.com

***

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 – தொடர்கவிதை

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

சேவியர்


9

பாலாவின்
இதயத் துடிப்பு
இதயத்தை விட்டு வெளியேறி
காற்றில் பதிந்து
காதுகளில் குதித்தது.

அத்தனை நரம்புகளிலும்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓர்
சோர்வு வந்து
சேர்ந்து கொண்டது.

எங்கே போவது ?
வேடந்தாங்கலில் வெடிவிழுந்தால்
பறவையைத் தேடி
எங்கே ஓடுவது ?

தன்
அலுவலகம் ஓடினான்,
பிரியா
அலுவலகத்துக்கு அங்கே
எனக்காய் காத்திருப்பாயா ?

மனசுக்குள்
குதிரைகளின் குளம்படிகளாய்,
இதயம் தடதடத்தது.

அலுவலகம்
அதோ துரெத்தில்…
தீவிரத்தின் ஓரமும் இன்றி
நிதானமாய் நின்றிருக்கிறது.

பாலாவின் விழிகள்
ஆயிரமாய் அவதாரமெடுத்து
அணு அணுவாய்
திசைகளெங்கும் ஓடி
தன்
தேவதையைத் தேடியது.

எங்கும் அவள் இல்லை,
வினாடிகள் நகர நகர
நரம்புகளுக்குள்
நடுக்கம் கூடியது.

காவலாளியைக் கேட்டான்,
இங்கே
என்னை நெஞ்சில் தாங்கி,
என் பெயரை உதட்டில் தாங்கி,
ஏதேனும்
சின்னக் குயில் சிறகடித்ததா ?

தன்னைத் தேடி
யாரேனும் வந்திருந்தால்,
அது
பிரியா மட்டுமே என்று
புரிந்து வைத்திருந்தான் பாலா.

பட்ட காலிலே படும்
என்பது
இடம் பொருள் ஏவல் பார்த்தே
தொடரும் போலிருக்கிறது.

அந்தக் காவலாளி
அப்போது தான்
அலுவலை ஆரம்பித்தானாம்.

எங்கோ
வெடிகுண்டு வெடித்ததாமே,
வீட்டுக்கு
பத்திரமாய் போய்விடுங்கள்,
ஆறுதலாய் அவன் சொன்னவை
இவனுள்
அமில அருவியாய் கொட்டியது.

யாரைக் கேட்பது,
அலுவலக இருக்கைகள் எல்லாம்
மனிதர்களைத் துடைத்து
காற்றை உட்கார்த்தி
கதை பேசிக் கொண்டிருந்தது.

பிரியா வீட்டுக்கு பேசலாமா ?
எண்ணத்தின் முனைகள்
ாபிரியா இல்லைா என்று
எதிர்முனை சொன்னால்
என்னவாகும்
என்னும் சிந்தனையில்
முடிச்சிட்டு பாதியில் தொங்கின.

வலைக்குப் பயந்து
விலகிய மீனை,
துணெ¢டில் விழுங்கியதாய்,
தொண்டைக் குழிக்குள்
வார்த்தைகள் வறண்டன.

அப்படி ஒரு பதில்
அப்பக்கமிருந்து வந்தால்,
எங்கே சென்று தேடுவேன் என்
சிறகுகள் திருடிச் சென்ற
வண்ணத்துப் பூச்சியை ?

என் விழிதொற்றிக் கிடந்த
விண்மீனை
எந்த வானத்தில் போய்
கண்டெடுப்பேன் ?

எந்த மேகம் கலைத்து
என்
வானவில்லை
துடைத்தெடுப்பேன் ?

கவலைகளும் கேள்விகளும்
விரல்களுக்கும்
மூளைக்கும் இடையே
விரைவுப் பயணம் நடத்தின.

எடுத்த தொலைபேசியை
காதுக்குக் கொடுக்கவே
கைகள் நடுங்கின,
காதுகளில் தீ விழுமோ
இல்லை பூ விழுமோ ?

வேறு வழி இல்லை,
மதங்களை எல்லாம் மறந்து
அத்தனை தெய்வங்களையும்
மொத்தமாய் வேண்டி,

பாலா
தொலைபேசி எண்களை
தொட்டான்.

சேவியர்

***
gopal@asdc.co.in
Xavier_Dasaian@efunds.co

***

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 8 – தொடர்கவிதை

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

கோபால்


வாகனம் விரட்டிய நாயகன்
திரையரங்கு அருகில்
நெருங்கினான் இல்லை!
தீவிரவாத நச்சுப் புகைக்குத்
தீண்டாமை ஏது ?
நகர வாழ்க்கையின்
அமைதியை அது
மூச்சுத் திணறலில்
மூழ்கடித்திருந்தது.

சற்று முன்
காதல் பறவைகளின்
கானம் நிறைத்த இடம்
புயலில் கலைந்து போன
பறவைக் கூடு போலானது.

அமைதி காக்கக்
காவலர் ஒரு புறம்!
கவலை நிறைத்து,
உறவுகள் தேடிக்
களைத்தவர் ஒரு புறம்!
நிகழ்வுகளின் தாக்கத்தில்
நின்றவர் ஒரு புறம் என
பாலாவைச் சுற்றிலும்
போர்க்களக் காட்சிகள்.

இதயத்துடிப்பு
நின்று போனவனாய்
பாலா
தன் காதல் பறவையை
அநிச்சயமாய்த் தேடினான்.

திரையரங்கில் இருந்தவர் எல்லாம்
இறந்தவரே என
கண்டவர் சொன்னது
பாலாவின் மனதில்
நம்பிக்கை வேர்களை
அசைத்துப் போட்டது.

பிரியமானவள் இங்கு
இருந்ததும் அறிந்திலன்
இருப்பதும் அறிந்திலன்
இமைகள் விழித்திருந்தும்
குருடனாய் உணர்ந்தான்.
இயலாமையில்
இலக்கில்லாக் கோபம்
இளைஞனைச் சுட்டது.

காதல் பெண்ணைக்
காணது செய்த
பணியின் மீது
திரும்பிய கோபம்
தன்னுள் இருப்பவளைத்
தேடும் எண்ணத்தில்
தணிந்து போனது.

இதயம் ச்ீராக்கிச்
சாத்தியங்கள் சிந்தித்தான்
நிச்சயித்து போல்,
கிளம்புமுன்
சேதி தெரிவிக்க
அழைத்தாளில்லை!
தவிக்க விடுதல்
அவள் தனிக்கலைதானே எனும்
எண்ணம் துளிர்த்ததை
துடைத்தெறிந்தான்.

காதல் பெண்
களம் வந்திருக்கலாம்,
வந்தவள் மீண்டிருக்கலாம்
மீண்டவர் இல்லையெனும்
சேதி உண்மையெனில்
என்னவளைத் தொலைத்தேனோ ?
அறிவு நினைத்ததை
இதயம் மறுத்தது.

காலதாமதத்தால்
கிளம்பு முன்னர்
கலவரம் அறிந்து
வராமல் இருந்து
உயிர் காத்திருக்கலாம்!
எப்படியாயினும்
தொடர்பு கொள்ள
முயன்று கொண்டிருக்கலாம்!

தன்னுள் இருக்கும்
அவள் உயிர்க்கு
தானறியாது
சேதம் இருக்காதென
காதல் மனதில்
உறுதி கொண்டு தன்
அலுவல் நோக்கி,
விவரம் அறிய
விரட்டினான் வாகனம்!
**
கோபால்.
***
Gopal Srinivasan gopal@asdc.co.in
Xavier_Dasaian@efunds.com

Series Navigation

கோபால்

கோபால்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

சேவியர்


7

புயல் ஒன்று
நுரையீரலில் நுழைவதாய்
மூச்சிரைத்தது
பிரியாவிற்கு.

வியர்வை ஆங்காங்கே
சொல்லிக் கொள்ளாமல்
முளைக்க,
சோபாவில் சாய்ந்தாள்.

ஏன் சீக்கிரம் என்ற
அம்மாவின் கேள்விக்கு,
வார்த்தையில்லாத
ஓர் பதிலைச் சொல்லி
நெற்றியைத் தேய்த்தாள்.

அதற்குள்
அந்த விபரீதம்
தொலைக்காட்சி வழியாய்
வீடுகளில்
தலைநீட்ட,
பதட்டத்தின் நுரைகளால்
அறைகளும் நிறைந்தன.

தொலைக்காட்சி பார்த்த
பிரியா பயந்தாள்,
எங்கும் சிதறி ஓடும் கூட்டம் !
பகைவனாய் படரும்
புகை.
திரையரங்கு வாசலில்
குருதித் தோரணம்.

பாலா ?
நீ எங்கே இருக்கிறாய் ?
அனிச்சைச் செயலாய்
விரல்கள் கடிபட்டன.

ஒரே ஒரு வார்த்தை
பேசு என் பிரியமே,
ஹலோ .. மட்டும் சொல்லிவிடேன்.
உனக்கு ஏதும் ஆகியிருக்காது,
ஆகியிருக்கக் கூடாது.
மனம் இடைவிடாமல்
இறைவனைக் கெஞ்சியது.

பாலா,
காத்திருக்கும் வினாடிகள்
இத்தனை கடுமையானவையா ?

நான்
போன் செய்யாத பொழுதுகள்
உனக்குள்
பரபரப்பு இரயில் ஓடுமா ?

என் தண்டவாளங்களில்
ஒரு முறை தரிசனம் தாயேன்,
ஒரே ஒரு முறை
என் தொலைபேசியை
துயிலெழுப்பேன்.
பிரியா வின் பதட்டம்
மெல்ல மெல்ல விட்டம் தொட்டது.

அவசரமாய் பாலாவில்
அலுவலகம் அழைத்தாள்..
எடுப்பார் யாருமின்றி
அடித்துக் கிடந்தது அது.

நிழலின் அருமை
வெயிலில் தெரியுமாம்,
எனக்கு
வெயிலின் கொடுமை
வெயிலிலேயே தெரிகிறதே.

நீ
இல்லாத வாழ்வு.. என்னும்
நினைவுகளே நகர மறுத்தது.
சக்கரம் இல்லாத
தேருக்கேது ஊர்வலம் ?

எத்தனை முறை
அவனை வரச் சொல்லி
நான் வராமலிருந்திருக்கிறேன்.

எத்தனை முறை
தொலைபேசியை
தொடாமலிருந்திருக்கிறேன்.

அமிலத்தின் வலி
அதில்
அமிழ்ந்தால் தானே,
வேர்களில் பாதரசம் பாய்ந்தால்
கிளைகள் எப்படி
கிளிகளைத் தேடும் ?

வெண்ணை திருட வாராயோ
என்
கண்ணைத் திருடிய
கண்ணனே…
பிரியாவுக்கு கண்கள்
கசிந்தன.

இமை தாங்கிய கண்ணீர்
சுமை தாங்கியாய்
கனத்தது.

உன்னோடு
சண்டையிடுவதே எத்தனை
சந்தோசமானது ?
எத்தனை
நித்திரை கத்தரித்திருக்கிறாய்
கனவுகளில் வந்து.

என்
ஒவ்வோர் சிரிப்புக்குப் பின்னும்
மெல்லமாய் புகழும்
செல்லமான உன் வார்த்தைகள்,

கவலை சரிவுகளில்
சறுக்கினால்
கைப்பிடித்து கரையேற்றும்
உன் தோழமை.

கண்ணிமையில் கவிழ்ந்தாலும்
மாறாத உன்
கண்ணியம்…

என்
அத்தனை உறவினர்க்கும்
பின்னால் வந்து
அத்தனை உறவையும்
பின்னால் தள்ளியவன் நீ.

இனி உன்னை
வருத்தப்பட வைக்கமாட்டேன்,
ஒரே ஒரு முறை
எனக்காக போன் செய்.

ராட்சசச் சக்கரத்தில்
சிக்கிக் கொண்ட
சின்னச் சிட்டுக் குருவியாய்
பிரியாவின் உயிர்
சிறகடித்துக் கிடந்தது

– சேவியர்

Gopal – gopal@asdc.co.in
Xavier – Xavier_Dasaian@efunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

கோபால்


6

பிரியாவைச் சுமந்த
வாகனம் விரைந்து,
கலவர பூமியைக்
கடந்த பின்னரும்
கன்னியின் மனது
பூகம்ப பூமியாய்
பொங்கிக் கொண்டிருந்தது.

நிகழ்ந்தது கனவா ?
நிகழ்வது நிஜமா ?
மனிதம் வளர்த்த
புனித பூமியில்
மத மாச்சரியமா ?
எத்தனை இழப்புகள் ?
எத்தனை வலிகள் ?
கேள்விகள் துளைத்த
கன்னியின் மனது
உயிர் இருப்பதை
உணர்ந்து கொண்டதும்
பாலாவின் நினைவில்
பொங்கித் தவித்தது !

பாலாவின் நிலை நினைத்துக்
கவலை கொண்டவள்
ஆவல் நிறைய, அவன்
அலுவல் விரைந்தாள்
வாசலில் தேடிய
பாலாவின் வாகனம்
இருந்ததா ? இல்லையா ?
கவலை ரேகையில்
இதயம் கனத்தது.
தாவிப் படியேறி
தன்னவன் அலுவலில்
முன்னமே சென்றான் எனும்
செய்தியைக் கேட்டவள்
அமைதி இழந்தாள்.
கலக்கம் கூட்டுவதுபோல்
பதற்றமாய்ச் சென்றான் எனும்
உதிரிச் செய்தியால்
உயிர் வாடினாள்.

திரையரங்கு பக்கம்
விரைவாய் செல்லப்
பணித்தவளை
வாகன ஓட்டி
விரோதப் பார்வையால்
வாட்டினான்.

புரிந்து கொள் மனிதனே !
திசைகள் தெரியாத
கலமாய்த் தவிக்கிறேன்.
என் இதயம் வடிக்கும்
கண்ணீர்
கண்களின் வழியே
வழிந்து விடாமல்
காத்துக் கொண்டிருக்கிறேன்.
நிஜம் என்னைச்
சுட்டு விடாமல்
இருக்க வேண்டியே
பதைக்கிறேன்.
குருக்ஷேத்திரக் கண்ணணாய்
உன்னைக் காண்கிறேன்
என
உயிர்க் கவலையில்
கலங்கிய கண்களைக் கண்டு,
மனிதம் கொண்டு
வண்டியை விரட்டினான்.

கலவர பூமியினின்று
காத துரெம் வரை
பரவிக் கிடந்தது
பதற்ற நிலை.

தீ நாக்குகளுக்குத்
தெரியுமா இது
தீவிரவாதம் என்று ?
அவை
இயல்பு மாறாது
இருப்பதையெல்லாம்
இரையாக்க
இயக்கம் நிறுத்தியது
நகரம்.

நாசியில் கலந்த
காற்றிலும்
தீவிரவாதத்தின்
தீய வாடை!

சிதறிய நெல்மணிகளாய்
மக்கள் கூட்டம்!

நீந்தத் தெரியாது
நீரில் அமிழ்ந்தது போல்
ப்ரியாவிற்குள் பேரிரைச்சல்.

பாலா இருப்பானா ?
வெண்மணற்பரப்பில் வீழ்ந்த
ஒற்றை முத்தைத்
தேடுதல் சாத்தியமா ?

மன்னவன் எங்கே ?
என்னுயிர்க் கவலையில்
தன்னுயிர் வருத்துகிறானோ ?
வெற்றுப் பார்வை
சுற்றிலும் சுழன்றது.
நாயகன் நிச்சயம்
தொடர்பு கொள்வான் என
காதல் விதைத்த
நம்பிக்கை மனம் கொண்டு
இல்லம் நோக்கித்
திரும்பினாள் பாவை!

கோபால்.

Series Navigation

கோபால்

கோபால்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 5 (தொடர்கவிதை)

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

சேவியர்


5

பாலாவும், பிரியாவும்
பாலர்கள் அல்ல.
வெப்பத்தின் தெப்பம் தேடும்
மனக் கிளர்ச்சி விரிய வைத்த
மலர்களுமல்ல.

அவர்கள்,
நிஜ வாழ்வில் நிற்பவர்கள்.
எதிர்காலம் என்பது
நிகழ்காலத்தின் நீளல் தான்
என்பதை உணர்ந்தவர்கள்.

நிறைய விவாதிப்பார்கள்,
இன்று ஒரு தகவல் முதல்
ஓஷோவின்
உள்ளொளிப் பரவல் வரை.

அரசியல் இல்லாத
அரசாங்கம் முதல்,
மதங்கள் இல்லாத மதங்கள் வரை,
இவர்கள்
விவாதம் தொடாத
மேடைகள் குறைவு.

ஆகாயத்தைப் பற்றிப்
பேசுவதை விட அதிகமாய்
ஏழைகளுக்கான
ஆகாரத்தைப் பற்றி
பேசுவார்கள்.

மனங்கள் பற்றியும்
இதயங்கள் பற்றியும்
சராசரிக் காதலருக்கு
சற்று மேல் சிந்திப்பவர்கள்.

உலகில்
தற்கொலை எண்ணம்
தோன்றியிராத
மனிதர்களே இல்லையாம்.
என்னும்
ஆச்சரிய விஷயங்கள்,

புன்னகை என்பது
இதயத்தின் ஆழத்தில்
உற்பத்தியாகி
உதடுகளில் சந்திக்கும்
உன்னதமான உணர்வு.

உதடுகள் மட்டும் விடுக்கும்
புன்னகை,
பாறை மேல் விதைத்த
நெல்மணி போல
வெயிலில் கருகும்,
மழையில் விலகும்.

உள்ளம் விடுக்கும் புன்னகை
வேர்விட்ட ஆலமரம்,
நாளைய விழுதுக்கு
இன்று தரும்
இலவச அழைப்பு அது.

என்றெல்லாம்
புதிது புதிதாய்,
பரவசம் பரவப் பரவ
பேசுவார்கள்.

அவ்வப்போது
உள்ளுக்குள் ஊடலும்
உலவும்.

என்னைச் சந்திப்பதை விட
பணி தான் முதன்மையா ?
வேலை உனக்கு அம்மாவா ?
அலுவலகம் தான் தாய் வீடா ?
அவள் வராத
மாலைப் பொழுதுகளின்
வேதனையில் பேசுவான்.

அலுவலகம் என்னை
எட்டு மணி நேரம்
கட்டிப் போடும் கட்டிடம்,
வேலை எனக்கு
நானே இட்ட கடிவாளம்.
உன் காதலி
கடமை தவறாதவள் என்றால்
உனக்குத் தானே பெருமை
சின்னதாய் சிரிப்பாள்.

என்னைக் காக்கவைக்கும்
கடமையை மட்டும்
ஒழுங்காய் செய்கிறாய்,
பொய்யான கோபத்தில்
பாலா பேசுவான்.

ஏன் காத்திருக்கிறாய் ?
நான்
உனக்குள் தானே
உட்கார்ந்திருக்கிறேன்,
சளைக்காமல் சொல்வாள் பிரியா.

கடைசியில்,
நம் பாதை
நான்கு சந்துகளோடு முடிவடையும்
சின்னதோர் சாலை அல்ல.
அது
மரணம் வரை தொடரக் கூடியது.

சின்னச் சின்ன சோர்வுகளுக்காய்
சிறகுடைக்காதே
பறப்பதற்கு இன்னும்
வெகுதுரெம் இருக்கிறதென்று
முடித்துக் கொள்வார்கள்.

ஓரமாய் விழும் துெசுகளை
காத்திருக்கும் கடல்
கழுவிச் செல்வது போல தான்
காதலில் வரும்
கோபங்கள்.

காதலியை விட்டு விட்டு
கால்கள் விலகினாலும்,
காதல் மட்டும்
காலோடு ஒட்டிக் கொண்டு
நிழலாய் தொடரும்.

பின்,
நிழலின் பின்னால்
கால்கள் நடக்கும்.

பாலாவும் பிரியாவும்
அப்படித் தான்.

ஊற்று மேல்
உட்கார்ந்திருக்கும்
மணல் போன்றதே
மெலிதான அவர்கள் கோபம்.

தண்ணீரில் வரைந்த
ஓவியம் போல
கலையும் நிலை தான்
அவர்கள் கோபத்துக்கு.

அவர்கள்
காதலின் நிலத்தை
உழுவதற்காய்
காத்திருந்தது
அந்த காதலர் தினம்.

***
சேவியர்

***
(தொடரும்)

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை)

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

கோபால்


4

இன்னொரு நாள் மாலை,
பாலாவின்
எண்ண ஒட்டத்தின்
வேகம் தாளாது
ரத்த ஓட்டம்
தவித்துக் கொண்டிருந்தது !

இதமாய் என்றும்
இருக்கும் வேலை
இன்று ஏனோ
இங்கிதம் தெரியாது
அங்கதம் செய்தது !

சுற்றிலும் உலகம்
காதல் வண்ணம்
பூசிக் கொண்டு
காதலர் தினமென்று
களித்துக் கொண்டிருந்தது !

முன்னிரவில்,
நாள் முழுதும்
உடனிருக்கச் சொன்ன
நாயகியின்
விருப்பம் கொன்று,
மாலை மட்டும் உனக்கென்று,
திரையரங்கின் வாசலில்
ஆரணங்கைக்
காக்கச் சொல்லி,
வந்து சேருவதாய்
வாக்களித்திருந்தான் !

அலுவல், அவனை
இருக்கையில் கட்டிப் போட்டு
இரக்கமில்லாத
அரக்கனாய்ச் சிரித்தது !

கடிகாரத்தில்
நிமிட முள் கூட
வினாடி முள்ளாய்
விரைந்தது !

சிந்தையைக் காதலுக்கும்
செவிகளைத் தொலைபேசிக்கும்
கொடுத்து,
வேலையில் விழி பதித்து
நேரம் தின்று கொண்டிருந்தான் !

எதிரிலுள்ள
எந்திரம்
எதிரொலிக்க
எதிர் பார்த்தான் !
மணியடிக்கையில்
மனம்கவர்
மாதுதான் என்று
மயங்கினான்!
தாவியெடுத்த பின்
தனக்கில்லை என்றதும்
தவித்தான் !

பிரியாவை நினைத்துப்
பரிதவித்தவனைக்
கோபம் கொஞ்சமாய்
ஆக்கிரமித்தது.
அலுவல் முடிந்து
அரங்கம் கிளம்பு முன்
தொலைபேசியில்
அழைப்பதாய்ச் சொன்னவள்
மவுனம் காப்பதேன் ?
கேள்விக் கணை
சிந்தையை மொய்த்தது!

ஒவ்வொரு முறையும்
பலுனெில் நிரப்பிய
காற்றாய்,
அவனுள் இருக்கும்
கோபம்,
அவள் விழிகளின்
கூர்மையில்
வெளியேறிப் போகும்.

இப்படித்தான் ஆகிறது
எப்போதும்.
இந்த முறை தொலை பேசல்
எந்தன் முறை அல்ல!
எத்தனை முறைதான்
தான்
முதல் குரலாய் ஒலிப்பது ?
இனியவள் பேசட்டும்,
இல்லையெனில்
இனி அவளிடம்
பேசுதல் இல்லையென
பிரசவ வைராக்கியம்
விதித்துக் கொண்டான் தன்னுள் !

அலுவலர் முடித்த சிலர்
முடிச்சுகளாய் நின்றிருக்க
அலுவலில் கவனம்
திருப்பிய பாலாவை
உதறிப் போட்டது
செவியில் விழுந்த செய்தி !

ஆரணங்கைக்
காத்திருக்கச் சொன்ன
திரையரங்கின் வாசல்
குண்டு வெடித்துத்
தீப்பிழம்பான செய்தி
பாலாவின் உள்ளத்தில்
தீ அள்ளிக் கொட்டியது !

இதயம் ஒரு கணம்
இணையை நினைத்து
இயக்கம் நிறுத்தியது !

கண்ணின் மணிக்கு
என்னவானதோ ?
காதல் கிளியைக்
காண முடியுமோ ?
எண்ணச் சிறகுகள்
பட படக்க
எய்துவிட்ட ஏவுகணையாய்
பாலா,
எட்டிப் பாய்ந்ததும்,
இயந்திரம் இயக்கியதும்,
திரையரங்கு நோக்கி
வாகனம் விரட்டியதும்,
எப்போது ? எப்போது ?

– கோபால்.

(தொடரும்)

Series Navigation

கோபால்

கோபால்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

சேவியர்


3

பூக்கள் இல்லாத
பூங்கா அது.

வினாடிகள் வினாடிகளை
சிந்தனையோடு தாண்டும்
அந்த
சின்னச் சின்னக் கணங்களிலும்
பாலாவின் கண்கள்
சாலை பார்த்துக் கிடந்தன.

காதலனை காத்திருக்க
வைப்பது
காதலின் இலக்கணமோ
இல்லையோ,
காலங் காலமாய் அது
காதலியரின்
இலக்கணமாகி இருக்கிறது.

எத்தனை முறை தான்
பெருமூச்சு விடுவது ?
எத்தனை இலைகளைத் தான்
தாறு மாறாய் கிழிப்பது.

பிரியா இப்படித் தான்
மாலையில் வருவாயா என்பாள்.
வரம் பெறும் பக்தன்
வரமாட்டேன் என்பானா ?

காத்திருந்தால்
கண்களுக்குள் விழமாட்டாள்.
ஓடி ஓடி மனதில் கால்களும்
ஓடாமல் உடலின் கால்களும்
ஓய்வு தேடும் போது
வருவாள்.
கோபம் துடைக்கும்
புன்னகை எடுத்துக் கொண்டு.

ஒற்றைச் சூரியன்
அள்ளிக் கொண்டு போகும்
ஒட்டு மொத்தப் பனித்துளியாய்.
ஓடிப் போகும்
பாலாவின் கோபங்கள்.

அனிச்ச மலரின்
அடுத்த வீட்டுக்காரி பிரியா.
தொட்டாச் சிணுங்கியின்
தோழி அவள்.
அவள் கிளைகள் பூப்பூக்க
அவன் அவ்வப்போது
வேராய் பூமிக்குள் விரைவதுண்டு.

இன்று என்னவாயிற்று
இவளுக்கு ?
பணியில் இருக்கிறாளா
இல்லை
பிணியில் கிடக்கிறாளா ?

அவ்வப்போது பாலா
கவிதை எழுதுவான்,
காதலிப்பவன் கவிதை எழுதுவதும்
கடலுக்குள்
நதிகள் கலப்பதும்
காலங்காலமாய் நடப்பது தானே.

‘எனக்குள் பூக்கள்
இருக்கிறதென்பதை
உன் புன்னகை
இழுத்தெடுத்தபோது தான்
புரிந்துகொண்டேன். ‘

கண்மூடி
மனசில் கவிதை தேடினான்.

என் பிரியங்களின்
பிரியமே பிரியா ?
ஏன்
உன் தரிசனம் தாமதம் ?

பாலாவின் உள்ளுக்குள்
சிறு கோபம்
சின்ன அலையாய் சிதறியது.
அவன் மனமெனும்
புல்லாங்குழல்
திடாரென துளைகள் பொத்திய
அவஸ்தை.

கல்லெறியில் உடைந்து சிதறி
மீண்டும் இணையும்
குளத்து நிலவாய்,
அவன் கோபம்
விட்டு விட்டு
தொட்டுக் கொண்டிருந்தது.

பூங்காவின்
சருகு மிதித்து
காதலர்கள் கடந்து போகிறார்கள்.

ஒவ்வோர்
இதழ்களிலும்
ஒவ்வொரு விதமாய் புன்னகை.

மகிழ்வில்,இக்கட்டில்,
வரவேற்பில், வழியனுப்புதலில்
அட,
முகத்தின் முகமூடி உதடுகளா ?

பகலவனும்
படுக்கை சென்ற பின்
பாலா என்ன செய்வான் ?
இருட்டு அவனுக்குள்
சில கவிதைகளை
எறிந்து விட்டுப் போனது.

பூமி கருப்புக்குள் கலக்க,
மேலே
நிறங்களின் கலவையாய் வானம்.
வண்ணம் தோய்த்த
பஞ்சுக் கூட்டமாய் மேகங்கள்.
கவிதை
மேகங்களிடையே கசிந்து
பாலாவின் பக்கமாய் விழுந்தது.

‘மேகத்தின் மேலுமொரு
எரிமலையின் பிரளயமா
பூமியின் முகத்தில் அதன்
கரும்புகை வளையமா ?

இருட்டுக்குள் இளைப்பாறுது
இயற்கையின் தோட்டம்
கண்சுருக்கி நகருதிந்த
வண்ண முகில் கூட்டம்.

சூரியக் கிழவனின் வெற்றிலைச் சாறு
வானப்போர்வைக்கு வண்ணமா ?
இருட்டுப் போர்வைக்குள் ரசித்துக் கிடப்பதே
பூமித்தாயின் எண்ணமா ? ‘

சிந்தித்துக் கொண்டே
வெளியே வந்தான் பாலா ?

தொலைபேசி செய்து
காரணம் கேட்கலாமா ?
கேள்வியை
மனம் துண்டாக்கிப் போட்டது.
அவள் போன் செய்யட்டும்.

ஏன் நான் ?
தவறிழைத்தவள் அவள்.
விழுந்து கொண்டிருந்த
அருவியை
நிறுத்தி வைத்தவள் அவள்.
அவளே செய்யட்டும்.

ஒரு முறையேனும்
கடல், நதிக்காய்
கரை தாண்டி வரட்டும்.

நீ கடலா ?
நான் நதியென்றால்
நீ அதில் பாதி தானே ?
கடலெனும் கர்வம் கொள்கிறாயா ?

சிந்தனைகளோடு
பாலா
பேருந்தில் ஏறி
புறப்பட்டான்.

அதே நேரம்,
அவசர அலுவலில்
பிழியப்பட்ட பிரியா
பஸ் விட்டு இறங்கி
பூங்காவினுள் விரைந்தாள்

சேவியர்

(தொடரும்)

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

கோபால்


2

ஆற்றலும், அறிவும்,
அழகுடன் கலந்து
இளமைப் பாத்திரத்தில்
இட்டு நிரப்புங்கள்
கிடைப்பது பாலா !

இருபதின் இளைஞன்,
இதய வேர்களில்
இனிமை நிறைத்து
விழிகளில் புன்னகையை
மலர்களாய் மலர விட்டவன் !

அலுவல் தேசத்தின்
முதல்வனாகும்
கனவை மெய்ப்பிக்க
காலங்கள் அறியாது
உழைப்பை நிறைப்பவன் !

பின்னாளில்
பிரியமாகிப் போனவளின்
அறிமுகம் கிடைத்ததும்
அலுவல் நிமித்தமே !
கண்ட போதினில் பாலா
விழி கண்டான் விழியே கண்டான்,
மொழியுரைக்கும் வழியும் கண்டான்

மனம் முழுதும்
அலுவல் புலமை
ஆக்கிரமித்ததால்,
காதல் விதைகள்
துவெப்படாத
காலங்களாய்த்தான்
கழிந்தது வாழ்க்கை !

அழகின் தோற்றமும்
அலுவல் ஆர்வமும்
எதிலும் முதலாய்
இருப்பதில் விருப்பமும்
மென்மையும், இனிமையும்,
கொண்டவனைக்
கொண்டாடி
மனதின் மூலையில்
முடிச்சிட்டாள் பிரியா !

சொல்லிவிட்டு
வருவதற்கு காதல்
விருந்தாளியல்ல !

அமைதிப் புயலாய்
ஆழ் மனத்தில்
இருக்கையிட்டிருந்த காதல்
ஈர்ப்பு விசையாய் மாறி
உள்ளத்தைக் கவர்ந்திழுத்து
சீறிப் பாய்ந்தது எப்போது ?
கேட்டுப் பாருங்கள்
காதலர் சிரிப்பர்
காதலும் சிரிக்கும் !

இணையம் வழியே கூட
இதயங்களை
இணைக்கும் காதல்
முகம் காண்பவரிடம்
முக்காடிட்டு இருக்குமா !

பிரியாவின்
விழிகளின் வழியே
வழிந்த காதலை
பாலா
இதயம் முழுவதும்
நிரப்பிக் கொண்டான் !

இனிது ! இனிது !
வாழ்வு இனிது !
வாழ்வினில் காதல்
வாழ்வினும் இனிது!
கவிதையாய் இனித்தது
காதல்.

காதல் சுமந்த பின்
இருவருக்கும்
காலம்
கனவுகளாய்,
காத்திருத்தல்களாய்,
சந்திப்புகளாய்,
கோபங்களாய்,
சமாதானங்களாய்
காதல் வளர்த்துக்
கணங்களாய் மறைந்தது !

(தொடரும்)

Series Navigation

கோபால்

கோபால்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (தொடர்கவிதை -1)

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

சேவியர்


1

சாலை நெடுகிலும்
இதய வடிவ பலுனெ¢கள்
இறைந்து கிடக்கின்றன.
வற்றிப் போகாத வண்ணங்களுடன்.

சாலை ஓரங்களில்
ஒற்றைக்காலுனெ¢றி நிற்கும்
மின்கம்பங்களின் இடுப்பிலும்,
சுவரொட்டிச் சாயம் பூசிய
சுவர்களின் முகத்திலும்
காதல் வாசனைக் காகிதங்கள்.

பூக்கள் அழகா
நாங்கள் அழகா
என்று
விரலிடுக்கில் சிவப்பு ரோஜாக்களும்,
கண்களுக்குள்
காதல் வேர்களும் வளர்த்து,
புன்னகையில் இதயங்களை
பறித்துச் செல்லும்
பூக்களின் மனித வடிவங்களாய்
அழகிய பெண்கள் வழியெங்கும்.

வண்டுக் கண்களின்
வாசகசாலையாகிக் கிடக்கிறது
வாழ்த்து அட்டைகள்
கடைகளின் உடைகளாய்.

பூமிக்கு திடாரென்று
பசுமைப் புயல் கரை கடந்ததா ?

எங்கெங்கு காணினும்
ஜோடிப் புறாக்களின்
சிறகு கோர்த்த சிலிர்ப்புப் பயணம்.

இன்று,
காதலர் தினம்.

மரங்களின் தலைகளுக்கு
சிட்டுக்கள் வந்து
பூச்சூட்டும் காலம்.
சிட்டுக்களைத் தேடி
மரங்கள் மாநாடு நடத்தும் மாதம்.

கடல் நீர் அருவிக்கு வந்து
முகம் கழுவிச் செல்லும்
கற்பனைக் காலம்.

நகரின் வீதிகளிலெல்லாம்
இன்று மட்டும்
காற்றின் மீது காதல் கலந்ததாய்
ஒரு
மல்லிகை வாசனை.

பேருந்து நிறுத்தங்களெல்லாம்
காதலர் நிறுத்தங்களாக,

ஒரு நாளுக்கு மட்டும்
விடுதலையான ஆயுள் கைதியாய்
அனைவர் முகத்திலும்
கிளர்ச்சிக் கதிர்கள்.

அந்த திரையரங்கும்
வழக்கத்தை விட விரைவாய்
இருக்கை விற்று காத்திருந்தது.

எங்கும்,
விரல் கடித்தும்,
ஐஸ்கிரீம் கடித்தும் நிற்கும்
காதல் பூக்களின்
அவசரக் கூட்டங்கள்.

அந்த அரங்கின் வாசலில்,
காதலனின் கண்களைக் கட்டி
கூட்டத்தில்
காதலியை கண்டுபிடிக்கும்
பருவப் போட்டி வேறு.

தன் குஞ்சின் குரலறியும்
தாய்க்குயிலின் லாவகம்,
காதலர்
காதுகளில்.
வேடிக்கை பார்ப்பவர்க்கோ
அது
வியப்பின் விஸ்வரூபம்.

எந்த மேகம் தன் சொந்த மேகம்
என்று
மழைக்கு வேண்டுமானால்
தெரியாமல் இருக்கலாம்,
எந்த தேகம் சரி பாதியான
அந்த தேகமென்று
ஆடவனின்
அகக் கண்கள் கூட அறியுமே.

காதலர் கும்மாளங்கள்
உற்சாகமாய் புரளுமிடத்தில்,
நகம் கடித்து
கருவிழிகள் கண்ணின்
இரு துருவம் ஓட ஓட
காத்திருக்கிறாள் பிரியா.

அழகு பிரியப்படும்
அழகுக்குச் சொந்தக்காரி.
சுடிதாருக்குள் சொருகப்பட்ட
ஓர்
பருவத் தோட்டம்.

அவள்
அழகென்று யாரும்
வாய் வழியே சொன்னதில்லை,

விழி கண்டார் விழியே கண்டார்,
பின் எப்படி
மொழியுரைக்கும் வழி காண்பார் ?

அவள் அத்தனை அழகு.

அந்த பச்சைக்கிளி
பாலாவின் உள்ளத்தில்
பார்வையாலேயே
பதுங்கு குழி பறித்து
கூடு கட்டிக் குடியிருக்கிறது.

பாலா எங்கே ?
அலுவலகத்தின்
அவசரம் முடிந்ததும்
திரையரங்கு வருவேன் என்றான்.

காத்திருப்பது சுகமென்பது
கவிதையில் மட்டும் தானா ?
புலனடக்கும் இந்தக் காத்திருப்பு
கர்ணனின் கவசமாய் கனக்கிறதே.
அவள் மனது பேசியது.

அவன் அருகில் இருந்திருந்தால்
பூமிக்கு வெளியே சென்று
காதலை
ரசிக்கலாம்.

தனிமையில் இருக்கும்
என் பூமி மட்டும்
மூச்சிரைப்பதால் மெதுவாய்
நடக்கிறதா ?
நேரம் கூட நகரவில்லையே.

ஒருவேளை
உள்ளுக்குள் ஒளிந்திருந்து
கண்ணாமூச்சி ஆடுகிறானா ?

சட்டென்று கண்பொத்தி
தலை திருப்பிச் சிரித்து
திடுக்கிட வைப்பது
திருட்டுப் பயலுக்கு
விருப்பமான விளையாட்டாச்சே.

முன்பு ஒருமுறை,
அலைகள் சிரிக்கும் கரையில்
என் காத்திருப்பின்
பட படப்பை
படகுக்குப் பின்னிருந்து
படம் பிடித்து மகிழ்ந்தவனாச்சே.

நினைவுகள் அவளை
சிரிக்க வைத்தன.

ஒரு,
தொலைபேசிக் காதால்
தொட்டுப் பார்ப்போமா ?
என்று யோசித்தவளுக்கு
தொலைபேசி
தொலைவில் கூட தென்படவில்லை.

யோசனையில் மண்டியிட்டு
நினைவு பொறுக்கிக்
கொண்டிருந்தவளுக்குள்
மலையாய் விழுந்தது அந்தச் சத்தம்.

எங்கும் புகை,
பரபரப்புக்கிடையில் கால்கள்
எங்கெங்கோ ஓடுகின்றன.

திரையரங்கு வாசலில்
வெடிகுண்டு வெடித்திருக்கிறது.
திட்டமிட்ட தீவிரவாத்தின்
திமிர் செயல்.
யாரோ பேசுகிறார்கள்.

ஆங்காங்கே அலறல்கள்,
திரையரங்கு வாசலில்
நசுக்கப்பட்ட பூக்களும்
குருதி தோய்ந்த அட்டைகளுமாம்.

எப்படித்தான்
தீவிரவாதிகளின் இதயம்
தீர்மானமெடுக்கிறதோ ?

தங்கமீன்களின் தலைகளை
வெட்டி
சந்தைக்கு அனுப்பி வைக்க,
பட்டாம்பூச்சி இறகுகளில்
பட்டாக்கத்தி வைக்க.

யாரைத்தான்
தீவிரவாதிகள் தீர்ப்பிடுகிறார்களோ ?

கலவரக் கண்களுடனிருந்த
கூட்டம்
பிரியாவை
வாசலிலிருந்து
சாலைக்குள் துரத்தியது.

அருகில் எங்கேனும்
வெடிகுண்டுகள் இருக்கலாம்,
இன்னும் அவை
வெடித்துச் சிதறலாம்,
பரபரப்புக் குரல்களின் பயத்தில்…

பிரியா
எதிரே வந்த ஆட்டோவில்
அனிச்சைச் செயலால்
ஏற்றப்பட்டாள்.

இனியும் வெடிக்குமா,
வீடு போய் சேரும் வரை
ஆபத்து இல்லாதிருக்குமா ?

பிரியாவின் சிந்தனைகளையும்
ஏற்றிக் கொண்டு
ஆட்டோ விரைந்தது.

வீட்டை நெருங்கியபோது
பிரியா வுக்குள்
அந்த எண்ணம்
எரிகல்லாய் விழுந்தது …

பாலா எங்கே ?

எனக்கு முன்னால்
அரங்கில் எங்கேனும் காத்திருந்தானோ ?
விபத்துப் பகுதியில்
விழுந்திருப்பானோ ?

எப்படி மறந்தேன்,
நான் மட்டும் இங்கே பறந்தேன்.
என்
பாலா எங்கே ?

****

அடுத்த வாரம் இதே தொடர்கவிதையைத் தொடர்பவர் – கோபால்
***

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்