நேசகுமார்
இஸ்லாத்துடன் நான் பயணித்த இந்த வருடங்களில் சிற்சில சமயங்களில் வித்தியாசமான அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு. வேப்பமர உச்சியிலே பூதமொன்றிருக்குது என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நிலையில், எப்போதோ ஒரு மின்சாரமற்ற நள்ளிரவில் அசையும் வேப்பமரம் நம் மனதை இப்போதும் அசைத்துப் பார்ப்பதுண்டு அல்லவா, அதைப் போன்ற சிற்சில சம்பவங்கள் என் வாழ்விலும் நிகழ்ந்ததுண்டு.
***
சிறு வயதில் எனக்கு அடிக்கடி உடல்நோவும், உபாதைகளும் வந்து கொண்டிருக்கும் ….. சிறு வயது என்ன, இப்போதும் பெரும் மாற்றமில்லை. அப்போது சிறியவனாக இருந்த நான் இப்போது வளர்ந்துவிட்டிருப்பதைப் போலவே நோய்நொடிகளும் வளர்ந்துவிட்டன. இன்று இவை வாழ்க்கை முறை நோய்களென பெயர் பெற்றிருக்கின்றன(Life Style Diseases). அப்போதும் அவை வாழ்க்கை முறை நோய்கள் தான், ஆனால் அதை அறிந்திருக்கவில்லை என்னை சுற்றியிருந்தவர்கள்.
அப்போது ஊரின் ஓரமாய் ஒரு தர்காஹ்வுக்கு கூட்டிச் சென்றார்கள். மிகவும் அழகான சிறிய தர்காஹ் அது. வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் கொண்டு வந்து பரிசளித்த பெரும் கண்ணாடிக் குடுவை விளக்குகள், கீழ்த்திசை நாடுகளில் இருந்து வந்த டைல்ஸ் (tiles) ஒட்டப்பட்டு அழகாக, சுத்தமாக பராமரிக்கப்பட்ட தர்காஹ் அது. தர்காவை ஒட்டி இஸ்லாமியர்கள் பெருவாரியாக இருக்கும் பகுதியும் இருந்தது. அழகிய வீடுகள், கலர் கலராய். அழகிய பெண்கள், அமைதியான தெருக்கள் என்று எனக்கு மிகவும் பிடித்த பகுதி அது. இத்தனையாண்டுகள் கழித்தும் ஊருக்குப் போகும்போது இரவு வேளைகளில் உணவருந்திவிட்டு நடக்கும்போது அப்பகுதிகளுக்குப் போகிறேன், பழைய நாட்களை மனதில் அசைபோட்டவாறு.
அந்த தர்காவுக்கு என்னை அழைத்துப் போய் மந்தரித்து போட்ட கருப்புக் கயிறு நெடுநாள் என்னிடமிருந்தது. எங்கள் வீட்டுக் குலதெய்வத்திற்கு கருப்பு பிடிக்காது என்ற நம்பிக்கை எங்கள் வீட்டில் இருந்தாலும், அந்த கயிறு மட்டும் ஏனோ யார் கண்ணையும் உறுத்தவில்லை.
***
இஸ்லாமிய விமர்சனத்தை நான் மேற்கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் அடுத்தடுத்து என் வாழ்வில் சில துயர சம்பவங்கள் நிகழ்ந்தன. பெரும் மன உளைச்சலும், வருத்தமும் மனதை அப்பிய நாட்கள். அதற்கிடையே என் எழுத்துக்களை விடாது தொடர்ந்து கொண்டிருந்தேன். ஏன் எழுதினேன் என்று தெரியாது. ஒரு வேண்டுகோளை நாகூர் ரூமிக்கு வைக்கப்போய், அதைத் தொடர்ந்து சுழலாக வாதம்-பிரதிவாதம் என்று எனது எழுத்துக்கள் தொடர்ந்தன. இன்றும் கூட நான் சுயமாய், எவருக்கும் எதிர்வினை செய்யாமல், பதிலளிக்காமல் எழுதியது குறைவே. இவற்றை நான் எழுதினேன் என்பதைவிட என் ஈகோ எழுதியது என்று சொல்ல வேண்டும். ஏனெனில், தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் – வசவுகள் – எச்சரிக்கைகள் வந்தவண்ணம் இருந்த நாட்கள் அவை. ஒவ்வொரு முறை இது போன்று வரும்போதும் மனதில் உத்வேகம் பிறக்கும், இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று. நண்பர்கள் என்னிடம் நான் வஹி வந்தது போன்று எழுதிக்கொண்டிருப்பதாக புன்சிரிப்போடு கூறினார்கள். என் வீட்டாரோ இதை மிகுந்த திகிலோடு எதிர்கொண்டார்கள். வேண்டாத வேலை, நமக்கெதற்கு வம்பு, பெரிய இயக்கங்கள் கூட அமைதி காக்கிறார்களே என்று தினந்தோறும் பல்வேறு திசைகளில் இருந்தும் அறிவுரை மழைகள் பொழிந்து கொண்டிருந்தன. இன்னொரு புறமோ தனிப்பட்ட உடல்நலக் குறைகள், பிரச்சினைகள் என்றிருந்தன.
சிறு வயதிலிருந்து மதங்களைத் தாண்டிய, அனைத்து மதங்களிலும் வணங்கப்படும் கடவுள்கள் பற்றிய மரியாதை, கற்பனை, எதிர்பார்ப்பு ஆகியவற்றை ஊட்டி வளர்க்கப்படும் எந்த இந்துவையும் போலவே எனக்கும் போதிக்கப்பட்ட நிலையில், இந்த அனுபவங்கள் – கனவுகள் – மன அழுத்தங்களின் விளைவாக, ஒரு கட்டத்தில் எனக்கும் மனதில் இஸ்லாமியக் கடவுள் பற்றிய பயமேற்பட்டது. நண்பரும் சித்தபுருஷருமான ஒருவரை சந்தித்தேன். இத்தனை கோடி இஸ்லாமியர்கள் வணங்குகின்ற ஒன்றை நம்பிக்கைகளை புறந்தள்ளி ஆராய முற்படுவதும், விமர்சிப்பதும் எனக்கு இப்படியான நிகழ்வுகளைக் கொண்டு வருகின்றதா என்று ஐயத்துடனும், சஞ்சலத்துடனும் கேட்டேன்.
மனதின் ஆழத்திலிருக்கும் அமைதியில் ஆழ்ந்திருந்த நிலையில் அவர் மிகவும் அமைதியாக எனக்கு அறிவுரை சொன்னார்: “இப்படியான விமர்சனங்கள் ஒரு சக்தியை எனக்கெதிராகத் திருப்புமென்றால், தொடர்ந்து இதைவிட கோரமான செயல்களை மற்ற கடவுள்களின் மீது, ஆன்மீக அமைப்புகளின் மீது கட்டவிழ்த்துவிடும் மூர்க்கத்தனம் கொண்ட குழுமத்திற்கெதிராக எல்லா சக்திகளும் திரும்பும். ஆனால், வாழ்க்கையின் ஓட்டம் அப்படி இருப்பதில்லை. இது போன்ற எதிரும் புதிருமான சக்திகள் வாழ்க்கையின் இயல்போடு சம்பந்தப்பட்டவை. தொடர்ந்து எதோ ஒரு வகையில் ஒன்றையொன்று அழித்தும், அதன் மீது முற்றிலும் மாறுபட்ட வீரியமிக்க ஒரு கோட்பாட்டை, அக்கோட்பாட்டைக் கொண்ட ஒரு சமுதாயத்தை ஏற்படுத்திக் கொண்டும்தான் இயற்கை இருக்கிறது. ஆதலால் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம். அப்படி செயல்படும் சக்திகள், உமது நோக்கம் பொதுநலம் என்றால் இச்செயல்பாடுகளின் பலனாக உம்மை இச்சுழலில் இருந்து விடுபடும் நிலைக்கு கொண்டு செல்லும்”.
***
அச்சித்தரின் வாக்கா அல்லது அந்த நம்பிக்கை ஏற்படுத்திய விளைவா என்று தெரியவில்லை அதன் பின் எனக்கு கிடுகிடுவென்று முற்றிலும் எதிர்த்திசையில், ஆக்கபூர்வமான மாற்றங்களாக மாறிவிட்டன. இந்த சில ஆண்டுகள் எனது முன்னேற்றத்தை துரிதப்படுத்தி வாழ்வின் எல்லா முகங்களிலும் (in different facets of my life) என்னை மேன்மேலும் முன்னேற்றியுள்ளன.
இப்போது திரும்பிப் பார்க்கையில், கடவுள் – அமானுஷ்ய சக்திகள் எதுவும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டுவதில்லை இதெல்லாம் நமது மனதின் செயல்பாடு என்றே தோன்றுகிறது. கடவுள், பேய், பிசாசு, அமானுஷ்ய சக்தி, ஜின் என்றெல்லாம் நாம் நம்பி சோர்ந்தும் போகலாம், உயரவும் செய்யலாம். நமது நம்பிக்கைகள் மனதின் அடியாழத்திற்கு சென்று நம்மை முன்னேறவோ, பின்னடையவோ செய்கின்றன என்ற முடிவுக்கே நான் வந்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ஒரு நபி, அவதாரம், ரிஷி, மகான் தோன்றி ஒரு கூட்டத்திற்கு வழிகாட்டும்போது அக்கூட்டம் பெரும் வெற்றியடைவதையும், விரிந்து பரவுவதையும் சரித்திரத்தில் காணமுடிவது இதனால் தான். இந்திய வரலாறே ரிஷிகளின் தோற்றத்தில் தான் உருவானவை. இந்தியாவின் முதல் க்ஷத்திரிய குலம் என்று வரலாற்றில் காணப்படும் குருவம்சம் இப்படியே உண்டானது. ஒவ்வொரு முறையும் இவர்களின் நம்பிக்கையாளர்கள் தோன்றி ஒரு ராஜ்ஜியத்தை, சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தியதை புராணங்களில், நாட்டார் கதைகளில், வரலாற்றில் காணமுடிகிறது. இதற்கெல்லாம் பின்னே கடவுளின் கரம் இல்லை. மனிதர்களின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையின் விளைவாக ஏற்படும் முனைப்பு, அந்த முனைப்பின் காரணமாக வெளிப்படும் அசாத்திய உழைப்பு, முயற்சி இருக்கிறது.
நம்பிக்கையாளர்கள் சுவனத்தாலோ, வீடு பேறாலோ, கடவுளின் திருவடியாலோ, நற்செயல்களை தாம் செய்கிறோம் என்ற எண்ணத்தினாலோ பெரும் முனைப்பை அடைகிறார்கள். மனதின் அத்தனை சக்திகளும் தூண்டப்பட்டு ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். அப்படி தூண்டப்படும் ஆழ்மனதின் சக்திகள் அந்த நோக்கத்திற்கு மட்டும் உதவுவதில்லை, எவ்விஷயத்தில் கவனத்தை செலுத்தினாலும் பலன்களை கொண்டு வருகின்றன.
***
இந்த ஆய்வுகளின் காரணமாக வாழ்வே இஸ்லாமாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எனது குடும்பத்தாரிடமிருந்து, நண்பர்களிடமிருந்து, இணைய நண்பர்களிடமிருந்து உண்டு.
ஆன்மீகப்பாதையில் இந்திய மரபில் ‘ஏகாக்கிர சிந்தனை’ என்ற ஒரு நிலை உண்டு. ஒரு கடவுளின் மீது அல்லது தத்துவத்தின் மீது அல்லது கர்மயோகம் போன்ற மரபுகளில் செயல்களின் மீது பிடிப்பு ஏற்படும் நிலையில் மனதின் எல்லா தளங்களையும் ஒரே விஷயம் ஆக்கிரமித்து, மனமே அதாகும். பின்பு அந்த ஒன்றும் அழிந்துபோய் அதனூடே அந்த மனமும் இல்லாது போகும். இது மனதிற்கு அப்பால் நமது சுயமாக விளங்கும் நிலையை (கடவுள் என்ற பெயரும் இந்நிலைக்கு உண்டு) நமது இயல்பாக ஆக்கும்.
கிட்டத்தட்ட இந்த ஏகாக்கிர நிலைக்கு என் மனம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். கனவுகளிலும், சிந்தனைகளிலும், பேச்சிலும், தினசரி அல்லது நூலை படிப்பதிலும், இணைய உலாவல்களிலும் இஸ்லாமே முழுமையாய் மனதை ஆக்கிரமித்துவிட்டது இந்த ஐந்தாண்டுகளில். இது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை, அது நல்ல நோக்கம் என்ற எண்ணத்தால் பெருமிதத்தை, சுயமரியாதையை அளித்துள்ளது. நான் முன்பு செய்துவந்த தியானம் மற்றபிற ஆன்மீக முயற்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட்டேன், முயற்சி செய்து அல்ல என்னையறியாமலேயே நிகழ்ந்துவிட்டது இது. சித்தபுருஷரிடம் கேட்டபோது, இதுவே ஆன்மீகம் என்றார். இதையெல்லாம் எழுதும்போது நான் ஒரு பெரும் ஆன்மீகவாதியாக ஆகிவிட்டதாக கருதுவதாகவோ சொல்லுவதாகவோ எண்ணிவிட வேண்டாம். இன்றும் பக்கத்து சீட்டு பாவையால் சலனமடைபவனாக (நன்றி : இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான பட்டுக்கோட்டை பிரபாகர் – தற்போது பகோபி காவி தரிக்காத சந்நியாசியாகிவிட்டார் என்று அறிகிறேன்), அடுத்தாத்து அம்புஜங்களைப் பற்றிய சுவனக்கனவுகளில் அலைபவனாக, வக்கிரமும், துர்க்குணங்களும் நிரம்பியவனாகத்தான் இருக்கின்றேன். ஆனால், ஒவ்வொரு தருணமும் இஸ்லாமிய ஒப்பிடல் தோன்றிமறைகிறது உள்ளத்துள்ளே. அதனால் தான் முன்பு எழுதியிருந்தேன் வாழ்வே இஸ்லாத்தின் பல படிநிலைகளாகவே தோன்றுகிறது என்று. எனது எல்லா குறைகளையும் மீறி வாழ்வில் நிறைவைத்தரும் எதாவது ஒரு விஷயமுண்டென்றால் அது இந்த இஸ்லாமிய விமர்சனங்கள் என்றே தோன்றுகிறது.
***
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அது வீரியம் கொண்டிருந்ததற்கும் கிடுகிடுவென விரிந்து பரவியதற்கும் மேலே கண்டது மட்டும் முழுக்காரணமல்ல. மற்ற சமூகங்கள் புரிந்து சுதாரிக்குமுன்னரே பெரும் தாக்குதல்களுக்கு உள்ளாயின. புரிந்து, சுதாரித்து எழுந்து நிற்க முயன்றவர்களிடம் இந்த பரவல் நின்றுவிட்டது. ஸ்பெயின் போன்ற பிரதேசங்களில் திரும்பியும் சென்றது.
அல்குவைதாவின் பிரசங்கங்களில் மீண்டும் மீண்டும் ஆண்டலூசியா (இன்றைய ஸ்பெயினில் ஒரு பகுதி) குறிப்பிடப்படுவதைக் காணலாம். ஆண்டலூசியாவிலிருந்து இந்தியாவரை இழந்த பிரதேசங்களாக இஸ்லாமிஸ்டுகள் கருதி அதை மீட்டெடுக்க பழைய காலத்திற்கு திரும்பிச் சென்று அன்றிருந்த அதே நம்பிக்கையை தமக்குள் நிலை நிறுத்தி ஜிஹாத் புரிந்து மீட்கவேண்டும் என்று கருதுகின்றனர். இஸ்லாமிய நிலப்பரப்பு சுருங்கியதற்கு காரணம் அல்லாஹ் கடவுளின் கட்டளைகளை இன்றைய சமுதாயம் முழுமையாக பின்பற்றாததுதான் என்கின்றனர் அல்குவைதா, தாலிபான், லஷ்கரே தொய்பா மற்றும் தெருவுக்கு தெரு தோன்றியுள்ள ஏகத்துவ – தாவா மையங்கள்.
ஆனால், இன்று புற சமூகங்கள் விழித்துக் கொண்டுவிட்டன. இஸ்லாமிய பிரச்சாரங்கள், திட்டமிடல்கள் பற்றிய விழிப்புணர்வு எங்கும் பரவிவிட்டது. காஷ்மீர் இந்தியாவிற்குள் தாம் ஏற்படுத்தப்போகும் ஷரீயத்து ராஜ்ஜியத்தின் நுழைவு வாயில்தான் என்று லஷ்கரே தொய்பா பேசுவதை சின்னாளப்பட்டியில் தினமலர் படிப்பவர் உணரமுடிகிறது. பெஸ்லனில் நடப்பவை தெருமுனை இணைய உலாவகத்தில் தெரிகின்றது.
இன்றைய உலகமும் ஒரு நம்பிக்கையாளர்களின் உலகம் தான். இந்த நம்பிக்கைகள் மனித உரிமை, சமத்துவம், சுதந்திரம், பெண்ணுரிமை, மதமாச்சர்யங்கள் கடந்த நீதிமுறைகள் ஆகியவற்றின் மீது கட்டப்பட்டிருக்கின்றன. அன்றைய நம்பிக்கையாளர்களின் உத்வேகம் இன்றைய நவீன இளைஞர்களுக்கும் இருக்கின்றது.அதனாலேயே இன்று இந்த நம்பிக்கையாளர்களின் நிலப்பரப்பு விரிந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து இஸ்லாமிய நிலப்பரப்பு சுருங்கிவருவதற்கும் இதுவே காரணம். இஸ்லாமிய சமுதாயம் மேன்மையும், உன்னதமும் அடைய ஒரே வழி இந்த நாகரிக உலகின் நம்பிக்கைகளை (மனித உரிமை, சமத்துவம், சுதந்திரம், பெண்ணுரிமை, மதமாச்சர்யங்கள் கடந்த நீதிமுறைகள் இன்னபிற) ஏற்பதுதான்.
சச்சார் கமிட்டிகள் சொல்ல மறுக்கும் உண்மை இது. இஸ்லாமிய சமூகத்தின் மீது உண்மையிலேயே நல்லெண்ணம் கொண்ட இயக்கங்களும், தனிமனிதர்களும் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய சமூகத்தின் பிற்போக்கு வாதத்தை, அடிப்படைவாதிகளை ஆதரித்து அச்சமுதாயத்தை பின்னுக்கு கொண்டு செல்வதையே அவர்களின் பால் அக்கறைகொண்டவர்கள் போல பாவனை செய்யும் அரசியல் இயக்கங்களும், அறிவுஜீவிகளும், மதச்சார்பின்மை வாதிகளும் செய்கின்றனர்.
இவர்கள் செய்ய மறுப்பதை நான் சிறிதாவது செய்கிறேன் என்ற ஆத்ம சந்தோஷம் எனக்கும் எனது நண்பர்களுக்கும் இருக்கிறது. பலவித கவனக்கவர்தல்களுக்கிடையே எமது நேரத்தை, எமது சக்தியை, எமது சிந்தனையை, எமது வளங்களை இப்பணிக்கென்று செலவிட்டது வாழ்க்கையை நிறைவுள்ளதாக ஆக்கியுள்ளது என்றே நினைக்கின்றேன். இந்த வாய்ப்பை நல்கியதற்காகவாவது நான் இந்த இஸ்லாமிய ஆய்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
– நேசகுமார்
- ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9
- அச்சமுண்டு அச்சமுண்டு- அமெரிக்காவில் வெள்ளித்திரையில்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பால்வீதி காலாக்ஸியின் அமைப்பும் உறுப்புகளும் (கட்டுரை: 60 பாகம் -2)
- இருளைக் கடப்பதுதான் தைரியமா?
- துயரம் ஒரு வரைபடம்
- ” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”
- ‘இலக்கிய உரையாடல்கள்’ – ஒரு அறிமுகம்.
- கடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- திரைவிமர்சனம்- மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.
- அறுபடும் மரணங்கள்….
- யுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?
- அக்னிக்கூத்து – நாடக அறிமுகம்
- Dear Editor,
- தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி
- நிர்வாண நடனம்
- அறிதல்..
- மூன்று கவிதைகள்
- பாலாவை இழந்த கணங்களில்…
- நண்டு சொன்ன `பெரியவங்க` கதை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- கருணை கொலை
- சுழற்பந்து
- அநாகரிகமான விவகாரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- நினைவுகளின் தடத்தில் – (33)
- ஓரினசேர்க்கை
- தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்
- அத்துமீறல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை
- வேத வனம் விருட்சம் – 41
- யாருக்கும் பொதுவான
- கவிதைகள்
- மூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்
- அறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்