‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!

This entry is part of 32 in the series 20060210_Issue

வ.ந.கிரிதரன்


அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!

கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்களின் கருத்துப்படி யாபாபட்டுன எனக் கூறுவது நல்லூரையே. ‘…யாழ்ப்பாணப் பட்டினம் (சிங்கள நூல்கள் யாபாபட்டுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது எனலாம் ‘. ( ‘யாழ்ப்பாண இராச்சியம் ‘, கலாநிதி சி.க.சிற்றம்பலம்; ஈழமுரசு 25-06-1994). மேலும் சுவாமி ஞானப்பிரகாசர், எஸ்.டபிள்யு.குமாரசுவாமி போன்றவர்களின் கருத்துப்படியும் சிங்களவர் நல்லூருக்கு வைத்த ‘யாப்பநே ‘, ‘யாப்பா பட்டுநேயே ‘ பின்னர் யாழ்ப்பாணமாக மருவியதென்பதையறியலாம்.

‘..வண. ஞானப்பிரகாச சுவாமியவர்களும் இடப்பெயர் ஆசிரியராகிய திரு.எஸ்.டபிள்யு.குமாரசுவாமியவர்களும் யாழ்ப்பாடியின் கதை புனைந்துரையெனவும் இது போன்ற கதைகள் வையாபாடலிலும், தஷிண கைலாய புராணத்திலும் மலிந்து கிடக்கின்றனவெனக் கூறியதோடு, அந்தகக் கவி வீரராகவன் உண்மைச் சரிதையை யாழ்ப்பாடி தலையில் வைபவமாலைக்காரர் கட்டி வைத்தாரெனவும், அப்படியொருவன் இருக்கவுமில்லை, யாழ்ப்பாணம் பரிசிலாக ஒருவருக்குக் கொடுக்கப்படவில்லையெனவும், சிங்களவர் நல்லூருக்கு வைத்த ‘யாப்பநே ‘, ‘யாப்பா பட்டுநே ‘யென்னும் பெயரே பிற்காலத்தில் யாழ்ப்பாணமென மருவியதெனவும், யாழ்ப்பாணன் கதையை எமது புலவர்கள் உருவகப்படுத்தி வைத்தார்களெனவுங் கூறுவர்.. ‘( ‘யாழ்ப்பாணச் சரித்திரம் ‘, செ.இராசநாயகம்; பக்கம் 253).

முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா போன்றவர்களின் கருத்துகள் மேலுள்ள கருத்துக்கு முற்றுமெதிரானது. யாழ்ப்பாணப்பட்டினம் என்ற தமிழ்ப் பெயரின் சிங்களத் திரிபே ‘யாப்பாபட்டுநே ‘ என்பதே இவர்களது கருத்து.

‘…சிங்களப் புலவரொருவர் தங்காலையில் எழுதி வைத்த நூலில் கண்ட ‘யாப்பாபட்டுநே ‘யென்னும் பெயரை யாழ்ப்பாணவாசிகள் எவ்விதமாயறிந்தமைத்துக் கொண்டனரென்பது ஆச்சரியம். ‘யாப்பாபட்டுநே ‘க்கும், நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும் முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்கவேண்டிய அவசியமில்லை. நல்லூரென முற்காலத்தில் தமிழர் சிங்கள நாட்டிலிட்டு வழங்கிய ஊர்ப்பெயர்களை இன்றும் அவ்வண்ணமே நல்லூரென அழைக்குஞ் சிங்களவர், யாழ்ப்பாணத்திலிருக்கும் நல்லூரென்னும் பெயரைச் சிங்களமாக மாற்றி வைத்தாரென்பது விந்தையே. யாழ்ப்பாணத்திலுள்ள சிங்களப் பெயருடைய ஊர்களையுங் காணிகளையுந் தமிழர் தமிழ்ப் பெயராக்காது விட்டது அதினும் விந்தையே. இனிப் ‘பட்டுந ‘ என்பது சிங்கள மொழியா ? பட்டினமென்னுந் தமிழ் மொழியின் சிதைவென்பதைப் பள்ளிச் சிறுவருமறிவாரே. ஆகையால் யாழ்ப்பாணப் பட்டினம் என்னுந் தமிழ்ப் பெயரையே ‘யாப்பாபட்டுநே ‘யென்ச் சிங்களவர் சிதைத்து வழங்கினர் என்பது தெளிவாகும்.. ‘ (யாழ்ப்பாணச்சரித்திரம் ‘-முதலியார்.செ.இராசநாயகம்; பக்கம் 254).

இப்பிரச்சினைபற்றிய கலாநிதி க.செ.நடராசாவின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இவர் இது பற்றி நல்லதொரு விளக்கத்தைத் தந்துள்ளார்.

‘….சிங்களப் பெயராகக் கருதப்பட்ட ‘யாப்பாபட்டுன ‘ என்பது ‘யாபா ‘ என்ற பதமும், ‘பட்டுன ‘ என்ற பதமும் இணைந்த சொற்கூட்டாகும். ‘பட்டுன ‘வென்பது தமிழிலே பட்டினம் என்று வழங்கும் துறைமுக நகரத்தைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும். அச்சொல் தமிழிலே சங்ககால இலக்கியத் தொகுதிகளுள் ஒன்றான பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்ற பாடலில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்கு முற்பட்ட சிங்களச் சொல் என்று கொள்ள எள்ளளவும் இடமில்லை…

..யாவா என்பது யாபா என மருவி வந்தது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயில்லை. அதனால் யாபா என்பது ஜாவா என்பதன் தமிழ் உருவம் என்று கருதமுடியாது. அன்றியும் அது ஜாவா என்பதன் சிங்கள வடிவமுமன்று. ஏனெனில் சிங்கள இலக்கியங்களில் ஜாவாவை யாபா என்று குறிப்பிடும் வழக்கம் என்றும் இருந்ததில்லை…அதனால் யாழ்ப்பாணப்பட்டினம் என்ற பெயரைக் கொண்டே சிங்களப் பெயரான ‘பாப்பாபட்டுநெ ‘ என்ற பெயர் புனையப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தமான முடிவாகும். ‘ ( ‘யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள் ‘ – கலாநிதி.க.செ.நடராசா; ‘ ‘தமிழோசை ‘ 11-11-1993).

மேற்படி கட்டுரையில் க.செ.நடராசா தந்து முடிவிற்காதாரமாக இன்னுமொரு காரணத்தையும் முன்வைக்கிறார்.

‘..மேலும் ஊர்ப்பெயர்களை மற்றொரு மொழியிற் பெயர்த்து அவ்வூரவர்களால் உபயோகிக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருப்பதில்லை. யாழ்ப்பாணத்து நல்லூரை அதன் சிங்கள மொழி பெயர்ப்பு என்று கருதப்படும் ‘யாபனே ‘ என்ற பதத்தால் வழங்காது ஏன் ‘நல்லூருவ ‘ என்று வழங்கி வழங்கி வருகின்றார்கள் என்பது விளங்கிக் கொள்ள முடியாததாகி விடும்… எனவே ‘யாபனே ‘ என்பது தமிழில் யாழ்ப்பாணம் என்று கூறூம் பெயரின் சிங்களத் திரிபென்றே கொள்ள வேண்டும்… ‘ ( ‘தமிழோசை ‘; 11-11-1993).

மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை (முதலியார் குல.சபாநாதன் பதிப்பித்தது) அந்தகக் கவி வீரராகவனென்னும் யாழ்ப்பாணன் யாழ்பாடிப் பரிசு பெற்றதால் ஏற்பட்ட பெயரே யாழ்ப்பாணம் என எடுத்துச் சொல்லும்.

‘..அக்காலத்திலே சோழ நாட்டிலிருந்து இரண்டு கண்ணுங் குருடனாகிய கவி வீரராகவன் என்னும் யாழ்ப்பாணன் செங்கடக நகரிலிருந்து அரசாட்சி செலுத்தும் வாலசிங்கமகராசன் பேரிற் பிரபந்தம் பாடிக்கொண்டு போய் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் அதைக் கேட்டு மிக்க சந்தோஷம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் இந்நாட்டைக் கொடுத்தான். யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்ற பெயரிட்டு… ‘ ( ‘யாழ்ப்பாண வைபவமாலை ‘; பக்கம் 25).

மயில்வாகனப் புலவர் கூறும் ‘செங்கடகநக ‘ரென்பது சிங்கை நகரைக் குறிக்குமென்பதே முதலியார் இராசநாயகத்தின் கருத்தாகும்.

‘..சிங்கைநகர் என்னும் பெயரை மயில்வாகனப் புலவரோ அவருக்குப் பின் ஏடெழுதியவர் எவரோ, ‘செங்கடகநகர் ‘ என்று வைபவமாலையில் மாற்றி விட்டனர். உக்கிரசிங்கன் காலத்தில் ‘செங்கடகநகர் ‘ என்னும் நகர் கனவிலும் அறியப்படாததொன்று. ‘ ( ‘யாழ்ப்பாணச்சரித்திரம் ‘; பக்கம் 29).

‘..பின்வந்த யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் எழுதப்பட்ட நூல்களிலெல்லாம் அவ்வரசர்கள் சிங்கை நகரிலிருந்து அரசாண்டார்களெனக் கூறியிருப்பதால், உக்கிரசிங்கன் தன்னிராசதானியைச் சிங்கைநகருக்கு மாற்றினானென்று கூறுவதே பொருத்தமுடைத்தாம். சிங்கை நகரே பிற்காலத்தில் ‘செங்கடக நக ‘ரெனத் திரிந்திருக்க வேண்டும் ‘ ( ‘யாழ்ப்பாணச் சரித்திரம் ‘; பக்கம் 235).

‘யாழ்ப்பாண சரித்திரம் ‘ என்ற மற்றுமொரு நூலினைத் தந்த ஆசிரியர் ஆ.முத்துதம்பிப்பிள்ளை என்பவரின் கருத்துப்படி கி.மு.2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏலேலசிங்கனென்ற மன்னன் அந்தகனான யாழ்ப்பாடி என்பவனிற்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமே யாழ்ப்பாணம் என்பதாகும். அதற்காதாரமாக அவர் தனிப்பாடற் திரட்டில் கானப்படும் பின்வரும் பாடலைக் காட்டுவார்:

‘..நரை கோட்டிளங்கன்று

நல்வளநாடு நயந்தளிப்பான்

விரையூட்டு தார்ப்புயன்வெற்

பீழமன்னனெ தேவிரும்பிக்

கரையோட்ட மாக மரக்கலம்

போட்டுனைக் காணவந்தாற்

திரை போட்டிருந்தனை யேலேல

சிங்க சிகாமணியே.. ‘

இப்பாடலின் யாப்பைக் கொண்டு இது கி.பி.3 ஆம் நூற்றண்டிற்குப் பிற்பட்டதென்று க.செ.நடராசா கருதுவார். இலனக்கையின் வடபுறத்துலிருந்து மணற்றிடரினைத் திருத்தி வளமாக்கியவன் விபீடணனிடம் யாழ்வாசிக்குமொருவனே என்பதை வையாபாடல் கூறும். ம.க.அந்தனிசிலும் இதுபற்றி நல்லதொரு கட்டுரையினை வீரகேசரியில் எழுதியுள்ளார். அதில் அவர் மூவகைப் பாணர்களில் ஒருவரான யாழ்ப்பாணர் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணமாயிற்று என்று சொல்வார்.

‘,,தமிழருள் பழைய சாதியினரான பாணர் மூவகையினராவர். அவர்களுள் ஒரு பிரிவினரே யாழ்ப்பாணர் என்பதாம். தமிழரின் பழைய இசைக்கருவிகள் மூன்று. அவை யாழ்,குழல், முழவு என்பன. இவற்றில் யாழ் மீட்டிப் பாடிடும் பாணரே யாழ்ப்பாணர் என்ற பெயரைப் பெற்றனர். காலப்போக்கில் அது சாதிப்பெயராக மாறியது. எனவே யாழ்ப்பாணர் என்பது சாதிப்பெயராகும்….அவ்வாறு தமிழ்ப் பெருங்காப்பியங்களிலும் இலக்கியங்களிலும் சொல்லபப்ட்டிருக்கும் யாழ்ப்பாணர் என்னும் சாதியினரில் ஒரு பகுதியினர் இலங்கைத் தீவின் வடபகுதியில் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது. ‘ ( ‘வீரகேசரி; 9-12-1990).

*1இது பற்றி முதலியார் குலசபாநாதனும் கருத்துத்தெரிவித்துள்ளார்.

‘..யாழ்ப்பாணம் எனும் பெயர் 15-ஆம் நூற்றாண்டுச் சிங்கள நூலிற்றான் முதன் முதற் காணப்படும். 14-ஆம் நூற்றாண்டிறுதியில் இருந்தவராகக் கருதப்படும் அருணகிரிநாதர் ‘யாழ்ப்பாணாயன் பட்டின மருவிய பெருமாளே ‘ எனக் குறிப்பிட்ட இடம் யாழ்ப்பாணத்தையே குறித்ததென்றும், அதனால் யாழ்ப்பாணம் எனும் பெயர் தமிழ்ப் பெயரெனவுங் கொள்வர் ஒரு சாரார். அருணகிரிநாதர் குறித்த இடம் எருக்கத்தம்புரியூர் என்பாருமுளர். எங்னனமாயினும், அருணகிரிநாதர் குறிப்பிட்ட தலம் ஈழநாட்டின் கண்ணதேயென்பது வலியுறின், யாழ்ப்பாணம் எனும் சொல் சிங்களப் பெரடியாகப் பிறந்ததெனுங் கொள்கை வலியிழந்துபடும். ‘ [முதலியார் குலசபாநாதன் பதிப்பித்த ‘யாழ்ப்பாண வைபவமாலை ‘; பக்கம் 24 , அடிக்குறிப்பு.]

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது பின்வரும் முடிவுக்கே வர முடிகிறது. நல்லூர் என்பதன் சிங்கள மொழிபெயர்ப்பான ‘பாப்பாபட்டுநே ‘ என்பதிலிருந்து வந்த பெயரே யாழ்ப்பானம் எனப்திலும் பார்க்க , யாழ்ப்பாணம் என்ற தூய தமிழ் சொல்லின் சிங்களத் திரிபே ‘யாப்பாபட்டுநே ‘ என்பதே பொருத்தமுடையதாகப் படுகின்றது. ‘பாப்பாப் பட்டுநேக்கும் நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும், முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்க வேண்டியதில்லை ‘ என்ற முதலியார் இராசநாயகத்தின் கூற்றே ஏற்கக் கூடியதாகவிருக்கின்றது. மேலும் அவரே பிறிதோரிடத்தில் சுட்டிக் காட்டும் ‘..மேலும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுக்கிடையே இத்துறையில் வந்திறங்கிய மேலைத்தேய முஸ்லீம் பிரயாணிகளும் ‘ஜப்பா ‘, ‘ஸுப்பா ‘வென அத்தொனிப்படவே கூறியிருக்கின்றனர்… ‘( ‘யாழ்ப்பாணச் சரித்திரம் ‘; பக்கம் 255) என்ற கூற்றும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே.

மேலும் கைலாயமாலையில் வரும் பின்வரும் பாடலும் யாழ்ப்பானத்திஅயும் நல்லூரையும் பிரித்துக் கூறுவதும் கவனிக்கத் தக்கது.

‘..மார்ப்பனாம் புவனேகவாகு

நலமிகும் யாழ்ப்பாண நகரி

கட்டுவித்து, நல்லைக்குலவிய

கந்தவேட்குக் கோயிலும்

புரிவித்தானே… ‘

இவற்றிலிருந்து இறுதியாக நாம் வரக் கூடிய முடிவு இதுதான். நல்லூரும் சிங்கை நகரும் இரு வேறு வேறான இராஜதானிகள். இரு வேறான நகரங்கள். ‘யாப்பாப்பட்டுநே ‘யென்பது யாழ்ப்பாணத்தின் சிங்களத் திரிபே. நல்லூரின் சிங்கள மொழிபெயர்ப்பான ‘யாப்பாப்படுனே ‘யினின்றும் யாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்ததென்பது பொருத்தமற்றதாகவே படுகின்றது.

—-

Series Navigation