PS நரேந்திரன்
‘கற்றதும் பெற்றது ‘மில் சுஜாதா, ‘திருவதிகை ‘ கோவிலைப் பற்றி எழுதி இருந்தார். எனக்கு இவ்வளவு அருகில் இருக்கும் இந்தக் கோவிலுக்குப் போகாமல் இருக்கக் கூடாது என்று, ஒருநாள் திருவதிகைப் பக்கம் போயிருந்தேன். கடலூரிலிருந்து நெல்லிக்குப்பம் போகும் வழியில், வெள்ளை கேட்டில் (வெள்ளை பெயிண்ட் அடித்த ரயில்வே Gate, வெள்ளை கேட் என நாமகரணம் சூட்டப் பட்டிருக்கிறது) இடது பக்கம் திரும்பி, கிராமச் சாலையில் ஒரு நான்கு கி.மீ. தூரம் ‘குலுலுலுலுங்கி ‘க் கொண்டே பயணம் செய்தால், திருவதிகை வருகிறது.
‘கெடிலம் ‘ ஆற்றங்கரையில் அமைந்த பழமையான கோவில். அமைதியான சூழ்நிலை. சுவாமி தரிசனம் செய்துவிட்டு, எதிரிலிருக்கும் குன்றில் ஏறிப் பார்த்த போது, சுற்று வட்டாரக் கிராமங்கள் மிகப் பசுமையாக, அழகாகத் தெரிந்தன. வழக்கம் போல மரத்திற்கு மரம் காதலர்கள் கூட்டம். கண்டு கொள்ளாமல் ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து ரசித்துவிட்டு வந்தேன்.
***
இந்தியாவில் இருந்த நேரத்தில் தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடங்கியிருந்தது. அரசாங்கப் பள்ளிகள், அலுவலகங்கள் எல்லாம் மூடிக்கிடந்தன. வேலைகள் எதுவும் நடக்கவில்லை. எனினும், ஆச்சரியப் படத்தக்க வகையில் இந்தப் போராட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து எந்தவிதமான ஆதரவோ, எதிர்ப்போ இல்லை. மாறாக ஒருவகையான சலிப்பையும், கோபத்தையுமே எங்கும் காண முடிந்தது. தமிழ்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் இல்லை. காரணம் என்னவென்று அவர்களுக்கே தெரியும்.
போராட்டம் நடந்தது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைச் சாக்காக வைத்து அம்மா டி.வி.யும், அப்பா டி.வி.யும் நடத்தின குஸ்திதான் நல்ல வேடிக்கை.
‘போராட்டம் மிகப் பெரிய வெற்றி. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஒருவரும் வேலைக்கு வரவில்லை ‘ என்று அப்பா டி.வி ஒரு காலியான அலுவலகத்தைக் காட்டும். அப்படியே சேனலை நகர்த்தி, அம்மா டி.வி. பக்கம் போனீர்கள் என்றால், ‘அரசு ஊழியர் போராட்டம் படு தோல்வி. அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்தனர் ‘ என்று கூட்டமான ஒரு அலுவலகத்தை திரும்பத் திரும்ப காட்டுவார்கள். பார்க்கிற பொதுஜனம், இந்த இரண்டில் எது உண்மை என்று புரியாமல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருப்பார்.
எந்த ஒரு தமிழக அரசு அலுவலகத்திற்கும் போய், பத்து பைசா லஞ்சம் கொடுக்காமல், நிம்மதியாக வேலைகளை முடித்து சந்தோஷமாக வந்தவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். பெரிய இடத்து சிபாரிசில் போனவர்கள் வேண்டுமானால் சுலபமாக வேலைகளை முடித்து, சந்தோஷமாக வெளியே வரலாம். சாதாரண பொதுமக்களுக்கு அந்த பாக்கியம் கிட்டவே கிட்டாது. நமது பக்கத்து மாநிலங்களில் கூட இந்த அளவு பிடுங்கித் தின்கிறவர்கள் இல்லை.
கர்நாடக சட்ட சபைக்குள் எங்களை அழைத்துச் சென்றவர் சாதாரண ஒரு கடை நிலை ஊழியர் (Peon). ஒவ்வொரு இடத்திற்கும் எங்களைச் சந்தோஷமாக அழைத்துப் போய், விளக்கம் சொல்வதற்கு தமிழ் தெரிந்த ஒரு ஆளையும் கூட்டி வந்தார். வெளியில் வரும்போது பழக்க தோஷத்தில் அவருக்கு நூறு ரூபாய் ‘கைச் செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் ‘ எனக் கூறிக் கொடுத்தேன். தீயைத் தீண்டியது போல துடித்துவிட்டார் மனிதர். அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறன. ‘நீவு நம்ஹே கஸ்ட்டு மஹாராயா! (நீங்கள் எங்களின் விருந்தாளிகள் ஐயா). நான் உங்களுக்கு காபி வாங்கித்தர வேண்டும். Caffeteria மூன்று மணிக்கே மூடிவிட்டதால் அது முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருக்கிறேன். இப்படிச் செய்து விட்டார்களே ? ‘ என்றார் உண்மையான வருத்தத்துடன்.
எனக்கு மிகுந்த அவமானமாகப் போய் விட்டது. ‘காமாலைக் கண்ணணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் ‘ என்பது போல, எல்லா மாநில அரசு ஊழியர்களையும் ஒரே தட்டில் எடை போட்டது என் தவறுதான். சங்கடத்துடன் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்தேன்.
மனித மனோபாவத்தில்தான் எத்தனை வித்தியாசங்கள் ?
***
போடிநாயக்கனூருக்குப் போய் ஒரே நாளில் திரும்ப வேண்டியதாகி விட்டது. எனது உறவினர்களில் பலர் அந்தப் பகுதியில்தான் இருக்கிறார்கள். ஓரளவு தண்ணீருக்குத் தட்டுப்பாடில்லாமல் இருந்து வந்த தேனி மாவட்டத்தில் கூடத் தென்னை மரங்கள் சில இடங்களில் கருகிக் கிடந்தன. கிணற்றுத் தண்ணீர் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டதால், விவசாயம் செய்து வந்த சொந்தங்களில் பலர் கேரள மூணார் பக்கம் சாந்தன்பாறைக்கோ, பூப்பாறைக்கோ ஏலத்தோட்டங்களில் கூலி வேலைக்குப் போய் விட்டார்கள். இப் பகுதி மக்கள் ஒன்று கூடி, இருக்கும் குளங்களை தூர் வாரி செம்மைப் படுத்தினால் நீர்ப் பிரச்சினையை ஓரளவு தவிர்க்கலாம். இதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் மிகக் குறைவு. சாதி மற்றும் திராவிட கட்சி அரசியல் காரணமாக பல துண்டுகளாகப் பிரிந்து கிடக்கும் இப்பகுதி மக்களை ஒன்று படுத்துவது எளிதில் இயலாத காரணமாகவே தோன்றுகிறது.
இருக்கும் நல்ல விளை நிலங்களையும் ‘பிளாட் ‘ போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் விவசாயம் செய்ய துண்டு நிலம் கூடக் கிடைக்காது போலிருக்கிறது. நிலமை இப்படியே போனால் கல்லையும், மண்ணையும்தான் தின்ன வேண்டியிதிருக்கும்.
முன்னேற்றப் பணிகள் மருந்துக்குக் கூட கண்ணில் தட்டுப் படவில்லை. சென்ற ஆட்சியிலாவது புதிதாக பாலங்கள், கிராமச் சாலைகள் என்று ஏதாவது செய்து கொண்டிருந்தார்கள். இப்போதைய ஆட்சியில் அதுபோன்ற பணிகள் எதுவும் நடப்பதை நான் பார்க்கவில்லை. மக்களின் வரிப்பணம் எங்கு போய் பதுங்குகிறதோ ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
சில நல்ல விஷயங்களையும் பார்க்க முடிந்தது. லாட்டரிச் சீட்டை ஒழித்திருக்கிறார்கள். மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்த கந்துவட்டியை தடை செய்திருக்கிறார்கள். பான் பராக் போன்ற போதை வஸ்துக்களையும் தடை செய்திருக்கிறார்கள். பாராட்டப் பட வேண்டிய நல்ல விஷயங்கள்தான். அது மட்டும் போதாதே….கூடவே பொருளாதார முன்னேற்றப் பணிகளும் அல்லவா வேண்டும் ?
***
தமிழ்நாட்டில் மது அருந்துவது ஒரு ஏற்கப்பட்ட சடங்காக மாறியிருக்கிறது. குடிப்பது தவறு என்ற எண்ணம் மிக, மிகக் குறைந்து விட்டது. முன்பெல்லாம் நண்பர்களையோ, உறவினர்களையோ சந்திக்கும் போது, அவர்கள் சக்திக்கேற்ப காபியோ, டாயோ வாங்கித் தந்து உபசரிப்பார்கள். இப்பொழுதெல்லாம் நேராக ஏதாவது ‘பார் ‘க்குத்தான் தள்ளிக் கொண்டு போகிறார்கள். நான் ‘சோமபான ‘ப் ப்ரியனில்லை எனினும், தவிர்க்க முடியாமல் ஒப்புக்காகவாவது அவர்களுடன் போக வேண்டியிருந்தது. தலையெழுத்தே என்று ஏதாவது குடிக்க வேண்டியதும் சில சமயம் நடந்தது.
அதிலும், Beer என்ற பெயரில், ‘பட்டை சாராயத்தை ‘ அடைத்து விற்கிறார்கள் தமிழ்நாட்டில். ஒரு பாட்டில் குடித்ததும் நாக்குழறி, ஒண்ணு, ரெண்டு கூட ஒழுங்காகச் சொல்ல முடிவதில்லை. வாயைத் திறந்தால், ‘ஒழ்ழேய்…ழெழ்ழேய்…ழூழேய்… ‘ என்று ஒரே ஃபிரெஞ்சுப் ஃபிரெஞ்சாய் வருகிறது. லேபிலில் 6% VV என்று போட்டிருக்கிறார்கள். அது என்னா VVயோ ? பாட்டிலில் அடைத்து விற்கிற பாவிக்குத்தானப்பா தெரியும் அதைப் பற்றி!
குடிக்கும் விஷயத்தில், கஞ்சன் என்று பெயரெடுத்தவர்கள் கூட தாராளமாகச் செலவு செய்கிறார்கள். நாளைய தேவைகளுக்குச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் ‘மளார்…மளார் ‘ என்று சவட்டுகிறார்கள்.
வீட்டில் மனைவிமார்கள், ‘கள் ‘ ஆனாலும் கணவன் ‘Full ‘ ஆனாலும் புருஷன் என்று இருக்கும் வரை இவர்களை அசைத்துக் கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது.
***
நாகர்கோவிலில் வசிக்கும் ஒரு பிரபல எழுத்தாள நண்பரைச் சந்திக்க வருவதாக அவரிடம் appointment வாங்கி வைத்திருந்தேன். போகச் சந்தர்ப்பம் அமையவில்லை. அடுத்தமுறையாவது அவரைச் சந்திக்க வேண்டும். பெயரைச் சொன்னால், ‘இவன் அந்த எழுத்தாளரோட குரூப்புடோய்! ‘ என்று என்னையும் சுழலில் சிக்க வைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.
திண்ணையின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில் ஒன்றைக் கூற விரும்புகின்றேன் (இந்தக் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாதது எனினும், எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை).
பல திறமையான, பிரபல எழுத்தாளர்கள் திண்ணையில் எழுதி வந்திருக்கிறார்கள். வருகிறார்கள். ஜெயமோகனாகட்டும், ஞாநியாகட்டும், முருகனாகட்டும், அரவிந்தனாகட்டும் அல்லது இங்கு குறிப்பிட மறந்த மற்ற எழுத்தாளர்களாகட்டும்….ஒருவருக்கொருவர் சளைக்காமல் மிகச் சிறப்பான முறையில் எழுதுகிறார்கள். நிறையப் படித்து, ஏராளமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் கையாளும் subjectகள் எனக்கு மிக மிக ஆச்சரியமளிப்பவை. சமயத்தில் கொஞ்சம் பொறாமையாகக் கூட….நமக்கு இதெல்லாம் தெரியவில்லையே என்று…
அதிருக்கட்டும். நான் சொல்ல வந்தது என்னவென்றால்…இவ்வளவு நல்ல, பல முனை அறிவுள்ள எழுத்தாளர்கள், தாங்கள் கண்டு, படித்து, அறிந்து, தெளிந்தவற்றை எழுதி திண்ணை வாசகர்களுக்கு விருந்து படைக்காமல், வெட்டிச் சண்டையில் தங்களின் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்களே என்ற மன வருத்தம் எனக்கு உண்டு. ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். திண்ணையின் ‘கடிதங்கள் ‘ பகுதியைப் பார்த்தாலே தெரிந்து போகும் இது. தேவையில்லாமல் பக்கம் பக்கமாக ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய சீனியர் எழுத்தாளர்களே கூட முண்டாவைத் தட்டிக் கொண்டு ‘கோதாவில் ‘ இறங்கிவிடுகிறார்கள் என்பதுதான் இன்னும் வருத்தமளிக்கக் கூடிய செய்தி.
‘நாவினாற் சுட்ட வடுவே ‘ ஆறாதென்றால், ‘எழுத்தாணியால் குத்திய வடு ‘ எப்படி ஆறும் ? புரையோடிச் சீழ் அல்லவா பிடித்துப் போகும் ?
இவர்கள் இப்போதுதான் இப்படியா ? அல்லது எப்போதுமே இப்படியா ? என்று எனக்குத் தெரியவில்லை. நல்லது. போனவை போகட்டும். இனிமேலாவது படைப்பாளிகள் நடந்தவற்றை மறந்து, நல்ல பல விஷயங்களை திண்ணை வாசகர்களுக்கு அளிக்க வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனவே,
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்.
கலைச் செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ‘
கூடவே,
‘குஸ்தி ‘ போடாமலும் இருப்பீர்!
***
பிறிதொரு சமயம் சந்திப்போம்.
narendranps@yahoo.com
- மரம்
- பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்
- பயாஸ்கோப்பும் ஃபிலிமும்
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)
- உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
- தேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- காபூல் திராட்சை
- வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4
- தமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- என் இனிய சிநேகிதனே !
- கடத்தப்பட்ட நகரங்கள்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- அறியும்
- அகதி
- ஆயிரம் தீவுகள்
- நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
- உலக சுகாதார தினம்
- சிகரட்டில் புகை
- பைத்தியம்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- ஏன் ?
- குப்பைகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது
- விடியும்! நாவல் – (10)
- குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச
- இந்திவாலா மட்டும்தான் இந்தியனா ?
- கடிதங்கள்
- ராமர் காட்டும் ராமராஜ்யம்
- வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!
- பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?
- காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்
- சாமி- பெரிய சாமி
- வைரமுத்துக்களின் வானம்
- ‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘
- துவாக்குடிக்கு போகும் பஸ்ஸில்
- நீ வருவாயென…
- தேடுகிறேன்…
- இயற்கையே இன்பம்
- இபின்னிப் பின்னே எறிந்தாள்!
- ஒரு விரல்
- பெயர் தெரியாத கவிதை! ?
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]