இந்த வாரம் இப்படி

This entry is part of 11 in the series 20010122_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜார்ஜ் புஷ் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்

நம் ஊரில் இந்த நாளுக்குள் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அமெரிக்காவில் உண்டு போலும்.

நீதிபதிகள் ஓட்டு போதும் என்று மக்கள் போட்ட ஓட்டுக்களை எண்ணாமல் நிறுத்தி புஷ் ஜனாதிபதி ஆகிறார். (எதிர்வாதம் செய்ய ஒரு பெருங்கூட்டமே தயார்)

பதவிஏற்பு நாளன்று அழுகியகாய்கறிகளும் முட்டைகளும் ஜனாதிபதி காரின் மீது அள்ளி தெளிக்கப்பட்டன எதிர்ப்பாளர்களால். அவரது கார் கொஞ்சம் வேகமாக ஓட்டப்பட்டது.

எதிர்ப்பார்ப்புக்கு என்ன குறைச்சல் ? அவர் நல்லபடியாக ஆட்சி செலுத்துவார் என்றும் அவரது கட்சிக்குள் இருக்கும் மதத்தீவிரவாதிகளை கொஞ்சம் கட்டுக்குள் அடக்கி வைப்பார் என்றும் விரும்புவோம்.

**

இந்தியாவில் சீனப்பிரதமர் வருகை

எந்த அளவுக்கு நம் நண்பர்களை பெருக்கிக் கொள்கிறோமோ அந்த அளவுக்காவது நம் எதிர்களாகக் கூடியவர்களை குறைத்துக் கொள்கிறோம்.

ஆனால் சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் நேபாள், மணிப்பூர் வழியாக கொட்டப்படும் சரக்குகள் இந்திய தொழிற்சாலைகளை வியாபாரத்திலிருந்து விரட்டுவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த கொட்டலையும் தாண்டியேதான் இந்தியப் பொருள்கள் விலை மலிவாக தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும்.

விலை மலிவாக இல்லையென்றாலும் தரமிருந்தால் வாங்கத் தயாராக ஒரு மத்தியதர வர்க்கம் இந்தியாவில் உருவாகியிருக்கிறது. எனவே இந்தியத்தரம் உலகத்தரத்துக்கு மேல் இருக்க வேண்டிய கட்டாயம் உலக சந்தையில் நாம் சேர்வதால் வருகிறது.

**

மீண்டும் சாட்டிசிங்புரா

நியூயார்க் டைம்ஸ் இதழில் சாட்டிசிங்புரா குற்றவாளி ஒப்புதல்

ஒரு ஞாயிறு இதழில் ஜாவேத் என்னும் ஓரு காஷ்மீரப்போராளி தானும் இன்னும் சில நபர்களும் சேர்ந்து ஐஎஸ்ஐ சொன்னதால் சாட்டிஸிங்புரா கிராமத்தில் சீக்கியர்களை கொன்றதாக கூறியிருக்கிறார்.

வழக்கம்போல பாகிஸ்தானியர்களும், காஷ்மீரப் போராளிகளும், ஒரு சில இந்திய இடதுசாரி எழுத்தாளர்களும் இதை படித்ததாகவோ, தன் கருத்துக்களை மறுபரிசீலனை செய்வதாகவோ தெரியவில்லை. பங்கஜ் மிச்ராவிடமிருந்து நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு மறுப்புக் கடிதம் வந்ததா என்றும் தெரியவில்லை.

**

ஜெயலலிதா தானே முதலமைச்சர் என்று சொன்னதால் மூப்பனார் கோபம் என்று செய்தி படித்தேன்

நான் நம்பத் தயாராக இல்லை.

**

விளக்கு அமைப்பின் பரிசு நகுலனுக்கு

விளக்கு வருடா வருடம் அளிக்கும் புதுமைப் பித்தன் நினைவுப் பரிசு 1999-வருடத்திற்கானது, எழுத்தாளர் நகுலனுக்கு வழங்கப் படுகிறது. நகுலன் க நா சு, சு ரா , மெளனி போன்றோரின் சமகாலத்தவர். எனினும் இன்றைய இளம் எழுத்தாளர்களையும் வெகுவாகப் பாதித்தவர். திருவனந்த புரத்தில் இருந்த பல எழுத்தாளர்களின் முகிழ்விற்குக் காரணமானவர். நவீன எழுத்தென, பல சோதனை முயற்சிகள் அவர் படைப்புகளில் உண்டு. தமிழின் பல சிறந்த சிறுகதைகளுக்கும், கவிதைகளுக்கும் ஆசிரியர். விளக்கு அமைப்பையும், நகுலனையும் பாராட்டுகிறோம்.

******

மீண்டும் சமுத்திரம்

இலக்கிய விஷயம் என்று வரும் போது சமீபத்தில் படித்த ஒரு மகா மேதாவி சமுத்திரத்தின் போக்கை விமரிசிக்காமல் இருக்க முடியவில்லை. கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் வழக்கம் போல சாகித்ய அகதமியின் போக்கை – சா கந்தசாமியின் தொகுப்பில் இவர் கதை இடம் பெற வில்லை என்கிற ஆதங்கம் இவருக்கு — விமர்சிப்பது மட்டுமல்லாமல், ஜெயகாந்தனையும் விமர்சித்திருக்கிறார். வெறுமே விமர்சனம் என்றால் அது அவர் கருத்து என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் அவர் கருத்துகள் ஜெயகாந்தனின் மீது காழ்ப்பை வெளிப்படுத்துவதுடன் , வழக்கமான பிராமணியச் சதி என்று ஜெயகாந்தன் பற்றிய பார்வைகளைச் சொல்கிறது.

அக்கினிப் பிரவேசத்தால் பிராமணர்களால் பாராட்டப் பட்டதால், ஜெயகாந்தன் பெரும் கவனிப்பைப் பெற்று விட்டார் என்பது அவர் குற்றச் சாட்டு. இந்தச் சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தன் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை எழுதியது நினைவிற்கு வருகிறது.

ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் பரிசு பெற்றது. இது அகில இந்திய அளவில் மூன்றாவது பரிசு பெற்றது. அந்தப் படத்துடன் பரிசுக்கு வந்த படங்களில் ஒன்று சத்யஜித் ரேயின் ‘சாருலதா ‘ . ஜெயகாந்தன் எழுதுகிறார் : ‘ முதல் பரிசுக்கும், மூன்றாம் பரிசுக்கும் சத்யஜித் ரேயின் ‘சாருலதா ‘ வும் ‘உன்னைப் போல் ஒருவன் ‘ படமும் போட்டியிட்டன. அந்தத் தேர்வில் எனக்கும் ஒரு ஓட்டு அளிக்கும் உரிமை தரப் பட்டிருந்தால் நானும் கூடச் சாருலதா படத்திற்குத் தான் எனது ஓட்டைப் போட்டிருப்பேன். உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு அல்ல ‘

இந்த வாசகங்களில் உள்ள உண்மையான கலையுள்ளத்தை உணர முடியும்போது தான் எப்படி, சக கலைஞனை , அவனுடைய சிறப்புகளை அங்கீகரிப்பதன் மூலம் , ஜெயகாந்தன் எவ்வளவு உயரத்தில் நிற்கிறார் என்பது புரியும். தமிழ் சினிமாவின் வேறு வியாபாரிகள் என்றால் ‘வட இந்தியரின் சதி. தமிழருக்கு எதிரான பிராமணீயச் சதி ‘ என்று புலம்பித் தள்ளியிருப்பார்கள். ஒரு கலைஞனால் தான் பிற கலைஞனின் சிறப்பை அறிய முடியும். எனில் சு சமுத்திரத்தின் அடையாளத்தைப் பிற கலைஞர்கள் பற்றிய அவர் பார்வையிலிருந்தே உணர முடியும்.

****

Series Navigation