நாகரத்தினம் கிருஷ்ணா
அவள், திடம் கொண்டு போராடிய பாப்பா – பெயர் பிரான்சுவாஸ் சகன்(Francoise Sagan). முதுமைக்குரிய பக்குவமும் இணக்கமும், என்னவென்று அறியாமலேயே தனது 69வது வயதில் இறந்துபோன பேதை எழுத்தாளினி. சமகால பிரெஞ்சு எழுத்தாளர்களில் மிகப்பரவலாக உலகநாடுகளால் அறியப்பட்டவர் என்பதால் அவருக்கெதிராக விமர்சனங்களும் அதிகம். எழுத்தாளனென்றால் எழுத்தை மட்டுமே சுவாசித்துக்கொண்டு, எல்லாவற்றிலும் தரித்திரமாய் இருக்கவேண்டுமென்கிற படைப்பாளி பிம்பத்தை மாற்றிய பெண்மணி. 1971ம் ஆண்டு, அரசாங்கத்தின் அனுமதியின்றி கருக்கலைப்புச் செய்துகொண்டதாக அறிவித்த 343 பெண்மணிகளுள் இவரும் ஒருவர். பெண்கள், தங்கள் உடல்குறித்தான முடிவுகளை எடுக்க மற்றவர்களின் அனுமதி அவசியமற்றதென வலியுறுத்தியதின் மூலம், படைப்பாளிவேறு சமூகம் வேறு அல்ல என்பதை உணர்த்தியவர். அவரது எழுத்திற்கு பிரெஞ்சு படைப்புலகம் பெரிதாக அங்கீகாரம் எதனையும் வழங்கிடவில்லை என்பது உண்மையென்றாலும், சமகால பிரெஞ்சு எழுத்தாளர்களில் அவரவளவிற்கு வாசகர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் எவருமிலர்..
தீவிர பெண்ணெழுத்தாளரெனில் சில தகுதிகள் வேண்டாமோ ?. உண்டு. மொடாக் குடியர், தன்னைத் திடப்படுத்திக்கொள்ள அவருக்கு மது தேவைப்பட்டது. நேர்காணலுக்கு முன்பாக தன்னை தயார்படுத்திக்கொள்ள விஸ்கிக் குடித்தாகவேண்டும். போதை மருந்துக்கு அடிமையா ? ஆமாம், விடுதலை பெற விருப்பமில்லாத அடிமை. கார் விபத்தொன்றில் ஆறுமாதத்திற்குமேல் மருத்துவமனையில் நினைவு தப்பியும், நினவோடும் வலிகளுடன் போராடியபோது, போதை மருந்துக்கு அறிமுகம்.. அவரது நிரந்தர முகவரியென்று, சூதாட்ட விடுதிகளையோ, இரவு விடுதிகளையோ குறிப்பிட்டாகவேண்டும். பந்தயக் கார்களில் மோகம் கொண்டவர் என்பதால், வேகம்..விபத்து.. கோமாவென..மரணத்தோடு நெருங்கி வாழ்ந்தவர். போதைமருந்தின் உபயோகத்திற்காகவும், வரியேய்ப்பு குற்றங்களுக்காகவும் நீதி மன்றங்களால் தண்டிக்கப்பட்டவர், பிரான்சை உலுக்கிய எல்ஃப் (Elfe) பெட்ரோலிய கம்பெனி ஊழலில், பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்சுவா மித்தரானுக்காக (Francois Mitterand) இடைத்தரகராக செயல்பட்டவரெனக் குற்றச்சாட்டு உண்டு. இவரை விமர்சிக்கின்ற அல்லது ஒவ்வாத மனிதர்கள் மீது, தயக்கமின்றி உபயோகிப்பது ‘C ‘est la barbe! (வாயை மூடு!)..என்கின்ற கடுமையான வார்த்தைப் பிரயோகம். இப்படி வரிசையாக அவரது எதிராளிகளை மகிழ்விக்கின்ற வகையிற் பாதகக் குணங்களை அடுக்கலாம். ஆனால் இவ்வெழுத்தாள பெண்மணியின் படைப்புச் சாதனைகளை ஒப்பிடும்போது, அவைகள் நிலவின் மீதான களங்கம்.
1935ம் ஆண்டு ஜூன் மாதம் 21ந்தேதி பிறந்த இவரது இயற் பெயர் பிரான்சுவாஸ் குவாரெஸ் (Francoise Quoirez). ‘சகன்(Sagane) என்கின்ற புனைப்பெயரை இரவல் பெற்றது, எழுத்தாளர் மர்செல் ப்ரூஸ்டிடம் (Marcel Proust). பத்து வயது சிறுமியாக இருந்தபோதே நாடங்களும், கவிதைகளும் எழுத ஆரம்பித்தவர். கல்வியில் பிரகாசிக்கத் தவறியபோதும் சார்த்ரு (Jean-Paul SARTRE), கமூய் (Albert CAMUS) படைப்புகளை, தனது பதின்மூன்றாவது வயதில் ஆர்வமாக வாசித்த வித்தியாசமான சிறுமி. பதினாறாவது வயதில் கிறித்துவ மதஞானத்தில் ஆர்வம்காட்டவில்லையென்று பள்ளி நிருவாகிகளால் வெளியேற்றபட்டவர். சொர்போன் பல்கலை கழகத்தில் படித்த காலத்தும் தேர்வுகளை அலட்சியம் செய்துவிட்டு ஜாஸ் கிளப்புகளில் வலம் வந்திருக்கிறார்.. இப்படித்தான் ஒருநாள் கவிஞர் ரெம்போ(Arthur RIMBAUD)வின் Illuminations என்கின்ற கவிதையில் மனத்தைப் பறிகொடுத்த ஒரு சில கிழமைகளில், ‘வணக்கம் துயரமே! (Bonjour Tristesse – Hallo Sadeness – நாவலின் தலைப்பு கூட ஒரு கவிதை*யிலிருந்து இரவல் பெற்றதே) என்கின்ற சிறிய நூலை எழுதப்போக பிரெஞ்சு படைப்புலகில் சூராவளி வீசத்தொடங்கியது. இந்நாவலில் 17 வயது இளம்பெண்ணொருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்கள், நாவல் வெளிவந்த காலத்து சமூக நெறிகளை அலட்சியம் செய்து சொல்லப்பட்டிருக்க, கடும் எதிர்ப்பெழுந்தது. ஆனால் ஆராதித்தவர்கள்: நாவலை, ‘அசலான, நிஜப் படைப்பு ‘, ‘இயல்பான எழுத்து ‘, ‘புதினமொத்த கவிதை ‘, எனப் பாராட்டினார்கள். 1954ல் – முதற்பதிப்பாக வெளிவந்த 3000 புத்தகங்களும் ஒரு சில நாட்களில் விற்றுத் தீர்ந்தன. ஓராண்டிற்குப் பிறகு அதன் விற்பனை 850 000த்தை எட்டியது. பணம் கூரையைப் பிரித்துக் கொண்டு கொட்டியது. வரவேற்பறையில் சில்லரைகளைக் இவர் கொட்டிவைத்திருக்க, வருவோர் போவேரெல்லாம் வேண்டிய அளவிற்குக் கொண்டு சென்றார்கள். இன்றைய தேதியில், ‘வணக்கம் துயரமே ‘ நூல் மாத்திரம் இரண்டு மில்லியன் விற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நூல் விமர்சகளின் பரிசை வென்றதோடு, இலக்கிய விமர்சகர் மொரியாக் (Mauriac) என்பவரால், நூல் ஆசிரியரான பிரான்சுவாஸ் சகனுக்கு அதாவது இவருக்கு ‘அழகான இளம் ராட்சசி ‘( ‘charmant petit monstre) ‘ என்ற செல்லப்பெயரை ஈட்டித் தந்தது. ‘பதினெட்டு வயதில் 188 பக்கங்களால் நான் அடைந்த புகழ், ஒரு வாணவேடிக்கை ‘( ‘La gloire, je l ‘ai rencontree a 18 ans en 188 pages, c ‘etait comme un coup de grisou ‘) என்பதாகச் ஒரு நேர்காணலில் பிறகு ஸகன் கூறியிருக்கிறார்.
பதினெட்டுவயதுடைய ஒரு பெண் இப்படி உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்துகொண்டால் ஜாம்பவான்கள் சும்மாயிருப்பார்களா ? ஏதோ தேர்வுத்தாளை திருத்துவதுபோன்று அவரது படைப்புகளில் ஆங்காங்கே அது சொத்தை இது சொத்தை என மேதாவித்தனத்துடன் புலம்பினாலும், இவரது படைப்பாற்றலுக்கு தடைபோட முடியவில்லை. நிறைய எழுதினார். இவரது கணக்கில் இருபது புதினங்கள், பன்னிரண்டு மேடை நாடகங்கள், அதே எண்ணிக்கையில் திரைப்படங்கள், கட்டுரைகள், கவிதைகள் இருக்கின்றன. பிரான்சில் மாத்திரம் முப்பது மில்லியன் புத்தகங்கள் விற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அவரது படைப்புகளில் முக்கியத்துபம் பெற்றவை என சொல்லவேண்டுமென்றால்: A Certain Smile, Those Without Shadows, Aimez-vouz Brahms …, La Chamade, The Heart-Keeper, Sunlight on Cold Water, Scars on the Soul, The Unmade Bed, The Painted Lady, The Still Storm, Painting in Blood, Silken Eyes, Incidental Music ஆகியவற்றைக் குறிப்பிடலாம். உலகில் பதினைந்து மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கபட்டுள்ளன.
திரையுலகை மிகவும் நேசித்தார். இவரது முக்கிய நாவல்கள் அனைத்தும் திரைவடிவில், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. புதினங்களில் வலம் வந்த நாயகிகள் திரையில் நேர்த்தியான பெண் பாத்திரங்களாக உயிர்ப்பெற்றனர்.
வெற்றிகரமான எழுத்தாளராக வலம் வந்தபோதிலும் அவர் திரும்பத் திரும்ப ‘ஸ்திரமற்றகாதல் ‘, ‘மேல்தட்டு மக்களின் இணக்கமற்ற உறவு ‘- என்பது மாதிரியான கதைகளை தன் நாவலில் கையாளுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தவிர, அறுபதுகளில் ஆதிக்கம் செலுத்திய பின் நவீனத்துவம் இவரது படைப்புகளை ஒன்றுமில்லாமற் செய்திடும் என்றும் விமர்சனம் வைக்கபட்டது. இதற்கு அவரது பதில்: ‘கதை சொல்லுவதற்கு முன்பாக, மனிதர்களை முழுவதுமாகப் படிப்பதற்கே எனக்கு நேரம்போதவில்லை என்பதால் புதிய உத்திகளிலோ, புதிய முறைகளிலோ கதை சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது ஏறக்குறைய, ஒரு மரம் வெட்டுபவனுக்குள்ள பிரச்சினை. கிடைத்த நேரத்தில், மிகப்பெரிய மரத்தை வெட்டவேண்டியிருப்பவன், தனது கோடரி எத்தகையது என்று ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது. ‘
அவரது எழுத்து, பாராட்டு பத்திரங்களையோ, இலக்கிய உலகையோ, நினத்து எழுதப்பட்டதல்ல, அவருக்காகவே எழுதப்பட்டது. அதனாற்றான் மாபெரும் எழுத்தாளர் என்கின்ற கீரீடமேதுமில்லாமலே, எண்ணற்ற வாசகர்களின் மனதில் எளிதாக கோலோச்சமுடிந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே, அடுத்தடுத்து எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சைச் செய்துகொண்டு, கட்டிலைவிட்டு எழமுடியாத நிலை. கோடிகோடியாக சம்பாதித்ததை அதே வேகத்திலேயே செலவுசெய்ததின் பலன் கடந்த செப்டம்பர் மாதம் 24ந்தேதி (2004ம் ஆண்டு), இறந்தபோது கையிருப்பென்று ஏதுமில்லை.
‘இவ்வுலகம் எல்லாவற்றையும்போலவே கற்பனையாலானது, சொல்லப்போனால் மற்றவையோடு ஒப்பிடும்போது மாற்று குறைந்தது ‘ என்கின்ற பிரான்சுவாஸின் கருத்துக்கு மாற்று கருத்தில்லையென்கிறார், எழுத்தாளரும், அரசியல் வல்லுனருமான ழாக் அத்தாலி (Jacques Attali)
‘Bonjours tristesse ‘(Hallo Sadness)லிருந்து:
‘அதிகாலையில், பாரீஸ் மோட்டார்வாகனங்களின் சத்ததத்தை மாத்திரம் கேட்டுக்கொண்டு கட்டிலில் நான் விழித்திருக்க, சிலநேரங்களில் நினைவுகள் என்னை சங்கடப்படுத்துகின்றன: கோடையும், மொத்தமாய் அதன் ஞாபகங்களும் திரும்பவும் என்னிடம். ஆன்!(Anne) ஆன்(Anne)! இப்பெயரை, திரும்பத் திரும்ப வெகுநேரமாய் முனுமுனுக்கிறேன். ஏதோவொன்று என்னிடம் மெல்லப் பரவுகிறது. எனது கண்களை மூடிக்கொண்டு, அதன் பெயர் சொல்லி வரவேற்கிறேன்: வணக்கம் துயரமே. ‘
பிரான்சு நாட்டின் ‘L ‘Express ‘ இதழுக்கு பிரான்சுவா சகன் பத்திரிகையாளர் அலென் லூயோ (Alen Louyot)வுக்கு அளித்திருந்த நேர்காணல் (le 21 mars 2003):
2003ம் ஆண்டு – வசந்தகாலத்தில் முதல்நாள், நொர்மாந்தி பிரதேசத்தில் எனது காரை ஓர் ஓரமாய் நிறுத்தியபொழுது வெளியே நல்ல மழை. ‘பத்திரிகையாளனாக இருந்துகொண்டு கிடைத்த சந்தர்ப்பதை கோட்டைவடுவது, தொழிலுக்கு நான் இழைக்கும் அநீதி ‘ என நினைத்துக்கொண்டேன். இருவருமாக இணங்கி ஏற்பாடு செய்திருந்த நேர்காணலை, கடைசி சமயத்தில் ‘ரத்து செய்கிறேன் ‘ என பிரான்சுவா சகன் பயமுறுத்தியிருந்தார். எங்கள் இதழின் பொன்விழா ஆண்டை யொட்டி சிறபப்பிதழொன்று வெளியிடத் தீர்மானித்திருந்தோம். இச்சிறப்பிதழின் பொறுப்பாளரும் நண்பருமான பத்திரிகையாளர் ஈவ் ஸ்டாவ்ரிதே (Yves Stavride) ‘அழகான இளம் ராட்சசி ‘(charmant petit monstre)யான ‘, பிரான்சுவா சகனோடு இதற்கென ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்திருந்தார். அறுபதுகளில், தனது இளம் வயதில் உச்சத்திலிருந்த இவ்வெழுத்தாளரை கியூபாவில் முதன்முதலில் எங்களிதழுக்குப் பேட்டிகண்டும் ஐம்பது ஆண்டுகள் ஆகியிருந்தன. சொல்லப்போனால், அந்நேர்காணலின் முடிவில் நாங்கள் வெளியிட்டிருந்த கட்டுரையை வாசித்துவிட்டே, விமர்சகர் மொரியாக்(Mauriac) ‘அழகான இளம் ராட்சசி ‘ என்று செல்லப்பெயரிட்டு இவரை அழைத்திருந்தார். எழுத்தாளர் சகனுடன் நேர்காணலுக்காக பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. இறுதியில் தனது வழக்கறிஞர் மூலம் மார்ச் 21, 2003 அன்று, தனது சொந்த ஊரான ஓன்ஃபிளேர் (Honfleur)க்கு வரச்சொல்லியிருந்தார். நானும் அவ்வாறே வந்து தொடர்புகொண்டபோதுதான், மேற்கண்ட சிக்கல். தொலைபேசியில், அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், முடியுமானால் வேறொரு நாளில் நேர்காணலை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டுபோக, எனக்குப் பெருத்த ஏமாற்றம். சந்திக்காமல் போவதில்லையெனத் தீர்மானித்தேன்., ஒரு புத்தகக்கடைகாரர் குறிப்பிட்டதுபோன்று அவரது பண்ணைவீடு போன்-எவேக் (Pont-l ‘Eveque) சாலையில் இருந்தது. வீட்டின் கதவருகே நின்றுகொண்டு, எழுத்தாளர் சகனை அழைத்தேன். ‘சாதாம் உசேனுக்கு எதிராக ஈராக் மீது விரைவில் அமெரிக்கா நடத்தவிருக்கும் போர்ச் செய்தியை சேகரிக்கவேண்டியுள்ளதென்றும், இன்றைக்கு எப்படியாவது உங்களைப்பார்த்தாகவேண்டும், தவறினால் எனக்கு மறுபடியும் சந்தர்ப்பம் வாய்க்குமாவென்று தெரியவில்லை ‘ என்ற துருப்புச் சீட்டினைத் இறக்கினதுந்தான் தாமதம், ‘ஈராக் யுத்தத்தைவிட, நான் உனக்கு முக்கியமாக போய்விட்டேனா ? கொஞ்சம் இரு கதவைத் திறக்கிறேன் ‘, எனக் கேட்டுக்கொண்டே கதவைத்திறக்க, சக்கர நாற்காலியில், அதிக நீளமில்லாத தலை முடியுடன் பொன்னிறத்தில் குள்ளமாய் ஒரு பெண்மணி. அந்தக் குறுகுறுபார்வை சட்டென பல ஆண்டுகளுக்கு முன் பிரான்சை கலவரப்படுத்திய அவரது முதற்புத்தகத்திலிருந்த புகைப்படத்தில் ஏற்கனவே நான் கண்டிக்கிறேன். சகன் என்னைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார். நல்லவேளை அவரைச் சந்திக்கவேண்டுமென்கிற அதிர்ஷ்டம் என்பக்கம் இருந்திருக்கிறது. ‘பப்பராசிகளால், உண்மையான பத்திரிகையாளர்களையும் சந்தேகிக்க வேண்டியிருக்கின்றதென்று ‘ என்னைத் தவிர்த்ததற்கான காரணத்தை விளக்கினார். எங்கள் எக்ஸ்பிரஸ் இதழுக்கு கொடுத்த முதல்நேர்காணலை நினைவுக்குக் கொண்டுவந்தார். ‘எனக்கப்போது இருபத்தைந்து வயது, கியூபாவில் இருந்தேன். அவ்வயதுக்கேயுரிய சிறுபிள்ளைத்தனம் நிறைய. என் நினைப்பெல்லாம் ஆட்டம் பாட்டம், உல்லாசமென்றிருந்த காலம் ‘, என அவர் கூறியபோதிலும், அவ்விளம் வயதில் மேற்கத்திய தீவிலிருந்தபோது, காஸ்ட்ரிஸ்ட்(Fidel Castro – castristes)கள் எவ்வாறு திசைமாறிச் செல்வார்கள், என்றவர் கணித்திருந்ததை நினைத்துப்பார்த்தேன். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதிகம் அலட்டிக்கொள்ளாமல், சந்தோஷமும் வேடிக்கையுமாக அவரளித்த நேர்காணலிலிருந்து சிலபகுதிகள்:
பிரான்சுவாஸ் சகன் சொல்லுங்க, வெற்றிபெற்ற வாழ்க்கையைக் குறித்து உங்கள் அபிப்ராயமென்ன ?
என்னைப்பொறுத்தவரையில் வாழ்க்கையில் ஜெயித்திருக்கிறேன் என்று சொல்லமாட்டேன் (நீண்ட மெளனம்). ஆனால் எனக்கு மகிழ்ச்சியளிப்பதைச் செய்வதில் நான் வெற்றிபெற்றிருக்கிறேன் ? அதாவது எழுதிக்கொண்டு வாழ்வதில். ‘இழந்த நேரத்தைத் தேடி. ‘* தரத்திற்கு நாவலெழுதுவதில் நான் வெற்றிபெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் எனது புனைபெயரை அவரிடமிருந்து (Marcel Proust) திருடுவதில் ஜெயித்திருக்கிறேன் (சிரிக்கிறார்).
இருந்தபோதிலும், ப்ரூஸ்டைப்(Proust)போல அல்லாமல், வாழும் காலத்திலேயே ஒருவித இலக்கியபுகழை அடைந்தவரல்லவா நீங்கள் ?
உண்மை, அவர்காலத்தில் இல்லாத தொலைக்காட்சியின் தயவால், சமகால எழுத்தாளர்களில் நான் அதிகமாக அறியபட்டிருக்கிறேன். அவருக்கு அது வாய்க்கவில்லை. பிறகு புகழ் என்று குறிப்பிட்டார்கள்,எனக்கது முக்கியமல்ல. மற்றவர்களின் நம்பகத் தன்மைக்குறிய படைப்பாளியாக இருந்திருக்கிறேன் என்பதே எனக்கு முக்கியம். ஆக தொலைகாட்சி இலக்கிய நிகழ்ச்சிகளில் எப்போதும்போல என்மனதிலிருப்பதை வெளிப்படையாகச் சொல்ல, அதிர்ஷ்டவசமாக ஆனால் மிகவும் அரிதாகவே அதனை நிகழ்ச்சியில் அனுமதிக்கிறார்கள். மக்களும் அதனை நம்புகின்றார்கள். அந்தநேரத்தில் அளவிட முடியாத மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
தொலைக்காட்சி ஊடகத்தை தவிர்க்க விரும்புகிறீர்களா ?
நம்மை பலவீனப்படுத்தும் ஒன்றாக இன்றைக்கு தொலைக்காட்சி ஊடகம் மாறிவிட்டது. ஆரம்பகாலத்தில் தொலக்காட்சியில் பங்கெடுக்கின்றபோது, நிகழ்ச்சி எப்போதுமுடியும் என்பது மாதிரியான எரிச்சலுண்டு. இப்போது, அதன் தந்திரங்களை அறிவேன் அவர்களின் விளையாட்டைப்புரிந்துகொண்டு, நானும் விளையாடுகிறேன். தெலைகாட்சி ஊடகங்கள் மாத்திரம் இப்படித்தான் இருக்கவேண்டுமென எழுத்தாளர்களுக்கான வழிமுறைகளையும், பிம்பத்தையும் தீர்மானிக்கவில்லையென்றால், எனக்குத் தெரிந்து ஏராளமான எழுத்தாளர்கள், மிகச்சிறந்த எழுத்தாளர்களாகப் பரிமளித்திருப்பார்கள்.
இருபதுவயதில், திடாரென்று புகழின் உச்சிக்குச் செல்வது இடைஞ்சல் இல்லையா ?
அதிர்ஷ்டவசமாக எதனையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்ற நியதியிருந்த குடும்பத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். அதனால் தற்பெருமைகளுக்கு வாய்ப்பில்லை, என்னைச்சுற்றி துதிபாடிகளும் வீட்டில் இல்லை. தவிர, புகழினை இளம்வயதிலேயே அடைவது நல்லதென்று நான் நினைக்கிறேன்.. நீங்கள் கவனித்திருப்பீர்களா என்றெனக்குத் தெரியவில்லை. காலம் கடந்து புகழை அடைந்தவர்கள், உதாரணமாக மர்கெரித் துயூரா (Marguerite Duras) போன்றவர்களுக்கு, கடைசியில் தலையைப் பிய்த்துக்கொளவேண்டிய நிலமை.. அவரை மூன்றாவது நபராகச் சித்தரித்து அவரைப் பற்றி அவரே பேசவேண்டியிருந்தது. அப்படிப்பேசி, மற்றவர்களிடம் கொண்டுசெல்ல அவரது அதிகபட்ச திறன்களும் தேவைப்பட்டன.. எனக்கெப்போதும், இயல்பான எளிமையான மனிதர்களையே பிடிக்கும் என்பதனை நீங்கள் அறிவீர்கள் அல்லவா ?
ஆக, உங்கள் நாவலில் வருவதுபோன்ற போலி மனிதர்களையும், அறிவு ஜீவிகளைப்போல நாடகமாடுபவர்களையும் பிடிக்காதென்று சொல்லுங்கள் ?
இல்லை. விளைவுகளைப் பொருட்படுத்தாத, விளைவுகளால் பாதிக்கபடாத மனிதர்களை நேசிக்கிறேன் என்கிற பொருளில் சொல்லவந்தேன். நீங்கள் நினப்பது போன்று போலிகளையும், உதவாக்கரைகளையும் குறித்து நான்பேசவில்லை.
அதிர்ஷ்டம் என்பதென்ன எளிதில் வாய்க்கக்கூடியதா ?
எல்லாமே சரியாக அமைந்தால்தான் வாழ்க்கையில் சந்தோஷமென்று நீங்கள் நினைக்காதாவரென்றால், ஆமாம். என்னைபொறுத்தவரையில், நோயற்றவாழ்வு நமக்கு அமையுமானால் அதிர்ஷ்டமென்பேன். நான்சொல்வது, ஏதோ முட்டாள்தனமாகத் தோன்றும் ஆனால் அதுதான் உண்மை. பிறகு, வாழ்வுடன், அதாவது அவரவருக்கு அமைந்த வாழ்வுடன் ஒத்துபோவதும் எனக்கு முக்கியம்.
எதையும் செய்யாமல் புலம்புவதை(regrets)விட எதையாவது செய்துவிட்டு வருந்துவது (remords) மேலானதெனச் சொல்லப்படுகிறது. உங்கள் அபிப்ராயமென்ன ?
எனக்குப் புலம்பல்களும் இல்லை. அவ்வாறே வருத்தங்களும் இல்லை(சிரிக்கிறார்). எனக்கு வாழ்க்கையில் பேரதிர்ஷ்டம் வாய்த்திருக்கவேண்டும். என்னிடம் எழுதுவதற்கான ஆசையும், அதற்கான திறனும் இருக்கின்றன. நான் கொஞ்சம் சோம்பேறியாக இருந்தாலும் எழுதுகின்றபோது, தங்கு தடையின்றி எழுதுகிறேன். ஒரு முறை இங்கே லிமூசனி (Limousin)ல் நடப்பதானக் ஒரு காதல்புதினத்தை நேபாள பயணத்தில் போது எழுதினேன். தொலைதூர நேபாளத்திலிருந்துகொண்டு நம்முடைய ஆடுகளை எழுதுவதற்கோ, பசுமைபோர்த்திய மலைகளை எழுதுவதற்கோ எனது பயணம் தடையாக இல்லை. என் மனதில் நான் நினைத்துக்கொண்டிருக்கிற கருப்பொருள் வலம்வர ஆரம்பித்துவிட்டால், தொடர்ந்து பன்னிரண்டுமணிநேரம்கூட என்னால் எழுத முடியும். எழுதாமலிருக்கும்போது, வாட்டத்துடனிருக்கிறேன், யாருமற்ற அநாதையாய் உணர்கிறேன். நல்ல மனோநிலயில், மகிழ்ச்சியாய் இருக்கும்போது மாத்திரமே என்னால் எழுதமுடிகிறது.
Bonjour tristesse அந்தக்காலத்தில் பிகவும் அதிர்ச்சி ஏற்படுத்திய படைப்பு இல்லையா ?
உண்மையில், அப்புதினதிற்கு எதிராக எழுந்த அவதூறுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அக்காலத்தில், பெரும்பாலானவர்களுக்கு ஓர் இளம் பெண், மணம் செய்துகொள்ளாமலும், கர்ப்பமாக்கிக்கொள்ளாமலும் ஓர் ஆணிடம் படுப்பதென்பது ஆபாசம், தப்பு. அப்புதினத்தில் பிரச்சினைக்குறிய விடயமாகக் நான் கருதுவது, அந்தப்பாத்திரம், தன்னைக்குறித்த பிரக்ஞையின்றி, சுயநலத்துடன் ஒருவரை அழைத்துவந்து கொல்லமுடியும் என்பதுதாகும். பெரும்பாலான வாசகர்கள் எனது எண்னத்திலிருந்து மாறுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு, ஒரு பெண் ஆணிடம் படுத்தாலே, கர்ப்பம் தரித்திருக்கவேண்டுமென்கிற அக்காலத்திய விதி எனது நாவலில் மீறப்பட்டிருப்பதைக் குறித்து அதிர்ச்சி. இதை மூடத்தனமென்று சொல்லவேண்டும். நான் பள்ளியில் படித்தகாலத்தில், ஒரு பெண் தான் கர்ப்பமென்று தெரியவந்தபோது தற்கொலை செய்துகொண்டாள். இன்னொருபெண்ணோ தான் கர்ப்பம்தரிக்கக் காரணமாயிருந்த ஓர் அய்யோக்கினை மணந்து வாழ்க்கைமுழுதும் துன்பப் படவேண்டியக் கட்டாயம்.
கருக்கலைப்பு உரிமைக்காக போராடியபொழுது, பெண்ணுரிமை ஆதரவாளர்களின் ‘எங்கள் வயிறு எங்களுக்குச் சொந்தம் ‘ என்கின்ற முழக்கத்திற்கு எதிராக நீங்கள் இயங்கியதன் காரணமென்ன ?
ஏனென்றால் என் வயிறு எனக்குச் சொந்தமில்லையே. அவ்வயிறு நான் நேசிக்கின்ற ஆணுக்குச் சொந்தம், அந்நேசத்திற்கு நான் சொந்தம்.
உங்கள் வாழ்க்கையில் அதிகம் பாதித்த ஒரு மனிதரைச் சொல்லுங்களேன்.
நிறையபேர்கள் உண்டு. உதாரணமாக சார்த்ரைச் (Jean-Paul SARTRE)சொல்லலாம். எழுத்தாளர் என்பதற்காகவே அவரை மிகவும் நேசித்தேன். அவரது ‘Les Mots ‘( சொற்கள்) அதி அற்புதமான படைப்பு. அவ்வாறே அவருமொரு அற்புதமான மனிதர். அபூர்வமானவரும்கூட. அவருக்கு பார்வை போயிருந்த சமயத்தில், காலை உணவிற்கோ டின்னருக்கோ அவரைத் தேடிக்கொண்டு வீட்டிற்குச் னெ¢றுவிடுவேன். சிமோன் தெ பொவார் (Simon de Bauvoir), எந்த நேரமும் அவர் பக்கத்திலேயே இருந்த நேரம். அவரிடமிருந்து சத்தம்போடாமல், நானும் சார்த்த்ரும் நழுவி விடுவோம். சில நேரங்ககளில், ஏதோ இட்ச்ஹாக்கின் சிக்கோசிலிருந்து நேராக எங்களைத் தேடிவருபவரைப்போல சிமோன் தலையை விரித்துக்கொண்டு வந்திருப்பார். என்னை பயமுறுத்துவார். சார்த்த்ருக்கு பார்க்க இயலாதென்றாலும், நான் விளக்கிச் சொல்ல சத்தம்போட்டு சிரிப்பார். உண்மையில் வேடிக்கையான தருணங்கள் அவை.
இவ்வுலகில் உங்கள் விருப்பம்போல இருந்தீர்களென்று சொல்லமுடியுமா ?
(சிரிக்கிறார்), நிச்சயமா சொல்லலாம். ஏராளமா இருந்திருக்கேன். பிறகு என்னை மிகவும் சந்தோஷப்படுத்திய தருணங்கள் உண்டு. குறிப்பாக ஏழு அல்லது எட்டு சந்தர்ப்பங்களில் இவ்வுலகில் ஏன் பிறந்தேன், என்ன செய்தேன் என்பதை உணர்ந்திருக்கிறேன். பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருந்தேன் என்பதும் உண்மை. ஆனால் சற்றுமுன் குறிப்பிட்டது மாதிரியான தருணங்களில் எனக்கும், இந்த மண்ணிற்கும் பரஸ்பர புரிந்துணர்வு இருந்திருக்கிறது. இவ்வெண்ணம் அதிக நேரம் நீடித்ததில்லை, ஏறக்குறைய கால்மணிநேரம் நீடித்திருக்கலாம். இவ்வற்புதமான தருணங்கள் எனக்கு நேர்ந்திருக்கின்றன என்பதில் மாற்றமில்லை எப்போது நேர்ந்தது என்பதில் குழப்பமிருக்கிறது. (மெளனம்). இிவ்வனுபவம் என்னுடைய 20 வயது, 40 வயது, மற்றும் 53 வயதில் ஏற்பட்டிருக்கிறது அப்போதெல்லாம் ஒரு மரத்தின்கீழ் நிற்பதைப்போன்ற பிரமை….
….
*La vie immediate, P. Eluard
* A la recherche du temps perdu -Marcel Proust
Na.Krishna@wanadoo.fr
- பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி!
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)
- ஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்
- எஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? – பகுதி 1
- அ.முத்துலிங்கம் பரம்பரை-3
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை
- மெய்மையின் மயக்கம்-20
- உரத்த சிந்தனைகள்- 2
- நான் பாடகன் ஆனது
- ‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.
- சென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)
- கடிதம் அக்டோபர்,7 2004
- கடிதம் அக்டோபர் 7,2004
- கடிதம்- அக்டோபர் 7,2004
- கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்!
- புகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்
- கடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்
- கடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்
- கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா ?
- கடிதம் அக்டோபர் 7,2004
- சொன்னார்கள்
- ஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை!”
- அப்புசாமியும் சனிப் பெயர்ச்சியும்
- உன்னைச் சுற்றி உலகம்
- விவாகரத்து
- வாலிபத்தின் வாசலில்
- சாகா வரம்
- காட்டு வழிக் காற்று
- உறவெனும் விலங்கு
- கவிதைகள்
- தங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- அவள்
- பெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- பழைய வேட்டி
- வேலிகள் உயரும்
- காற்றுப் பை…
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40
- சாமிக்குத்தம்
- ‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்
- தனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)
- மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?
- ‘போரோடு ‘ ஒரு போர். ( ‘Bohr ‘s Model and Theoretical Warfare on Quantum Mechanics)
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- பாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு
- அல்லி-மல்லி அலசல்- பாகம் 5
- யாரிந்த Dick Cheney ?