This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue
தீபச்செல்வன்
பறவை மிருகமாகியது
எனது தனிமையில்
துயருமும் இருந்தது
நிம்மதியும் இருந்தது
நான் எப்படி
சொல்லிவிட
கூட்டத்திற்கும்
தனிமைக்கும்
உங்களுக்கும்
எனக்கும் இடையில்
உறவு தேவையென்பதை
எனது நண்பனும்
நானும்
மிருகமாகி
தனித்திருக்கிறோம்
நகங்களை
கூர்மையாக்கியபபடி
பறவையின் கனவிலிருக்க
மிருகங்களாகியதை
நானும் அவனும்
யாருக்கும் சொல்லவில்லை
செட்டையை கழற்றி விட்டு
நழுவி நகர்கிற
மிருகமாகி
நானும் அவனும்
பிரிந்து போகிறோம்
நானும் அவனும்
ஒரு கூட்டமாகியிருந்ததை
யார் கவனித்தார்கள்
இந்த மிருகமுகங்களை
அணிந்ததையும் கூட
யார் கவனித்தார்கள்…..
பாம்பு நெளியும் அறை
சைக்கிளில் பாம்புகள்
நெளிந்து வழிகிறது
இன்னும் கயிறு
பாம்பாகவே தெரிகிறது
இருட்டை நிறைத்திருந்த
பாம்புகள்
பகலிலும் நெளிகிறது
சொற்களிலும்
புன்னகையிளலும்
நீ பாம்பை நெளிய விடுகிறாய்
பாம்புகளாய் காண்கிறாய்
கழுத்தில் பாம்பு
அசைய
கயிற்றில் விஷம் வடிகிறது
மரங்களையும்
வீதிகளையும்
நீ பாம்புகள் என்கிறாய்
புல்வெளிகளை
பாம்புமேடு என்கிறாய்
மேசையில் வந்துகிடந்த
பாம்பு மெல்ல
அசைந்து அசைந்து
அறையை விட்டு
வெளியேறுவதுபோல
நீ அறையை விட்டுபோகிறாய்
குட்டிப்பாம்புகளைப்போல
உனது சொற்களும்
உனது கோபங்களும்
கொட்டிக்கொண்டிருக்கிறது
பாம்புக்கயிற்றால்
நீ கட்டி வைத்திருந்த
பிடியும் முடிச்சும்
அறுந்துவிட
நான் வெளியில் விழுகிறேன்
மேசைக்கு கீழே புகைந்த சிகரட்
மின்சாரம் நிரபப்பட்ட
மீன் தொட்டியில்
துடிக்கிற
மீன்களைப்போல
உனக்கும் எனக்கும் இடையில்
மேசைவிளக்கு துடிக்கிறது
உடைந்த கதிரையை
கோதுமை மாப்பசையினால்
ஒட்டிவிட்டு
என்னை இருக்கவைத்து
பேசிக்கொண்டிருக்க
உனது குரூர வார்தைகளுடன்
கதிரையும் நானும்
உடைந்து விழுகிறோம்
கடல் கரையில்
நீயும் நானும்
குடித்தவிட்டுப் போட்ட
பியர் போத்தல்கள்
பிசுங்கானாகி
காலை கிழித்து விட்டிருக்கிறது
நீயும் நானுமிருந்து
பேசியகடல் மணல் கரையில்
குருதி கொட்டியிருக்கிறது
உனது சொற்களும்
பிசுங்கானைப்போல
என்னை
கிழித்தப் போட்டிருக்கிறது
முகம் பார்த்த கண்ணாடி
கைதவறி விழுந்து
உடைவதைப்போல
உனது சைக்கிளில் இருந்து
நான் விலகி விழுகிறேன்
நீ ஒளித்து வைத்து
புகைத்த
சிகரட்டின்
சாம்பல் தணலாகி காலை
சுடுகிறது
மேசைக்கு கீழிருந்து
சிகரட்டை
புகைக்கிறாய்
இனி
உனக்கும் எனக்கும்
இடையில்
கயிறுகளும் இல்லை
பாலமும் இல்லை
படிகளும் இல்லை
துரோகம் மட்டும்
சுற்றி வளைத்திருக்கிறது.
This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue
தீபச்செல்வன்
நீ பேசாது போன பின்னேரம்
நீ பேசாது போன பின்னேரம்
எனது சொற்கள் செத்துக் கிடந்தன
தூரத்தில் போனபிறகாவது
திரும்பிப்பார்ப்பாய்
என பார்ர்த்துக்கொண்டிருந்தேன்
உனது உருவம்
புள்ளியாய் சிறுத்து
கரைந்துவிட
எனக்குள்
நீ நிரம்பியயிருந்தாய்
என்னதான் பேசுவாய்
நான்தான்
என்ன கேட்கப்போகிறேன்
நெருங்கிவரும் பொழுது
தவிக்கிற நமது இருதயங்கள்
எப்பொழுது வெளித்தெரியும்
நீயும் நானும்
சொல்ல முடியாத உணர்வால்
துடிக்கிறதை
நிலவு பார்க்கிறது
பிரிந்ததுமில்லை
சேர்ந்ததுமில்லை
யாருக்கம் தெரியாது
நாமும் அறியாமலிருந்தோம்
ஒரு நாள் பின்னேரம்
உனது வீட்டில்
நாம் அருந்திய
தேனீர்க் கோப்பைகளினுள்
இணைந்து கிடந்தன
நமது இருதயங்கள்.
ஆள்களற்ற தொலைபேசி
ஆள்களற்ற தொலைபேசி
நமது மொழியில் ஏதோ
பேசுகின்றன
நீயும் நானும் பேசுவது
கம்பிகளின் வழியாய்
பாடலாக வழிகிறது
நேற்று நீ பேசிவிட்டுப்போக
நாள் முழுக்க
கொட்டிக்கொண்டிருந்தது
உனது சொற்கள்
உனது கண்களும்கூட
கம்பிகளின் ஊடே
பேசிக்கொண்டிருந்தது
தொலைபேசியின் ஊடாக
நமது குரல்கள்
இணைந்துகிடக்கிற
காற்றின் வெளியில்
நீயும் நானும்
எங்கிருக்கிறோம்
எனது கண்கள் கரைந்து விட
உனது முகம்
நிரம்பிவிடுகிறது
நமது இருதயங்களை சிலுவையில்
அறைகிறது
நீ இல்லாத நிமிடத்தின் ஒரு துளி
நேற்று
நமது உரையாடலை
அறுத்த வேகமான காற்று
இன்று
என் தனிமைமீது
உன் சொற்களால்
பேசிக்கொண்டிருக்கிறது
காற்றில்
கலந்திருந்தன நமது சொற்கள்
நாம்
இன்னும் பேசியபடியிருப்போம்
காற்று நமதருகில் வீசுகிறது
நீ பேசாத
தொலைபேசி
கையிலிருந்து தவறி வீழ்கிறது.
தாடிமுகம்
ஏன் தாடி வளர்த்திருக்கிறாய்
என்று கேட்கிறாள்
எனது தோழி
எப்போதாவது
தாடி வழித்த என் முகத்தை
கண்டிருக்கிறாயா
என்று கேட்டேன்
இல்லை என்கிறாள்
தானாய் வளர்கிற
எனது தாடியை
குழந்தைகளின்
முடியைப்போல
நான்
வருடிக்கொண்டிருந்தேன்
தாடிக்குள் நானும்
எனது முகமும் மறைந்திருக்கிறோமா?
அது ஒரு சோலையாக
நான் அதற்குள் உலவித்திரிகிறேனா?
நான் முகம்
மழித்தபோதும்
தாடி
முகத்தில்
ஒட்டியிருக்கிறது
முகம் மழித்தபடி
வகுப்பறையில் இருந்தேன்
அவள் தாடி பற்றி
பேசாமலிருந்தாள்
நான்கு நாட்கள் போக
ஏன் தாடி வழிக்க வில்லை
என்றாள்
நான்கு நாட்களுக்கு முன்பு
எனது தாடியை கண்டாயா
என்று கேட்டேன்
அப்பொழுதும்
நீ தாடி வளர்த்திருந்தாய்
என்றாள்
நான் தாடியாகியிருந்தேன்..
This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue
தீபச்செல்வன்
சிகரட் நண்பன்
வாகனங்கள் புகைத்தபபடி
போய்க்கொண்டிருந்தது
எனக்கு
ஒரு சிகரட் வேண்டும்
என்றான் நவராஜ்
அல்லது
என்னிடம் இருபது ரூபா இருக்கிறது
வா
ஒரு சிகரட் புகைப்போம் என்றான்.
கடையின் மேல் மாடியிலிருந்து
நானும் அவனும்
சிகரட்டை குடித்துக்கொண்டிருந்தோம்
கடையின் சமையல் பகுதியும்
புகைத்தபடியிருந்தது
அந்த மாடிக்கு செல்லும்
படிகள்
சாம்பல் படிகளாகியிருந்தன
ஒரு சிகரட்டை புகைப்பதற்காக
என்னை நகர் முழுவதும்
தேடிக்கொண்டு வந்தான்.
ஒரு நாள் இரவு
பெட்டிக்கடை ஒன்றிற்கு
பக்கத்தில்
நானும் அவனும்
ஒரு சிகரட்டை மாறிமாறி இழுத்தோம்.
அவனின் வீட்டில்
முழுநாளும் தங்கியிருந்தபோது
அம்மாவுக்கு தெரியாமல்
மாமரத்தில் ஏறி சிகரட்டை இரகசியமாய் குடித்தோம்
மாம்பூக்களில் கலந்திருந்தன சாம்பல்.
நான் உதிர்ந்த சாம்பலுக்காய்
வருத்தப்பட்டு தேடினேன்
விழுந்திருந்த ஓவியங்களை
ரசித்துவிட்டிருக்க மிதிபடும்
சாம்பலை கைகளால் மூடினேன்
எப்போழுதுக்குமாய் எனது தோள்களை
இறுகப்பிடித்திருந்தான்.
சைக்கிளின் முன்னாலிருந்தான்
பொக்கற்றில் கிடக்கும்
ஒரு சிகரட்டோடு
அந்த சைக்கிள் நகர மறுத்தது.
நாளைக்கு நீ போகாதே என்றான்
என்றாவது நான்
போயாகவேண்டியிருந்தது
அன்று முழுக்க அவனின்
தேளில் நகராமல் சாய்ந்திருந்தேன்.
சாம்பல் கிண்ணத்தில் நிறைந்து
கிடந்தன
சாம்பல்களோடு
சிகரட்டின் அடித்துண்டுகள்
சிகரட்டில் கலந்திருந்த நமது சொற்கள்
கிண்ணத்தில் நிரம்பிக்கிடந்தது.
நமது வாடிக்கையான தேனீர்கடையின்
மொட்டைமாடியில்
நம்மோடு இரண்டு சிகரட்டுகள்
புகைந்தன
அவனின் முகம் கரைந்தபடியிருந்தது
நான் நிலவைப் பார்த்தேன்
அதுவும்
ஒரு சிகரட்டை புகைக்க
கொட்டிக்கொண்டிருந்தது சாம்பல்
நமது நகரமெங்கும்…..
————————————————-
செலவு
————————–தீபச்செல்வன்
மூன்று நூறு ரூபாய்
தாள்களின்
முகத்தோடு பியர்
சிரித்துக்கொண்டிருந்தது
கிளாசில்
நிரம்பியிருந்த
வீண்செலவை
குடித்து விட்டு திமிரடைந்தேன்.
கலைச்செலவு
இருபத்தைந்து ரூபா
மதியமும் இரவும்
தொண்ணுறு ரூபா
ஜயாயிரம் ரூபாவில்
மீதி
படிப்புபகரணங்களுக்கு என்று
அவன் சிரித்தபடி கூறினான்.
மாலைத் தேனீரை தவிர்க்கப்போறேன் என்றான்.
அம்மாவின் காசுகள்
வியர்வைகள் என்றான்
எனக்கு வந்த
இரண்டாயிரம் ரூபாவில்
பல ஆயிரம்
அம்மாவின் களைப்புகள் கேட்டன.
அந்த சின்னவன் சிரித்தான்
எனது முகத்தில்
ஓங்கி அறைந்தது
அந்த பொறுப்புடைய வாழ்க்கைச் சிரிப்பு.
கிளாஸ் உடைய
அதற்குள்
எனது உடைந்த முகம்
நொருங்கிக் கொட்டியது…
—————————————————-
இரவு நதி
————————–தீபச்செல்வன்
இரவை மிருகம்
என்ற
நண்பனிடமிருந்து
நான் பிரிந்து விட்டேன்
இரவு நதியாகி பரவுகிறது
படிகள் இல்லாத
மொட்டை மாடியில்
விரிந்து கிடக்கிறது
வெக்கையடிக்கும்
எனது
பாட புத்தகங்கள்
அறையை பூட்டிவிட்டு போகிறான்
தோழன்
எனதறைக்கு
காதலி ஏறிவர
படிகள் இல்லை என்றாள்
இரவு அறைக்கு
ஏறி வருகிறது
இரவை ஒரு கோப்பையில்
நிரப்பி வைத்து
பார்த்துக்கொண்டிருந்தேன்
மின்குமிழ் அழுதது
படியிறங்கும்
என்னை தின்பதற்காய்
கீழே
ஒரு மிருகம் திரிகிறது.
நிலவு தேடிய குழந்தை
வாகனங்களுக்கிடையில்
குழந்தையின்
அழுகையும் சிரிப்பும்
தாயின் பாடலும்
நசிந்து விடுகிறது
நசிக்கப்பட்ட
கொஞ்ச சோறுகளுடன்
தாய் நிலவை
தேடிக்கொண்டிருந்தாள்
உயர வளர்ந்து
வானத்தை மூடிய
கட்டிடங்கள்
எரிந்து புகைவிட்டன
தலையில்
தூக்கி வைக்கப்பட்ட
ஜந்து மாடிகளையும்
இறக்கி
எறிந்து விட்டு
மொட்டைமாடியில்
அரிதாய் திரிகிற
காற்றை பிடித்து
குடித்துக்கொண்டிருந்தேன்
நிலவு வானத்தில்
ஒரு மூலையில்
ஒட்டி ஒளிந்திருந்தது
தாய் நிலவை
தேடிக் களைக்கிறாள்
சேரிக்குடியிலிருந்து
அவள்
என்னைக்காட்டி
குழந்தையின் வாயில்
சோற்றை திணிக்கிறாள்.
———————————————-
குறியுடன் வரும் இரவு
—————தீபச்செல்வன்
அடையிலிருக்கும் கோழியை
வலிந்து
சேவல் புணர்கிறது
இன்னும் சில சேவல்கள்
முதுகைக் கிழித்து
குறியை புதைக்கின்றன
சேவலின்
கால்களுக்கிடையில்
கோழி
நசிந்து கிடக்கிறது
இருட்டில் இருட்டுடன்
புணர்வதைப்போலிருக்கிறது
இரவோடு
முகம் கரைகிறது
வெறும் குறிகளும்
முலைகளும்
நிறைந்து தெரிகிற
நினைவில்
குறி புதைந்து விடுகிறது
சொற்களில்லை
நீளமில்லை
உடல்கள் ஒட்டிக்கொள்ளாது
சேவலைப்போல
குறி
எழும்பி விழுகிறது
குறியை புதைத்து விடுகிற
இரவு
பயங்கரமாய் வருகிறது
பகல் குருடாகிப்போக
இரவானதும்
நெருங்கிவிடுகிறோம்
குறிகள் புதைந்து விடுகிறது.
—————————————–
அவனுக்கு சொல்லாமலே
நான் அறையை விட்டு போய்விட்டேன்
எனது புத்தகங்களையும்
உடுப்புகளையும்
வந்து தேடினான்
எனது கட்டிலுக்கு கீழாய்
பழைய செருப்பு கிடந்தது
முகம்
பார்க்கும் எனது கண்ணாடியையும்
பழைய
வானொலிப்பெட்டியையும்
அவனுக்காய்
விட்டுச்சென்றிருந்தேன்
கண்ணாடியின் மூலையில்
உடைந்த
எனது துண்டு முகம்
ஒட்டியிருந்ததாய்
யாரிடமோ சொல்லியிருந்தான்
தண்ணீர் கூஜாவில்
தனித்தமுகம்
மிதக்கக்கண்டான்
அந்த வானொலிப்பெட்டி
எப்பொழுதும்
பாடியபடியிருந்தது
அது ஒரு குளிரான அறை
நான் வேறொரு
அறைக்கு சென்றபோது
என் புத்தகங்களிற்குள்ளும்
ஆடைகளிற்குள்ளும்
வெக்கை புகுந்தது
அந்த அறையின்
பயங்கரத்தை பற்றி
நான் அவனிடம் எதுவும் சொல்லவில்லை
அதற்கு பிறகும்
அவன் என்னை கண்டு பேசினான்
நான் ஒரு நாள்
அந்த பழைய அறைக்கு
சென்று
அவனுக்கு பக்கத்தில் படுத்திருந்தேன்
அவனது அறை
வெளித்து காற்று நிரப்பியிருந்தது
ஆறுதலாய் பேசினான்
அறையின் சுவர்கள் எங்கும்
புன்னகை
பூத்து விரிந்து கிடந்தது
தனியாளாய் படிகளால்
கீழே இறங்கினேன்
பயங்கர அறை ஒன்றினுள்
சென்றடங்குவதை
அவன் கண்டான்
வெளியில் தூக்கியெறிந்த
ப்பாக்கோடு
வீதியில் நின்றேன்
அந்த இரவில் என்னை
யாரும் காணவில்லை
மீண்டும் அவன் என்னை
கூட்டிச் சென்றான்
அந்த அறைக்கு
மாடியின் படிகள் பூத்திருந்தன