கடன்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

சபீர்


நிசப்தங்களுடன்
உரையாடுவதில்
மனம் லயிப்பதுண்டு.
நீண்டநேரத்
தனிமையில்…
எனக்குப் பிடிக்காதவர்
திறக்க கதவோ
பிடித்தவரைத்
தடுக்க தாழ்ப்பாளோ
இருக்காத நிசப்தம்…

உரையாடல்களினூடே
அண்ணனிடமோ தம்பியிடமோ
அக்காளிடமோ தங்கையிடமோ
அப்பாவிடமோ நண்பனிடமோ
மனைவியிடமோ காதலியிடமோ
என
எல்லோரிடமும்
கேட்கப்படாமல் விடுபட்ட
கேள்விகள்
அணிவகுத்தாலும்
அம்மாவிடம் மட்டும்
சொல்லி முடிக்கவியலாத
பதில்கள்
மட்டுமே
மிஞ்சி நிற்கின்றன!

Sabeer abuShahruk,

Series Navigation

சபீர்

சபீர்

கடன்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

நடராஜா முரளிதரன்சகல மூலைகளிலும் இருந்து
தனித்துவிடப்பட்ட போதும்
தாக்குவதற்கான படையணிகள்
இல்லாதபோதும்
கண்ணுக்குப் புலப்படாத
பிரதேசங்களிலிருந்து
கொடூரமான அம்புகள்
பாய்ச்சப்படுகின்றன

பெரும்பாலானவை
அது பற்றியதாகவே
இருக்கின்றது

வறுமை எவ்வளவு
கொடியதாக இருக்கின்றது
நேரகாலத்துக்கு
அது கணக்குகளை
முடித்துவிட
அனுமதிப்பதில்லை

அதனால்
முகம் குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
அதனைக் கண்டு
பலர் சிரித்தும்
சிலர் அனுதாபப்பட்டும்

எல்லாவற்றையும்
வென்று விடுவதற்கான
வைராக்கியத்தை இழந்து
நடந்து கொண்டிருக்கின்றேன்

மாலைச் சூரியன்
தெறித்து விழுந்து
நிழலாகிப் போகின்றது
என் நிழல் என்னை
விழுங்கி விட்டிருந்தது
பனிக்கும்பியின் உச்சிகள்
தகர்ந்து கொண்டிருந்தன

தோலைக் கிழித்து
நாளங்களின்
இரத்த ஓட்டத்தில் கலந்து
உடலின் மூலைமுடுக்குகளில்
குத்திக்கொண்டு நின்றன
அம்பின் கூரிய முனைகள்

nmuralitharan@hotmail.com

Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)

கடன்

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

எம். ரிஷான் ஷெரீப்


சுவர்க்கடிகாரம் ஆறடித்து ஓய்வதற்குள் சட்டென்று விழிப்பு வந்துவிட்டது முருகேசனுக்கு. நள்ளிரவு தாண்டியும் தான் கட்டிலிலேயே தூக்கம் வராமல் விழித்திருந்தது நினைவுக்கு வந்தது.
எல்லாம் கடன் ஞாபகம்தான். அவசரத்துக்கு எடுத்த பணம் ஐயாயிரம் கொஞ்ச நாளாக நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருந்தது.
‘ ஒரு மாதத்தில் அறுவடை. இரண்டு மாதத்துக்குள் எப்படியும் தந்து விடுகிறேன் ‘ என்ற கெஞ்சலையடுத்து பெறப்பட்ட கடன். இன்றோடு ஆறு மாதங்கள் முடியப் போகின்றன.
என்ன செய்ய ? அறுவடைக்கு ஊரே காத்திருந்த சமயத்தில் பெருமழை பெய்ததில் பயிர்களெல்லாம் நாசமாகிப்போயின. நல்ல அறுவடையை எதிர்பார்த்திருந்த நிறைய பேருக்கு நஷ்டம்தான்.
ஒரு வகையில் சிவராசன் இவருக்குத் தம்பி முறை வேண்டும் . மூன்றாம் மாதம் இவரை சந்திக்க நேர்ந்த சமயம் கடன் பற்றி அவரே ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. இருந்த பிரச்சினைகளெல்லாம் சொல்லப் பட்டு இன்னும் மூன்று மாதங்கள் தவணை கேட்கப்பட்டது. சரியாக இன்னும் மூன்று மாதத்தில் கையில் பணம் இருக்கவேண்டும் என்று உறுதியான பின்னர்தான் இவர் வீட்டுக்கே வந்தார்.
கமலமும் கடன் பணத்தைப் பற்றி அடிக்கடி அலுத்துக் கொள்வது வழமையானது.இவரும் எப்படியாவது முடித்து விடலாம் என்றுதான் பார்க்கிறார். மளிகைக் கடை , பால், பேப்பர் பாக்கி எல்லாம் சேர்ந்து வரும்போது கமலத்தின் புலம்பலிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. நகரத்தில் பணி புரியும் இவரது மகனும் ஒரு மாதமாக பணம் எதுவும் அனுப்பியிருக்கவில்லை. கஷ்டத்தை சொல்லி விடலாம் என்றால் சுய கௌரவம் தடுத்தது. எல்லாம் சேர்ந்து சில நாட்களாக கவலையை உண்டு பண்ணியிருந்தது .
இது விடயமாக சிவராசனிடம் எப்படிப்பேசுவது ? தப்பாக எடுத்துக் கொள்வானோ? குடும்ப விஷயம். கஷ்ட நஷ்டங்களை பொறுத்துத்தான் போக வேண்டும். நான்கு பேருக்குத் தெரிந்தால் அவமானம்.
யோசித்து , ஒரு முடிவுக்கு வந்தவராக கை, கால் ,முகம் கழுவி தலைசீவும் சமயத்தில் சிவராசனின் குரல் வாசலில் கேட்டது . கூடவே கமலத்தின் “என்னங்க…” வும்.
வாசலுக்கு வந்தார். உள்ளே வரும்படி அழைத்தார்.
“இல்லைண்ணா. நிறைய நாளா ரொம்ப செலவுகள் . உங்களுக்கே தெரியும் . பேத்தி காதுகுத்து , அத்தை திதின்னு செலவு ரொம்ப அதிகமாய்டுசசு . உர விலைகளும் கூடிடுச்சு. ”
கமலத்தையும் இலேசாக பார்த்துவிட்டு அவர் தொடர்ந்தார் .
” இருந்தாலும் தக்க சமயத்துல கடவுளாக் கொடுத்த மாதிரி அவ போட்டிருந்த சீட்டு விழுந்துடிச்சு. அதான் முதல் வேலையா உங்க கடனைத் திருப்பி குடுத்துட்டு ப் போகலாம்னு காலையிலே ஓடி வந்தேன். ”
என்று சொல்லியவாறே சிவராசன் எடுத்து நீட்டிய பணத்தை முருகேசன் புன்னகையோடு வாங்கிக் கொண்டார்.

-எம். ரிஷான் ஷெரீப் ,
இலங்கை.


msmrishan@yahoo.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

கடன்

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

அஸ்வகோஷ்


கொண்டா ரெட்டியாரிடம் ஒரு ரூபாய் கடன் வாங்குவதானால் கூட பத்து நடை நடந்தாக வேண்டும் என்பது ஊரில் எல்லோருக்கும் அத்துப்படியான விஷயம். ஊரில் பெரிய புள்ளி அவர்தான். பயிர்வழி, வெளிவிவகாரம், நாலு பெரிய மனுஷாள் சாவகாசம் எல்லாவற்றிலுமே ஒசத்தியும் அவர்தான். ரெண்டடுக்கு மெத்தை வீடும் சுத்துக்காட்டில் ஆளுயரமதில் சுவரும், அதைப்போல மூணு மடங்கு உயரமுள்ள கனமான வைக்கோல் போரும் ஊரில் வேறு யாருக்கும் கிடையாது.

எல்லாம் கால் காணி, அரை காணிகள் காலாணி குடிசைகள். நெல்லு வட்டிக்கும், பத்து வட்டிக்கும் கடன் வாங்குபவர்கள். நூறுக்கு நூற்றி ஐம்பதாய் புரோ நோட்டு எழுதிக் கொடுப்பவர்கள். அன்னாடங் காய்ச்சிகள்.

குளிகுளித்த செலவுக்கு அர்ஜன்டாய் ஒரு பத்து ரூபாய் வேண்டுமென்றால் கூட ரெட்டியாரிடம் தான் போய் நிற்க வேண்டும்.

மண்ணாங்கட்டிக்கு அதுமாதிரி ஒரு அர்ஜன்ட்.

குளி குளித்த செலவு இல்லை. ஒரு ஒண்ணே கால் காணி ஐ.ஆர்.8 நட்டிருந்தான். (பயிர் பச்சை கட்டி வருகிற சமயம்) பூச்சி மருந்தும் உரமும் வாங்க வேண்டும். ஒரு நூறு ரூபாய் இருந்தால் போதும். அவரிடம் தான் கேட்க வேண்டும். நடக்கிறான்.

* * *

நடை ஒண்ணு:

மத்தியான நேரம். கொஞ்சம் தாழ்ந்திருக்கும். ஈ மொய்க்கும் அமைதி. பெரிய வீட்டின் வெளியே யாரையும் காணோம். வெராந்தா படியேறி திறந்திருந்த கதவு வழியாக லேசாய் தலையை நீட்டிப் பார்க்கிறான். உள்ளே பேச்சுக் குரல் கேட்கிறது. கொஞ்சம் தயங்கி நிற்கிறான். மெள்ள பணிவோடு அழைக்கிறான்.

‘ரெட்டியாரே…….ரெட்டியாரே ‘

ரெட்டியார் வரவில்லை; ரெட்டியார் வீட்டு அம்மா வருகிறார்கள்.

‘யாரது ‘

‘ஏங்க ‘

‘நீ தானா… ? என்ன விஷயம் ? ‘

‘ரெட்டியார் இல்லீங்களா ? ‘

‘தூங்கறாரு ‘

சுவற்றைப் பார்த்து முழிக்கிறான். ரெட்டியார் குரல் கேட்ட மாதிரியிருந்தது. தயங்கி நிற்கிறான். அம்மா முகத்தைச் சந்தேகத்தோடு நோக்குகிறான்.

அம்மா சுள்ளென்று முறைக்கிறாள்.

‘ஒண்ணுமில்லிங்க. ஒரு சமாசாரம். பார்க்கலாம்னு….அப்புறமா வந்து பார்த்துக்கறேங்க. சாயரட்சை….. ‘

* * *

நடை ரெண்டு:

பொழுது போன சமயம். சாயரட்சை. ரெட்டியார் வீட்டிலிருக்கிறார். பெரிய நாற்காலி போட்டுக் குந்தியிருக்கிறார். நாற்காலி கொள்ள உடம்பு. பத்தொன்பது காணி நஞ்சையும், இருபத்தி ரெண்டு காணி புஞ்சையும் கண்களில் கொப்பளிக்கிறது. வெற்று உடம்பு. மேல் துண்டு. பச்சையரிசியும், பருப்பும் நெய்யும்…வயிறு பளபளக்கிறது.

வெராந்தாவுக்குக் கீழே நாலைந்து பேர். ஓரமாய் கைக்கட்டி நிற்கிறார்கள் பணியாட்கள். மேலே சில ஊர் நாட்டாண்மைகள். மூணு காணி நாலு காணிகள். அந்தஸ்துக்கு ஏற்றா மாதிரி அது அதுகளுக்கும் இடம்.

கும்பலாயிருக்கிறதே…மருகி நிற்கிறான். கலையட்டுமே…..காத்திருக்கிறான்.

ரெட்டியார் சாகசம் செய்கிறார். இவன் வந்த மாதிரியோ பார்த்த மாதிரியோ காட்டிக் கொள்ளாமல் பேச்சில் இருக்கிறார்.

கூட்டம் கலைகிறமாதிரி தெரியவில்லை. நேரம் கழிகிறது….

ரெட்டியார் எழுந்திருக்கிறார். எழுந்தவர் உள்ளே போகிறார்.

கூட்டம் கலைகிறது. தனியே நிற்கிறான்.

கொஞ்ச நேரம்……

ரெட்டியார் வருகிறார். சட்டை மாட்டிக் கொண்டு….

வாயைத் திறந்து ஏதோ சொல்லப் பார்க்கிறான். கை நீட்டி அவர் கவனத்தை ஈர்க்கப்பார்க்கிறான்.

கண்டு கொள்ளாத மாதிரி நேரே போகிறார் வெளியே…

எங்கோ அவசரமாய்ப் போகிறமாதிரித் தெரிகிறது……

வாயடைத்து நிற்கிறான்.

எப்படிக் கேட்பது ?

* * *

நடை மூணு:

நல்ல நேரம்…..ரெட்டியார் மட்டும் தனியே இருக்கிறார். ஓய்வாக….பேப்பர் படித்துக் கொண்டு.

அடிமேல் அடி வைக்கிறான். தேங்கித் தேங்கி நகர்கிறான். மண்ணில் நிற்கிறான். துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்கிறான்.

‘நமஸ்காரங்க ‘ இரண்டு கையாலும் கும்பிடுகிறான்.

தலையைக் கூட நிமிராமல் தலையை ஆட்டி ஏற்றுக் கொள்கிறார்.

தலையைப் பார்க்கிறான். கழுத்தைச் சொரிந்து கொள்கிறான்:

‘ஒங்களை தாங்க பார்க்கலாம்னு…. ‘ இழுத்து நிறுத்துகிறான்.

‘ம்…. ‘ கொட்டுகிறார்.

‘நேத்து சாயரட்ச கூட வந்தேங்க…. ‘

‘ம்….. ‘

‘மத்தியானம் வந்தப்போ தூங்கறதா சொன்னாங்க….. ‘

‘ம்…. ‘

‘ஒரு சமாசாரமா தாங்க ‘

‘என்ன விஷயம் ‘ பணம் கிணம்னு இப்ப எதுவும் கேட்காத என்ன. நானே பெரிய மொடையில் இருக்கறேன். வேற எதுனாண்ணா சொல்லு. ‘

பேப்பரிலிருந்து முகத்தை எடுக்காமல் அடுத்த பக்கத்தைப் புரட்டுகிறார்.

பேசாமல் நிற்கிறான். குழப்பமாக நிற்கிறான். எல்லோருக்கும் ஆரம்பத்தில் சொல்கிற பதில் தான். ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறான்.

‘அதுக்கு தாங்க வந்தேன். நீங்க எடுத்த எடுப்புலியே இப்படி சொல்லிட்டா எப்படிங்க…ஒன்னும் கனமாகூட இல்லீங்க, ஒரு நூறு ரூபாதான்… ‘

‘அதெல்லாம் இப்ப எதுவும் கெடையாது. முகம் வாடி நிற்கிறான். ‘

அவர் பேப்பரைப் பார்க்கிறார்.

அவன் முகத்தைத் தேடுகிறான். மெளனம் ‘

அவர் எழுந்து உள்ளே போகிறார், பேப்பரை மூடி வைத்து விட்டு.

‘பின்னிக்கி மேல வரட்டுங்களா ‘

‘பாப்போம் போ ‘ ‘

* * *

நடை நாலு:

அதே நாற்காலியிலிருக்கிறார். சும்மா தான் குந்தியிருக்கிறார். போய் நிற்கிறான்.

‘எதுக்கு இப்பப் பணம் ? ‘ மிடுக்குடன் கேட்கிறார்.

விஷயத்தைச் சொல்கிறான், கொஞ்சம் உற்சாகமாய்…..

‘ஏன் கவர்மண்டுலதான் லோன் குடுக்கறாங்களே…. ‘

‘அது என்னங்க நம்ப அவசரத்துக்கு கெடைக்குமுங்களா… ‘ ‘

‘ஏன் உங்க கவர்மண்டு தானே… ‘ ‘ சிரிக்கிறார்.

‘அது இப்ப இல்லிங்க…. ‘

‘நீங்க தான எல்லாம் சேர்ந்து ஓட்டுப் போட்டாங்க ‘

‘ஏதோ அப்ப புத்தி கெட்டுப் புட்டம்ங்க; ஏற்கனவே இருந்தது சரியில்லெண்ணு…. ‘

‘இவங்க சரியா இருக்காங்களா… ‘ ‘

‘ரெண்டு பேருமே சரியில்லிங்க ‘

‘ரெண்டு பேரும் செரியில்லண்ணா… ‘

‘புதுசா வேற ஆருன்னா வந்தாதாங்க…. ‘

புரியாமல் பார்க்கிறார்.

கொஞ்ச நேரம் அமைதி.

காத்திருக்கிறான்….

கலைக்கிறார்…..

‘ஒனக்கு மரம் ஏறத் தெரியுமா….தென்னமரம் ? ‘

‘ஏங்க…. ? ‘

‘ஏறி நாலு எளநீர் புட்டுப் போட்டுவை. தாஸில் தாரெல்லாம் வர்ராங்களாம் இப்ப, பாத்து நல்லா எளசா…நம் வடவண்ட மரத்துல ஏறி பறி. ‘

நெஞ்சைப் பூரிக்கொண்டு வந்து நிற்கிறான்.

‘நடையில வச்சிருக்கேங்க ‘

‘நாளைக்கு வாயேன் ‘

‘சரிங்க ‘

* * *

நடை

ஐந்து:

ரெட்டியார் இருக்கிறார். ஏதோ யோசனை….மெய்யாலும் யோசனையோ….

இதெல்லாம் கெளரவம்.

ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் ‘

எப்படி அந்த மோனத்தைக் கலைப்பது…..

மரியாதைக் குறைவு….

அகஸ்மாத்தாய் கலைகிறது.

இமை விரித்து நோக்குகிறார்.

‘அந்த கவல மாடு வந்து இருக்கு பாரு; அதைப் புடிச்சிக் கட்டு. ‘

கட்டுகிறான்.

‘அப்படியே நாலுவக்ய புடுங்கி போடு ‘

போடுகிறான்.

‘பின்னியும் கொஞ்சம் புடுங்கி கொட்டாய்லியும் போட்டுவை ‘ வைக்கோல் சுணையோடு வந்து நிற்கிறான்.

‘போய் அப்புற மேல வாயேன் ‘

அப்புறம் மேல என்றால் எப்பவோ…

கேட்க முடியுமா…..

* * *

நடை ஆறு:

‘பேப்பர் லேபிலெல்லாம் வாங்கியாந்திருக்கியா…. ‘ பணம் மடியிலிருப்பது மாதிரி கேட்கிறார்.

‘இல்லிங்க. சொன்னதும் வாங்கியாந்துடலாம்னு. தோபோய் வாங்கியாந்துடறேங்க…… ‘ பதட்டத்தைக் காட்டாமல் அடக்கத்துடன் சொல்கிறான்.

‘சும்மா குடுப்பாங்கன்னு நெனைச்சியா….. ‘ இளக்காரம்.

மெளனம். போய் வருவதா…நிற்பதா ‘ புரியாத தேக்கம்.

அதற்குள் ரெட்டியார் ஊட்டம்மா வருகிறார்கள். தெலுங்கில் என்னவோ திருவாய் மொழிந்தார்கள். இவனுக்கு தெலுங்கு தெரியாது. குழம்புகிறான். அடுத்த விநாடியே தெரிந்து விடுகிறது.

‘உள்ள நாலு மூட்ட நெல்லு இருக்குதாம். அத அவுத்து கொட்டி அளந்து ஊறவச்சிட்டு வா ‘

உள்ளே போகிறான். வெளியே வருகிறான். உடம்பெல்லாம் வியர்வை. நெல்லு சொணை. ஆயாசம்….கண்கள் மயங்க காலியான நாற்காலியைப் பார்க்கிறான். ரெட்டியார்…. ‘

எங்கேயோ வெளியே போய்விட்டாராம் ‘

* * *

நடை ஏழு:

‘பேப்பரும் லேபிளும் வாங்கியாந்திருக்கேங்க ‘

‘எழுதியாந்திட்டியா… ‘

‘இல்லிங்க; இங்கியே எழுதிக்கலாம்னு….. ‘

‘ஒண்னொன்ணுமா சொல்லனும். அப்பிடியே யாருகிட்டன்னா எழுதி எடுத்தும் வந்திருக்கக் கூடாதா…. ‘

திகைக்கிறான். மனசில் குட்டிக் கொள்கிறான்.

‘நம்ப இவரு எழுதுவாருங்க; சொக்கலிங்க மொதலியாரு. ஊட்டத்தான் இருப்பாரு. தோ போய் வந்துடறேங்க…. ‘

‘ஏன் உம் பையனுக்கு எழுதத் தெரியாதா…. ‘ ‘

‘தெரியாதுங்க. பதினொன்னாவது வரிக்கும் தாங்க படிச்சிருக்கான் ‘

‘இப்ப என்னா ஊட்டுல சும்மா தான இருக்கான் ‘

‘ஆமாங்க…. ‘

‘சும்மா இருந்தா இப்பிடி அனுப்பி வையேன் ‘

‘அனுப்பறேங்க….. ‘

‘அப்படியே போற வழில நம்ப செட்டியார் கடையில அர மூட்ட புண்ணாக்கு இருக்கும். அத ரவ எடுத்தாந்நு இப்புடி வச்சிட்டுப்பூடு. ‘

* * *

நடை எட்டு:

வீட்டில் ரெட்டியாரைக் காணோம். பையன் தான் இருக்கிறான்.

ரெட்டியார் பையன் இல்லை. இவனோட பையன்.

கணக்கெழுதிக் கொண்டிருக்கிறான். சிட்டா …..வரவு செலவு….. கூட்டல் கழித்தல்….அம்போ என்று. அப்பாவித்தனமாய்…

‘ரெட்டியார் இல்லியாடா…. ‘

‘இல்லப்பா. எங்கியோ போயிருக்காருக்….. ‘

‘எங்க…. ? ‘

‘தெரில்லப்பா…. ‘

‘எப்ப வருவாரு….. ? ‘

‘தெரியாதுப்பா. எங்கிட்ட ஒண்ணும் சொல்லல ‘

‘எதுக்குடா தெறம் நீ ‘ ‘

‘ஏன் நீ தான படிக்க வச்சே…. ‘

பையன் கேட்கவில்லை. ரெட்டியார் குரல்.

உள்ளேயிருந்து வருகிறார்.

என்ன பிள்ளையோ, மனசால் அடித்துக் கொண்டான்.

‘எழுதியாந்துட்டங்க ‘ திருப்தியோடு சொல்கிறான்.

‘எவ்வளோ போட்ட ‘

‘எல்லோருக்கும் போடறாமாதிரி தாங்க. ‘

தருகிறான்.

வாங்கிப் பார்க்கிறார்.

‘சாட்சி ‘ அது ஒரு நட நடப்பியா…… ‘

* * *

நடை ஒன்பது:

பாண்டு– ‘குறித்த கெடுவுக்குள் பணத்தை திருப்பித்தரத் தவறினால் ஆகும் கோர்ட் செலவுகளுடன் என் சொத்தில் தாவா செய்து வசூல் செய்து கொள்ள… இந்தப்படிக்கு நான் சம்மதித்து எழுதிக்கொடுத்த…., ‘ஷரா ஷரத்துக்களெல்லாம் அடங்கிய பிராம்சரி நோட்டு. ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்திட்டது. சாட்சி உள்பட சம்பூரணமாய்…..ரெட்டியார் முன்னே நீட்டுகிறான்.

பரிசீலனை செய்கிறார்.

பணிந்து நிற்கிறான்.

இன்னும் ஏதாவது குறையிருக்குமோ…

ஒன்றும் இருக்கிற மாதிரித் தெரியவில்லை.

ஏறக்குறைய கடைசி கட்டம்.

பதட்டத்தில் மனசு அடித்துக் கொள்கிறது…..

கடைசி நேரத்தில் ஏதாவது வந்து… நேரத்தை கைகளால் பிடிக்கிறான்.

‘பூராவும் பணமே வேணுமா ‘

‘ஒரம் வாங்க தாங்க. பழைய கடன் வேற இருக்குது ‘ தயங்கி சொல்கிறான். தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது…. ‘

‘ஏன் யூரியா கொஞ்சம் போடேன்…. ‘

‘அது இதுக்கு சரிபட்டு வராதுங்க. இது புதுரகம் இல்லிங்களா… ‘

‘எங்கிட்ட ஒரு மூட்ட யூரியா இருக்குது ‘

என்ன பதில் சொல்வது ?சும்மா நிற்கிறான்.

முகம் சுருங்குகிறார்.

‘சரி அப்ப காலம்பர வந்து வாங்கிக்கோ…. ‘

திகைத்து நிற்கிறான்.

பாண்டு அவரிடம்…. ‘

‘பணம் கொடுத்தப்புறம் பாண்டு தர்ரேனுங்க. அதக்குடுங்க இப்படி… ‘கேட்க முடியுமா ‘ அவ்வளவு நம்பிக்கை இல்லாமலா…. ‘

யோசனையில் ஒரு கணம். மறந்தாற் போல நிற்கிறான்.

நின்றதற்குப் பலன்… ‘

‘ஊட்டுல எதுனா வேல இருக்குதா….. ‘ ‘

‘ஒண்ணும் இல்லிங்க. மருந்து வாங்கியாந்தா அடிச்சிட்டு அப்படியே ஒரம் வாங்கிப் போட்டுடவேண்டிதான் ‘

‘அப்ப அந்த மாட்டுக் கொட்டாய ரவ பாரு. என்னுமோ தொறத் தொறன்னு ஒழுவுதாம். ரெண்டு வெழல் கத்தையாவது எடுத்துப் போட்டு எங்க, எங்க போக்குப் போவுதுன்னு பாத்து அடச்சிட்டுப் பூடு. ‘

* * *

நடை பத்து:

ரெட்டியாரைக் காணோம். காத்துக் கொண்டிருக்கிறான்.

ரொம்ப நேரம் கழித்து வருகிறார். நேரே உள்ளே போகிறார். கொஞ்ச நேரம் கழித்து…..

சொக்காயெல்லாம் கழற்றி விட்டுத் துண்டால் உடம்பை ஒற்றியபடி வெளியே வருகிறார்.

சாவகாசமாய், நிம்மதியாய், பிரச்னைகளே இல்லாதவராய்…. ‘அங்க மன்னாதக் கவுண்டர் இருந்தா நான் வரச் சொன்னேன்னு சொல்லிக் கூப்ட்டும் வா….போ ‘ ‘

போய்த் திரும்பி வருகிறான்.

‘ஊட்டுல இல்லிங்களாம்…. ‘

‘எங்கியாம்…. ‘

‘ஊருலதான் இருக்காருங்களாம். எங்க போயிருக்காருன்னு தெரியாதாம். ‘

‘யாரு சொன்னது அவன் சம்சாரமா ? ‘

‘இல்லிங்க அவர் பொண்ணு ‘

‘அந்தப் பொண்ணு இன்னும் கட்டிக் குடுக்கல….. ‘

‘இன்னும் இல்லிங்க ‘

‘மின்ன என்னுமோ கலியாணம் அது இதுன்னு பேசிக்னு இருந்தாங்களே… ‘ ‘

‘இல்லிங்க வந்து பாத்துட்டுப் போனதோட சரி ‘

‘நான் ஆயிடுச்சாங் காட்டியம்னு பார்த்தேன் ‘

பல்லைக் கடித்துக் கொண்டு நிற்கிறான். வேறு வழியில்லாமல்.

‘ம்…. ‘

யோசித்தவர் போல் இழுத்து நிறுத்தினார்.

ஒரு செறுமல். கொஞ்சம் மெளனம்.

நெற்றி சுருங்க தள வரிசையை பார்த்தார்.

‘பணம் ஒரு முந்நூறு ரூவா தரணம். ரெண்டு நாளா ஆள உட்டு அனுப்புறேன் தோ அதோன்றானே தவர ஆளே கண்ணுல ஆப்புடமாட்டன்றான்…. ‘

‘அதப்பத்தி இப்ப என்ன ‘ எண்ணம்தான் ‘ மனசில்.

‘சரி அப்ப நீ போய் சாயங்காலாமா வாயேன் அதுக்குள்ள எங்கனா பாத்து வக்யறேன். ‘

நகர மனமில்லை. சந்தேகத்தோடு தயங்குகிறான்.

மோழியனூராமூட்டுது வண்டி போவுதுங்க திண்டிவனம்; கூடவே போனா வண்டியிலேயே போட்டுக்னு வந்துடலாம்னு…. ‘

அதிகமாக சொல்லி விட்டோமோ….

அவர் முகத்தை மேய்கிறான்.

‘அதுக்கு என்ன என்னா பண்ணச் சொல்றே… ‘ ‘

‘சுள்ளென்று காய்கிறார். பரிதாபமாய் நிற்கிறான்.

‘நீ ‘பாண்ட ‘ வேணும்னா கூடம் எடுத்தும் போப்பா. உங்களுக்கெல்லாம் பச்சாதாபமே பார்க்கக் கூடாது. எழுதிக் குடுத்துட்டதும் ஒடனே வைடான்றியே ‘ எங்கிருந்து போறது. நானே எவ்வளவோ …..மொடையுல ஏதோ போனா போவுது கேட்டுட்டியேன்னு பார்த்தா சே ‘ இதுக்குத்தான்…. ‘

‘இல்லிங்க…இல்லிங்க. அதுக்காக இல்லிங்க. ‘

குறுக்கிட்டு கெஞ்சுகிறான்.

ஒரு நிசப்தம். ஒரு கெக்கரிப்பு.

ஒரு கலங்கிய யோசனை. தணிந்த குரல்.

‘அப்ப சாயரட்சை வரட்டுங்களா…. ‘

‘ம்….ம்…. ‘

Series Navigation

- அஸ்வகோஷ்

- அஸ்வகோஷ்