தீபச்செல்வன் கவிதைகள்

This entry is part of 34 in the series 20070621_Issue

தீபச்செல்வன்பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்

வானம் இடிந்து விழுந்திருந்தது

பாட்டியின் முகத்தில்

பழைய கதைகள்

உறைந்திருக்க

புதிய உலகம் பற்றியகதை

தெரியத்தொடங்கியிருந்தது

குழந்தைகள் கதைக்காக

பாட்டியை சூழ்ந்தார்கள்.

பழைய கதைகளின்

ஐதீகமும் மர்மமும்

குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது

ஐதீகமும் மர்மமுமுடைய

கனவுலகின் கதையில்

தீவிரம் அற்றுப்போயிருந்தது.

உலகம் வேறொன்றாக இருந்தது.

குழந்தைகள் பாட்டியிடம்

ஜதார்த்தமும்

நடைமுறைச்சாத்தியமுமுடைய

கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்

சிக்கியிருந்தது

முற்றங்கள் பாதிக்கப்பட்டு

சுருங்கிக்கொண்டிருந்தன.

சதையும் குருதியுமுடைய

மண்டைஓடுகளின் மத்தியில்

குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்

குழம்பியிருந்தன.

பாட்டி புதிய உலகம்

பற்றிய கதையை

அளக்கத்தொடங்கினாள்.

மண்டை ஓடுகளின் குவியல்கள்

நிரம்பியிராத உலகம்

உருவாகப் போகிறது.

அங்கு மரங்கள்

கிழிந்திருக்கப்போவதில்லை

நிலவு கலவரமின்றியிருக்கும்

முற்றம் அச்சமின்றி

விரிந்திருக்கும்

காற்றில் மரணத்தின்

வாசனை இருக்காது.

சொற்களில் குருதியின்

வாசனை வீசப்போவதில்லை

பறவைகள் மீண்டும் தங்கள்

சங்கீதங்களை இசைக்கும்

தெருக்களில் சூழ்ச்சி இருக்காது

மரணங்கள் பற்றியும்

சவப்பெட்டிகள் பற்றியும்

நம்மில் யாரும் அறியாதிருப்போம்.

வானம் மனிதாபிமானத்தில்

வெளித்திருக்கும் விழிகள்

எந்தக் காயங்களுமின்றி திறந்திருக்கும்

மிகப் பசுமையானகாட்சிகளால்

அந்த உலகம் நிரம்பியிருக்கும்

ஜதார்த்தமுடைய கதையை

கூறியதாகப் பாட்டி

திருப்திப்பட்டாள்

பாட்டியின் இருப்பில்

நிம்மதியிருந்தது.

கதையில் நம்பகம் இருப்பதாக

குழந்தைகள் உணர்ந்தனர்.

குழந்தைகளின் விழிகளில்

அச்சம் நீங்கின

பாட்டியின் வார்த்தையின்

ஆர்வம் குழந்தைகளை

குதூகலிக்கச் செய்தது.

குழந்தைகளின் முகங்களில்

புதிய உலகம்

நிகழத்தொடங்கியது.


எரிந்த நகரத்தின் காட்சிக் குறிப்பு

இந்த நகரத்தில் மட்டும்

ஏதோ ஒரு விதத்தில்

மனிதர்கள

தீர்நதுகொண்டிருந்தார்கள்

தங்கள்பிள்ளைகளை

மரணங்களுக்கு

ஒப்புக்கொடுத்துவிட்டு

புதைந்துபோன தாய்மார்களின்

கண்ணீரில்

எரிந்தநகரம்

சூடேரிக்கொண்டிருந்தது.

கல்லறைகளும்

தகர்க்கப்பட்டு வரும்

அகண்டகாலடியில்

அழிவுகள் முளைவிட்டன

மரணங்களுக்கும்

மரணமளி;த்து

சுடலைகளும் அழக்கப்பட்டு

சுடலையாயின.

வீடுகள் சிதைந்து

பயணங்களின்

அடையாளமும் அர்த்தமும்

கிடையாது

சறுக்கி விழுந்துகிடந்தன.

குழந்தைகளின் எலும்புக்கூட்டின்

சுhம்பலில் மலர்ந்த மலர்களில்

வெள்ளைக்காகங்கள் வந்து

குந்திக் கொண்டன.

எண்ணிக்கையிலடங்காத

தனிமையில்

நகரம் துடித்துக்கொண்டிருந்தது

கணக்கெடுக்கப்படாத

அழிவின் சீருடைகளை

அணிந்த எண்ணற்றவர்கள்

எரிந்து முடிந்த நகரத்தை

படையெடுத்து

வந்து சேர்ந்தனர்.

பிய்ந்து அழிந்துபோன

கூடுகளை

தாங்கிய பட்டமரங்களின்

நிழலில்

எரிந்து கருகிய

மனிதர்களின் சாம்பல்கள்

அடுக்கப்பட்டிருந்தன.

சிறகுகள் கிழிந்து

தொங்கிக்கொண்டிருக்கவும்

தீர்ந்துவிடவும்

பறவைக்கூட்டங்களில் எஞ்சியவை

நகரின் மரங்களை இழந்து

எங்கோ?

தோலைந்துகொண்டிருந்தன..


குருதிவிதிப்பட்ட புன்னகை..

ஏனக்கென்று ஒரு

புன்னகை இருந்தது

அது எனது அடையாளமும்கூட.

எனது மகிழ்வும் அழுகையும்

ஊட்டப்பட்ட ஒலியில்

எனது புன்னகை ஒளிர்ந்தது.

இன்னாளில் விலக்கப்பட்ட

புன்னகையாய்

முகத்திற்கு அதிதூரப்படுகையில்

உதடுகள்

புனையைப்போல

பதுங்கிக்கொள்கின்றன.

எனக்கென்று உரிமையுடைய

வார்த்தைகள் எவற்றையும்

விரித்து வாசிக்கமுடியாது போயிற்று.

நான் என்னை மூடிப்போகிறேன்

வேற்று ஆடைப்போர்வையில்

எனது உருவம் ஒடுங்கியிருக்கிறது.

எனது புன்னகையில்

குருதிதான்வடிகிறது

உதடுகள் உதிர்ந்து

மிதிபட தெருக்கள்

எதையும் கவனிக்காது

மௌனமாய் கிடக்கிறது

காயப்பட்ட எனது உதடுகளில்

என்னை மீறி

குருதியின் வாசனையுடைய

புன்னகை வெளிவருகிறது.

எனது புன்னகையை

யாரோ களவாடிவிட்டார்களா?

ஆல்லது எனது புன்னகை

தனது வேருடன் அழிந்துவிட்டதா?

களவாடப்பட்ட எனக்குரிய

ஓலிகளை தேடுகையில்

காற்றுதீர்ந்துவிட

கண்கள் இரவாப்போகின்றன.

எனது எனது புன்னகை மிதிபட

எழும் ஒலியை இரசித்து

சக்கரங்கள் உருள்கின்னறன.

குருதியுடன் சம்பந்தப்பட்ட

புன்னகை பிறண்ட

வார்த்தைகள்

தடைசெய்யப்பட்ட காலத்தில்

முகத்தை கழற்றி

ஏறிந்துவிட்டு வருகிறேன்.

ஒருநாள் தெருவெளிக்கையில்

பதுங்கிய உதடுகள்

மீள வந்துசேரும்

எனது புன்னகையியின்

வேர் தளைக்கும்

எனது புன்னகை

வானமாய் விரிந்து வெளிக்கும்..முகம் எரிந்துகொண்டிருக்கிறது.

குரலைத்திருகியவர்கள்

இசைக்கருவிகளை உடைக்கவருகிறார்கள்

வார்த்தையை அடைத்தவர்கள்

நாவின்மீது

வாள்வீச வருகிறார்கள்

குழந்தைகளின்

புண்னகைச்சின்னங்களை

நெற்றியில் பொறித்துக்கொண்டு
பிணங்களை கணக்கெடுக்க

வண்டிகளில் வந்திறங்குகிறார்கள்.

புதைந்தவர்களிள் வாக்கு மூலம்ங்கள்

தட்டிக்கழிக்கப்பட்டன

அமைதியைப்பற்றி

பிரசங்கம் செய்தவர்கள்

ஆயுதங்களை வழங்குகிறார்hகள்

அபிவிருத்தியைப்பற்றி

ஆய்வு நடத்தியவர்கள்

குண்டுகளை கையளிக்கிறார்கள்

பயங்கரவாதம் பற்றி

விளக்கமளித்தவர்கள்

அதிவேக விமானங்களை

பரிசளிக்கிறார்கள்

சாகசங்களே பாராட்டப்படுகின்றன.

அவர்கள் யாரும்

எல்லைகளைப்பற்றி

ஏன் பேசாதிருக்கிறார்கள்?

எல்லை தான்டி வரும்

பயங்கரவாதத்தை எதிர்த்து

தீர்க்கப்புறப்படுபவர்கள்

சிதறிய ஊர்களின் தரிசனத்திற்கு

ஏன் எல்லை தான்டிவரவில்லை?

பாராமுகங்களை படைத்து கைமாறினர்.

கல்லறை நிறம்பிய

ஊர்களின்பாடலிடம்

எதுவரை செவிடராயிருப்பர்?

குருதி பாய்ந்து கொண்டிருக்கும்

நதியிடம் கால்நனைத்தும்

எதுவரை உணராதிருப்பர்

அந்தரப்படும் அப்பாவிகளின்

ஆன்மாக்களின் மொழியிடம்

எதுவரை ஊமராயிருப்பர்

தமது வர்ணவண்டிகளை

மிக வேகப்படுத்தினர்.

வயிறுகளில் வெறுமை முட்டிய

பசியின்கேள்விகளிடம்

இறுக மூடிய தெருக்களிடம்

சிறைப்படுத்தப்பட்ட ஊர்களிடம்

சித்திரவதைக்கப்படும்

சிறைக்கூடங்களிடம்

பயணங்களை கைது செய்யும்

காவல் விதிகளிடம்

அடையாளத்தை அழிக்கும்

நிறைவேற்று அதிகாரத்திடம்

கண்ணாடிகளை அனிந்து

எதுவரை குருடராயிருப்பர்.

முகங்களை மாற்றி

வார்த்தைகளுக்கு நிறமணிந்து

மாளிகைகளுக்குள்

அடைந்து கொண்டனர்.

முகம் எரிந்துகொண்டிருக்கிறது.புதிய வீதி

நீ எனக்காக

ஓருநல்ல வீதி செய்துதந்திருக்கிறாய்

நீ தெரிவு செய்து அனிந்திருக்கும்

நிம்மதி தருகி;ற

கௌரவம் தருகி;ற

அங்கிகளையே நானும் அணிந்து

நீ செய்து தந்த வீதியில்

உன்னோடு வருகிறேன்.

மிகுந்த ஆவல்கள்

ஊட்டப்பட்ட

நமது தோட்டம் இன்னும்

பசுமை துளிர்த்து வருகிறது

நீ தேர்வு செய்த

பாடல்களை பாடியபடி

தோட்டத்தை அடையலாம்.

முதலில் தோட்டத்தில

புசிக்கத்தகாது விலக்கப்பட்ட

கனிகளை

தேடிஅழிப்போம்

நமது சந்ததியின்

அமைதியான வாழ்விற்காய்

ஆரொக்கியம் தரும் நல்ல

கனிகளை உற்பத்தி செய்வோம்.

நமது நாகரீகங்கள்

அழிந்துவிட்டது

என்று நமது

முகங்கள் மீது

கரிப+ச சாத்;தான்கள்

படையெடுக்கின்றன.

எல்லோராலும்

புறக்கனிக்கப்பட்ட

இரவொன்றில்

மிக அதிகதூரத்தில்

மங்கி எரியும் விளக்கைச்சுற்றி

நமது புத்தகம்

மிகுந்த பற்றுடன்

வாசிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு இராத்திரியிலும்

கூடுகளை அடைந்தபிறகு

வீதியின் பாடலுக்காக

தவமிருக்கும் கால்கள்

உதிர்ந்தும் கிடக்கின்றன

தோட்டத்தின் பசுமைக்காக

காத்திருக்கும் கண்கள்

விழித்தும் கிடக்கின்றன.

நமக்காக எழுதப்பட்ட

புனித புத்தகத்தை

வாசித்தபடி

பயணங்களில்

மிகுந்த அக்கறை செலுத்துவோம்.

உன்னால் திட்டமிடப்பட்ட

வீதிகளின்

இனிய வாசனையுடன்

நீ மூட்டும்

அழகியதோட்டத்தின்

இதமான பசுமையில்

புதியவாழ்வு

பரிசளிக்கப்பட இருக்கிறது

அப்பொழுது

நீ எடுத்து வரும் சூரியவிளக்குகளில்

நமது புத்தகம் வாசிக்கப்படும்

நல்ல கனிகளை புசித்தபடி.நிலவிலே பேசுவோம்

நிலவு உடைந்துவிடவில்லை

உனது திசை கறுத்திருக்கிறது

பகிரவேன்டிய சமாச்சாரங்களுக்கு

அப்பால் சுருங்கிய

வழியின் இடைநடுவில்

உனது பயணம் தள்ளாடுகிறது

உனது புன்னகையின்

கலவரம் புரியாது

உதடுகளை கணக்கெடுத்த

குழந்தைகள் முகங்களை

பொத்திக்கொள்கின்றனர்.

எங்களுக்கு ஒளிவீசும்

நிலவுமீது

கூரிய கத்தியை வீசிவிட்ட

உனதுதிசை இருளாகிறது.

உனது குரலில் யதார்த்தமும்

செயல்களில் கருணையும்

ஒரு போதும்இருக்கப்போவதில்லை

இதுவரையிலும்

உனது செயற்கைமழை

பெரியளவில்

அடித்து ஓய்ந்திருக்கிறது.

எந்தவிதமான குளிச்சியும்

அடங்கியிருக்காத

நிரந்தரமும் உறுயும் இல்லாத

உனது அதிகரத்தின்

செயற்கை மழையில்

எனது சிறகுகள்

ஒடுங்கிவிடவி;லை

நான் நேசிக்கும் வழிகள்

கரைந்து விடவில்லை

எனது வேர்கள் அழிந்துவிடவில்லை.

உனது மலைதான் சிதைகிறது.

வெளிகளை தடைசெய்து

முகங்களை சிறைப்பிடித்த

உனது பாரியமலை

அதிவேகமாக சிதைய

மிகப் பெரும்கற்கள்

உனது முகத்தை

நோக்கியபடி வருகின்றன.

நீ உருவாக்கிய கிளர்ச்சியில்

உனது இருப்பு வெடித்து சிதறுகிறது

எனது அடையாளம் ஒளிர்கிறது

நம்பிக்கை சிவக்கிறது.

எந்த பதற்றமுமின்றி

மிக அமைதியாக இருகிறது

எங்கள் நிலவு.

இருப்புக்கான புரட்சியுடன்

நாங்கள் போராடுவோம்

எங்கள் அழகிய

விடுதலை பற்றி

எல்லோருமாக பேசுவோம்

உரிமையுடன் செயற்படுவோம்

குற்றமில்லாத நிலவின்

மிக நீணடவெளி

எல்லையற்று இருக்கிறது

அவசியம்

எங்களுக்கு தேவையான

கருணைக்கும் விடுதலைக்குமாக.


இலங்கையின்–கிளிநொச்சியிலிருந்து….


deebachelvan@gmail.com

Series Navigation