வன்முறை

This entry is part of 35 in the series 20061102_Issue

ப்ரியம்வதா


கறுப்பும் சிவப்புமாய்
ஒன்றோடொன்று இடித்தபடி
சின்னஞ்சிறு குளம்புகள்
மிதிக்கப்பட்டு
மந்தையாய் ஓடும்போது
இடையனின் சிறுகுச்சி
அவ்வப்போது உடல் உரசுவது
ஓட்ட ஒழுங்கிற்கோ,
ஒழுக்க விலகலின் தண்டனைக்கோ –
குட்டியாட்டுக்குப் புரிவதேயில்லை.
என்றாலும்
அன்றாட வாழ்க்கையின்
பழகிப்போன அங்கமாக
ஆகிவிட்டது இடையனின் கைக்கோல்.
கொழுகொழுத்து வளர்ந்தபின்
கசாப்புக்கடைக்காரனின் கையில்
வெட்டரிவாளின் கூர்மையைப்
பார்க்கும்வரை புரிபடவேயில்லை
சிறுகோலில் ஒளிந்திருந்த வன்முறை


umakmohan@yahoo.com.

Series Navigation