முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

மைக்கேல் ஸ்காட் டொரான் (தமிழில்: ஆசாரகீனன்)


மாமன் தாமஸ் ஃப்ரீட்மன்

செப்டம்பர் 11-ன் பின்விளைவாக, ஒஸாமா பின் லாடன் தொலைவிலிருக்கும் எதிரியான அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம், பக்கத்தில் இருக்கும் எதிரியாகிய சவுதி அரச குடும்பத்துக்கு எதிரான புரட்சியைத் தூண்டி விட்டிருப்பதாகவே விவரமறிந்த அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அல்-கய்தா அமெரிக்காவுக்கு எதிரான போரை, உள்ளூர் எதிரிகளுக்கு எதிரான ஓர் ஆயுதமாகவே பயன்படுத்துவதை உறுதி செய்கின்றன. எனினும், நயெஃப்புக்கும் அல்-குதாயருக்கும் இடையிலான மறைமுக ஒத்துழைப்பின் மூலம் அல்-கய்தாவுக்கும் சவுதி அரச குடும்பத்துக்குமான உறவு பலரும் நினப்பதைவிட மிகச் சிக்கலானது என்பதை அறியலாம்.

சவுதி அரேபிய அரசியல் நிலைக் களத்தை அல்-கய்தா பார்க்கும் விதத்தை [நாம்] நன்கு புரிந்து கொள்ள, யூஸுஃப் அல்-அயிரி என்ற திறமையான அல்-கய்தா பிரசாரகர் எழுதியவற்றைக் கவனிப்பது அவசியம். கடந்த ஜூன் மாதம் சவுதி காவல் படையினருடன் நடந்த மோதல் ஒன்றில் இறப்பதற்கு முன் இவர் எழுதிய ‘இராக்கின் எதிர்காலமும் பாக்தாத்தின் வீழ்ச்சிக்குப் பின் அராபிய தீபகற்பமும் ‘ என்ற ஒளிவு மறைவற்ற புத்தகம், அல்-கய்தா உறுப்பினர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலுமே உலகளவிய இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமை தாங்குவதாக அல்-அயிரி சொல்கிறார். இந்த யூத-கிருஸ்தவ (Zio-Crusaderism) ஆக்கிரமிப்புப் போர் முனைப்பு உண்மையான இஸ்லாத்தை அழிக்க முயல்வதோடு, மத்திய கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்த முனைகிறது. மக்களாட்சியே இதன் வலிமை மிக்க ஆயுதம். ஏனென்றால், அரசாங்கத்தையும் மதத்தையும் பிரிப்பதன் மூலம், முழுமையான மதமாக விளங்கி, அதே நேரம் வலிமையான அரசியல் பரிமாணமும் கொண்ட இஸ்லாத்தின் இடத்தை அது பிடித்துக் கொள்கிறது. இஸ்லாத்தை நீர்த்துப்போகும்படி செய்ய, யூத-கிருஸ்தவ போர்த் திட்டம் தன் உள்ளூர் நண்பர்களாக மதசார்பற்றவர்கள், ஷியாக்கள், மத ஒழுங்கிலிருந்து தவறிப் போன சுன்னிகள் (அதாவது, மதத்தை அரசிடமிருந்து பிரிக்கவேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவர்கள்) ஆகியோரை அரவணைத்துக் கொள்கிறது என்றும் அல்-அயிரி கருதுகிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தகாரப்பை ஆதரிப்பவர்களே அல்-கய்தாவின் உள்ளூர் எதிரிகளின் கூட்டம் ஆகும்.

தங்கள் முதன்மையான அரசியல் எதிரிகளை வரையறுப்பதில் அல் கய்தாவுக்கும், சவுதி மத அமைப்புகும் உள்ள முக்கியமான வேறுபாடு, அல் கய்தா சவுதி அரச குடும்பத்தையும் பிரச்சினையின் ஒரு பகுதியாகக் கருதுவதே. சவுதி மத அமைப்பு அப்படிக் கருதுவதில்லை. இந்த வேறுபாடு முக்கியமற்றது அல்ல என்றாலும், சில பிரச்சினைகளில் சிறிது அல்லது வெளிப்படையாக்த் தெரியும்படியான ஒப்புதல் ஏதும் இல்லாத ஒத்துழைப்பை இது தடுப்பதில்லை. சவுதி ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த சிலர் பின் லாடனின் எதிரிகள் என்றாலும், எதார்த்தத்தில் வேறு சிலர் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். மேலும், மசூதியையும் [மதத்தையும்] அரசாங்கத்தையும் பிரிக்க முயலும் அமெரிக்காவின் திட்டங்களே தங்கள் நோக்கங்களுக்கு வலிமையான, உடனடி அச்சுறுத்தல்களாக இருப்பதை அல் கய்தா உறுப்பினர்கள் உணர்ந்திருப்பதோடு, பெரிய அளவிலான புரட்சிக்கு ஏற்ற காலம் இன்னும் கனியவில்லை என்பதையும் அறிந்திருக்கிறார்கள். எனவே, அல் கய்தாவின் குறுகிய கால இலக்காக இருப்பது ஆட்சியைக் கைப்பற்றுவது அல்ல, சவுதி அரேபியாவின் உள்நாட்டு அதிகார நிலையை வலதுசாரிகளின் பக்கம் நகர்த்துவதும், தகாரபின் ஆதரவாளர்களை தண்டிப்பதுமே.

கடந்த மே மாதம் ரியாதில் நடந்த தற்கொலை குண்டுவீச்சுத் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் அரசியல், அல் கய்தா மற்றும் சவுதி மத அமைப்புகளின் நலன்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றது. இவை இணைந்து செயற்பட்டு, அமெரிக்கர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்கமயப் படுத்துவோருக்கு எதிரான ஓர் அரசியல் கிளர்ச்சியாகச் சித்தரித்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட பின் உடனடியாக, சவுதி அதிகாரிகள் சந்தேகத்துக்கு உரிய 19 நபர்களின் பெயர்களையும் படங்களையும் வெளியிட்டு, அவர்களைப் பிடிக்க பொது மக்களின் ஒத்துழைப்பைக் கோரினர். இதற்குப் பதிலாக, அல்-குதாயரும் அவரைப் போன்ற வேறு இரு மதத் தலைவர்களும் வெளியிட்ட அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் கடமையுணர்வும் இறைப்பற்றும் மிக்கவர்கள் என்றும், ‘முஜாஹிதீனச் சோலையில் பூத்த மலர்கள் ‘ என்றும் தெரிவித்தனர். மேலும், இவர்கள் அரசாங்கத்தின் வேண்டுகோளை மதிக்காமல் இருக்கும்படி மக்களிடம் சொன்னதோடு, இந்த விஷயத்தில் காவல்துறையினருக்கு அளிக்கப்படும் எத்தகைய ஒத்துழைப்பும் இஸ்லாத்துக்கு எதிராக அமெரிக்கா தொடுத்துள்ள போருக்கு அளிக்கப்படும் ஆதரவாகவே இருக்கும் என்றும் அறிவித்தனர். முற்றுகைக்குளான முஜாஹிதீன்களுக்கு ஆதரவு தர முன்வரக் கோரி, இந்த அறிவிப்பு பிற சவுதி மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை ஏற்று, ‘தற்போதையை சவால்களை எதிர்கொள்ளும் உள்நாட்டு முன்னணி ‘ என்ற பெயரில் ஏற்கனவே உருவாகியிருந்த 33 தீவிரவாத மதத் தலைவர்களின் குழு, சவுதி அரச குடும்பத்துக்கும் வஹாபி மத அமைப்புகளுக்கும் இடையே ஒரு புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் போலத் தோன்றும் ஓர் அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்திடம் ஆதரவு தேட முற்பட்டனர். அன்னிய எஜமானர்களுக்கு வசதி செய்ய, சவுதி அரசாங்கமும் ஜிஹாத்துக்கு எதிரானதாக மாறிவிட்டது என்ற அல்-குதாயரின் கருத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்தது. ஆனால், அது இந்த விவாதத்தின் தொனியை மாற்றிவிட்டது. அமெரிக்கர்களுக்கு எதிராக ஜிஹாத் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அல்-குதாயர் வலியுறுத்தினார். ஆனால் இம் மதத் தலைவர்களோ, அமெரிக்க மயமாக்குபவர்களுக்கு – இது உள்நாட்டிலிருக்கும் எதிரிகளைக் குறிப்பது – எதிராக ஜிஹாத் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இந்த அறிக்கை, தாராளமய சீர்திருத்தங்களுக்குப் பின் விளைவு என்று மதத் தீவிரவாதத்துடன் ஒரு தொடர்பைக் காட்டியது. இது ஒரு பக்கம் சவுதி அரேபியாவில் மத தீவிரவாதம் இருப்பதாக ஒப்புக் கொள்வதோடு அதைக் கட்டுப்படுத்தவும் சொல்கிறது. ஆனால், ‘கண்டனத்துக்குரிய செயற்பாடுகள் ‘ என்று குறிப்பிடப்படும் தகாரப் சீர்திருத்த முயற்சிகளுக்குக் கிடைத்துவரும் வெளிப்படையான ஆதரவையே தீவிரவாதத்துக்குக் காரணமாகவும் குறிப்பிடுகிறது. இந்த உள்நாட்டு முன்னணி அப்துல்லாவின் முன் ஒரு பேரத்தை வைத்தது: சீர்திருத்தவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அப்துல்லா உடன்பட்டால், தக்ஃபிர்-ஜிஹாதிகள், அல் கய்தாவையும் அதன் கூட்டாளிகளையும் ஒடுக்கும் அரசாங்க நடவடிக்கைகள் இஸ்லாமியச் செயல்களே என்று அங்கீகாரம் வழங்க அந்த மதத் தலைவர்கள் தயாராக இருப்பார்கள்.

இந்த கோரிக்கைகளை மிகவும் வெளிப்படையாக்கும் விதமாக உள்நாட்டு முன்னணியின் தலைவர் சல்மான் அல்-அவ்தா, ஒரு தீவிர சீர்திருத்த செய்திப் பத்திரிகையான ‘அல்-வடன் ‘-ஐத் தாக்கி ஓர் அறிவிப்பை தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டார். (இந்தப் பத்திரிகையின் பெயருக்கு ‘தாய்நாடு ‘ என்பது பொருள். ஆனால், மதப் பழமைவாதிகள் இதை அல்-வதன், அதாவது ‘உருவம் ‘ என்றே குறிப்பிடுகிறார்கள்.) இஸ்லாத்துக்கு எதிராகப் பணியாற்றுவதில் இந்த பத்திரிகையின் ஊழியர்கள் அமெரிக்க ஏஜண்டுகளைப் போன்றவர்களே – ‘சவுதியரின் உருவில் உள்ள தாமஸ் ஃப்ரீட்மன்களே ‘ என்றும் இந்த அறிவிப்பு சொல்கிறது [4].

அல்-வடன் பத்திரிகையைச் சேர்ந்த சீர்திருத்தக்காரர்களோ, இத் தீவிரவாதத் தாக்குதல்கள் தகாரப் கொள்கையின் அவசியத்தைத்தான் மேலும் வலுவாக்குகின்றன என முடிவு செய்தனர். மேலும், சவுதி அதிகார அமைப்பிற்குத் தவ்ஹீதைப் பரப்பும் நிறுவனங்களை ஒழிப்பதைத் தவிர இனி வேறு வழியில்லை என்று பல மேலை நாட்டினரைப் போலவே அவர்களும் தவறாகக் கருதினர். பொது மக்கள் [தீவிரவாதிகள் மீது] ஆத்திரம் கொண்ட சூழல் உருவானதில் உற்சாகமடைந்த அவர்கள், ஒட்டுமொத்த வஹாபி அமைப்பையும் விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கினர். குறிப்பாக, ஒரு கருத்துப்படம் (Cartoon) மத அமைப்புகளுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. டைனமைட் வெடிகளை தன் இடைவாரில் கட்டியிருக்கும் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவரும், ஃபத்வாக்களை இடுப்பில் கட்டியிருக்கும் ஒரு மதத்தலைவரும் அருகருகே நிற்பது போல அந்தப் படத்தில் காட்டப்பட்டிருந்தது. ‘ஃபத்வாக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு பயங்கரவாதத்தைத் தூண்டும் எவரும் பயங்கரவாதிகளே ‘ என்று அந்தப் படத்தில் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அல்-வடன் தன் எதிரியை முழுமையாக அளவிடத் தவறிவிட்டது. ஒரு நல்ல சர்ச்சையை நடத்துவது என்பது வேறு; ரகசியக் காவல்துறையைக் கட்டுப்படுத்துவது என்பது வேறு. குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்த ஒரு வாரத்துக்குப் பின்னர், நயெஃபிடம் ஒரு பத்திரிகையாளர் துணிச்சலாக, இந்த குண்டுவெடிப்புகளின் காரணமாக ந.மு.தீ.த.ஆ. [CPVPV அல்லது ‘நல்லொழுக்க முன்னேற்றம் மேலும் தீயொழுக்கத் தடுப்புக்கான ஆணையம் ‘] மாற்றி அமைக்கப்படுமா என்று கேட்டார். ‘ஒரு சவுதியான நீ, இத்தகைய கேள்வியைக் கேட்பதற்கு வெட்கப்படவேண்டும் ‘, என்று சீறினார் நயெஃப். ஒரு வாரத்துக்குப் பின், அல்-வடனின் ஆசிரியர் ஜமால் கஷோகி பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இப்போது லண்டனில் வசிக்கிறார்.

அமெரிக்க-ஷியா கூட்டு சதி

அண்மைக் காலத்தில் மத்திய கிழக்கில் பெருகியுள்ள அமெரிக்க எதிர்ப்புணர்வுக்கு, பெரும்பாலும் அமெரிக்காவின் கொள்கைகளே காரணமாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், ரியாத்திலுள்ள அமெரிக்க வளாகம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டு வெடிப்புகளைக் காரணமாகக் காட்டி சவுதி சீர்திருத்தவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையும், (அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவித்த பின்னரும்) குண்டுவெடிப்புகள் தொடர்ந்ததையும் கண்டு நாம் ஒரு கணம் தயங்க வேண்டி வருகிறது. இந்த சம்பவங்கள் அமெரிக்காவுக்கு எதிரான ஜிஹாத்தானது, உண்மையில் பிற வழிகளில் தொடரும் [சவுதியின்] உள்நாட்டு அரசியலே என்பதையே உணர்த்துகின்றன. சவுதியின் மதக் கூட்டத்தினரும், அல்-கய்தாவும் மக்களிடையே தம் உள்நாட்டு எதிரிகளின் மதிப்பை அழிக்கவே இதைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், அந்த எதிரிகளும் ஓர் அரை வாய்ப்பு கிடைத்தால் கூட போதும், மதத் தலைவர்களின் அதிகாரத்தை ஒழித்துவிடுவார்கள்.

சவுதி மதத் தலைவர்கள் தங்கள் உள்ளூர் எதிரிகளுக்கு அஞ்சி கொலைவெறி பிடித்த அமெரிக்க எதிர்ப்புணர்வைப் பரப்பினால், அதன் பின்விளைவுகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளில் பிரதிபலிக்கும். சவுதியினர் ஒருவரைப் பற்றி மற்றவர் சொல்வதை வாஷிங்டன் புறக்கணிக்க முடியாது. ஏனெனில், உள்நாட்டில் உண்டாக்கப்படும் வெறுப்பு இன்றோ அல்லது என்றோ அமெரிக்காவுக்கு எதிராகத் திருப்பப்படும்.

குறிப்பாக, சவுதி அரசியலில் ஷியாக்களைப் பற்றிய கேள்வியைப் பொறுத்தவரை இது மிகவும் உண்மை. தீவிர சுன்னி இஸ்லாமியர்கள், யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் உள்ளிட்ட எந்த ஒரு குழுவையும் விட ஷியாக்களை அதிகமாக வெறுக்கிறார்கள். இது பற்றி அல்-கய்தாவின் அடிப்படைக் கொள்கை தெளிவாகவே சொல்கிறது: ‘மார்க்கத்திலிருந்து விலகிய ஷியாக்கள் உருவ வழிபாடு செய்பவர்களும் இஸ்லாத்தைக் கைவிட்ட ஒரு கூட்டத்தினரும் என்று நாங்கள் நம்புகிறோம். இவர்களே வானத்தினடியில் இருக்கும் ஜீவராசிகளிலேயே மிகவும் தீயவர்கள். ‘ சவுதி வஹாபி மத அமைப்புகளும் தம் பங்குக்கு இதை ஒத்த கருத்துகளையே தெரிவிக்கின்றன. நன்கு நிறுவப்பட்டு, அதிகாரம் மிக்கவராக உள்ள சவுதி மதத் தலைவர்கள் வெளியிடும் ஒரே மாதிரியான ஃபத்வாக்கள், கட்டளைகள், அறிக்கைகள் ஷியாக்களின் நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் தொடர்ந்து கண்டிக்கின்றன. (அதிகாரபூர்வமான மதத் தலைவர்களுக்குப் பயிற்சி தரும்) இமாம் முகமது பின் சவுத் இஸ்லாமிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, கெளரவம் மிக்கவராகக் கருதப்படும் பேராசிரியர் அப்த் அல்-ரஹ்மான் அல்-பர்ரக் இது சம்பந்தமாக அண்மையில் வெளியிட்ட ஃபத்வா குறிப்பிடத்தக்கது. ஷியாக்களுக்கு எதிராக சுன்னிகள் ஒரு ஜிஹாத்தை நடத்துவது அனுமதிக்கப்பட்ட செயலா என்று கேட்கப்பட்டபோது, சுன்னிகள் பெரும்பான்மையினராக இருக்கும் நாட்டில் வசிக்கும் ஷியாக்கள் தங்கள் மதத்தை வெளிப்படையாகப் பின்பற்றுவோம் என்று பிடிவாதம் செய்யும் பட்சத்தில் சுன்னி முஸ்லிம்களுக்கு அப்படிப் போர் தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பதிலளித்தார் அல்-பர்ரக். ஷியாக்கள் முஸ்லிம்களே இல்லை என்ற முன்முடிவின் அடிப்படையில் இந்த பதில் அமைந்திருப்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

மதத் தலைவர்களால் பரப்பப்படும் இத்தகைய குழு சார்ந்த வெறுப்பு அமெரிக்காவை நேரிடையாக பாதிக்கக் கூடியது. தங்கள் உள்நாட்டுப் போராட்டத்தை வெளி உலகத்தின் மீது திணித்து, சவுதி அரேபியாவிலுள்ள ஷியா சிறுபான்மையினர் இஸ்லாத்தை அழிக்க அமெரிக்காவுடன் கூட்டு சதி செய்வதாக சவுதியின் தீவிரமான மதவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பாரசீக வளைகுடா நாடுகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டுவர ஷியாக்கள் ஒரு நீண்டகால சதித் திட்டத்தைத் தீட்டி அடைகாத்து வருவதாக அல்-கய்தா பிரசாரகர் அல்-அயிரி குற்றம் சாட்டினார். இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, சுன்னி நாடுகளில் இருக்கும் ஷியா சிறுபான்மையினர் பொறுப்பு மிகுந்த பணிகளில் நுழைந்து கொண்டு, உண்மையான இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஐந்தாம் படையாக செயல்படுகிறார்கள். ‘ஷியா அனாசாரிகளால் பிராந்தியத்திற்கு ஏற்பட்டிருக்கும் அபாயம், யூதர்களாலும் கிருஸ்தவர்களாலும் ஏற்பட்டிருக்கும் அபாயத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல ‘, என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஷியா-அமெரிக்க கூட்டு சதி பற்றி மற்ற பல மதத் தலைவர்களும் எச்சரிக்கிறார்கள். உதாரணமாக, பிரபல மதத் தலைவரும், உள்நாட்டு முன்னணி-யின் உறுப்பினருமான ஸஃபர் அல்-ஹவாலி என்பவர், அப்துல்லா பெற்றுக் கொண்ட ஷியாக்களின் கோரிக்கை மனுவிற்கு ஒரு நீளமான, காட்டமான பதிலை எழுதினார். பெரும்பான்மையினரான சுன்னிகளை ஒடுக்க சிறுபான்மை ஷியாக்கள் செய்யும் முயற்சியே அந்த கோரிக்கை மனு என்று அதன் தன்மை குறித்து அல்-ஹவாலி குறிப்பிட்டார். மேலும், சுன்னிகளின் அன்னிய எதிரிகளுடன் ஷியாக்கள் கூட்டு சதி நடத்தியது வரலாறு முழுவதும் காணப்படும் ஒன்றாகும்: 13-ஆம் நூற்றாண்டின் ஆக்கிரமிப்பாளர்களான மங்கோலியர்களுடன் ஷியாக்கள் சேர்ந்து கொண்டார்கள்; இன்று அமெரிக்கர்களுடன் சேர்ந்து கொண்டு சதி செய்கிறார்கள் – என்று அவர் எழுதுகிறார். அவர் மேலும் குறிப்பிடுவது: ஷியா மனுதாரர்களின் கோரிக்கைகளை சவுதி அதிகாரிகள் நிறைவேற்றும் பட்சத்தில் பின் வரும் இரண்டில் ஒன்றுதான் அதன் விளைவாக இருக்கும் என்பது நிச்சயம்: ஷியாக்களின் அரசாட்சி அல்லது ஒரு மதசார்பற்ற அரசு.

இவை எல்லாம் கலங்கிப் போன மூளை ஒன்றின் விளை பொருட்களாகத் தோன்றலாம். ஆனால், இதெல்லாம் அரசியல் யதார்த்தத்திலிருந்து விலகினவாகத் தோன்றினாலும், உண்மையில் அப்படி அல்ல. சவுதி மதத் தலைவர்களும், அல் கய்தாவும் ஷியாக்கள் பற்றிய தன் அரசியல் முடிவுகளை இரண்டு முன் முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கிறார்கள்: வஹாபியமே உண்மையான இஸ்லாம். மேலும், அரசின் கொள்கைகளை அது மட்டுமே தீர்மானிக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, இந் நிலையை மாற்றி அமைக்கவே தகாரப்பை முன்னிறுத்தும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன. ஷியாக்கள் இஸ்லாமிய சமூகம், வரலாறு பற்றி ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்கிறார்கள், அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குவிய முயல்கிறார்கள், தம் நாடுகளின் எல்லைக்கு வெளியே இருக்கும் தம் வழி மதத்தினருடன் உறவு வைத்திருக்கிறார்கள், இவர்களது அரசியல் நோக்கங்கள் சுன்னிகளில் உள்ள சீர்திருத்தவாதிகளோடு ஒத்துப் போகின்றன. அனைவரும் பங்கு பெறக்கூடிய ஓர் அரசியல் அமைப்பு ஏற்படும் பட்சத்தில், இத்தகைய கூறுகளின் காரணமாக ஷியாக்கள் பலம் பொருந்திய அரசியல் சக்தியாக உருவெடுத்து விடுவார்கள். தற்போதைக்கு சில்லறை அரசியல் அனுகூலங்களைக் கொடுப்பது கூட ஆபத்தான ஒன்றாக முடிந்துவிடும் என்றும் இந்த மதத் தலைவர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால் பிற பிரிவினருக்கும், மற்ற பிராந்திய அடையாளங்களுக்கும் அரசியல் பிரதிநிதித்துவ மோகம் ஏற்பட்டு விரைவிலேயே [தற்போது இருக்கும்] அமைப்பு செயலிழந்துவிடக் கூடும்.

ஆகவே, சதித்திட்டம் பற்றிய கருத்துருவுக்குப் பின்னால் உண்மையான அரசியல் மற்றும் பொருளாதார லாபங்களுக்கான ஓர் ஆரவாரமற்ற போராட்டம் பதுங்கியிருக்கிறது. ஷியாக்களை அரசியல் உரிமைகளற்று ஒதுக்கித் தனிமைப்படுத்துவதன் மூலம், அவர்களுடனான ஒரு கூட்டணியை சவுதி அரேபியாவில் இருக்கும் சுன்னி சீர்திருத்தவாதிகள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த மதத் தலைவர்கள் விரும்புகிறார்கள். சவுதி மதம் சார்ந்த இணைய தளங்கள் ஏராளமான அளவில் குவித்து, ஷியாக்களுக்கு எதிராகப் பரப்பும் தகவல்களுள் முக்கியமான மூன்று: ஷியாக்கள் இரானின் ஏஜண்டுகள், அமெரிக்காவின் தோழர்கள், மேலும் யூதர்களின் நெருங்கிய நண்பர்கள். இவற்றுள் கடைசியாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு கவனத்திற்குரியது.

ஜெருசலத்திலுள்ள ஹீப்ரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஐஸக் ஹஸன், ஷியாக்களுக்கு எதிரான – அவர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு, அரக்கர்களாகக் காட்டும் புதிய – வஹாபி பிரச்சார முயற்சியை சுட்டிக் காட்டுகிறார். யூதராக இருந்து மதம் மாறியவரான அப்துல்லா பின் ஸாபா என்பவரால் உருவாக்கப்பட்டதே ஷியாயிஸம் என்று சொல்லும் மத்திய கால சுன்னி புராணங்களை, பாரம்பரிய வஹாபிகள் இன்னும் பரப்பிவருகிறார்கள். இதன் பொருள், ஷியா பிரிவில் ஒரு வகை யூத மரபணுவே ஓடிக்கொண்டிருக்கிறது என்பதாகும். நவீன யூத-எதிர்ப்பிலிருந்து பெறப்பட்டிருக்கும் நம்பிக்கைகளும் – உலகத்தை அடக்கி ஆள யூதர்கள் சதி செய்கிறார்கள் – என்பது போன்றனவும் இக் குற்றச்சாட்டுகளுடன் சேர்க்கப்படுகின்றன. பேராசிரியர் ஹஸன் அடையாளம் காட்டும் புதிய-வஹாபி பிரச்சாரத்தின்படி, ஷியாயிஸம் யூதத்தை ஒத்த ஒரு கிளை என்பதால் அது யூத-கிருஸ்தவப் போர்த் திட்டத்தின் இயற்கையான கூட்டாளியே என்பதுடன் சுன்னி இஸ்லாத்தை ஒழிக்க சதித் திட்டங்களைத் தீட்டுகிறது என்பதும் நிச்சயம் என்றாகிறது.

மதவாத அளவுகோலைக் கொண்டு பார்க்கும்போது, ஷியாக்களுக்கு எதிரான இந்த மதத் தலைவர்களின் பிரச்சாரமானது, அல்-நுகய்தன் என்பவருக்கு எதிராக அல்-குதாயர் விடுத்த மிரட்டல்களை ஒத்தததே. தீவிரவாத மதத் தலைவர்கள் தனிப்பட்ட சீர்திருத்தவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பதைப் போலவே சவுதி மத அமைப்புகளும் இனப்படுகொலை செய்வோம் என்று ஷியாக்களை மிரட்டுகின்றன. மதத் தலைவர்களுள் ஒருவரான ஸஃபர் அல்-ஹவலி ஷியாக்களின் கோரிக்கை மனு பற்றிய தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் போது ஷியாக்கள் வரம்பு கடந்து செல்வதாக மிரட்டினார். மேலும், ஷியாக்கள் ஒரு மதசார்பற்ற அரசை நிறுவ முயன்றால், ஓர் உள்நாட்டுப் போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், ‘[சுன்னி] பெரும்பான்மையினர் பொங்கி எழுவார்கள் என்றும் — அதன் விளைவாக [ஷியா] சிறுபான்மையினர் முற்றிலும் துடைத்தெறியப்படுவர் ‘ என்றும் அவர் எச்சரித்தார். சிறிய மிரட்டலாக இருந்த இது முக்கியப் பதவிகளில் இருக்கும் ஷியாக்களை நீக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்குத் தீவிர ஷியா எதிர்ப்பாளரான நஸிர் அல்-உமர் என்பவரின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட போது, அதிக முக்கியத்துவம் பெற்றது. மேலும், அல்-உமர் கிழக்குப் பகுதியில் எண்ணிக்கை அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தும் ஷியாக்களைக் கட்டுப்படுத்த ‘விரைந்த தீர்வு ‘ ஒன்றைக் காண வேண்டும் என்றும் அரசாங்கத்தை வற்புறுத்தினார். இதை அப் பகுதியிலிருந்து ஷியாக்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கான அறைகூவல் என்றே கருதவேண்டும். இத்தகைய வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளைத் தடுக்காமல், தமக்கு வசதியாக அவை தொடர்வதையே விரும்புகிறார் இளவரசர் நயெஃப்: அல்-உமர் ஓர் அரசுப் பணியாளராக மசூதியைத் தொடர்ந்து நடத்தி வருவதோடு கவர்ச்சியான ஓர் இணைய தளத்தையும் நடத்தி வருகிறார். அல்-உமர் போன்றவர்களுக்கு சிறப்பு மேடை அமைத்துத் தருவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளார் நயெஃப். வெளிநாட்டு விமர்சகர்களிடம், அல்-உமரின் தீவிரவாதத்திற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை, அல்-உமர் பேசுவது அவருடைய சொந்தக் கருத்து என்று சொல்லிவிட முடியும். உள்நாட்டில் அல்-உமரின் மிரட்டல்கள் ஷியாக்களை அச்சுறுத்துவதால் ஏற்படும் பலன்களையும் அறுவடை செய்து கொள்ள முடியும்.

அமெரிக்க-ஷியா கூட்டு சதி பற்றிய இந்த வதந்தி கவனம் பெறத் தொடங்குவதற்கு முன்னரே, இனக் குழுக்களை ஒழிப்பதைத் தூண்டிவிடும் அல்-உமரின் பிரசுரம் எழுதப்பட்டு ஒரு பத்தாண்டு ஆகிறது. இராக்கில் சதாம் உசைனின் ஆட்சி வீழ்ந்த பின், இத்தகைய உறவு [சதி] பற்றிய பொது நம்பிக்கை மீது அவர் அதிகம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, அவருக்கு மிகவும் பிடித்த தலைப்பான ஷியாக்களின் மாபெரும் சதியை மீண்டும் எடுத்தாளும் முன், புது அரசியல் யதார்த்தங்களை ஒட்டி, அமெரிக்காவிற்கு ஒரு பெரும் பங்கையும் அச் சதியில் சேர்த்துக் கொண்டு கதையை உருமாற்றி விட்டார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்த்திய ஓர் உரையில் உலகளாவிய பயங்கரவாதத்தின் செவிலியாக இருப்பது அமெரிக்காவே என்றும் வர்ணித்தார். வாஷிங்டன் கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும், இராக் போர் தொடங்குவதற்கு முன் இந்த உண்மை கண்டு கொள்ளப்படாமல் இருந்தது, ‘அமெரிக்காவுக்கும், வழி தவறிய ஷியாக்களுக்கும் இடையிலான பிணைப்பின் வலிமை ‘-யை இந்தப் போர் வெளிப்படுத்தி விட்டது. சுன்னிகளை ஒழித்துக் கட்டவே இந்த இரு தரப்பினரும் கூட்டு சேர்ந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். .

சவுதி அரேபியாவில் நிலவும் அமெரிக்க-எதிர்ப்புணர்வு பற்றிய எந்த ஓர் ஆய்வும், அல்-உமர் போன்ற நபர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்பை வளர்க்க அவருக்குப் பல காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் மிக முக்கியமானவை மூன்று: ஷியாக்களின் மீதுள்ள ஆழ்ந்த வெறுப்பு, வெளிநாட்டு எதிரிகளுக்கும் ஷியாக்களும் முடிச்சுப் போடும் பாரம்பரியப் பழக்கம் மற்றும் சவுதி அரசியல் அமைப்பில் வஹாபி மதத் தலைவர்களுக்கு எதிர்காலத்தில் உள்ள இடம் பற்றிய அச்சங்கள் ஆகியவை. அமெரிக்கக் கொள்கைகளில் ஏற்படக் கூடிய எந்த வகை மாற்றமும் இந்த மூன்றில் எதையும் சற்றும் மாற்றப் போவதில்லை.

இராக்கியத் தொடர்புகள்

சென்ற ஆண்டு ரியாத்தில் நடந்த தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியாவில் இருக்கும் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு இளவரசர் நயெஃப் தள்ளப்பட்டார். இதன் விளைவாக, சவுதி பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிரவாதிகளுடன் மோதி, நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்ததோடு பெரும் அளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றினர். இத்தகைய நடவடிக்கைகள், சவுதியினர் மீண்டும் நம் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள் என்று வாஷிங்டனில் [அமெரிக்கா] சொல்லிக் கொள்வதற்கு உதவின. மே மாதத்தில் விழிக்க வைத்த சம்பவங்களுக்குப் பிறகு, நவம்பர் மாதத்தில் மீண்டும் அவற்றை நினைவு படுத்திய சம்பவங்களுக்குப் பிறகு (a wake-up call in May and a reminder in November), வழிக்கு வந்த சவுதியினர் இறுதியில் அமெரிக்காவின் கூட்டாளி போல செயல்பட முனைகின்றனர்.

நவம்பர் மாத இறுதியில், அலி அல்-குதாயர் தொலைக்காட்சியில், நாளின் முக்கியமான நேரத்தில் தோன்றிப் பேசியது இந்த நம்பிக்கையூட்டும் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. சிறையிலிருந்து பேசிய அவர், தக்ஃபீர் மற்றும் ஜிஹாத் சம்மந்தமான தனது [முந்தைய] தீவிரவாத நிலைப்பாட்டை மொத்தமாக மறுத்துப் பேசினார். இந்த மாற்றத்துக்கான காரணம் உண்மையானதா, கட்டாயத்தின் பேரிலா அல்லது அரசியல் பேரத்தின் ஒரு பகுதியா என்று சொல்வது கடினம். ஆனால், சவுதியினர் இதைத் தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு வெற்றியாகவே கருதுகின்றனர். இதை வலியுறுத்தும் விதத்தில், மன்ஸூர் அல்-நுகயதன் தன் கட்டுரைகளை வெளியிட மறுபடி அனுமதிக்கப்பட்டார். இது நிச்சயம் ஒரு முன்னோக்கிய வளர்ச்சி என்றாலும், சவுதியின் அமைதியின்மையின் வேர்கள் இந்த இருவருக்கு இடையேயான போட்டிக்கு வெளியேயும் நீண்டுள்ளன. அல்-குதாயரை வழிகாட்டியாகக் கொண்ட ஆயிரக்கணக்கான அதிருப்தியுற்ற இளைஞர்கள் இன்னும் சினம் கொண்டவர்களாகவே இருக்கிறார். மையக் கேள்வியான மதத் தலைவர்களின் அதிகாரங்களைக் குறைப்பது என்பது, இன்னும் தீர்வு காணப்படாத சர்ச்சையாகவே உள்ளது.

இந்த நசீர் அல்-உமர் சம்பவம் சுட்டியதைப் போலவே, முன்னர் அமெரிக்க எதிர்ப்பு உணர்வை உருவாக்கிய சவுதியின் உள்நாட்டுக் குழப்பங்கள் இன்னும் தொடர்கின்றன. கூடவே, சமீபத்திய ஒடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பின்னரும், அல் கய்தாவும் சவுதி அரேபிய அதிகார பூர்வமான மதத் தலைவர்களும், பொதுவான எதிரி பற்றி வலுவான, ஒத்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள். காட்டாக, அல் கய்தாவின் செய்தியாளர் அபு அப்த் அல்-ரஹ்மான் அல்-நஜ்தி என்பவர் 2003-ம் வருடம் அக்டோபர் மாத ஆரம்பத்தில் வெளியிட்ட அறிக்கையைப் பார்க்கலாம். அல் கய்தாவின் மீது சவுதி பாதுகாப்புத் துறையினர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி அவர் விசனப்படாமல், இராக்கில் ஷியாக்களின் எழுச்சியைப் பற்றியே கவலைப்பட்டார்: நம் சகோதரர்களுக்கும், இராக்கிலிருக்கும் எல்லா முஜாஹிதின்களுக்கும் நாம் விடுக்கும் அறைகூவல் என்னவென்றால், அமெரிக்கர்களுடன் நட்பு கொள்ளும் சுன்னி மதத் தலைவர்களைக் கொல்லுங்கள், ஏனென்றால் அவர்கள் நெறிதவறியவர்கள்; மேலும், அமெரிக்கர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் சாத்தான்களான எல்லா ஷியா பிரிவு அயதுல்லாகளையும் கொல்லுங்கள் – இவர்களுள் முதன்மையான சாத்தான் அயதுல்லா முகமது பஹ்ர் அல்-உலுமும், அவரைப் போன்றவர்களுமே. இதேபோல, ஷியா இளைஞர்களிடம் நாம் எதிர்பார்ப்பது என்னவென்றால், அவர்கள் ஆண்டவனின் புத்தகத்துக்கு, முகம்மதின் சுன்னாவான [5] பாதைக்கே திரும்புவதையுமே.

அல் கய்தாவிற்கு திகில் கனவாக உள்ளவை இவை தான்: அமெரிக்கர்களும், இராக்கிய ஷியாக்களும் சவுதி அரேபியத் தலைமையை வற்புறுத்தி பெரிய அளவில் சீர்திருத்தங்களைக் கொணர்ந்து விடுவார்கள், மேலும் சவுதி ஷியாக்களை அரசியல் அமைப்புக்குள்ளும் கொண்டுவந்து விடுவார்கள் என்பன. கடுமையான சுன்னி மதப்பார்வை உள்ள பல தலைவர்களுக்கும் இதே அச்சம் இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் வேண்டாம். ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்குவதற்கு முன்னரே, இஸ்லாத்தை அழிப்பதற்கான யூத-அமெரிக்க சதி என்ற கோட்பாட்டை சவுதி மதத் தலைவர்கள் உபதேசிக்கத் தொடங்கி இருந்தார்கள். போதாக்குறைக்கு இப்போது அமெரிக்கர்கள் இராக்கிய ஷியாக்களுக்கு [சதாம் உசைனால்] போடப்பட்டிருந்த விலங்குகளை அகற்றி விட்டதால், அமெரிக்காவின் நோக்கங்கள் பற்றிய இந்த மதத் தலைவர்களின் போக்கில் ஏதேனும் சாதகமான மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பது அறியாமையே.

சவுதி மத அதிகார மையத்தின் அமெரிக்க-ஷியா கூட்டு சதி பற்றிய கருத்துகளை சவுதியின் உள்நாட்டு விவகாரமாக மட்டுமே கருதிவிட முடியாது. இது, இராக்கின் ‘சுன்னி முக்கோணம் ‘ பகுதியில் அமெரிக்கப் படையினர் மீது தினசரி நடத்தப்படும் தாக்குதல்களை மட்டுமல்லாமல், ஷியாக்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் நஜஃப்பில் நடந்த தற்கொலை-குண்டுத் தாக்குதலையும் நியாயப்படுத்துகிறது. நஜஃப் தாக்குதலில் ஏற்பட்ட இடிபாடுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்ட ஒரு கேள்வி: யார் இதைச் செய்தது ? ‘வஹாபிகள் ‘, என்பதே இதற்குக் கிடைத்த ஒரு பதில். ‘பாதிஸ்டுகள் ‘ [சதாமுடைய கட்சியின் எச்ச சொச்சங்கள்] என்பது மற்றொரு பதில். வாஷிங்டன், ரியாதுடனான தன் உறவை வழக்கம் போல தொடருமாயின், இராக்கிய ஷியாக்கள் தங்கள் மசூதிகளைத் தகர்க்கும் வஹாபி குண்டுவீச்சாளர்களை அமெரிக்கா தந்திரமாக ஆதரித்து வருகிறது என்ற முடிவுகே வந்து விடுவார்கள். 1991-ல் தங்களுக்கு எதிராகவே அமெரிக்கா சதாம் உசைனை ஆதரித்ததாக இவர்கள் கருதியதும் இத்தகைய ஒரு முடிவே. ஆனால், இந்த நிலையை மாற்றுவது மிகவும் கடினமானது. ஏனென்றால், மதத் தலைவர்களால் வளர்க்கப்படும் ஷியா-எதிர்ப்பையும், அமெரிக்க-எதிர்ப்பையும் நிறுத்துவதற்கு அமெரிக்காவிடம் இருக்கும் வழிமுறைகள் மிகச் சிலவே. தீவிர வஹாபிஸத்தை ரியாத் கைவிடச்செய்வது, சோவியத் யூனியனைக் கம்யூனிஸத்தை மறுக்கச் செய்வதை ஒத்தது. ஒரு சவுதிய கோர்பச்சேவை ஆதரிக்க விரும்புபவர்கள் சவுதியில் இருக்கிறார்கள் என்றாலும், அப்படி ஒருவர் தோன்றுவாரா அல்லது எப்போது தோன்றுவார் என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாது.

வஹாபிஸம் ஓர் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பின் அஸ்திவாரமாக இருப்பது. அதில் மாற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டால், உள்ள நிலையே தொடர்வதில் ஆதாயம் இருப்பவர்கள் வஹாபிஸத்திற்கு ஆதரவாக அணி திரள்கிறார்கள். இராக்கில் சதாம் உசைனின் ஆட்சி என்னதான் நாற்றம் பிடித்ததாக இருந்தாலும் அதற்கு நாட்டின் மையத்தில் ஆதரவு காட்டும் ஒரு சமுக அடிப்படை இருந்தது, அந்த பழைய அமைப்பை எதிர்ப்பவர்கள் பிளவுபட்டும் சரியான தலைமை இல்லாதவர்களாகவும் இருந்தார்கள் – இருக்கிறார்கள். சவுதி அரேபியாவிலும், இத்தகைய சிக்கலையே வாஷிங்டன் எதிர்கொள்கிறது. ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்துவதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறு வழி இல்லை. ஆனால், அரசியல் அமைப்பை மேலும் தாராளமாக்குவது புதிய சச்சரவுகளை உண்டாக்கி, அமெரிக்க-எதிர்ப்புணர்வை வலுப்படுத்தும் என்பது தவிர்க்க முடியாதது. சவுதி அரேபியா கொந்தளிப்பில் இருக்கிறது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதில் அமெரிக்கா ஆழமாகச் சிக்கி இருக்கிறது. இராக்கைப் புனரமைக்க வாஷிங்டன் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், தன் நெருங்கிய அரபு சகாவே [சவுதியே] தனது மோசமான எதிரியும் கூட என்பதையும் அது எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

*அல்-கய்தாவுக்கு அல்-குதாயர் காட்டும் பரிவுக்கு பதில் மரியாதை கிட்டுகிறது. மே 2003-ல் இவர் கைது செய்யப்பட்டபோது, இவருக்கு எந்தத் தீங்கையும் இழைக்கக் கூடாது என்று ஒஸாமா பின் லாடன் சவுதி அதிகாரிகளை எச்சரித்ததாக லண்டனில் இருக்கும் போராளியான ஸாத் அல்-ஃபகிஹ் தெரிவித்தார். ‘அல் குடாயர் தங்களது ஆதரவாளரில் தலையானவர் ‘ என்றும், அவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், ‘ஷேக் தங்களுக்குக் கொடுக்கும் பேராதரவுக்கு ஈடானதாக அல் கய்தாவின் பதில் அமையும்… [அதன் பின்] ரத்தம் சொட்டும் அறிவிப்பைத் தவிர வேறு எதையும் நாங்கள் வெளியிட மாட்டோம் ‘ என்றும் பின் லாடன் சொன்னதாகவும் அவர் தெரித்தார்.

நன்றி: Foreign Affairs, ஜனவரி/பிப்ரவரி 2004

மொழி பெயர்ப்பாளரின் குறிப்புகள்:

[4] தாமஸ் ஃப்ரீட்மன் (TOM FRIEDMAN) ஒரு பிரபலமான அமெரிக்க பத்திரிகையாளர். நியூயார்க் டைம்ஸ் என்ற உலகப் புகழ் பெற்ற தினசரியில் தொடர்ந்து இவர் கருத்துக் கட்டுரைகள் எழுதுகிறார். பொதுவாக மேற்கு ஆசியா, ஆசியா போன்ற இடங்களில் அமெரிக்காவுக்கு ஏற்படும் அரசியல் சிக்கல்களைப் பற்றி கட்டுரைகள் எழுதுவதோடு, அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் பல இடங்களில் கூட்டங்களில் பேசுகிறார். பரபரப்பாக விற்ற சில புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்தியாவிற்கு அமெரிக்கரின் வேலைகள் கூடு விட்டுக் கூடு பாய்வது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளும் அமெரிக்க மத்திய வர்க்கத்தினரும் எழுப்பும் கூச்சல்களுக்கு இதுவரை இந்தியாவின் நிலையை ஆதரித்தே கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய புத்தகங்களின் விவரங்கள்: http://www.thomaslfriedman.com/bookshelf.htm

இதுவரை அரசியல் பொருளாதாரக் கட்டுரைகளாக மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், முரட்டுத்தனமான இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், அரபு நாடுகளில் மிகுந்த அடக்கு முறையும், ஜனநாயகத்துக்கு எதிரான அரசுகளும் இருப்பதை எதிர்த்தும் எழுதுவதால் அமெரிக்க அரசின் தரகர் இவர் என்று அரபு முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இதர அரசியல் ஏட்டினரும் கருதுவதாகத் தெரிகிறது.

[5] சுன்னா என்ற பதத்திற்கு பொருள் காண கீழ்க்காணும் இணை மையத்திற்குப் போகலாம்:

http://www.abc.se/~m9783/n/ms_e.html

மேலே, கட்டுரையாளர் சுன்னாவான பாதைக்குத் திரும்புமாறு ஷியாக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக எழுதுகிறார். இஸ்லாமிய நீதி பாலிப்பவர்களின் கருத்தில் சுன்னா என்பது மார்க்கத்தைக் கடைபிடிப்பதில் புதுமைகளை (பி ‘தாவை) ஏற்காதது. எனவே சுன்னா என்பதை மரபு வழி என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், மரபு என்பது இங்கு சமுக வழக்கத்தால் உருவாக்கப்பட்டது என்ற பொருளில் அல்ல. மாறாக, நபி முகம்மதின் ஏற்பைப் பெற்ற முறைகள் என்றே புரிந்து கொள்வது அவசியம்.

சற்று விலகிப் பார்த்தால் நமக்கு ஒன்று புரியலாம். இஸ்லாம் மட்டும் அல்ல, வேறு எல்லா மதங்களையும் சேர்த்து வைத்துப் பார்க்கும் போது, இந்த வேறுபாடு – பெரிதும் சமுக வழக்கத்தால் அமைந்த மதங்களுக்கும், பெரும் புகழடைந்த ஒருவரால் திடாரென அமைக்கப்படும் மதங்களுக்கும் இடையே உள்ள குறிப்பான வேறுபாடு என்பது. முன்னதில் வேர்களைக் காண்பது பல நேரம் மிகவும் கடினமானது. பின்னதில் வேர்கள் எங்கு துவக்கம் என்பதில் ஐயம் இராது, ஆனால் குறித்த செயல்கள் அல்லது கருத்துகள் அல்லது சொற்களுக்கு அசலான பொருள் என்ன என்று மண்டை பிளக்கும் வாதங்கள் எழும். உண்மையாக நம்புபவர்களுக்குத்தான் இந்த பேத வாதங்கள் விளங்கும், பிடிக்கும், அர்த்தமுள்ளனவாக இருக்கும், இவற்றால் ரத்தக் கொதிப்பும் ஏற்படும். கட்டுரையாளர் நம் போலவே ஒரு வெளிப் பார்வையாளர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்

முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

மைக்கேல் ஸ்காட் டொரான் (தமிழில்: ஆசாரகீனன்)


இரட்டை மன்னராட்சி

ரியாத் நகரில், 2003ம் வருடம் நவம்பர் மாத ஆரம்பத்தில் ஒரு குடியிருப்பு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். 122 பேர் காயமடைந்தனர். அமெரிக்க அதிகாரிகள் இச் சம்பவத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் விட்டு விட்டதற்குச் சவுதி அரேபியாவின் அரசியலே காரணம். ரியாத் நகருக்கு அலுவல் காரணமாக வந்திருந்த அமெரிக்க உள்துறை துணைச் செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், இது பற்றிச் சொன்னது – ‘இந் நாட்டிற்கான [சவுதியின்] வழிகளாகப் பட்டத்து இளவரசர் அப்துல்லா தேர்ந்தெடுத்திருக்கும் அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களின் மேல் நாங்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இது போன்ற கொடூரச் செயல்கள் மூலம் பயங்கரவாதிகள் எங்களை ஏதும் அசைத்து விட முடியாது. ‘

இப்படி ஒரு நம்பிக்கை உண்மையிலே இருந்திருக்குமானால், அது இடம் தவறி வைக்கப்பட்ட நம்பிக்கையாகி விட்டது. ஏற்கனவே அப்துல்லாவின் சீர்திருத்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டு விட்டன. ஆறு மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட இது போன்ற ஒரு தாக்குதலை ஒட்டியே இந்த பின்னடைவு தொடங்கி விட்டது. அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியாவது எதுவானாலும், சரியாகச் சொன்னால், தாக்குதல் நடத்துபவர்கள், அவர்களைக் கொள்கை ரீதியாக ஆதரிப்பவர்களின் நோக்கம் இந்தச் சீர்திருத்தங்களை நிறுத்துவதுதான். வாஷிங்டனின் நம்பிக்கைக்குரிய துணை நாடுகளுள் ஒன்று, இத்தகைய கொலை வெறி மிக்க அமெரிக்க எதிர்ப்பைத் தன்னுள் ஏன் அடைகாத்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள, சவுதி அரேபியாவின் கடும் குழப்பமான உள்நாட்டு அரசியலில் முக்குளித்து, அதன் ஆழங்களுக்குச் செல்வது அவசியம்.

சவுதி அரசு சில்லுகளாகப் பிளவுபட்ட அமைப்பு. இதை அரச குடும்பத்தினர் தமக்குள் பல குறுநில மானியங்களாகப் பிரித்துக் கொண்டுள்ளார்கள். இருக்கும் நான்கு அல்லது ஐந்து வலிமை பொருந்திய இளவரசர்களுள் உயர்ந்து நிற்பவர்கள் பட்டத்து இளவரசர் அப்துல்லாவும், அவரது சகோதரரும் (மறு தாய் மகன்) உள்துறை அமைச்சருமான இளவரசர் நயெஃப். இந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவின் கடுமை வெளிப்படையானதே. அமெரிக்காவிடம் செல்வாக்குள்ளவர் அப்துல்லா. ஆனால் சவுதியில் உளவுத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நயெஃப்பின் உள்நாட்டுச் செல்வாக்கு பெரியதும் கரும்-நிழல் போன்றதுமானது. 1995-லிருந்தே மூளை ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டு நோயுற்றிருக்கும் மன்னர் ஃபாஹ்த்-துக்குப் பின்னர் ஆளப்போவது யார் என்ற கேள்வி ஒட்டு மொத்த சவுதி அமைப்பிலும் கவிந்திருந்தாலும், இரு இளவரசர்களுமே அதிகாரத்தைக் கைப்பற்றுமளவு பக்கபலம் பெறவில்லை.

ஒரு இக்கட்டான நிலையில் இப்போது சவுதி அரேபியா இருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் பொருளாதார வளர்ச்சி இல்லை. அரசு மக்கள் நலனைப் போஷிக்கும் விதம் மிக வேகமாக நலிவடைகிறது. வட்டார மற்றும் குழுக் குரோதங்கள் பெருகி மேலெழுகின்றன. இப் பிரச்சினைகள் எல்லாம் பெருகி வரும் தீவிரவாத இஸ்லாமிய நடவடிக்கைகளால் கசப்பான சிக்கல்களாகின்றன. எப்படியோ சவுதி அரசியல் அமைப்பு பரிணாம வளர்ச்சி பெற வேண்டும் என்பதைப் பலரும் ஒப்புக் கொண்டாலும், கட்டுச் சிதைவினால் (schizophrenia) பண்பாட்டில் நிலவும் ஆழமான மனப் பிராந்தி அதிகார வர்க்கத்தினரை, குறிப்பாக என்ன சீர்திருத்தங்கள் தேவை என்று எந்த ஒரு உடன்பாட்டிற்கும் வரவிடாமல் தடுக்கிறது.

ஒரு புறம் அரசியல் வளர்ச்சிக்கு ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் முன்னோடியாகக் கொள்ளும் மேலை நாகரிகச் சாய்வுள்ள அறிவு ஜீவிகள், மறுபுறம் [பண்டை] இஸ்லாத்தின் பொற்காலத்தைப் பற்றிய தனது விளக்கங்களையே வழிகாட்டியாய் முன் வைக்க விரும்பும் வஹாபிய மத நிறுவனங்கள் என்ற மாறுபட்ட இரு தனி வழி செல்லும் அரசியல் சமுகங்களிடையே ஒரு தரகராகவே சவுதி மன்னராட்சி செயல்படுகிறது. வஹாபியர் அல்லாத எவருக்கும் அளிக்கப்படும் எந்த ஒரு உரிமையையும் ‘உருவ வழிபாட்டு ‘ப் பாதையாக மதத் தலைவர்கள்[1] கருதுகின்றனர். அதிகார வலிமை மிகுந்த இரு சவுதி அரேபிய இளவரசர்களும் இந்த சர்ச்சையில் எதிரெதிர் நிலைபாட்டை எடுத்துள்ளனர். தாராளப் போக்குள்ள சீர்திருத்தங்களையும், அமெரிக்காவுடனான நல்லுறவையும் நாடுபவர் அப்துல்லா. மதகுருமார்களின் தரப்பில் இருப்பதோடு, அல்-கய்தாவின் குறிக்கோள்களில் பெருவாரியானவற்றுடன் உடன்பட்டு அமெரிக்காவுக்கு எதிராக இயங்கும் மத நிறுவனங்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுபவர் நயெஃப்.

தவ்ஹீத் (TAWHID)-இன் வலிமை

அரசாங்கம், ஆதார மத அமைப்புகளின் அதிகாரத்தை குறைக்கலாமா கூடாதா என்ற பிரச்சினையில் இந்த இரண்டு குழுக்களும் முற்றிலும் வேறுபடுகின்றன. இந்த அரசியல் விரிபரப்பில் மத குருக்களும், நயெஃப்பும் வலது சாரி நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். நிறுவனரான முகமது இபின் அப்த் அல்-வஹாப்-இன் பெயராலேயே அழைக்கப்படும் வஹாபியம் வரையறுக்கும் தவ்ஹீதின், அல்லது ஒரே கடவுள் (Monotheism) என்ற மையக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவர்கள் இந்த நிலைப்பாடை எடுத்துள்ளனர். இவர்கள் கருத்துப்படி, ஒரே கடவுள் கொள்கையைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் பலரும் உண்மையில் பல கடவுளர் கொள்கையையும் உருவ வழிபாட்டையும் பின்பற்றுபவர்களே. பெரும்பாலான சவுதி தீவிரவாத மதத் தலைவர்கள் போடும் இத்தகைய எதிரிகளின் பட்டியலில் கிருஸ்தவர்கள், யூதர்கள், ஷியாக்கள், போதுமான மார்க்கப் பற்று இல்லாத சுன்னி முஸ்லீம்கள் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். தவ்ஹீதியப் பார்வையில், இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் குழுக்களே ஒரு மாபெரும் சதித்திட்டத்தால் உண்மையான இஸ்லாத்தை அழிக்க முற்பட்டிருக்கிறார்கள். இந்தச் சதித் திட்டத்துக்கு தலைமை தாங்குவது, ‘இக் கால கட்டத்தின் பெரும் உருவச் சிலையான ‘ அமெரிக்க ஐக்கிய நாடுகளே. இந்தப் பார்வையின்படி – அமெரிக்கா இரு முறை ஷியாக்களுடன் சேர்ந்து கொண்டு, ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் சுன்னி முஸ்லிம்களைத் தாக்கியது; பாலஸ்தினிய சுன்னி முஸ்லிம்களுக்கெதிராக யூதர்களை ஆதரிக்கிறது; இராக்கில் ஷியாக்களின் நலன்களை முன்னேற்றுகிறது; சவுதி அரேபியாவின் கல்வித் திட்டத்திலிருந்து வஹாபியத்தை அகற்றச் சொல்லி சவுதி அரசாங்கத்தை நச்சரிக்கிறது. இதற்கிடையே கேபிள் தொலைக்காட்சியும், உலக இணையமும் உருவ வழிபாட்டை மடை திறந்த வெள்ளமாக எங்கும் ஓட விடுகின்றன. பாலுறவைத் தாராளமாக்கும் போக்கு, எங்கும் எதிலும் கிருஸ்தவத்தைப் பின்புலனில் வைப்பது, கட்டற்றுப் பெண்கள் விடுதலைக்கு ஆதரவு தருவது ஆகியவற்றைக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கலாச்சாரம், சவுதி சமூகத்தை அடுத்துக் கெடுக்கிறது[2].

உருவ வழிபாட்டுக்கு எதிராக, சில நேரங்களில் ஆயுதங்களைக் கொண்டோ அல்லது கடுமையான நம்பிக்கைகளைக் கொண்டோ நடத்தப்படும் ஜிஹாத் எனப்படும் புனிதப்போருடன் நெருங்கிய தொடர்புடையது தவ்ஹீத். உள்நாட்டிலிருந்து உருவ வழிபாடு, கேளிக்கையில் மூழ்குதல் போன்ற பண்பாடுகளையும், அவை சார்ந்த அரசியல் நடைமுறைகளை ஒழித்துக் கட்டுவதும், அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் நடக்கும் போரை ஆதரிப்பதும் மத குருமார்களைப் பொறுத்தவரை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே. உண்மையான ஒரே கடவுள் வழிபாட்டுத் தத்துவம், பல கடவுள் வழிபாட்டுத் தத்துவத்தை அறுதியாக வெற்றி கொள்ளும் நாளான ‘இறுதி நீதி வழங்கும் நாள் ‘ வரை, உருவ வழிபாட்டுக்கு எதிரான ஜிஹாத்தானது நீடித்து நடத்தப்பட வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சளைப்பில்லாமல் வலியுறுத்துபவர்கள் இந்த மத குருமார்கள்.

தவ்ஹீத் என்ற இந்தக் கருத்தாக்கத்தின் காரணமாக சவுதி அரேபிய மத குருமார்கள் பெறும் அரசியல் அந்தஸ்து அலாதியானது. உருவ வழிபாட்டைத் துப்புத்துலக்கி அதை வேரோடு கெல்லி எறிந்து அழிப்பதன் மூலம் நாட்டின் தூய்மையைக் காப்பதற்குப் பயிற்சி பெற்றவர்கள் அவர்கள் மட்டும்தானே. ஆகவே, தவ்ஹீத் என்பது சகிப்புத்தன்மை இல்லாத மதக் கொள்கையாக மட்டுமில்லாமல், சவுதி அரசின் அடக்குமுறையை நியாயப் படுத்தும் அரசியல் கொள்கையாகவும் இருப்பதும்கூட. எனவே, ரகசியக் காவல் துறைக்குத் தலைமை வகிக்கும் நயெஃப், தவ்ஹீதைத் தீவிரமாக ஆதரிப்பதில் வியப்படைய ஏதுமில்லைதான். தம் தனி வாழ்வில் மத நம்பிக்கை மிக்கவராகக் கருதப்படாவிட்டாலும், கண் கொட்டாத கவனத்துடன் நயெஃப் வஹாபி தூய்மைவாதத்தை ஆதரிப்பதன் காரணம், தனது ரொட்டிக்கு எந்தப் பக்கத்தில் வெண்ணெய் தடவப்பட்டிருக்கிறது என்பதை அவர் நன்கு அறிந்திருப்பதே. இவரைப் போலத்தான் வேறு பலரும் அடக்குமுறை என்பது மாறாத தொடர் நிலையாக இருப்பதில் சில வசதிகள் கிட்டுவதால் அதை ஆதரிக்கிறார்கள்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை, தவ்ஹீதிற்கு நயெஃபின் ஆதரவு என்பது ஜிஹாத்துக்கான ஆதரவே. எனவேதான் பாலஸ்தினரின் இன்டிஃபாதாவிற்கு (ஜயோனிய [யூத தேசியவாதம்] ஆக்ரமிப்பாளர் கூட்டணிக்கெதிரான தற்காப்புப் போரான ஜிஹாத் என்று மதகுருமார்களால் கருதப்படுவது) – ஆதரவு தரும் சவுதி நிதியத்திற்குத் தலைமை தாங்குவது அப்துல்லா அல்ல, நயெஃப்பே. உள்நாட்டில் சர்ச்சைக்குரிய ‘நல்லொழுக்க முன்னேற்றம் மற்றும் தீயொழுக்கத் தடுப்புக்கான ஆணையம் ‘ (Commission for the Promotion of Virtue and Prevention of Vice – CPVPV அல்லது ந.மு.தீ.த.ஆ.) என்கிற மதக் காவல் துறையைக் கையில் வைத்திருப்பதும் நயெஃப்பே. இந்த ந.மு.தீ.த. ஆணையக் காவலர்கள், மார்ச் 2002ல் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பித்து வெளியேற முயன்ற பள்ளி மாணவிகளைக் கம்புகளால் அடித்து வெளியேற விடாமல் தடுத்ததற்காக மிகப் பெரிய கண்டனத்துக்கு உள்ளாயினர். நெருப்பிலிருந்து தப்பும் அவசரத்தில் இஸ்லாமிய முறைப்படி உடை அணியாமல் வெளியே வர முயன்ற அப் பெண்களின் மீது, மதக் காவல் துறையினர் அறிவற்ற விதத்தில் பொது ஒழுக்கச் சட்டங்களை அச் சூழ்நிலையிலும் திணிக்க முயன்றது இந்த சம்பவத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. 12-க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்தக் குழப்பத்தில் மிதிபட்டு இறந்தனர். இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் பற்றிய செய்தி முற்றிலும் உண்மையானதா என்பதை நிறுவுவது கடினம் என்றாலும், ந.மு.தீ.த. ஆணையச் செயலர் செயல்பட்ட விதம் மீட்பு நடவடிக்கைகளைப் பாழாக்கும் விதத்தில் இருந்தது என்பதை நிறுவப் போதுமான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. ஆனால் நயெஃப்போ, மதக் காவல்துறையினர் தவறு செய்ததை அடியோடு மறுக்கிறார்.

தகாரப்பின் (Taqarub) அழைப்பு

சவுதி அரசியல் அமைப்பின் வலது பக்கத் தூண் தவ்ஹீத் என்று கருதுவோமானால், தகாரப் எனப்படும் முஸ்லீம்களுக்கும், முஸ்லீம் அல்லாதவர்களும் இடையிலான நல்லுறவுத் தத்துவத்தை இடது பக்கத் தூண் எனலாம். நம்பிக்கையற்றவர்களுடன் அமைதியாக இணைந்து வாழ்தல் என்ற கருத்தைப் பரப்புவது தகாரப். முஸ்லீம் அல்லாதவர்கள் என்று வஹாபியர்கள் கருதும் ஷியாக்கள், மதசார்பற்றவர்கள், பெண்ணியவாதிகள் போன்றவர்களின் அரசியல் பங்கெடுப்பை அங்கீகரித்து, அரசியல் சமூகத்தைப் பரந்ததாக்க விரும்புகிறது தகாரப். வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரை, ஜிஹாத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, கிருஸ்தவ அமெரிக்கருடனும், யூத இஸ்ரேலியருடனும், ஷியா இரானியருடன் கூட இணக்கமாக வாழ விரும்புவது தகாரப். சுருக்கமாக சொன்னால், தவ்ஹீதின் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிரானது தகாரப்.

வெளிப்படையாகவே தகாரப்புடன் தன்னை இணைத்துக் கொள்பவர் அப்துல்லா. பொது விவாதங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதை ஆதரிப்பதோடு, ஜனநாயக ரீதியிலான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது மற்றும் மத குருமார்களின் அதிகாரத்தைக் குறைப்பது ஆகியவற்றையும் ஆதரிப்பவர் அவர். 2003-ம் ஆண்டு ஜனவரிக்கும், மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரபல சவுதி தாராளவாதிகளுடன் (liberals) நடத்தப்பட்ட மிக அரியதானதும் வெளிப்படையானதுமான ‘தேசிய உரையாடலு ‘க்குத் தலைமை வகித்தார் அப்துல்லா. இந்த உரையாடலின் சாரத்தைத் தெரிவிக்கும் இரு முக்கிய ஆவணங்களுள் ஒன்று ‘தேசிய சீர்திருத்த ஆவணம் ‘. இது சவுதி ஜனநாயகத்துக்கான வரை படமாகும். ‘உள்நாட்டிலிருக்கும் கூட்டாளிகள் ‘ என்பது இரண்டாவது ஆவணம். இது ஒடுக்கப்பட்ட ஷியாக்கள் அதிக சுதந்திரங்களைக் கோரியது பற்றியது. முதல் ஆவணமானது நேரடித் தேர்தல்கள், ஆள்வோரின் கட்டுப்பாடுகள் ஏதுமற்ற நீதி நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவது, பொது வாழ்வில் பெண்களின் பங்கை அதிகரிப்பது போன்றவற்றை ஆதரிக்கிறது. இந்த ஆவணத்தை உருவாக்கியவர்கள் இஸ்லாமியச் சட்டங்கள் மீது தாம் கொண்ட மதிபைத் தெளிவாகவே வெளிப்படுத்தினர். மத குருமார்களுக்கு இதில் ஆறுதல் ஏற்படவில்லை. ஆனாலும், அவர்களின் உணர்வுகளை ஷியாக்களின் கோரிக்கை உரசிய அளவோடு ஒப்பிட்டால் இந்த முதல் ஆவணம் அவர்களைத் துணுக்குறச் செய்து விடவில்லை. ஷியாக்களின் ஆவணம் நரகத்தின் மையப் பகுதியிலிருந்தே வெளியிடப் பட்டிருப்பதாக இம் மதத் தலைவர்கள் கருதுகிறார்கள்.

சவுதியின் மத அதிகாரக் கட்டமைப்பு, ஷியா பாதையின் மேல் ஆழ்ந்த வெளிப்படையான வெறுப்பு கொண்டது. மக்கள் தொகையில் 10 முதல் 15 சதவீதத்தினர் ஷியாக்கள் என்றாலும் மத சுதந்திரத்துக்கான மிகவும் எளிய, அடிப்படையான உரிமைகள் கூட அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இருந்த போதும், இதுவரை நடந்திராத சம்பவமாக, பட்டத்து இளவரசர் அப்துல்லா ஷியாக்களின் தலைவர்களைச் சந்தித்ததோடு அவர்களது கோரிக்கை விண்ணப்பத்தையும் பெற்றுக் கொண்டார். மிகவும் கட்டுப்ப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் சவுதி பத்திரிக்கைகள் இந்தக் கோரிக்கை மனு பற்றிய எந்த செய்தியையோ, அல்லது அதன் விவரங்களையோ வெளியிடவில்லை. ஆனால், அப்துல்லாவின் இச் செய்கை, சவுதியின் மத அமைப்பிடையே கடும் அதிருப்தி அலைகளை எழுப்பியுள்ளது.

ஏப்ரல் 2003-ல் டெக்ஸாஸ் மாநிலம் க்ராபர்டில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் கலந்து ஆலோசித்து, அரபு-இஸ்ரேலிய அமைதிக்கான ‘சவுதி திட்டத்தை ‘ வெளியிட்டது, ஷியாக்களின் ‘இழிவுபட்ட ‘ கோரிக்கை விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டது போன்ற செயல்களால் பட்டத்து இளவரசர் அப்துல்லா தகாரப் வழியை முன்வைப்பவர்களுக்குத் தன் ஆதரவைக் காட்டி, தீவிரவாத மதத் தலைவர்களுக்கு எதிரான தம் நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலை நாடுகளின் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு அப்துல்லாவின் உள்நாட்டுச் சீர்திருத்த முயற்சிக்கும், முஸ்லிம் அல்லாத நாடுகள், மற்றும் ‘மார்க்கத்திலிருந்து வழி தவறி விட்ட ‘ ஷியாக்களுடன் சுமுகமான உறவை விரும்பும் தன்மைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகப் புலப்படாது. வஹாபிகளால் அடக்கி ஆளப்படும் அரசியல் கலாச்சாரத்தில், இவையிரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே பார்க்கப் படுகின்றன.

தக்ஃபிர் (TAKFIR) என்னும் அபாயம்

அப்துல்லா மேலை நாடுகளுடன் நட்புக் கொள்ள விழைந்திருக்கும் அதே நேரத்தில் நயெஃப், அல்-கய்தாவுக்கு மறைமுக ஆதரவு தரும் அளவுக்கு ஜிஹாத்தின் ஆதரவாளராக விளங்குபவர். குறிப்பாக, செப்டம்பர் 11, 2001 தீவிரவாதிகள் தாக்குதலில் சவுதி விமானக் கடத்தல்காரர்கள் தொடர்புபடுத்தப் படுவதை நவம்பர் 2002-ல் நயெஃப் மறுத்தார். சவுதி அரேபியாவில் வெளியான நேர்காணல் ஒன்றில், அளவில் பெரிய அத்தகைய தாக்குதலுக்கு அல் கய்தா திட்டமிட்டு இருக்க முடியாது என்றும் அவர் சொன்னார். அது ஓர் இஸ்ரேலிய சதி என்றும், முஸ்லிம்களுக்கு எதிராகப் பெரிய அளவிலான கசப்புணர்வை ஏற்படுத்திய அத்தகைய தாக்குதலை இஸ்லாத்தின் எதிரிகளே திட்டமிட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் நயெஃப். இந்த அறிக்கை, இஸ்லாமிய மதத் தலைவர்களின் மனப் பிராந்தியில் எழும் சதித் திட்டம் பற்றிய பிரச்சாரக் கருத்துகளை ஆமோதிப்பதோடு, சவுதி ரகசிய காவல் துறையினரின் பார்வையில் அல் கய்தாவைத் தேடிப் பிடிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏதும் இல்லை என்ற கருத்தையும் வெளியாக்கியது.

சவுதியின் மதத் தலைவர்களுள் ஒருவரான அலி பின் அல்-குதாயர் (al-Khudayr) தொடர்பான ஒரு சம்பவம் நயெஃப்பின் நிலையை விளக்க உதவுகிறது. அல்-கய்தாவுடன் நெருங்கிய தொடர்புடையவரான அல்-குதாயர், தக்ஃபிரி-ஜிஹாதி வகை இஸ்லாமிய தீவிரவாதப் பிரிவின் தலைவர். அதாவது, தக்ஃபிரைப் [2] பயன்படுத்தி, சக சுன்னி பிரிவிவைச் சார்ந்தவர்களையே, ‘நம்பிக்கையைக் கைவிட்டவர்கள் ‘ (இது மரண தண்டனைக்கு உரிய குற்றம்)* என்று அறிவிக்கக் கூடியவர். செப்டம்பர் 11 தாக்குதலைக் கொண்டாடி மகிழ தன் ஆதரவாளர்களுக்கு இவர் ஃபத்வா விட்டார் [3]. இஸ்லாம் சந்தித்த எதிரிகளிலேயே மிக மோசமான எதிரியாக அமெரிக்காவைச் சித்தரித்த இவர், தாக்குதலில் உயிரிழந்த பல அப்பாவிகளுக்காக வருந்தியவர்களையும் கண்டிக்கத் தவறவில்லை. முஸ்லிம்களைக் கொன்றது மற்றும் இடம் பெயரச் செய்தது, முஸ்லிம்களின் எதிரிகளுக்கு உதவியது, மத சார்பின்மையைப் பரப்புவது, மக்கள் மீதும், அரசாங்கத்தின் மீதும் வலுக்கட்டாயமாக [இஸ்லாத்திற்கு எதிராக, இஸ்லாத்தை மறுக்கும் விதமாக] அவதூறைத் திணிப்பது, முஜாஹிதின்களைக் கொடுமைப்படுத்துவது என்று அமெரிக்காவின் ‘குற்றங்களை ‘ப் பட்டியலிட்டு அத் தாக்குதலை நியாயப்படுத்தினார் அல்-குதாயர்.

பின்னர் இவர் நயெஃப்பின் பாதுகாப்பு அமைப்பால் கைது செய்யப்பட்டார் என்றாலும், அந்த நடவடிக்கை 2003-ஆம் ஆண்டு மே மாதம் ரியாதில் 34 பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னரே, அதாவது, இவரது பாணியிலான தீவிரவாதம் அரசியல் சம நிலையைக் குலைக்க முயன்ற பின்னரே நிகழ்ந்தது. அதுவரை இவர் சுதந்திரமாகச் செயல்பட்டு, அமெரிக்காவுக்கு எதிரான தனது வன்முறைப் பிரச்சாரங்களை எவ்விதத் தடையுமின்றி நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏன் ? காரணம், அதே நேரத்தில் மத அதிகார அமைப்பை விமர்சிப்பவர்களை அச்சுறுத்தவும் இவர் பயன்பட்டதுதான். நயெஃபைப் பொறுத்தவரை வஹாபிய அச்சுறுத்தல் முறைகள், சீர்திருத்தவாதிகளைக் கட்டுப்படுத்த உதவியாக இருந்தது. உதாரணமாக, சவுதி பத்திரிகையாளர் மன்ஸுர் அல்-நுக்கய்தன் என்பவர் அடிப்படைவாத மதத் தலைவர்களை வெளிப்படையாக விமர்சிப்பவர். இவரும் முன்னாளில் ஒரு முஸ்லிம் தீவிரவாதியாக இருந்தவர்தான். அப்போது உருவ வழிபாட்டை வேரோடு கெல்லி எறிவதற்காக, அதைத் தூண்டுவதாக அவர் கருதிய விடியோ கடையை குண்டு வீசித் தகர்க்க முயன்ற குற்றத்துக்காகத் தன் வாலிபப் பருவத்தில் சிறை சென்றவர். இத்தகைய பின்னணியும், மதத் தலைவர்களின் உரையாற்று முறையில் இவருக்குள்ள தேர்ச்சியும், தகாரப்பிற்கு இவர் காட்டும் தெளிவான மற்றும் தளராத ஆதரவும், இவரை மத அதிகார அமைப்புகளுக்கு அச்சமூட்டுபவராக ஆக்குகின்றன. அதனாலேயே தீவிரவாதிகள் இவரைத் தனிப்பட்ட முறையில் ‘கவனிக்க ‘ ப்பட வேண்டியவர் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

தன் சகாக்கள் சிலருடன் சேர்ந்து கொண்டு, அல்-குதாயர் இவரை மத விரோதி (மார்க்கத்தைக் கைவிட்டவர்) எனக் குற்றம் சாட்டினார். பத்திரிகையாளரான அல்-நுக்கய்தன் ஒரு நேர்காணலில் ‘மதசார்பற்ற மனிதாபிமானத்தைப் ‘ பற்றிப் பேசியதையும் ‘மதம், சடங்குகள், விசுவாசிகள் ‘ மீது வெறுப்பு தெரிவித்திருந்ததையும் சுட்டிக் காட்டி அவற்றைக் குற்றங்கள் என அறிவித்தார். ‘மற்றவருடன் இணக்கமாக வாழ வழிவகை செய்யும் இஸ்லாமே நமக்குத் தேவை, பிறரின் நம்பிக்கைகள் அல்லது சாய்வுகளின் காரணமாக அவர்களை வெறுக்காத இஸ்லாமே நமக்குத் தேவை. நமக்கு வேண்டியது ஒரு புதிய சீர்திருத்தம், உலகில் உள்ள பிறரோடு இணக்கமாக வாழும் விதத்தில் மத நூல்களை மறு வாசிப்புச் செய்யும் துணிச்சல் ‘, என்ற அல்-நுக்கய்தனின் கருத்துகள் மாபெரும் குற்றமாகும் என்றும் மதத் தலைவர்கள் கருதினர். தகாரப்பை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கருத்துகள் காரணமாக, அவருக்கு மரண தண்டனை விதிக்கும் அறிவிப்பு அல்-குதாயரின் இணைய தளத்தில் ஒளிவு மறைவின்றி வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைப் பற்றி ஐந்து மாதங்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஷியா வழியை வெளிப்படையாகக் கடைபிடித்தாலே பல ஆண்டுகள் சிறைத் தண்டனை நிச்சயம் என்றிருக்கும் ஒரு ஆட்சியில், அல்-குதாயரின் சுதந்திரமான ஆண்டுகள் ஒரு பெரும் கதையே. அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவது, சீர்திருத்தவாதிகளை அச்சுறுத்துவது ஆகிய இரண்டோடு தமது விளையாடல்களை நிறுத்திக் கொண்டிருக்கும் வரை மதத் தலைவர்களோடு நயெஃப்புக்கு எந்த சச்சரவும் இல்லை.

அல்-குதாயர் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில், மற்றொரு பக்கம் சீர்திருத்த இயக்கத்தின் மீதான ஒடுக்குமுறையும் முடுக்கி விடப்பட்டது. இதனால், அல்-நுக்கய்தனின் வேலை பறி போயிற்று. அதன்பின் உடனேயே அவர் எழுதுவதும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதும் தடை செய்யப்பட்டது. இருக்கும் அமைப்பை மாற்றமேதும் இல்லாமல் வைத்துக் கொள்வதையே குறியாகக் கொண்ட நயெஃப்புக்கு, இப்படி ஒரே நேரம் எதிரும் புதிருமாக நடவடிக்கை எடுப்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. சவுதி முடியரசைக் குறி வைத்த குண்டுகள் வெடிக்கத் தொடங்கியதால் அல்-குதாயர் நயெஃப்பின் எதிரியானதைப் போலவே, அல்-நுக்கய்தனும் மேல் தட்டினருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு போக்குக்குக் குறியீடாகவே கருதப்படுகிறார். சீர்திருத்தவாதிகளுக்குத் தொல்லை கொடுப்பதை தன் பொறுப்பாக வெளிப்படையாக நயெஃப் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், ரகசிய போலிஸார் வெளிப்படையாகவே அதைச் செய்து வருகின்றனர்.

நடந்த சம்பவங்களின் வரிசை இதுதான். முன் அறிவிப்பு இன்றியோ அல்லது ஒரு பிரபல மதத் தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலோ, மத அதிகார அமைப்பை விமர்சிக்கும் ஒருவர் பதவி இழப்பார். அவரைப் பணியில் அமர்த்தியிருப்பவரோ, அதைப் பற்றிப் பேச மறுப்பார். பின்னர் வேலையின்றி இருக்கும் அந்த மனிதரைக் கொலை செய்யப் போவதாக இஸ்லாமிய தீவிரவாதிகள் தொலைபேசி மூலமும், இணையத்தின் மூலமும் மிரட்டுவார்கள். இதைப் போலவே 1999-ஆம் ஆண்டில், அல்-குதாயரின் சகா ஒருவர், சவுதி புதின எழுத்தாளரான துர்க்கி அல்-ஹமத்துக்கு எதிராக ஒரு ஃபத்வா வழி மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டார். பின்னாளில் இந்த எழுத்தாளர் தேசிய சீரமைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டவர். இதன் காரணமாகவும், அல்-ஹமதுக்குப் பல கொலை மிரட்டல்கள் வந்தன. அவரும், அவருடைய குடும்பத்தினரும் ந.மு.தீ.த. ஆணையத்தால் துன்புறுத்தப்பட்டனர். உதவி கேட்டு அப்துல்லாவை அணுகியபோது, இவரை அனுதாபத்துடன் நடத்திய அப்துல்லா, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தார். மெய்காப்பாளர்களை மட்டும் அனுப்பியதன் மூலம், தன் சகோதரரிடம் இருக்கும் அரசாங்கத்தின் பல இருண்ட பகுதிகள் மீது தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை அப்துல்லா மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்றி: Foreign Affairs, ஜனவரி/பிப்ரவரி 2004

மொழி பெயர்ப்பாளரின் குறிப்புகள்:

Michael Scott Doran, பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் அண்மைக் கிழக்கு நாடுகள் துறையில் துணைப் பேராசியர், (அமெரிக்க) அயல் நாட்டு உறவுகள் மீதான ஆலோசனைக் குழுவில் மூத்த ஆய்வாளர்.

http://www.princeton.edu/~nes/profiles/faculty.html

[1] clergy அல்லது clerics என்பதற்கு இணையானதாக ‘மதத் தலைவர் ‘ என்ற சொல் இக்கட்டுரையில் பயன்படுத்தப்படுகிறது.

[2.] தக்ஃபிர் என்பது ஒரு முஸ்லிமை குஃபிர் [இஸ்லாத்திலிருந்து தவறியவர், நம்பிக்கை இழந்தவர்] என்று அறிவிப்பது அல்லது குற்றம் சாட்டுவது. இந்த வகையில் யாரையாவது பழிக்கு உள்ளாக்குவது குறித்து இஸ்லாமிய பத்திரிகைகளில் சென்ற நூற்றாண்டில் பல இடங்களில், பல கால கட்டங்களில் காரசாரமாக வாதங்கள் நடந்திருக்கின்றன. இணையத்தில் வாழும் இஸ்லாம் என்ற தலைப்பில் பல இஸ்லாமியப் பிரச்சினைகள் வாதிடப்படுகின்றன. மத நிபுணர்கள்தான் இது ஏற்புடையது, இது அல்லாதது என்று விளக்குகிறார்கள்.

http://www.abc.se/~m9783/n/absn_e1.html

[Excerpts from al-Sayyid Yusuf al-Rifa`i ‘s recent epistle, *Advice to Our Brothers the Ulema of Najd*]

மக்காவிலும், மதினாவிலும் சில பிரசாரகர்கள் ஏராளமான முஸ்லிம்களை, அதுவும் ஹஜ் யாத்திரைக்கு வந்த இடத்தில் வைத்து, குஃபிர்கள் என்றோ, சிலை வழிபாடு செய்பவர்கள் என்றோ, மார்க்கத்திலிருந்து தவறி இஸ்லாத்தை மறுத்தவர்கள் என்றெல்லாம் பழி சாட்டுகிறார்கள், இது தகாத செயல் என்று ஒரு பக்கத்தில் அறிவிக்கப்படுகிறது. அதே பக்கத்தில், இஸ்லாத்தை மறுத்து விலகிய முஸ்லிம்களைக் கொல்வது தகும் என்றும் சொல்லப்படுகிறது! இந்தப் பிரசாரகர்கள் சவுதிகள் என்பது தெளிவு. யாரெல்லாம் முஸ்லிம்கள் அல்ல என்று இவர்கள் அறிவிக்கிறார்கள் என்று பார்த்தால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கே சிரிப்பு வரும். ஜமாத்-அல்-தப்ளிக், அல்-இக்வான் அல்-முஸ்லிமின், தேவ்பந்தியினர், பரெல்வி குழுவினர் (இவர்களை மேற்சொன்ன நிபுணர், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலேயே முஸ்லிம்களில் மிகச் சிறந்த மதி நுட்பம் உடையவர்கள் என்று அழைக்கிறார்) இவர்களையெல்லாம் முஸ்லிம்கள் அல்ல என்று கூறுகிறீர்களே இது தகாத செயல், அல்லா உங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து திருந்த வைக்கட்டும் என்று அறிவுறுத்துகிறார். ஆடிக்காற்றில் அம்மியே பறக்கிறதாம் என்பார்களே அது போல இருக்கிறது. தேவ்பந்தியினர், பரெல்வியினர், ஜமாத்-அல் தப்ளிக் இயக்கத்தினரையே முஸ்லிம்கள் அல்ல என்று இந்த வஹாபியிசத்துத் தீவிரவாதிகள் அறிவித்தால், சல்மான் ருஷ்டி, நம் கன்னியாகுமரி மாவட்டக் கவிஞர், ரஷீத் எல்லாம் எந்த மட்டும். இந்தப் பின்னணியில் திண்ணைக்கு வரும் முஸ்லிம்களின் கடிதங்களைப் பார்த்தால் ஏன் அப்படி எழுதுகிறார்கள் என்று நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது! ஆர்வெல்லிய உலகத்தில் வேறென்ன செய்ய ?

[3] போகிற போக்கில், ஃபத்வா விடுவது என்பது தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் புழங்கும் ஒரு வினைச் சொல்லாக மாறி விடும் என்று தோன்றுகிறது. ஃபத்வா என்பது இன்னொரு மிகப் பிரபலமான பெயர்ச் சொல்லாகி விடும். வேறேதும் ஆக்க பூர்வமாக சாதிக்கா விட்டாலும், இஸ்லாமியத் தீவிரவாதம் பல மொழிகளுக்கு ஒரு வினைச் சொல்லையும், பெயர்ச் சொல்லையும் கொடுத்தது என்று தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் – ‘they are fatwaing this, of course! ‘ அல்லது ‘you can ‘t fatwa everything! ‘ தமிழில், ‘அதேன், இவுகதான் மூச்சுக்கு முப்பது வாட்டி ஃபத்வா உட்றாங்களே ? ‘ அல்லது ‘என்ன புள்ளெ ? இப்பல்லாம் கிளப்புக்கே வர்றதில்லே ? வீட்ல ஃபத்வாவா ? ‘

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்