தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அறிக்கைகளை இணையத்தில் பெறுவது எளிதாக உள்ளது.பல இணையதளங்களில் குறிப்பிட்ட துறைகளில் வெளியாகும் கட்டுரைகள் கிடைக்கின்றன.உதாரணமாக

சமூக அறிவியல் துறைகளில் வெளியாகும் கட்டுரைகளை Social Science Research Network (SSRN)(www.ssrn.com) தளத்திலிருந்து பெறமுடியும்.Social Science Gateway உட்பட பல தளங்களிலிருந்து கட்டுரைகளை பெறமுடியும்.அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றி

வெளியாகியுள்ள கட்டுரைகள் குறித்த தகவல்களைப் பெறமுடியும்.Ingenta, Project Muse போன்றவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான journal களில் வெளியாகியுள்ள கட்டுரைகளை படிக்க/பெற முடியும்.தமிழில் இணையத்தில் வெளியாகும் கட்டுரைகள் போன்றவற்றை இப்படி எளிதாகப் பெறமுடியுமா ? இணையத்தமிழ் குறித்து ஒரு தகவல் தொகுப்புத் தளம் உள்ளதா ?. SSRN கட்டுரைகளை பரீசிலித்து வெளியிடுகிறது.அவை வேறொரிடத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும் இத்தளத்திலும் அவை கிடைக்கும். வேறு சில தளங்கள் கட்டுரைகளை பொருள்/துறை வாரியாகத் தருகின்றன.இவையும் வெளியிடப்பட்ட/வெளியிடப்படாத கட்டுரைகளை பரீசிலித்து தகவல் தொகுப்பில் பதிவு செய்கின்றன.ஒரு சில தளங்களில் பதிவு செய்து கொண்டு கட்டுரை ஆசிரியர்/ஆய்வாளர் தன் கட்டுரையை இத்தளம் மூலம் பலருக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.இத்தகைய சாத்தியப்பாடுகளை நாம் கவனிக்க வேண்டும்.தகவல் பரவலாக்கம் இணையம் மூலம் எளிது.உதாரணமாக ஆரம்ப காலதமிழ் நாவல்களும், பாலினமும் குறித்த ஒரு கட்டுரை Journal of Womens History ல்வெளியாகியுள்ளது(1) என்ற தகவல் நவீனத் தமிழ் இலக்கியம் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு கிடைக்கச் செயவது எப்படி ? ஆய்வாளர்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் இதை எப்படித் தெரிவிப்பது ? இணையதளம் ஒன்றின் மூலம் இதைச் செய்ய முடியும்.அதில் தகவல் பதிவினை வாசகர்/ஆய்வாளர் செய்வதற்கு வழி இருந்தால் இது சாத்தியம். இது போல் தேவைப்படும் தகவல்கள் குறித்தும் பதிவு செய்ய வழி இருக்கவேண்டும். இணையம் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாட்டினைப்

பற்றிய ஆராய்ச்சிகள் குறித்து அறிந்து கொள்ள உதவ முடியும். ஆனால் இணையத்தில் தமிழில் என்னனென்ன உள்ளன, ஆங்கிலத்தில் தமிழ் நாடு, தமிழ்ப்பண்பாடு/கலாச்சாரம் போன்றவை குறித்த

தகவல் தொகுப்புகள் எவை என்பதை அறிய உதவும் ஒரு தகவல் தளம் தேவை.கொஞ்சம் யோசித்தால் இணையம் மூலம் தகவல் பரிமாற்றம் என்பதை எவ்வளவு எளிதாகச் செய்யமுடியும் என்பது புலனாகும்.தொலை நோக்கில் இத்தகைய முயற்சிகளின் பயன் குறித்து சிந்திக்க வேண்டும்.இன்று தமிழில் உள்ள இணைய நூலக முயற்சிகள், வெளியீட்டு முயற்சிகள் குறித்து ஒரு விரிவான ஆய்வு தேவை.இவற்றின் நிறை,குறைகள் குறித்தும், அடுத்தக்கட்ட முயற்சிகள் குறித்த ஒரு விவாதமும் தேவை.அது மட்டுமின்றி ஒரு தளத்தில் உள்ளதை இன்னொரு தளம் மூலம் பெறுவது உட்பட பல நடைமுறை பயன்பாடுகளை சாத்தியமாக்குவது எப்படி என்பதையும் பரீசிலிக்க வேண்டும். திருக்குறள் ஒரு தளத்தில் இருந்தால் இன்னொரு தளத்தில் அதை பயன்படுத்திக் கொண்டு வேறு சில முயற்சிகளில் ஈடுபடுவது குறித்து யோசிக்க வேண்டும்.மீண்டும் திருக்குறளை உள்ளிடுவது வீண். நம் முயற்சிகள் ஒத்திசைவாக இருக்க வேண்டும், synergy என்பது முக்கியம்.

சென்ற பகுதியில் wiki ஐ அடிப்படையாகக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு ஒரு உதாரணம் http://knowledge-bits.org

இது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்களை,விவாதங்களை இணையத்தில் ஒரு கூட்டு முயற்சியின்

மூலம் செய்யமுடியும் என்பதற்கு ஒரு உதாரணம்.யார் வேண்டுமானாலும் பங்கு பெற முடியும். பெண்ணியம் குறித்த ஒரு தளம் தமிழில் wiki ஐ அடிப்படையாகக் கொண்டிருந்தால் இலக்கியம்,சட்டம்,அரசியல்,அறிவியல் தொழில்நுட்பம் என பலதுறைகளில் வெளியாகும்/வெளியாகிய பெண்ணியம் தொடர்புடையவற்றை பகிர்ந்துகொள்ள முடியும்.மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரை குறித்த தகவல்களை அதில் பதிவு செய்ய முடியும்.இதைப் படிக்கும் ஒரு சிறுபத்திரிகையாசிரியர் அக்கட்டுரையை கட்டுரையாசிரியருடன் தொடர்பு கொண்டு மொழிபெயர்த்து வெளியிடக்கூடும். வேறொரு ஆராய்ச்சி மாணவருக்கு அதிலிருந்து சில தகவல்கள் கிடைக்கலாம். இக்கட்டுரைகள் வெளியாகியுள்ள JOURNAL OF WOMEN ‘S HISTORY போன்ற வெளியீடுகள் எத்தனை பல்கலைகழக நூலகங்களில் கிடைக்கின்றன ?.புஷ்பவனம் குப்புசாமியின் நாட்டுப்புறப் பாடல்கள்,இசை குறித்து பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைகழகப் பேராசிரியர் ஒருவர் ஆராய்ந்துள்ளார் என்பது சிறுபத்திரிகை வட்டாரத்தில் எத்தனை பேருக்குத் தெரியும் அல்லது திருப்பூர் நகரின் வளர்ச்சி,தொழில்மயமாதல் குறித்து ஆராய்ந்துள்ள ஷரத் சாரி, விஜயபாஸ்கரின் ஆய்வுகள் குறித்து தமிழில் ஏதாவது எழுதப்பட்டுள்ளதா ?. தமிழ் நாடு பற்றிய செய்யப்பட்ட ஆய்வுகள் பலவற்றைப் பற்றி தமிழில் எதுவுமே, ஒரு குறிப்பு கூட இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டாமா ?

ஒரு தொழில்நுட்பம் நம்மை எட்டாத போது நமக்கு வேறு வழியேஇல்லையா என்று வருந்துவோம். ஆனால் அதைவிட சிறந்த தொழில் நுட்பம் கிடைக்கும் போது மாறுவது எளிதாக இருக்கும்.உதாரணமாக

தொலை பேசி வசதி தொழில் நுட்ப காரணங்களால் தர முடியாத இடங்களில் கூட செல்போன் வசதி

தர முடிகிறது. ஒரு காலத்தில் தட்டச்சு பயில்வது மத்தியதர வர்க்கத்தினருக்கு தவிர்க்கமுடியாத ஒன்றாக

இருந்தது, ஏனெனில் அது வேலைவாய்ப்பினை அதிகரித்தது. ஆனால் இன்று கணினி மூலம் எத்தனையோ

வேலைகளை செய்ய முடிகிறது.தட்டச்சு கற்காமல் கணினியை பயன்படுத்த முடியும். தவளைப்பாய்ச்சல்

(leapfrogging) என்ற சொல் முன்னேற்றம் குறித்த நூல்களில்,அறிக்கைகளில் அதிகம் பயன்படுத்தப்படும்

சொல்.தமிழில் ஒரு தவளைப்பாய்ச்சலிற்கு இணையம் உதவும்.அச்சு யுகத்திலிருந்து இணைய யுகத்திற்கு

தமிழை முன்னெடுத்து செல்வதுடன், அச்சு யுகத்தின் நிகழ்த்தப்பட்டவற்றின் அடிப்படையில் அடுத்த

கட்டத்திற்கு செல்ல முடியும்.

தமிழில் இணையம்,கணினியை அடிப்படையாகக் கொண்ட முயற்சிகளுக்கு உதவ ஒரு நிதியம்/அமைப்பு

தேவை.இதன் மூலம் புதிய சோதனை முயற்சிகளுக்கு தேவையான ஆதரவை கொடுக்க வேண்டும். இன்னும்

5 ஆண்டுகளில் தமிழில் இணையம் மூலம், கணினி மூலம் இவையெல்லாம் சாத்தியப்பட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கு தகுந்தபடி முயற்சி செய்யலாம்.உதாரணமாக இன்னும் 5 ஆண்டுகளுக்குள் தமிழில் செய்யப்பட்ட இலக்கிய ஆய்வுகள், தமிழ் இலக்கியம் பற்றி பிற மொழிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்

ஒரு தகவல் தொகுப்பும்,கட்டுரை பரிமாற்றத்திற்கு உதவும் இணையதளமும் தேவை என்று தீர்மானித்து

அதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.இணையக் கலைக்களஞ்சியம், இணையம் மூலம் அறிவியல் தமிழை

வளர்ப்பது, கலைச்சொல்லாக்கம்,இணையம் மூலம் தமிழ் அகராதியை உருவாக்குவது என்று பலவற்றை திட்டமிட்டு செய்ய முடியும்.உலகெங்கும் உள்ள தமிழர்களின் அறிவு,ஆற்றல்,உழைப்பை நாம் இணையம் மூலம் திரட்ட முடியும்.பல்வேறுவகையான திறன்களை இதில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இக்கட்டுரையின் நோக்கம் ஒரு சில சாத்தியப்பாடுகளை உங்கள் முன்வைத்து, சில கனவுகளையும்,கேள்விகளையும் முன்வைப்பதுதான்.இது ஒரு விரிவான தகவல் அறிக்கையோ அல்லது திட்ட அறிக்கையோ அல்ல.

விரிவாக திட்டங்கள், தேவையான முயற்சிகள், பிற மொழிகளில் செய்யப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம்

கற்க வேண்டியது குறித்து ஒரு பரந்த விவாதம் தேவை.இணையம் என்பது ஒரு கற்பகத்தரு. அதை

எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம், ஒரு தவளைப்பாய்ச்சல் மூலம் அடுத்த கட்டத்திற்கா இல்லை

துண்டுதுண்டுகாக அங்கிங்கும் செய்யப்படும் முயற்சிகளுடன் நின்றுவிடுவோமா ?.இதற்கான பதில் நம்மிடம்தான் இருக்கிறது.

(1)OLD NORMS IN NEW BOTTLES:Constructions of Gender and Ethnicity in the Early Tamil Novel

Sita Anantha Raman JOURNAL OF WOMEN’S HISTORY, VOL. 12 NO. 3,2000

இன்னொரு கட்டுரை EMOTION, IDENTITY, AND THE FEMALE SUBJECT

Tamil Women’s Magazines in Colonial India, 1890–1940 Mytheli Sreenivas JOURNAL OF WOMEN’S HISTORY VOL. 14 NO. 4 2003

ravisrinivas@rediffmail.com

Series Navigation

தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 3

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


கலைக்களஞ்சியம் என்றால் Encyclopedia Britanica தான் நினைவிற்கு வருமள்விற்கு புகழ் பெற்றது Encyclopedia Britanica. இன்று அதற்கு சவால் விடும்வகையில்Wikipedia என்ற கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.அதுவும் கூட்டுமுயற்சியினால், இணையம் மூலம். அது மட்டுமல்ல இந்த முயற்சி வேறு பல திட்டங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.மூன்று ஆண்டுகளுக்குள் 1,50,000 கலைக்களஞ்சியக் குறிப்புகளை வெளியிட்டுள்ள wikipedia யாரும் பங்கேற்கலாம், ஒருவர் எழுதியதை இன்னொருவர் வளப்படுத்தலாம், கூட்டு முயற்சி மூலம் அறிவை பரவலாக்கலாம் என்பதை நீருபித்துள்ளது.இதில் சிறப்பான அம்சம் எனவெனில் இம்முயற்சி பலவிதங்களில் ஒபன் சோர்ஸ் முயற்சிகளுடன் ஒப்பிடத்தக்கது.

இதனைப் பற்றி பெங்க்லர் Coase ‘s Penguin கட்டுரையில் ஆராய்ந்துள்ளார்.உலகெங்கும் தன்னார்வ செயல்பாடுகளால் உருவாக்கப்படும் இக்கலைகளஞ்சியம் குறுந்தகடு வடிவிலும் கிடைக்க உள்ளது. கணினி, இணைய யுகத்தில் peer review முறையை பயன்படுத்தி தரத்தினை மேம்படுத்தி, அதே சமயம் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கலைகளஞ்சியம், ஒரு சிறப்பான வெளியீட்டிற்குத் தேவை அறிவினைப் பகிர்ந்து கொள்ளும் மனோபாவமும், அந்த மனோபாவத்தை சரியாக பயன்படுத்துதலுமே என்பதை நீருபித்துள்ளது. சமர்பிக்கப்படும் ஒவ்வொரு கட்டுரையும் முறையாக பரீசிலிக்கப்பட்டு விவாதிக்ப்பட்டு வெளியிடப்படுகிறது.இதில் தகவல்களை சேர்ப்பது அல்லது update செய்வது எளிது. எழுதப்பட்டுள்ளதில் இது விடுபட்டிருகிறது என்றோ அல்லது இதுவும் பொருத்தமானது என்றோ உலகின் எந்த மூலையிலுள்ள ஒருவரும் சுட்டிக்காட்ட முடியும்.கூட்டு முயற்சி என்பதால் இதில் ஒரு சிலர் மட்டுமே எழுத முடியும் அல்லது எழுத அனுமதிக்கப்படுவர் என்ற வரையரை இல்லை.

விகி(wiki) என்ற ஒபன் சோர்ஸ் வடிவமப்பு மென்பொருளை அடிப்படையாகக் கொண்டது இம்முயற்சி. இப்போது பிரிட்டானிக்கா இணைய தளத்தைவிட இதை நாடுவோரின் எண்ணிக்கை அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.விகியை அடிப்படையாகக் கொண்டு எதைப்பற்றி வேண்டுமானாலும் ஒரு இணைய நூலகம்/தொகுப்பை உருவாக்க முடியும்.உதாரணமாக சமீபத்தில் விகியை அடிப்படையாகக் கொண்டு அறிவுசார் சொத்துரிமை குறித்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.பாட நூல்கள்,அகராதிகள்,கலைக்களஞ்சியங்களை உருவாக்க இது பொருத்தமான முன்மாதிரி.இதை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸ் தனது முந்தைய முயற்சிகளிலிருந்த கற்ற அனுபவங்களின் அடிப்படையில் இதை வெற்றிகரமாக செயல்படவைத்தார்.

இத்தகைய முயற்சிகளுக்குத் தேவை ஆர்வலர்களும், அவர்கள் எழுதுவதை ஒழுங்கமைக்க சில விதிகளும். இணையம் மூலமே இது செய்யப்படுவதால் பெரிய அலுவலகம்,பல நூறு பணியாளர்கள் தேவையில்லை. உலகெங்குமுள்ள தமிழர்களின் அறிவை,ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள இத்தகைய முயற்சிகள் தேவை. தமிழில் ஒரு கூட்டு முயற்சியாக கலைக்களஞ்சியம்,அகராதி,பாட நூல்களை உருவாக்கலாம். உதாரணமாக அறிவியல் குறித்த நூல்களை இம்முறையில் எளிதில் உருவாக்க முடியும். ஒரு வரைதிட்டத்தை முன்வைத்தால் யார் எதை எழுதுவதை என்பதை முடிவு செய்துவிட்டு ஒரு கால வரையறைக்குள் ஒரு நூலை முழுக்க முழுக்க இணையம் சார்ந்தே கொண்டு வரமுடியும்.இணையத்தில் உள்ள இணைப்புத்தரும் வசதியையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். பிற் சேர்க்கைகளை இணைப்பது, திருத்தங்கள் செய்வது எளிது.

தமிழில் கலைச் சொற்களுக்கென இத்தகைய முயற்சி மூலம் புதிய கலைச் சொற்களை உருவாக்க முடியும். அத்துடன் அக்கலைச்சொல் குறித்து ஒரு சிறு குறிப்பினையும் தர முடியும்.இதன் மூலம் கலைச்சொல் அகராதியை உருவாக்க முயற்சி செய்யலாம்.செய்திகளை அலச, பின்ணணித் தகவல்கள் தர இது போன்ற ஒரு தளம் இருந்தால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தம் அறிவைப் பகிர்ந்து கொள்வதும், தமிழை வளப்படுத்துவதும் சாத்தியம்.

உதாரணமாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவிற்கு சாதகமாக ஒரு தீர்ப்பு வழங்கப்படுள்ளது.இதை செய்தித் தாளில் படிப்பவர் ஒருவர் இது குறித்த பின்ணனித் தகவல்களை உடனே பெற ஒரு இணைய த் தளம் இருந்தால் எப்படி இருக்கும் ?. சமீபத்தில் நகலாக்கம்(cloning) குறித்த சர்வ தேச ஒப்பந்தம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முடிவெடுப்பது என்று வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் செய்தியை பின்ணணித் தகவல்களுடன் செய்தி வெளியான 12/24 மணி நேரத்திற்குள் ஒரு தளம் மூலம் தரமுடியும். உதாரணமாக ஒரு 1000/1500 வார்த்தைகளில் பின்ணணித் தகவல்,அலசல், பிற தளங்களுக்கு இணைப்பு உள்ள ஒரு கட்டுரையை இணையத்தில் தருவது சாத்தியம்..பின்னர் இதை update செய்ய முடியும், வேறு பொருத்தமான செய்திகள்,தகவல்களையும் தரமுடியும். பொருத்தமான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு, பாடநூல்கள்/நூல்கள் வெளியாகும் வரை காத்திருக்காமல் இது போல் விரைவாக அறிவினைப் பரவலாக்க முடியும்.கொஞ்சம் யோசித்தால் இத்தகைய கூட்டு முயற்சிகளின் பலமும்,தேவையும் புலனாகும்.

திசை எட்டிற்கும் செல்ல வேண்டாம், திசை எட்டிலுமுள்ள தமிழர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்த படி மொழியை வளப்படுத்த முடியும், இத்தகைய முயற்சிகள் மூலம்.இணையம் என்பதை நாம் ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும். தொலை நோக்கும், தெளிவான சிந்தனையும், உறுதியும்,ஆதரவும்,பங்கேற்ப்பும் இருந்தால் இணையம் மூலம் ஒரு அறிவுப்புரட்சியை தமிழில் நிகழ்த்த முடியும்.

அடுத்த பகுதியுடன் நிறைவுறும்

ravisrinivas@rediffmail.com

Series Navigation

தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 2

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


மதுரைத்திட்டம் போன்றவை தொகுக்கும் நூல்கள் குறுந்தகடுகளில் கிடைக்க வழி செய்தால் கணினி சார்ந்த நூலகங்களை பரவலாக்க முடியும்.இன்று குறுந்தகடுகளில் பல நூல்கள், அறிக்கைகள், புள்ளிவிபரத் தொகுப்புகள் உட்பட பலவற்றை பெறமுடிகிறது.உலக வங்கி,சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளும்,

world resource institute போன்ற அமைப்புகளும் ஆண்டுதோறும் குறுந்தகடுகளில் வெளியீடுகளை

கொண்டுவருகின்றன.UNESCO வின் MOST திட்டத்தின் பல வெளியீடுகள் ஒரு தொகுப்பாக குறுந்தட்டில்

கிடைக்கின்றன.இது போல் தமிழிலும் பல முயற்சிகள் தேவை. இதற்கு ஒரு முன்னூதாரணமாக

humanity library என்ற திட்டத்தினை கொள்ளமுடியும். இத்திட்டத்தின் மூலம் ஒரு குறுந்தகட்டில்

பல நூல்கள்,அறிக்கைகள், ஆவணங்கள் தரப்பட்டன.இதை பயன்படுத்த குறைந்தப்ட்சம் 486 பெண்டியம்

கணினி போதும்.இதை நான் பயன்படுத்துகிறேன். இதில் உள்ள தேடுதல் வசதி பயன்படுத்த எளிய முறையில் உள்ளது.UNU Press உட்பட பல வெளியீட்டாளர்கள்/அமைப்புகள் தங்கள் வெளியீடுகளை இதில் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளனர்.இதில் உள்ளவற்றை அச்சிடவும் முடியும்.இன்று இது போன்ற பல குறுந்தகடுகள் உள்ளன.மருத்துவம், பெண்கள் உடல்நலம், கருத்தடை சாதனங்கள்/வழிகள், AIDS/HIV

குறித்த விவரங்கள், கணினியை கையாள்வது எப்படி,என்று பலவற்றை குறித்த குறுந்தகடுகள் கிடைக்கின்றன.(1) டாக்டர் இல்லாத இடத்தில் போன்ற நூல்கள், தமிழில் இப்படி கிடைக்குமானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவற்றில் ஒலியையும், விளக்கத்தை அனிமேஷன் மூலமும் தரமுடியுமானால் அச்சுப்பிரதியை விட இவற்றை பயன்படுத்துவதும், புரிந்து கொள்வதும் எளிதாக இருக்கும். கல்விக்கு இத்தகைய குறுந்தகடுகளை பயன்படுத்த முடியும். மேலும் இணையத்திலிருந்து இவற்றிலுள்ளவற்றை update செய்து கொள்ள முடியுமானால் தகவல்களை பரப்புவது எளிதாகும். உதாரணமாக ஒரு மருந்தினை கையாள்வது குறித்த புதிய தகவல்களை சேர்க்க முடியுமானால் அது இவற்றை பயன்படுத்தும் மருத்துவ விரிவாக்க பணியாளர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

Our Bodies Our Selves(2) போன்ற நூல்கள் தமிழில் இல்லை.ஆனால் குறுந்தகட்டு வடிவில் அத்தகைய

நூல்களை தமிழில் தருவது குறித்து யோசிக்க வேண்டும்.இன்று கணினி பள்ளிக்கூட அளவில் கல்வியில்

இடம் பெறும் போது இது போன்ற குறுந்தகட்டில் உள்ள நூல்கள் தேவை.இவற்றின் மூலம் இதுவரை

புத்தகங்கள் மூலமே கிடைத்த பலவற்றை எளிய முறையில் தரமுடியும்.உதாரணமாக பல நூல்களாக

உள்ள சங்க இலக்கியகங்களை ஒரு குறுந்தகட்டில் தரமுடியும்.இதில் தேடும் வசதி போன்றவை இருக்க

வேண்டும்.இது இன்று உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசு இத்தகைய

திட்டங்களை ஆதரிக்க வேண்டும்.கணினி உள்ள ஒவ்வொரு பள்ளியும், கல்லூரியும் இதை வாங்குமானால்

குறைந்த விலையில் இதைத் தரமுடியும்.இங்கு பிரதி எடுக்க ஏற்படும் செலவு அதிகமில்லை, ஆனால்

உள்ளடகத்தினை உருவாக்க செலவு அதிகம் ஆகும் எனச் சிலர் கருதலாம்.இவை வாங்கக் கூடிய விலையில் கிடைக்கச் செய்வது எளிது.ஆனால் எந்த ஒரு புதுப் பொருளையும் உருவாக்குவது எவ்வளவு

முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை மார்க்கெட் செய்வது.எனவே மார்கெட்டிங்கை திறம்பட செய்யமுடியுமெனில் இதற்கான சந்தை எளிதில் உருவாகும்.மேலும் இன்று கணினியை பயன்படுத்துக்கின்ற

இளைய தலைமுறைக்கு பலவற்றை இப்படி குறுந்தகடுகள், இணையத்தளங்கள் மூலம் தர முடியும்.சங்க

இலக்கியங்களையும், காவியங்களையும் இப்படி அறிமுகப்படுத்தலாமே ?.

இது போல் பலவற்றை சாத்தியமாக்கமுடியும்.சில ஆண்டுகள் முன்பு பள்ளிகளில் பயன்படுத்த/மாணவர்களுக்கு

கல்வியில் உதவ எத்தனை குறுந்தகடுகள் இருந்தன.இன்று எத்தனை உள்ளன.இது எப்படி சாத்தியமாயிற்று.இன்று GRE, TOFEL உட்பட பல போட்டித்தேர்வுகளுக்கான நூல்களுடன் குறுந்தடுகள் தரப்படுகின்றன.

தமிழிலும் நூலுடன் குறுந்தகடு தரும் முயற்சிகள் உள்ளனவா என்று எனக்குத் தெரியாது.இங்கு உள்ளடக்கத்தினை உருவாக்குவதுதான் முக்கியமான பணி.இதை எப்படி செய்யமுடியும் என்ற கேள்வி எழுகிறது.இதற்கு வேறு சில முன்னோடி முயற்சிகளிலிருந்து நாம் தேவையானவற்றை கற்க முடியும்.

தொடரும்

(1) இது போன்ற பல குறுந்தட்டு நூலகங்கள் greenstone digital library software என்ற open source மென்பொருளை அடிப்படையாகக் கொண்டவை.இதை UNESCO ஆப்பிரிக்காவில் இத்தகைய முயற்சிகளுக்காக பெருமளவில் பயன்படுத்துகிறது.அத்துடன் இந்த மென்பொருளையும் விநியோகம் செய்கிறது.

இந்த குறுந்தகடுகளை பிரதி எடுக்க முடியும்.எனவே இவற்றை பரவலாக விநியோகம் செய்வது எளிது.

ஒரு குறுந்தகட்டில் 50,000 பக்கங்கள் கொண்ட ஒரு நூலகத்தை, நூற் தொகுப்பை தரமுடியும்.

(2) Boston Health Book Collective என்ற பெயரில் செயல்படும் பெண்கள் குழு 1970 களில்

இதன் முதல் பதிப்பைக் உருவாக்கியது.வழக்கமான உடல்நல/சுகாதார அறிவுரை நூல்கள் போல் அன்றி,

பெண்களில் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு விரிவான தகவல்களுடன் வெளியான இது இப்போது

பல பதிப்புக்களைக் கண்டுள்ளது.இதனை முன்மாதிரியாகக் கொண்டும் வேறு சில நூல்கள் வெளியாகியுள்ளன.கருத்தடை சாதனங்களை விவரிக்கும் போது அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளையும் குறிப்பிடுவதுடன், மக்கள் தொகை கட்டுப்பாட்டு கொள்கைகள் குறித்த விவாதமும் இதில் உண்டு.இது போல்

புற்று நோய்க்கான காரணிகளில் சூழல் சீர்கேடும் முக்கியமான காரணி என்பதையும் எடுத்துரைக்கும்

இந்நூல் சிகிச்சைகளின் சாதக,பாதகங்களுடன் அவற்றை எதிர் கொள்வது எப்படி, எழும் உளச்சிக்கல்களை

எதிர் கொள்வது எப்படி என்பதையும் எடுத்துரைக்கும்.இது ஒரு விரிவான நூல்,படங்கள்,புகைப்படங்கள்,

அமைப்புகளின் முகவரிகள்,புத்தகங்கள்,கட்டுரைகள் என மிக விரிவாக தகவல் தரும் நூல், எனவே அளவில் பெரியது.டாக்டர் இல்லாத இடத்தில்(where there is no dotor) என்ற நூலை வெளியிட்ட ஹிஸ்பாரியன் பெளண்டேஷ்ன பெண்கள் பயன்படுத்தக் கூடிய முறையில் எளிய நடையில் விளக்கப்படங்களுடன்

ஒரு நூலை வெளியிட்டுள்ளது.இது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய நூல்.விளக்கப்படங்கள்,

மருந்துகளை பயன்படுத்துவது குறித்த தகவல்கள் போன்றவை இதில் உள்ளதால் ஒரளவு படிக்கத் தெரிந்த

பெண்கள் கூட இதை பயன்படுத்துவது எளிது.டாக்டர் இல்லாத இடத்தில் க்ரியா வெளியீடாக தமிழில் வெளிவந்தது.

ravisrinivas@rediffmail.com

Series Navigation

தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


இணைய நூலகம் என்று தமிழில் வெளியாகும் நூல்களை, பத்திரிகைகளை இணையத்தில் இடம் பெறச் செய்வது ஒரு தொழில் நுட்ப ரீதியான முன்னேற்றம் என்று மட்டுமே கூற முடியும்.உள்ளடக்க ரீதியாக

செய்யப்பட வேண்டியது ஏராளம்.லிட்டில் மாகசின்(1) தரத்தில் தமிழில் எத்தனை சிற்றிதழ்கள் உள்ளன.

அறிவியல், சமூக அறிவியலில் எத்தனை கட்டுரைகள் சிறப்பானவை என்று சொல்லத்தக்க அளவில் வெளிவருகின்றன.ஏற்கனவே அச்சில் வந்த/வெளிவருகிற இரண்டாம் தர நூல்களை ebook வடிவத்தில் கொடுப்பது தொழில் நுட்ப ரீதியான முன்னேற்றம் மட்டும்தான்.

இணையத்தில் நூல்களை ‘ஏற்றுவதால் ‘ மட்டும் பெரிய பயன் ஏதுமில்லை.இணையத்தில் உள்ள நூல் தொடர்புடையவற்றிற்கு இணைப்பு கொடுப்பது,கணினி தொழில்நுட்பம் தரும் வசதிகளை பயன்படுத்திக் கொள்வது ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இணைய நூல் பதிப்பு முறை, வாசகரின் தேவை,

இணையத்தில் உள்ள பிரதி அச்சுப் பிரதியிலிருந்து வேறுபடும் இடங்கள், எப்படி இணையப்பிரதி அமைய வேண்டும் என்பது குறித்த தெளிவு இவை குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும்.எனவே வெறுமனே நூல்களை இணையத்தில் போடுவது என்பது இணைய நூலக முயற்சியின் முதல்கட்டம்தான். இப்போது பல நூல்கள் கணினியில் உள்ளிடப்படுவதால் பிரதியை குறுந்தகட்டில் எழுதி/மறுபிரதி செய்து இணையத்தில் இடம் பெறச்செய்வது எளிது. இந்த ஒன்றே போதும் என்று திருப்தி அடைவோர் இணையம் தரும் சாத்தியப்பாடுகளை பயன்படுத்தத் தவறுகிறார்கள் அல்லது அதில் அக்கறை காட்டுவதில்லை என்றுதான் கூற வேண்டும்.

சமீபத்தில் மானுடவியல் பேராசிரியர் ஒருவர் எழுதிய, இந்த ஆண்டு வெளிவந்த நூல் ஒன்றை வாசித்தேன்.பின்னர் அவர் அந்த நூல் தொடர்புடையவற்றிற்காக ஒரு இணைய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார் என்பதையும் அறிந்தேன். நூலில் இடம் பெற்றிருந்த குறிப்புகளில் உள்ள இணைய இணைப்புகள் இதில் இருந்தன.இது தவிர மேலும் பல தகவல்கள்,இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. நூலில் ஒரு வழக்கினைப் பற்றி அவர் எழுதியிருந்தார். தீர்ப்பு மிக சமீபத்தில் அக்டோபர் 2003ல் வெளியானது. இந்தத் தளத்தில் தீர்ப்பினை இணையத்தில் தரும் இணையத் தொடர்பு தரப்பட்டிருந்தது. நூலை படிக்கும் வாசகர்கள், ஆய்வாளரகளுக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும்.இங்கு நூல் என்பது ஒரு அச்சுப்பிரதியாகவும்,இணைய தளம் அச்சுப் பிரதியையும், புதிய தகவல்களையும் சேர்த்துப் படிக்க உதவுவதாகவும் உள்ளது. இங்கு நூல் என்பது இணையத்தில் வெறொரு பொருளில் நம் முன் வைக்கப்படுகிறது.பிரதி வெளியான பின்னும் அது குறித்த வாசிப்பு ஒரு தொடர் வாசிப்பாக இதனால் சாத்தியமாகிறது.இது போன்ற முன் மாதிரிகளை தமிழில் இணைய நூலகம் என்று பேசும் போது நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அறிவு என்பது

ஒரு பிரதியுடன் முற்றுப் பெற்ற ஒன்றாக,தேங்கி நிற்பதாக இல்லை.நூல் என்பது ஒரு துவக்கப் புள்ளிதான்,ஒரு தொடர்ச்சியின் ஆரம்பக் கண்ணி.இணைய யுகத்தில் ஆசிரியர்,பிரதி குறித்த நம் புரிதல்களில் மாறுதல் தேவை.இது குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில்.

தமிழில் சங்கப்பாடல்கள், கம்ப ராமயணம் போன்ற காவியங்கள் இணையத்தில் தரப்படும் போது பாட பேதங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது தவிர்க்க முடியாது. அச்சில் உள்ள பிரதியை இணையத்தில் தரும் போதும் இது குறித்த குறிப்புகள், அச்சுப் பதிப்பின் மூலம் குறித்த தகவல்கள் தருவது அவசியம்.

சங்கப்பாடல்களை அப்படியே இணையத்தில் ஒரு பொழிப்புரையுடன் தரலாம்.ஆனால் இது அச்சுப்பிரதி சாத்தியமாக்கியதைக் கூட செய்யத்தவறியதாகும்.இணையத்தில் ஒரு பாடல் பொழிப்புரை தவிர, பதம் பிரித்து படிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.இது தவிர இப்பாடல் தொடர்புடைய குறிப்புகள், இது குறித்த இலக்கிய விவாதங்கள், குறிப்பாக பிற படைப்புகளில் இது சுட்டப்பட்டுள்ள விதம்,இதன் சிறப்பு போன்றவையும் தரப்பட வேண்டும்.இவை போன்றவையே வாசகருக்கு பயன் தரும்.இப்பாடலை எழுதியவருடைய பிற பாடல்களுக்கு/படைப்புகளுக்கு இணைப்பு போன்றவையும் முக்கியம்.இங்கு audio visual அம்சங்கள் தரும் பயனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.இணையத்தில் தரப்படும் நூல்களில் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வதில் மிக முக்கியம்.அது போல் அறிவியல்,சமூக அறிவியல் நூல்களில் சான்று நூல்/கட்டுரைப் பட்டியல்,index கட்டாயம் தேவை, கலைச் சொற்களின் ஆங்கில மூலமும் அவசியம்.

ஓளவையின் பாடல்கள் இணைய நூலகத்தில் தரப்படும் போது அதில் முடிந்த வரை நிகழ் காலத் தகவல்களையும் தருவது நல்லது.உதாரணமாக ஒளவையின் ஒரு பாடலை அல்லது ஆத்திச்சூடியை இணைய நூலகத்தில் தந்தால் அது இன்குலாப்பின் ஒளவை குறித்த ஒரு குறிப்பினையும் கூட வாசகர் கவனத்திற்கு தர வேண்டும்.முடியுமெனில் இன்குலாப்பின் நாடகப்பிரதிக்கு இணைப்பினையும் (அ) அதிலிருந்து சில பகுதிகளையும் கூட இணைய நூலகம் தர வேண்டும்.அது போல் ஜெமினியின் ஒளவையார் குறித்த குறிப்பினையும், அதிலிருந்து சில பகுதிகளையும் தரலாம். இதன் மூலம் ஒளவையார் குறித்த பன்முகச் சித்திரம் வாசகருக்கு கிட்டும். audio/video clippings தருவது அச்சுப்பிரதி மூலம் பெற முடியாத அனுபவத்தை வாசகர் பெற உதவும்.தமிழில் எழுதப்படிக்க்த் தெரியாத ஆனால் கேட்டால் புரிந்துக் கொள்ளக்கூடியோர் இதனால் பெரும் பயன் பெறுவர்.அவர்கள் ஆர்வத்தையும் இது தூண்டும்.இனிவரும் தலைமுறை இணையத்தினை அதிகம் பயன்படுத்தும் என்பதால் அவர்கள் தேவைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.எனவே ஒளவையார் குறித்து இணைய நூலகத்தில் ஆங்கிலம்,பிரெஞ்ச் போன்ற மொழிகளில் ஒரு அறிமுகமேனும் தரப்படுவது அவசியம்.

காவியங்களை இணைய நூலகத்தில் தரும் போது வேறு சில அம்சங்களையும் கணக்கில் கொள்ள் வேண்டும். நூலகம் தரும் பிரதியின் மூலம், பாட பேதங்கள் தவிர காவிய ரசனையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக கம்ப ராமாயணம் இணைய நூலகத்தில் இடம் பெறும் போது அதை வால்மீகி, துளசிதாசரின் ராமயணங்களுடன் ஒப்பிடும் ஒரு கட்டுரையாவது அதில் இடம் பெற வேண்டும்.சில காட்சிகளை கம்பர் சித்தரித்துள்ளது பிற மொழி ராமயணப் பிரதிகளுடன் ஒரு ஒப்பீட்டு நோக்கில் தரப்பட வேண்டும்.இது போல் பலவற்றை சாத்தியமாக்குவது குறித்து யோசிக்க வேண்டும்.உதாரணமாக இன்று எளிதில் கிடைக்காத சித்திர ராமாயணம் இணையத்தில் இடம் பெறுமானால், அதற்கு பிற நூல்களிலிருந்து இணைப்புத்தர முடியுமெனில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்..இதற்கு பிற மொழகளில் உள்ள இணைய நூலகங்கள் எவற்றைத்தருகின்றன, எப்படித் தருகின்றன என்பதை குறித்து நாம் ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.அச்சில் உள்ள பலவற்றை நாம் இணையத்தில் மிக ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.கம்ப ராமாயணம் குறித்த இணைய நூலகம் தமிழக் கோவில்களில் உள்ள சிற்பங்கள்,விக்கிரகங்கள், ராமேஸ்வரம் போன்ற புனிதத்தலங்கள் குறித்தும் தகவல் அல்லது இணைப்பு தர வேண்டும்.தமிழ்ப்பண்பாட்டில் ராமாயணத்தின் தாக்கம் குறித்து ஒரு அறிமுகக்கட்டுரையும் தேவை.இவற்றைத்தரும் போது கம்பரசம் குறித்தும் பேச வேண்டும்.பெரியார் குறித்தும் பேச வேண்டும்.கம்பர் முதல் பாலா ரிச்மன் வரையான ஒரு அறிதலை இணைய நூலகம் மூலம் வாசகர் பெறமுடியும்.இப்படி யோசித்தால்தான் இணைய நூலகத்தின் பல சாத்தியப்பாடுகளை நாம் நிறைவேற்ற முடியும்.இங்கு கூறப்பட்டுள்ள அனைத்தையும் ஆரம்ப கட்டத்திலேயே செய்வது சிரமம் என்றாலும் நமது

இலக்கு ஒரு சிறப்பான இணைய நூலகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். மேலும் கம்ப ராமயணம் குறித்து ஒரு குறுகிய கண்ணோட்டத்தை மட்டுமே முன்னிறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

மாறாக இலக்கியப் பிரதியினை ஒரு பரந்த தளத்தில் புரிந்து கொள்ளவும் அதே சமயம் ஒரு காவியத்தின்

சிறப்புகளை அறிந்து கொள்ளவும் உதவ வேண்டும்.

இதற்கு அச்சில் உள்ளவற்றை குறித்த அறிவும், இணையத்தில் எவை சாத்தியம் என்ற தெளிவும், கற்பனைவளமும் தேவை.இவை அனைத்தும் ஒருவரிடத்தில் இருப்பது அபூர்வம். எனவே இணைய நூலகம் என்பது ஒரு கூட்டுமுயற்சியாக இருந்தால் மட்டுமே அது வெற்றி அடையும். இணையப் பிரதி குறித்து

நாம் அக்கறை செலுத்த வேண்டும்.வாசகர் எளிதில் பயன்படுத்தும் வகையில், தகவல் செறிவுடன், தேவைப்படும் போது புதிய தகவல்களை,ஆய்வுகளை இணையப் பிரதியில் சேர்க்கும் வகையில் அது

இருக்க வேண்டும்.எனவே இணைய பிரதி ஒன்று வாசகர் முன் வைக்கப்படும் முன் அது பலரின் வாசிப்பிற்கு உள்ளாகி பல கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்பட்டு மாற்றப்பட்டு ஒரு சிறப்பான இணையப்பிரதியாக இருந்தால் நல்லது.beta versions சோதனைக்கும், ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டு பின் இணையத்தில் வைக்கப்படுவது பயன் தரும்.இந்த beta versions வாசகர்,அறிஞர் குழாம் ஒன்றால பரிசோதிக்கப்படுவது இன்று சாத்தியம்.உலகெங்கும் உள்ள தமிழர்கள், தமிழறிந்த அறிஞர்கள் இத்தகைய குழாம்களில் பங்கு பெறுவதும் அவசியம்.

(1) www.littlemag.com

(தொடரும்)

ravisrinivas@rediffmail.com

Series Navigation