சோதிப் பிரகாசம்
தேற்றமும் செயற்பாடும்
செயற்பாடு என்பது மட்டும்தான் எந்த ஒரு தேற்றத்திற்கும் நிருபணம் என்றால், ஒரு தேற்றம் என்னும் நிலையிலேயே ஒரு தேற்றத்தின் உண்மையினை அல்லது சரித்தன்மையினை நாம் புரிந்து கொள்ள முடியாதா ? என்பது பொருத்தமான ஒரு கேள்விதான்!
ஆனால், செயற்பாடுகளின் மூலமாக ஏற்கனவே நிருபிக்கப் பட்டு இருக்கின்ற விளைவுகளின் தருக்க முறையான நீட்சி என்னும் நிலையில்தான், ஒரு தேற்றத்தினை இன்னொரு தேற்றத்துடன் ஒப்பிட்டு நாம் பார்த்திட முடியும்.
கணிதம் என்பது கூட இத் தகையதுதானே! பொன்றாமையான (infinite) எண்களின் பொன்றிமையான (finite) நமது எண்ணிக்கைகள்தாமே, அவற்றின் ஒவ்வோர் அலகும்!
சரி, பிழையாக்கும் இயன்மையைப் பற்றிக் கார்ல் பாப்பர் பேசுகிறாரே, செயற்பாடு இல்லாமல் —-பரிசோதனை இல்லாமல்—-எதையாவது அவரால் பிழை படுத்திக் காட்டி விட முடியுமா ?
எனவே, தேற்றம்-செயற்பாடு என்னும் அடிப்படையில்தான் எந்த ஒரு தேற்றத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும் என்பது உறுதி!
ஆனால், கார்ல் பாப்பரோ ஓர் ஐயப் பாட்டு வாதி; ஓர் அவ நம்பிக்கை வாதியும் கூட!
எனவேதான், தேற்றம்-செயற்பாடு என்னும் கோணத்தில் எதையும் நோக்குவதற்கு அவர் மறுக்கிறார்; உண்டு என்றும் இல்லாமல், இல்லை என்றும் இல்லாமல், இவ் இரண்டிற்கும் இடைப் பட்ட ஓர் இரண்டும்-கெட்டான் ‘இயன்மை ‘யினைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தடுமாறுகிறார்; தமது சிந்தனைப் பகட்டுகளாகத் தமது தடுமாற்றத்தின் சிதறல்களை அள்ளித் தெளிக்கிறார்; இப்படித்தான், சிற்றுடைமைச் சிந்தனைக்கே உரிய ஓர் ஐயப் பாட்டு வாதியாகத் தம்மை வளர்த்து எடுத்துக் கொண்டும் அவர் வந்து இருக்கிறார்.
ஏனென்றால், ‘புறப் பொருள் வயமான மெய்ப் பொருள்தனை மனிதனின் சிந்தனையினால் புரிந்து கொள்ள முடியுமா ? என்னும் கேள்வி, தேற்ற முறையான ஒரு கேள்வி அல்ல; மாறாக, செயற் பாட்டு முறையான ஒரு கேள்வி. மெய்ப் பொருள் என்பதை, அதாவது, மனிதச் சிந்தனையின் மெய்மை, ஆற்றல் மற்றும் இப் பாலைத் தன்மை, ஆகிய வற்றினைச் செயற் பாட்டின் மூலமாக மனிதன் மெய்ப்பித்திட வேண்டும். ‘ (ஜெர்மன் கோட்பாடு, பக்.618: பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று, பக்.147.)
எனவேதான்—-
‘தூய்மையான ஞானத்தையும் தூய்மையான ஞாயத்தையும் சரியாக மனிதர்கள் புரிந்து கொள்ளாமல் வந்து இருப்பதுதான், இது வரை உலகில் அவற்றின் ஆட்சி ஏற்படாமல் போனதற்குக் காரணம். இதற்கு ஒரு மேதாவி தேவைப் பட்டான். இப் பொழுது அவன் தோன்றி விட்டான்; உண்மை புரிந்து கொள்ளப் பட்டும் விட்டது.
இப்படி ஒரு மேதாவி தோன்றி விட்டான்; உண்மை தெளிவாகப் புரிந்து கொள்ளப் பட்டு விட்டது என்பது, வரலாற்று வளர்ச்சியின் தொடர்ச்சியில் தவிர்த்திட முடியாத அவசியம் அல்ல; மாறாக, ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்ச்சி!
இவன் மட்டும் ஐந் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி வந்து இருந்தால், ஐந் நூறு ஆண்டுக் காலத் தவறுகளையும் பூசல்களையும் துயரங்களையும் மனித இனம் தவிர்த்து இருக்க முடியும் ‘ (டூரிங்கிற்கு எதிராக, மாஸ்கோ ஆங்கிலப் பதிப்பு, பக்.26: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று, பக்.163-64 அடிக் குறிப்பு-14.) என்று கருதுவதில் எந்தப் பொருளும் இல்லை.
ஆக, தேற்றம்-செயற்பாடு என்னும் கோணத்தில்தான் எதனையும் நாம் புரிந்து கொள்ள முடியும் என்பது தெளிவு.
அதே நேரத்தில், மூக்கு முட்டச் சோறும் மூளை நோகாத ஞானமுமாக வாழ்ந்திட முற் படுகின்ற சிற்றுடைமைச் சிந்தனையாளர்களுக்கு, கார்ல் பாப்பரின் மாய்மைதான் நிறைவு அளித்திட முடியும் என்பதும் தெளிவு.
பொன்றாமையும் வாழ்க்கையும்
மெய்மை என்பது பொன்றாமை (infinite) ஆனது என்பதை ஈண்டு நாம் விளக்கிடத் தேவை இல்லை. அறிவு என்பது கூட பொன்றாமை ஆனதுதான்!
ஆனால், நமது வாழ்க்கையோ பொன்றிமை (finite) ஆனது! நிலையாமையில் நீச்சல் அடித்துக் கொண்டு வருகின்ற இந்த வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டு வந்திடவும் முடியும். ஆனால் கார்ல் பாப்பரோ, பொன்றிமையான நமது வாழ்க்கையைப் பிழை என்று கூறுவதற்கு முற்பட்டு விடுகிறார்.
பொன்றாமை என்பதுதான் முழுமை ஆனது என்றால், பொன்றிமை என்பது அரை-குறைதான் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், பொன்றாமை என்பதை என்றைக்கும் நாம் எய்திட முடியாது என்கின்ற சூழ் நிலையில், அரை-குறையான பொன்றிமையினை நாம் பற்றிக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன ?.
இதனால்தான், பொன்றிமையான கட்டங்களின் எல்லை இல்லாத தொடர்ச்சிதான் பொன்றாமை என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்.
அறிவும் நலனும்
மாவோ, ஸ்தாலின், ஹிட்லர், ஆகியோரைப் பற்றி முன்னர் நாம் குறிப்பிட்ட பொழுது, முற்றான உண்மையின் உறைவிடங்களாகத் தங்களை அவர்கள் கருதிக் கொண்டு வந்து இருந்தனர் என்பதை நாம் பார்த்தோம். இதனால்தான், தங்களை எதிர்த்தவர்களை எல்லாம் அழித்து ஒழித்துக் கொண்டு அவர்கள் வந்து இருந்தார்கள் என்றும் நாம் நினைத்தோம்.
ஆனால், தங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு இருந்தார்கள் என்பது உண்மையில் நமக்குத் தெரியாது. தாங்களாக வாய் திறந்து இது பற்றி எதையும் அவர்கள் கூறிடாத வரை—-உண்மையைத்தான் அவர்கள் கூறுகிறார்கள் என்று நாம் எடுத்துக் கொண்டால் கூட—-அவர்களுடைய மனங்களுக்குள் புகுந்து இதனை உறுதிப் படுத்திக் கொள்கின்ற வழியும் நமக்கு இல்லை.
இதனால்தான், அறிவினை விட ‘நலன் ‘தான் முக்கியம் என்று—-நலன்கள்தாம் வாழ்க்கையை இயக்குகின்றன என்று—-கார்ல் மார்க்ஸ் கூறுகிறார். தங்கள் நலன்களுக்குத் தேவைப் படாத எந்த ஓர் அறிவையும் யாரும் பொருட்படுத்துவதும் இல்லை.
அவ் அளவு ஏன், ‘ ‘நலன் ‘ என்பதில் இருந்து ‘கருத்து ‘ என்பது எந்த அளவுக்கு வேறு பட்டு வந்து இருக்கிறதோ, அந்த அளவுக்குக் கருத்து என்பது எப் பொழுதும் அவமானப் பட்டுதான் வந்து இருக்கிறது. ‘ (கார்ல் மார்க்ஸ், புனித குடும்பம்; வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு, பக். 68.)
இப்படி, நலன்களின் நிகழ்ப்பாடாகத்தான் வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள முடியுமே ஒழிய, அறிவின் நிகழ்ப்பாடாக அல்ல!
எடுத்துக் காட்டாக, எல்லோரும் இன்புற்று இருந்திட வேண்டும் என்னும் மனித இயல்பான பண்பினை எல்லோரும் அறிந்துதான் வைத்து இருக்கிறார்கள் என்ற போதிலும், செயற் பாட்டில் முன்னணிக்கு வந்து நின்று கொண்டு இருப்பதோ ஒவ்வொருவரதும் சொந்த நலன் மட்டும்தான் ஆகும்.
ஆனால், கார்ல் பாப்பருக்கோ அறிவுதான் முக்கியம்; அதில் அடங்கிக் கிடக்கின்ற பிழை கூட அல்ல, பிழையாக்கும் இயன்மைதான் முக்கியம்! எனினும், என்ன நலன் கருதி இந்த ஐயப் பாட்டு வாதத்தினை விதைத்து விட்டு அவர் சென்று இருக்கிறார் என்பதுதான் நமக்குப் புரிய வில்லை.
அதே நேரத்தில், சிற்றுடைமையின் நலனுக்கு ஏற்றனவாக அவரது கருத்துகள் அமைந்து உள்ளன என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.
ஐயமும் நம்பிக்கையும்
ஐயப் பாட்டு வாதம் என்பது விலை மதித்திட முடியாத ஓர் ஆடம்பரம்! எனவே, எல்லோராலும் இந்த ஆடம்பரத்தில் திளைத்து விட முடியாது; ஒரு முதலாளியாலோ அல்லது ஒரு வணிகனாலோ நிச்சயமாக இது முடியாது!
முதலாளர்களைப் பொறுத்த வரை, தங்களிடம் உள்ள ‘பண-முதலை ‘ ‘உற்பத்தி முதலாக ‘ ஈடு படுத்தி, ‘சரக்கு-முதலாக ‘ அதனைக் குவித்து வைத்துக் கொண்டு இருப்பவர்கள் அவர்கள்; தங்கள் சரக்குகளை விற்று ஆதாயத்துடன் தங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொண்டு விட முடியும் என்னும் நம்பிக்கையினை என்றும் அவர்கள் இழந்து விடுவது இல்லை!
முதலாளிகளிடம் இருந்து சரக்குகளை வாங்கி விற்றுத் தங்கள் வாழ்க்கையினை ஓட்டிக் கொண்டு வருகின்ற வணிகர்களோ, சந்தைப் போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர் கொண்டு தங்கள் சரக்குகளை விற்றுத் தீர்த்தாக வேண்டும். இல்லை என்றால், தாங்கள் போட்ட பணத்தை அவர்கள் இழந்து விட நேர்ந்து விடும்.
இது போல, உழைப்பாளர்களாலும் ஐயப் பாட்டு வாதிகளாக விளங்கி விட முடியாது. ஏனென்றால், உயிர் வாழ்வதற்கு அவர்களுக்குக் கூலி வேண்டும்.
ஆனால், இரண்டும்-கெட்டான்களாக இடையில் நின்று தடுமாறிக் கொண்டு இருக்கின்ற சிற்றுடைமை யாளர்களுக்கோ, ஐயப் பாட்டு வாதம் தேவைப் படுகிறது. இதன் மூலம், சமுதாயத்தில் ஏற்பட்டு விடக் கூடிய எல்லா மாற்றங்களையும் தடுத்து நிறுத்தி விட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
அவர்களது அறிவு அல்ல, நலன்தான் இதற்குக் காரணமும் ஆகும்.
ஆக, அறிவு அல்ல, ‘நலன்கள் ‘தாம் சமுதாய வாழ்க்கையினை இயக்கிக் கொண்டு வருகின்றன என்பது தெளிவு.
தொழிற் சங்க இயக்கம்
‘தோல்வியின் இயன்மை ‘யினை அல்ல, ‘வெற்றியின் இயன்மை ‘யினைக் கருத்தில் கொண்டுதான் நாட்டில் போராட்டங்கள் நடை பெற்றுக் கொண்டு வருகின்றன என்பதைக் கார்ல் பாப்பர் கூட மறுத்து விட முடியாது.
அன்றாட வாழ்க்கையினை அலுப்புத் தட்டாமல் வாழ்ந்து கொண்டு வருகின்ற ஒரு சமுதாயத்தில் இருந்து எழுந்து வருகின்ற எதிர்ப்புக் குரல்கள்தாம் போராட்டங்கள் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. இவற்றுள், உழைப்பாளர்களின் தொழிற் சங்கப் போராட்டங்களோ சற்று வேற்றுமை ஆனவை.
அதாவது, ஒரே வருக்கம் என்னும் உழைப்பாளர்களின் ஒருமைப்பாடான ஒற்றுமை; தீர்க்கமான ஒரு சமுதாயத் திறல் என்னும் அவர்களின் பங்களிப்பு; போராடுவது தங்கள் பிறப்பு உரிமை என்னும் விடுதலையான தனி மனித உணர்மை; ஆகியவைதாம் உழைப்பாளர்தம் போராட்டங்களின் தனிச் சிறந்த குணவரைகள் எனலாம்.
இந்த உழைப்பாளர்களின் போராட்டங்கள்—-முடங்கிப் போய்க் கிடக்கின்ற சமுதாயத்தின் இறுக்கங்களைத் தளர்த்துகின்றன; சலிப்புத் தட்டிப் போன வாழ்க்கைக்கு உயிர்ப்பான ஓர் எதிர் காலத்தைச் சுட்டிக் காட்டுகின்றன; புதுமையைத் தேடுகின்ற ஒரு முரணியக்கச் சிந்தனையைக் கிளர்த்தி விடுகின்றன; சமுதாயம் எங்கணும் நம்பிக்கை விதைகளை அள்ளித் தெளிக்கின்றன!
போராட்டங்களின் முழு வீச்சில்—-ஊழல் காரர்கள் உலுக்கப் படுகிறார்கள்; அதிகார வருக்கத்தின் ஆணவங்கள் ஆட்டம் காண்கின்றன; ஒடுக்கப் பட்டு ஒடுங்கிக் கிடக்கின்ற மக்கள் இடையே ஒரு விடியல் உதயம் ஆகிறது; பொது நாயகத்தின் அடித் தளங்கள் பலப் படுத்தவும் படுகின்றன!
இத் தகு சூழ் நிலைகளில்—-அவ நம்பிக்கைக் காரர்களால்தாம் அடங்கிக் கிடந்திட முடியும்; ஐயப் பாட்டு வாதிகளால்தாம் சோகத்தில் சுகம் கண்டிடவும் முடியும்!
இவர்கள்தாம் சிற்றுடைமையாளர்கள்; சிற்றுடைமைச் சிந்தனையாளர்கள்; இயன்மையா ? கூடுமையா ? பிழை படுத்தல் ஆகிடுமா ? என்று மாய்மைகளை விதைப்பதற்கு முற்படுபவர்கள்; கார்ல் பாப்பரின் வகையறாக்கள்!
ஸ்தாலினிச வாதிகளின் அரசு முதலாண்மையிலோ இத் தகைய போராட்டங்கள் எழுச்சி பெறுவது இல்லை என்பது வேறு விசயம்!
இனி, கார்ல் பாப்பரது மாயமான இயன்மையின் விளைவாகின்ற பான்மையினைச் சற்று நாம் பார்ப்போம்.
கார்ல் பாப்பரின் பான்மை
(1) பிழையாக்கும் இயன்மை என்பதுதான் எந்த ஒரு தேற்றத்தினதும் விஞ்ஞானத் தன்மையினை உரசிப் பார்த்திடத் தக்க அளவு கோல்!
(2) ஏனென்றால், எல்லாத் தேற்றங்களும் அரை-குறை ஆனவை!
(3) பிழை படுத்தப் பட முடியாத தேற்றம் என்று ஒன்று இருந்தால், அது மட்டும்தான் நல்ல விஞ்ஞானத் தேற்றம் ஆகிட முடியும்.
(4) ஆனால், பிழை படுத்தப் பட முடியாத முற்றான தேற்றம் என்பது ஒரு கற்பனை!
(5) பிழையாக்கும் இயன்மையினை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தாம் வல்லதிகாரிகள்!
(6) மார்க்சியத்தின் இயல்பான பிழையாக்கம்தான் ஸ்தாலினிசம்!
(7) எனவே, நமது அறிவு முயற்சிகள் அனைத்தும் பிழையானவை என்பது உறுதி!
(8) ஆக, மனித அறிவு மற்றும் வரலாற்றின் இயக்கம் அனைத்தும் பிழைகளின் இயக்கம்தான் ஆகும்.
இப் பொழுது, மார்க்சியப் பான்மையினைச் சற்று நாம் பார்ப்போம்.
மார்க்சியப் பான்மை
(1) நிலைவான உண்மையினையோ, அல்லது முற்றான அறிவினையோ என்றும் மனிதர்கள் எய்திட முடியாது!
(2) பொன்றாமையான மெய்மையினது இயக்கத்தின் ஒரு பொன்றிய கட்டம்தான் மனிதர்களின் வாழ்க்கை!
(3) எனவே, பொன்றிமையும் அரை-குறையும் ஆனதுதான் மனிதர்களின் அறிவு!
(4) அரை-குறை ஆனதுதான் மனிதர்களின் அறிவு என்ற போதிலும், அது பிழை ஆனது அல்ல!
(5) நமது அறிவின் சரித் தன்மையினை அல்லது பிழைமையினைச் செயற்பாடு மட்டும்தான் நிருபித்திட முடியும்.
(6) செயற்பாட்டின் விளைவுகளில் இருந்துதான் நமது அறிவினை நாம் வளப் படுத்திக் கொள்கிறோம்.
(7) எனவே, ஒவ்வொரு தேற்றத்தின் உள்ளும் அடங்கிக் கிடப்பது அதனை வளப் படுத்துகின்ற இயன்மை மட்டும்தான் ஆகும்.
(8) நமது நோக்கங்களை வடிவாக்குவது நமது அறிவு அல்ல; மாறாக, நலன்!
(9) வளப் படுத்தல்களின் நிகழ்ப்பாடாகத்தான் அறிவும், நலன்களின் மோதல்களாகத்தான் வரலாறும் இயங்கிக் கொண்டு வந்து இருக்கின்றன.
(10) பழைய பண்ணையச் சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு, அதனைப் புரிந்து கொண்டு இருந்த தேற்றக் காரர்களின் அறிவில் ஊடாடி நின்று கொண்டு இருந்த ‘பிழையாக்கும் இயன்மை ‘ அல்ல காரணம்; மாறாக, பழைய தொழில் நுட்பங்களின், அதாவது, உற்பத்தித் திறல்களின், புதிய வளர்ச்சிகள்தாம்—-வளமாக்கம்தான்—-காரணம்!
(11) ஸ்தாலினிசம் என்பது அரசு முதலாண்மை வாதம்; மார்க்சியம் என்பதோ மனித ‘உறவுகளின் விடுதலை ‘யினை முற்கூறுகின்ற மனித வாதம்!
கார்ல் பாப்பரின் முற்றான உண்மை
கார்ல் பாப்பரைப் பொறுத்த வரை, முற்றிலும் பிழைகளால் ஆனதுதான் நமது வாழ்க்கை! வரலாற்றின் இயக்கம் அனைத்தையும்—-வளர்ச்சி அனைத்தையும்—-பிழைகளின் இயக்கமாக மட்டும்தான் அவர் காண்கிறார். ஏனென்றால், அனைத்தும் அரை-குறை ஆனவை!
ஆனால், மார்க்சியத்தைப் பொறுத்த வரை, அரை-குறைகள் அனைத்தும் பிழைகள் அல்ல; எனவே, பிழையாக்கும் இயன்மை என்பன போன்ற போலிகளை அது புறம் தள்ளி விடுகிறது. நிறைவினை நோக்கிய அரை-குறையின் இயக்கத்தில் வளமைப் பாட்டினையும் வளர்ச்சியினையும் அது காண்கிறது.
எனவேதான், தேற்றம்-செயற்பாடு என்னும் நிலையில் இருந்தும் நலன்களின் தளங்களில் இருந்தும் வரலாற்றினை அது நோக்குகிறது.
இங்கே வேடிக்கை என்ன வென்றால், ‘முற்றான உண்மை ‘யினைக் கார்ல் பாப்பரின் வாதங்கள் முற்கருதுகின்றன என்பதுதான்! ஏனென்றால், முற்றான உண்மை என்பது மட்டும்தான், பிழையாக்கும் இயன்மை என்பதன் ஒரே அளவு கோலாக இருந்திட முடியும்!
முடிவாக
கார்ல் பாப்பரின் ‘திண்ணை ‘க் கட்டுரையினை மட்டும் எடுத்துக் கொண்டு கார்ல் பாப்பரை நான் எதிர் கொண்டு இருக்கிறேன்; அவரது பான்மையினைப் புரிந்து கொள்வதற்கு இது மட்டும் போதும் என்றும் எனக்குத் தோன்றுகிறது.
எனினும், கார்ல் பாப்பரின் நூல்களைப் படித்து இருக்கக் கூடியவர்களின் கருத்துகள்தாம் இங்கே முக்கியம்! இந்த வகையில், எனது பிழைகளைச் சுட்டிக் காட்டிட முன் வருபவர்களுக்கு எனது முன் கூட்டிய நன்றிகள்!
(முற்றும்)
(14-02-2005)
sothipiragasam@yahoo.co.in
- பெரியபுராணம்- 38
- விஸ்வாமித்ராவுக்குப் பதில்
- சுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்
- நடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-8
- பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி
- பூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)
- ருசி
- எவர் மீட்பார் ?
- கீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நிழல்களைத் தேடி..
- முந்தைய சூழல் ஒன்றுக்காய்
- மாமா ஞாபகங்களுக்காக
- பின் சீட்
- புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- எண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2
- மதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்
- வெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்
- அவளும் பெண்தானே
- மழுங்கடிக்கப்பட்ட விதைகள்
- ஆத்மா
- குழந்தைத் திருமணம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)
- புதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்