எழிற்கொள்ளை

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

பசுபதி


கோடி வீட்டு மங்கை — தினமும்
. குழந்தை யுடன்நடப்பாள் — ஒருநாள்
மூடு துகிலும் நெகிழ — மூக்கு
. மொண்ணை யெனக்கண்டேன் ! (1)

வனிதை நிமிர்ந்து பார்த்தாள் — நானோ
. மண்ணில் விழிவைத்து –தலையைக்
குனிந்து நடந்து சென்றேன் — ஏதோ
. குற்றம் புரிந்தவன்போல். (2)

அழகுத் தீனி தேடல் — இந்த
. அறுப திலும்உண்டு — ஏதோ
பழக்க தோஷம் ஐயா ! — இதில்
. பாவம் ஏதுமுண்டோ ? (3)

எங்கும் எதிலும் முழுமை — எழிலின்
. இலக்க ணமிஃதன்றோ ? — சிறகு
பங்கம் ஆன பறவை — அழகில்
. பாதி என்போமோ ? (4)

முந்தைப் பிறவிப் பயனோ ? — இவள்
. மூளி முகம்கண்டு — ஒதுங்கும்
என்றன் பார்வை தவறோ ? — ரசனை
. இறைவன் தந்ததன்றோ ? (5)

மறக்க முடிய வில்லை — ஐயோ!
. வதன எழிற்கொள்ளை ! — இவளின்
பிறவி என்ன கொடுமை ! — துணையாய்ப்
. பெற்ற கணவனெவன் ? (6)

ஒரு நாள்..

எதிரில் வந்த புருடன் –உருவோ
. இராச எழிற்கொள்ளை ! — இந்தப்
புதிரை அவிழ்க்கத் துடித்தேன் — இதுயார்
. புரிந்த விளையாடல் ? (7)

மனிதன் என்ன சிவனா ? — தேய்ந்த
. மதியை முடியேற்ற ? — அழகின்
இனிமை அற்ற பெண்ணை — மணக்கும்
. இரும்பு நரனுமுண்டோ ? (8)

கருணை ஊறும் கனிவில் — அவளைக்
. கணவன் மணந்தானோ ? — மனைவி
உருவம் தினமும் அவனை — கனவிலும்
. உலுக்கி எடுக்குமன்றோ ? (9)

பின்னொரு நாள்…

கோட்டு, சூட்டு, போட்ட — கணவன்
. கூட அந்தமங்கை — தன்
வீட்டு வெளியே வந்து — அவனை
. விடைய னுப்பிநின்றாள். (10)

அன்றோர் காட்சி கண்டேன் — அவன் ‘டை ‘
. அணியைச் சரிசெய்தாள் — அவளின்
கன்னம் தட்டி நின்றான் — கணவன்
. கண்ணில் ஆசைபொங்க. (11)

முகத்தை நாணம் சிவக்க — பின்னர்
. முகிழ்த்த தெழிற்கொள்ளை! — ஒன்றின
அகத்தின் முகங்கள் கண்டேன் — அன்பின்
. அழகிற் கேதுகுறை ? (12)

~*~o0O0o~*~

pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி

எழிற்கொள்ளை..

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

கவியோகி வேதம்


எழிலெல்லாம் மனத்துக்(கு)எக் கணமும்கொள் ளையாமோ ?

சுழித்தோடும் ஆற்றினையே சுகமில்லாக் கண்பார்த்தால்

.

பரவசம் விளைத்திடுமோ ? பலகவிச்சொல் முளைத்திடுமோ ?

இறைபக்தி இல்லையெனில் ‘கருவறைதான் ‘ இனித்திடுமோ ?

..

நம்முன்னே எழிற்கொள்ளை நாற்றைப்போல் அசைகிறது!

இம்மென்னு முன்,இந்த ஆச்சர்யப் பிரபஞ்சத்தில்

..

கோளங்கள்,சந்திரன்கள்,கோலோச்சும் ‘தூசிவெள்ளம் ‘,

தாள லயம்தனிலே ‘ஓம் ‘என்ற ஓசைக்குள்

..

கண்ணுக்கும் புரியாமல்,கருத்துக்கும் எட்டாமல்,

விண்ணுக்குள் சுழன்றென்றும் வித்தைகள் காட்டிநிற்கும்;

..

எத்தனையோ சிற்பிகள் கல்லில்-எழிற் கொள்ளையிட்டார்;

எத்தனையோ பாவலர்கள் மனம்-இளக்கும் இசைஅமைத்தார்;

..

அத்தனை கொள்ளை!தினம் அனைவரும் நினைக்கிறமா ?

சத்துநீக்கி அரிசிதனைச் சாப்பிடுங்கால் மனம்தனிலே

..

சேற்றினிலே உழவனின்கால் லய ‘க்கொள்ளை சிறைப்படுதா ?

சோற்றுப் பருக்கை,அவன் சுகவேர்வை தரும்கொள்ளை!

..

காலவண்டு ரீங்கரித்து,கணம்நம்மை ஓடவைத்துக்

கோலத்தை, நம்சதையை,க் கூசாமல் மாற்றிவிட்டு,

..

கிழக்கோலக் கொள்ளையிலே பொக்கைவாய் அழகுதந்தே

இழைக்கின்ற ‘பரிகாரம் ‘ இழையவிடும் பேத்திசுகம்!

..

அப் ‘பேர ‘ சுகம்தானே அவ்வயதின் ஆதாரம் ?

இப்போதும் அனுபவித்தே இக்கவிதை இழைக்கின்றேன்!

.

என்நண்பன் ‘கிச்சா ‘வும் ‘சுகக்கொள்ளை இது-என்பான்!

ஒன்பதைந்து வருடம்-அவன் அயல்நாட்டில் பணம்சேர்த்தான்!

..

டாலர்கள் சேர்த்தென்ன லாபம்பெற் றேன் ?என்பான்!

பாலகனை,அரவணைத்த பாசக் கிழவியினை,

..

பாவியேன் யான்-அங்கே பறிகொடுத்து விட்டுவந்தேன்;

ஆவிதான் போயினபின் அமெரிக்கா அழகாடா ?

..

அத்தனை எழில்தோட்டம்,அழகுமிகு மாளிகைகள்,

சொத்தெல்லாம் எனக்கொன்றும் சுகக்கொள்ளை தரலையடா!

..

அநாதையாய் நின்றேன்யான்!ஆச்சர்யம்! ஓரிரவில்,

கனாவில் வந்தார் ‘காஞ்சிமா முனிவர் ‘சொன்னார்;

..

உன்னைப்போல் அநாதையாய் ஒருகோடிக் குழந்தையிங்கே!

தென்னாட்டில் ‘பாலரில்லம் ‘ தேர்ந்தெடுத்து நடத்து!என்றார்; ‘ ‘—

.

பால வாக்கத்தில்(என்வீட்டருகில்)அநாதைப் பாலர்களைச்

சீலமுற வளர்த்து,அவன் சீராட்டி மகிழ்கின்றான்!

..

‘சொத்தெல்லாம் குழந்தைகட்கு!சுகக்கொள்ளை எனக்கெ ‘ன்பான்!

பெத்துப் போடாத பேரன்கள்என் தெய்வம் ‘என்பான்!

..

சொல்லுங்கள் கவிநண் ‘பீர் ‘! சுகக்கொள்ளை வெளியிலா ?

கல்லுக்குள் ‘தேரை ‘வந்தால், சுகம் எதற்கு ?கல்லுக்கா ?

****(கவியோகி வேதம்)

kaviyogi_vedham@yahoo.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்