மஞ்சுளா நவநீதன்
இந்தியாவின் துணைக்கோள்
ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து துணைக் கோள் வானில் வெற்றிகரமாய்ச் செலுத்தப் பட்டிருக்கிறது. ஒரு மீட்டர் அளவு நுணுக்கமாக இது பார்வைகளைச் செலுத்த வல்லது என்று சொல்கிறார்கள். முன்னர் வானில் நிலைநிறுத்திய துணைக்கோள்கள் ஐந்தரை மீட்டர் அளவிற்கு நுணுக்கம் கொண்டது. இது யுத்தத்திற்கான கருவி அல்ல என்று அரசாங்கம் தெரிவித்தாலும் கூட இது போர்க்காலத்தின் போதும் உளவு சாதனமாய்ப் பயன் படும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் முந்திய துணைக்கோள்களின் மூலமாக கார்கிலில் நடந்த பாகிஸ்தானிய ராணுவ ஊடுருவலைச் சரியான சமயத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் உண்மை தான். கண்டுபிடிக்கவே முடியவில்லையா அல்லது, கண்டுபிடித்திருந்தும் ராணுவ அதிகாரிகளின் அலட்சியமும் மெத்தனமும் சேர்ந்து சரியான முறையில், சரியான நேரத்தில் உளவுத்துறை செயல்படாமல் செய்து விட்டதா என்பது சிதம்பர ரகசியம்.
சிறந்த கருவிகள் மட்டும் போதாது, அந்தக் கருவிகளைச் சரியான முறையில் பயன்படுத்துகிற மனிதர்கள் வேண்டும். மனித வள வளர்ச்சி என்பது இந்திய விஞ்ஞான உலகில் மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு கஸ்தூரி ரங்கனும், அப்துல் கலாமும் எல்லா விஞ்ஞானிகளின் பிரதி நிதியல்ல. விஞ்ஞான மனித வளத்தை மேம்படுத்துவதில் அரசு செலுத்தும் அக்கறை இன்னமும் சிறப்பாய்ச் செயல் பட வேண்டும்.
இந்தத் துணைக்கோளின் வெற்றிக்குப் பின் உள்ள விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்.
*********
முதல்வர் பன்னீர் செல்வத்துடன் ஸ்டாலின் சந்திப்பு.
ஸ்டாலின் மற்றும் பிற தி மு க மேயர்கள் முதல்வர் பன்னீர் செல்வத்தைச் சந்திருத்திருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு ஒரு சடங்காக இருப்பினும், சில நேரங்களில் சடங்குகளும் கூட ஒரு முக்கியத்துவம் பெற்று விடுகின்றன. ஜெயலலிதா முதல்வரான பின்பு ஸ்டாலின் ஜெயலலிதாவைச் சென்று சந்திக்காதது பற்றி ஜெயலலிதா சட்டசபையிலேயே குறைப்பட்டுக் கொண்டார். ஆனால் அன்று நிலைமை வேறு சட்ட ரீதியாய் ஜெயலலிதா நியமனமே கோணல் என்று வாதப் பிரதிவாதங்கள் எழுந்த நேரம். இரு கட்சிகளுக்கிடையே பெரும் சண்டை சச்சரவும், பெருத்த குரோதமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. இப்போது சற்றே இது அமைதி பூண்டிருக்கிறது. கருணாநிதியும் இனி தேர்தல் காலப் பகைமையை மறந்து விட்டு மக்கள் நலனுக்காக இரண்டு கட்சிகளும் பாடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் மூலம் தான் முதிர்ச்சியுற்ற தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார். இனி இந்த பரஸ்பர ஒத்துழைப்பைச் செயல் படுத்த வேண்டிய கடமை அ தி மு க விற்கு இருக்கிறது.
********
போப்பாண்டவர் மன்னிப்புக் கேட்கிறார்
போப்பாண்டவர் சீனாவிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். காரணம் : சீனாவின் மீது காலனியாதிக்கம் இருந்த காலகட்டத்தில் மிகுந்த உக்கிரமாக கத்தோலிக்க மதம் பரப்பப் பட்டது. சீனா மீது ஜப்பானியப் படையெடுப்பின் போதும் ஜப்பானை கத்தோலிக்க சர்ச் ஆதரித்தது. சீனாவின் மக்களின் நம்பிக்கைகளை எள்ளி நகையாடியது மட்டுமின்றி காலனியாதிக்கத்துடன் நெருக்கமான உறவு பூண்டு மதப் பரப்புதலைச் செய்தது. சமீபத்தில் கத்தோலிக்க சர்ச் சீனாவில் இப்படிப் பட்ட மதப் பரப்புதலில் ஈடுபட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஆட்களை புனிதர்கள் ஆக்கி அறிவிப்பு வெளியிட்டது சீனாவின் அரசாங்கத்தையும் , சீனாவின் அறிஞர்களையும் கோபமுறச் செய்தது. இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த அவர்கள் வாதங்களை ஏற்றுக்கொண்டு கத்தோலிக்க சர்ச் இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இது போன்றே கோவாவிலும் வேறு சில இடங்களிலும் , இந்தியாவில் அக்கிரமங்கள் நடந்ததுண்டு. கோவாவில் விசாரணை என்ற பெயரில் (Inquisition) கத்தோலிக்க மத நம்பிக்கை அற்றவர்கள் மீது நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் தெய்வ நிந்தனைக்காரர்கள் என்று குற்றம் சாட்டி கத்தோலிக்க சர்ச் கொன்றது வரலாறு. இது குறித்து இடதுசாரிகளோ, இந்திய அரசாங்கமோ மூச்சு விடுவதில்லை.
அநீதிக்குக் காரணமானவர்கள் அந்த அநீதிக்குப் பொறுப்பேற்பது என்பது ஓர் ஆரோக்கியமான மரபு. அந்த விதத்தில் கத்தோலிக்க சர்ச்சின் இந்த மன்னிப்புக் கேட்கும் செயல் வரவேற்கத் தக்கது. இந்த செயலுக்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள் . கத்தோலிக்க மதம் பிரசாரம் செய்ய சீனாவில் அனுமதி இல்லை. இந்த மன்னிப்புக் கோரலுக்குப் பிறகு வாடிகனுக்கும், சீனாவிற்கும் உறவு சீர்பட்டு கத்தோலிக்கப் பிரசாரகர்களை அனுப்ப அனுமதி கிடைக்கும் என்று போப்பாண்டவர் எதிர் பார்க்கிறார்.
*****
ஆஃப்கானிஸ்தானத்தில் போர் : இன்னும் எவ்வளவு நாள் ?
சீக்கிரமாய் இந்தப் போர் முடிவு பெறும் என்று எதிர்பார்த்தவர்கள் பலரும் தாலிபன் இவ்வளவு உறுதியுடன் போராடும் என்று எதிர் பார்க்கவில்லை. தாலிபன் ஏற்கனவே தனக்கு இருந்த எதிர்ப்பாளர்களையெல்லாம் கொன்று குவித்துள்ளது. ஈராக்- அமெரிக்க யுத்தம் போல இரு அரசாங்கங்களுக்கு இடையிலான போர் என்றால் யுத்தத்தில் ஈடுபட்ட படையினரை எதிர்த்துப் போரிடுவது சுலபமாய் இருக்கும். ஆனால் இங்கு போர்க்களம் என்றோ , யுத்தத் தயாரிப்பு என்றோ எதுவும் இல்லை. வான் வழிப்போரில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும், தரைவழிப் போரில் அமெரிக்கா வெற்றி பெறுவது சுலபமில்லை. அமெரிக்கத் தரைப்படை, வியத்நாமிற்குப் பிறகு , வேறெந்த நாட்டிலும் தீவிரமான போரில் ஈடுபடவில்லை என்பது தான் உண்மை. தாலிபன் அரசிற்கு, அமெரிக்க நண்பன் வேடமிட்டபடியே, பாகிஸ்தான் மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. தாலிபனின் தீவிரம் குறைந்த தலைமையை, தாலிபனின் வீழ்ச்சிக்குப் பிறகு அரியணையில் அமர்த்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியிருப்பதும் கூட இப்படிப் பட்ட ஒரு செயல் தான். எனவே எப்படி அமெரிக்கா தாலிபன் கையில் உள்ள நாட்டைக் கைப்பற்றும் என்பதும், எப்படிப் பட்ட தலைமை வரும் என்பதும் கேள்விக்குறி. இந்தப் போர் மிக நீண்ட போராய்த் தான் இருக்கும்.
**************
பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் – புதிய மொந்தையில் பழைய கள்
பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் இன்னொரு சட்டம் இயற்றி அதன் கீழ் பயங்கர வாதிகளைப் பிடித்து விடலாம் என்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போலத்தான். முன்பிருந்த தடா சட்டத்தின் கீழ் 75000 பேருக்கும் மேலாகக் கைது செய்யப் பட்டார்கள். ஆனால் 1500 பேரின் மீது கூடக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை. குற்றம் என்னவென்றே தெரியாமல் மக்கள் சிறையில் அடைபட்டிருந்தது தான் மிச்சம். முன்பு தடா கொண்டுவந்த காங்கிரஸ் இப்போது பா ஜ கவின் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இது சரியான போலித்தனம். அரசியல் காரணமே தவிர காங்கிரஸ் திடாரென்று மனித உரிமைகளை மதிக்கும் கட்சியாய் மாறிவிடவில்லை. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெறாது என்று தெரிகிறது.
இருக்கிற சட்டங்களை ஒழுங்காகப் பின்பற்றினாலே போதும், யாரையும் விசாரணையின்றி உள்ளே அடைக்க வேண்டியதில்லை. காவல் துறை புலனாய்வுத் துறையை வலுப் படுத்தாமல் சும்மாவேனும் சந்தேகத்தில் மக்களை உள்ளே தள்ளுவதற்குத் தான் இப்படிப் பட்ட சிறப்புச் சட்டங்கள் பயன் படும். அந்த நேரத்து ஆளும் கட்சிக்கு வேண்டாதவர்களையும் எதிர்கட்சிக்காரர்களையும் அச்சுறுத்துவதற்கும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதற்குமே இந்த சட்டம் பயன் படும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
********
மார்க்ஸிஸ்ட் கட்சி – காங்கிரஸ் ஏன் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸை எதிர்க்கின்றன ?
ஜெயலலிதா என்ற தண்டனை பெற்ற புனிதர் என்றால் இந்த இரு கட்சிகளும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும். ஆனால் ஜார்ஜ் பாவம். மார்க்ஸிஸ்ட் கட்சியின் எதிர்ப்புக்குக் காரணம் ஜார்ஜ் சீனாவைத் தன் பேச்சில் தாக்கியதாய் இருக்கலாம். சீனாவின் மீதான விசுவாசம் இன்னமும் மார்க்ஸிஸ்ட் கட்சிக்குக் குறைந்ததாய்த் தெரியவில்லை.
*******
சென்ற சில வாரங்களுக்கு முந்தியது
கேரளாவில் சிபிஎம் கட்சி கைரளி என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் அதில் வேலை செய்யும் 20 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களில் உயர்ந்த பதவியில் இருந்தவர்களும் அடக்கம்.
இது சம்பந்தமாக கேரள சிபிஎம் கட்சி தலைவர் விஜயன் பேசும்போது, ‘லாபம் ஈட்டாத வியாபார நிறுவனங்கள் தங்களது செலவுகளை குறைத்துக்கொள்ள தங்கள் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதில் எந்தவிதமான தவறும் இல்லை ‘ என்று சொல்லியிருக்கிறார்.
இதே காரணத்துக்காக மற்ற நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தால், அதை எதிர்த்து பிரச்சாரம் செய்யத்தான் இந்த தொலைக்காட்சி நிறுவனத்தையே சிபிஎம் தொடங்கியது என்று நினைத்துக்கொண்டிருந்த சிபிஎம் கட்சி உறுப்பினர்களுக்கும், தொழிலாளர்களின் சர்வாதிகாரம் நோக்கிப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கும் பெப்பே காண்பித்துவிட்டு லாபம் நோக்கி முன்னேறுகிறது கைரளி தொலைக்காட்சி நிறுவனம். வாழ்த்துக்கள்.
அடுத்த முறை வேலை இழந்த தொழிலாளர்களைக் கொண்டு சிபிஎம் கட்சி எந்த விதமான போராட்டத்தில் ஈடுபட்டாலும், இந்த விஷயத்தைக் மேற்கோள் காட்டி அதனை அடிப்பது தொடர்ந்து நடக்கும். சிபிஎம் கட்சி நடத்தும் நிறுவனம் ஆள்குறைப்பு வேலை செய்யலாம், மற்ற தொழில் முனைவர்கள் செய்யக்கூடாதா என்று விவாதம் நடக்கும். அதற்கு மயிர் பிளக்கும் வாதங்கள் இடதுசாரியினரால் வைக்கப்படும்.
ஆனால் தொழிலாளர்கள் சிபிஎம் போன்ற கட்சி நிறுவனங்களைச் சார்ந்து மட்டுமே போராடமுடியும் என்ற நிலை மாறலாம்.
ஆனால் இந்த விஷயத்தால், தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்குப் போராடுவது நின்றுவிடாது. நிற்கவும் கூடாது.
அதே நேரத்தில், கட்சி நிலைப்பாட்டைத் தாண்டி, ஒரு நபர் வேலை நீக்கத்தை எதிர்த்துப் போராடி, அந்த தொழில் நிறுவனத்தையே செயலிழக்கச்செய்து, மீதமுள்ளவர்களின் வேலை வாய்ப்பை அழிப்பதைக் காட்டிலும், நிறுவனத்தை லாப நோக்கில் காப்பாற்றி மற்றவர்களது வேலையையும் தக்கவைத்துக்கொள்ள முடிந்தவரை முயல்வதற்கு சங்கங்கள் துணை புரிய வேண்டும். இதற்கு, தொழிற்சங்கங்களுக்கு அடிப்படைப் பார்வை மாற்றம் வேண்டும்.
இதனால். தொழிலாளர்கள் வேலை இழக்கும் போது, அவர்கள் புது வேலைகளைக் கற்றுக்கொள்ளும் வசதிகளுக்காகவும், இடைப்பட்ட நேரத்தில் அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடவேண்டும்.
****
- சேவல் கூவிய நாட்கள் – குறுநாவல் – இறுதிப்பகுதி
- வடிவ அமைதி
- நியதி
- பகல் நேர சேமிப்பு
- யூதர்களுக்கும் கிறுஸ்தவப் போராளிகளுக்கும் எதிரான ஜிகாத்
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 27 , 2001
- நாகாிக மானுடமே!
- கலைமகளே!பதில் சொல்வாய்..!
- நிலவு
- கண்ணீர்
- கொலுசணிந்த பாதங்களுக்கு ஒரு முத்தம்
- எனக்கு மழை வேண்டாம்
- மறக்க முடியுமோ ?
- பகல் நேர சேமிப்பு
- மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்
- கருவாட்டுக் குழம்பு