‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 1
இரா.முருகன்
‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 1 வெளியீடு மார்ச் 2000 – இலிருந்து…
நாள்
விடியும்போது ஒலிபெருக்கி எழுப்பச்
சேவல் அடித்தனர் விருந்து சமைக்க.
பூப்பு நீராடப் போனாள் சிறுமி.
காய்கறிக் கடைக்குக் கூடை சுமந்து
புடவை திருத்தி நடந்த அலிக்குச்
சோப்பு வாங்கக் கடையே திறக்கலை.
கரகக் காரனைப் பகலில் பார்த்தேன்,
நாவிதர் கடையில் ஆள்வராப் பொழுதில்
முகத்தைக் கொடுத்துத் தூங்கத் துவங்கி.
செண்டை மேளம் முழங்கும் தெருவில்
கருப்புச் சாமிகள் ஊர்வலம் வந்தனர்.
துடைக்கத் துடைக்கச் சிந்திய ரத்தம்.
நாடக அரங்கில் கூட்டம் குறைவு.
வசனம் மறந்து இருமி இறந்து
பணத்தை வாங்கி வெளியே நடந்தான்.
ஒற்றை அறையில் கூட்டத் தூக்கம்.
மனைவியை உசுப்ப அம்மா இருமினாள்.
மருந்து வாங்க மறந்து போனது.
(கணையாழி)
சமாதியிலிருந்து கோயில் வரைக்கும்
கோவணச் சாமியார் கிழட்டுத் தளபதி,
பாளையக் காரன் தடவி அலுத்த
பழைய வைப்பாட்டி, வைப்பாட்டி வளர்த்த
சினைப்பசு, கிளிக்குஞ்சு, திண்ணைமாமா –
உள்ளே யாரோ ஊர் மறந்தாச்சு.
கோடையில் ஒருநாள் தரிசுக ளூடே
மேற்கி லிருந்து நடந்து வந்த
ஒருத்தன் சொன்னதால் வெள்ளை யடித்துக்
கோயில் புதுக்கினர் கிராமம் செழிக்க.
சாலியா புரத்துச் சந்தைக் கடையில்
ஆடும் மாடும் அரையில் ரோகமும்
மலிவாய் வாங்கி விளம்பர வைத்தியன்
மருந்து விழுங்கும் பெரிய்ய பண்ணை
செய்து வைத்தார் லிங்கப் பிரதிட்டை.
வாரிசு இல்லாக் குருக்களின் விதவை
எரவா ணத்தில் செருகி இருந்த
செல்லரித்த புத்தகம் படித்து
மந்திரம் சொன்ன கிழப் பூசாரி
பழகிக் கொண்டான் தீட்டுப் பார்க்க.
நூறு வருசம் பின்னால் நடந்தால்
சமாதி மூலம் தெளிவாய்த் தெரியலாம்.
பத்து வருடம் முன்னால் நகர்ந்தால்
கோயில் மகிமை புத்தகம் போடலாம்.
இப்பச் செய்ய என்ன இருக்கு ?
சாலியா புரம் சந்தைக்குப் போகலாம்.
(கணையாழி)
பயம்
போகக் கூடா தென்பதை மீறி
வெளியில் நடந்து திரும்பி வந்தால்
பாதை யிருட்டில் நெளியும் வாசல்
படிக் கட்டிலும் அசுவனி உதிர்க்கும்
பந்தல் கீழும் துரத்தி வரும்.
நாற்கா லியிலும் யோகம் போலக்
கால்கள் மடித்து அமர வைக்கும்.
மின்விசை தவறிய வீட்டில் இருளில்
மெழுகின் நிழலில் பலவாய்ப் பெருகும்.
படுக்கை விரித்தால் தலைக்கு மேலே
சீறத் துவங்கித் தூக்கம் கெடுக்கும்.
தூளிக் கயிற்றில் இறங்கு மென்று
பக்கம் கிடத்திய குழந்தை சிணுங்கும்.
தூறத் துவங்கிய போது சன்னலைச்
சாத்தப் போனால் திரும்ப வைக்கும்.
விடியும் நேரம் கொஞ்சம் அயர்ந்தால்
கனவில் நீண்டு கழுத்தில் படரும்.
விடிந்த பிறகு மகுடி வைத்து
ஊதிப் பார்த்தால் ஒன்றையும் காணோம்,
நேற்றுப் பார்த்ததாய்ச் சத்தியம் செய்தவர்
இல்லையென்று புதிதாய் மறுக்கக்
கோணிப் பையில் அரிசி வாங்கிப்
போனான் பிடாரன் பயத்தைப் பிடித்து.
(கணையாழி)
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்
மூடுவண்டித் திரைக்குப் பின்
முனகிநீ புரண்டிருக்கக்
காற்றணைக்கும் லாந்தர்
கைப்பிடித்துக் கூட வந்து
ஊர் உறங்கும் வேளை
பேர்தெரியா மருத்துவச்சி
வாசலிலே நின்றபோது
பேச்சுக் குரலெழுந்து
நித்திரை கலைந்த
நாய்கள் அதட்டும்.
பின்னிரவுப் பனியும்
பீடிப் புகையுமாய்
வாசலிலே நின்று
வானம் வெறித்திருக்க,
வெள்ளம் அழித்த அறுவடையை,
வீட்டுச் சுவர்கள் விழுந்ததை,
நீல மூக்குத்தி கடன்
நிலுவையில் மூழ்கியதை,
பால் மரத்த பசுமாட்டை,
பஸ் அடித்த வெள்ளாட்டை,
ஆயிக்குத் திவசம் தர
அய்யருக்கு அலைந்ததை,
காளிக்குத் தரவேண்டிய
கழுத்தறுத்த சேவல்களை,
ஆசையாய் நீ கேட்டு,
வாங்காதுபோன வட்டுக் கருப்பட்டியைச்
சுற்றும் நினைவுகள்
சூழ்ந்து குழம்ப,
நேரம் மறந்து நின்றபோது
ஆரோ வந்து சொன்னார்
அழகான குழந்தையென்று. *
ஆற்றுச் சலசலப்பில்
காலை விடிந்தபோது
உலகம் புதுசாச்சு
உள்ளமும் நேராச்சு.
* கணையாழியிலும், நூலிலும் ‘ஆண் குழந்தையென்று ‘ என வந்ததை இங்கே மாற்றி இருக்கிறேன்.
திருவாளர் சங்கப் புலவர்
ஆற்றுப் படையெழுத அச்சாரம் வாங்கி
அரண்மனைப் படிகளில் இறங்கிய புலவன்
யோசித்த படிக்குத் தெருவில் நடந்தான்.
ஆற்றங் கரையில் புதிய கூட்டம்.
ஆண்கள், பெண்கள், சின்னக் குழந்தைகள்.
துண்டு விரிப்பில் பேரியாழ் கிடந்தது.
அருகே ஒருசிசு ஒன்றுக் கிருந்தது.
பாணர்கள் குழுமிப் பல்விளக் கினார்கள்.
குந்தி யிருந்து வந்த பாணன்
அரண்மனை போக வழியைக் கேட்டான்.
புலவன் தொடங்கினான் ஆற்றுப் படுத்த.
இப்படிப் போனால் விரசாய்ப் போகலாம்.
விறலியை முன்விட்டு மெல்லநீ பின்போ.
குழந்தை இடுப்பில் கிள்ளி அழவிடு.
யாழின் நரம்பை முறுக்கிக் கட்டி
மன்னனை வாழ்த்திப் பாடணும் சத்தமாய்.
திருமகள் கேள்வன் காது மந்தம்.
ஆற்றுப் படுத்திய காரியம் முடிந்து
அருகே அமர்ந்து வெற்றிலை போட்டான்
ஊர்பேர் விவரம் உசாவிக் கொண்டு.
தொலைவில் கிழக்கே கிழக்கேயோர் நாட்டிலே
நிலம் இருந்தது உள்ளங்கை அளவு
கொஞ்சம் விளைந்தது குடும்பம் நடந்தது.
அரசன் கனவில் ஆண்டவன் வந்து
ஆற்றுப் படுகை நிலமெலாம் கேட்டதால்
பறித்துக் கொண்டனர் ஆலயம் எழுப்ப.
கோயில் குடமுழுக் காகும் போது
குடிசை பிரித்துத் துரத்தி விட்டார்கள்
குதிரை நிறுத்த இடமில்லை என்று.
சோறு தேடி அலைந்தபோது
பழைய யாழிது மலிவாய்க் கிடைத்தது.
பழகிக் கொள்கிறோம் வாசிக்க அனைவரும்.
இவள் என்மனைவி பாடத் தெரியும்
நானும் கொஞ்சம் பாட்டுக் கட்டுவேன்.
கவனப் படுத்திய பாட்டிதைக் கேட்டுத்
திருத்திக் கொடுத்தால் நன்றி உனக்கு.
எதிரி நாட்டைத் தீயிடை மடுத்தது
எல்லா வயது மங்கையர் வளையும்
நெகிழச் செய்தது, செங்கோல் சிறப்பு –
எல்லாம் கேட்டு முடித்த பின்னர்
யாழின் நரம்பை மாற்றச் சொல்லி
யோசனை தந்து புலவன் கிளம்பினான்.
ஆயிரம் ஓலை புதிதாய் வாங்கி
ஆற்றுப் படையெழுதத் தொடங்கும் முன்பு
யாப்பிலக்கணம் யாரிடம் வாங்கலாம் ?
(தீபம்)
பிரதானம்
மழையில் நனையும் ஊர்வலம் எதுவோ
உருவம் சிதையக் கடந்து போகும்,
குறுக்குச் சந்தில் நெருங்கி நடந்து
வெற்றிலை உமிழத் தரையைத் தேடும்,
வாசல் மறித்து நீளும் குடங்களின்
வரிசையோடு நகர்ந்து கதைக்கும்,
எண்ணெய் கசியும் இனிப்புக் கூட்டிய
பொட்டலம் பிரித்துப் படித்து மெல்லும்
தெருவின் முகங்கள் பார்த்தது போதும்.
பொடிக்கடை முன்பு கண்கள் உருட்டி
விளம்பரம் செய்ய நிறுத்தி இருந்த
பொம்மைக் கழுத்து மூங்கில் தெரியத்
தலையைத் திருடிய பயலைத் தேடும்.
சுழல்
வெள்ளை யடித்துச் சுவரின் மேல்
சின்னம் எழுத வந்தார்கள்.
பேசிச் சிரித்துப் பீடி புகைத்து
அளவாய்க் கொஞ்சம் நிறங்கள் கலந்து
பார்த்துப் பார்த்து எழுதி விட்டுப்
பக்கச் சுவரில் சிறுநீர் கழித்துப்
போனவர் மீண்டும் திரும்பி வந்து
இந்தச் சுவரை நனைத்துப் போவார்.
வெள்ளை யடிப்பதும் மூத்திரம் பெய்வதும்
நிலைக்கச் சுவர்கள் விழுந்து முளைக்கும்.
(கணையாழி)
(இரா.முருகன் – ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – வெளியீடு மார்ச் 2000)
eramurukan@yahoo.com
- யேன் செய்ததில்லை ?
- மறைந்த எழுத்தாளருக்கான மரியாதையும் மதிப்பீடுகளும்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்று
- பிறகு….
- ஜாதிகள் ஜாக்கிரதை
- விடியும்! நாவல் – (11)
- யாதுமாகி நின்றாய் பராசக்தி…….
- …காற்று தீரும் வரை
- 40 சீனில் என்ன செய்யமுடியும் ?
- பண்பெனப்படுவது யாதெனக் கேட்பின்….
- வாரபலன் ஆகஸ்ட் 22 (பெல்ஜிய அதிகாரிகள், விபச்சார வர்த்தகம், காந்தர்வம்)
- அசல் வரிகள்
- தாரகை
- இறுதி
- வானம் காலடியில்
- புதுமைப்பித்தனின் சமூகப்பார்வை
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி
- ஜேனஸின் முகங்கள் : 20 ஆம் நூற்றாண்டில் மார்க்சியமும் பாசிஸமும்
- ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை, மணப்பெண் சொத்துரிமை, மணப்பெண் வயது, வரதட்சணைக்கு அஞ்சி பெண்சிசுக்கள் கருஅழிப்பு!
- கடிதங்கள்
- சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன்
- முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும்
- ஆவேசமும் குழந்தைமையும் -வில்லியம் பாக்னரின் ‘இரு சிப்பாய்கள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 74 )
- கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி
- யார் எழுதலாம் எவ்வளவு எழுதலாம் ?
- வியாழனைச் சுற்றிய காலிலியோ விண்வெளிக் கப்பல் [Galileo Spaceship that orbited Jupiter (1989-2003)]
- அறிவுத்திறத்தின் பரிணாமம்- செடி SETI மற்றும் விண்வெளி உயிரியலின் இன்றியமையா பகுதி
- செந்தில்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 1
- பேசாதிரு மனமே
- அறிவியல் புனைவுகள் – ஓர் எளிய அறிமுக வரலாறு
- உணவும் நம்பிக்கையும்
- சிவகாசி சித்திரங்கள்
- பச்சோந்த்ி வாழ்வு
- நந்தா விளக்கு !
- பிக்பாக்கெட்
- தெய்வமனம் அமைந்திடுமோ!
- பேய் அரசுசெய்தால்
- உயிர்மை
- குறிப்புகள் சில – 28 ஆகஸ்ட் 2003 தி ஹிந்து-குளிர் பானங்கள்-வணிக முத்திரை,பதிப்புரிமையும் கருத்துச்சுதந்திரமும்
- கோபிகிருஷ்ணனை முன்வைத்து எழுத்தாளர்களுக்கான இயக்கம்
- குயவன் (குறுநாவல்)