சத்யானந்தன் கவிதைகள்

This entry is part of 35 in the series 20101219_Issue

சத்யானந்தன்


1. வழி

இன்னும் சற்று நேரத்தில்
உணவகம் நீங்கி
மேற் செல்ல வேண்டும்

எலிப்பொறிகள் இடையே
விரையும் வாகனங்கள்
விதவிதமாய்

சாலைகள் சந்திகள்
வழிகாட்டிப் பதாகைகள்
சங்கிலியின் கண்ணிகளாய்

மலையில் மட்டுமே தன்வயமாய்
முன்னகரும் நதி தன்
அங்கமா மணல் இல்லை
சுமையா எனும் வினாவை
விட்டுச் செல்லும்
வழி பற்றிய வினாவை
சாலைகளும் தான்

எந்த ஆற்று மணலோ இவ்
வழி நெடுக இறைந்து கிடக்கிறது

2.நிலம்

போர்கள் தன் பெயரால் வீழும்
உடல்கள் தன் மடியில்
எதிர்வினை புரியாது நிலம்

பாண்டி கபடி மைதானக் கோடுகள்
சில மீண்டு வந்தன கோலங்களாய்
சில நீண்டு சொல்லாடல்களின் மூலங்களைத்
தேடித் தீண்டின

காகங்கள் கழுகுகள் பியுனிஃஸ் யாவும்
உலாவும் நிலமெங்கும் தன்
கர்பத்துள் பொதிந்தவை நிலம்
மட்டுமே அறிந்தது

கலப்பையின் தொடுகையை
நிராகரிக்கவுமில்லை ஏற்கவுமில்லை
நிலம்

3.தடங்கள்

புகை வண்டி நிலையக் கூரை
உணவு வாங்கப் பற்றா ஊதியம்
அனேகருக்கு அதுவுமில்லை மழை
நாளில்

மழை நீர் அல்லது நதி நீர்த் தடம்
உதாரணம் அவர்க்கு
சொற்களால் கட்டமைத்த
கூடாரங்க்கள் வளாகங்கள்
அறியார் அவர் நகரங்களின்
நிரந்தர வழிப்போக்கர்

என் வீட்டு வளாகத்தில் எத்தனையோ
எறும்புத் தடங்கள் இருக்கக் கூடும்

Series Navigation