கே.பாலமுருகன் கவிதைகள்

This entry is part of 36 in the series 20090611_Issue

கே.பாலமுருகன்1. சுவர்களில் முளைத்த குழந்தைகள்

வீட்டின் சுவர்களில்
குழந்தைகளின்
படங்கள்
வெளிப்பட்டுக் கொண்டிருந்த
தருணங்களில்தான்
பிறழ்வு கொண்ட
வெயில்கள் உள்நுழைய
ஆரம்பித்தன

சுவர்களில் முளைத்த
குழந்தைகள்
சிரிப்பைக் கற்றுக்
கொண்டார்கள்

நடுநிசியில்
அவர்களின்
அபார சிரிப்பொலிகள்
வீட்டை
உருகுலைத்தன

சுவர்களின் குழந்தைகள்
கைகளை நீட்டி
எங்களைத் தொட
முயற்சித்தார்கள்

அகல்வதாக
அந்தச் சுவரின்
நெருக்கத்தைத் தொலைத்து
மகா இடைவெளியில்
வாழப் பழகினோம்

குழந்தைகளின் கண்கள்
எங்களின் நகர்விற்கேற்ப
அசைந்து கொண்டேயிருந்தன

சுவர்கள்
குழந்தைகளை
மெல்ல துறக்கத்
துவங்கின

சுவர் உதிர்
காலமென்பதால்
கால்கள் அற்றவர்களாக
ஒற்ற கைகளுடன்
குழந்தைகள்
சுவரிலிருந்து
விழுத்
தொடங்கினார்கள்

கே.பாலமுருகன்

2.
ஒளிகளைச் சேகரிக்கும்
பழக்கித்திற்கு ஆளாகியிருக்கும்
சிலரின் வீடுகளில்
பூச்சாண்டி
நுழைந்து கொண்டதாக
சொன்னார்கள்

ஒவ்வொரு ஒளிகளிலும்
சாத்தான்கள்
ஊடுருவதாக
சொல்லிக் கொண்டார்கள்

மிகவும் சாதுர்யமாக
வீட்டிலிருப்பவர்களின்
உடல் பாகங்களை
தின்று தீர்க்கத்
துவங்கின
சாத்தான்களின்
ஒளிகள்

ஒளிகள்
இருபிளவுகளாக
நகர்ந்தன

ஒன்றில்
பரமாத்மாவைப்
மற்றொன்றில்
ஜீவாத்மாவைப்ம்
சுமந்து கொண்டு

கே.பாலமுருகன்

3.
கண்ணாடி பேழைகளுக்குள்
பத்திரப்படுத்தி வைத்தேன்
சில உயிர்களையும்
உடல்களையும்

உடல்களிலிருந்து
வெளியேறிய
ஆண் விந்துகளின்
நெடி
உயிர்களுக்கான
துவக்கங்களை
மெல்ல கிளர்த்தியதும்
பேழைகளிலிருந்து
வழியத் துவங்கின
கடவுள்கள்

மூத்திர வாடைகள்
நுழையாதபடி
பெண் சிசுக்களை
வீட்டின் தரைகளில்
புதைத்து வைத்தேன்

கடவுளின் மாயம்
வழிந்தோடும் காலம்
நெருங்கியதும்
சிசுக்கள்
எழுந்து ஆரவாரமாக
தரைகளைச் சுமந்து
கொண்டு
அலையத் துவங்கின

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/

Series Navigation