மொழி

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

சிறில் அலெக்ஸ்



டெலிபோன் மணி அடித்தது. ‘நான்கு ரிங் போறதுக்குள்ளார போன எடுக்கணும்.’ என்பது சார்லஸ் வாத்தியாரின் வீட்டு சட்டம். பக்கத்து வீட்டு திண்ணையில் கதை பேசிக்கொண்டிருந்த சார்லஸ் வாத்தியார் மனைவி ஒட்டி வந்தார்.
“அலோ யாரு?”

“நான் போத்தியாரு பேரன் மிக்கேல் பேசுதேன்.”

“தம்பி சோமா(சுகமா) இருக்கியா? எங்கேந்து பேசுத?”

“சிங்கப்பூர்லேந்து.”

“லைன்ல இருக்கியா?”

“அஞ்சு நிமிசம் கழிச்சு பண்றேன். அப்பாவக் கூப்பிடுதேளா?”

“சரிம்மா.”

சார்லஸ் வாத்தியார் வீட்டு தொலைபேசியில் அவர் வீட்டாருக்கு வருவதை விட அதிகமாய் பக்கத்து வீட்டுக் காரர்களுக்குத் தான் போன் வரும். வெள்ளி காலை சவுதியிலிருந்து செவத்தியார் மருமகன், உபால்ட்டின் மகன், மேரி கிராஸ் தம்பி. சனி மாலை டில்லி கண்டோன்மெண்ட்டிலிருந்து அமிர்தத்தோட பேத்தி, மலேசியாவிலிருந்து கோமஸ் தம்பி. ஞாயிறு பூசை முடிந்து வந்ததும் குவைத்திலிருந்து ஜஸ்டஸ் ஃபெர்னாண்டோவின் ரெண்டு மகன்கள், சென்னை வில்லிவாக்கத்திலிருந்து துரைராஜ் மாணிக்கத்தோட மகள் என வாரா வாரம் வரும் தொலைபேசி அழைப்பையெல்லாம் பட்டியலிட்டு வைத்திருப்பார் சார்லஸ் வாத்தியார்.

சார்லஸ் வாத்தியாருக்கென கடைசியாக மூன்று வாரங்களுக்கு முன் டெலிபேன் டிப்பார்ட்மெண்டிலிருந்து ‘சார் எக்ஸ்சேஞ்ல ஒரு ப்ராப்ளம். லைன் சரியா இருக்காண்ணு செக் பண்றோம்’ என வந்த அழைப்புத்தான். இதற்கெல்லாம் மொத்தமாக, தொலைபேசுகிறவர்கள் ஊருக்கு வரும்போது ஃபாரின் மற்றும் வெளியூர் சரக்குகளை வாங்கிக்கொள்வார். ‘ஜேம்சு. ஊருக்கு வாரியாமே. ஒர் ரீசார்ஜபிள் டார்ச் லைட் வாங்கிட்டு வாடே. மஞ்சளா சின்னதா இருக்கது வேண்டாம். அந்த செவப்பா நீளமா இருக்கு பாத்தியா…’ வெளியூர்காரர்கள் ஊருக்கு வருவதாகச் சொன்னதும் ஊர்க்காரர்கள் முதன் முதலாகச் சொல்வது ‘வாத்தியார் வீட்டுக்கு எதாவது வாங்கியா’ என்றுதான். இந்தத் தொலை பேசி பட்டியலில் புதிதாக இடம் பெற்றிருப்பது போத்தியார் பேரன் மிக்கேல்.

போத்தியார் என அழைக்கப்படும் ஒரு உதவாக்கரை மனிதரை பொழுது போகாத நேரத்தில் ஏதோ இலவச இணைப்பாய்த்தான் கடவுள் படைத்திருப்பான் போலும். அந்த மீனவ கிராமத்தில் அலைகளுக்குத் தப்பி கடல் கடந்து கொழும்புக்குச் சென்று அவர் முன்னவர்கள் சேர்த்துவைத்திருந்த சொத்தையெல்லாம் ஒரு ஈசி சேரில் அமர்ந்து கொண்டே அழித்தவர். நாற்பத்தேழு வயதில் இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி தன் சந்ததியை தலை குனியச் செய்த புண்ணியவான்.

போத்தியார் குடித்துவிட்டு போதையில் இருக்கும் நேரத்தில் போனால் தானம் தர்மம் நிறைய கிடைக்கும். ஒரே பிரச்சனை, அவர் அப்போது உளறும் ‘இயேசுவை ஏன் சிலுவையில் அறைந்தார்கள்? யூதாஸ் ஏன் புனிதர் ஆகவில்லை, ஜென்ம பாவம் என்பது என்ன?’ போன்றவற்றின் தத்துவ விளக்கங்களை கேட்க நேரிடும். ‘எல. எந்த சாமியாரும் ஒனக்கு இதெல்லாம் சொல்லப் போறதில்ல கேட்டுக்க’.

போத்தியாரின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஏழைகளாகத்தான் வாழப் போகிறோம் எனும் உள்ளுணர்வோடோ என்னவோ நல்லவர்களாக வாழப் பழகிக்கொண்டனர். மூத்த மனைவிக்குப் பிறந்த நான்காவது மகன் ஜான் சூசை. ஸ்கூலுக்குப் போகமாட்டேன் என அடம் பிடித்து 14 வயது முதல் தன் அண்ணன்கள் இருவரோடு கடலுக்கு மீன்பிடிக்கப் போனார்.

இருபத்தேழு வயதில் கல்யாணம் நிச்சயமாகி கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னால் நடந்த ஊர்ச் சண்டையில் போதையில் ஈசி சேரில் அமர்ந்திருந்த போத்தியார் மீது எவனோ எறிந்த நாட்டு வெடி குண்டு விழ ஈசி சேரோடு ஒடிந்து விழுந்து இறந்தார். அந்தத் தகறாரில் ஜான் சூசைக்கு பார்த்திருந்த பெண்ணின் அண்ணனை போலிஸ் பிடித்துக் கொண்டு போன பின்பு கல்யாணம் தடைபட்டது.

ஏழு வருடங்களுக்குப் பின் கிழக்கே எங்கேயோ கேள்விப்படாத ஊரிலிருந்து ஒரு பெண்ணை கட்டி வைத்தார்கள். இரண்டு வருடத்தில் இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்த பின் நோய் வந்து படுத்தாள் அவள். அன்றிலிருந்து அவர் வீட்டில் இருந்த கொஞ்ச சிரிப்பொலியும் சுவர்களுக்குள்ளிருக்கும் செங்கற்களோடு அடங்கிப் போனது. உள்ளூர் நாட்டு வைத்தியரிடம் சிறிதாகத் துவங்கிய செலவுகள், கோயிலில் மெழுகுதிரிக்கும், திருவனந்தபுரம் பெரிய ஆஸ்பத்திரிக்கு காரில் போவதுக்குமாய் வளர்ந்தது. எத்தனை செலவானாலும் என்ன நோய் என்றே தெரியவில்லை. நாளாக நாளாக நோயும் வறுமையும் வலுத்தது.

‘அவங்க அப்பன் செஞ்சதுக்கெல்லாம் புள்ளைங்க அனுபவிக்குது’ என காதுபட தீர்ப்புச் சொன்னார்கள். ஜான் சூசை அதெல்லாம் பொருட்படுத்தவில்லை. தன் குடும்பத்தின் மீது அவருக்கு இருந்தது ஒரு வெறித்தனமான பாசம். ஏழாம் வகுப்பில் தன் மகன் ஃபெயிலானபோது இரவில் கடற்கரையில் உட்கார்ந்து அழுதார். அத்தனை கட்டுமஸ்தான, பெருங்கடலையே ஆட்கொண்ட மீனவர் ஒருவர் அழுவதைக் காணப் பொறுக்காததைப் போல கடலலைகள் அன்று மௌனமாயிருந்தன.

மகனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற ஒரு சாதாரண ஆசைதான் அவருக்கு இருந்தது. அது சாதாரண ஆசை என அவர் நினைத்திருந்தார்.

‘மிக்கேலு. மக்கா! அப்பாக்கு ஒரே ஒரு ஆசதான் மக்கா. நீ நல்லா படி. அப்பா உடம்புல தெம்பிருக்க வர ஒன்ன படிக்க வச்சுருவேன்.’ உடைந்த குரலில் கண்கள் பனிக்க அவர் அன்று சொன்ன அறிவுரை வாத்தியாரின் பிரம்படிகளை விட மேலாக மிக்கேலை உறுத்தியது. அம்மாவின் கட்டிலுக்கு மேலிருந்த இயேசுவின் திரு இருதய படத்திற்கு முன்னால் நின்று ‘இனிமே நல்லா படிப்பேன்’ என சத்தியம் செய்து தந்தான் மிக்கேல்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் ஐந்தாவதாகத் தேறினான் மிக்கேல். “என்னடே தொடர்ந்து படிப்பியா?” ஹெட்மாஸ்டர் கேட்டார். “எங்க சாமி பெரியப்பா கார்மல்ல படிக்க வைக்கேண்ணு சொல்லியிருக்கு.” என்றான் மிக்கேல்.

சாமி பெரியப்பா என மிக்கேல் சொன்னது ஜான் சூசையின் தூரத்து சொந்தக் காரர். கோட்டார் மறைமாவட்டத்தில் பாதிரியாரராயிருந்தார். பெயர் வெனாஞ்சியூஸ். பிஷப்பிற்கு அடுத்த வட்டத்திலிருந்த சில முக்கிய பாதிரியார்களில் அவரும் ஒருவர். அவர் தந்த கடிதத்தோடு போய் அட்மிஷன் வாங்கிக் கொண்டார் ஜான் சூசை.
ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினான் மிக்கேல்.

மிக்கேல் பள்ளி முடித்தபின் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஜான் சூசைக்கு துளியும் தெரிந்திருக்கவில்லை. “மக்கா கப்பலுக்குப் போவுததுக்கு படிக்கியா?” மகனிடம் கேட்டார் ஜான் சூசை.

“எப்பா. அம்மைக்கி ஒடம்பு சரியில்ல. கப்பலுக்கு போனா அவசரத்துக்கு ஊருக்கு வர முடியாது.”

உண்மையில் மிக்கேலுக்கு கடல் மேல் ஒரு வெறுப்பு இருந்தது. தன் தந்தை மீனவராகப் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நேரில் கண்டிருந்தான். தொழில் சரியில்லாமல் பழைய கஞ்சி, பழைய துணியுடன் கொண்டாடிய கிறிஸ்துமஸ்களும் ஊர்த்திருவிழாக்களும் அவன் மனதில் கடல் தொழில் மேல் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

கட்டுமரத்தை கடலுக்குள் தள்ளும்போது நெஞ்சில் அடிபட்டு இறந்துபோன பெரியப்பா, கடல் குளிக்கையில் அலையில் அடித்திச் செல்லப் பட்ட மாமா பையன், ஆழ்கடலில் காணாமல் போன ஊர்க்கார மீனவர்கள் என கடல் மீதான அவன் வெறுப்பு ஆண்டு தோறும் வளர்ந்தது. கடற்கரைக்குச் செல்வதையே வெறுத்தான் மிக்கேல்.

“சார் மிக்கேல அடுத்து என்ன படிக்க வைக்க?” சார்லஸ் வாத்தியாரிடம் கேட்டார் ஜான் சூசை.

“மரைன் எஞ்சினியரிங் படிக்க வைங்க. நம்ம பயலுவளுக்கு அதான் சரியா வரும். செலவும் கம்மி. ஒங்க சாமி அண்ணண்ட சொன்னா ஈசியா அட்மிஷனும் கெடைக்கும்”

“இத்தன மார்க் வாங்கிருக்க பையன் மரைனுக்கு எதுக்கு போணும்?” சாமி அண்ணன் ஃபோனில் சாடினார். “மொதல்ல போய் எண்ட்ரன்ஸ் கோச்சிங்க் கிளாஸ்ல போய் சேரச் சொல்லு அவன.”

பங்கு சாமியாரிடம் கடிதம் வாங்கிக்கொண்டு பக்கத்து ஊர் கான்வெண்டில் கன்னியாஸ்திரிகள் நடத்திய கோச்சிங் கிளாசில் சென்று படித்தான். மேரி ஜான் மகனை படிக்கவைக்க வேண்டும் எனும் கனவு சாதாரணமானதல்ல என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினார்.

ஒரு நெய்மீனை செய்தித்தாளில் பொதிந்து பிளாஸ்டிக் கவருக்குள் போட்டு எடுத்துக் கொண்டு ஃபாதர் வெனாஞ்சியூஸை நேரில் பார்க்க நாகர்கோவில் போனார். முழு நெய்மீனைப் அவரே வெட்டி மசாலா தடவி சமையலாளிடம் தருவார் ஃபாதர் வெனாஞ்சியூஸ். “நான் சாமியாரானாலும், போப்பானாலும் எனக்குள்ள இருக்க மீன்காரனப் பிரிக்க முடியாதுடே!” எனப் பெருமையாகச் சொல்வார்.

“சாமி என்ன செய்ய? எப்டி செய்ய?” ஜான் சூசை கேட்டார்.

“அவன இன்சினியரிங் அனுப்புடே ஜானு. மெட்ராஸ் காலேஜ்ல கெடச்சா நல்லாயிருக்கும் பாத்துக்க. அப்டியே காலேஜ்லேந்தே வேலைக்குப் போயிரலாம். இப்ப சாப்ட்வேர்னு ஒண்ணு வந்திருக்கு. கம்ப்யூட்டர் இருக்குல்ல அதுல வேல செய்யதுக்கு. நல்ல சம்பளம். பயவ எல்லாம் அமெரிக்கா கிமேரிக்காணு பறக்கானுவ. நம்ம பயலும் போவான். நீ பாத்துக்க.”

“எவ்ளோ செலவாவும்ணு நெனைக்கிய?”

“செலவு ஆவும். நான் பிஷப் ஹவுஸ்ல இருக்கும்போது எத்ன பேருக்கு என்னெல்லாமோ செஞ்சிருக்கேன். இப்பவும் பாப்போம். நீ என்ன வேணும்னா செய்ய துணிவா இரு. ஒரு அஞ்சு வருசம் பல்லக் கடிச்சுட்டு எல்லாஞ் செய். நான் வருசம் நாலாயுரூவா என் கையிலேந்து தாறேன். நம்ம டையசிஸ்லேந்து வருசா வருசம் பசங்களுக்கு படிக்க உதவி செய்தாங்க பாத்துக்க. நான் ஒரு லெட்டர் தாறேன். பிஷப் ஹவுஸ் போயி இப்டி பையன் ப்ளஸ் டூ படிச்சிருக்கான் காலேஜுல சேக்க உதவி வேணும்னு சொல்லு. ஒரு அப்ளிகேசன் குடுப்பாங்க எடுத்து, கொண்டு போய் ஒங்க பங்கு சாமியார்ட்ட ஒரு கையெழுத்து வாங்கி திரும்ப கொண்டு குடுக்கணும். நான் பெறவு எஜுக்கேஷன் செண்டருக்கு ஃபோன் போட்டு சொல்லிடுதேன் என்னா?”

லெட்டரை எடுத்துக்கொண்டு அடுத்த திங்கட் கிழமை காலையிலேயே கிளம்பி ப்ஷப் ஹவுஸ் வந்தார் ஜான் சூசை. “வெனாஞ்சியூஸ் ஃபாதர் தம்பியா நீங்க?.” எஜுகேஷன் செண்டர் தலமை பாத்ரியார் கேட்டார். “என் சித்தி பையன்.”
“ம். உங்க ஊர்லேந்து ஏற்கனவே ஒரு பிள்ளைக்கு உதவி குடுக்கதாச் சொல்லியாச்சே. இப்ப போன வருசத்துலேந்து ஒரு பங்குக்கு ஒரு பிள்ளைக்குத்தான் உதவி செய்றதுண்ணு முடிவு.”

“எங்க ஊர்ல யாரு?”

“அந்த அந்தோனியார் குருசடிக்குப் பின்னால நாலாவது வீடு.”

“அங்க பொம்பளப் புள்ளதானே உண்டு?”

“ஆமா. அந்தப் புள்ள நர்சிங்க் படிக்கதுக்கு உதவி செய்யப் போறோம்.”

‘பொம்பளப்புள்ள படிச்சி என்ன செய்யப்போறா?’ மனதுக்குள் நினைத்தார் ஜான் சூசை.

“ஃபாதர்.. எங்க அப்பா கோயிலுக்கு…”

“தெரியும். நீங்க ஊர்ல பணக்காரராயிருந்தவங்க. கோயிலுக்கு எல்லாம் தந்திருக்கீங்க ஆனா இந்த புள்ளைக்கு அப்பா இல்ல தெரியும்ல?”

“அவன்.. முத்தையா குடிச்சுட்டு வரும்போது கார்ல அடிபட்டு செத்து போனான்.”

“எப்படியோ? அந்தக் குடும்பத்துக்கு இந்தப் பொண்ணு படிச்சாத்தான் சாப்பாடுண்ணு இருக்கு. உங்களுக்கு வல இருக்கு, வீடு இருக்கு…”

‘ஆனி ஆடி மாசத்துல காத்து கொஞ்சம் சாஞ்சடிச்சா இடிஞ்சு போற வீடு. அதுக்கு ஒரு மதிப்பா?’ மனதுக்குள் பொரிந்தார்.

“சாமி எங்க ஊர் பசங்க இத்தன மார்க் வாங்குறது பெரிசு. இப்டி ஒரு பையன கடலுக்குப் போச் சொன்னா அது பாவமில்லையா. ”

“பாத்தேன். இங்க்லீஷ் தவிர எல்லாத்துலேயும் நல்ல மார்க் வாங்கியிருக்கான். என்ன செய்ய இங்க சட்டத்த திருத்திட்டாங்க. கடலுக்குப் போறது பாவமான தொழிலில்லியே. நீங்களே இப்டி சொல்லக்கூடாது.”

விரக்தியுடன் வெளியில் வந்து சாமி அண்ணனுக்கு போன் போட்டார். “சாமி வெளிய போயிருக்காரு. ஒரு ஏழு மணிக்கு வருவாரு.” என குசினிக்காரர்(சாமியாரின் சமையலாள்) சொன்னார். பஸ் ஏறி நேரே போய் பார்த்துவிட முடிவு செய்தார் ஜான்.

“நீ ஏண்டே இந்த நேரத்துல வந்த? நீ வீட்டுக்குப் போ நான் பாக்குதேன்.” வெனாஞ்சியூஸ் தந்த நம்பிக்கை போதாமல் சந்தேகத்தோடே வெளியே வந்தார். பாக்கெட்டை தடவி பார்த்தார் 25 பைசா மட்டும் இருந்தது. திரும்பி உள்ளே போனார்.

“சாமி பஸ்ஸுக்கு நாலணா கொறையுது.” எப்படியும் சாமி 10 ரூபாயாவது தருவார் என நினைத்து பொய் சொன்னார்.

“இதான் சொன்னேன். நீ ஒரு போனப் போட்டிருந்தா போதுமேடே.” பத்து ரூபாய் கிடைத்தது.

அன்று இரவு தூக்கத்தில் நீண்ட கொடுங்கனவொன்று அவரை வாட்டியது. ஒரு நிலவற்ற இரவில் கட்டுமரம் ஒன்றில் கொந்தளிக்கும் கடலில் அவர் மட்டும் தனியே சென்று கொண்டிருந்தார். துடுப்புகளெதுவுமின்று வெறும் கையைக் கொண்டே கட்டுமரத்தை செலுத்திக்கொண்டிருந்தார். மிகக் கஷ்டப் பட்டு வலையை கடலில் இறக்குகினார். அவர் இழுக்க முடியாதபடிக்கு மீன் வலையை நிரப்பிக் கொள்கிறது. கஷ்டப்பட்டு இழுக்கிறார். முடியவில்லை. கடல் கொந்தளிப்பு மரத்தை அலைக்களிக்கிறது. மிகவும் முயன்று வலையை இழுத்து மரத்தில் வைக்கிறார். இழுத்து வைத்த வலையை திரும்பிப் பார்க்கிறார் அதிலிருந்த மீன்கள் அனைத்துக்கும் தன் மகன் மிக்கேலின் முகம். மீன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. மிக்கேல் துடித்துக் கொண்டிருக்கிறான். ‘ஓ’ வென கடலின் இரைச்சல் இவரின் ஓலக் குரலை மௌனிக்கிறது அவசர அவசரமாய் வலையை மீண்டும் கடலுக்குள் இறக்கி மீன்களை விடுவிக்க முயல்கிறார். இயலவில்லை. ‘மிக்கேலு மிக்கேலு’ என கத்திக் கொண்டே விழித்தார்.

அடுத்த நாள் சாமி அண்ணன் ஃபோன் செய்தார்.
“ஜான். அந்த புள்ள யாருடே?”

“அந்தோனியார் தெரு முத்தையாவோட மக சாமி.”

“அவளுக்கு ஒரு உதவி கெடைக்கது நாம கெடுக்கக் கூடாது. நீ ஒண்ணு பண்ணு நம்ம சாதி சங்கத்துல ஒரு பையனுக்கு வருசா வருசம் உதவி செய்தாவல்லா அங்க ஒரு அப்ளிகேஷனப் போட்டு வையி. நான் பெரியவர்ட்ட(பிஷப்) மிக்கேலு பத்தி பேசிப் பாக்கேன். ஒனக்கு யாரயெல்லாம் தெரியுமோ அவங்கட்டெல்லாம் போயி கேழு. எதையும் யோசிக்காத. ஜூடு வாத்தியார் பையன் நம்ம பசங்களுக்கு உதவி செய்றானாம் அவனையும் ஒரு எட்டு போயி பாரு. ஒங்க டாக்டர் இருக்கார்ல அவர்கிட்ட போ. கடியபட்டணம் கான்வெண்ட்ல மார்கிரெட்னு ஒரு மதர் இருக்காங்க அவங்க கிட்ட போ.” பல இடங்களுக்குப் போகச் சொல்லிவிட்டு போனைத் துண்டித்தார்.

ஜான் சூசை தொழிலை முடக்கிவிட்டு ஒவ்வொரு இடமாக அலைந்தார். அவர் குடும்ப டாக்டர் ஜீவன் தாஸ் சி.எஸ்.ஐ கிறீத்துவர். மிக்கேலுடன் போய் அவரைப் பார்த்தார். “சூசை இவன கம்பௌண்டருக்கு படிக்க வையுங்களேன். கவர்மெண்ட்ல ஒரு வேலைய பாத்துட்டுப் போறான். நல்லா படிக்கிற பையன். அட்மிஷன் ஈசியா வாங்கலாம்.” இன்னும் பல வாய்ப்புக்கள் குறித்து பெரிய வியாக்கியானத்துக்குப் பின் “என் தங்கச்சி பொண்ணுக்கு நான் வருசா வருசம் காசு அனுப்புறேன். அதனால இப்ப என்னால எதுவும் முடியாது. நம்ம கோயில் பாஸ்டருக்கு ஒரு லெட்டர் தாறேன் போய் பாருங்க. ஆனா அவங்க சி.எஸ்.ஐ பசங்களுக்குத்தான் பொதுவா செய்வாங்க. பாப்போம்”. என்றார்.

வெளியில் வந்ததும் மிக்கேல் நினைத்தான் ‘காசு வாங்காம டாக்டர் செய்த முதல் கன்சல்டேஷன் இதுதான்’.

ஜூட் வாத்தியார் பையன் வருடம் ஆயிரம் தர முன்வந்தார். ஜூட் வாத்தியார் பணக்காரர் ஆனது ஒரு இந்தக் கதையை விட பெரிய கதை.

ஜாதி சங்கத்தில் அப்ளிகேஷன் போட்டதற்கு பதில் வந்திருந்தது. வரப் போகிற சங்க விழாவில் வந்து ஐயாயிரம் ரூபாயை வாங்கிக் கொள்ள வேண்டும் எனக் கடிதம் சொன்னது. விழாவிற்கு ஜான் சூசையின் சொந்தக் காரர்களில் இருபது பேராவது வந்திருப்பார்கள். முதன் முதலாய் சாதி சங்கம் பக்கம் வந்திருக்கும் ஜான் சூசையை மேலும் கீழும் பார்த்தனர். “என்ன ஜான்? திடீர்னு சாதிப் பாசம்?” எல்லொரிடமும் தன் நிலையை எடுத்துரைத்தார். எல்லோரும் ஏதேதோ அறிவுரை சொல்லிவிட்டு இவரைத் தெரியாததுபோல் விழாக் கூட்டத்தில் கலைந்தனர்.

காசை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் ஜான் சூசை. “அப்பா மெட்ராஸ் காலேஜ்ல அட்மிஷன் கெடச்சிருக்கு.” மிக்கேல் கையில் ஏதோ கவரை வைத்துக் காட்டி சொன்னான்.

காலேஜ் அட்மிஷன் துவங்கி, ஹாஸ்டல், லோக்கல் கார்டியன், விடுமுறையில் வேலைக்கு, என மொத்தம் 17 சிபாரிசுக் கடிதங்களுடனும். அதுவரை அங்கே இங்கே நூறு ஆயிரம் எனக் கிடைத்த உதவிக் காசும், வலைகளை வித்தக் காசு ஏழாயிரமும் சேர்த்து எடுத்துக்கொண்டு சார்லஸ் வாத்தியார் சகிதம் சென்னை வந்து சேர்ந்தார்.

ஐந்து நாள் குனிதல், வேண்டுதல், கண்ணீருடன் நன்றி சொல்லுதல் எனும் பழக்கப்பட்ட செய்கைகளை அங்காங்கே அரங்கேற்றிவிட்டபின் ஹாஸ்டல் பீஸ் இல்லாமல் படிக்க ஒரு சீட் வாங்கி தன் வாழ்க்கையின் மொத்த பலனையும் பெற்றுவிட்ட மிதப்பில் ஊர் வந்து சேர்ந்தார் ஜான் சூசை.

திரும்பி வரும்போது சார்லஸ் வாத்தியார் சொன்னார். “ஜானு. ஒன்னப் பாத்தா எங்கப்பா நியாபகந்தாண்டே வருது. நான் வாத்தியாராவணும்னு ஒத்தக் கால்ல நின்னாரு.”

ஒரு வருடம் கழித்து சாமி அண்ணன் ஃபோன் செய்தார் “டேய் ஜான்.” ஃபாதர் வெனாஞ்சியூஸ் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது. “இந்த வருசம் ஏழு பங்குல மேல் படிப்புக்கு ஆள் இல்ல அதனால மிக்கேலுக்கு உதவி செய்யப் போறாங்க.”

நான்கு வருடங்களுக்குப் பின் வாழ்வாதாரமான வலைகளையும், கொஞ்சம் மிச்சமிருந்த தன்மானத்தையும் ஒரு பக்கத் தாளில் அச்சடித்த பட்டமாக எடுத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தான் மிக்கேல். ஜான் சூசை வீட்டில் மீண்டும் புன்னகைகள் மலரந்தன. தன் வாழ்நாள் முழுவதும் அச்சிடப் பட்டிருப்பதைப் போல அந்த தற்காலிக பட்டத்தை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தார் ஜான் சூசை.

“மெட்ராஸ்ல இன்னும் ஆறு மாசம் தங்குனாத்தான் வேலை கெடைக்கும்”. எனத் தந்தையிடம் சொல்லி கொஞ்சம் காசையும் வழக்கமான சில பரிந்துரை கடிதங்களையும் வாங்கிக்கொண்டு மீண்டும் சென்னை சென்றான் மிக்கேல்.

இஞ்சினியரிங் படித்ததும் வேலை கிடைக்கும் எனச் சொன்ன முட்டாளைத் தேடிக் கொல்ல வேண்டும் போலிருந்தது மிக்கேலுக்கு. அலையாய் அலைந்தும் எந்த சாஃப்ட்வேர் கம்பெனியிலும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. ஒரு மிகச்சிறிய மென்பொருள் பயிற்சி நிறுவனத்தில் சொற்ப காசுக்கு பயிற்சியாளர் வேலை கிடைத்தது. ஜான் சூசை முழு விபரமும் தெரியாமல் மகிழ்ச்சியடைந்தார். ‘பயலுக்கு வேல கெடச்சாச்சு.’

ரெம்ப நாள் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. ஒரு நாள் பெட்டி படுக்கையோடு வீடு வந்து நின்றான் மிக்கேல். “மக்கா. என்னாச்சு?”

“அப்பா நாலாயிர ரூபா சம்பளத்துக்கு எத்தன நாள் வேல பாக்கது? எல்லா கம்பெனியிலயும் எனக்கு இங்கிலீஷ் சரியா பேச வரலைன்னு வேல கொடுக்க மாட்டாங்குறாங்க. நார்கோயில் ஸ்கூட்டி கம்பெனில கணக்கெழுதுனா இந்த காசு பாக்கலாம்ல. ” தந்தையின் கனவுகளை சிதைத்த குற்ற உணர்வோடும், யாரெல்லாமோ தனக்குச் செய்த துரோகத்தின் விரக்தியோடும் பேசினான்.

“மக்கா. இவ்வளவு படிச்சிருக்க ஆனா இங்கிலீஸ் பேச வரலேண்ணு…” தலையில் அடித்துக்கொண்டார் ஜான் சூசை.

மூன்று மாதங்கள் ஊரிலேயே இருந்தான். தினமும் மாலை கடற்கரைக்குச் சென்றான். தூரத்திலிருந்து பார்க்கையில் அவன் கடலோடு பேசிக் கொண்டிருப்பதாய் தெரியும். ஜூட் வாத்தியார் பையன் உதவியோடு கப்பலுக்கு வேலைக்குச் சென்றான். நன்றாகத்தான் சம்பாதிக்கிறான். இப்ப சிங்கப்பூர்ல கப்பலிலிருந்து அப்பாவுக்கு ஃபோன் பண்ணுகிறான்.


cyril.alex@gmail.com

Series Navigation

சிறில் அலெக்ஸ்

சிறில் அலெக்ஸ்

மொழி

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

பாமினி


அறிஞனோ மூடனோ
ஏழை பணக்காரனோ
இந்துவோ முஸ்லிமோ
எல்லோரதும் பொது மொழியாய்
உடலில் அதிர்கிறது காமம்
சமிக்ஞையாய் அது
ஒன்றில் ஒன்று பசியாற
உடல்களைச் சேர்த்து

மூங்கில் இலைக் காற்றாய் சலசலக்கிறது
உடலை மனசு மிஞ்சுகையில் மட்டுமே
காமம் மூங்கிலுள் காற்றாகி
காதல் கவிதை இசைக்கிறது


pamini.norway@gmail.com

Series Navigation

பாமினி

பாமினி

மொழி

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

பவளமணி பிரகாசம்


பல்கலை கழகங்கள் பல கட்டி
பல் மொழிகள் செம்மையாய்
வளர்கின்ற வழக்கமுண்டு-
இலக்கணங்கள் ஏதுமின்றி
இதிகாச சுவை மிஞ்சி
ஈடின்றி இணையின்றி
எதுகை மோனை துணையின்றி
ஏதுவான இணைப்பாவது
எக்காலமும் உவப்பானது
அவனியெங்கும் அறிந்தது
எம்மொழி என்றறிவீரோ

கன்னியரின் கன்னல் மொழியல்ல
காதலின் கள்ளொக்கும் மொழியல்ல
குழலை விஞ்சும் மழலை பேசும்
மணியான மொழியே அது
ஒலிகளின் கூட்டே வார்த்தையாய்
பண்டங்களின் பெயர்கள் அதிலே
பக்குவமாய் அவிந்திருக்க
ஆண்பால் பெண்பால் மயக்கமுற
வல்லினமும் மெல்லினமும் மருவிட
இடையினத்தின் இடுக்கிலே
பாதிப்பெயர் மட்டும் நீட்டி
ஒயிலானதோர் உச்சரிப்பைக் கூட்டி
வண்டொத்த கண்களால்
சுட்டுகின்ற சிறு விரலால்
காட்டிய பொருளை தெரியாமல்
பொருள் புரியாமல் போனதுண்டோ
அகராதி அறியாத வார்த்தைகள்
அழகான ஒலி சேர்க்கைகள்
அத்தனையும் தேன்கனிகள்
பச்சைக்கிளியாய் ஒப்புவிக்கும்
பல சொல்லும் அதிசயங்கள்
சொல்லிக் கொடுத்த சொற்களன்றி
சொல்லித்தராத பல பாடங்கள்
சிறு செவிக்குள்ளே செல்வதுண்டு
சித்திரம் போலவே செப்புவதுண்டு
சிதைந்து போன வார்த்தைகள்
இத்தனை இனிப்பானவையா
விசித்திர ஒலிச்சேர்க்கைகளில்
வானவில்லின் ஒளி சிந்துது
கோடி இன்பம் ஒளிந்திருக்கும்
குழந்தை மொழியினை கேட்டிட
கொடுத்து வைத்திருக்க வேண்டுமே

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

மொழி

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

‘புரட்சி கவிக்கோ ‘ தமிழ்த்தலை சாத்தனார்


மொழி
கண் என்று
சொல்ல வேண்டாம்
குருடர்களைப்
பார்த்ததில்லை என்றாகிவிடும்

மொழி
காதில் பாய்கிற தேனென்று
சொல்ல வேண்டாம்
செவிடர்களைப்
பார்த்ததில்லை என்றாகிவிடும்

மொழி
வாயில் ஊறுகிற அமுதென்று
சொல்ல வேண்டாம்
ஊமைகளைப்
பார்த்ததில்லை என்றாகிவிடும்

மொழி
இதயமென்று
சொல்ல வேண்டாம்
மாற்று இதயங்கள்
மாட்டுகின்ற விஞ்ஞானம்
தெரியவில்லை என்றாகிவிடும்

மொழி
உயிரென்று
சொல்ல வேண்டாம்
அற்பத்தில் போய்விடுகிற
ஆபத்தை அறியவில்லை
என்றாகிவிடும்

அறுந்தால்
தைத்துக் கொள்ளலாம்
உதவாவிட்டால்
வேறு வாங்கிக் கொள்ளலாம்
இல்லாவிட்டாலும்
இழப்பதிகமின்றி வாழலாம்
அதனால் மொழி
செருப்பென்று சொல்லுவோம்

Series Navigation

'புரட்சி கவிக்கோ ' தமிழ்த்தலை சாத்தனார்

'புரட்சி கவிக்கோ ' தமிழ்த்தலை சாத்தனார்