வேடம்

This entry is part of 61 in the series 20040805_Issue

வீரமணி இளங்கோவன்


ஒவ்வொரு முறையும்…
மிகுந்த பிரயத்தனப்பட்டு
கொஞ்சம் கொஞ்சமாய் களையமுற்படுகிறேன்
என் அரிதாரத்தை!

பொழுதுமுழுவதிற்கும்
அலங்காரங்களுக்கு வேலையிருப்பினும்
சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி
சற்று கழற்றிவைக்க முற்படுகிறேன்!

அந்த நேரங்களின்…
என் சுயத்தோடு நான் சுகித்திருக்கும்,
அந்தச் சொற்ப மணித்துளிகளின்…
சுகம் வடியும் முன்னே…

களைய களைய நிரப்பப்படும் குப்பைத்தொட்டியாய்
கதாபாத்திரங்கள் என்மீது திணிக்கப்படுகின்றன!

காட்சிகளுக்கிடையேயான திரைச்சீலையாய்
நித்தமும் வந்துவந்து போகின்றன
என் இரவுகள்!

ஏதாவது ஒரு வேடத்தை ஏற்றுக்கொண்டு
நானும் நடித்துக்கொண்டேயிருக்கிறேன்
தினந்தோறும்!!!

வீரமணி இளங்கோவன்

Series Navigation