பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

மாலதி


நேற்று தான் மரித்துப் போனேன் நான்.
இறப்பின் மிச்சங்களைத் தேடி
நேற்றைய நாள் கழிந்து போயிற்று.
அவை கொலையின் மிச்சங்களும்
என்பதால்.

உயிர்த்திருக்க ஆசையில்லாமல்
யாருமில்லை.
மரித்த இரவின் நாழிகைகளில்
உணர்வின் உடலுள் பதுங்கி
குமைந்து வெந்து அரற்றினேன்.
பிசாசின் குரலினிமை
யாரையும் கவர்வதில்லை.
பிசாசின் வார்த்தைகளைத்
திருப்பிச் சொல்லும்போது
எல்லாரும்
பிசாசாகி விடுகிறார்கள்.
பிசாசாக வேண்டியவர்கள்.
ஏனெனில்
பிசாசின் மீது அவர்களுக்கு
அன்பில்லை.
மதிப்பில்லை.
பயம் கூடப் போலி.
நிறைய பிசாசுகள் யாரையும்
அடிப்பதில்லை.
அலட்சியப்படுத்தி அவற்றை
அடிப்பவர்கள் பிறர்.
அதனால் எழுதத் தீர்மானித்தேன்
நேற்றுத் தான் மரித்துப் போன நான்.

காலம் வரையறை அற்றது
ஜீவனும் இடமும் சுற்றுவது
தடம் பதிப்பது வெறும் சிந்தனையே.
சிந்தனை பால் சார்பில்.
வேதம் பெளருஷம்
சஙகம் புருஷ சிந்தனை
அறம் ஒற்றைப் பெளருஷம்
பக்தியும் புருடம்
மறுமலர்ச்சி இயக்கங்களும்
ஒற்றைப்பால் ஆவேசம்
இடது புறம் முடக்கியபடி
எல்லாம் வளர்ந்தன.

ஊழிகளும் பிரளயங்களும்
நேரவேயில்லை.
பஞ்ச உதிர மடுக்களும்
குருச்சேத்திரமும்
அழிவுகளும் முடிவுகளும்
சிந்தனைத் தேக்கங்கள்.
சிந்தனைச் செயலிழப்புகளை
யுகசந்திகள் என்றோம்.
முடிவில்லாதவற்றுக்கு
ஆரம்பங்களுமில்லை.
எல்லாமே எப்போதுமே
இருந்தபடி இருந்தனவே!
கற்பிதங்கள் கற்பனைகள்
கதைகள் வளர்ந்தனவே!
கதைகளின் நோக்கமெல்லாம்
காலாடிகள் காலாட்டியபடி
காலம் கழிப்பதுதான்.
மானமும் துக்கமும் க்ரோதமும்போரும்
துருத்திய குறியில்லாதவர்கள் தருவித்தனர்.
உள்ளடங்கியவர்களின் வேகங்கள்
வீச்சு மிகுந்தவை.காரணிகளாயிருந்தும் எல்லாவற்றிலும் காணப்படாதவர்களாயிருந்தார்கள்.
நாளடைவில் காணாமலே பொனார்கள்.
வண்ணத்தின் மறுபுறம் பின்னம்.
அழகு,உபயோகம்,அழிவு,ஆக்கிரமிப்பு.
பூக்கள் மலர்ந்தன,அழிந்தன.

சீதை அஹல்யை ஊர்மிளையும்
ராதா தேவகி யசோதையும்
திரெளபதி சிகண்டியும்
தமயந்தி சந்திரமதி அரசிளம் குமரிகளும்
பிரிவு மாயை இழப்பு துரோகம் அவமதிப்பு
அரசியல் துயரங்களின் பதிவுகள்.
கூந்தலால் தைலம் பூசப்படுவர் நாயகர்.
அனைத்தையும் அனுபவித்து
துறவு தூய்மை விரக்தி கவி பாடுவர்
சித்தார்த்தர் ஆதி உத்தமர்கள்.
சோதனைகளில் வேதனைப் படுத்திய
காந்திகள்.
யாருக்குமில்லாத பொறுப்பு
இவள்களுக்கு.
இதைக் காப்பாற்று அதைக்காப்பாற்று.
தேசம் இதோ,உனது புதல்வர்களைக்கொடு
இதற்கு.நேசம் அதோ உனது
போகும் காற்றில் மிதந்து.அட!அட!
விடு! உன் ஆச்சாரம் என்னாவது!
தெருமானம் ஊர் மானம் உலகத்து
மானம் எல்லாம் நீ நஷ்டப்பட்டால்
மீளும்.
கலாச்சாரம் வாழ வேண்டுமே!

கற்பு என்றொரு வார்த்தை பண்டத்தை
மூடி வைத்து ஒற்றை நாய்க்கு வைக்கும் பலி.
அது கொண்டு தரும் மலத்தை உண்டு.
கற்பித பாதிவ்ரதம் செளகர்யம்.
காதல் அறியாமையில் கடமைக்கென
இரட்டை வேடம், பொய்மை.
சரசவாணியும் சென்னம்மாவும்
நூர்ஜஹானும் கூடப் பிரகாசித்தது
புருஷத்துணைகளால்.
மனரோகிகளாய் வாழ்ந்த புருஷத்துணைகள்.
மீராவும் ஆண்டாளும் கவிஞர்களானது
ஆணைப் பிரவாகித்து.

மண்ணின் துகள்களெல்லாம்
நடந்த வரலாறுகள்.
புதைக்கப்பட்டவை.
ஒடுக்கப்பட்டவை.
மறுவிதமாய் புனையப்பட்டவை.

மூங்கில் பாலங்களும்
இற்றபோது
காளிங்கனின் மடுக்கள்
விழுங்கியபோது
வசந்தங்கள் குலைந்து
வர்ணங்கள் இரத்தமாகிப்
பெருகியபோது
ஆசைகள் உயிர்த்து உயிர்த்து
செத்தன.

தேசத்தின் நதிகள்
கண்ணீராலானவை.
வறண்டு தான்
நவீனத்தில்
மணலோடைகளாய்
தொட்டனைத்து மட்டுமே
சீறுவன ஆயின
குழிமுயல்கள் போல
குடும்பங்களில் பதுங்கும் ஜீவிகள்
வேட்டையாடப்படவென்றே
வளரும் விலங்குகள்.

[தொடரும்]

malathi_n@sify.com

Series Navigation

மாலதி

மாலதி