குறிப்பேட்டுப் பதிவுகள் – 6 !

This entry is part of 45 in the series 20071227_Issue

வ.ந.கிரிதரன்


[அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. … அன்றைய என் வயதுக்குரிய ஆவேசமும், சீற்றமும் படைப்புகள் முழுவதும் இழையோடுகின்றதை அறிய முடிகின்றது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். காதல், அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென விரியும் பதிவுகளிவை… ]

நானும் என் எழுத்தும்!

‘நான் ஏன் எழுதுகிறேன்?’ நான் என்னையே இக்கேள்வியினைக் கேட்டுக்கொள்கிறேன். நான் என்னையே இக்கேள்வியினைக் கேட்டுக் கொள்வதற்கு , ‘இன்றைய எழுத்தாளன்’ ஒருவனைப் போன்று , பத்திரிகைகளில் பத்தி பத்தியாக எழுதிக் குவித்த தகுதியிருக்கின்றதாவென்று கேட்காதீர்கள்? அத்தகைய தகுதி எனக்கில்லையே என்ற ஆதங்கமிருக்கிறதாவென்றால்… ஆம். நிச்சயமாக இருக்கிறதுதான். குப்பைகளின்மேல் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்குள்ள ஆர்வத்தையிட்டெழுந்த அனுதாபத்தால் விளைந்த ஆதங்கமே தவிர வேறல்ல. சரி விடயத்திற்கு வருவோம். நான் ஏன் எழுதுகிறேன்? நிச்சயமாக எனது மனத்திருப்திக்காக மட்டும் எழுதுபவனல்லன். பின், நிச்சயமாக என் எழுத்து மானுட சமுதாயத்திற்கு மிகுந்த பயனைத் தந்துவிடவேண்டுமென்ற பேராசையினால் விளைந்த உந்துதலின் விளைவாக, சீர்கெட்டுக் கிடக்கும் சமுதாயத்தில் நிலவிடும் வர்க்கவித்தியாசங்களால் நிலைகுலைந்து நிற்கும் அதன் இயல்பினை மாற்றியமைத்திட வேண்டுமென்ற பேரார்வத்தினால் எழுதுகின்றேன். ஏதோ பெரிய தலைவனாக எண்ணிக்கொண்டு பேசுகின்றானேயென எண்ணுகின்றீர்களா? மானுட வர்க்கத்தின் நன்மைக்காக எழுதிகின்றானென்கின்றானே , இவனது எழுத்து அவர்களைச் சென்றடைகின்றதாவென்று வினவுகின்றீர்களா? கவலையில்லை. தற்போதைய நிலையில் என் எழுத்துகள் மக்கள் கூட்டத்தினைச் சென்றடையவில்லை என்பது உண்மைதான். அதற்காக இவன் மனந்தளரவுமில்லை; மதி கெடவுமில்லை. தகுந்த வேளை வரும்போது , நிச்சயமாக என் ஒவ்வொரு சொல்லும், அதன் அர்த்தமும் மானுட சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் சென்றடைந்திடுமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் (மானுட சமுதாய வரலாறு ஒரு பரிணாம வளர்ச்சிப் போக்கு என்ற நம்பிக்கை காரணமாக) எனக்கு உண்டு. அந்த நம்பிக்கை இருப்பதால் மட்டுமே நான் எழுதுகிறேன்; எழுதுகிறேன்; எழுதுகிறேன்.

சரி. மானுட சமுதாயத்திற்காக எழுதுகின்றேன் என்றால்… காலக்குமிழிகளிலொன்றான மறைந்துவிடுமிந்த அற்ப வாழ்வுக்காக , இந்த அற்ப வாழ்வுடைய மானுட வர்க்கத்திற்காக எழுதுவதால் எனக்கென்ன நன்மை? ஒருவேளை நீ உயிருடனிருக்கையில் உன்னைப் புறக்கணித்து விடுகின்ற இச்சமுதாயம் நீ இறந்தபின் உன்னை அங்கீகரிப்பதால் உனக்கென்ன நன்மை? இவ்வாறு சிலர் கேட்கலாம்; கேட்பார்கள். இவர்களிற்கெல்லாம் நான் கூறுகின்ற பதில்: நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இங்குதான் பகவத்கீதையில் எனக்குப் பிடித்த கருத்து நினைவிற்கு வருகின்றது. ‘கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே.’ என்னைப் பொறுத்தவரையில் மனிதரொருவருக்கு இரு முக்கிய கடமைகளுண்டு; ஒரு தாயின் வயிற்றில் பிறந்ததற்காக அவளுக்குச் செய்யவேண்டிய கடமை ஒரு புறமிருக்க , மறுபுறம் அவர் வாழும் சமுதாயத்திற்காக அவர் ஆற்றவேண்டிய கடமை காத்து நிற்கின்றது. இந்தக் கடமைகளையெல்லாம் அவர் வெறுமனே ‘தன் தாய், தன் இனம், தன் குடும்பம்’ என்று சுயநலரீதியில் நின்று செய்வதால் வருவனவே சகல பிரச்சினைகளும், மோதல்களும். சமுதாயம், குடும்பம் எல்லாம் இப்பிரபஞ்சத்தின் ஒரு துளி. ஆக இப் பிரபஞ்சத்து உண்மைகளை உய்த்துணர்வதன் மூலம் சமுதாயம், குடும்பம் என்பவற்றைத் தகுந்த வழியில் காப்பதே மனிதரது இலட்சியமாயிருக்க வேண்டும். சமுதாயத்திற்காகக் குடும்பத்தையோ அல்லது குடும்பத்திற்காகச் சமுதாயத்தையோ துறப்பதோ அல்லது ஒதுக்கி விடுவதோ சரியான செயலல்ல. இரண்டிற்குமுரிய கடமைகளையும் பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதிலேயே ஆழ்ந்ததொரு திருப்தியிருக்கும். அப்படிச் செய்கையில், எதிர்பாராத இக்கட்டுகள் நேர்கையில், அதாவது குடும்பத்திற்குக் கடமையாற்ற முடியாததொரு நிலையேற்படுமாயின் அதனை ஏற்கத் தயாராகயிருக்க வேண்டும். ஆக, நான் இத்தகையதொரு நிலையில் நின்றுகொண்டுதான் செயலாற்றுகிறேன். இவ்விரு கடமைகளையுமே நான் எனது இரு கடமைகளாகக் கருதுகின்றேன். இவற்றை எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் செய்வதிலேயே ஒருவித பயனை அல்லது திருப்தியினை அடைகின்றேன். என்னுடைய ஆரம்பகாலக் கவிதையொன்றில் நான் பின்வருமாறு எழுதியிருக்கிறேன்:

‘நாற்றமெடுக்கு மிவ்வுடல் ஒருநாள்
நீற்றுப் போவது நிச்சயமே! அதற்குள்
நன்றினைச் செய்து மடிவோம்; அதனையும்
இன்றே செய்து முடிப்போம்.
விழலிற்கிறைத்த நீராய், வாழ்க்கை
அழுகிய தேன் சுவைக் கனியாய்ப்
பாழ்பட்டுப் போவதோடா!
பயனற்றுக் கிடப்பதோடா!’

என்னைப் பொறுத்தவரையில் மேலுள்ள வரிகளேயென்னை, வாழ்க்கையில் ஒரு பயனை ஏற்படுத்தும்பொருட்டு, என் எழுத்தினை மானுட சமுதாயத்திற்காக வழிகாட்டியாக மாற்றும்படி ஊக்குவித்தன; ஊக்குவிக்கின்றன. நான் சமுதாயத்திற்காக எழுதும் அதே சமயம், நானும் அச்சமுதாயத்தின ஓர் உறுப்பினரென்பதை யாருமே மறந்துவிட வேண்டாம். எனக்கென்று, என் மனதிற்கேயுரிய இயல்புகளென்று சில இயல்புகள், சில எதிர்பார்ப்புகள், சில எண்ணங்கள் உண்டு என்பதை யாரும் ஒதுக்கித்தள்ளி விட வேண்டாம். அவற்றிலிருந்து ஒரு மனிதராலும் விடுபடுவதென்பது முடியாததொன்று. அந்த வகையில் சிற்சில வேளைகளில் என் எழுத்துகள் என் தனிப்பட்ட எண்ண அல்லது வேட்கைகளின் வெளிப்பாடாகவுமிருக்கலாம். அதனை யாருமே குறை கூறிட முடியாது. குறை கூறுபவர் என்னைப் பொறுத்தவரையில் ஒருபக்கச் சார்பான அறிவினைப் பெற்றவர்களிலொருவரே. சரி. இறுதியாக என் நோக்கத்தினைப் பின்வருமாறு கூறிடலாம். எனது நோக்கம் எனது எழுத்துகளின் மூலம் இம்மானுட சமுதாயத்திற்குச் சிந்தனைத் தெளிவினை ஏற்படுத்துவதேயாகும். மானுட சமுதாயத்தினை மட்டுமின்றி, சகல ஜீவராசிகளையும், இவ்வழகிய நீலவண்ணக் கோளினையும், இதுபோன்ற ஏனைய பல கிரகங்களையும், வெற்றிடங்கள் சூழ்ந்து கிடக்கும் பால்வெளிகளையும், ஆங்கு தனிமைகளில் தவமியற்றும் நட்சத்திரக் கூட்டங்களையும், வெற்றிடங்களைத் துளைத்துவரும் கதிரொளியையும், .. எல்லாவற்றையுமே ஆமாம் எல்லாவற்றையுமே, இந்தப் பிரபஞ்சப் புதிர்களை இனங்காண்பதன்மூலம் , இன்றைய மனிதரின் சரியான நிலையினை உய்த்துணர்வதன் மூலம், மனிதரின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண்பதே எனது பேனாவின் பிரதானமானதும், மகோன்னதுமான குறிக்கோளாகும்.’
28.9.19821

இயற்கையும் மனிதரும்!

ஒரு காலம் இருந்தது. மானுட வர்க்கத்தின் தோற்றுவாயின் ஆரம்பகாலகட்டமது. ஆறுகள் பொங்கிப் பெருகிப் பாய்ந்தோடின; மரங்கள் தழைத்துச் செழித்துக் கிடந்தன; புட்கள் பாடிப் பறந்து திரிந்தன; இயற்கையின் அரவணைப்பில் காடுகளில், குகைகளில், சமவெளிகளிலென்று ஆதிமானுடர் அலைந்து திரிந்த சமயத்தில், அவரிடம் அறிவு வளர்ச்சியுற்றிருக்கவில்லை. பரிணாம வளர்ச்சிப் போக்கின் ஆரம்பக் கட்டமது. அவர் மனிதிலோ ஒருவித திகில். செயல்களுக்கு அர்த்தம் புரியாத நிலையில் ஒருவித பயம் அவர் மனதை மூடியிருந்தது. இயற்கையோடு இயற்கையாக , அதனோரங்கமாக வாழ்ந்துவந்த ஆதிமானுடர் வரலாற்றில் நிகழ்ந்திட்ட பரிணாமப் போக்கின் இன்றைய விளைவோ? இயற்கையின் குழந்தையான மனிதரை, நாகரிக மனிதரின் அறிவு வளர்ச்சி அவர் தாயிடமிருந்து பிரித்து விட்டது. ஆதிமானுடரிடமிருந்த அறியாமையை அகற்றவேண்டிய வரலாறறின் இன்றைய வளர்ச்சிப் போக்கு, அவரது வாழ்முறைகளை இன்னுமொரு பிழையான நிலைமைக்கிட்டுச் சென்று விட்டதுபோல்தான் தெரிகின்றது. இன்றைய மனிதரின் போர்வெறிப் பூசல்கள் இவற்றையே உணர்த்தி நிற்பதாகப் படவில்லையா? இன்றைய இறுமாப்புமிக்க மனிதர் அறிவென்று கருதுவதெல்லாம், புதிய புதிய கண்டுபிடிப்புகளை வழங்கும் விஞ்ஞான அறிவினைத்தான். ஆனால் அவரது வாழ்க்கையைச் செப்பனிடக்கூடிய ‘மனம்’, அவரது ‘மனம்’ இன்னும் அந்தப் பழைய காட்டுமிராண்ண்டிக் காலத்து மனிதரிடமிருந்து எவ்விதத்திலேனும் பரிணாமம் அடைந்ததாகத் தெரியவில்லை. நாள்தோறும் பத்திரிகைகள் பெரிதாகக் கக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, போர்ப் பூசல்கள் எல்லாம் எதை உணர்த்தி நிற்கின்றன? இவற்றைத்தானல்லவா? ஒருவேளை இனித்தான் மனிதரது மனப் பரிணாம மாற்றம் நடைபெறுமோ? ஆனால் அதற்கிடையில் அவரது அறிவு வளர்ச்சியின் கடந்த காலப் பிழையான பரிணாமப் போக்கால் மனிதரே தமக்கிடையில் இதுவரை ஏற்படுத்திக் கொண்ட சமுக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண்பதற்கே இன்றைய மனிதரின் பரிணாப் போக்கு ஒழுங்காக நடைபெற வேண்டியதன் அவசியம் அவசியமாகின்றது.

இயற்கைக்கும், இயற்கைவாழ் ஜீவராசிகளுக்குமிடையில் நிலவிவந்த ஒழுங்கான சமநிலையினை இன்றைய மனிதரின் ஆணவம் மிக்க அறிவு குலைத்து விட்டது. ஓங்கி வளர்ந்த பச்சைப் பசிய விருட்சங்களுக்குப் பதிலாக ‘காங்ரீட்’ காடுகளால் நிறைந்த மாநகரங்களையே காண்கிறோம். அங்கே புள்ளினங்களின் இன்ப கானங்களை நாம் கேட்கவில்லை. நாம் கேட்பதெல்லாம்,.. பார்ப்பதெல்லாம்… வானொலிகளின் அழுகுரல்களையும், தொலைக்காட்சிகளின் ஆரவாரங்களையும்தான். ஊர்வனவற்றின் ஆனந்தமான வாழ்க்கைக்கு இங்கு இடமேது? வாகனங்களின் பெருமூச்சுவிடுதலுடன் கூடிய ஊர்வலங்களையே காண முடிகிறது. தூய்மையான தென்றலென்று காவியங்கள் கூறலாம். ஆனால் இங்கு வீசும் தென்றலோ காபனோரொட்சைட்டு, கந்தவீரொட்சைட்டு போன்ற நச்சு வாயுக்களின் கலவையாகவன்றோவிருக்கிறது. போதாக் குறைக்கு சுயநிர்ணய உரிமை என்று பேசும் மானுடர் இறைச்சிக்காகக் கொன்று குவிக்கும் உயிரினங்களுக்கோ அளவில்லை. ஆமை, ஆடு, அணில், மாடு, மான், மரை, பாம்பு, தவளை,,,, இப்படி ஒன்றைக் கூட இந்தப் பாவி மனுசர் விட்டு வைப்பதில்லையே. மிருகங்களைப் பொறுத்தவரையில் சிந்தனையாற்றலற்றதனால் அவை ஒன்றையொன்று கொன்று தங்களைக் காத்துக் கொள்கின்றன. ஆனால் மானுடரோ.. ஆறறிவு பெற்ற அற்புதப் பிறவிகளென்று தம்மையே புள்காங்கிதத்துடன் வர்ணித்துக் கொள்கின்றார். இத்தகைய மனிதரும், மிருகங்களைப் போல் மற்றைய உயிர்களைக் கொன்று குவிப்பாரென்றால் இவருக்கும் அவற்றிற்குமிடையிலான வித்தியாசம்தானென்ன? மானுட விடுதலைக்காய் போராடும் மனிதர் சகலஜீவராசிகளினினதும் சுயநிர்ணய உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டியவராகவன்றோயிருக்கின்றார். ஆனால் அவர் அதைச் செய்கின்றாரா என்ன?

இயற்கையாக உருவாகிய ஒவ்வொன்றுமே அதனதன் வாழ்நாள் முடிவுறும் வரையில் வாழுதற்குரிய சுயநிர்ணய உரிமையினை யாவருமே அங்கீகரிக்க வேண்டும். மனிதர் இயற்கையோடு இயற்கையாக , அதனோர் உறுப்பாகவொன்றி வாழ்வேண்டுமே தவிர, அதனைச் சிதைப்பதன்மூலம் ‘காங்க்ரீட்’ காடுகளை உருவாக்கி அதனோர் அங்கமாக வாழுவது அவருக்கு மட்டுமல்ல அவர் வாழும் இவ்வுலகிற்குமே ஏற்றதல்ல. இன்றைய மனிதரின் கட்டடக்கலையின் வளர்ச்சியில் இன்னுமொரு பரிணாமப் போக்கு எழவேண்டியதன் தேவை அவசியமாகின்றது. அவரது கட்டடங்களின் அடிப்படைத் தேவைகள் என்ன, எவை?

1. சூழலின் கோர விளைவுகளிலிருந்து அவரைக் காப்பது.
2. அவர் வசிப்பதற்கு.

இவற்றைப் பூர்த்தி செய்வதற்கு அவருக்குத் தேவையான கட்டடங்கள் இயறகையோடொத்ததாக, எளிமையானதாக உருவாக்கப்படல் வேண்டும். இவற்றை அடைவதற்கு முன்னோடியாக மனிதர் அளவற்று இனப்பெருக்கம் செய்வது நிச்சயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எதற்கும் ஓரளவின் அவசியம் தேவையாகின்றது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்றொரு பழமொழி பேச்சு வழக்கிலுண்டு.
இயற்கைக்கும், மனிதருக்குமிடையிலான தொடர்பு அறுந்து போகாதபடி செயலாற்ற வேண்டியது அதிமானுடத்தினை நோக்கி முன்னேறும் இன்றைய மனிதர் செய்ய வேண்டிய கடமையாகும்.

11.8.1982.

தாய்!

அந்தச் சிறு ஓலைக்குடிசை..
ஆழநடுக்காட்டின்
தனித்த , இருண்ட, வெறுமைகளில்
உறைந்து கிடக்கும்.
மரங்களில் மயில்கள்
மெல்ல அகவிச் செல்ல
மந்திகளின் தாவலால் தூரத்தே
மரம் முறியுமோசை
காதில் வந்து நுழையும்.
ஆனல் நீ மட்டும் வாசலில்
எந்நேரமும் காத்துக் கிடப்பாய்.
ஊர்மனைகளுக்குக் கூலிக்குப் போய்விட்ட
உந்தன் புதல்வனுக்காய்
வெறுமைகளுக்குள் நுழைந்து நிலைத்துவிட்ட
கண்களின் அசைவற்று…
சுருங்கிக் கிடக்கும் முகத்தில்
சோகம் குழம்பென அப்பிக் கிடக்க..
தனிமையில் காத்துக் கிடப்பாய்.
இருண்ட பின்னால் திரும்புமுன்
இளவலிற்காக நீ நாள்முழுக்கக்
காத்து நிற்பாயோ?
அம்மா!
அகமுடையானைக் கரம் பிடித்த
அந்த நாளில் நீ எத்தனை
கோட்டைகளைக் கட்டி வைத்தாய்?
அவையெலாம் இடிந்தனவோ?
என் பிரிய அம்மா!
புதல்வன் படித்துப் பட்டம் பெற்று…
நம்பிக்கைகளில் அம்மா
நீ சிலிர்த்துப் போயிருந்தாயோ?
உழைத்துருக்குலைவதற்கே உதித்த்
என்னருமை ஜீவன்களே!
ஒருகாலம் மெல்ல முகிழ்க்கும்.
தாயே! உன் பார்வையின் வெறுமைகள்
தீருமொரு நேரம் மெல்லவுதிக்கும்.
உழைப்பின் பயனை உணரும் ஒருவேளை
வந்து பிறக்கும். அம்மா!
அதுவரை என்னை மன்னித்துக்கொள்!

11.10.1982.
[மேலுள்ள கவிதை வன்னியின் ஆழநடுக்காட்டில் , 77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து ,அகதிகளாக மலையகத்திலிருந்து குடியேற்றப்பட்ட குடியேற்றத் திட்டமொன்றில் தன் புதல்வனுடன் தனிமையில் வசித்து வந்த ஒரு மூதாட்டியினைச் சந்தித்தபோதெழுந்த உணர்வின் வெளிப்பாடு. கோடைக்காலத்து நண்பகலொன்றில் , அயற்கிராமமொன்றுக்குக் கூலி வேலைக்காக மகன் சென்றிருந்த சமயமது. சிறியதொரு குடிசை. அரவம் கடித்தாலும் அழைப்பதற்கருகில் யாருமில்லை. இத்தகையதொரு சூழலில், இருண்ட பின்னால் வேலை முடிந்து வீடு திரும்பவிருக்கும் புதல்வனை எதிர்பார்த்து, ஒருவித சோகம் படர்ந்த முகத்துடனிருந்த அந்த மூதாட்டியின் கோலம் நெஞ்சிலேற்படுத்திய உணர்வலைகளின் பிரதிபலிப்பு.]புள்ளின் சோகம்!

வீதியோரத்து மின்கம்பியொன்றில்
எந்நேரமும் தனிமையில்
அச்சிறுபுள் அமர்ந்திருக்கும்.
அந்தக் கண்கள்…
அப்படி என்னதான் சோகமோ?
இழந்துவிட்ட எதையோ தேடுவதுபோல்
அந்தப் பார்வையில் படர்ந்து கிடக்கும்
தேடலை உணர முடிகின்றது.
ஊருலாத்திக் குருவியின்
உள்ளே என்னதான் இரகசியமோ?
‘எல்லையற்ற வானிலிஷ்ட்டம்போல்
துள்ளித்திரியலாமெழிற் புள்ளே’
என்றிசைப்பார் கவிஞர்.
மாரிகளில் மழைபெய்து மெல்ல
வெளிக்கையில்
நீரைச் ‘சடசட’த்தகற்றியபடி
மெல்லவந்து நீ அமர்கையிலே
சிறு புள்ளே!
என்னிதயத்தேயும் மெல்லவொரு
ஏக்கம், சோகம் படரும்.
அறுந்துவிட்ட வீணையைப்போல்
துடிக்குமிதயத்தில்
கவிந்திருக்கும் சோகம்தான்
என்றும் தீர்வதில்லை என்னினிய
ஒற்றைப் புள்ளே!
என்னினிய ஒற்றைப் புள்ளே!
என்னாலுணர்ந்திட முடியவில்லையே!
மூடிய அந்தப் பெட்டகத்தின்…
சிறு புள்ளே! சாவிதான்
என்னிடமில்லையே.

12.6.1982

ngiri2704@rogers.com

Series Navigation