நாகரத்தினம் கிருஷ்ணா
மரணமிலாப் பெருவாழ்வில்
வாழ்ந்திடலாம் கண்டார்
புனைந்துரையேன் பொய் புகலேன்
சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில்
புகுந்தருணம் இதுவே
-இராமலிங்க அடிகளார்
—-
நண்பனே! மனித உடம்பு மாயையினின்று தோன்றியது. உடல் காரணமாகவே ஆசையும், வெறுப்பும், இன்பதுன்பங்களும் உண்டாகின்றன. கன்மம், ஆணவம் இரண்டும் ஆன்மாவான எனக்கு மாயையாகின்றன. ஆதலால் மாயையும் பாசமாகும். மாயை உயிரின் அனுபவத்திற்காக பல கருவிகளையும், பொருள்களையும் அமைத்துத் தருகிறது. தனு, கரண, புவன போகங்கள் அனைத்தும் மாயையே. ஆனால் மாயை ஒரு ஜடம். இதனை மேய்ப்பதும், காப்பதும் நாடோடியான உன்னால் தனித்து இயலாது. உன்னால் ஆகக்கூடியது ஒன்றுண்டு. மாயையில் சுத்தம் எது அசுத்தமெது என்பதை இனம் காணுவது. தெளிவான பாதையும், அறிவுடன் பக்தியும் இல்லாதவரை எனக்கு விடுதலை இல்லை, உனக்கு இருந்தாலுங்கூட…
….
இருபதாம் நூற்றாண்டு….
வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் சென்று வந்ததற்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன. இந்த இரண்டுமாத இடைவெளியில் பெர்னார் ஃபோந்த்தென் நண்பன் வேலுவுக்கு வேம்புலி நாயக்கர் மருமகளின் இரண்டாவது புருஷன் என்கிற புதிய உத்தியோகம் கிடைத்திருந்தது. இப்புதிய உத்தியோகத்தின்படி, சில செளகரியங்களும் அசெளகரியங்களும் வேலுவுக்கு வாய்த்திருந்தன. செளகரியப்பட்டியலில் பிரெஞ்சு குடியுரிமை, புதுச்சேரி அரசின் பொதுப்பணிதுறையில் முக்கிய ஒப்பந்ததாரர் என்கிற அந்தஸ்து. சங்கரதாஸ் வீதியிலிருக்கும் வேம்புலி நாயக்கர் பூர்வீக வீடு, வெங்கட்ட நகரில் இரண்டு கிரவுண்டில் கட்டப்பட்ட ஒரு வில்லா, உழவர்கரையில் பம்பு செட்டுடன் கூடிய ஒன்றரை ஏக்கர் நஞ்சை… இத்யாதிகளை பராமரித்துக்கொண்டு, அவ்வப்போது வேம்புலி நாயக்கர் மருமகளையும் அவளது சிறப்பு ஆணைபேரிலே மராமத்து செய்யவேண்டியிருக்கிறது. இது தவிர, மாலையில் ஒதியஞ்சாலை கிரவுண்டில் உள்ள கிளப்புக்குச் சென்று சோம்பேறி சொல்தாக்களுடன் பெந்தான்க் என்கிற இரும்பு குண்டு ஆட்டம், எட்டு மணிவரை விஸ்கி, வாரத்தில் ஏழுநாட்களும், மீன், கோழி, ஆடு என்று சாப்பிடுகின்ற செளகரியங்களும் உண்டு. அசெளகரியமென்று சொன்னால், முன்னைப்போல அவனது பொதுவுடமைத் தத்துவத்திற்காக வாதிட முடிவதில்லை என்பதைச் சொல்லவேண்டும். ஆனால் அதுகூட இப்போதெல்லாம் செளகரியப் பட்டியலில் சேர்ந்துவிட்டதென்று அவனது மனச்சாட்சி சொல்கின்றது.
காலை எட்டுமணி. வேலுவும் அவனது புதுமனைவியும் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை ஆட்டோவில் ஏற்றி வழி அனுப்பிகொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் ‘புல்லட்டை ‘ எடுத்துக்கொண்டு, வில்லியனூர்வரை போய் வரவேண்டும். அங்கே இருபதுலட்ச ரூபாய் ஒப்பந்தத்தில் கட்டிவருகின்ற மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றினைப் பார்த்து வரவேண்டும். பதினோரு மணிக்கு அண்ணா நகரில் இரண்டு சொல்தாக்களின் வீடுகள் கட்டப்படுகின்ற சைட்டைப் பார்த்து வரணுமென்று காலை அலுவல்களை நினைத்த வண்ணம் திரும்பியவன் எதிரே, பெர்னார் ஃபோந்த்தெனின் அம்பாசடர் கார் வந்து நின்றது.
‘ஏங்க உங்க வெள்ைளைக்காரக் கொப்பன் (நண்பன்) காலங்காத்தால வந்திருக்கான். இனி இன்றைக்கு உருப்படியா எதையும் செய்யப்போறதில்லை ‘, என்ற வேம்புலி நாயக்கர் மருமகளைப் பார்வையால் அடக்கிவிட்டு, நண்பனைத் தேடிக் காரருகே சென்றான்.
‘என்ன பெர்னார் ? எப்படி இருக்கிற ? எங்க திடார்னு இந்தப்பக்கம் வந்திருக்கிற. ‘
‘தோழரைப் பாக்கிறது சுலபத்திலே இல்லையே. காஞ்சிபுரம் வரைக்கும் போறேன். அதற்கு முன்னே உன்னை அவசியம் பார்க்க வேண்டியிருந்தது. ‘
‘நானுந்தான் இரண்டு மூன்று நாட்களாக உன்னைப் பார்க்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். அது சரி நீ தேடிவந்ததற்குக் காரணம் இருக்கணுமே. ‘
‘நிறைய இருக்குது. எனக்கு காலையிலே ஒரு மணிநேரம் ஒதுக்க முடியுமா ? ‘
‘எத்தனை மணிக்கு ? ‘
‘முடிஞ்சா இப்பவே. ‘
‘எங்க காஞ்சிபுரத்திற்கா ? ‘
‘பயப்படாதே. இப்போதிருக்கிற சூழ்நிலையில, உன்னை முன்னை மாதிரி அழைச்சுப் போக முடியாது என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ‘
‘என்னைச் சரியா பத்துமணிக்கெல்லாம் விட்டுடணும். சைட்டைப் போயி பார்க்கவேண்டியிருக்கிறது. ‘
‘பயப்படாதே! காரில உட்காரு. ஒன்பது மணிக்கெல்லாம் விக்கினமில்லாம, வீட்டுல சேர்த்துடறேன். ‘
உத்தரவுக்காக, தன் புது மனைவியைத் தேடியபொழுது, அவள் ஏற்கனவே வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்திருந்தாள். எல்லாம் நல்லதற்கே என்று நினைத்தவன், நண்பனின் காரில் பின்புறம் அமர, கார் வல்லபாய் படேல் சாலையைப் பிடித்து, கடற்கரை திசைக்குப் பயணித்தது.
‘வேலு! மாறன் எழுதிய ஓலைகள் ஏதேனும் மறுபடி கிடைச்சுதா. வைத்தீஸ்வரன்கோவிலிலிருந்து நாம் திரும்பிய பிறகு சுத்தமா என்னை நீ மறந்துட்டியே.. ‘
‘பெர்னார், இன்னும் நீ அந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடல்லியா ? வைத்தீஸ்வரன்கோவில் குருக்கள் சொன்னது நாலில் இரண்டுகூட உனக்குச் சரிண்ணு தோணலியா ? அன்றைக்கு உன் பேச்சில் ஓரளவு திருப்தி தெரிஞ்சுதே. ‘
‘எனக்குத் தெரிய வேண்டியது பெர்னார் குளோதன் முடிவு சம்பந்தமான தகவல்கள். என் கனவுகளைப் பொறுத்தவரையில் சில முடிச்சுகள் நாடி சோதிடத்தால் அவிழ்க்கப்பட்டிருக்கிறது என்பதை நான் மறுக்கலை. ஆனால் பெர்னார் குளோதன் முடிவுதான் இன்னும் விடுபடாத புதிராக இருக்குது. நமக்குக் கிடைதுள்ள மாறன் ஓலைகளின் அடிப்படையில், 1744ம் ஆண்டு மேமாதம் இறுதிவரை காரைக்கால் கோட்டையில் பெர்னார் குளோதன் இருந்தார் என்பதை, நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். அதற்குப் பிறகு என்ன நேர்ந்திருக்குமென்பதை ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பைவைத்து ஓரளவு யூகிக்கிறேன். ஆனால் அந்த ஊகத்தை உறுதிப்படுத்த என்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. ‘
‘பெர்னார், உன் மனதில் உள்ள சந்தேகம் என்ன ? ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பில் 1744ம் ஆண்டு சூன் மாதம் 9ந்தேதி காரைக்கால் கோட்டையில் நடந்ததாகச் சொல்லப்படுகிற வெடிமருந்துக் கிடங்கு தீ விபத்தில் உன் எள்ளுப்பாட்டன் பெர்னார் குளோதன் இறந்திருக்கலாம் என்பதுதானே ? அந்தச் சந்தேகத்தினை உறுதிபடுத்திக்கொள்ளும்வகையில் ஆதாரம் இருக்கின்றது. ‘
‘எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்ற. ‘
‘கடந்தவாரத்தில் புதுப்பாக்கத்திலிருந்து கிருஷ்ணபிள்ளை என்பவர் வந்திருந்தார். வந்தவர் சும்மா வரலை. மாறன் எழுதிய ஓலை நறுக்கு ஒன்றினையும் கொண்டுவந்திருந்தார் ‘
‘அடப்பாவி! முதலிலேயே சொல்லக்கூடாதா ? அதனைக் கையோடு கொண்டுவரச் சொல்லியிருப்பேனே. அந்த ஓலையில மாறன் என்ன சொல்றார். தீவிபத்துலதான் பெர்னார் குளோதன் இறந்திருக்கலாம் அவரும் நம்புகிறாரா ? ‘
‘ஒரு வகையில அப்படித்தான். இப்போ கிடைத்துள்ள ஓலை 1745ம் ஆண்டு சூன் மாதம் 9ந்தேதி எழுதப்பட்டிருக்கிறது. அதாவது தீவிபத்து நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து. அதிலே, ‘தீ விபத்துல, நண்பணை இழந்து இன்றைக்கு ஒருவருடம் முடியப்போகிறது ‘, என மாறன் நினைவு கூர்கிறார். மாறன் குறிப்பிடும் விபத்தினை ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பில் வருகிற தீவிபத்தென்று கொள்ளலாம். ஆனால் இந்த ஓலையில், ரங்கப் பிள்ளை தன் நாட்குறிப்பில் எழுப்பாத சந்தேகத்தை, மாறன் எழுப்புகிறார். ‘
‘என்ன சந்தேகம் ? ‘
‘தீ விபத்தே ஒரு சதியாக இருக்கலாம் என்பது அவர் ஐயம். புதுச்சேரி மற்றும் பிரெஞ்சுத் தீவு குவர்னர்களிடம் நெருக்கமாகப் பழகியதால் பல உண்மைகள் பெர்னார் குளோதனுக்குத் தெரிஞ்சிருக்குது. புதுச்சேரிக்கும் பிரெஞ்சுத்தீவுக்குமாக நடந்த ஆட்கடத்தல் விவகாரம், கிழக்கிந்திய கும்பெனியின் முதலீட்டில், குவர்னர்கள் நடத்திய சொந்த வியாபாரம், கும்பெனிக்கு ஒரு கணக்கும், சொந்தமாக ஒரு கணக்கும் வைத்துக்கொண்டிருந்தது, என கவர்னர்களின் தில்லுமுல்லுகளை அவ்வப்போது பாரீஸில் இருந்த கும்பெனியின் தலைமைக்குக் குளோதன் தெரியப்படுத்தி வந்ததாக மாறன் நம்புகிறார். ஆக பெரிய இடத்து பொல்லாப்பு குளோதனுக்கு இருந்திருக்கிறது. தவிர விபத்து நடந்த அன்று மாறன், குளோதனின் எதிரியான பிரான்சுவா ரெமி காரைக்காலுக்குக் குதிரையில் சென்றதையும் கண்டிருக்கிறார். ‘
‘அடடே நான் எதிர்பார்த்ததைவிட சுவாரஸ்யமாயிருக்கே; எனக்கு அவசியம் அந்த ஓலை வேண்டுமே. வேறு ஏதேனும் தகவல்கள் இருக்கா ? ‘
‘இன்னொரு தகவல் இருக்குது. அது எந்த அளவிற்கு உனக்கு உதவும்னு தெரியலை. ‘
‘என்ன, தெளிவாச்சொல்லு ‘
‘அதாவது தன் சினேகிதனுடைய ஆத்ம சாந்திக்காக மணக்குள் விநாயகர் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்த மாறன் கூடவே தன்னுடைய மனைவியையும் குழந்தையையும் கோவிலுக்கு அழைத்துபோனதாக ஓலை நறுக்கில் சொல்றார். அவரது மனைவி வேறு யாருமல்ல, இதற்கு முன்னாலே, அவரது ஓலை நறுக்குகளில் பேசப்பட்ட வாணி என்பவளே. அதுபோகட்டும், இப்போ நீ காஞ்சிபுரம் போவதன் அவசியம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ? ‘
‘பிரான்சுல இருந்து என் சினேகிதன் ரிஷார் வந்திருந்தானே ஞாபகமிருக்கா ? அவனிப்போ ஆப்கானிஸ்தானத்திலே இருக்கான். அங்கிருந்து, காஞ்சிபுரத்திற்கு போயிருந்த சமயத்திலே எடுத்த போட்டோக்கள் சிலதை அனுப்பி இருக்கான். ‘
‘எதனால ? ‘
‘என் கனவுல வர வீடு மாதிரியே ஒன்றை, காஞ்சிபுரத்திலே பார்த்திருக்கான். ‘
‘ம் .. போட்டோவைப் பார்த்தியா ?. உன் கனவுல வருகிற வீடு மாதிரி இருக்கிறதாலே, பார்த்துட்டு வர்லாம்னு உடனே கிளம்பிட்டியாக்கும். ‘
‘உண்மை. வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகளை கவருவதற்காக, ஒரு பழைய வீட்டைப் புதுப்பித்து அதற்குக் ‘காஞ்சிமனை ‘ யென்று பெயரிட்டு, அத்துடன் புராதன வீட்டு உபயோகப் பொருட்களை பொருத்தமாகச் சேர்த்து அழகுப் படுத்தியிருக்கிறார்கள். ‘காஞ்சிமனை ‘ என் கனவில் வருகின்ற வீடென்பதில் சந்தேகமில்லை ‘
‘சரி போயிட்டு வந்து உன் அனுபவத்தைச் சொல்லு, இப்போதைக்கு என்னை வீட்டில விட்டுடு. நாளைக்கு கடைசியாய் கிடைத்த மாறன் ஓலை நறுக்கோட, உன்னை வந்து பார்க்கிறேன். ‘
அன்றுமாலை பெர்னார் ஃபோந்த்தென் பயணித்த அம்பாசடர் இறுதியாக காஞ்சிபுரத்தின் எல்லையைத் தொட்டபோது பயணவலி குறைந்து, பதிலாக நெஞ்சத்தில் கோடை மழையில் நனைந்த விடலைப் பையனின் சந்தோஷம் கிடைத்தது. தூரத்தில் கனவில் கண்ட விண்ணைச் சீண்டும் கைலாசநாதர் கோபுரம், அதைத் தொட்டு விளையாடும் புறாக் கூட்டம், சூரியனுக்கு முன்னே வர வெட்கப்பட்டு தன் முறைக்காக காத்து நிற்கும் நிலா அனைத்துமே அவனுக்குப் புதியதல்ல, முன்பே பழகியிருந்தவை. மனம் வழிகாட்டக் காரைச் செலுத்தினான். வழியில் ஒருவர் சொன்ன விபரப்படி சங்கீதவித்வான் நைனார்பிள்ளை வீதியை கண்டுபிடித்து காரைத் திருப்பினான். இறுதியாகக் காஞ்சி மனை ‘யைக் கண்டு, காரை நிறுத்தி இறங்கினான்.
‘ராசா! குறி சொல்லட்டுங்களா ? ‘ திரும்பிப் பார்த்தான்.
கோடாலி முடிச்சுக் கொண்டை, முகம் முழுக்க மஞ்சள், நெற்றி நிறையக் குங்குமம், தோள்வரை இறங்கி – தங்கட்டி சுமக்கும் காதுமடல்கள்,. கையில் முழங்கை நீளத்திற்கு ஒரு பிரம்பும், கண்டாங்கிச் சேலயுமாய் நடுத்தர வயதுப் பெண்மணி. ஒரு வருடத்திற்கு முன், இப்பெண்மணியை புதுச்சேரி கடற்கரையில் வைத்துக் கண்டதும், அவள் வார்த்தைகளும், வேலுவின் குதர்க்கமான பதிலும் ஞாபகத்தில் வந்தது.
‘ஏம்மா இங்கே வா. ‘ குறிபார்க்கும் பெண்மணி இவனை நெருங்கி வந்தாள். இப்போதுதான் முதன் முறையாக அவனைப் பார்ப்பதுபோல பார்த்தாள். அவன் நீட்டிய கையை ஒரு சில விநாடிகள் அவதானித்தவள். ‘தொரைக்கு ஜென்ம வினையால விபரீத ராசயோகம், கவனமா இருக்கணும். முன்ஜென்ம கன்னியால கூடிய சீக்கிரம் பிரச்சினைகள் வருமுங்க. ‘ எனச் சொல்லிக்கொடுத்ததுபோல வார்த்தைகளை ஒப்பித்தாள். ஒப்பித்தவள் இந்தமுறை, இவன் நீட்டிய ஐந்து ரூபாயை வேண்டாமென்று சொல்லிவிட்டு நடந்து செல்வதை அதிசயத்துடன் சிலவினாடிகள் பார்த்துவிட்டு, தலையைத் திருப்பினான்.
‘காஞ்சி மனை ‘ என்று எழுதி இருந்தது. சிற்றோடு வேய்ந்த வீடு, வீட்டிற்கு முன்னே சிறிது நேரம் நின்று கனவில் வந்த படிமங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தான். மனம் அங்கீகரித்த திருப்தியில் கதவைத் அழுந்தத் தள்ளினான், திறந்துகொண்டது. எதிர்ப்பட்ட பெண்ணிடம் கேட்டான்.
‘கச்சியப்ப சிவாச்சாரியார் இல்லந்தானே ? ‘
‘ஆமாம். உள்ளவாங்க. இந்த வீட்டின் வரலாறு அப்படித்தான் சொல்லுது. ‘ வரவேற்ற பெண்ணை தொடர்ந்து சென்றான். இருபுரமும் திண்ணைகள். திண்ணையை ஒட்டி நடை. காஞ்சிபுரத்தின் தலவரலாறு தட்டச்சில் பழுத்து கிடக்கிறது. வலப்புறத்தில் சாளரத்துடன் கூடிய அறை. மணமக்கள் கோலத்தில் இரு பொம்மைகள், குடை, செருப்பு, பிறகு கூடம்- குளுகுளுவென்றிருக்கிறது. இடையில் பெருத்த இரு பெரிய தூண்களை இணைத்த ஊஞ்சல். ஊஞ்சலில் துலக்கிய முகத்துடன் அவள். கலகலவென்று சிரிக்கிறாள். அதரம் சிரிக்கிறது, அதரத்திற்கு மேலே அரைகுறையாய்த் தெரிந்த பல்வரிசையில் சிரிப்பு. அளவாய் இறங்கிய நாசியில் சிரிப்பு. காது மடல்களில் சிரிப்பு, கருவிழிகளில் சிரிப்பு, கைவளைகளில் சிரிப்பு, ஊஞ்சற்பலகை உயரும்போது வெளிப்படும் வெள்ளைக்கால்களில் சதிராடும் காற் சலங்கைகளில் சிரிப்பு.. மயில்கள் சிரிக்கிறன, புறாக்கள் சிரிக்கின்றன. புவனம் சிரிக்கிறது, இவனும் சிரிக்கிறான்.
‘சார் இது முற்றம் ‘- மயக்கத்திலிருந்து மீண்டான். மத்தியில் திறந்திருந்த வெளிவழியாக நுழைந்திருந்த சூரியஒளி முற்றம் முழுக்க இருந்தது. நான்கு பக்கங்களிலும் தூண்களைக்கொண்ட திறந்த வெளி. அவ்வீட்டில் அமைப்புக்கு இசையாத கருங்காலி நாற்காலிகள். வலப்புறம் அசட்டையாய் இலைபோட்டு, மணை, சொம்பு நிறைய தண்ணீர். முற்றத்திலிருந்து தொடரும் சிறுவழியில் நுழைந்து அவள் போக, இவனும் நடக்கிறான். ஒரு சாய்வு நாற்காலி, நடைவண்டி, தூளி, உரல் உலக்கை.. முன்னே நடக்கின்ற பெண் ஆங்கிலத்தில் ஏதோ சொல்லிக் கொண்டு போகிறாள். இவனுக்கு அயர்வாக இருக்கிறது.
மீண்டும் கூடத்திற்குத் திரும்புகிறான். ஊஞ்சலைப்பார்க்கிறான். இம்முறை ஊஞ்சலில் வயதான கோவில் அர்ச்சகர் ஒருவரின் மெலிந்த தேகம், மூக்கில் நீர்வடிந்தவண்ணம், ஈக்கள் மொய்த்துக்கொண்டு, உலர்ந்த கைகளால் அவற்றை மாற்றி மாற்றி ஓட்டிக்கொண்டு, சுருண்டுக் கிடக்கிறது. அருகே சென்றான், குனிந்தான்.
‘அய்யா என்னை மன்னிக்கவேணும். இப்படியொரு அசம்பாவிதத்தை நான் எதிர்பார்க்கவில்லை ‘
‘பாபி..! எங்கே நானும் செத்துபோயிருப்பேனென்று நினைத்துவந்தாயா ? அருமை மகளைப் பறிகொடுத்த பிறகும், எனது ஜீவன் பிழைத்திருப்பது யாருக்கென்று நினைக்கிறாய் ? பிரபு சுப்ரமண்யருக்காக! சண்டாளா! நீ எங்கே வந்தாய் ? என் கண்முன்னே நிற்காதே. ‘
ஊஞ்சலிற் கிடந்த அர்ச்சகரின் கால்களில் விழுந்தான். ‘ ‘ஐயா! என்னை மன்னித்தேன் என்றொரு வார்த்தை சொல்லுங்கள். ‘ பெரியவர், கண்களைச் சுருக்கிக்கொள்கிறார், வாய் அசைபோடுவதுபோல, தன்பாட்டுக்கு செயல்படுகிறது, உலர்ந்து சோம்பிக்கிடந்த கரத்தினைக் தலைக்குக்கொடுத்து, ஊமையாய்க் கிடக்கிறார். விழிகள் மாத்திரம், இவன் அருகில் நிற்கின்றானா ? என்பதை உறுதிப்படுத்த நினைத்ததுபோல, மூடித் திறக்கின்றன. ‘ஐயா! ஏனிப்படி மெளனம் சாதிக்கிறீர்கள் ? ஏதாவதுச் சொல்லுங்கள். ‘ ஊஞ்சலைப் பிடித்து ஆட்டுகிறான்.
‘சார் என்ன ஆச்சு. ? ‘ திடார்னு ஏன் ஊஞ்சலைப் பிடித்துக்கொண்டு உணர்ச்சிவசப்படறிங்க ? ‘, பெர்னார் கண்களைத் துடைத்துக் கொண்டான். வெற்றூஞ்சல் முன்னும் பின்னுமாக அசைந்துகொண்டிருக்கிறது, திரும்பினான். சற்றுமுன் இவனைக் காஞ்சி மனையின் வாயிலில் நின்று வரவேற்ற பெண். அவள், இவனது செய்கைக்குக் காரணம் புரியாது குழப்பத்துடன் கொஞ்சநேரம் நின்றாள்.
‘சார்! கொஞ்சம் எழுந்திருங்க. ‘காஞ்சி மனை ‘ யைப் பற்றிய உங்கள் அபிப்ராயத்தை இந்தப் பார்வையாளர் புத்தகத்தில் ஒரு சிலவார்த்தைகள் எழுதமுடியுமா ? ‘ நோட்டையும் பேனாவையும் நீட்டியவண்ணம், கேட்டாள்.
‘அற்புதமான வீடு, மறக்கமுடியாத அனுபவம் ‘ என ஆங்கிலத்தில் எழுதியவன், பெர்னார் என்று கையொப்பமிட்டான்.
‘தென்னிந்திய முறைப்படியான மதிய உணவினை பார்வையாளர்களுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கோம். உங்களுக்கு விருப்பமிருந்தால் சாப்பிட்டுப் பார்க்கலாம். ? ‘
வேண்டாமென மறுத்துவிட்டு ‘காஞ்சி மனை ‘யை விட்டு வெளியேறினான். வெளியேறியவன் தயக்கத்துடன் திரும்பினான், கேட்டான். ‘நீங்கள் ? ‘
‘நானா ? தேவயானி ‘காஞ்சி மனை ‘யின் நிர்வாகி. அடுத்தமுறை காஞ்சிபுரம் வந்தால் அவசியம், நீங்க வரணும் ‘, என்றவளின் கண்களைப் பார்க்கிறான், அவள் கண்களின் ஊடாக முகமொன்று தெரிகிறது: குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொட்டாய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒருபொட்டு. இமைக்க மறந்த மையிட்ட சோகக் கண்கள், கண்ணீர்த் துளிகள் மையிற் கலந்து யோசித்து சிவந்திருந்தக் கன்னக் கதுப்பில் இறங்க அதனைத் துடைக்க மனமின்றி வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்….
(அடுத்த இதழில் நிறைவுறும்)
—-
Na.Krishna@wanadoo.fr
- கடிதம் ஜனவரி 20,2005 – செருப்பு: குறும்படம்.
- ஆறடி அறைகளின் குரல்கள்
- தியாகத்தின் கதை – போர்க்குதிரை – நுால் அறிமுகம்
- நெரூதா அனுபவம்
- காஞ்சி மடம் – க.நா.சு – பிலோ இருதயநாத் – மாலதி சந்தூரின் தெலுங்கு மிட்டாய் – வலம் போன நரி (அல்லது – மஞ்சரி 1955 தொகுப்பு)
- மதம் அலுத்துப் போனது – மாதவிக்குட்டியின் கட்டுரை
- பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் கால்வினோ கதைகள்
- ஓவியப்பக்கம் பதினான்கு – வில்லியம் கெண்ட்ரிட்ஜ் – நவீன் ஊடகத்தில் உயிர்த்தெழும் கோட்டோவியங்கள்
- வெங்கட்ரமணனின் குவாண்டம் கனி
- புத்தக விழாவில் ‘பிடித்தவை ‘
- கடிதம் ஜனவரி 20,2005
- ஹதீஸ் – ஒரு சிறு விளக்கம்!
- இயற்பியல்::2005 புதிய இணையதளம்
- கடிதம் ஜனவரி 20,2005 – நேச குமார் தெளிவுபெறவேண்டும்
- கடிதம் ஜனவரி 20 ,2005
- கடிதம் ஜனவரி 20,2005 – ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரால் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிர்ப்பு… பணிந்தது இரான்
- கடிதம் ஜனவரி 20,2005 – திருமாவளவனும் தமிழ்த்திரையுலகும்
- அவரவர் உடை அவரவர் விருப்பமே!
- முகம்
- ஓவியர்களின் உலகம் அழைக்கிறது – ஜனவரி 25 ,2005
- ஜனவரி 30,2005 – ராஜராஜேஸ்வரம் நிகழ்ச்சி
- அறிவியலும் ஒரு போலி அறிவுஜீவியின் நியோ-மனுவாதமும்
- குர்பான்
- சுனாமிக்கு (அமெரிக்கா) IRS காட்டும் பரிவு:
- மறுபடியும்
- இப்படிக்கு இணையம்….
- த ளி ர் ச் ச ரு கு
- து ை ண – குறுநாவல் – 1
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -55
- வேட்கை
- பேரழிவுச் சீரமைப்பு -உளவியல் கண்ணோட்டம்-2
- நிஜமான போகி
- வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம்
- வாய் மூடிப்போன நடுநிலையாளர்கள்
- அஞ்சலி: சீன கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங்
- சொன்னார்கள் சொன்னார்கள் – ஜனவரி 20 ,2005
- தினம் ஒரு பூண்டு
- கவிதைகள்
- என் பொங்கல்
- பெரியபுராணம்- 27 -16. கண்ணப்ப நாயனார் புராணம்
- கவிக்கட்டு 45 – என்னை என்ன செய்யப்போகிறாய் ?
- உதிரிப்பூக்கள்
- அலைகளை மன்னிக்கலாம்
- கவிதைகள்
- இவ்வாண்டு படைத்த கடற்பொங்கல்!
- கண்டு கொண்டேன் !
- சனிக்கோளின் துணைக்கோளில் தடம் வைத்த ஈரோப்பியன் விண்ணுளவி ஹியூஜென் [ESA Probe Huygens Lands on Saturn ‘s Moon Titan] (Jan 14 2005