கோநா கவிதைகள்

This entry is part of 44 in the series 20110109_Issue

கோநா


.

கவிதை 1; குழந்தைக் கனவினுள்…

இரண்டிரண்டு படிக்கட்டுகளாய்
தாவித்தாவி வந்ததில்
தவறி விழுந்து
தலையில் பெரிய காயம்.

ஊசி வேணா.. வேணா…

அழுதவளை
அதட்டி இழுத்து வந்த அப்பாவுடனும்
அறியாமல் இடித்துவிட்ட படிக்கட்டுடனும்
அழுத்திப் பிடித்துக் கொண்ட சிஸ்டருடனும்
ஆறு தையல்கள் போட்ட என்னுடனும்
‘கா’ விட்டுவிட்டு
கண்ணீர் கோடுகளாய் காய
அழுதபடியே
தூங்கிப்போகிறாள் ஓவியா.

அனால்ஜெசிக்குகளின் மந்திரத்தில்
வலி மறந்த கணமொன்றில்
பழம் விட்டுவிடுவாளென
குழந்தைக் கனவொன்றினுள்
நுழைந்து காத்திருக்கிறோம்
எல்லோரும் நம்பிக்கையுடன்.

கவிதை 2; கங்காரு குப்பைத் தொட்டியும் குழந்தைகளும்

சிரிக்கும் விழிகளுடனும்
மலர்ந்த இதழ்களுடனும்
அணைக்க அழைக்கும்
விரிந்த கரங்களுடனும்
பொதுஇடங்களில் நிற்பவைகளின்
இதழ்களுக்குள் துப்பிவிட்டும்
நெஞ்சுக்குள் குப்பைகளை எறிந்துவிட்டும்
கடந்துசெல்லும் உங்களை
கவனித்துக்கொண்டுதான்
உடன் வருகிறார்கள்
விலங்குகளையும் பொம்மைகளையும்
உயிராய் நேசிக்கும்
உங்கள் குழந்தைகள்.

கவிதை 3; ருத்ரதாண்டவம்

வாகனங்களின் நெரிசலில்
வழிகேட்டு ஊர்ந்தபடி
ஒரு தெருவில்
சவ ஊர்வலம்
மறு தெருவில்
சிவ ஊர்வலம்

உறவுகள் அழுது திரும்பிய
ஊரடங்கி ௨றங்கிய
பின்னிரவின் ஜாமத்தில்
நாடகம் முடிந்த களிப்பில்
வேடம் கலைத்து
இருவரும் இணைந்து
ஆனந்தத்தில்
ஆடிக்கொண்டிருக்கக் கூடுமொரு
ருத்ரதாண்டவம்
எரிந்து முடிந்து
கனன்று கொண்டிருக்கும்
கொள்ளிக்கட்டைகளின்
இளஞ்சிவப்புக்
கங்குகளின் வெளிச்சத்தில்.

கவிதை 4; இறுக்கிக் கட்டப்பட்ட நீர்

பின்னிருக்கையில்
இறுக்கிக் கட்டப்பட்ட நீரொன்று
சாலையெங்கும் சொட்டிச் செல்கிறது
மிதிவண்டிப் பனிக்கட்டியாய்.

கவிதை 5; புரிதல்

கொட்டும் பனிக்கும்
கொஞ்சம் பார்வைக்குமாய்
நான் அணிந்திருந்த
குல்லாவை
புரிந்து கொள்ளாமல்
அழுகிறது
பக்கத்து இருக்கை
குழந்தை.

Series Navigation