இந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001

This entry is part of 24 in the series 20011215_Issue

மஞ்சுளா நவநீதன்


நாடாளுமன்றத்தில் பயங்கர வாதத் தாக்குதல்

முன்பு காஷ்மீர் சட்டசபை . இப்போது நாடாளுமன்றம். யார் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று ஊகிப்பதும் ஊர்ஜிதம் செய்து கொள்வதும் சுலபமான வேலை தான். ஆஃப்கானிஸ்தானின் இலட்சியத்தை நிறைவேற்ற தன்னுடைய உதவி தேவை என்பதால், அமெரிக்கா தன் அத்துமீறல்களைப் பொறுத்துக் கொள்ளும் என்பதும், அதனால் இந்தியா மீதான வெறிச் செயல்களை அச்சமின்றித் தொடரலாம் என்பதும் பாகிஸ்தான் ராணுவத்தின் கணக்கு.

பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் பலரை, இந்தியாவிற்கு அனுப்பிக் கலவரம் செய்யச் செய்வதாகவும், இப்படி அனுப்பப்படும் கைதியின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்குவதாகவும் ஒரு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இவர்களில் பலர் கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்கள். மனித உயிரின் மதிப்பை அறியாதவர்கள். பாகிஸ்தான் ராணுவமும் உளவுத் துறையும் தான் இந்தத் தாக்குதலின் பின்னணியில் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.

சட்டசபையையும், நாடாளுமன்றத்தையும் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தின் குறியீடுகளாய் விளங்கும் இவை பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம். ஆஃப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்க என்ன காரணங்கள் உண்டோ அதை விடவும் அதிகமான காரணங்கள் இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க உண்டு. அமைதி வழி, பேச்சு வார்த்தை என்று உபதேசிப்பதில் பயனில்லை. ஓர் அரசாங்கம் அதன் குடிமக்களையும், ஜன நாயகத்தையும் காப்பற்ற வேண்டிய கடமை கொண்டது. லஷ்கர் ஏ தொபா போன்ற அமைப்புகள் பாகிஸ்தானின் நேரடி பாதுகாப்பிலும், போஷணையிலும் உள்ளவை. அவற்றைத் தடை செய்யவோ , அவற்றின் செயல்பாடுகளை ஒடுக்கவோ பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்யாது. இனியும் இந்தியா சும்மா இருந்தால் இந்திய அரசின் மீதும் , பாதுகாப்பு சக்திகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து போவார்கள்.

இதில்லாமல் இந்திய அரசே இதைச் செய்தது என்று விஷமத்தனமான விஷப் பிரசாரத்திலும் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. செப்டம்பர் 11 அமெரிக்காவில் நடந்த படுகொலையின் போதும் கிட்டத்தட்ட இதே போன்று ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது. யூதர்கள் பெருமளவு அலுவலகம் செல்லவில்லை என்று பொய்ப் பிரசாரம் செய்து இந்தப் படுகொலைகளின் பொறுப்பை அவர்கள் மீது சுமத்தும் அசிங்கமான ஒரு பிரசாரத்தை பாகிஸ்தானில் சிலர் மேற்கொண்டார்கள்.

பிரச்சாரம் இரண்டாம் பட்சமாகவும், பேச்சு மூன்றாம் பட்சமாகவும், செயல் முதல் பட்சமாகவும் இருக்க வேண்டும்.

************

உலகத் தமிழர் பேரமைப்பு – ஒற்றுமையா பிரிவினையா ?

உலகத் தமிழர் பேரமைப்பு என்ற ஓர் அமைப்பு பழ நெடுமாறனைத் தலைவராய்க் கொண்டு துவங்கப்பட்டுள்ளது என்று அறிகிறேன். தமிழரின் தேசிய உடையை வடிவமைக்கவும் ஒரு குழு நிர்ணயித்திருக்கிறார்கள் என்று செய்தி வாசித்த போது சிரிப்புத் தான் வந்தது. இனிமேல் கால்சராய் அணிந்தவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லப் போகிறார்களா ? இப்படிப் பட்ட தமிழர் தலைவர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றியாக வேண்டும்.

எதற்காக இந்தப் பேரவை ? ஒரு சிலருக்குச் சில லெட்டர் பேட் பதவிகள் கிடைக்கும் என்பது தவிர வேறு என்ன பயன் விளையப் போகிறது ? மலேசியத் தமிழர்கள் எதிர் கொள்ளும் பிரசினையும், ஈழத் தமிழர்கள் எதிர் கொள்ளும் பிரசினையும், அடிப்படையிலேயே வெவ்வேறு விதமானவை. மொழி ஒன்றை மட்டுமே வைத்து ஒற்றுமையும், ஒரு அடையாளமும் தோன்ற முடியும் என்றால், பங்களாதேஷ்- மேற்கு வங்கம் எப்போதோ ஒன்று பட்டிருக்க வேண்டும். ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, இங்கிலாந்து , கனடா என்று எல்லா நாடுகளும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். ஸ்பானிஷ் மொழி பேசும் தென் அமெரிக்க நாடுகள் எல்லாம் ஒன்றாகியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் ஜனநாயக உரிமைகள் பற்றிப் பேசாமல், சாதியம் பற்றிப் பேசாமல், பொருளாதார உயர்வினைப் பற்றிப் பேசாமல், கல்விப் பரப்புதலைப் பற்றிப் பேசாமல், தமிழனின் அன்றாட பிரசினைகளைப் பேசாமல் உலகளாவிய ஓர் அமைப்பை ஏற்படுத்துவது மனித சக்தியின் விரயம் தான்.

இப்படிப் பட்ட அமைப்புகளால் அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களை மற்ற இனத்தவர் ஐயத்துடனும் ,அச்சத்துடனும் பார்க்க நேரிடும் என்பதைத் தவிர இதனால் எந்த பயனும் விளையும் என்று தோன்றவில்லை

********

மாணவர்கள் மீது தாக்குதல்

தமிழ் நாடு மெல்ல போலீஸ் அரசாக மாறி வருகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். கருணாநிதி காலத்தில் தாமிரவருணி போல இப்போது இது. சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

*********

பாஜகவுடன் அ தி மு க உறவா ?

பா ஜ க-வை மெள்ள ஆதரவினால் அரவணைத்துக் கொள்ளும் நிலையில் அதிமுக உள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு ஆதரவு மட்டுமல்லாமல், வேறு சில முறைகளிலும் பா ஜ க -வுடன் நெருக்கம் கொள்ளத் தீர்மானித்திருக்கிறது போலிருக்கிறது. பா ஜ க பற்றிய விமர்சனங்கள் அறவே அ தி மு க-விலிருந்து வரவில்லை. சென்ற தேர்தலில் சோ அதிமுகவை ஆதரித்த போதே இதற்கான விதைகள் தூவப்பட்டுவிட்டன என்று எண்ணுகிறேன். காங்கிரஸ் தி மு க பக்கம் நகர்வதும், அதிமுக பா ஜ கவை நோக்கிச் செல்வதும் நிகழக்கூடிய ஒன்று தான். ஆனால் எந்த ஒரு தேசீயக் கட்சியும், எந்த அளவுக்கு ஜெயலலிதா தலைமை கொண்ட அதிமுகவை நம்பும் என்பது கேள்விக்குறிதான்.

*********

Series Navigation