இந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு)

This entry is part of 19 in the series 20011210_Issue

மஞ்சுளா நவநீதன்


மலிவு விலை சாராயம் மட்டும் – கள்ளுக் கடை இல்லை

கள்ளுக் கடை திறப்பது பற்றி இப்போது எதுவும் முடிவு செய்யவில்லை எறும் , ஆனால் மலிவு விலை சாராயம் விற்பனை உண்டு என்றும் அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் சாராய மொத்த வியாபாரிகளுக்கு லாபம். சிறு தொழில் கள்ளுக் கடைக்கு வஞ்சனை.

****

விலைவாசி உயர்வு : கொஞ்சம் போல குறைப்பு

அறிவிக்கப் பட்ட விலை வாசி உயர்வில் ஓரளவு குறைத்து அறிக்கை வெளீ வந்திருக்கிறது. இதற்கும் , ஜெயலலிதா வழக்கில் விடுதலை பெற்றதற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்று தோன்றுகிறது. ஜெயலலிதா எம் எல் ஏ ஆவதற்கு ஆயத்தங்கள் நடக்கிற இந்த நேரத்தில் விலை வாசி உயர்வு என்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ஆயுதமாய்ப் பயன் படக் கூடாது என்பதற்காக நடந்த நாடகம் இது என்பது தெளிவு. ஜெயலலிதா முதல்வர் ஆகிவிட்டால் நிச்சயம் இது மீண்டும் உருவெடுக்கெளம் என்று நம்பலாம். பஸ் கட்டணத்தினை உயர்த்தி, பல பஸ் தடங்களை தனியார் வசம் ஒப்படைப்பதின் பின்னணி என்னவெண்ரு யரும் மிக எளிதாக ஊகித்துக் கொள்ள முடியும்.

*********

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு

ஆஃப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் புதிய அரசிற்கு இந்தியா நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தானை முன்பு போருக்குப் பின்பு மேல் நாடுகள் கைவிட்டது போல் இப்போது செய்யலாகாது என்று ஒரு கருத்து உருவாகிவருகிறது. இந்தக் ‘கைவிடுதல் ‘ என்றால் என்னவென்றே எனக்குப் புரியவில்லை. வெளிநாடு, சில குறிக்கோள்களுக்காக விடுதலை இயக்கங்களில் உதவுகின்றன. அப்படி உதவி அளித்ததற்குப் பின்பு விடுதலை பெற்ற பின்பும் அங்கே வெளி நாடு இருப்பது உள்ளூர் மக்களின் வெறுப்பைத் தான் சம்பாதிக்குமே தவிர , அன்பைச் சம்பாதிக்காது. ஒரு நாட்டின் உயர்வும் தாழ்வும் அந்தந்த நாட்டில் தான் அடிப்படிஅயில் உருவாக வேண்டும். அதற்கு நல்வழி காட்டும் தலைவர்கள் உலக அளவில் அறிவும் தொலை நோக்கும் கொண்டவர்களாய் அமைய வேண்டும். துரதிர்ஷ்டமாக ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் , சாதியம் போன்ற ஒரு இனக்குழு மனப் பான்மை, ஆஃப்கானிஸ்தானின் குடிமக்கள் நாம் என்ற உணர்வைக் குலைத்து வந்திருக்கிறது. பாகிஸ்தானின் குறுக்கீட்டால் தாலிபன் போன்ற ஒரு அநாகரிகக் கும்பல் எழுந்து வளர்ந்து வந்திருக்கிறது. வெளிநாடுகளின் குறுக்கீடு அந்தந்த வெளி நாடுகளின் நலன் கருதித் தான் அமையும்.

இனியேனும் ஆஃப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும். பாகிஸ்தானின் ராணுவம் தன் குறுக்கீட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆஃப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் கானூனி தெரிவித்துள்ளார்.

*********

வரலாறு (மீண்டும் ?) திருத்தப் படுகிறது

வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்களின் வரலாறு தான் என்று ஒரு கருத்து உண்டு.

காங்கிரஸின் கீழ் நேரு-காந்தி வரலாறாய் இருந்தது. நேதாஜியும் , காமராஜரும் , ராஜாஜியும் உரிய இடம் பெறவில்லை என்றும் சொல்ல வேண்டும். இடது சாரிகள் எழுதிய வரலாற்றில் பெரியார், அண்ணா போன்றோரின் பங்களிப்புகளும் சரியான முறையில் பதிவு செய்யப் படவில்லை. முகலாய ஆளுகையில் நிகழ்ந்த மத ரீதியான வன்முறைச் சம்பவங்கள் பொருளாதாரக் காரணம் என்று பூசி மெழுகப் பட்டதுண்டு. லெனினை வயதானவர் என்று சித்தரித்த ஒரு நாடகம் கொல்கத்தாவில் தடை செய்யப்படலாயிற்று.

இப்போதைக்கு பாரதீய ஜனதா கட்சி ‘வெற்றி ‘ பெற்ற கட்சி என்பதால் , இதன் பார்வையில் வரலாறு எழுதப் படுகிறது போலும். பிராமணர்கள் மாட்டுக் கறி தின்றார்களா இல்லையா ? குரு கோவிந்த சிங்கின் இடம் வரலாற்றில் என்ன ? – இதெல்லாம் கேள்விகள் . விடைகளில் இரு பகுதி உண்டு.

ஒன்று _ வெறுமே விவரங்கள். விவரங்கள் என்றால் , ஆமாம் மாடு சாப்பிட்டதுண்டு. ஆமாம், முஸ்லீம்களுக்கும் , சீக்கியர்களுக்கும் இடையில் போர்கள் – பலசமயம் பெரும் வன்முறையுடன் நடந்ததுண்டு.

இரண்டாவது அம்சம் : இந்த விவரங்கள் ‘தெரிவிக்கும் ‘ செய்திகள் . இந்த இரண்டாம் அம்சம் தான் பல நிலைகளில் வரலாற்றாசிரியர்களுக்குள் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. அன்றைய பிராமணர்கள் மாட்டுக் கறி சாப்பிட்டார்கள் என்பது இன்றைய நிலையில் எந்த விதத்திலும் யாரையும் பாதிக்காத விஷயம். சொல்லப் போனால் – மார்வின் ஹாரிஸ் திண்ணையில் எழுதியிருக்கும் கட்டுரைகளை அடியொற்றிப் பார்த்தால், — மாட்டு மாமிச உணவு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உழவு மாடுகளுக்கான ஒரு பஞ்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், அதனால் மறு விளிம்பிற்குச் சென்று மாடு புனிதமானது, மாடு சாப்பிடுவது பாவம் என்றும் விதி ஏற்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ‘உணவுச் சக்கரத்தில் ‘ மாட்டு மாமிசம் அடியோடு விலக்கப் படுவதும் பிரசினைகளை ஏற்படுத்தும் என்பதால் சில குறிப்பிட்ட வகுப்பினர்கள் சாப்பிடலாம் என்றும் பரிந்துரை நடந்திருக்கலாம்.

வரலாற்றை மறப்பவர்களும் , மறைப்பவர்களும் மீண்டும் அவல வரலாற்றை வாழ்ந்திட நேரும் என்பது நமக்கு உலக சரித்திரம் கற்பிக்கும் படிப்பினை. ஜெர்மனியில் யூதர்கள்-ஒருபாலினத்தார்-நாடோடிகள் மீது நடந்த தாக்குதலை மறுப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாய்க் கருதப் படுகிறது. வரலாறு பதிவு செய்யப் பட வேண்டும். அன்றைய வரலாற்றிற்கு இன்று பரிகாரம் தேடும் முட்டாள்தனத்தைத் தொடர்ந்து விமர்சித்து வருவதன் மூலம் தான் ஒரு அறிவுமிக்க தலைமுறை உருவாக முடியும்.

********

Series Navigation