உறவு

This entry is part of 59 in the series 20031106_Issue

ஹ்உமாயூன்


அன்று காலை கதவை திறந்தபோதும் அது அங்கேயேதான் இருந்தது. அவனை கண்டதும்

சோம்பல் முறித்து எழுந்து வந்து காலை சுற்றி மியாவ் என குரலெழுப்பியது. அவனுக்கு ஆத்திரம்

ஆத்திரமாக வந்தது. இரண்டு வாரமாகத்தான் இந்த தொந்தரவு, யாரும் கூப்பிடாமலேயே தானாக வந்து எப்பொழுதும் ஒரு பசியின் அலறல்.

அபுதாபியிலிருந்து விலகி பாலைவன நடுவில் இருக்கும் கம்பெனிக்கு சொந்தமான ஒரு குட்டி

நகரம்தான், கிராமம் என்று கூட சொல்லலாம், ரகுவின் தற்போதைய சொர்க்கம். நகரத்தின் ஒரு மூலையில் அமைந்திருக்கும் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில்தான் அவனுக்கு வேலை. நல்ல வசதி

வாய்ப்புகளுடன் பொறாமைகாரர்களையும் சில எதிரிகளையும் கூட இந்த வேலை சம்பாதித்து

கொடுத்திருக்கிறது.

பாத்ரூம் போகுமுன் கார்டன் பைப் மூடலாம் என்று வந்தவனின் காலை சுற்றி சுற்றி வந்து

தொந்தரவு செய்தது.

‘ச்சீ சனியன் ‘

மொத்த ஆத்திரமும் வெளிப்பட்டு உதையாக மாற ஒன்றும் புரியாமல் அலறிக்கொண்டு ஓடியது. கடந்த ஒரு வாரமாகவே இப்படித்தான் எதற்கெடுத்தாலும் அவனுக்கு கோபம் வருகிறது. மனைவி குழந்தைகளை கூட்டிகொண்டு ‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லே, குழந்தைகளை பார்க்க

ஆசைபடுறாங்க ‘ என்று அவசர அவசரமாக இந்தியாவிற்கு போய்விட்டதாலோ இல்லை சொந்த தமிழ் சகோதரனாக இருந்தும் ஷிப்ட் லீடர் மணி காரணமே இல்லாமல் வேலையில் வறுத்து எடுப்பதாலோ தெரியவில்லை.

மீண்டும் அந்த பூனை அவனருகே வந்து குரலெழுப்பியது, ஏழு மணிக்கு வரும் கம்பெனி பஸ்ஸை

விட்டால் பிரச்னையாகிவிடும் என்பதால் அதை விட்டு அவசர அவசரமாக உள்ளே சென்றான்.

கம்பெனியில் நுழைந்த உடனேயே பிரச்னை காத்திருந்தது,

ஷிப்ட் லீடர் மணி ‘ ரகு, செக்ஷன் ஹெட் உடனே உங்களை வந்து பார்க்க சொன்னார் ‘ என

சொன்னார்.

‘வச்சான்யா காலையிலேயே பாறை ‘ சக டெக்னீஷியன் காதர் சொன்னது காதில் விழுந்தது.

நேற்று டெஸ்ட் பண்ணியிருந்த சாம்பிள் ரிப்போர்ட்டில் ஏதோ குற்றம் கண்டுபிடித்து நன்றாக கீ

கொடுத்து வைத்திருந்தார் மணி, செக்ஷன் ஹெட் வேண்டிய அளவிற்கு கொடுத்தார், மண்ணின் மைந்தராகயால் அவரை எதிர்த்து பேச முடியாது அடுத்த வருஷம் கான்ட்ராக்ட் இல்லாமல் போய்

விடும். அனத்து சாம்பிள்களையும் முடித்துவிட்டே இன்று வீட்டிற்குபோக வேண்டும் எனவும் உத்தரவு

கிடைத்தது.

என்னுடைய ஸீட்டிற்கு போகும்போது மணி கேலியாக புன்னகைத்த மாதிரி தோன்றியது.

மாலையில் மிக லேட்டாக வீடு திரும்பியபோது இருட்டிவிட்டது. வாசல் கதவில் கீ வைக்கும்போதே ‘மியாவ் ‘ குரல் கேட்டது.

எரிச்சலுடன் ‘எத்தனை தடவை உதைச்சு விரட்டினாலும் போகமாட்டியா ‘ என கத்திக்கொண்டே உள்ளே போனான்.

அப்படியும் மியாவ் குரல் கதவருகே கேட்டுகொண்டே இருந்தது. நாளை காலையில் முதல் வேளையாக பெஸ்ட் கண்ட்ரோல் ஆட்களூக்கு போன் பண்ணி இதை பிடித்துகொண்டுபோக சொல்லவேண்டும் என நினைத்து கொண்டான்.

டிரஸ் மாற்றுவதற்குள் யாரோ பெல் அடித்தார்கள், ‘ச்சே மனுஷனை நிம்மதியாகவே விடுறதில்லை இந்த ஊரில் ‘. கதவை திறந்தபோது வீடு க்ளீன் செய்யும் முருகன் நின்றிருந்தான்.

‘சார் நான் ரெண்டு தடவை வந்து பாத்தேன் நீங்க இல்ல, அதான் இப்போ வந்தேன் ‘.

ரொம்பவும் ஆயாசமாக இருந்தது, இனி அவனுக்கு செய்ய வேண்டிய வேலையெல்லாம் சொல்லனும், கூட இருந்து கவனிக்கனும், காபி அல்லது ஸ்நாக் எதாவது செய்து கொடுக்கணும்.

மீண்டும் ‘மியாவ் ‘ குரல் கதவருகே ஒலிக்க தொடங்கியது.

‘முருகன் நாளைக்கு முதல் வேளையா போன் பண்ணி இந்த சனியனை விரட்டணும் ‘

‘இல்ல சார் பாவம் அது , கடைசி வீட்டில் குடியிருந்த வெள்ளைக்கார பொம்பளை வளர்த்தது, வேலையெ விட்டு போறப்போ தெருவிலே விட்டுட்டு போய்டுச்சி, சொகுசா வளர்ந்தது சார், பாவம் இப்போ வீடு வீடா சாப்பாடுக்கு அலையுது ‘

முதன்முறையாக அந்த பூனை மீது சிறிது இரக்கம் தோன்றியது.

அடுத்த நாள் காலை கண் விழித்தபோதே நல்ல சுறுசுறுப்பாக உணர்ந்தான்.

வழக்கம்போல் கார்டன் பைப் மூட வந்தவன் கண்களில் கார்டனின் மூலையோரம் பசியில் கத்த கூட முடியாமல் அரை கண் மூடி கிடந்த போனை பட்டது.

‘ப்ச் பாவம் ‘ அவனை அறியாமலேயே அவன் வாய் உச்சரித்தது.

உள்ளே போய் ப்ரிட்ஜை திறந்து சிறிதளவு பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றிகொண்டு வந்து வைத்தான், அரை நிமிடம் நம்பாமல் பார்த்துவிட்டு, தயங்கி தயங்கி வந்து மெதுவாக நக்கி குடித்தது. குடித்து முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்த அதன் பார்வையில் நன்றியும் அன்பும் தெரிந்தது.

இந்த இரண்டு தினங்களில் அவனுக்கும் பூனைக்கும் இடையே நெருக்கம் அதிகரித்திருந்தது. அவனை கண்டாலே கொஞ்சும் குரலில் கத்துவதும், மாலை ஜாக்கிங் போகும்போது அவன் கூடவே சிறிது தூரம் ஓடி வருவதும், ஷாப்பிங் முடித்து பைகளுடன் அவன் நுழையும்போது பசியுடன் கத்திக்கொண்டே வருவதுமாக பூனையும் அவனும் நெருங்கிபோனார்கள்.

அன்று மத்தியான வேளையில் கடுமையான மண் புயல் வீசிக்கொண்டிருந்தது. கோடையின்

முடிவுக்கான அடையாளம் அது. வீட்டை விட்டு வெளியே வருவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது, வாய் மூக்கிலெல்லாம் மண் புகுந்து விடும். நரக அவஸ்தை அது. ஒரு முறை அபுதாபி போய்கொண்டிருக்கும்போது வீசிய மணற்புயலை இப்போது நினைத்தாலும் நடுங்கும், அவனது காரையே நகர்த்தி ரோடைவிட்டு பாலைவனத்தில் புதைத்துவிட்டது. பிறகு போலிஸ் ரெஸ்க்யு டாம் வந்து அவனை

காப்பாற்றியது தனி கதை.

திடாரென்று பூனையின் ஞாபகம் வந்தது. இந்த புழுதிக்காற்றில் என்ன செய்கிறதோ என்று மனம் பதைத்தது. கதவை திறந்து பார்த்தபோது கார்டனின் மூலையிலிருந்த பெரிய மரத்தின் மறைவில்

புழுதியிலிருந்து தப்புவதற்காக சுருண்டு பதுங்கி இருந்தது. வேகமாக சென்று அதை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

முதலில் தயங்கி தயங்கி ஹாலில் நின்றுவிட்டு எனது பழக்கமான புன்முறுவலை கண்டு மெதுவாக தாவி சோபாவில் உட்கார்ந்திறுந்த அவன் மடியில் ஏறி, நன்றியுடன் அவனது விரலை நக்கியது. சிறிது

நேரத்திலேயே நிம்மதியாக தூங்கியும் போனது. நிம்மதியான தூக்கத்திலிருந்த அதை உற்று

பார்த்த அவனுக்கு அதன் மேலுள்ள பரிவு மேலும் கூடிப்போனது.

ஒரு வாரம் ஓடிப்போயிற்று, அதன் பின் அது அவன் கூடவே வீட்டிலேயே தங்கிவிட்டது, இயற்கை கடன்களுக்கு மட்டும் கார்டனுக்கு போய்வந்தது. இந்த ஒருவாரத்தில் மனைவி குழந்தைகள்

இல்லாததால் பயங்கர போர் அடித்துக்கொண்டிருந்த அவனுடைய நாட்கள் மிக உற்சாகமாக மாறி போயிற்று.

சூப்பர் மார்க்கெட்டில் பூனைகளுக்கான உணவு தேடிக்கொண்டிருக்கும்போது, ‘என்ன புது உறவுக்கு சாப்பாடா ? ‘ குரல் கேட்டு திரும்பிய போது எதிர்த்த வீட்டு சீனிவாசன் நின்று கொண்டிருந்தார்.

‘என்ன ரகு சார் ஆளே மாறிட்டாப்பலே, கவலையெல்லாம் மாறிட்ட மாதிரி தெரியுதே ‘ என்று

சிரித்துக்கொண்டே நகர்ந்தார். உண்மைதான் ஷிப்ட் லீடர் மணியின் தொந்தரவுகள் கூட பெரிய

விஷயமாக படவில்லை, ‘டிக்கெட் இன்னும் கன்பார்ம் ஆகவில்லை ‘ என்றே சொல்லும் மனைவியின்

போனை கூட மறந்து, பூனைக்காக தேடி தேடி மீன் வாங்கி சமைக்க ஆரம்பித்துவிட்டான். மிக ஆனந்தமாக பொழுது போக ஆரம்பித்தது.

இரண்டு வாரங்கள் கழிந்து ஒரு நாள் அதிகாலையிலேயே போன். வேலைக்குத்தான் சீக்கிரம்

கூப்பிடுகிறார்களோ என்று அலுத்துக்கொண்டே எடுத்தபோது ஊரிலிருந்து போன். சிறியவள்

கத்தினாள் ‘டாடி நாளைக்கு நாங்க எல்லாம் வரோம் ‘ உடனே மனைவி வாங்கி ‘ஆமாங்க இப்பதான் ட்ராவல்ஸ்லிருந்து போன் பண்ணாங்க, நாளக்கு ஈவினிங் எமிரேட்ஸ் ப்ளைட்டில் வர்ரோம், கரெக்டா டைமுக்கு துபை ஏர்போட்டுக்கு வந்துடுங்க ‘ என்று சொல்லி போனை வைத்தாள். மிகவும்

சந்தோஷமாக இருந்தது. அதே உற்சாகத்துடனே வேலைக்கு போய், கொடுத்த சாம்பிள்களை

மறுக்காமல் செய்து, செக்ஷன் ஹெட்டிடம் நயமாக கேட்டு ஒரு வாரம் விடுப்பும் எடுத்து கொண்டு

திரும்பினான்.

மறு நாள் காலை உற்சாகத்துடனே எழுந்து துபை போவதற்கு தேவையானவற்றை செய்ய

தொடங்கினான். காரின் டயர், ஆயில் மற்றும் ரேடியேட்டர் தண்ணீர் எல்லாம் சரிபார்த்து கொண்டான். ஐந்நூற்றி இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரம், நான்கு மணி நேர பயணம்.

கிளம்பி வெளியில் வந்தபோது பூனை காலை சுற்றி வந்தது, ‘அடடா உனக்கு ப்ரேக்பாஸ்ட் வைக்க மறந்துட்டேனா, சாரிடா ‘ என்று ப்ரிஜ்ஜிலிருந்து கொஞ்சம் பால் எடுத்து இரண்டு டைஜஸ்டிவ்

பிஸ்கட்களை ஊற வைத்து அதற்கு வைத்தான். துபை போய்கொண்டிருக்கும் பொழுதுதான்

மனைவிக்கு பூனைகள் என்றாலே அறவே பிடிக்காதது ஞாபகம் வந்து கவலை தந்தது. சில நல்லவர்கள் பூனை இருக்கும் வீட்டில் குழந்தைகள் ஆரோக்கியமாகவே இருக்க மாட்டார்கள் என போட்டு

கொடுத்து வைத்திருந்தார்கள். எனக்கும் இந்த பூனை வரும் வரை வளர்ப்பு பிராணிகள் மீது அவ்வளவு ஒன்றும் நாட்டம் கிடையாது, அதனால் இதுவரை பிரச்னை இல்லாமலிருந்தது.

வழக்கம் போலவே நேரத்திற்கு வந்து சேர்ந்தது எமிரேட்ஸ். திரும்பி வரும்போது பையன்தான் அதிகம் பேசினான். முதன்முறையாக நீண்ட நாட்கள் சென்னையில் தங்கிவிட்டு வருகிறான், சென்னையில் எல்லா விஷயங்களுமே அவனுக்கு அதிசயமாக இருந்தது. பூனை விஷயத்தை பற்றி மூச்சு விடவில்லை அவன்.

வீடு போய் சேர்ந்து கொஞ்சம் தயக்கம் கொஞ்சம் பயத்துடனே நுழைந்தபோது எதிர்ப்பார்த்தது

போலவே ஓடி வந்து அவன் காலை சுற்றி ‘மியாவ் ‘ குரலெழுப்பிற்று.

‘என்னெங்க இது ‘ ஆச்சரியத்துடன் மனைவி கேட்டவுடன் பாய்ந்து சென்ற என் மகள் பூனையை

கையிலெடுத்து கொஞ்ச ஆரம்பித்தாள். ஒன்றும் சொல்லாமல் என் மனைவி உள்ளே போவது எனக்கு எட்டாவது அதிசயமாகப் பட்டது.

‘அம்மா வீட்டுலெ இருந்த பூனை குட்டியோட ரொம்ப ஒட்டிட்டா, வரும்போது ஒரே அழுகை எப்படி சமாளிப்பேனு கவலையா இருந்தது, இப்போதான் நிம்மதி. எங்கிருந்து கொண்டு வந்தீங்க ‘ என்று கேட்டுக்கொண்டே, என் பதிலை எதிர்பாராது உள்ளே நுழைந்தாள்.

பொங்கி வரும் சந்தோஷத்தை வெளிக்காட்டாது நானும் உள்ளே நுழைந்து பால் எடுத்து பூனையின் தட்டில் ஊற்றினேன். வாலை ஆட்டி கொண்டு என்னை பார்த்த அதன் முகத்தில் சந்தோஷமும்

நிம்மதியும் தெரிந்தது போல தோன்றியது.

________________________________________________

MKabir@takreer.com

Series Navigation