சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

சுமதி ரூபன், கனடா


1
மீண்டும் பல இரவுகள் கழியும்

அதே உரசல்
அதே அணைப்பு
அதே விரக மூச்சு
உடல் கனக்க இறுகும் பிடி

விலகி
விறைத்து
விம்மி
எரிச்சலாய்
எனக்கான சினங்களுடன்
இறக்க வைப்பேன்
இன்றும் சில இரவுகளை

முடிவில்
எனக்கான சில கணங்கள்
நிமிடங்கள் நினைவில் வர
வார இறுதிக்கான
எனது களிப்புகளின்
அட்டவணை நீளமாய் ஊசலாட

விறைப்பு விலகும்
புன்னகை வந்தேறும்

உடைகளைத் தகர்த்தி
மீண்டும் நான் வேசியாவேன்

சுமதி ரூபன்

2

சமத்துவம் என்பாய் நீ

போரின் அடையாளங்கள்
எப்போதுமே
அங்கு காணப்பட்டதில்லை

மெல்லிய விசும்பல்களின் மோதல்கள்
சுவரோரங்களில் எதிரொலிக்கும்

கன்னங்களில் வடிந்து
காய்ந்து போயிந்தது
கண்ணீர் இல்லை
நிறம்பிய நித்திரைச்சுரப்பிகளின்
வெளித்தள்ளல்களே

என் சுயத்தை இழந்தாயிற்று

கோழை எனலாம் நீ

போரின் அடையாளங்கள் அற்ற
சுற்றமே சமத்துவம்

நான் இழந்தது
என்
சுயத்ததை
உரிமையை
சிரிப்பை
ஆசையை

அதிர்வுகள்
அலறல்கள்
இரத்தங்கள்
இறப்புக்கள் அற்ற
சுற்றம் வேண்டி
என்னை நான் இழந்தாயிற்று

கோழை எனலாம் நீ

பிரக்ஞை அற்று
சூரியனின் தோற்றமும் மறைவும்
நிகழ்ந்த படியே இருக்கும்

சுமதி ரூபன்

3

எனது வீட்டின் ஒரு மூலையிலாவது
“அதை” பொருத்தி வைப்பதற்கு
இடம் தேடியலைகின்றேன்.
எங்கும் ஆக்கிரமிப்பு அதிகமாகவே உள்ளது
“விட்டுத்தொலை போகட்டும் சனியன்” என்று பெற்றோரும்
“தூக்கிப்போடு யாருக்கு வேணும்” என்று கணவரும்
“அப்பாடா” என்று குழந்தைகளும்
அலுத்துக்கொண்டாயிற்று

கசங்கிப் பிளிந்து நைந்து போனதை
எதற்காக நான் கொண்டலைகிறேன் என்று
தெரியாமலேயே
நானும் அலைகின்றேன்
எப்போதாவது அதற்கான
ஒரு இடம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

***
சுமதி ரூபன்
கனடா
***
ssmith@ieccan.com

Series Navigation

சுமதி ரூபன்

சுமதி ரூபன்