‘கவி ஓவியம் ‘

This entry is part of 61 in the series 20040318_Issue

கவிமாமணி டாக்டர் சவகர்லால்


கலத்திலே சோறு நெய்வழியப் பிசைந்தது;

உளத்திலே பாசம் உயிர்வழியக் கலந்தது;

.நடைவந்த குழந்தைக்கு நெய்யன்னம் ஊட்டத்

. தடைப்படா வாஞ்சையொடு தாயின் முயற்சி!

நடைபயிலும் சிறுகிளி தன்சிறு கால்களை

இடைப்பட எடுத்தடி வைப்பதே அழகு!

…பஞ்சுப் பொதியால் உதைப்பதே போலப்

…பிஞ்சுக் கால்கள் பூமியை மிதிக்கும்;

ஊட்ட முயலும் தாயை நோக்கி

நீட்டிய சிறுகையில் சோறு வைப்பதன்

….முன்னமே, ‘பிஞ்சுக்கை ‘ கலத்துள் துழாவும்!

…அன்னமோ, கைவிரல்கள் எல்லாம் சிரிக்கும்!

அங்கை, புறங்கை விரலிடுக் கெல்லாம்

பொங்கி வழியும்நெய்யொடு சோறு!

….வாயுளே கையை வைக்கும் குழந்தையின்

..வாயுளே போகாமல் வழிவதே அதிகம்!

வழியும் நெய்யில் குளித்த கையை

முழுவது மாக மேலும் கீழும்

.. உடம்பெலாம் தடவி மகிழ்ந்திடும் குழந்தை!

…அடடா! அந்த மகிழ்ச்சியே சொர்க்கம்!

குறுகுறு எனநடை பயின்றிடும் அழகும்,

சிறுகை நீட்டும் பெரியதோர் அழகும்,

…கையிலே வாங்காமல் கலத்துளே துழாவி

…கையெலாம் நெய்வழியத் தானுண்ணும் அழகும்,

அச்சிறு முயற்சியில் அங்கமெலாம் நெய்யாக

மெச்சிடு மாறு பார்த்திடு பார்வையும்,

…நெய்யபி டேகம் தானாகச் செய்துகொள்ளும்

..பொய்யிலாப் புனிதச் செயல்வகை கண்டுநெஞ்சம்

மகிழாதார் மண்ணில் மகிழா தாரே!

முகிழ்த்த செல்வம் அளவுமிக் கிருந்தும்,

….சுற்றம் சுற்றத் திளைத்துண்ணும் விருந்தெலாம்

…எற்றுக் காகும் இவ்விருந்தின் முன்னே ?

என்று பிஞ்சின் அசைவை மனத்துளே

நின்று சுவைத்துக் கவிதை படைத்த

..மன்னன், ‘இச்செல்வம் இல்லாதார்,பெருஞ்செல்வம்

..மண்ணிற் பெற்றும் ‘இலாதாரே! ‘ என்கிறார்!

***
kaviyogi_vedham@yahoo.com மூலமாக

Series Navigation